Monday, November 14, 2011

மிக நீளமான ஒரு மதியம்

 

- பாலமுருகன்
சுங்கைப்பட்டாணி, மலேசியா

தரையில் கிடந்த கைகளை அசைக்க முடியவில்லை. உடலில் படுத்திருந்த ஒரு நீண்ட சோம்பல் சட்டென தாவிக் குதித்து தரை முழுவதும் பரவியது. என்னைச் சுற்றிலும் மிகக் கொடூரமான சோர்வு ஆக்கிரமிக்கத் தொடங்கியது. சன்னல் வழியாக வெளியில் அசையும் துல்லியமான வெளிச்சத்தைப் பார்த்தேன். ஒவ்வாமை. மீண்டும் தலையைத் தாழ்த்தி தரையில் படுத்துக்கொண்டேன்.

தரை திடீரென சூடாகியிருந்தது. கதவுக்கடியிலிருந்து அறையில் சூழ்ந்திருந்த இருளின் மீது ஒரு நேர்த்தியான கீறலை ஒழுங்குபடுத்துவது போல வெயில் எக்கிப் பார்த்தது. மதியம் என் அறைக்குள் நுழையும் வெயில் இப்படித்தான் வந்தாக வேண்டும். அழைக்காத விருந்தாளியைத் தரிசிப்பது போல அதன் அருகில் அப்படியே படுத்துக்கிடந்தேன்.

மதியம் 12.05

அடிக்கடி சோம்பலான மதிய உறக்கத்திலிருந்து விழித்துக்கொள்வதற்கு ஒரு காரணம் மட்டுமே இருந்தது. அதையும் அவ்வப்போது ஞாபகப்படுத்திக் கொள்ளும் துர்பாக்கியம் வாய்த்துவிடுவதால் என்னையறியாமல் விழித்துக்கொண்டு வெறுமனே அமர்ந்திருக்கிறேன். மதியம் வீட்டில் இலேசான வெப்பமும் அடர்ந்த சூன்யமும் தரிசிக்க இயலாத ஒரு நதியைப் போல ஓடிக் கொண்டிருக்கிறது.

யாருக்கும் தெரியாமல் வீட்டுக்குள்ளேயே காணாமல் போவது பற்றி எப்பொழுதேனும் சிந்தித்ததுண்டா? அது அத்துனை சுலபமான காரியம் அல்ல. அதற்கு முதலில் சுய வெறுப்பிற்கு ஆளாக வேண்டும். அருகாமையிலுள்ள மேசையின் விளிம்பில் இருந்த தண்ணீர் குவளை கைக்கெட்டும் தொலைவில். மீதமிருந்த தண்ணீரில் சலசல்ப்பு மறைந்துவிட்டிருந்தது.

அம்மா வாசல்வரை வந்ததும், காலில் அணிந்திருந்த செருப்பை வேகமாகக் கழற்றி ஓங்கிச் சுவரில் அறைந்துவிட்டு உள்ளே நுழைந்தார்.

மதியம் 12.15

சுவரில் நெளிந்துகொண்டிருந்த அந்த உருவம் இன்னும் சிறிது நேரத்தில் நான் எதிர்ப்பார்த்திராத ஒரு உருவத்தை அடைந்து பேரதிசயத்தை ஏற்படுத்தக்கூடும். அந்த மதியம் என் பொழுதுகளின் அத்துனை சலிப்பையும் வெறுமையையும் கரைத்துவிட்டு புது உற்சாகத்தைக் கிளர்ச்சியடைய செய்திருக்கும்.

“தர்மா. . .”

சுவரிலிருந்து ஒழுகத் துவங்கின சில சொற்கள் மட்டும். அதனை ஒட்டுமொத்தமாக அடுக்கி அழைத்துப் பார்க்கும்போது என் பெயர் ஒலிக்கப்படுகிறது. மூன்றாவதுமுறை தர்மா என உச்சரிக்கப்படும்போது சனி சுவரிலிருந்து கீழே விழுந்திருந்தது.

அதன் நாக்கு மிகத் தடுமனான உறுப்புகளைக் கொண்டிருந்தது. ஒரே சுவைத்தலில் என் சரீரத்திலுள்ள அனைத்து உணர்களையும் வலித்துவிடும் அசாத்திய வலிமை கொண்டிருப்பதாகத் தோன்றியது. கணம் தாளாத சனியின் நாக்கு வாயிலிருந்து கழன்று வெளியே தொங்கியது. சனியின் நாக்கின் நுனியில் தேங்கிக் கிடந்த உமிழ்நீரில் நான் தத்தளித்துக் கொண்டிருந்தேன்.

“டேய்! சரியா பசி எடுத்துருக்குமே?”

அம்மா அறையின் கதவை இரண்டுமுறை அடித்தார். சனி தலையை உயரமாகத் தூக்கி எக்கிப் பார்த்தது.


மதியம் 12.30

மதியம் எப்படி இவ்வளவு சாமர்த்தியமாக நீள்கிறது? அதனுக்கடியில் அமர்ந்துகொண்டு நீண்ட தியானத்தில் களைப்படைந்த உயிரைப் போல வெளிவர முடியாமல் போலியான அமைதியில் இலயித்திருக்கிறேன்.

“என்னா பண்றான்? சாப்ட்டானா?”

எரிச்சலூட்டும் அதே கேள்விகள். வழக்கமாக 12.30க்கு மேல் உணவுக்காக வீட்டிற்கு வரும் அப்பாவிடம் அந்தக் கேள்வி மட்டுமே தயாராக இருக்கின்றது. எடுத்துத் தூக்கிவீசிவிட்டு கால்களில் ஒட்டிக் கொண்டிருந்த மதியத்தைக் கழுவிக் கொண்டிருந்தார். அதன் சலசலப்பும் கால்களிலிருந்து சறுக்கி வலிந்தோடும் சப்தமும் திடீர் இரைச்சலாக மாறி அறைக்குள் நுழைந்தது. கையில் வைத்திருந்த கைவாலியை தொட்டித் தண்ணீரின் மேற்பரப்பில் வேகமாக எறிந்துவிட்டு சாப்பிட உட்கார்ந்தார். கைவாலி மிதந்து சென்று சனியின் முதுகில் உரசி நின்றது.

“எசு.பி.எம் முடிச்ச பையன், வேற தொழிலா இல்லெ? எவ்ளதான் சொல்றது? ஒரு மாட்டுக்கு ஒரு சூடு”

சனி இப்பொழுது ஒரு முரட்டுத்தனமான மாடாக உருக்கொண்டது. அதன் தலையின் இரு இடுக்குகளிலும் உறுதியான இரு கொம்புகள் முளைத்திருந்தன. தண்ணீர் தொட்டியின் அடியிலிருந்து தலையைத் தூக்கி வேளியே பார்த்தது. தண்ணீரின் மொத்த சலனமும் உள்ளுக்குள் அழுந்தி பரிதவித்துக் கொண்டிருந்தது.

மதியம் 12.45

அம்மா அறைக்கதைவைத் திறந்தார். உள்ளே சுவரோடு உடலைச் சாய்த்து உறங்கிக் கொண்டிருந்த சனியை எழுப்ப முயன்றார். சனி புரண்டு படுத்தது.

“டெ சனியனெ. எழுஞ்சி போய் சாப்புடு. உங்க கணபதி மாமா வீட்டுக்குப் போய்டு. அங்கத்தான் மோட்டர் கடையிலெ வேலை இருக்காமெ. ரெண்டு வாரத்துக்கு ஒரு தடவெ வந்து 5-10 நிமிசம் இருந்துட்டுப் போ, போதும்”

தளர்த்தப்பட்டு தாக்கும்போது அதன் வலி எத்துனைக் கடினமானதாக இருக்கும்? சனி தனது நீண்டு வளர்ந்திருக்கும் தலையை தூரமாக அகற்றி விரித்தது. அம்மா வெளியே சென்றதும் பசி அதிகரித்தது. எத்தனை நாள் இப்படி வெறும் மதியத்தைத் தின்று சலிப்படைவது? சனியின் தொண்டை குழிக்குள் அகலமான பசி தோன்றியிருக்கக்கூடும், சுவரில் தெரிந்த எனது நிழலை நாக்கால் சுவைத்துக் கொண்டிருந்தது. அதன் நாக்கின் நீளம் கொடுரமான மனநிலைக்குத் தள்ளியது.

தண்ணீர் தொட்டியிலிருந்து வெளியே குதித்து நீர் சொட்ட சொட்ட வேகமாக அறையை நோக்கி நடந்தேன். இப்பொழுது சனி பெரிய உருவமாக வீடு முழுக்க நிறைந்திருந்தது.

“கதவெ சாத்திட்டுத் தூங்காதெ, வெட்டி மிதிச்ச மாதிரி” யாருடைய குரலாக இருக்கும் என்கிற சந்தேகத்தைத் தீர்த்துக் கொள்ள முடியாததால் மீண்டும் உடலைச் சுவருக்கு முட்டுக் கொடுக்க வேண்டியதாகப் போயிற்று.

மதியம் 1.05

எல்லோரும் ஒரு பிம்பத்தை ஒரே மாதிரி சனி என்று அழைக்கும்போது சிறுநீர் சரியாக வெளியேறாததை ஒரு குறையென எங்குப் போய் சொல்வது? மதிய சூட்டில் கழிப்பறைக்குள் நுழைந்ததும் உடல் முழுவதும் பரவி வெறுப்பேற்றும் அதிர்வை எப்படி அர்த்தப்படுத்துவது என்கிற தடுமாற்றம். தண்ணீர் தொட்டியில் கைவாலி இன்னமும் மிதந்துகொண்டிருந்தது. அதை எக்கிப் பிடித்து அதன் சலனத்தை அடக்குவத்ன் மூலம் ஒருவேளை நிலையறியாமல் தாவிக் குதிக்கும் மனதையும் கட்டுப்படுத்த முடியும் என நம்பி செய்து பார்க்கும் கோமாளித்தனத்திற்கு ஆளாகியிருந்தேன்.

அப்பா மீண்டும் உள்ளே வந்தார். எதையாவது மறந்திருக்கக்கூடும். அவர் வாய் முணுமுணுக்கப் போகும் அடுத்த வார்த்தையையும் என்னால் மிக உறுதியாக ஊகிக்க இயன்றது. அவருக்கு வெளி அரசியல் தெரிந்த அளவிற்குக் குடும்ப அரசியல் கைவரவே இல்லை. வீட்டிற்குச் சாதாரண பொருள் வாங்கும் தீர்மானத்தில்கூட தனது அதிகாரத்தை அம்மாவிடம் பறிக்கொடுத்துவிட்டு பரிதாபமாக நின்றுகொண்டிருப்பார். அதிகாரம் ஆணிடமிருந்தால் என்ன பெண்ணிடமிருந்தால் என்ன? அது ஒரே மாதிரியான அடிமைகளைத்தான் உருவாக்க்குகிறது எனச் சொல்லத் தோன்றுகிறது.

“மைக்கா பணம் வராது. வாய்க்கரிசி போட்டுட்டானுங்களே. இனி என்னா மசுரு கிடைக்கும்?”

அரசியலின் ஏமாற்றத்தின் ஒரு துளி எங்கள் வீட்டிலும் இருந்தது. அவருக்கென்ன தெரியப் போகிறது அதே அரசியலின் ஏமாற்றத்தில் வளர்க்கப்பட்ட இன்னொரு துளிதான் நானும் என. அவருக்கு வேண்டியது அவருடைய பங்குப் பணம் ஏமாற்றப்பட்டதன் கொடூரத்தை ஊர் முழுக்கப் பரப்பி அரசியலுக்கு எதிரான இன்னொரு உரையாடலைத் துவக்கி வைக்க வேண்டும்.

“ஒனக்குப் பணம் கிடைச்சிச்சா?” எனக் கேட்கப்படும் முதல் கேள்வியே அரசியலின் மீதான அதிருப்தி அலையைச் சேகரிக்கும் முயற்சிதான். 6 ஆண்டுகளுக்கு முன் எழுதி 8 பாடங்களில் தேர்ச்சிப் பெற்ற எனது எசு.பி.எம் சான்றிதழ் அலமாரியின் உள்ளே கோடுகள் விழாதபடி பாதுகாப்பாக வைக்கப்பட்டுருக்கின்றது. அதில் ஏனோ இந்த ஆறு ஆண்டுகளில் சிறுக சிறுக மெலிந்துபோன ஓர் அரசியலின் தேர்ச்சியையும் பதித்து வைத்துள்ளேன். அது எனக்கு மட்டும் புரியக்கூடிய தீவிரம். இழப்பு, சோர்வு, அவநம்பிக்கை.

சனி மெல்ல எழுந்து அலமாரியில் வைக்கப்பட்டிருந்த அந்த 8 பாடங்களில் தேர்ச்சிப் பெற்ற “அரசியலை” வெளியே எடுத்து கிழித்து எறிந்தது. தனக்கு எந்த வகையிலுமே திருப்தியளிக்காத ஒன்று தன்னைச் சுற்றி மிகப்பாதுகாப்பாக இருப்பது அசௌகரிகமாகவே இருந்தது.

“ஒனக்கும் பணம் கிடைக்கலயா?”

முன்பொரு மதியம்

நாளிதழில் போட்டிருந்த செய்தியைப் படித்துவிட்டு அப்பா வீட்டுக்கு வந்து சேர்ந்த விதம் வித்தியாசமானதாக இருந்தது. ஒரு பரப்பரப்புடன் வீடு முழுக்க எதையோ தேடிக்கொண்டிருந்தார். யாருடன் பேச விரும்பாமல் வெறும் மௌனத்தை விழுங்கிக்கொண்டு வீட்டின் தரை, அலமாரிக்கு அடியில், கட்டிலுக்குக் கீழ் என அவரது பார்வை அலைந்தது.

சோர்வாக மெத்தையில் படுத்திருந்த அம்மா எழுந்து அவரை விநோதமாகப் பார்த்தார். வீட்டு வேலைகள் அனைத்தும் அம்மாவின் ஆக்கிரமிப்பில் இருந்ததால் அப்பா ஏதோ சுத்தப்படுத்துகிறார் என்கிற தவறான முடிவுக்கு வந்தவர், கத்திக்கொண்டே வெளியில் ஓடி வந்தார்.

“என்னா பண்றீங்க? உங்கல யாரு இந்த வேலைலாம் செய்ய சொன்னது?”

“மைக்கா சூரா எங்க?”

“அது யேன் இப்பெ?”

“மைக்கா காசுலாம் திரும்பி தராங்கலாம்..கோலம்பூருக்கு எடுத்துட்டுப் போய் காசு போட்ட அத்தாச்செ காட்டனா, ஒரு மாசத்துலெ காசு கிடைச்சுருமாம்”

“ஐயோ ஆத்தாடி, கொடுத்துட்டுத்தான் மறுவேல பாப்பானுங்க. கொடுக்கறவனுங்கலா இருந்திருந்தா 23 வருசம் காசைலாம் ஏப்பம் உட்டுக்கிட்டு காலத்தெ ஓட்டிருக்க மாட்டானுங்க. . .எல்லாம் புளுவாண்டிங்க”

“நீ கம்முன்னு இரு. காசு சூரா எங்க?”

அம்மா கோபமாக அப்பாவைப் பார்த்துவிட்டு மேல்மூச்சி வாங்கினார். அப்பா மெல்ல பலவீனமடைவதைத் துல்லியமாகக் கவனிக்க முடிந்தது. சட்டென அதை எதிர்க்கொள்ளும் விதமாக மீண்டும் அந்த மைக்கா பத்திரத்தைத் தேடுவதில் மும்முரமானார்.

வேறொரு மதியம்

வாசல்வரை வந்தவர், வானத்தை அன்னாந்து பார்த்துவிட்டு வாசலிலேயே அமர்ந்தார். அறைக்குள் படித்துக்கொண்டிருந்த எனக்கு அது ஒரு மங்கலான காட்சியைப் போல தெரிந்தது. முடிந்தவரை எக்கி வாசலில் அமர்ந்திருக்கும் அப்பாவைப் பார்த்தேன். மிகுந்த களைப்பும் கொடூரமான மதியத்தின் வெயிலும் அவருடைய உடலில் படிந்திருந்தன.

“என்னாச்சி? வந்தோன வெளில உக்காந்துட்டிங்க?” உள்வாசலுக்குள்ளிருந்து உருவம் தட்டுப்படாத அம்மாவின் குரல். எப்பொழுதும் அப்பாவின் மௌனத்தை அவசரமாகக் களைத்துவிட்டு வேடிக்கை பார்க்கும் அதே குரல். அப்பா தலையை மட்டும் சோர்வாக ஆட்டிவிட்டு மீண்டும் அமைதியானார். கையில் ஒரு கடிதம் இருந்ததை அப்பொழுதுதான் கவனித்தேன்.

“என்னாச்சின்னு கேட்கறன், சும்மா உக்காந்துருக்கீங்க?”

கையில் ஒரு வாளியுடன் வெளியே வந்த அம்மா அப்பாவின் முகத்தைக் கூர்ந்து பார்த்தார்.

“ஒன்னுமில்லெ நீ உன் வேலையெ பாரேன்.. .சும்மா கத்திக்கிட்டு இருக்கெ”

அப்பாவின் கையிலிருந்த கடிதத்தைப் பிடுங்கி ,”இதுலெ என்னா எழுதி இருக்கு?” எனக் கேட்டார்.

“மைக்கா காசு 1 வெள்ளிக்கு 1.20 காசுதான் கொடுப்பானுங்கலாம். 23 வருசத்துலெ பாட்டாளிங்களுக்குக் கொடுக்கற லாபமா இது? 23 வருசம் இவ்ள காசையும் வெச்சிக்கிட்டு எதைப் பிடிச்சி ஊம்பிகிட்டு இருந்தானுங்க? நாமத்தெ பொட்டுட்டானுங்க”

விரக்தியுற்ற அப்பாவின் குரல் வீடு முழுக்க சன்னமாய் ஒலித்தது.

மீண்டுமொரு மதியம்

பரீட்சை முடிந்து வீட்டில் வேலையேதுமின்றி காலத்தை நகர்த்திக்கொண்டிருந்த நாட்கள். அப்பாவின் நண்பர் குமாரசாமி வீடுவரை வந்திருந்தார். வெகுநேரம் முன்வாசல் கதவைத் தட்டிக்கொண்டிருந்தவரை அறைக்குள் இருந்துகொண்டே பார்த்தேன். பெரும்பாலும் எனக்கு முன் நிகழும் காட்சிகளின் மீது உடனடி கவனம் வருவதில்லை. அதை உற்றுப் பார்த்திருந்துவிட்டு சுதாரித்துக்கொள்ள கொஞ்சம் நேரம் தேவைப்பட்டது. அப்பாவின் நண்பர் தொடர்ந்து முன்வாசல் கதவின் பூட்டை இரும்பு கதவோடு வைத்துத் தட்டி சத்தத்தை எழுப்பிக்கொண்டிருந்தார்.

வாசல் கதவைத் திறந்து விசாரித்தேன். அப்பாவிற்கு மைக்கா பணம் கிடைத்துவிட்டதா எனத் தொடங்கிய கேள்வி அவர் எங்குச் சென்றிருக்கிறார் என்பதில் வந்து நிற்கும்போது மதியம் தலைக்கு மேல் எரிந்துகொண்டிருந்தது.

“தம்பி அப்பா வரவரைக்கும் இப்படி வாசல்படிலெ உக்காந்துக்குறேன். பாத்துட்டுத்தான் போகனும்”

வெயிலைவிட மிகவும் உக்கிரமாக இருந்தது அவருடைய முகம். ஒரு குவளை நீராஇ வாங்கிக் குடித்துவிட்டு பெருமூச்சி வாங்கினார். மதியம் எல்லோருக்கும் ஒரு உடல்வாகைக் கொடுத்திருந்தது. கரைந்து போய்விடக்கூடிய நிலையில் சுருங்கியிருந்தது.

“மைக்கா காசு, நாங்கலாம் ஒரே எஸ்டேட்ல இருந்தப்பெ கொஞ்சம் கொஞ்சமா சேத்து வச்சி கொடுத்தோம். ஊர் ஊரா வந்தானுங்க.. . பணம் போடுங்க, டபுளா கெடைக்கும்னு சொன்னாங்க. நம்பி போட்டோம், உயிரே போயிரோம் போல. பொணம் விழுந்தோனத்தான் மிச்ச காசெ கொடுப்பானுங்க போல”

வெகுநேரம் அதையே புலம்பிக்கொண்டிருந்தார். எப்படி இதையெல்லாம் பார்த்து வியப்பது எனக்கூட எனக்கு தெரியவில்லை. வெறுமனே எந்தப் பிரதிபலிப்பும் இல்லாமல் பார்த்துக்கொண்டிருந்தேன்.

“தம்பி.. ஐயா.. .அப்பா வந்தா சொல்லு முனியாண்டி வந்தேன்னு. இன்னொருக்கா வரேன். அந்த மைக்கா காசு பத்தி கேட்டேன்னு சொல்லு”

அவர் அங்கிருந்து சென்றதும், வாசலையே கவனித்துக்கொண்டிருந்தேன். மதியம் கவனிப்பதைத் தவிர வேறு பயிற்சியைக் கொடுக்க மறுக்கிறது.

மதியம் 1.25

அம்மா மீண்டும் அறைக்கதவைத் தட்டினார். அவரது தட்டுதலில் வேகமும் வெறுப்பும் தெரிந்தாலும் கூட மீண்டும் மீண்டும் அழைக்கப்படுதலில் எங்கோ ஓர் அக்கறை இருப்பதாகவே தோன்றுகிறது. அதைத் தேடிக் கண்டறிவது தாய்மையைக் கிண்டலடிப்பது போல ஆகிவிடும். எழுந்து கதைவைத் திறந்ததும், எப்பொழுதும் போல சனிக்கு மதிய உணவு தயாராக இருந்தது. சனியின் நாக்கிலிருந்து தானாக எச்சில் வழிந்துகொண்டிருந்தது.

0 comments:

Post a Comment

Labels

Coca Cola (1) Peak Oil (1) Permaculture (1) Power of Community (1) Renewable energy (1) Solar energy (1) SOPA (1) sustainable agriculture (1) அ.குமரேசன் (6) அங்காடிதெரு (1) அணு ஆற்றல் (2) அணுமின் (1) அண்ணா (4) அண்ணா நூலகம் (1) அதிர்ச்சி (1) அத்வானி (2) அந்நிய முதலீடு (2) அபிநயா (1) அப்துல் கலாம் (1) அப்பணசாமி (2) அமெரிக்கா (20) அம்பானி (1) அம்பேத்கர் (9) அரசியல் (177) அரசியல்.நிகழ்வுகள் (6) அரசு (14) அரசு மருத்துவமனை (1) அரசு விடுதி மாணவர்கள் (1) அரவான் (1) அருந்ததியர் (1) அர்ஜெண்டினா (1) அலசல் (1) அவலம் (19) அழகு (1) அறிமுகம் (1) அனுபவம் (28) அன்னா ஹசாரே (1) அஜயன் பாலா (1) ஆ.ராசா (1) ஆணையம் (2) ஆதவன் தீட்சண்யா (3) ஆப்கானிஸ்தான் (1) ஆப்பிரிக்கா (2) ஆர்.மீனா (1) ஆர்எஸ்எஸ் (2) ஆவணப்படம் (3) ஆனந்தன் (2) இ.எம்.ஜோசப் (1) இ.பா.சிந்தன் (22) இட ஓதுக்கீடு (3) இடஒதுக்கீடு (1) இடதுசாரிகள் (4) இணையம் (2) இதழ்கள் (6) இந்தியா (69) இந்துத்துவா (8) இந்துஜா (1) இமு (2) இமு டிச11 (5) இமு நவமபர் 2011 (6) இயக்கம் (7) இயக்குனர் ஷங்கர் (1) இரா.சிந்தன் (5) இரா.செழியன் (2) இரா.நடராஜன் (3) இராம.கோபாலன் (1) இல.சண்முகசுந்தரம் (2) இலக்கியம் (38) இலங்கை (6) இலங்கைத் தமிழர் (4) இலவசக் கல்வி (1) இலவசங்கள் (1) இளவரசன் கொலை (1) இளைஞர் முழக்கம் (11) இஷ்ரத் (2) இஸ்ரேல் ஆக்கிரமிப்பு (1) இஸ்லாம் (3) ஈராக் (1) ஈரான் (2) உ.வாசுகி (1) உச்ச நீதிமன்றம் (1) உணவு நெருக்கடி (2) உதயசங்கர் (1) உத்தப்புரம் (1) உயர்கல்வி (2) உரையாடல்கள் (2) உலக சினிமா (4) உலகமயம் (5) உலகம் (46) உளவியல் (1) உள்ளாட்சி (1) உள்ளாட்சித் தேர்தல் (1) ஊடகங்கள் (14) ஊடகம் (8) ஊழல் (30) எடியூரப்பா (1) எம்.எப்.ஹூசேன் (1) எம்.சிவக்குமார் (2) எரிசக்தி (1) எல்.கே.ஜி (1) என்.ஜி.ஓ (1) என்கவுண்டர் (1) எஸ். பாலா (1) எஸ்.கண்ணன் (1) எஸ்.கருணா (3) எஸ்.பி.ராஜேந்திரன் (3) எஸ்.வி.வேணுகோபாலன் (2) ஏகாதிபத்தியம் (13) ஏமன் (1) ஒபாமா (4) ஓம்பிரகாஷ் வால்மீகி (1) ஓளிப்பதிவு (1) ஃபாக்ஸ்கான் (1) கச்சத் தீவு (1) கட்டுரை (51) கட்டுரைகள் (2) கணிணி (2) கணினி தொழில் நுட்பம் (1) கமல்ஹாசன் (1) கம்யூனிசம் (12) கருணாநிதி (11) கருத்து சுதந்திரம் (1) கருத்துரிமை (3) கலைஞர் (6) கல்வி (14) கவிதை (21) கவிதைகள் (1) கறுப்புப்பணம் (3) கனிமொழி (2) காங்கிரஸ் (10) காதல் (2) கால்பந்து (1) காவல்துறை (4) காஷ்மீர் (1) கி.பார்த்திபராஜா (1) கிங்பிஷர் (1) கியூபா (4) கிரீஸ் (1) குடும்பம் (1) குட்டி ரேவதி (1) குப்பன் சுப்பன் (1) குலாத்தி (1) குழந்தைகள் (9) குழந்தைகள் கடத்தல் (1) குஜராத் கலவரம் (1) குஜராத் படுகொலைகள் (1) கூகிள் அந்தரங்கம் (1) கூடங்குளம் (2) கே.சாமுவேல்ராஜ் (1) கே.பாலமுருகன் (1) கேள்விகள் (1) கைப்பற்றுவோம் போராட்டம் (1) கோவில் (1) ச.தமிழ்ச்செல்வன் (1) ச.மாடசாமி (1) சக்திஜோதி (1) சங்கமம் (1) சசிகலா (1) சச்சின் (1) சட்டசபை (2) சட்டம் (4) சத்யஜித் ரே (1) சந்திரகாந்தன் (1) சமச்சீர் கல்வி (4) சமவூதியம் (1) சமூக நீதி (2) சமூக வலைத்தளம் (1) சமூகப் பாதுகாப்பு (2) சமூகம் (177) சம்பு (1) சரத் பவார் (1) சர்வதேச பெண்கள் தினம் (1) சல்மான் ருஷ்டி (1) சா.கந்தசாமி (2) சா.செயக்குமார் (1) சாகித்திய அகாதமி விருது (1) சாக்லேட் (1) சாதீயம் (4) சாரா விஜி (2) சாலிம் அலி (1) சி.பி.எம் (9) சிக்கிம் (1) சிந்தனை (5) சிபி (1) சிராஜுதீன் (1) சில்லரை வர்த்தகம் (4) சிறப்பு பொருளாதார மண்டலங்கள் (1) சிறுகதை (12) சினிமா (52) சினிமா செய்திகள் (4) சினிமாச் செய்திகள் (4) சீத்தாராம் யெச்சூரி (2) சு.பொ.அகத்தியலிங்கம் (2) சு.வெங்கடேசன் (1) சுகாதாரம் (1) சுதிர் ரா (1) சுயமரியாதைத் திருமணம் (1) சுவாரசியம் (1) சுற்றுப்புறச் சூழல் (3) சூர்யா (1) செம்மலர் (4) செம்மலர் அக் 2011 (4) செய்திகள் (112) சென்னை (1) சோவியத் (1) சோஷலிசம் (1) டெல்லி (2) டேம் 999 (1) த.தமிழரசி (1) தகவல் உரிமை (1) தகவல் திருட்டு (2) தண்ணீர் (3) தமிழக மீனவர்கள் (1) தமிழகம் (66) தமிழர் (1) தமிழ்ச் சினிமா (1) தமிழ்நதி (1) தமுஎகச (4) தலித் (21) தற்கொலை (1) தனியார்மயம் (4) தனுஷ் (1) தி.க (2) திமுக (1) திரிணாமுல் (1) திருப்பூர் (2) திருமணம் (2) திரைக்குப் பின்னால் (2) திரைத்துறை (1) திரைப்பட விழா (1) திரைப்படம் (4) தினகரன் (1) தினமணி (3) தீக்கதிர் (9) தீண்டாமை (22) தீண்டாமையின் அடையாளங்கள் (1) தீபாவளி (1) தேசியச் செய்திகள் (4) தேர்தல் (4) தொண்டு நிறுவனங்கள் (1) தொலைக்காட்சி (2) தொழிலாளர் (6) ந.பெரியசாமி (1) நகர்ப்புற விவசாயம் (1) நகைச்சுவை (1) நக்கீரன் (1) நதிம் சயித் (1) நந்தலாலா (1) நந்தன் (1) நரேந்திர மோடி (6) நலத்திட்டங்கள் (2) நவம்பர் புரட்சி (1) நாடகம் (1) நாடாளுமன்றத் தேர்தல் 2014 (2) நாணய மதிப்பு (1) நாறும்பூநாதன் (1) நிகழ்வுகள் (154) நிலப்பிரபுத்துவம் (1) நிலமோசடி (1) நீதித்துறை (2) நீலவேந்தன் (2) நுகர்வுக் கலாச்சாரம் (2) நூல் அறிமுகம் (12) நூல் வெளியீடுகள் (1) நெல்சன் மண்டேலா (1) நேட்டோ (2) நையாண்டி (26) நையாண்டி் (14) ப.சிதம்பரம் (3) பசுபதி (1) படுகொலை (3) படைப்புகள் (2) பட்ஜெட் (1) பணவீக்கம் (2) பதிவர் வட்டம் (3) பதிவர்வட்டம் (1) பதிவுலகம் (1) பரிந்துரைகள் (5) பழங்குடி (1) பள்ளிக்கூடம் (1) பறவைகள் (1) பன்னாட்டுக் கம்பெனிகள் (3) பா.ஜ.க (3) பாகிஸ்தான் (2) பாடல் (5) பாதல் சர்க்கார் (1) பாதுகாப்பு (1) பாரதி (2) பாலபாரதி (1) பாலஸ்தீனம் (1) பாலியல் வன்முறை (6) பாலு மகேந்திரா (1) பால் சமத்துவம் (1) பாஜக (1) பி.சுகந்தி (1) பி.ராமமூர்த்தி (1) பிடல் காஸ்ட்ரோ (3) பிரணாப் முகர்ஜி (1) பிரபாத் பட்நாயக் (3) பிரளயன் (2) பிரிட்டன் (1) பிர்தவ்ஸ் ராஜகுமாரன் (1) பிளின் (1) பு.பெ.நவமபர் 2011 (1) புகைப்படங்கள் (1) புதிய பரிதி (2) புது விசை (12) புதுமை (1) புத்தக அறிமுகம் (2) புத்தகக் கண்காட்சிகள் (2) புத்தகம் (18) புத்தகம் பேசுது (17) புத்தகம் பேசுது நவம்பர் 2011 (8) புத்தகாலயம் (2) புத்தாண்டு (1) புபே (2) புபே டிச11 (8) புரட்சி (2) புவி (1) புவி டிச11 (5) புவி நவ 2011 (7) புனைவு (1) புஷ் (1) பெட்ரோல் (7) பெண் (11) பெண் விடுதலை (1) பெண்குழந்தை (1) பெண்ணியம் (9) பெண்ணெழுத்து (1) பெரியார் (2) பெருமுதலாளிகள் (7) பேட்டி (2) பேரா.சிவசுப்பிரமணியன் (2) பேஸ்புக் (1) பொருளாதார நெருக்கடி (2) பொருளாதாரம் (24) போக்குவரத்து (1) போராட்டம் (15) போலீஸ் தாக்குதல் (3) ப்ரிசம் (4) ப்ரிசம் - தகவல் திருட்டு (7) ப்ரியா தம்பி (1) மக்களுக்கான மருத்துவம் (1) மக்கள் நலப்பணியாளர்கள் (2) மக்கானா (1) மத அடிப்படை வாதம் (1) மதவெறி (3) மதுசூதனன் (1) மம்தா (3) மம்முட்டி (1) மரபணு (1) மலாலாய் சோயா (1) மவோயிஸ்டுகள் (1) மன்மதன் அம்பு (1) மன்மோகன்சிங் (10) மா ற்று (1) மாட்டுக்கறி (1) மாதர் சங்கம் (1) மாதவராஜ் (2) மாவோ (1) மாற்ற (1) மாற்று (223) மின்கட்டணம் (1) மின்சாரம் (1) மீள்பார்வை (2) முதலாளி (1) முதலாளித்துவம் (11) முத்தமாக மாறேன் (1) முத்துக்கண்ணன் (1) முல்லைப் பெரியாறு (7) முறைகேடுகள் (5) மெகாசீரியல் (1) மே.வங்க அரசு (1) மே.வங்கம் (1) மேதினம் (1) மேற்கு வங்கம் (1) மொக்கை (1) மொழி (2) மொழிபெயர்ப்பு (1) மோசடி (1) மோடி (3) மோனிகா (1) யுத்தம் (2) ரத யாத்திரை (1) ரமேஷ் பாபு (2) ராகுல் காந்தி (2) ராடியா (2) ராஜ பக்‌ஷே (1) ரிலையன்ஸ் (1) ருமேனியா (1) லட்சுமணப்பெருமாள் (2) லெனின் (2) லோக்பால் (5) வசந்த பாலன் (1) வண்ணக்கதிர் (1) வரலாறு (19) வலைப்பூக்கள் (1) வழக்கு விசாரணை (1) வாசிப்பு (5) வாச்சாத்தி (1) வால் ஸ்டிரிட் (3) வால்மார்ட் (1) வால்ஸ்டிரிட் போராட்டம் (2) வாழ்க்கை (4) வானியல் (2) விக்கிபீடியா (1) விக்கிலீகஸ் (1) விக்கிலீக்ஸ் (7) விஞ்ஞானம் (2) விமர்சனம் (10) விலையேற்றம் (2) விலைவாசி (11) விலைவாசி உயர்வு (2) விவாதங்கள் (1) விவாதம் (9) விளம்பரம் (1) விளையாட்டு (4) வினவு (1) விஜய் (2) விஜய் மல்லையா (1) வீட்டுவசதி வாரியம் (1) வீரமணி (2) வெண்மணி (2) வெள்ளம் (2) வெனிசுவெல்லா (1) வேலையின்மை (2) வோடாபோன் (1) ஜப்பான் நெருக்கடி (2) ஜாக்கிசான் (1) ஜாதி (1) ஜாபர் பனாகி (1) ஜூலியன் அசாங்க (1) ஜெயலலிதா (9) ஜோதிடம் (1) ஸ்டீவ் ஜாப்ஸ் (1) ஸ்பீல்பர்க் (2) ஸ்பெக்ட்ரம் (6)