Thursday, August 18, 2011

சாதியமும் மார்க்சிஸ்டுகளும்-ஒரு சுருக்கமான பார்வை

கார்ல் மார்க்ஸ் புரட்சி என்று சொல்லும்போது அதை பொருளாதாரப் புரட்சி என்றோ, அரசியல் புரட்சி என்றோ சொல்லவில்லை. அவர் எப்போதும் சமூகப் புரட்சி என்றே கூறுவார். 
-பிரகாஷ் காரத், சிபிஐ (எம்) பொதுச் செயலாளர்
(மே 29, 2010 அன்று புதுக்கோட்டையில் நடந்த தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநாட்டுப் பேரணியில் பேசியது)

சில வாரங்களுக்கு முன்பாக வெளிவந்த கீற்றுநந்தனின் கட்டுரையில் (எல்லோருக்குமான இனிப்பு எங்களிடம் இல்லை) பொதுவாக இடதுசாரிகள் குறித்தும், குறிப்பாக மார்க்சிஸ்டுகள் குறித்தும் பல தப்பெண்ணங்கள் வெளிப்பட்டுள்ளது. அக்கட்டுரையிலும், அதற்கான எதிர்வினைகளிலும் எழுந்துள்ள அல்லது எழுப்பப்பட்டுள்ள சில தத்துவார்த்த மற்றும் நடைமுறைப் பிரச்சனைகள் குறித்து வாசகர்களுடன் உரையாடுவது இக்கட்டுரையின் நோக்கம்.

#இந்திய சமுதாய அமைப்பின் (மற்றும் அரசமைப்பின்) அடிப்படை எது சாதியா, வர்க்கமா என்கின்ற கேள்வி முதலில் எழுகின்றது. அதற்கு விடை காண சாதி பற்றியும், வர்க்கம் பற்றியும் சுருக்கமாகவேனும் பார்க்க வேண்டியது அவசியமாகின்றது.
சாதி பிறப்பின் அடிப்படையில் தீர்மானிக்கப்படுவது. வர்க்கம் செய்யும் தொழிலின் அடிப்படையில், சமூக உற்பத்தியில் ஒருவர் வகிக்கும் பாத்திரத்தின் அடிப்படையில் தீர்மானிக்கப்படுவது. மூலதனம் (உற்பத்திக் கருவிகள், தொழில் மூலதனம்) வைத்திருப்பவர் முதலாளி. உழைப்பைக் கொடுத்து உற்பத்தி செய்பவர் தொழிலாளி. அது போல் நில உடமையாளர், நிலமற்ற விவசாயத் தொழிலாளர்கள். இவற்றில் பெரிய, நடுத்தர, சிறிய என்று பல பிரிவுகள் இருக்கின்றன. அவற்றுக்குள் நாம் இப்போது போகவில்லை.

இன்னின்ன வர்ணங்களுக்கு இன்னின்ன வேலைகள் என்று வர்ணாசிரமம் வகுத்தது. அவற்றை இரண்டு வகையாகப் பிரிக்கலாம். உழைப்பவர்கள், உழைப்பின் பலன்களை அனுபவிப்பவர்கள். இதற்குள்ளும் பல வகையான உட்பிரிவுகள் இருக்கின்றன. அவற்றுக்குள்ளும் நாம் இப்போது போகவில்லை.

வர்க்கம் சமூக உற்பத்தியில் ஒருவர் வகிக்கும் பாத்திரத்தை வைத்து தீர்மானிக்கப்படுவது. சாதி பிறப்பின் அடிப்படையில் தீர்மானிக்கப்பட்டு, இன்னின்ன சாதியில் பிறந்தவர்கள் இன்னின்ன வேலைகள் செய்ய வேண்டும் என்று தீர்மரினிக்கப்பட்டது. அதாவது தாங்கள் மட்டுமல்ல, தங்களது சந்ததிகளும் உடமையாளர்களாகவே இருக்க வேண்டும் என்று உடமையாளர்கள் சதி செய்ததன் விளைவே சாதி. இன்னின்ன சாதிகள் இன்னின்ன வேலைகள்தான் செய்ய வேண்டும் என்றும், இன்னின்ன சாதிகளுக்கு மட்டும்தான் சொத்து வைத்துக் கொள்ளும் உரிமை இருக்கின்றது என்றும், சூத்திரர்களுக்கும் பஞ்சமர்களுக்கும் சொத்து வைத்துக் கொள்ளும் உரிமை கிடையாது என்றும், கூடவே எந்த சாதியினராயினும் பெண்களுக்கு சொத்துரிமையே கிடையாது என்றும், பார்ப்பனர்-சத்திரியர்-வைசியர் ஆகிய மூன்று வர்ணத்தவருக்கும் சேவை செய்வதே சூத்திரர்களின், பஞ்சமர்களின் கடமை என்றும் மனு எழுதி வைத்ததற்கு அடிப்படையே பொருளாதாரக் காரணிகள்தான் என்பது வெளிப்படை. இல்லை என்றால், பார்ப்பனர் பட்டினி கிடந்தாலும், வேறு எந்த சாதியைச் சேர்ந்த எவரும், அவர் பணக்காரனரராக இருந்தாலும், அவரை வணங்க வேண்டும் என்று மட்டும், நன்றாகக் கவனிக்கவும், வணங்க வேண்டும் என்று மட்டும், மனு எழுதி வைத்திருக்க வேண்டும். ஆனால், மனு சூத்திரர்களுக்கும், பஞ்சமர்களுக்கும், பெண்களுக்கும் சொத்து வைத்துக் கொள்ளும் உரிமையே கிடையாது என்றும் எழுதிவைத்தான்.

 
மனு செய்ததன் சாராம்சம், வர்க்கத்தை சாதிக்குள் மறைத்து வைத்ததுதான். அதன் மூலம் கடவுளின் பெயராலும், 'கடவுள் படைத்த' சாதியின் பெயராலும், சுரண்டுவதையும் சுரண்டப்படுவதையும் 'புனிதப்படுத்தினான்'. 'அற்பப்' பொருளியல் காரணிகளை 'புனித' ஆன்மீகத்திற்குள் ஒளித்து வைத்தான். இந்த இடத்தில், ஒவ்வொரு கருத்திற்குப் பின்னாலும் ஒரு வர்க்கம் ஒளிந்திருக்கின்றது என்கின்ற கார்ல் மார்க்சின் கூற்றை என்னால் மேற்கோள் காட்டாமல் இருக்க முடியவில்லை.

உலகில் உள்ள எந்தவொரு சமுதாயத்தையும் போலவே இந்திய சமுதாய அமைப்பின் (மற்றும் அரசமைப்பின்) அடிப்படை வர்க்கம்தான். உற்பத்தி உறவுகள்தான். அரசியல் சட்டத்தில் இன்ன சாதியினர்தான் நாடாள வேண்டும் என்று எழுதி வைக்கப்பட்டிருக்கிறதா என்ன? எந்தச் சாதியைச் சேர்ந்தவர் பிரதமரானாலும் தொழிலாளர்கள் சுரண்டப்படுவதும், ஒடுக்கப்படுவதும் நடந்து கொண்டுதான் இருக்கின்றது. அதற்கு சுதந்திர வர்த்தகம் என்கின்ற பெயரில் அரசியல் சட்டம் அனுமதியும் வழங்கியுள்ளது. அதே நேரத்தில், தலித்துகள் விஷயத்தில் சாதி ரீதியான ஒடுக்குமுறையும், சுரண்டலும் இன்னும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றது. தலித் மக்கள் சமூகரீதியாகவும், வர்க்க ரீதியாகவும் இரட்டைச் சுரண்டலுக்கு ஆளாக்கப்படுகிறார்கள்.

சாதியும் வர்க்கமும் ஒன்றாக இருந்த நிலைமையில் வர்க்கம் சாதிக்குள் ஒளிந்திருப்பதால் இது சாதிய சமுதாயம் என்று அழைக்கப்பட்டதில் பிழையில்லை. ஏனெனில், அந்நிலையில் அப்படிச் சொன்னாலும் அது வர்க்க சமுதாயத்தைத்தான் குறிக்கின்றது. ஆனால், சாதிகளுக்குள் வர்க்கப் பிளவுகள் தோன்றி, அது மேலும் மேலும் ஆழமாகிக் கொண்டிருக்கும்போது இதை சாதிய சமுதாயம் என்று மட்டும் அழைப்பது பொருத்தமாக இருக்காது. அது சரியுமல்ல.

ஏனெனில், இதை சாதிய சமுதாயம் என்று மட்டும் நாம் இப்போது வரையறுத்தால், இதை மாற்றுவதற்கான போராட்டத்தை சாதி அடிப்படையில்தான் நடத்த வேண்டியிருக்கும். உதாரணமாக, கருணாநிதி குடும்பமும், மாறன் குடும்பமும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள் என்பதற்காக அவர்களுக்கு எதிராகப் போராடக் கூடாது என்று அவர்களது நிறுவனங்களில் வேலை பார்க்கும் தொழிலாளர்களிடம் கூற வேண்டியிருக்கும். சாதி அடுக்கில் பார்ப்பனர்கள் உச்சத்தில் இருப்பதால், பார்ப்பன முதலாளிகளிடம் வேலை பார்க்கும் தொழிலாளர்கள் மட்டும் அவர்களை எதிர்த்துப் போராடுங்கள் என்று சொல்ல வேண்டியிருக்கும். இப்படியொரு முரண்பாடான நிலை எடுத்தால் அது எந்த வகையிலும் தொழிலாளி வர்க்கத்தின் விடுதலைக்கு வழிவகுக்கப் போவதில்லை. மாறாக, கருணாநிதி குடும்பத்திற்கும் மாறன் குடும்பத்திற்கும் இன்னபிற பார்ப்பனரல்லாத சாதிகளைச் சேர்ந்த முதலாளிகளுக்கும் சாதகமாக இருக்கும். அதனால்தான், இந்தியாவில் சாதி மட்டும்தான் இருக்கின்றது, வர்க்கங்களே இல்லை என்று இவர்களும், இவர்களது நண்பர்களான கி.வீரமணி போன்றவர்களுக்கும் (அவரும் இப்போது ஒரு முதலாளிதான் என்கிறார்கள்) ஆவேசமாகக் கூறுகின்றார்கள்.

இதுபோன்ற கருத்தின் அடிப்படையில்தான் மேற்குறிப்பிட்ட கட்டுரைக்கான எதிர்வினையில் கந்தசாமி என்பவர், சாதிப் பிரச்சனையை ஒழித்துவிட்டு சம்பளப் பிரச்சனையைப் பேசலாம் என்கிறார், அர்ச்சகராகும் உரிமையைப் பெற்றுவிட்டு உற்பத்தியில் பங்கு கேட்கலாம் என்கிறார். அவர் எந்த சாதி முதலாளி என்று கூட வகை பிரிக்கவில்லை. ஒட்டுமொத்தமாக சம்பளப் பிரச்சனையையும், உற்பத்தியில் பங்கு கேட்கும் பிரச்சனையையும் ஒத்திப் போடலாம் என்கிறார். இது பார்ப்பன முதலாளிகளுக்கும் கூட ஆதாயம்தான்.

இடையே ஒரு விஷயத்தைக் குறிப்பிட வேண்டும். உற்பத்தியில் பங்கு கேட்பதல்ல கம்யூனிஸ்டுகளின் நோக்கம். மனித உழைப்பின்றி இவ்வுலகில் எதுவும் உற்பத்தி ஆவதில்லை. உண்மையான உற்பத்தியாளர்களான தொழிலாளர்களே (முதலாளிகளையே நமது அரசாங்கங்கங்கள் உற்பத்தியாளர்கள் என்று தங்கள் வர்க்க குணத்திற்கு ஏற்ப வகைப்படுத்துகின்றன) உற்பத்தி செய்யப்படும் பொருட்களின் நியாயமான உடமையாளர்கள். எனவே உற்பத்தி அனைத்தையும் அவர்களுக்கு மட்டுமே உரியதாக, அதை விநியோகிக்கும் உரிமை¬யையும் அவர்களுக்கு மட்டுமே உரியதாக ஆக்குவதுதான் கம்யூனிஸ்டுகளின் நோக்கம்.


மேலும், சாதி அடிப்படையில் மட்டும் போராட்டம் நடத்துவது சாதியை ஒழிக்குமா என்கின்ற கேள்வியும் இருக்கின்றது.

சாதிப் படிநிலை வரிசையில் உச்சத்தில் பார்ப்பனர் இருக்கின்றனர். அவர்களுக்கு மேலே எந்த சாதியும் இல்லை. அடுக்கி வைக்கப்பட்டுள்ள மூட்டைகளில் அடி மூட்டைகளாக இருக்கும் தலித்துகளுக்குக் கீழே எந்த சாதியும் இல்லை. மற்ற எல்லா சாதிகளும் தங்களுக்கு மேலே உள்ள சாதிகள் மீது அதிருப்தி கொள்கின்றன. மேல்சாதிகளின் ஆதிக்கத்திலிருந்து விடுதலை பெற விரும்புகின்றன. அதே நேரத்தில் தமக்குக் கீழே உள்ள சாதிகளை ஆதிக்கம் செய்யவே விரும்புகின்றன. எனவே, அனைத்து பிற்படுத்தப்பட்ட ஒடுக்கப்பட்ட சாதியினரும் சாதியத்தை ஒழிக்க ஒன்றுசேர்வது என்பது சாத்தியமில்லாமல் போகின்றது. ஏனெனில், தங்களை ஒடுக்குபவர்களுக்கு எதிராகப் போராடத் தயாராக இருப்பவர்கள் முற்றிலும் சாதியத்தை ஒழிக்க விரும்பவில்லை. அப்படிச் செய்தால், தங்களுக்குக் கீழே இருக்கும் சாதிகளைத் தாங்கள் ஒடுக்க முடியாதே? எடுத்துக் காட்டாக, சமூக நீதி இயக்கங்கள் மூலம் மேலேறி வந்த சூத்திர சாதிகள் தலித் சாதிகள் மேலெழுந்து வருவதைத் தடுக்கவே, தலித்துகள் தங்களுடைய உரிமைகளுக்காக ஒவ்வொரு முறை முயற்சி எடுக்கும்போதும் அவர்களுக்கு எதிராக வன்முறையைக் கட்டவிழ்த்து விடுகின்றன. இப்போது சாதிக் கலவரம் என்பது இவ்விரண்டு பிரிவினருக்கு இடையில்தான் நடந்து கொண்டிருக்கின்றது.

இதன்றி தலித்துகளிலேயே ஆதிக்க சாதிகள் இருக்கின்றன என்பதும், அச்சாதிகளாலும் பிற தலித் சாதிகள் ஒடுக்கப்படுகிறார்கள் என்பதும் நடந்து கொண்டுதான் இருக்கின்றது. அருந்ததியருக்கும் இதர சில தலித் சாதிகளுக்கும் இடையில் அவ்வப்போது ஏற்படும் சிறு மோதல்கள் அதைத்தானே சுட்டுகின்றன?

பொருளாதாரம்தான் அடிப்படை என்பதால் மேல்கட்டுமானங்களில் ஒன்றான  சாதிக் கலாச்சாரத்திற்கு அல்லது பொதுவாகக் கலாச்சாரத்திற்கு எந்த பாத்திரமும் இல்லை என்பதல்ல மார்க்சிஸ்டுகளின் வாதம். பொருளாதாரவாதம் என்று அதை ஒதுக்க வேண்டும் என்கின்றனர், மார்க்சிஸ்டுகள். அத்தகைய போக்கை கைவிட வேண்டும் என்கின்றனர்.

#பொருளாதாரம் எப்படி கலாச்சாரத்தின் மீது வினையாற்றுகின்றதோ அதுபோல கலாச்சார அம்சங்களும் பொருளாதார விவகாரங்களின் மீது வினையாற்றுகின்றன. இரண்டும் பரஸ்பரம் வினையாற்றிக் கொள்கின்றன. வேலை வாய்ப்பும், அதற்குத் தேவையான கல்வியும் சாதியின் பெயரால் மறுக்கப்பட்டது ஒரு உதாரணம். அதனால்தான் சாதி அடிப்படையில் இடஒதுக்கீடு கோரிக்கையும், இயக்கங்களும் எழுந்தன. இன்றும் தொடர்ந்து நடத்த வேண்டிய தேவையும் இருக்கின்றது. இடஒதுக்கீடு கோரிக்கைகள் சாராம்சத்தில் பொருளாதாரம் சார்ந்த கோரிக்கைகளே என்பதை சாதி முதன்மைவாதிகளுக்கு சுட்டிக் காட்ட விரும்புகின்றேன்.

இடஒதுக்கீட்டின் ஒரு பக்க விளைவாக சாதி அடிப்படையில் அணிதிரள்வது நடந்து வருகின்றது என்றொரு கவலை சமூக மாற்றத்திற்காகப் பாடுபடுவோர் மத்தியில்  இருக்கின்றது. ஆனால், அதே வேளையில் அது சாதி ஒழிப்பை நோக்கிய விளைவுகளையும் ஏற்படுத்தி வருகின்றது. சாதி வாரியாக தனித்தனியே பிரிந்து வாழ்ந்து கொண்டிருந்த மக்கள் இடஒதுக்கீட்டின் காரணமாக ஒரே இடத்தில் சேர்ந்து படிப்பதால், சேர்ந்து வேலை பார்ப்பதால், ஏன் தொழிலாளர் குடியிருப்பு போன்ற பகுதிகளில் சேர்ந்து வாழ்வதால் பல சாதியினரும் கூடிப்பழகும் வாய்ப்பு ஏற்படுகின்றது. அதனால் வெவ்வேறு சாதி ஆண்-பெண்களுக்கு இடையில் காதல் உண்டாவதும், அவை காதல் திருமணங்களாகப் பரிணமிப்பதும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. இவ்விதம் சாதியத்தைக் கட்டிக்காக்கும் கூறுகளில் ஒன்றான அகமணமுறையில் உடைப்பு ஏற்பட்டுக் கொண்டிருக்கின்றது.    

  இருக்கின்ற வேலை வாய்ப்புகளில் எங்களுக்கு இவ்வளவு கொடு என்றுதான் சாதிச் சங்கங்கள் கோருகின்றனவே ஒழிய, எல்லோருக்கும் வேலையும், கல்வியும் கொடு என்று கேட்பதில்லை. மற்ற சாதிக்காரர்களும் நாங்களும் ஒன்றா என்கின்ற அகங்காரமும், சொந்த சாதியிலேயே எல்லோருக்கும் வேலை கிடைத்துவிட்டால் 'என்னை' யார் மதிப்பார்கள் என்கின்ற தலைமையின் அகங்காரமும் இதற்குக் காரணம் இல்லை என்றால், வர்க்க குணம் மட்டுமே காரணமாக இருக்க முடியும்.
உலகமயத்தையும், தனியார்மயத்தையும், தாரனமயத்தையும் ஆதரித்துக் கொண்டே, செயல்படுத்திக் கொண்டே சமூகநீதி பேசுவதைவிடவும் துரோகம் எதுவும் இருக்க முடியாது. பெரியாரின் வாரிசுகள் என்றும், அம்பேத்கரின் வாரிசுகள் என்றும் தங்களைக் கூறிக் கொள்பவர்கள் இப்போது அதைத்தான் செய்து கொண்டிருக்கின்றார்கள். எல்லாம் தனியார்மயமாகிக் கொண்டிருக்கின்றது. அதாவது கல்வி, மருத்துவம், தொழில்துறை, தண்ணீர், எல்லாம் தனியார்மயம். தனியார் துறையிலோ இடஒதுக்கீட்டுக்கு இடமில்லை. வேலைகளை எல்லாம் ஒழித்துவிட்டு, வெறும் டப்பாவிற்குள்ளிருந்து எதைப் பங்கு போடப் போகின்றார்கள் என்று தெரியவில்லை.

இடஒதுக்கீட்டிலிருந்து கிரீமி லேயர் பகுதியினரை விலக்கி வைக்க வேண்டும் என்கின்ற விஷயத்தில் மார்க்சிஸ்டுகளின் நிலைப்பாடு குறித்து பலரும் தேவையற்ற குழப்பத்தில் இருக்கின்றனர்.

இடஒதுக்கீட்டின் பலன்களை அந்தந்த சாதிகளைச் சேர்ந்த பணக்காரர்கள் அல்லது செல்வாக்கு மிக்கவர்கள் மட்டுமே அனுபவித்து வருகின்றனர், எனவே அச்சாதிகளில் உள்ள ஏழைகளுக்கு வாய்ப்பு கிடைக்கும் வகையில் இடஒதுக்கீடு சட்டத்தைத் திருத்த வேண்டும் என்பது கிரீமி லேயர் கோட்பாடு.

மார்க்சிஸ்ட் கட்சியைப் பொருத்தவரையில், இன்னும் கல்வி ரீதியாகவும், சமூக ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் ஒடுக்கப்பட்டு வரும் தலித்துகளுக்கு இது பொருந்தாது என்பது அதன் நிலைப்பாடுகளில் ஒன்று.
பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இது பொருந்தும். ஆனால், ஒதுக்கீட்டில் உள்ள இடங்களை நிரப்புகின்ற அளவு ஏழை மாணவர்களோ, வேலை கோருபவர்களோ அப்பிரிவுகளில் இருந்து வரவில்லை எனில், அவை பொதுப்பட்டியலில் இருந்து நிரப்பப்பட வேண்டும் என்பதை மார்க்சிஸ்ட் கட்சி எப்போதுமே ஏற்றுக் கொண்டதில்லை. மாறாக, போதுமான எண்ணிக்கையில் பிற்படுத்தப்பட்ட சாதிகளைச் சேர்ந்த ஏழைகள் கிடைக்கவில்லை என்றாலும், அந்த இடங்கள் பிற்படுத்தப்பட்ட சாதிகளைச் சேர்ந்தவர்களைக் கொண்டே நிரப்பப்பட வேண்டும், அவர்கள் கிரீமி லேயர் பகுதியைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும். முன்னுரிமை ஏழைகளுக்குக் கொடுக்கப்பட வேண்டும் என்பதும், எப்படியாயினும் எந்தெந்த பிரிவினருக்கென்று இடங்கள் ஒதுக்கப்பட்டிருக்கின்றனவோ அவர்களைக் கொண்டே அந்த இடங்கள் நிரப்பப்பட் வேண்டும் என்பதுதான் மார்க்சிஸ்டு கட்சியின் நிலைப்பாடு.

#எங்கெல்லாம் சாதி இந்துக்கள் இருக்கின்றார்களோ அங்கெல்லாம் சாதி இருக்கின்றது என்று கீற்றுநந்தன் கூறுவது பிழையான கருத்தாகும். இப்படி எதற்கெடுத்தாலும் எல்லாவற்றையும் பொதுமைப்படுத்தும் போக்கு பலரிடம் இருக்கின்றது. இது அவர்களது நிலைப்பாடுகளுடன் முரண்படும் என்பதையும் சுட்டிக் காட்ட வேண்டும்.

முதலாவதாக, பிறப்பைக் கொண்டு ஒருவரின் குணநலன்களை தீர்மானிப்பது என்பது பார்ப்பனீய பாணி சிந்தனை. இது சாதி எதிர்ப்பாளர்களையும் விட்டு வைக்கவில்லை.

இரண்டாவதாக, எடுத்த எடுப்பிலேயே இது அடிபட்டுப் போகின்றது. பெரியார், பிரபாகரன், கி.வீரமணி, கொளத்து£ர் மணி ஆகிய அனைவருமே சாதி இந்துக்கள்தான். அவர்களையும் சாதிவாதிகள் என்று கருத முடியுமா? இந்தப் பட்டியல் இத்துடன் நிற்பதில்லை. இன்னும் நீளும்.

அடுத்து, விடுதலைப் புலி ஆதரவாளர்களில் பலர் பார்ப்பன எதிர்ப்பு பேசுகின்றனர். ஆனால், பார்ப்பனர்களால் நடத்தப்படும் ஆனந்தவிகடன் அப்பட்டமாக விடுதலைப்பு புலி ஆதரவு நிலைப்பாடு எடுப்பதற்கும், இன்றும் கூட இடைவிடாமல் பிரச்சாரம் செய்வதற்கும் என்ன காரணம் கூறுவார்கள்? தினமணி உள்ளிட்ட சில பத்திரிக்கைகள் சில சமயம் பட்டும் படாமலும், சில சமயம் வெளிப்படையாகவும் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகத்தான் எழுதுகின்றன. ஒரு வேளை அதனால்தான், விடுதலைப்புலி  ஆதரவாளர்கள் காஞ்சி காமகோடி பீடத்தையும், இந்துத்துவ பயங்கரவாதிகள் அசோக் சிங்கால், அத்வானி போன்றவர்களையும் சந்தித்து ஆதரவு கேட்டார்களோ? அவர்களில் சிலர் மராட்டிய இனவெறியன் பால் தாக்கரேயைப் புகழ்ந்து தள்ளுகிறார்களோ? அவரும் இவர்களைப் புகழ்கிறாரோ?
ஒருவர் தன்னைப் பற்றி என்ன கூறிக் கொள்கிறார் என்பதை வைத்தோ, அவரைப் பற்றி மற்றவர்கள் என்ன கூறுகிறார்கள் என்பதை வைத்தோ அவரை மதிப்பிடுவது மார்க்சிய வழக்கமல்ல. உண்மையில் அவர் என்ன செய்கிறார் என்பதை வைத்துத்தான் அவரை மதிப்பிடுவோம்.

மார்க்சிஸ்ட் கட்சியில் பார்ப்பன சாதியில் பிறந்தவர்கள் தலைவர்களாக இருக்கலாம். பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட சாதியில் பிறந்தவர்கள் எல்லாம் மக்களுக்கு நல்லது செய்யவே அவதாரம் எடுத்திருக்கிறார்கள் என்று எண்ணுவது எவ்வளவு தவறோ அவ்வளவு தவறு பார்ப்பன சாதியில் பிறந்தவர்கள் அனைவரும் ஒடுக்குமுறையாளர்களாக இருப்பார்கள் என்று எண்ணுவதும். முதலாவது எண்ணம்  சரி என்றால், எவரும் கருணாநிதி, வைகோ, ராம்தாஸ், திருமாவளவன், மாயாவதி ஆகியோருக்கு எதிராக வாய் திறக்கக் கூடாது. இரண்டாவது எண்ணம் சரி என்றால், காஞ்சி காமகோடி பீடத்தையும், அசோக் சிங்காலையும் ஏன் சந்தித்தார்கள் என்று விளக்கமளிக்க வேண்டும். ஆனந்தவிகடனையும், தினமணியையும் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக எழுதாதே என்று அவற்றைக் கண்டிக்க வேண்டும். அல்லது அந்த இதழ்களைப் புறக்கணிக்க வேண்டும். கடந்த மக்களவைத் தேர்தலில் ஜெயலலிதாவின் ஆதரவு எங்களுக்குத் தேவையில்லை என்று புறந்தள்ளியிருக்க வேண்டும். இரண்டுமே சுயமுரணின்றி செய்ய முடியாது என்றால், மேற்குறிப்பிட்ட பார்வையில் கோளாறு இருக்கின்றது என்று பொருள். அதுதான் உண்மையும் கூட.

#தஞ்சையில் தலித்துகளுக்கு இழைக்கப்படும் கொடுமைகளுக்கு எதிராக தலித்துகளையும், இன்னபிறரையும் இணைத்துப் போராடிய மார்க்சிஸ்ட் கட்சியின் தலைவர் சீனிவாசராவ் பிறப்பால் பிராமணர்.

மேற்கு வங்கத்தில், கேரளத்தில் கிட்டத்தட்ட சாதிக்கலவரங்களே இல்லையே, ஏன் என்பதை யோசித்துப் பார்க்க வேண்டும். மேற்கு வங்கத்தில் மேற்கொள்ளப்பட்ட நிலச்சீர்திருத்த்தின் மூலம் 2006 வரை 10.69 லட்சம் ஏக்கர் உபரி நிலம் மற்றும் அரசு புறம்போக்கு நிலம் 26.43 லட்சம் நிலமற்ற விவசாயிகளுக்கு பகிர்ந்து அளிக்கப்பட்டுள்ளது. அவர்களில் 56% பேர் தலித் மற்றும் பழங்குடியினர். இது மக்கள் தொகையில் அவர்களது விகிதாச்சாரத்தைவிட கிட்டத்தட்ட இரண்டு மடங்காகும். இதன்றி 15 லட்சம் குத்தகை விவசாயிகளின் உரிமைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவர்களில் 42% பேர் தலித்துகள், பழங்குடியினர். இது ஒரு பகுதிதான். மேற்கு வங்கத்தில் வருடத்திற்கு 1.1 லட்சம் தலித் மாணவர்களுக்கும், 80,000 அதிவாசி மாணவர்களுக்கும் கல்வி உதவித் தொகை வழங்கப்படுகின்றது. தலித்துகள் மற்றும் பழங்குடியினர் குடிசைத் தொழிலாக சுய தொழில் துவங்குவதற்கு எஸ்சி/எஸ்டி டெவலப்மென்ட் அன்ட் பைனான்ஸ் கார்ப்பரேஷன் என்ற கடன் உதவி செய்யும் வங்கி துவங்கப்பட்டுள்ளது. ஆரம்பப் பள்ளி ஆசிரியர்களில் 26% பேரும், உயர்நிலைப் பள்ளி ஆசிரியர்களில் 29% பேர் தலித்துகளாவர். பழங்குடியினரைப் பொருத்தவைரயில் இது முறையே 9 மற்றும் 11 சதவீதமாக இருக்கின்றது.
பொதுத் தொகுதிகளில் தலித்துகளை நிற்க வைத்து வெற்றி பெறச் செய்வதில் மார்க்சிஸ்ட் கட்சிக்கு எவரும் இணையில்லை. மேற்கு வங்கத்திலும், திரிபுராவிலும், கேரளத்திலும் மக்களவை, சட்டமன்ற, உள்ளாட்சித் தேர்தல்களில் இது சாதிக்கப்பட்டுள்ளது. மேற்கு வங்கம், திரிபுரா மாநிலங்களில் மூன்றடுக்கு பஞ்சாயத்து அமைப்பில் ஒதுக்கீட்டைவிடக் கூடுதலான பதவிகளில் தலித்துகள் பழங்குடியினர் இருக்கின்றனர். இவ்வளவு ஏன், தமிழகத்தில் தலித் பெண்ணான ஜி.லதா அவர்கள் வேலு£ர் பொதுத் தொகுதியில் மார்க்சிஸ்ட் கட்சி சார்பாக போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்.

இந்த மாநிலங்களில் பார்ப்பன சாதியில் பிறந்தவர்கள் சிலர் மார்க்சிஸ்ட் கட்சியில் தலைவர்களாக இருக்கின்றார்கள்.
இடதுசாரிகள் ஆட்சி செய்யும் மேற்கு வங்கம், கேரளம், திரிபுரா ஆகிய மாநிலங்களில் சாதிக்கலவரங்களே இல்லை. சாதிய ஒடுக்குமுறையும் கிடையாது. இத்தனைக்கும் இந்தியாவில் சாதி ஒழிப்புதான் முதலில் செய்ய வேண்டியது, மற்றதை பின்னர் பார்த்துக் கொள்ளலாம் என்கின்ற இயக்கங்கள் அம்மாநிலங்களில் எதுவும் கிடையாது. ஆனால், சாதியை மட்டுமே முன்வைத்து மாபெரும் இயக்கங்களைக் கட்டமைத்த பெரியார் பிறந்த தமிழகத்திலும், அம்பேத்கரின் மராட்டியத்திலும் இன்றும் சாதிக்கலவரங்கள் கிட்டத்தட்ட அன்றாட நிகழ்வுகள்தான். பெரியாரின் காலத்தில்தான் கீழவெண்மனி நடந்தது; உத்தபுரங்களும், திண்ணியங்களும் தொடர்கதை. இன்றும் மராட்டியத்தில் ஒரு கல்வி நிறுவனத்திற்கோ அல்லது ஒரு இடத்திற்கோ அம்பேத்கரின் பெயரைவைப்பது கூட அவ்வளவு சுலபமான காரியமில்லை. கயர்லாஞ்சி மராட்டியத்தில்தான் இருக்கின்றது. இதன் பொருள் அவர்களது பங்களிப்பைக் குறைத்து மதிப்பிடுவது அல்ல. அந்தப் பெரியவர்களும் இல்லை என்றால் தலித்துகளின் வாழ்க்கை நிலைமை 19ம் நு£ற்றாண்டிலேயே இருந்திருக்கும் என்பதில் யாருக்கும் கருத்து வேறுபாடு இருக்க முடியாது. பிரச்சனை கோட்பாட்டில் இருக்கின்றது. வர்க்க அடித்தளத்தை நொறுக்காமல் சாதியை முற்றிலும் ஒழித்துவிட முடியாது.

# இதற்கு எதிராக பொதுவாக முன்வைக்கப்படும் வாதம், பொருளாதார நிலையில் மேம்பட்டுள்ள தலித்துகளும் சாதி அடிப்படையிலான ஒதுக்கலையும், தீண்டாமையையும் சந்திக்க வேண்டியிருக்கின்றதே என்பது. உண்மைதான். இதை விளக்கும் முன் ஒரு விஷயம்.

சாதி என்பது மேல்கட்டுமானத்தின் ஒரு பகுதிதான் என்பதற்கு இந்த உண்மை ஒன்றே போதும். ஏனெனில், முன்னர் இத்தகைய ஒதுக்கலையும், தீண்டாமையையும் சகித்துக் கொள்ள வேண்டிய நிர்பந்தம் இருந்தது. பெரும்பாலும் நிலமற்றவர்களாக இருக்கும் தலித்துகள் வேலைக்கும், கூலிக்கும் மேல்சாதியினரை அண்டி வாழ வேண்டியிருந்தது. மேல்சாதினரின் ஒடுக்குமுறைக்கு எதிராக வாய் திறந்தால் போதும், வயலில் வேலை கொடுக்க மாட்டார்கள்; சேரிக்கு தண்ணீர் வராது; பால் வராது; பட்டினி போட்டு வழிக்குக் கொண்டு வருவார்கள். அத்தியாவசியத் தேவைகளுக்கு மேல்சாதியினரைச் சார்ந்திருக்க வேண்டிய நிலைமை மறைந்த பின்னர், அவர்களது அட்டூழியங்களைச் சகித்துக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. நாம் நம் வேலையை நம் இஷ்டத்திற்குப் பார்த்துக் கொள்ளலாம். வலிய வம்பிற்கு வந்தால் எதிர்த்து நிற்கலாம். சாதி மோதல்களில் தலித்துகளின் உடமைகளை, அவை எவ்வளவு அற்பமானவையாக இருந்தபோதும் கூட, நாசம் செய்வதில் மேல்சாதியினர் குறியாக இருப்பார்கள். அதே போல் பொருளாதார ரீதியாக கொஞ்சம் வலுவாக தலித்துகள் இருக்கும் பகுதிகளில் எதிர்த்தாக்குதலும் வலுவாக இருக்கும். ஏற்படும் பொருட்சேதம், உயிர்ச்சேதம் ஆகிய இரண்டிற்கும் தலித்துகளின் பொருளாதார நிலைமைக்கும் தொடர்பு இருக்கின்றது.

மேலும், இந்தியாவில் இன்னும் நிலப்பிரபுத்துவம் முற்றிலுமாக ஒழிக்கப்படவில்லை. அரசியல் மொழியில் கூறினால், ஜனநாயகப் புரட்சி இன்னும் முழுமையடையவில்லை. நிலப்பிரபுத்துவம் இன்னும் உயிருடன் இருக்கும்போது அதன் மேல்கட்டுமானம் எப்படி இல்லாமல் போய்விடும்? இன்று உண்மையில் மக்கள் முதலாளித்துவ விழுமியங்களுக்கும், நிலப்பிரபுத்துவ விழுமியங்களுக்கும் இடையில் சிக்கித் திண்டாடிக் கொண்டிருக்கின்றனர்.

மேலும், பொருளாதார அடித்தளத்தில் மாற்றம் ஏற்பட்ட உடன் சாதி முற்றிலும் ஒழிந்துவிடும் என்று யாரும் எதிர்பார்க்க முடியாது. மார்க்சிஸ்டுகளும் எதிர்பார்க்கவில்லை. ஏனெனில், எந்த ஒரு கலாச்சார மேற்கட்டுமானமும் அது இருப்பதற்கான பொருளாதார அடித்தளத்தை இழந்தவுடன் மறைந்துவிடுவதில்லை. எப்படி ஒரு சமூக அமைப்பு யதார்த்தமாவதற்கு முன்னர் அது குறித்த சிந்தனைகள் தோன்றிவிடுகின்றனவோ, அது போல அந்த சமூக அமைப்பு மறைந்த பின்னரும் சில காலத்திற்கு அதற்குரிய கருத்துக்கள் மக்கள் சிந்தனையில் செல்வாக்கு செலுத்திக் கொண்டிருக்கும்.

உதாரணத்திற்கு, மன்னராட்சி மறைந்து பல பத்தாண்டுகள் ஆகின்றன. ஆனால், இன்றைய பல அரசியல் தலைவர்கள் தங்களை மன்னர்களாகவே கருதிக் கொள்கின்றார்கள். மன்னர், மாமன்னர், வேந்தர் என்று அடைமொழி சூட்டிக் கொள்கின்றார்கள். தங்களுக்குப் பின் தங்களது குடும்ப வாரிசுகளே நாடாள வேண்டும் என்று உரிமை கொண்டாடுகின்றார்கள். அரசியல் கட்சியல்லாத இயக்கமான திராவிடர் கழகமும் கூட இதற்கு விதிவிலக்கல்ல என்று ஆகிவிட்டது. இதை மக்களில் ஒரு பகுதியினரும் ஏற்றுக் கொள்கின்றார்கள்.

சாதி சுமார் இரண்டாயிரம் வருடங்களாக இருக்கின்றது. பல்வேறு காலகட்டத்தில் பல்வேறு அளவு தீவிரத்துடன் அது இயங்கியுள்ளது. இன்றும் கூட கிராமப்புற மக்களுடைய சாதி உணர்வின் அளவிற்கும், நகர்ப்புற மக்களுடைய சாதி உணர்வின் அளவிற்கும் வித்தியாசம் உள்ளது. அகமணமுறையில்தான் அது தன்னை வெகு உக்கிரமாக வெளிப்படுத்திக் கொள்கின்றது. சாதி உணர்வை முற்றிலுமாக இல்லாமல் போகச் செய்வதற்கு மிகப் பெரிய அளவில் சமூக சீர்திருத்த இயக்கங்கள் நடத்தப்பட வேண்டும். எந்த ஒரு புரட்சிக்கு முன்னும் பின்னரும் அத்தகைய இயக்கங்கள் நடக்க வேண்டிய தேவை இருக்கின்றது. அவை மகத்தானவையாகவும் இருக்கும். அம்பேத்கரும், பெரியாரும் செய்ததை இன்று மார்க்சிஸ்டுகளும் தொடர்கிறார்கள்.  
# சாதி ஒரு பிரச்சனை என்கிற தெளிவு 70 ஆண்டுகளுக்குப் பின்னர்தான் மார்க்சிஸ்டுகளுக்கு வருகிறது என்றொரு வாக்கியம் கீற்றுநந்தனின் கட்டுரையில் இருக்கின்றது. சாதிப் பிரச்சனையில் போதுமான கவனம் செலுத்தப்படவில்லை என்பதை ஒப்புக் கொள்ளலாம். ஆனால், சாதியை ஒரு பிரச்சனையாகவே பார்க்காமல் ஒரு இயக்கம் இந்தியாவில் இருக்க முடியாது. 60 வருடங்களுக்கு முன்பு தஞ்சையில் சாணிப்பாலுக்கும் சவுக்கடிக்கும் எதிராக நடந்த போராட்டம் சாதிக்கு எதிரான போராட்டமா, இல்லையா? சாதியை ஒரு பிரச்சனையாகவே பார்க்கவில்லை என்றால் 60 வருடங்களுக்கு முன்பு நடந்த தெலுங்கானா போராட்டத்தின் மூலம் நிகழ்த்தப்பட்ட நிலச்சீர்திருத்தத்தின் மூலமும் கைப்பற்றப்பட்ட நிலத்தின் பெரும்பகுதி தலித்துகளுக்கு கொடுக்கப்பட்டிருக்காது. 34 ஆண்டுகளுக்கு முன்பு மேற்கு வங்கத்தில் அதிகாரத்திற்கு வந்த இடதுமுன்னணி நிலச்சீர்திருத்தம் செய்து, உபரி நிலத்தின் பெரும்பகுதியை தலித்துகளுக்கும், பழங்குடியினருக்கும் பகிர்ந்து கொடுத்திருப்பது சாதியை ஒரு பிரச்சனையாகப் பார்க்காதவர்கள் செய்கின்ற வேலையா? மறுபுறம் மற்ற கட்சிகள் ஆண்ட, ஆள்கின்ற மாநிலங்களில் ஒப்புக்கு நடந்த நிலச்சீர்திருத்தத்தின் பலன்களையும் பெரும்பாலும் சாதி இந்துக்கள்தான் அனுபவித்தனர். இப்படி சொல்வதற்கு பல உதாரணங்கள் இருக்கின்றன.
எனினும், சாதிப் பிரச்சனை விஷயத்தில் போதுமான அளவு கவனம் செலுத்தப்படவில்லை என்று மார்க்சிஸ்டுகளே தங்களை சுயவிமரிசனம் செய்து கொள்கிறார்கள். அப்படிக் கவனம் செலுத்த முடியாமல் போனதற்கு வேறு பல காரணங்கள் இருக்கின்றன. கட்சிக்குள் 1950, 60 களில் நடந்த தத்துவப் போராட்டங்கள்; கட்சியின் சக்தி முழுவதையும் கோரிய அரசியல், வர்க்கப் போராட்டங்கள் என பல காரணங்கள் உண்டு. ஆனால், சாதியை ஒரு பிரச்சனையாகப் பார்க்கும் தெளிவு இல்லாதது நிச்சயமாகக் காரணமல்ல.
எப்படியாயினும், தமிழகத்தில் தீண்டாமை ஒழிப்புக்கு என்று தனியே ஒரு அமைப்பை உருவாக்கி கடந்த மூன்று ஆண்டுகளாக பல்வேறு போராட்டங்களை மார்க்சிஸ்ட் கட்சி நடத்தி வருகின்றது. அதற்கு முன்பிருந்தே அருந்ததியர் இடஒதுக்கீடு கோரிக்கைக்காக அருந்ததிய அமைப்புகளோடு இணைந்து போராடியது மார்க்சிஸ்ட் கட்சி. அதில் வெற்றியும் பெற்றிருக்கின்றது.

தமிழகத்தில் மார்க்சிஸ்டுகள் தவிர்த்து வேறு எந்த அமைப்பு, தலித்துகள் அமைப்பு உள்பட, தீண்டாமை ஒழிப்புக்குத் தனிக்கவனம் செலுத்தி வருகின்றது என்று யாராவது கூறுங்களேன். பெரியார் திராவிடக் கழகம் தவிர வேறு யாரும் கிடையாது. பெரியாரின் கையைப் பிடித்து வளர்ந்தவன் என்று கூறிக் கொள்ளும் கருணாநிதியின் தலைமையிலான திமுக தன் அணிகளை இரட்டைக் குவளை முறைக்கும், ஆலய நுழைவுத் தடைக்கும், தடுப்புச் சுவர்களுக்கும் எதிராக களத்தில் இறக்கிவிட்டால் தமிழகத்தின் சாதிய நிலமையில் பெரிய தாக்கம் ஏற்படாதா? இத்தனைக்கும் இப்போது அதிகாரம் இருக்கின்றது. கூடவே விடுதலைச் சிறுத்தை திருமாவளவன் வேறு இருக்கிறார். அவருக்கு தமிழகத்தில் தீண்டாமை நிலவுவது ஒரு பெரிய விஷயமில்லை. அவர் ஆலய நுழைவுப் போராட்டங்கள«£, இரட்டைக் குவளைக்கு எதிரான போராட்டங்களையோ கூட்டங்களையோ நடத்தியதைக் காட்டிலும் ஈழப்பிரச்சனை பற்றித்தான் மீசையை முறுக்குகின்றார். கருணாநிதி தயவில் பதவிகளை அனுபவித்து வரும்போது கருணாநிதி ஆட்சியில் தீண்டாமை இருக்கிறது என்று கூறமுடியுமா என்ன? பதவியும் இல்லாத, எந்தக் கூட்டணியிலும் இல்லாத புதிய தமிழகம் கிருஷ்ணசாமியும் கூட தீண்டாமைப் பிரச்சனைக்காக என்ன செய்திருக்கிறார் அல்லது என்ன செய்கிறார் என்பது மிகப் பெரிய கேள்விக்குறிதான் 

அதிமுகவின் இன்றைய தலைமை செய்யப் போவதில்லை. எதிர்பார்க்கவும் முடியாது. முந்தைய தலைமையும் செய்ததில்லை. காங்கிரஸ் கதையும் அப்படியே. வைகோவிற்கு வேறு வேலை யாரோ கொடுத்திருக்கிறார்கள். தமிழர்களை பிற மாநிலத்தவர்களுக்கு எதிராக எடுத்துக் கட்டும் வேலை. அதைச் செவ்வனே செய்து வருகின்றார். அவர் தீண்டாமை பிரச்சனையைப் பற்றி என்றைக்குப் பேசினார் அல்லது என்றைக்காவது பேசினாரா என்பது பற்றி ஏதாவது புலனாய்வுத் துறையிடம் சொல்லித்தான் கண்டுபிடிக்கச் சொல்ல வேண்டும். பாமகவை விடுங்கள். அன்புமணிக்கு எம்பி பதவிதான் அதன் இப்போதைய குறிக்கோள். எப்போதும் பதவிதான் அதன் முக்கிய லட்சியம். திக வீரமணி வாய்திறக்கமாட்டார். கருணாநிதியின் ஆட்சியில் தீண்டாமை இருக்கிறது என்று யாராவது சொன்னால் அது சமூகநீதிக்கும், தமிழினத்திற்கும் எதிரான செயல். பாஜகவைப் பற்றிச் சொல்ல வேண்டியதில்லை. மனுவின் சட்டங்களே இந்தியாவின் அரசியல் சட்டமாக வேண்டும் என்கின்ற சங்பரிவாரத்தின் அரசியல் அங்கத்தை இந்தப் பட்டியலில் வைத்துப் பரிசீலிப்பதே தவறு.

இறுதியாக, ஒரு விஷயம். கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக தீண்டாமைக்கு என்று ஒரு தனி அமைப்பை ஏற்படுத்தி, அதில் கட்சிக்கு அப்பாற்பட்ட பலரையும் இணைத்துக் கொண்டு மார்க்சிஸ்ட் போராடி வரும் வேலையில் முன்னர் இப்படி ஏன் செய்யவில்லை என்கிற ரீதியில் கேள்வி கேட்பது, ஏன் செய்கிறாய் என்று கேட்பதற்குச் சமம் என்று இக்கட்டுரையாளர் கருதுகின்றார். எனினும், கீற்றுநந்தனை 'ஏன் செய்கிறாய்' வகையில் சேர்த்த முடியாது என்றும் இக்கட்டுரையாளர் கருதுகின்றார்.

அசோகன் முத்துசாமி

2 comments:

  1. தலித்துகள், மலைவாசிகள் , பிற்படுத்தப்பட்ட வகுப்பில் இழி தொழில் செய்தவர்கள் மட்டுமே இட ஒதுக்கீடு உரிமையை அனுபவிக்க வேண்டும்! ஆதிக்க சாதியினர் பலரும் தங்கள் செல்வாக்கால் பட்டியலில் பிற்பட்டு சலுகைகளை அனுபவிக்கின்றனர்!

    கிரீமி லேயர் பிரச்சனையை சலுகைகளை அனுபவிப்பவரே தம்மில் கலந்துரையாடி முடிவெடுக்கலாம்!

    தீண்டாமை ஒழிப்பில் செங்கோடியினரே இன்று உழைத்து வருகின்றனர் என்பது யாராலும் மறுக்க முடியாது! தங்களுக்குள் மட்டும் ஏன் தீண்டாமையை வளர்த்துக் கொள்ளுகிறார்கள் என்பது மட்டும் புரியவில்லை!

    ReplyDelete
  2. பதிவு அசத்தல்

    கூடன்குளம் அணு உலைக்கு எதிரான இந்த பதிவையும் படிங்க

    4-வதுநாள் உண்ணாவிரதம்.127 உயிர்களை காப்பாற்றுங்கள்!!!

    ReplyDelete

Labels

Coca Cola (1) Peak Oil (1) Permaculture (1) Power of Community (1) Renewable energy (1) Solar energy (1) SOPA (1) sustainable agriculture (1) அ.குமரேசன் (6) அங்காடிதெரு (1) அணு ஆற்றல் (2) அணுமின் (1) அண்ணா (4) அண்ணா நூலகம் (1) அதிர்ச்சி (1) அத்வானி (2) அந்நிய முதலீடு (2) அபிநயா (1) அப்துல் கலாம் (1) அப்பணசாமி (2) அமெரிக்கா (20) அம்பானி (1) அம்பேத்கர் (9) அரசியல் (177) அரசியல்.நிகழ்வுகள் (6) அரசு (14) அரசு மருத்துவமனை (1) அரசு விடுதி மாணவர்கள் (1) அரவான் (1) அருந்ததியர் (1) அர்ஜெண்டினா (1) அலசல் (1) அவலம் (19) அழகு (1) அறிமுகம் (1) அனுபவம் (28) அன்னா ஹசாரே (1) அஜயன் பாலா (1) ஆ.ராசா (1) ஆணையம் (2) ஆதவன் தீட்சண்யா (3) ஆப்கானிஸ்தான் (1) ஆப்பிரிக்கா (2) ஆர்.மீனா (1) ஆர்எஸ்எஸ் (2) ஆவணப்படம் (3) ஆனந்தன் (2) இ.எம்.ஜோசப் (1) இ.பா.சிந்தன் (22) இட ஓதுக்கீடு (3) இடஒதுக்கீடு (1) இடதுசாரிகள் (4) இணையம் (2) இதழ்கள் (6) இந்தியா (69) இந்துத்துவா (8) இந்துஜா (1) இமு (2) இமு டிச11 (5) இமு நவமபர் 2011 (6) இயக்கம் (7) இயக்குனர் ஷங்கர் (1) இரா.சிந்தன் (5) இரா.செழியன் (2) இரா.நடராஜன் (3) இராம.கோபாலன் (1) இல.சண்முகசுந்தரம் (2) இலக்கியம் (38) இலங்கை (6) இலங்கைத் தமிழர் (4) இலவசக் கல்வி (1) இலவசங்கள் (1) இளவரசன் கொலை (1) இளைஞர் முழக்கம் (11) இஷ்ரத் (2) இஸ்ரேல் ஆக்கிரமிப்பு (1) இஸ்லாம் (3) ஈராக் (1) ஈரான் (2) உ.வாசுகி (1) உச்ச நீதிமன்றம் (1) உணவு நெருக்கடி (2) உதயசங்கர் (1) உத்தப்புரம் (1) உயர்கல்வி (2) உரையாடல்கள் (2) உலக சினிமா (4) உலகமயம் (5) உலகம் (46) உளவியல் (1) உள்ளாட்சி (1) உள்ளாட்சித் தேர்தல் (1) ஊடகங்கள் (14) ஊடகம் (8) ஊழல் (30) எடியூரப்பா (1) எம்.எப்.ஹூசேன் (1) எம்.சிவக்குமார் (2) எரிசக்தி (1) எல்.கே.ஜி (1) என்.ஜி.ஓ (1) என்கவுண்டர் (1) எஸ். பாலா (1) எஸ்.கண்ணன் (1) எஸ்.கருணா (3) எஸ்.பி.ராஜேந்திரன் (3) எஸ்.வி.வேணுகோபாலன் (2) ஏகாதிபத்தியம் (13) ஏமன் (1) ஒபாமா (4) ஓம்பிரகாஷ் வால்மீகி (1) ஓளிப்பதிவு (1) ஃபாக்ஸ்கான் (1) கச்சத் தீவு (1) கட்டுரை (51) கட்டுரைகள் (2) கணிணி (2) கணினி தொழில் நுட்பம் (1) கமல்ஹாசன் (1) கம்யூனிசம் (12) கருணாநிதி (11) கருத்து சுதந்திரம் (1) கருத்துரிமை (3) கலைஞர் (6) கல்வி (14) கவிதை (21) கவிதைகள் (1) கறுப்புப்பணம் (3) கனிமொழி (2) காங்கிரஸ் (10) காதல் (2) கால்பந்து (1) காவல்துறை (4) காஷ்மீர் (1) கி.பார்த்திபராஜா (1) கிங்பிஷர் (1) கியூபா (4) கிரீஸ் (1) குடும்பம் (1) குட்டி ரேவதி (1) குப்பன் சுப்பன் (1) குலாத்தி (1) குழந்தைகள் (9) குழந்தைகள் கடத்தல் (1) குஜராத் கலவரம் (1) குஜராத் படுகொலைகள் (1) கூகிள் அந்தரங்கம் (1) கூடங்குளம் (2) கே.சாமுவேல்ராஜ் (1) கே.பாலமுருகன் (1) கேள்விகள் (1) கைப்பற்றுவோம் போராட்டம் (1) கோவில் (1) ச.தமிழ்ச்செல்வன் (1) ச.மாடசாமி (1) சக்திஜோதி (1) சங்கமம் (1) சசிகலா (1) சச்சின் (1) சட்டசபை (2) சட்டம் (4) சத்யஜித் ரே (1) சந்திரகாந்தன் (1) சமச்சீர் கல்வி (4) சமவூதியம் (1) சமூக நீதி (2) சமூக வலைத்தளம் (1) சமூகப் பாதுகாப்பு (2) சமூகம் (177) சம்பு (1) சரத் பவார் (1) சர்வதேச பெண்கள் தினம் (1) சல்மான் ருஷ்டி (1) சா.கந்தசாமி (2) சா.செயக்குமார் (1) சாகித்திய அகாதமி விருது (1) சாக்லேட் (1) சாதீயம் (4) சாரா விஜி (2) சாலிம் அலி (1) சி.பி.எம் (9) சிக்கிம் (1) சிந்தனை (5) சிபி (1) சிராஜுதீன் (1) சில்லரை வர்த்தகம் (4) சிறப்பு பொருளாதார மண்டலங்கள் (1) சிறுகதை (12) சினிமா (52) சினிமா செய்திகள் (4) சினிமாச் செய்திகள் (4) சீத்தாராம் யெச்சூரி (2) சு.பொ.அகத்தியலிங்கம் (2) சு.வெங்கடேசன் (1) சுகாதாரம் (1) சுதிர் ரா (1) சுயமரியாதைத் திருமணம் (1) சுவாரசியம் (1) சுற்றுப்புறச் சூழல் (3) சூர்யா (1) செம்மலர் (4) செம்மலர் அக் 2011 (4) செய்திகள் (112) சென்னை (1) சோவியத் (1) சோஷலிசம் (1) டெல்லி (2) டேம் 999 (1) த.தமிழரசி (1) தகவல் உரிமை (1) தகவல் திருட்டு (2) தண்ணீர் (3) தமிழக மீனவர்கள் (1) தமிழகம் (66) தமிழர் (1) தமிழ்ச் சினிமா (1) தமிழ்நதி (1) தமுஎகச (4) தலித் (21) தற்கொலை (1) தனியார்மயம் (4) தனுஷ் (1) தி.க (2) திமுக (1) திரிணாமுல் (1) திருப்பூர் (2) திருமணம் (2) திரைக்குப் பின்னால் (2) திரைத்துறை (1) திரைப்பட விழா (1) திரைப்படம் (4) தினகரன் (1) தினமணி (3) தீக்கதிர் (9) தீண்டாமை (22) தீண்டாமையின் அடையாளங்கள் (1) தீபாவளி (1) தேசியச் செய்திகள் (4) தேர்தல் (4) தொண்டு நிறுவனங்கள் (1) தொலைக்காட்சி (2) தொழிலாளர் (6) ந.பெரியசாமி (1) நகர்ப்புற விவசாயம் (1) நகைச்சுவை (1) நக்கீரன் (1) நதிம் சயித் (1) நந்தலாலா (1) நந்தன் (1) நரேந்திர மோடி (6) நலத்திட்டங்கள் (2) நவம்பர் புரட்சி (1) நாடகம் (1) நாடாளுமன்றத் தேர்தல் 2014 (2) நாணய மதிப்பு (1) நாறும்பூநாதன் (1) நிகழ்வுகள் (154) நிலப்பிரபுத்துவம் (1) நிலமோசடி (1) நீதித்துறை (2) நீலவேந்தன் (2) நுகர்வுக் கலாச்சாரம் (2) நூல் அறிமுகம் (12) நூல் வெளியீடுகள் (1) நெல்சன் மண்டேலா (1) நேட்டோ (2) நையாண்டி (26) நையாண்டி் (14) ப.சிதம்பரம் (3) பசுபதி (1) படுகொலை (3) படைப்புகள் (2) பட்ஜெட் (1) பணவீக்கம் (2) பதிவர் வட்டம் (3) பதிவர்வட்டம் (1) பதிவுலகம் (1) பரிந்துரைகள் (5) பழங்குடி (1) பள்ளிக்கூடம் (1) பறவைகள் (1) பன்னாட்டுக் கம்பெனிகள் (3) பா.ஜ.க (3) பாகிஸ்தான் (2) பாடல் (5) பாதல் சர்க்கார் (1) பாதுகாப்பு (1) பாரதி (2) பாலபாரதி (1) பாலஸ்தீனம் (1) பாலியல் வன்முறை (6) பாலு மகேந்திரா (1) பால் சமத்துவம் (1) பாஜக (1) பி.சுகந்தி (1) பி.ராமமூர்த்தி (1) பிடல் காஸ்ட்ரோ (3) பிரணாப் முகர்ஜி (1) பிரபாத் பட்நாயக் (3) பிரளயன் (2) பிரிட்டன் (1) பிர்தவ்ஸ் ராஜகுமாரன் (1) பிளின் (1) பு.பெ.நவமபர் 2011 (1) புகைப்படங்கள் (1) புதிய பரிதி (2) புது விசை (12) புதுமை (1) புத்தக அறிமுகம் (2) புத்தகக் கண்காட்சிகள் (2) புத்தகம் (18) புத்தகம் பேசுது (17) புத்தகம் பேசுது நவம்பர் 2011 (8) புத்தகாலயம் (2) புத்தாண்டு (1) புபே (2) புபே டிச11 (8) புரட்சி (2) புவி (1) புவி டிச11 (5) புவி நவ 2011 (7) புனைவு (1) புஷ் (1) பெட்ரோல் (7) பெண் (11) பெண் விடுதலை (1) பெண்குழந்தை (1) பெண்ணியம் (9) பெண்ணெழுத்து (1) பெரியார் (2) பெருமுதலாளிகள் (7) பேட்டி (2) பேரா.சிவசுப்பிரமணியன் (2) பேஸ்புக் (1) பொருளாதார நெருக்கடி (2) பொருளாதாரம் (24) போக்குவரத்து (1) போராட்டம் (15) போலீஸ் தாக்குதல் (3) ப்ரிசம் (4) ப்ரிசம் - தகவல் திருட்டு (7) ப்ரியா தம்பி (1) மக்களுக்கான மருத்துவம் (1) மக்கள் நலப்பணியாளர்கள் (2) மக்கானா (1) மத அடிப்படை வாதம் (1) மதவெறி (3) மதுசூதனன் (1) மம்தா (3) மம்முட்டி (1) மரபணு (1) மலாலாய் சோயா (1) மவோயிஸ்டுகள் (1) மன்மதன் அம்பு (1) மன்மோகன்சிங் (10) மா ற்று (1) மாட்டுக்கறி (1) மாதர் சங்கம் (1) மாதவராஜ் (2) மாவோ (1) மாற்ற (1) மாற்று (223) மின்கட்டணம் (1) மின்சாரம் (1) மீள்பார்வை (2) முதலாளி (1) முதலாளித்துவம் (11) முத்தமாக மாறேன் (1) முத்துக்கண்ணன் (1) முல்லைப் பெரியாறு (7) முறைகேடுகள் (5) மெகாசீரியல் (1) மே.வங்க அரசு (1) மே.வங்கம் (1) மேதினம் (1) மேற்கு வங்கம் (1) மொக்கை (1) மொழி (2) மொழிபெயர்ப்பு (1) மோசடி (1) மோடி (3) மோனிகா (1) யுத்தம் (2) ரத யாத்திரை (1) ரமேஷ் பாபு (2) ராகுல் காந்தி (2) ராடியா (2) ராஜ பக்‌ஷே (1) ரிலையன்ஸ் (1) ருமேனியா (1) லட்சுமணப்பெருமாள் (2) லெனின் (2) லோக்பால் (5) வசந்த பாலன் (1) வண்ணக்கதிர் (1) வரலாறு (19) வலைப்பூக்கள் (1) வழக்கு விசாரணை (1) வாசிப்பு (5) வாச்சாத்தி (1) வால் ஸ்டிரிட் (3) வால்மார்ட் (1) வால்ஸ்டிரிட் போராட்டம் (2) வாழ்க்கை (4) வானியல் (2) விக்கிபீடியா (1) விக்கிலீகஸ் (1) விக்கிலீக்ஸ் (7) விஞ்ஞானம் (2) விமர்சனம் (10) விலையேற்றம் (2) விலைவாசி (11) விலைவாசி உயர்வு (2) விவாதங்கள் (1) விவாதம் (9) விளம்பரம் (1) விளையாட்டு (4) வினவு (1) விஜய் (2) விஜய் மல்லையா (1) வீட்டுவசதி வாரியம் (1) வீரமணி (2) வெண்மணி (2) வெள்ளம் (2) வெனிசுவெல்லா (1) வேலையின்மை (2) வோடாபோன் (1) ஜப்பான் நெருக்கடி (2) ஜாக்கிசான் (1) ஜாதி (1) ஜாபர் பனாகி (1) ஜூலியன் அசாங்க (1) ஜெயலலிதா (9) ஜோதிடம் (1) ஸ்டீவ் ஜாப்ஸ் (1) ஸ்பீல்பர்க் (2) ஸ்பெக்ட்ரம் (6)