Monday, February 21, 2011

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்: ஒரு விமர்சனம் !


ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கரின் அதிகாரப்பூர்வ இணைய தளத்திற்குள் போனால் “வன்முறை இல்லாத, மனஇறுக்கம் இல்லாத உலகே எனது லட்சியம்” எனும் வார்த்தைகள் பளிச்சிடுகின்றன. மகாத்மா காந்தி ஆசிரமத்திற்குப் போய் ரவிசங்கர் ராட்டை நூற்கிற படம் இருக்கிறது.

பெங்களூரிலிருந்து 36 கி.மீ தூரத்தில் இவரது ஆசிரமம் இருக்கிறது. தமிழகத்தின் பாபநாசத்தில் பிறந்தவராம். அங்கு போய் செட்டில் ஆகியிருக் கிறார். அப்பா பெயர் வெங்கட்ரத்தினம், அம்மா பெயர் விசாலாட்சி. தனது பெயரான ரவிசங்க ரோடு ஸ்ரீஸ்ரீயைச் சேர்த்திருக்கிறார். அந்தப் பெயரைக் கொண்ட பிரபல சிதார் கலைஞர் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தார். ஆனாலும் என்ன அதைத் தக்க வைத்துக் கொண்டார்.

“வாழுங்கலை சர்வதேச மையம்” என்பது நடக்கிறது. “வேதவிஞ்ஞான மகாவித்யா பீடம்” இருக்கிறது. வேதப் பாடல்கள் எல்லாம் இவருக்கு விஞ்ஞானம்தான்! இந்த அமைப்புகளின் செயல் பாடுகள் இந்தியாவில் மட்டுமல்லாது, பல நாடுகளிலும் விரவிக் கிடப்பதை இணையதளம் விவரித்துக் கொண்டே போகிறது.

ஈராக்கிற்குக்கூடப் போய் “ஆன்மிகச் சேவை” செய்திருக்கிறார் ரவிசங்கர். அந்த நாட்டின் மீதான அமெரிக்கத் தாக்குதல் பற்றி, சதாம் உசேன் படு கொலை செய்யப்பட்டது பற்றி இந்த “ஆன்மிக குரு”வின் கருத்து என்னவென்று அறிய முடிய வில்லை.

இணையதளத்தைப் பார்க்க பார்க்க, படிக்க படிக்க பிரமிப்பாக இருக்கிறது. தென்னிந்தியா விலிருந்து ஒரு “ மகாகுரு” கிளம்பி சர்வதேசப் புகழ் பெற்றிருக்கிறார். இது அதிகாரப்பூர்வ பிம்பம். நெருங்கிப் பார்த்தால் தெரியும் உண்மை முகம் என்ன?

“ஃபைனான்சியல் டைம்ஸ்” எனும் உலக அளவில் பிரபலமான பத்திரிகையின் தெற்காசியப் பிரிவின் தலைவராக 2001-2005 ல் தில்லியிலிருந்து பணியாற்றியவர் எட்வர்ட் லூசே. இந்தியாவில் தனக்கேற்பட்ட அனுபவத்தை “கடவுளர்கள் இருந் தாலும்” என்று ஒரு நூலாக எழுதியிருக்கிறார். இது 2006 ல் லண்டனில் வெளியானது. இதன் மலிவுப் பதிப்பு 2007ல் வெளியானது. இதில், தான் ரவிசங் கரை சந்தித்தது பற்றியும், அதன் பிறகு நடந்த சில விஷயங்கள் பற்றியும் சொல்லியிருக்கிறார் லூசே. அவை சுவாரசியமானவை மட்டுமல்ல, இந்த நாட்டின் முற்போக்காளர்களால் கவலையோடு கவனத்தில் கொள்ளத் தக்கவை.

ரவிசங்கரின் ஆசிரமம் எப்படி இருக்கிறது தெரியுமா? ஆசிரமம் என்றால் நம் மனதில் ராமாயண காலத்து குடில், அல்லது காந்தி காலத்து எளிய ஓட்டு வீடு எழும். இது அப்படி அல்ல. லூசே கூறுகிறார்- “இந்த ஐந்து மாடிக் கட்டடம் முழுக்க முழுக்க மார்பிள் கல்லால் கட்டப்பட்டது, ஒரு தாமரை வடிவில் உள்ளது.” பி.ஜே.பி.யின் தேர்தல் சின்னத்தை இவர் எடுத்துக் கொண்டது யதேச்சையானதாக இருக்க முடியாது என்பதைப் பிந்தைய நிகழ்வுகள் நிரூபிக்கின்றன.

இப்போது நம்மை ஈர்க்கும் செய்தி இது - “இந்த ஆடம்பரமான கட்டடம் கட்டுவதற்கான பணம் பெரும் கம்பெனிகளால் தரப்பட்டது. அதிலும் பெரும்பாலான பணம் பக்கத்தில் உள்ள பெங்களூரு மென் பொருள் கம்பெனிகளால் தரப்பட்டது.” மதத்திற்கும் ஆளும்வர்க்கத்திற்கும் இடையிலான உறவு ஆதிகாலந்தொட்டு மிக வலுவானது. மதத்தின் கிளைப் பிரிவுகளாக அவ்வப்போது எழும் மடாதிபதிகள் அல்லது ஆன்மிகக் குருக்களுக்கும் இந்த ஆளும் வர்க்கத்திற்கும் இடையிலான உறவும் பாரம்பரியமானதே.

தகவல் தொடர்புத்துறைக் கம்பெனிகள் எனப் பட்டவை படு நவீனமானவை. ஆனால்அவற்றின் சமூகச் சிந்தனைகள் பத்தாம் பசலித்தனமாக இருக்க முடியும் என்பதற்கு இதுவோர் உதாரணம். ஆர்.எஸ்.எஸ் பற்றிய ஒரு வலைத்தளச் செய்தியில் பெங்களூரு ஐ.டி. கம்பெனியில் வேலை பார்க்கும் அதிகாரிகள் மத்தியில் இது தீவிரமாக இயங்குவதாகவும், வாரம் ஒரு முறை கூடி இந்த அமைப் பின் சிந்தனைகள் மற்றும் செயல்பாடுகள் பற்றி உற்சாகமாக விவாதித்துக் கொள்கிறார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது. அத்தகையவர்களின் நிதி உதவி ரவிசங்கருக்கு கிடைத்துள்ளது. அந்த நவீன கம்பெனிகளின் சுவைக்கு ஏற்ப நவீன கட்டடத்தையும் எழுப்பியிருக்கிறார்.

பக்தர்களை ரவிசங்கர் சந்திக்கும் மண்டபத்தை நூலசிரியர் சித்தரித்திருக்கிறார். அங்கே இஸ்லா மியப் பிறை, டேவிட்டின் நட்சத்திரம், இயேசுவின் சிலுவை இருந்தன. ஆனால் செல்வத்துக்கு அதிபதி யான லட்சுமி தேவியின் உருவம் பெரிதாக இருந்தது. இந்து மதமே பெரியது, அதிலும் பணத் துக்கான கடவுளே முக்கியம் என்பதாக இருந்தது. தொழில் நிறுவனங்களுக்கு ஏற்ற ஆன்மிகக் கூடமே!

வந்தவர்கள் கேட்ட கேள்விகளும், அவற்றுக்கு ரவிசங்கர் அளித்த பதில்களும் இன்னும் வினோத மானவை. லூசே ஆச்சரியத்தோடு எழுதுகிறார்- “உயர் ஞானம் பற்றிய, புறவுலகு கடந்த விஷயம் பற்றிய கேள்விகளைக் கேட்பார்கள் என்று நான் எதிர் பார்த்தேன். ஆனால் அவையோ சண்டித்தனம் செய்யும் இளவயசுப் பிள்ளைகளை எப்படிச் சமாளிப்பது, அலுவலகத்திலேயே வெகுநேரம் தங்கலாமா, திருமணத்திற்கு ஜோடியை எப்படித் தேர்ந்தெடுப்பது எனும் இகவுலகு சார்ந்தவை யாகவே இருந்தன.

நான் நல்ல பெண்தானா என்று எப்படி மெய் யாலும் அறிவது என்று ஒரு பெண்மணி கேட்டார். “எப்போதுமே நீங்கள் இனிமையானவராக, நல்லவராக இருக்க வேண்டியதில்லை” என்று பதில் சொன்னார் குருஜி. பக்தர்கள் உற்சாகமாகச் சிரித்தார்கள். திகைத்துப் போனவனாக சுற்று முற்றும் பார்த்தேன். நூற்றுக்கணக்கான ஒளிரும் கண்களும் பரபரப்பான முகங்களும் தெரிந்தன. மின்னஞ்சலில் வந்த ஒரு கேள்வியை சீடர் ஒருவர் வாசித்தார். அது இப்படி முடிந்தது- ‘நான் உங்களைப் பெரிதும் நேசிக்கிறேன்.’லஞ்சம் கொடுப்பது எப்போதுமே தவறுதானா? என்று கேட்டிருந்தார். ‘எப்போதுமே நீங்கள் பெரிய லட்சியவாதியாக இருக்கக் கூடாது. சின்னச் சின்ன சமரசங்களை அவ்வப்போது செய்து கொள்ள வேண்டும்’ என்றார் குருஜி. கூட்டத்தினர் மீண்டும் சிரித்தார்கள். வாழுங்கலையின் மூச்சுப் பயிற்சி உத்திகள் பற்றி நான் யோசிக்க ஆரம்பித்தேன்”.

நவீன உயர் மத்தியதர வர்க்கத்திற்கு நீக்குப் போக்காக வாழ்ந்து உலகை அனுபவிப்பது பற்றிய ஆன்மிக போதனையாக அது இருந்தது. உலக மேன்மைக்கான, சக உயிர்களின் நிம்மதிக்கான ஆன்மிக விசாரணை அல்ல அது. குறுக்கு வழியில் போவதுகூடச் சரிதான் என்று உயர் அதிகாரிகளை மனத்தளவில் தட்டிக் கொடுக்கிற காரியம் அது.

இப்படிப்பட்ட கேள்வி-பதில் அமர்வு முடிந்ததும் இந்த நூலாசிரியர் லூசேவுடனான பேட்டி துவங்கியது. அப்போது காஞ்சி சங்கரராமன் கொலை வழக்கில் சங்கராச்சாரியார் கைதாகியிருந் தார். இது பற்றிய ரவிசங்கரின் கருத்தைக் கேட்டார். அதற்கு அவரின் பதில் - “ எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. அதுபோல மடத்தின் நிதி ஒழுங்கின்மை பற்றிக் கேள்விப்பட்டபோதும் அப்படியாகவே இருந்தது. ஆனால் வெகுமக்களி டமிருந்து எதிர்வினை இல்லாதது எனக்கு ஆச்சரியத்தைத் தரவில்லை. இந்துக்கள் பெரிதும் அசமந்தமானவர்கள். நாங்கள் அஹிம்சாவாதிகள். ஆனால் அந்த நிறுவனம் மக்களைச் சென்றடைந் ததில்லை என்பதும் இதற்குக் காரணமாக இருக்கலாம். சமுதாயத்தின் இதர பகுதியினருக்கு அந்த மடத்தின் மீது ஈடுபாடு இல்லை.”

ஓர் இந்து மடாதிபதி கைதானால் இந்து வெகுமக்கள் பொங்கி எழ வேண்டும், கலவரத்தில் ஈடுபட வேண்டும் எனும் உள்ளார்ந்த எதிர்பார்ப்பு இந்த “ஆன்மிகக்” குருவுக்கு இருப்பதைத் தெளி வாக உணரலாம். இந்துக்கள் அஹிம்சாவாதிகளாக இருக்கிறார்களே என்று ஏகமாயக் கவலை!

ஆனாலும் இங்குள்ள சாதிப்பிரச்சனையும் இதற்குக் காரணமோ என்று இவர்களுக்குள் குடைகிறது. காஞ்சி மடம் நடைமுறையில் ஓர் உயர்சாதியினரின் மடமாக இருக்க, பிற பகுதி மக்கள் அதன்பால் அக்கறை காட்டாததில் ஆச்சரியம் இல்லை என்றும் படுகிறது. இதை மனதில் கொண்டுதான் ரவிசங்கர் போன்றவர்கள் தியானம், யோகா என்று பல தரப்பாரையும் ஈர்க்கிற புதுவித மடத்தை உருவாக்குகிறார்கள் என்பதும் இதில் நிச்சயமாகிறது. உத்தியை மாற்றிப் பார்க்கிறார்கள்.

இதெல்லாம்கூட பிரச்சனை இல்லை. இந்த நவீன சாமியாரின் சமூக-அரசியல் சிந்தனை மற்றும் புறவுலகத் தொடர்புதான் சிக்கலானது. பாபர் மசூதி-ராமர்கோவில் பற்றி இவர் கேள்வி கேட்க ரவிசங்கர் சொன்ன பதிலை நோக்குங்கள்- “இயேசு அல்லது முகம்மது பிறந்த இடம் என்று வைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் என்ன செய்திருப்பீர்கள்? அந்த இடத்தின் மீது இன்னொரு கட்டுமானம் இருப்பதை நீங்கள் பொறுத்துக் கொள்வீர்களா? ராமருக்கு ஒரு கோவில் கட்டுவோம். ஒரு நல்லெண்ணச் செய்கையாக முஸ்லிம்கள் விட்டுக் கொடுக்கட்டும். அப்போது அந்தக் கோவில் அல்லாவுக்கும், அனைத்து முஸ்லிம்களுக்கும்கூடச் சொந்தமாக இருக்கும்.”

இந்தப் பதிலைக் கேட்டு அசந்து போனார் லூசே. அவர் மட்டுமா நாமும்தான். விஷயத்தையே தலைகீழாக்கி விட்டார். ஆன்மிகக் குரு அல்லவா சித்துவேலை காட்டிவிட்டார். அயோத்தியில் கோவிலை இடித்துவிட்டு மசூதி கட்டப்பட்டதற்கு ஆதாரம் இல்லை என்கிறார்கள் சரித்திரஞானிகள். 450 ஆண்டுகளாக இருந்த மசூதிக்குள் 1949 ல் கள்ளத்தனமாக ராமர் சிலையை வைத்துவிட்டு, அது ராமருக்கே சொந்தம் எனச் சொன்னார்கள் இந்துத்துவாவாதிகள். இந்த அடாவடித்தனத்தைக் கண்டிக்காமல் முஸ்லிம்களை விட்டுத்தரச் சொல் கிறார். விட்டுத் தந்தால் ராமர் கோவில் முஸ்லிம் களுக்கும் சொந்தமாக இருக்குமாம்! விக்கிரக ஆராதனை செய்யாத முஸ்லிம்களை இது கேலி செய்கிற வேலை.

லூசே கேட்டார் - “அல்லாவுக்கும் சொந்தமாக இருக்குமா?” ரவிசங்கர் பதில் சொன்னார்- “ஆமாம், நீங்கள் பார்த்தீர்கள். நாங்கள் கடவுளின் அனைத்து மார்க்கங்களையும் ஒப்புக் கொண்டுள்ளோம். மற்றவர்களும் இப்படிச் செய்ய வேண்டும் என்று சில சமயம் நாங்கள் விரும்புகிறோம்” இவர்களது “சர்வசமய சமரசம்” என்பது கூட சின்ன மீனைப் போட்டுப் பெரிய மீனைப் பிடிக்கிற கதையாக உள்ளது!

இதனால் இந்த நூலாசிரியர் எழுதுகிறார்- “இது நிறைய ‘இந்து முஸ்லிம்களும் இந்து கிறிஸ்தவர்களும்’ உருவாக வேண்டும் என்கிற அத்வானியின் ஆசையை குருஜியின் வார்த்தைகள் நினைவு படுத்தின. குஜராத்தின் நரேந்திர மோடியோடு நான்கண்ட பேட்டியையும் அவை நினைவுபடுத்தின.” அஹா! ஆன்மிகக் குருவின் வார்த்தைகள் இந்துத்துவா அரசியல் தலைவர்களை நினைவு படுத்தின என்றால் என்ன பொருத்தம் இப் பொருத்தம்!.

எனினும் இது உச்சம் அல்ல. அது அடுத்து வருகிறது. நூலாசிரியர் லூசே முத்தாய்ப்பாக நடந்த அந்த நிகழ்வைக் கூறுகிறார். அது- “சில வாரங்களுக்குப் பிறகு எனக்கொரு தொலைபேசி அழைப்பு வந்தது. அது ஆர்.எஸ்.எஸ் சின்தேசியச் செய்தித் தொடர்பாளர் ராம்மாதவிடமிருந்து வந்தது. மாதவ் கூறினார் - ‘ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் பற்றிப் பேசவே கூப்பிட்டேன். அவரோடு பேசிக் கொண்டிருந்தபோது ஃபைனான்சியல் டைம்சில் நீங்கள் எழுதியிருந்த கட்டுரை திருப்தியாக இல்லை என்று அவர் என்னிடம் கூறினார். அரசியல் மற்றும் சங்கராச்சாரியார் பற்றி அவர் கூறிய கருத்துக்களை மட்டுமே நீங்கள் குறிப்பிட்டிருந்தீர்கள். சகிப்புத் தன்மை மற்றும் ஆன்மிகம் பற்றிய அவரது கருத்துக்களை நீங்கள் குறிப்பிடு வீர்கள் என்று அவர் நம்பியிருந்ததாக அவர் கூறினார்’. உண்மைதான், இந்த விஷயங்கள் பற்றிய குருஜியின் கருத்துக்களைக் குறிப்பிட எனது கட்டுரையில் இடம் இல்லாமல் போயிருந்தது. ஆனால் என்னை ஆச்சரியப்படுத்திய விஷயம், இந்தப் புகாரைச் சொல்ல அவர் இதர அமைப்புகளை விட்டுவிட்டு ஆர்.எஸ்.எஸ்.சைத் தேர்ந்தெடுத்தது!”

தியானம், யோகா, மூச்சுப்பயிற்சி, உடற்பயிற்சி சொல்லித் தருகிற ஓர் ஆன்மிகக் குரு என்று ரவி சங்கரை நம்பிக் கொண்டிருக்கிறோம். அவரோ ஆர்.எஸ்.எஸ்.சின் கோட்பாடுகளை எதிரொலிக்கிறார். அயோத்தி விவகாரத்தில் என்பது மட்டு மல்லாது, அந்த அமைப்பின் தலைவர்களோடு நெருங்கிய உறவு கொண்டிருக்கிறார். எந்த அளவுக்கு என்றால் இவருக்காக அவர்கள் பத்திரிகையாளர்களோடு பேசுகிற அளவுக்கு அல்லது மறைமுகமாக மிரட்டுகிற அளவுக்கு!

எந்தப் புற்றில் எந்தப் பாம்பு இருக்குமோ என்பார்கள். புற்று என்றால் பாம்பு இருக்கும் என்று சந்தேகிக்கலாம். ஐந்து நட்சத்திர ஹோட்டலில் இருக்குமா? இருக்கலாம். தோற்றத்திற்கும் உள்ளுறைக்கும் இடையே சம்பந்தம் இல்லாமல் இருக்கலாம். லூசே எழுதுகிறார்- “ஸ்ரீஸ்ரீரவிசங்கருக்கு யோகி-தாராள சித்தம் கொண்டவர் எனும் பிம்பம் இருக்கிறது. ஆனால் அதிகம் அறியப்படாத விஷயம் என்னவென்றால் ஆர்.எஸ்.எஸ்.சோடு குருஜிக்கு உள்ள நெருங்கிய தொடர்பு மற்றும் பொது மேடைகளில் வி.எச்.பி தலைவர்களோடு அவர் இடம் பெறுவது.”

ஸ்ரீஸ்ரீ ரவிசங்கரா? ஆர்.எஸ்.எஸ் ரவிசங்கரா?- என்பதுதான் இவற்றிலிருந்து எழுப்பப்பட வேண்டிய கேள்வி. யோகா-மூச்சுப் பயிற்சி என்பது இந்தியர்கள் வளர்த்த ஒரு நல்ல உடல்கலை. ஆனால், அதைச் சொல்லிக் கொண்டு சில குருமார் களை ஆர்.எஸ்..எஸ் உருவாக்கி உலாவவிடக் கூடும். அவர்களை அடையாளங்கண்டு மக்களுக்குச் சொல்லுகிற வேலையும் முற்போக்காளர்களுக்கு உண்டு.

5 comments:

  1. பலமுறை யோசித்துக் கொள்வதுண்டு. ஆனால் இதுவரையிலும் அறியாத தகவல்கள் என்றாலும் இப்படித்தான் இருக்கும் என்று என் அனுமானத்தில் உள்ள விசயங்கள் உங்கள் வார்த்தைகளில் கண்டேன்.

    ReplyDelete
  2. இந்த கார்ப்பரேட் சாமியார் பற்றி இததகைய பதிவு வெளியாக வேண்டும் என்பது என் நீண்ட நாள் அவா. நன்றி.
    இந்த உண்மைகள் இன்னும் பரவலாக வெளியுலகில் கொண்டுசெல்லப்பட்டாக வேண்டும்.
    முதலாளித்துவத்தின் தேவையாகிய, உழைக்கும் மக்களை போராட்டக் கூர் மழுங்கியவர்களாக வைத்திருப்பது என்ற இன்றைய உலகமய முலாளித்துவத் தேவையை நிறைவேற்றுகிற ஹைடெக் ஆன்மீக கார்ப்பரேட்தான் இவர்.

    ReplyDelete
  3. ஜோதிஜி
    தங்கள் கருத்துக்கும் வருகைக்கும் நன்றி
    விடுதலை

    ReplyDelete
  4. நல்ல பதிவு.
    கார்ப்பரேட் சாமியார்கள் மடங்கள் நடத்துவதில்லை; மாளிகைகளில் வசிக்கிறார்கள். நல்ல சொகுசு வாழ்க்கை வாழ்கிறார்கள். நமது மக்கள் தெரியாமல் போய் காலில் விழுகிறார்கள்.

    ReplyDelete
  5. அவர் என்ன சொல்லி தருகிறார் என்று தெரியாமல்/உணராமல் அவரை விமர்சிப்பது வருத்தம் அளிக்கிறது!
    ஈராக் சென்று வாழும் கலை பயிற்சி பாடம் எடுத்தவர் ஒரு இஸ்லாமியர். அவர் தான் எனக்கு
    ஆசிரியராக 3 நாட்களுக்கு இருந்தார். நீங்கள் தான் மதம் மதம் என்று சொல்லுகின்றீர்கள்.
    கடவுள் ஒருவரே! இதை தான் இஸ்லாமும் சொல்லுகிறது.

    அவர் ஒருநாளும் தன்னை ஹிந்து என்று சொல்லிகொள்ளவில்லை.
    அவர் அரசியல் காரணத்துக்க வரவில்லை. அவர் மக்கள் நலனுக்காக வந்தார்.

    >>சதாம் உசேன் படு கொலை செய்யப்பட்டது பற்றி இந்த “ஆன்மிக குரு”வின் கருத்து என்னவென்று அறிய முடிய வில்லை.
    சதாம் உசேன் என்ன மகாத்மா காந்தி மாதிரி "NON violence" பின் பற்றினரா?

    ReplyDelete

Labels

Coca Cola (1) Peak Oil (1) Permaculture (1) Power of Community (1) Renewable energy (1) Solar energy (1) SOPA (1) sustainable agriculture (1) அ.குமரேசன் (6) அங்காடிதெரு (1) அணு ஆற்றல் (2) அணுமின் (1) அண்ணா (4) அண்ணா நூலகம் (1) அதிர்ச்சி (1) அத்வானி (2) அந்நிய முதலீடு (2) அபிநயா (1) அப்துல் கலாம் (1) அப்பணசாமி (2) அமெரிக்கா (20) அம்பானி (1) அம்பேத்கர் (9) அரசியல் (177) அரசியல்.நிகழ்வுகள் (6) அரசு (14) அரசு மருத்துவமனை (1) அரசு விடுதி மாணவர்கள் (1) அரவான் (1) அருந்ததியர் (1) அர்ஜெண்டினா (1) அலசல் (1) அவலம் (19) அழகு (1) அறிமுகம் (1) அனுபவம் (28) அன்னா ஹசாரே (1) அஜயன் பாலா (1) ஆ.ராசா (1) ஆணையம் (2) ஆதவன் தீட்சண்யா (3) ஆப்கானிஸ்தான் (1) ஆப்பிரிக்கா (2) ஆர்.மீனா (1) ஆர்எஸ்எஸ் (2) ஆவணப்படம் (3) ஆனந்தன் (2) இ.எம்.ஜோசப் (1) இ.பா.சிந்தன் (22) இட ஓதுக்கீடு (3) இடஒதுக்கீடு (1) இடதுசாரிகள் (4) இணையம் (2) இதழ்கள் (6) இந்தியா (69) இந்துத்துவா (8) இந்துஜா (1) இமு (2) இமு டிச11 (5) இமு நவமபர் 2011 (6) இயக்கம் (7) இயக்குனர் ஷங்கர் (1) இரா.சிந்தன் (5) இரா.செழியன் (2) இரா.நடராஜன் (3) இராம.கோபாலன் (1) இல.சண்முகசுந்தரம் (2) இலக்கியம் (38) இலங்கை (6) இலங்கைத் தமிழர் (4) இலவசக் கல்வி (1) இலவசங்கள் (1) இளவரசன் கொலை (1) இளைஞர் முழக்கம் (11) இஷ்ரத் (2) இஸ்ரேல் ஆக்கிரமிப்பு (1) இஸ்லாம் (3) ஈராக் (1) ஈரான் (2) உ.வாசுகி (1) உச்ச நீதிமன்றம் (1) உணவு நெருக்கடி (2) உதயசங்கர் (1) உத்தப்புரம் (1) உயர்கல்வி (2) உரையாடல்கள் (2) உலக சினிமா (4) உலகமயம் (5) உலகம் (46) உளவியல் (1) உள்ளாட்சி (1) உள்ளாட்சித் தேர்தல் (1) ஊடகங்கள் (14) ஊடகம் (8) ஊழல் (30) எடியூரப்பா (1) எம்.எப்.ஹூசேன் (1) எம்.சிவக்குமார் (2) எரிசக்தி (1) எல்.கே.ஜி (1) என்.ஜி.ஓ (1) என்கவுண்டர் (1) எஸ். பாலா (1) எஸ்.கண்ணன் (1) எஸ்.கருணா (3) எஸ்.பி.ராஜேந்திரன் (3) எஸ்.வி.வேணுகோபாலன் (2) ஏகாதிபத்தியம் (13) ஏமன் (1) ஒபாமா (4) ஓம்பிரகாஷ் வால்மீகி (1) ஓளிப்பதிவு (1) ஃபாக்ஸ்கான் (1) கச்சத் தீவு (1) கட்டுரை (51) கட்டுரைகள் (2) கணிணி (2) கணினி தொழில் நுட்பம் (1) கமல்ஹாசன் (1) கம்யூனிசம் (12) கருணாநிதி (11) கருத்து சுதந்திரம் (1) கருத்துரிமை (3) கலைஞர் (6) கல்வி (14) கவிதை (21) கவிதைகள் (1) கறுப்புப்பணம் (3) கனிமொழி (2) காங்கிரஸ் (10) காதல் (2) கால்பந்து (1) காவல்துறை (4) காஷ்மீர் (1) கி.பார்த்திபராஜா (1) கிங்பிஷர் (1) கியூபா (4) கிரீஸ் (1) குடும்பம் (1) குட்டி ரேவதி (1) குப்பன் சுப்பன் (1) குலாத்தி (1) குழந்தைகள் (9) குழந்தைகள் கடத்தல் (1) குஜராத் கலவரம் (1) குஜராத் படுகொலைகள் (1) கூகிள் அந்தரங்கம் (1) கூடங்குளம் (2) கே.சாமுவேல்ராஜ் (1) கே.பாலமுருகன் (1) கேள்விகள் (1) கைப்பற்றுவோம் போராட்டம் (1) கோவில் (1) ச.தமிழ்ச்செல்வன் (1) ச.மாடசாமி (1) சக்திஜோதி (1) சங்கமம் (1) சசிகலா (1) சச்சின் (1) சட்டசபை (2) சட்டம் (4) சத்யஜித் ரே (1) சந்திரகாந்தன் (1) சமச்சீர் கல்வி (4) சமவூதியம் (1) சமூக நீதி (2) சமூக வலைத்தளம் (1) சமூகப் பாதுகாப்பு (2) சமூகம் (177) சம்பு (1) சரத் பவார் (1) சர்வதேச பெண்கள் தினம் (1) சல்மான் ருஷ்டி (1) சா.கந்தசாமி (2) சா.செயக்குமார் (1) சாகித்திய அகாதமி விருது (1) சாக்லேட் (1) சாதீயம் (4) சாரா விஜி (2) சாலிம் அலி (1) சி.பி.எம் (9) சிக்கிம் (1) சிந்தனை (5) சிபி (1) சிராஜுதீன் (1) சில்லரை வர்த்தகம் (4) சிறப்பு பொருளாதார மண்டலங்கள் (1) சிறுகதை (12) சினிமா (52) சினிமா செய்திகள் (4) சினிமாச் செய்திகள் (4) சீத்தாராம் யெச்சூரி (2) சு.பொ.அகத்தியலிங்கம் (2) சு.வெங்கடேசன் (1) சுகாதாரம் (1) சுதிர் ரா (1) சுயமரியாதைத் திருமணம் (1) சுவாரசியம் (1) சுற்றுப்புறச் சூழல் (3) சூர்யா (1) செம்மலர் (4) செம்மலர் அக் 2011 (4) செய்திகள் (112) சென்னை (1) சோவியத் (1) சோஷலிசம் (1) டெல்லி (2) டேம் 999 (1) த.தமிழரசி (1) தகவல் உரிமை (1) தகவல் திருட்டு (2) தண்ணீர் (3) தமிழக மீனவர்கள் (1) தமிழகம் (66) தமிழர் (1) தமிழ்ச் சினிமா (1) தமிழ்நதி (1) தமுஎகச (4) தலித் (21) தற்கொலை (1) தனியார்மயம் (4) தனுஷ் (1) தி.க (2) திமுக (1) திரிணாமுல் (1) திருப்பூர் (2) திருமணம் (2) திரைக்குப் பின்னால் (2) திரைத்துறை (1) திரைப்பட விழா (1) திரைப்படம் (4) தினகரன் (1) தினமணி (3) தீக்கதிர் (9) தீண்டாமை (22) தீண்டாமையின் அடையாளங்கள் (1) தீபாவளி (1) தேசியச் செய்திகள் (4) தேர்தல் (4) தொண்டு நிறுவனங்கள் (1) தொலைக்காட்சி (2) தொழிலாளர் (6) ந.பெரியசாமி (1) நகர்ப்புற விவசாயம் (1) நகைச்சுவை (1) நக்கீரன் (1) நதிம் சயித் (1) நந்தலாலா (1) நந்தன் (1) நரேந்திர மோடி (6) நலத்திட்டங்கள் (2) நவம்பர் புரட்சி (1) நாடகம் (1) நாடாளுமன்றத் தேர்தல் 2014 (2) நாணய மதிப்பு (1) நாறும்பூநாதன் (1) நிகழ்வுகள் (154) நிலப்பிரபுத்துவம் (1) நிலமோசடி (1) நீதித்துறை (2) நீலவேந்தன் (2) நுகர்வுக் கலாச்சாரம் (2) நூல் அறிமுகம் (12) நூல் வெளியீடுகள் (1) நெல்சன் மண்டேலா (1) நேட்டோ (2) நையாண்டி (26) நையாண்டி் (14) ப.சிதம்பரம் (3) பசுபதி (1) படுகொலை (3) படைப்புகள் (2) பட்ஜெட் (1) பணவீக்கம் (2) பதிவர் வட்டம் (3) பதிவர்வட்டம் (1) பதிவுலகம் (1) பரிந்துரைகள் (5) பழங்குடி (1) பள்ளிக்கூடம் (1) பறவைகள் (1) பன்னாட்டுக் கம்பெனிகள் (3) பா.ஜ.க (3) பாகிஸ்தான் (2) பாடல் (5) பாதல் சர்க்கார் (1) பாதுகாப்பு (1) பாரதி (2) பாலபாரதி (1) பாலஸ்தீனம் (1) பாலியல் வன்முறை (6) பாலு மகேந்திரா (1) பால் சமத்துவம் (1) பாஜக (1) பி.சுகந்தி (1) பி.ராமமூர்த்தி (1) பிடல் காஸ்ட்ரோ (3) பிரணாப் முகர்ஜி (1) பிரபாத் பட்நாயக் (3) பிரளயன் (2) பிரிட்டன் (1) பிர்தவ்ஸ் ராஜகுமாரன் (1) பிளின் (1) பு.பெ.நவமபர் 2011 (1) புகைப்படங்கள் (1) புதிய பரிதி (2) புது விசை (12) புதுமை (1) புத்தக அறிமுகம் (2) புத்தகக் கண்காட்சிகள் (2) புத்தகம் (18) புத்தகம் பேசுது (17) புத்தகம் பேசுது நவம்பர் 2011 (8) புத்தகாலயம் (2) புத்தாண்டு (1) புபே (2) புபே டிச11 (8) புரட்சி (2) புவி (1) புவி டிச11 (5) புவி நவ 2011 (7) புனைவு (1) புஷ் (1) பெட்ரோல் (7) பெண் (11) பெண் விடுதலை (1) பெண்குழந்தை (1) பெண்ணியம் (9) பெண்ணெழுத்து (1) பெரியார் (2) பெருமுதலாளிகள் (7) பேட்டி (2) பேரா.சிவசுப்பிரமணியன் (2) பேஸ்புக் (1) பொருளாதார நெருக்கடி (2) பொருளாதாரம் (24) போக்குவரத்து (1) போராட்டம் (15) போலீஸ் தாக்குதல் (3) ப்ரிசம் (4) ப்ரிசம் - தகவல் திருட்டு (7) ப்ரியா தம்பி (1) மக்களுக்கான மருத்துவம் (1) மக்கள் நலப்பணியாளர்கள் (2) மக்கானா (1) மத அடிப்படை வாதம் (1) மதவெறி (3) மதுசூதனன் (1) மம்தா (3) மம்முட்டி (1) மரபணு (1) மலாலாய் சோயா (1) மவோயிஸ்டுகள் (1) மன்மதன் அம்பு (1) மன்மோகன்சிங் (10) மா ற்று (1) மாட்டுக்கறி (1) மாதர் சங்கம் (1) மாதவராஜ் (2) மாவோ (1) மாற்ற (1) மாற்று (223) மின்கட்டணம் (1) மின்சாரம் (1) மீள்பார்வை (2) முதலாளி (1) முதலாளித்துவம் (11) முத்தமாக மாறேன் (1) முத்துக்கண்ணன் (1) முல்லைப் பெரியாறு (7) முறைகேடுகள் (5) மெகாசீரியல் (1) மே.வங்க அரசு (1) மே.வங்கம் (1) மேதினம் (1) மேற்கு வங்கம் (1) மொக்கை (1) மொழி (2) மொழிபெயர்ப்பு (1) மோசடி (1) மோடி (3) மோனிகா (1) யுத்தம் (2) ரத யாத்திரை (1) ரமேஷ் பாபு (2) ராகுல் காந்தி (2) ராடியா (2) ராஜ பக்‌ஷே (1) ரிலையன்ஸ் (1) ருமேனியா (1) லட்சுமணப்பெருமாள் (2) லெனின் (2) லோக்பால் (5) வசந்த பாலன் (1) வண்ணக்கதிர் (1) வரலாறு (19) வலைப்பூக்கள் (1) வழக்கு விசாரணை (1) வாசிப்பு (5) வாச்சாத்தி (1) வால் ஸ்டிரிட் (3) வால்மார்ட் (1) வால்ஸ்டிரிட் போராட்டம் (2) வாழ்க்கை (4) வானியல் (2) விக்கிபீடியா (1) விக்கிலீகஸ் (1) விக்கிலீக்ஸ் (7) விஞ்ஞானம் (2) விமர்சனம் (10) விலையேற்றம் (2) விலைவாசி (11) விலைவாசி உயர்வு (2) விவாதங்கள் (1) விவாதம் (9) விளம்பரம் (1) விளையாட்டு (4) வினவு (1) விஜய் (2) விஜய் மல்லையா (1) வீட்டுவசதி வாரியம் (1) வீரமணி (2) வெண்மணி (2) வெள்ளம் (2) வெனிசுவெல்லா (1) வேலையின்மை (2) வோடாபோன் (1) ஜப்பான் நெருக்கடி (2) ஜாக்கிசான் (1) ஜாதி (1) ஜாபர் பனாகி (1) ஜூலியன் அசாங்க (1) ஜெயலலிதா (9) ஜோதிடம் (1) ஸ்டீவ் ஜாப்ஸ் (1) ஸ்பீல்பர்க் (2) ஸ்பெக்ட்ரம் (6)