Thursday, January 6, 2011

சல்மான் தசீர்: மத அடிப்படைவாதத்திற்கு அடிபணிய மறுத்த தீரர்!


ந்த செவ்வாய்க் கிழமையன்று, தமது சொந்தக் காவலாளியாலேயே சுட்டுக் கொல்லப்பட்டு இருக்கிறார் பாகிஸ்தானின் பஞ்சாப் மாநில ஆளுநர் சல்மான் தசீர். இஸ்லாமியப் பழமைவாத வெறிச் செயலுக்கு அடி பணிய மறுத்த தீரர் அவர் என்பது முக்கியமானது. தாம் எந்த மிரட்டுதலான சூழலில் இப்படி ஒரு மதச் சார்பற்ற தன்மையில்  இயங்கிக் கொண்டிருக்கிறோம் என்ற தெளிவோடிருந்த ஒருவரைத் தான் பலி கொண்டிருக்கிறது பாகிஸ்தான் இஸ்லாமிய தீவிரவாதம்.

ஆசியா பிபி என்ற மரண தண்டனை விதிக்கப்படிருக்கும் சிறுபான்மை கிறித்துவ மத நம்பிக்கை கொண்டிருக்கும் பெண்மணிக்கு ஆதரவாகக் குரல் கொடுத்தார் தசீர். அந்தப் பெண் சிறைவைக்கப்பட்டிருந்த இடத்திற்கே நேரில் சென்று அவர் அருகிலேயே நின்று பத்திரிகைகளுக்கு பேட்டியும் கொடுத்தார்.  பாகிஸ்தான் மத நிந்தனைச் சட்டம் (Blasphemy Law) மிகக் கடுமையாக இருக்கிறது, அதைத் திருத்தி அமைக்க வேண்டும், ஆசியா பிபி விடுதலை செய்யப்பட வேண்டும் என்று பகிரங்கமாகப் பேசினார். வெறி கொண்டெழுந்த அடிப்படைவாதக் கும்பல் தம்மை பலி கேட்டு கறுவிக் கொண்டிருக்கிறது என்று அறிந்தே, இணையதளத்தில் (டுவீட்டர்) தாம் மத வெறியர்களின் மிரட்டலுக்கு அஞ்சுவதாக இல்லை என்று பதிவு செய்தார்.  மனிதகுல விரோதிகள் அவரை உடனே பழிவாங்கிவிட்டிருக்கின்றனர்.

ஆசியா பி பி மீது பாகிஸ்தான் மத துவேஷ சட்டத்தின் 295-C சரத்தின் அடிப்படையில் குற்றம் சாட்டப்பட்டிருந்தது. நபிகள் நாயகம் குறித்து நேரடியாகவோ, மறைமுகமாகவோ இழிவாகப்  பேசினாலோ, ஜாடை செய்தாலோ, எந்த விதத்தில் கீழ்த்தரமாக அப்படிப் பொருள்படும்படி நடந்து கொண்டாலோ நடவடிக்கைக்கு உள்ளாக்கப்படும் இந்தக் குற்றம் நிரூபிக்கப் பட்டால் மரண தண்டனை வரை வழங்க நீதிமன்றத்திற்கு அதிகாரம் அளிக்கும் கடுமையான சட்டப் பிரிவு அது.

இஸ்லாமிய மத அடிப்படையிலான நாடுகளுள், பாகிஸ்தான் நாட்டின் மத நிந்தனைச் சட்டம் தான் மிகக் கடுமையானது என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.  ஜியா உல் ஹக் காலத்தில் 1986ல் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு மேற்படி சட்டப்படி இதுவரை யாரும் மரண தண்டனைக்கு உட்படுத்தப் படவில்லை என்றாலும்,   அப்படியான குற்றம் சாட்டப்பட்டிருந்தவர்கள் (இதில் இஸ்லாமியர் அதிகம்) 34 பேர் காவல் துறையின் 'நேரடி பார்வையில்' பகிரங்கமாக கொல்லப்பட்டனர் அல்லது தற்கொலை (?) செய்து கொண்டனர் என்கிறது ஹிந்துவில் ஜனவரி ஒன்றாம் தேதி வந்திருந்த அனிதா ஜோஷுவா அவர்களின் கட்டுரைக் குறிப்பு.

ஆசியா பி பி இழைத்த குற்றம் என்ன....2009 ம் ஆண்டில் தண்ணீர் எடுத்துவரப் போன இடத்தில் அவரது கிராமத்தில் இஸ்லாமிய பெண்கள் அவரைத் தண்ணீரில் கை வைக்காதே என்று கொச்சையாகப் பேசி தடுத்ததில் வாக்குவாதம் ஏர்பட்டிருக்கிறது. ஒரு கட்டத்தில், அவர் மகம்மது நபி பற்றி ஏதோ இழிவான சொல்லை உச்சரித்தார் என்றூ குற்றம் சுமத்தினர்.  பிறகு அவரது வீட்டைத் தேடி  ஆட்கள் திரண்டு வந்து அவரை அடித்து நொறுக்கும்போது காவல்துறை தலையிட்டுத் தடுத்துவிட்டு, பின்னர் அவர் மீதே வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்துவிட்டது.  இந்த ஆண்டு நவம்பர் மாத முற்பகுதியில், நான்கானா சாகிப் மாவட்ட நீதிமன்றம் அவருக்கு மரண தண்டனை என்று தீர்ப்பளித்தது.

பாகிஸ்தானில் 96% மக்கள் இஸ்லாமியர்.  கிறித்துவர்கள் 1.6 % வசிக்கின்றனர்.  சிறுபான்மை கிறித்துவ சமூகத்திற்கு எதிராகவும், பொதுவாகவே மதச் சார்பின்மைக்கு எதிராகவும் பழமைவாத வெறிச்செயல்கள் பாகிஸ்தானில் தொடர்ந்து நடந்து வருகின்றன.  இஸ்லாமிய சமூகத்தைச் சார்ந்த பெரும்பகுதி மக்கள் உள்ளபடியே மத தீவிரவாதத்தை ஏற்றூக்கொண்டவர்கள் இல்லை.  ஜனநாயகத் தேர்தல் எதிலும் எந்தத் தீவிரவாத அமைப்புக்கும் மக்கள் ஆதரவு அளித்துவிடவில்லை. என்றாலும், வீதிகளில் திரியும் முரட்டு வெறியர்களின் அடாத செயல்களை பெரும்பான்மை மக்கள் தட்டிக் கேட்கும் சூழலும் இல்லை என்பதே உண்மை. இது அடிப்படைவாதிகளின் துணிச்சலைக் கூட்டுகிறது.  மத அடிப்படைவாதிகள் விடுக்கும் கட்டளைகளை செயல்படுத்தும் பயங்கரவாதச் செயல்கள் இதனாலேயே அரங்கேறுகின்றன.

மத நிந்தனைச் சட்டத்தின் முன் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மட்டுமல்ல, அவர்களுக்கு ஆதரவுக் குரல் கொடுக்க முனைவோரையும் வஞ்சம் தீர்க்கின்றனர் மதவெறியர்கள்.  இதே சட்டப் பிரிவின் அடிப்படையில் கீழவை நீதி மன்றத்தால் மரண தண்டனை விதிக்கப் பட்டிருந்த இரண்டு கிறித்துவ சிறுவர்களை விடுதலை செய்தார் என்பதற்காக லாகூர் உயர் நீதி மன்ற நீதிபதி ஆரிஃப் இக்பால் பட்டி 1997ல் படுகொலை செய்யப்பட்டார்.

ஆசியா பி பி வழக்கின் தீர்ப்புக்கு எதிராக இஸ்லாமிய மதத்தைச் சார்ந்தவர்களே பலரும் திரண்டு அவரை விடுதலை செய்யவும், மத நிந்தனைச் சட்டத்தின் விஷப் பல்லைப் பிடுங்கவும் பெருந்திறல் ஆர்ப்பாட்டங்கள் நடத்தினர்.  குடியரசுத் தலைவர் சர்தாரி சட்டத்தைத் திருத்த நிபுணர் குழு அமைக்க விருப்பம் தெரிவித்தார்.  ஏற்கெனவே ஆளும் பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தலைவர் ரெஹ்மான் பல ஆண்டுகளுக்கு முன்பே முன்மொழிந்திருந்த திருத்தங்களை அமல்படுத்த அடுத்தடுத்த ஆட்சிகள் எவற்றுக்கும் துணிவில்லாது போயிருக்கிறது.  ஆசியா பி பி வழக்கு தான் முதல் மரண தண்டனை அறிவிப்பு என்பதும், அதுவும் பெண்ணுக்கு எதிரானது என்பதும் இந்தச் சட்டத்தை விவாதப் பொருள் ஆக்கியிருந்தது. அமைச்சர் ஒருவர் கடந்த வாரம் திருத்தங்கள் எதுவும் செய்யமாட்டோம் என்று சொன்னது தீவிரவாத சக்திகளுக்கு ஊக்கம் கொடுத்ததை மத சார்பற்ற சக்திகள் கவலையோடு சுட்டிக் காட்டிக் கொண்டிருக்கும் வேளையில், தசீர் படுகொலை அவர்களது அச்சத்தை மெய்ப்பித்து விட்டது.

ஏழைக் குடும்பத்தைச் சார்ந்த ஆசியா பிபி, கதிகலங்கிப் போய் தம்மைக் கைவிட்டுப் போன கணவர் மற்றும் குழந்தைகளைப் பிரிந்த நிலையில் மிகச் சாதாரண வாக்குவாதம் ஒன்றில் ஒரு சார்பான புகாரின் மீது, மிகக் கடுமையான சட்டத்தால் மரணத்தின் விளிம்பிற்குக் கொண்டு வந்து நிறுத்தப் பட்டிருக்கிறார். அவருக்கான குரலாக மட்டுமல்ல, ஜனநாயகத்தின் குரலாகவும் ஒலித்த ஒருவரை தான் பாகிஸ்தான் மத தீவிரவாதம் பலி கொண்டிருக்கிறது.  எல்லைக்கு இந்தப் புறம் இருக்கும் இந்திய சமூகத்திற்கு இதிலிருந்து எத்தனையோ பாடங்கள் இருக்கின்றன. வலுவெடுத்து வளர்ந்து வரும் இந்து மத பயங்கரவாதத்தின் முகமும் இதே கோரமானது தான் என்பதற்கு குஜராத் பரிசோதனைக் கூடத்திலேயே விளக்கங்கள் நிரம்ப உண்டு. இஸ்லாமிய தீவிரவாதம் குடித்திருக்கும் உயிர், இஸ்லாமிய மத நம்பிக்கை கொண்டிருந்த ஒரு மனிதருடையதுதான்.  மதவெறிக்கு உண்மையில் மதமே பொருட்டல்ல. மனிதத் தன்மையே அற்ற அவர்களது தாக்குதலின்  இலக்கு மனிதநேயம்.

தான் தனி ஆளாக நிறுத்தப்பட்டாலும் அடிப்படைவாதத்திற்கு அடிபணிய முடியாது என்று நின்றதற்காகக்  கொலையுண்டிருக்கிறார் சல்மான் தசீர். அவருக்கு நேர்ந்த முடிவு பெரும் கண்டனத்திற்குரியது. உலகத்தின் மனசாட்சியை சலீம் தசீரின் உலுக்கிவிட்டுச் சென்றிருக்கிறார்.  மதப்பழமைவாதத்திற்கும், மதவெறிக்கும், அடிப்படைவாத குரூர இயக்கங்கள் அனைத்துக்கும் எதிரான குரல்களை எழுப்பச் சொல்கிறது அவரது மரணம். மதச்சார்பின்மைக்கான முழக்கங்களை ஓங்கி ஒலிக்க வேண்டுகிறது அவரது தியாகம். 


-எஸ்.வி.வேணுகோபாலன் 

8 comments:

 1. அன்பு சகோதரர் வேணுகோபால் அவர்களே...

  சல்மான் தசீரை கொன்றவர்கள் மனிதநேயம் அற்ற அரக்கர்கள். அவர்களை கண்டித்து தண்டிக்க வேண்டும் பாகிஸ்தான் அரசு உண்மையிலேயே கொஞ்சமாவது இஸ்லாமிய அரசாக இருந்தால்..!

  இஸ்லாமிய மத அடிப்படைவாதம் ஒன்றும் சல்மான் தசீரை கொல்லச்சொல்லவில்லை.

  இஸ்லாமிய மத அடிப்படைக்கு விரோதமாக கொலை செய்த அந்த கொலைகாரர்கள், தங்களை "இஸ்லாமிய மத அடிப்படைவாதிகள்" என்று சொல்லிக்கொண்டார்களா? அல்லது இது நீங்களாக அவர்களுக்கு வைத்த பெயரா?

  இஸ்லாமிய மத அடிப்படைவாதம் 'வட்டி வாங்காதே' என்கிறது. நம் அரசு வங்கியே என் சேமிப்புக் கணக்கில் எனக்கு வட்டியை வரவு வைக்கிறது.

  சொல்லுங்கள்...
  நான் ஈட்டிக்காரனாவதா...?
  ஒரு இஸ்லாமிய மத அடிப்படைவாதியாக வாழ்தா?

  இஸ்லாமிய மத அடிப்படைவாதம் 'சூதாடாதே' என்கிறது. இந்தியாவில் பல மாநில அரசுகளே லாட்டரி நடத்துகின்றன. தமிழகமும் முன்பு அப்படித்தான் கல்லா கட்டியது.

  சொல்லுங்கள்...
  நான் சூதாடியாவதா...?
  ஒரு இஸ்லாமிய மத அடிப்படைவாதியாக வாழ்வதா?

  இஸ்லாமிய மத அடிப்படைவாதம் 'மது குடிக்காதே' என்கிறது. தமிழக அரசு டாஸ்மாக் நடத்தி மக்களை குடிக்கவைத்து அதன்மூலம் தன் பிழைப்பை ஒட்டுகிறது.

  சொல்லுங்கள்...
  நான் குடிகாரனாவதா...?
  ஒரு இஸ்லாமிய மத அடிப்படைவாதியாக வாழ்வதா?

  மத அடிப்படைவாதம் என்ற பதத்தை அரக்கத்தனத்துக்கு தவறாக இனி உபயோகிக்காதீர்கள்...இது தங்களின் தவறான புரிதல். நல்லோரை இது கடுமையாக புண்படுத்தும்.

  எப்படியெனில்...

  என்னை மனிதத்தமையுள்ளவனாக வாழ வைத்திருப்பதே என் இஸ்லாமிய மத அடிப்படைவாதம்தான்.

  ReplyDelete
 2. தான் தனி ஆளாக நிறுத்தப்பட்டாலும் அடிப்படைவாதத்திற்கு அடிபணிய முடியாது என்று நின்றதற்காகக் கொலையுண்டிருக்கிறார் சல்மான் தசீர். அவருக்கு நேர்ந்த முடிவு பெரும் கண்டனத்திற்குரியது.

  ReplyDelete
 3. அன்புள்ள முகமது ஆசிக் ...

  மதம், மத நம்பிக்கை என்பவை வேறு. மதை அடிப்படை வாதம் என்பது வேறு. நீங்கள் சொல்லும் கருத்துக்களில் பலதை இஸ்லாத் முன் வைக்கலாம், ஆனால் அக் கருத்துக்கள் இஸ்லாத் மட்டுமே முன்வைத்தவை அல்ல. மற்றொன்று நீங்கள் சரியென நினைக்கும் விசயம் எனக்கு தவறாகப் படலாம். ஏன். இரண்டு முஸ்லீம்களின் தங்கள் மதம் குறித்த புரிதல் கூட வேறு வேறாக இருக்கலாம்.

  அந்த வேற்றுமைகளை மதித்து. உரிமையை மதித்து. என் கூடாரத்துக்குள் உங்கள் மூக்கு நுழையாமல் வாழ்வது. நல்ல வாழ்க்கை.

  அப்படியான நிலை தொடர. அனைவருக்கும் பொதுவான விசயங்களில் இந்த நம்பிக்கை அடிப்படை வாதம் புகுந்துவிடாமல் தடுப்பது அவசியம். அதுதான் மதச்சார்பின்மை.

  உங்கள் மத நம்பிக்கை உங்களை மனிதனாக்கியிருப்பதை நான் வரவேற்கிறேன். ஆனால், மத அடிப்படைவாதம் அப்படிச் செய்யாது. அது வெறியைக் கிளப்பி, பாசிச அழிவுக்கு இட்டுச் செல்லும். அதனை நாம் ஒன்றுபட்டு எதிர்க்க வேண்டும்.

  ReplyDelete
 4. நான் சொன்னது...//என்னை மனிதத்தமையுள்ளவனாக வாழ வைத்திருப்பதே என் இஸ்லாமிய மத அடிப்படைவாதம்தான்.//

  சகோ. நீங்கள் புரிந்து கொண்டது...//உங்கள் மத நம்பிக்கை உங்களை மனிதனாக்கியிருப்பதை நான் வரவேற்கிறேன். ஆனால், மத அடிப்படைவாதம் அப்படிச் செய்யாது. அது வெறியைக் கிளப்பி, பாசிச அழிவுக்கு இட்டுச் செல்லும்.//

  ம்ம்ம்ம்.... யாருக்காவது புரிந்தால் விளக்குங்களேன்.

  சரி. அது கிடக்கட்டும்.

  அடிப்படைவாதம்...
  மத அடிப்படைவாதம்...
  இஸ்லாமிய மத அடிப்படைவாதம்.
  என்ன சொல்கிறது?

  முஹம்மது நபி(ஸல்)அவர்களை பற்றியும் அவரின் மனைவி பற்றியும் அவதூறு கூரியவனுக்கும் எப்போதும் இஸ்லாத்திற்கு எதிராக சதித்திட்டம் தீட்டி நபிக்கு பல இன்னல்களை செய்பவனுமான அப்துல்லாஹ் பின் உபைஹ் ஒருநாள் இயற்கைமரணம் அடைந்தபோது சிலர் தடுத்தும் அவனுக்காக பிரார்த்தித்து இறுதித்தொழுகை நடத்த முன் வந்தார்கள்.

  தன்னை இரத்தம் வழிந்தோட கல்லால் அடித்த தாயிப் மக்களின் மனமாற்றத்திற்கு பிரார்த்திதார்களே அன்றி கடுஞ்சொல் கூறவில்லை.

  இதுதான் இஸ்லாமிய மத அடிப்படைவாதம்.

  இதற்கு எதிரானதுதான் ஜியா உல் ஹக் காலத்தில் 1986ல் தன் எதிரிகளை 'தூக்குவதற்கு' அந்த ராணுவ சர்வதிகாரி அறிமுகப்படுத்திய (தடா,பொடா,சிறப்பு ராணுவ சட்டம் போன்ற) பாகிஸ்தான் மத துவேஷ சட்டத்தின் 295-C சரத். எவனாவது எதிர்த்து மூச்சுவிட்டால் கூட, இவன் இந்த சட்டத்தை எதிர்த்ததால்.. நபியை நிதிப்பதை ஆதரிக்கிறான் என்று கூறி தூக்கிலிட்டுவிடலாம். ஒரு முட்டாள் கூட எதிர்க்க மாட்டான். ஆளுங்கட்சி எதிர்க்கட்சி இரண்டுமே இதைவைத்து அரசியல் பண்ணலாம்.

  அந்த கவர்னர் சொன்ன கருத்துக்கு அன்றே கொன்றிருக்க வேண்டியதுதானே? எதற்கு மூன்றுநாள் கழித்து கொலை?

  இவ்வளவுக்கும் கொலைகாரன் கூடவே இருக்கும் அவரின் மெய்க்காப்பாளன்.

  இவனுக்கு உண்மையிலேயே அதுதான் காரணம் என்றால் அந்த கிருத்துவப்பென் மீதல்லவா அதிகம் கோபம் வந்திருக்க வேண்டும்? இங்கே லாஜிக் இடிக்கிறது.

  இவன் சொர்க்கம் செல்ல ஆசைப்படும் நல்லவனா? இல்லை. ஒரு மனிதன் இன்னொரு மனிதனை கொன்றால் நேரடி நரகம். கொலைக்குற்ற செயல். அரசாங்கம் மட்டுமே தண்டிக்க அனுமதி பெற்றது. இந்த அடிப்படைகளை மீருபவன் மத விரோதி. அடிப்படைவாதி அல்ல.

  இப்போது சந்தேகம் வருதல்லவா? இன்னும் வரனும்.

  "இந்த மெய்க்காப்பாளன் ஆபத்தானவன். இவன் நடவடிக்கை சரி இல்லை. இவனை மெய்க்காப்பாளன் பொறுப்பில் இருந்து தூக்கி விடுங்கள்" என்று பஞ்சாப் முதலமைச்சருக்கு இன்டலிஜென்ஸ் ரிப்போர்ட் போய் மூணு மாசம் ஆயாச்சு. முதல்வரிடம் ஒரு ஆக்ஷனும் இல்லை? என்? முதல்வரும் கவர்னரும் கீரியும் பாம்பும் போல. இருவருக்கும் ஆகாது. யாராவது ஒழிந்தால் நல்லது என்று நினைப்பவர்கள் இருவரும்.

  பொதுவாய் பாகிஸ்தானில் பெருந்தலைகள் கொலை நடந்தவுடன் சுட்டவனும் கொலை செய்யப்படுவான். இம்முறை அது மிஸ்ஸிங். அவ்வளவுதான்.

  இதெல்லாம் ஒரு நாடு.. இவனுங்கல்லாம் தலைவர்கள்..
  சொந்த வீடு வாசல் சொத்து சொந்தபந்தம் நண்பர்கள் ஊர் நாடு இவற்றை எல்லாம் விட்டுட்டு பரதேசியாய் நாடு வெறிபிடித்து பாகிஸ்தானுக்கு ஓடிய நயவஞ்சகர்கள்...
  இவர்கள் கொலைகளுக்கெல்லாம் ஒரு பதிவு..

  சகோதரா... நம்ம நாட்டை பற்றி நம்ம மக்களை பற்றி முதலில் கவலைப்படுங்கள். பதிமூனுவருஷம் ஜெயிலில் விசாரனைக்கைதியாய் கழித்து விட்டு நிரபராதி என வெளிவரும் பல மக்களுக்காக அவர்களின் இழப்பீட்டுக்காக பதிவு எழுதுங்கள், சகோ.

  http://pinnoottavaathi.blogspot.com/2011/01/blog-post.html

  ReplyDelete
 5. ம்ம நாட்டை பற்றி நம்ம மக்களை பற்றி முதலில் கவலைப்படுங்கள். பதிமூனுவருஷம் ஜெயிலில் விசாரனைக்கைதியாய் கழித்து விட்டு நிரபராதி என வெளிவரும் பல மக்களுக்காக அவர்களின் இழப்பீட்டுக்காக பதிவு எழுதுங்கள், சகோ.///

  கண்டிப்பாக எழுதுவோம். களத்திலும் போராடுவோம் ...

  மத நம்பிக்கை, மதப் பற்று, இஸ்லாத் வழி நடப்பதெல்லாம் சரி ...

  அதுவே வெறியாக மாறினால்? - அதுதான் அடிப்படைவாதம். அனத பொருளிலேயே இக்கட்டுரையில் அந்தச் சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. மதம் குறித்த விவாதத்தை மற்றொரு நேரத்தில் செய்வோம்.

  ReplyDelete
 6. எல்லா மத புத்தகங்களிலும் தத்துவம்,வரலாறு,அறிவியல்(இன்னும் எவ்வளவோ) இருப்பதாக அம்மதத்தினர் நம்புகின்றனர்.

  முதலில் மதத்தில் அறிவியல் என்பது பிரச்சாரகர்களின் தந்திரம் என்பதும் அது ஒரு வார்த்தை ஜால விளையாட்டு மட்டுமே என்பதால் மத தத்துவங்கள், மத,வேத வரலாற்று பற்றிய நடுநிலைமையான ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டும்.

  இரண்டாவது ஏறத்தாழ எல்லா மதங்களின் புத்தகங்களில் குறிப்பிடும் மனிதர்கள், சம்பவ்ங்கள்,அத்தாட்சிகள் போன்ற விஷயங்கள் வரலாற்று ஆதாரம் இல்லாத்வை.

  அப்படி ஏதாவது வரலாற்று ஆதாரம் இருந்தால் கூறுங்கள்.

  மிச்சம் இருப்பது தத்துவம் மட்டுமே

  எல்லா மதங்களின் கொள்கைகளையும் பின் வருமாறு கூறலாம்

  1.கடவுள்(கள்) மனிதனை படைத்தது அவரை வழிபடுவதற்காக ,ஆதலால் வழிபட மறுத்தல் மிக பெரிய தவ‌றாகும்.

  2.அம்மதத்தின் படி வழிபடுபவர்களை காக்க (அம்மதத்தின் படி) வழிபடாதவர்களை அழிக்க(அடிமைப் படுத்த) கடவுள்(கள்) உதவி செய்வார்(கள்),இறப்பிற்கு பின் சொர்க்க வாழ்வை அளிப்பார்(கள்).

  இந்த இரண்டு கொள்கைகளுமே எனக்கு அநாகரிகமாக தவறாக தெரிகிறது.

  இந்த இரு தத்துவதங்களையும் சரியென்று எப்படி சொல்கிறார்கள்?
  மத நம்பிக்கை தனி மனித நம்பிக்கை மட்டுமே சார்ந்த விஷயம் என்றால் நமக்கு எந்த பிரச்சினையுமே இல்லை.

  இதில் என் மதம் மட்டுமே சரியானது,என் புத்தகம் மட்டுமே மாறாதது,இது ஒரு சர்வ ரோஹ நிவாரணி,ஆகவே அதில் குறிப்பிட்ட படி உலகத்தில் உள்ள அனைத்தும்,அனைவருமே நடக்க‌ வேண்டும் என்பதால் ,அதனால் அம்மதத்தை பின் பற்றாதவர்கள் பாதிக்கப் படுகிறார்கள் என்பதாலும் அதன் நம்பகத் தன்மை விவாதிக்கப் ட்ட்டே ஆக வேண்டும்.

  மத நம்பிக்கையாளர்கள் சொர்க்கம செல்ல ஆசைப்பட்டால் நல்லது வாழ்த்துகள்.ஆனால் உங்கள் நம்பிக்கைக்காக இவ்வுலகத்தை நரகம் ஆக்காதீர்கள்.

  ReplyDelete
 7. காட்டுமிராண்டிகள் வாழும் தேசத்தில் மனிதர்களுக்கு இடமில்லை.

  ReplyDelete
 8. //.. எல்லாம் விட்டுட்டு பரதேசியாய் நாடு வெறிபிடித்து பாகிஸ்தானுக்கு ஓடிய நயவஞ்சகர்கள்...//

  இப்படியெல்லாம் திட்டிட்டா வேலை முடிஞ்சிராது. இஸ்லாமைப் படித்து வேதம் ஓதுபவர்கள் என்ன செய்தார்கள்?
  அவர்களின், மற்ற் அனேக இஸ்லாமியர்கள் என்ன செய்தார்கள் என்பதை இங்கு காணுங்கள்; அதோடு இந்த வாசகத்தையும் வாசித்துக் கொள்ளுங்கள்:“The unprecedented edict issued by several hundred clerics denying Salmaan Taseer the right to Islamic funeral prayers means that the Ahle Sunnat [essentially the Barelvis] who had been relegated hitherto to a secondary status vis-à-vis the smaller but richer and better armed Deobandi faction now feels strong enough to claim the overall leadership of the faithful,

  இதுவே இஸ்லாமின் நிலை.

  ReplyDelete

Labels

Coca Cola (1) Peak Oil (1) Permaculture (1) Power of Community (1) Renewable energy (1) Solar energy (1) SOPA (1) sustainable agriculture (1) அ.குமரேசன் (6) அங்காடிதெரு (1) அணு ஆற்றல் (2) அணுமின் (1) அண்ணா (4) அண்ணா நூலகம் (1) அதிர்ச்சி (1) அத்வானி (2) அந்நிய முதலீடு (2) அபிநயா (1) அப்துல் கலாம் (1) அப்பணசாமி (2) அமெரிக்கா (20) அம்பானி (1) அம்பேத்கர் (9) அரசியல் (177) அரசியல்.நிகழ்வுகள் (6) அரசு (14) அரசு மருத்துவமனை (1) அரசு விடுதி மாணவர்கள் (1) அரவான் (1) அருந்ததியர் (1) அர்ஜெண்டினா (1) அலசல் (1) அவலம் (19) அழகு (1) அறிமுகம் (1) அனுபவம் (28) அன்னா ஹசாரே (1) அஜயன் பாலா (1) ஆ.ராசா (1) ஆணையம் (2) ஆதவன் தீட்சண்யா (3) ஆப்கானிஸ்தான் (1) ஆப்பிரிக்கா (2) ஆர்.மீனா (1) ஆர்எஸ்எஸ் (2) ஆவணப்படம் (3) ஆனந்தன் (2) இ.எம்.ஜோசப் (1) இ.பா.சிந்தன் (22) இட ஓதுக்கீடு (3) இடஒதுக்கீடு (1) இடதுசாரிகள் (4) இணையம் (2) இதழ்கள் (6) இந்தியா (69) இந்துத்துவா (8) இந்துஜா (1) இமு (2) இமு டிச11 (5) இமு நவமபர் 2011 (6) இயக்கம் (7) இயக்குனர் ஷங்கர் (1) இரா.சிந்தன் (5) இரா.செழியன் (2) இரா.நடராஜன் (3) இராம.கோபாலன் (1) இல.சண்முகசுந்தரம் (2) இலக்கியம் (38) இலங்கை (6) இலங்கைத் தமிழர் (4) இலவசக் கல்வி (1) இலவசங்கள் (1) இளவரசன் கொலை (1) இளைஞர் முழக்கம் (11) இஷ்ரத் (2) இஸ்ரேல் ஆக்கிரமிப்பு (1) இஸ்லாம் (3) ஈராக் (1) ஈரான் (2) உ.வாசுகி (1) உச்ச நீதிமன்றம் (1) உணவு நெருக்கடி (2) உதயசங்கர் (1) உத்தப்புரம் (1) உயர்கல்வி (2) உரையாடல்கள் (2) உலக சினிமா (4) உலகமயம் (5) உலகம் (46) உளவியல் (1) உள்ளாட்சி (1) உள்ளாட்சித் தேர்தல் (1) ஊடகங்கள் (14) ஊடகம் (8) ஊழல் (30) எடியூரப்பா (1) எம்.எப்.ஹூசேன் (1) எம்.சிவக்குமார் (2) எரிசக்தி (1) எல்.கே.ஜி (1) என்.ஜி.ஓ (1) என்கவுண்டர் (1) எஸ். பாலா (1) எஸ்.கண்ணன் (1) எஸ்.கருணா (3) எஸ்.பி.ராஜேந்திரன் (3) எஸ்.வி.வேணுகோபாலன் (2) ஏகாதிபத்தியம் (13) ஏமன் (1) ஒபாமா (4) ஓம்பிரகாஷ் வால்மீகி (1) ஓளிப்பதிவு (1) ஃபாக்ஸ்கான் (1) கச்சத் தீவு (1) கட்டுரை (51) கட்டுரைகள் (2) கணிணி (2) கணினி தொழில் நுட்பம் (1) கமல்ஹாசன் (1) கம்யூனிசம் (12) கருணாநிதி (11) கருத்து சுதந்திரம் (1) கருத்துரிமை (3) கலைஞர் (6) கல்வி (14) கவிதை (21) கவிதைகள் (1) கறுப்புப்பணம் (3) கனிமொழி (2) காங்கிரஸ் (10) காதல் (2) கால்பந்து (1) காவல்துறை (4) காஷ்மீர் (1) கி.பார்த்திபராஜா (1) கிங்பிஷர் (1) கியூபா (4) கிரீஸ் (1) குடும்பம் (1) குட்டி ரேவதி (1) குப்பன் சுப்பன் (1) குலாத்தி (1) குழந்தைகள் (9) குழந்தைகள் கடத்தல் (1) குஜராத் கலவரம் (1) குஜராத் படுகொலைகள் (1) கூகிள் அந்தரங்கம் (1) கூடங்குளம் (2) கே.சாமுவேல்ராஜ் (1) கே.பாலமுருகன் (1) கேள்விகள் (1) கைப்பற்றுவோம் போராட்டம் (1) கோவில் (1) ச.தமிழ்ச்செல்வன் (1) ச.மாடசாமி (1) சக்திஜோதி (1) சங்கமம் (1) சசிகலா (1) சச்சின் (1) சட்டசபை (2) சட்டம் (4) சத்யஜித் ரே (1) சந்திரகாந்தன் (1) சமச்சீர் கல்வி (4) சமவூதியம் (1) சமூக நீதி (2) சமூக வலைத்தளம் (1) சமூகப் பாதுகாப்பு (2) சமூகம் (177) சம்பு (1) சரத் பவார் (1) சர்வதேச பெண்கள் தினம் (1) சல்மான் ருஷ்டி (1) சா.கந்தசாமி (2) சா.செயக்குமார் (1) சாகித்திய அகாதமி விருது (1) சாக்லேட் (1) சாதீயம் (4) சாரா விஜி (2) சாலிம் அலி (1) சி.பி.எம் (9) சிக்கிம் (1) சிந்தனை (5) சிபி (1) சிராஜுதீன் (1) சில்லரை வர்த்தகம் (4) சிறப்பு பொருளாதார மண்டலங்கள் (1) சிறுகதை (12) சினிமா (52) சினிமா செய்திகள் (4) சினிமாச் செய்திகள் (4) சீத்தாராம் யெச்சூரி (2) சு.பொ.அகத்தியலிங்கம் (2) சு.வெங்கடேசன் (1) சுகாதாரம் (1) சுதிர் ரா (1) சுயமரியாதைத் திருமணம் (1) சுவாரசியம் (1) சுற்றுப்புறச் சூழல் (3) சூர்யா (1) செம்மலர் (4) செம்மலர் அக் 2011 (4) செய்திகள் (112) சென்னை (1) சோவியத் (1) சோஷலிசம் (1) டெல்லி (2) டேம் 999 (1) த.தமிழரசி (1) தகவல் உரிமை (1) தகவல் திருட்டு (2) தண்ணீர் (3) தமிழக மீனவர்கள் (1) தமிழகம் (66) தமிழர் (1) தமிழ்ச் சினிமா (1) தமிழ்நதி (1) தமுஎகச (4) தலித் (21) தற்கொலை (1) தனியார்மயம் (4) தனுஷ் (1) தி.க (2) திமுக (1) திரிணாமுல் (1) திருப்பூர் (2) திருமணம் (2) திரைக்குப் பின்னால் (2) திரைத்துறை (1) திரைப்பட விழா (1) திரைப்படம் (4) தினகரன் (1) தினமணி (3) தீக்கதிர் (9) தீண்டாமை (22) தீண்டாமையின் அடையாளங்கள் (1) தீபாவளி (1) தேசியச் செய்திகள் (4) தேர்தல் (4) தொண்டு நிறுவனங்கள் (1) தொலைக்காட்சி (2) தொழிலாளர் (6) ந.பெரியசாமி (1) நகர்ப்புற விவசாயம் (1) நகைச்சுவை (1) நக்கீரன் (1) நதிம் சயித் (1) நந்தலாலா (1) நந்தன் (1) நரேந்திர மோடி (6) நலத்திட்டங்கள் (2) நவம்பர் புரட்சி (1) நாடகம் (1) நாடாளுமன்றத் தேர்தல் 2014 (2) நாணய மதிப்பு (1) நாறும்பூநாதன் (1) நிகழ்வுகள் (154) நிலப்பிரபுத்துவம் (1) நிலமோசடி (1) நீதித்துறை (2) நீலவேந்தன் (2) நுகர்வுக் கலாச்சாரம் (2) நூல் அறிமுகம் (12) நூல் வெளியீடுகள் (1) நெல்சன் மண்டேலா (1) நேட்டோ (2) நையாண்டி (26) நையாண்டி் (14) ப.சிதம்பரம் (3) பசுபதி (1) படுகொலை (3) படைப்புகள் (2) பட்ஜெட் (1) பணவீக்கம் (2) பதிவர் வட்டம் (3) பதிவர்வட்டம் (1) பதிவுலகம் (1) பரிந்துரைகள் (5) பழங்குடி (1) பள்ளிக்கூடம் (1) பறவைகள் (1) பன்னாட்டுக் கம்பெனிகள் (3) பா.ஜ.க (3) பாகிஸ்தான் (2) பாடல் (5) பாதல் சர்க்கார் (1) பாதுகாப்பு (1) பாரதி (2) பாலபாரதி (1) பாலஸ்தீனம் (1) பாலியல் வன்முறை (6) பாலு மகேந்திரா (1) பால் சமத்துவம் (1) பாஜக (1) பி.சுகந்தி (1) பி.ராமமூர்த்தி (1) பிடல் காஸ்ட்ரோ (3) பிரணாப் முகர்ஜி (1) பிரபாத் பட்நாயக் (3) பிரளயன் (2) பிரிட்டன் (1) பிர்தவ்ஸ் ராஜகுமாரன் (1) பிளின் (1) பு.பெ.நவமபர் 2011 (1) புகைப்படங்கள் (1) புதிய பரிதி (2) புது விசை (12) புதுமை (1) புத்தக அறிமுகம் (2) புத்தகக் கண்காட்சிகள் (2) புத்தகம் (18) புத்தகம் பேசுது (17) புத்தகம் பேசுது நவம்பர் 2011 (8) புத்தகாலயம் (2) புத்தாண்டு (1) புபே (2) புபே டிச11 (8) புரட்சி (2) புவி (1) புவி டிச11 (5) புவி நவ 2011 (7) புனைவு (1) புஷ் (1) பெட்ரோல் (7) பெண் (11) பெண் விடுதலை (1) பெண்குழந்தை (1) பெண்ணியம் (9) பெண்ணெழுத்து (1) பெரியார் (2) பெருமுதலாளிகள் (7) பேட்டி (2) பேரா.சிவசுப்பிரமணியன் (2) பேஸ்புக் (1) பொருளாதார நெருக்கடி (2) பொருளாதாரம் (24) போக்குவரத்து (1) போராட்டம் (15) போலீஸ் தாக்குதல் (3) ப்ரிசம் (4) ப்ரிசம் - தகவல் திருட்டு (7) ப்ரியா தம்பி (1) மக்களுக்கான மருத்துவம் (1) மக்கள் நலப்பணியாளர்கள் (2) மக்கானா (1) மத அடிப்படை வாதம் (1) மதவெறி (3) மதுசூதனன் (1) மம்தா (3) மம்முட்டி (1) மரபணு (1) மலாலாய் சோயா (1) மவோயிஸ்டுகள் (1) மன்மதன் அம்பு (1) மன்மோகன்சிங் (10) மா ற்று (1) மாட்டுக்கறி (1) மாதர் சங்கம் (1) மாதவராஜ் (2) மாவோ (1) மாற்ற (1) மாற்று (223) மின்கட்டணம் (1) மின்சாரம் (1) மீள்பார்வை (2) முதலாளி (1) முதலாளித்துவம் (11) முத்தமாக மாறேன் (1) முத்துக்கண்ணன் (1) முல்லைப் பெரியாறு (7) முறைகேடுகள் (5) மெகாசீரியல் (1) மே.வங்க அரசு (1) மே.வங்கம் (1) மேதினம் (1) மேற்கு வங்கம் (1) மொக்கை (1) மொழி (2) மொழிபெயர்ப்பு (1) மோசடி (1) மோடி (3) மோனிகா (1) யுத்தம் (2) ரத யாத்திரை (1) ரமேஷ் பாபு (2) ராகுல் காந்தி (2) ராடியா (2) ராஜ பக்‌ஷே (1) ரிலையன்ஸ் (1) ருமேனியா (1) லட்சுமணப்பெருமாள் (2) லெனின் (2) லோக்பால் (5) வசந்த பாலன் (1) வண்ணக்கதிர் (1) வரலாறு (19) வலைப்பூக்கள் (1) வழக்கு விசாரணை (1) வாசிப்பு (5) வாச்சாத்தி (1) வால் ஸ்டிரிட் (3) வால்மார்ட் (1) வால்ஸ்டிரிட் போராட்டம் (2) வாழ்க்கை (4) வானியல் (2) விக்கிபீடியா (1) விக்கிலீகஸ் (1) விக்கிலீக்ஸ் (7) விஞ்ஞானம் (2) விமர்சனம் (10) விலையேற்றம் (2) விலைவாசி (11) விலைவாசி உயர்வு (2) விவாதங்கள் (1) விவாதம் (9) விளம்பரம் (1) விளையாட்டு (4) வினவு (1) விஜய் (2) விஜய் மல்லையா (1) வீட்டுவசதி வாரியம் (1) வீரமணி (2) வெண்மணி (2) வெள்ளம் (2) வெனிசுவெல்லா (1) வேலையின்மை (2) வோடாபோன் (1) ஜப்பான் நெருக்கடி (2) ஜாக்கிசான் (1) ஜாதி (1) ஜாபர் பனாகி (1) ஜூலியன் அசாங்க (1) ஜெயலலிதா (9) ஜோதிடம் (1) ஸ்டீவ் ஜாப்ஸ் (1) ஸ்பீல்பர்க் (2) ஸ்பெக்ட்ரம் (6)