தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தில் ஆளுநர் உரை நிகழ்த்தியுள்ளார். 2011ம் ஆண்டின் முதல்கூட்டம் என்ற முறையில் ஆளுநர் நிகழ்த்தியுள்ள உரையில் பல்வேறு அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. தமிழக சட்டப்பேரவைக்கு தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், திமுகவின் தேர்தல் வாக்குறுதிகளின் தொகுப்பு போல இந்த உரை அமைந்துள்ளது. ஆனால், முந்தையக் கூட்டத் தொடர்களில் நிகழ்த்தப்பட்ட ஆளுநர் உரைகளில் இடம்பெற்ற அம்சங்கள் மற்றும் திமுகவின் தேர்தல் அறிக்கையில் இடம் பெற்ற அறிவிப்புகளில் பல செயல்படுத்தப்படவில்லை என்ற புரிந்துணர்வுடன்தான் ஆளுநர் உரையை பரிசீலிக்க வேண்டியுள்ளது.
தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சிறப்பான முறையில் பராமரிக்கப்படுவதாக ஆளுநர் உரையில் திமுக அரசு தம்பட்டம் அடித்துக் கொள்கிறது. ஆனால், திமுக ஆட்சிக்காலத்தில் முன்னாள் அமைச்சர் தா.கிருஷ்ணன் கொலை; தினகரன் ஊழியர்கள் உயிரோடு எரித்துக் கொலை போன்ற அரசியல் பின்னணியுடன் கூடிய கொலைத் தாண்டவங்கள் அரங்கேறியது என்பதை மறந்துவிட முடியாது. மணற்கொள்ளையை தடுத்த அதிகாரிகள் மீது தாக்குதல் மற்றும் கொலைச் சம்பவங்கள் மற்றும் சமீபகாலமாக அதிகரித்துள்ள குழந்தைகள் கடத்தல், பெண்களுக்கு எதிரான வன்முறைகள், தேர்தல் சமயத்தில் ஆளுங்கட்சியினர் பகிரங்கமாக அரங்கேற்றும் அத்துமீறல் மற்றும் அராஜகங்கள், ஆளுநர் உரையில் கூறப்பட்டுள்ள விஷயத்திற்கு மாறான சித்திரத்தை மக்கள் மனதில் ஏற்படுத்தியுள்ளது.
கடந்த நான்கரை ஆண்டு காலத்தில் அறிவிக்கப்பட்ட பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்படவில்லை என்பது அனுபவம். தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ளன. தேர்தல் அறிவிக்கப்பட்டு, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துவிட்டால் அரசின் நலத்திட்டங்கள் எதையும் செயல்படுத்த முடியாது. இந்நிலையில் சில மாதங்களில் ஆளுநர் உரையில் கூறப்பட்டுள்ள பல்வேறு அறிவிப்புகளை அரசு எவ்வாறு நிறைவேற்றும் என்பது கேள்விக்குறியே?
கலைஞர் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் முதல்கட்டமாக 3 லட்சம் வீடுகள் கட்டித் தரப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சில நூறு பேருக்குத்தான் வீடுகள் கட்டித்தரப்பட்டுள்ளன. பலருக்கும் பயனாளிகளுக்கான அடையாள அட்டைதான் வழங்கப்பட்டுள்ளது. அந்த அட்டைகளையும், அரசின் வாக்குறுதியையும் மட்டும் நம்பி வெயிலில் இருந்தும், மழையிலிருந்தும் எப்படி பாதுகாத்துக் கொள்வது என்ற வித்தையை லட்சக்கணக்கான குடிசைவாசிகளுக்கு திமுக அரசுதான் சொல்லித்தர வேண்டும்.
இலங்கையில் போர் முடிந்தபிறகும், தமிழர்கள் இன்னலுக்கு உள்ளாகியுள்ளது குறித்து கவலைத் தெரிவித்துள்ள ஆளுநர் உரை, அவர்களது குறையைத் தீர்க்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசை மீண்டும் கேட்டுக் கொண்டுள்ளது. இலங்கைத் தமிழர்கள் தொடர்பாக மத்திய அரசுக்கு தமிழக முதல்வர் தொடர்ந்து கடிதங்கள் எழுதி வந்துள்ளார். இலங்கை அரசுடன் நல்லுறவை பேணுவதில் காட்டும் அக்கறையில் நூறில் ஒரு பகுதியைக் கூட பாதிக்கப்பட்டுள்ள தமிழர்கள் வாழ்வை புனரமைப்பதில் மத்திய அரசு காட்டவில்லை என்பதே உண்மை. இந்த நிலையில் மீண்டும் ஒரு வேண்டுகோள் என்பது என்ன பலனைத் தரும் என்று தெரியவில்லை. மொத்தத்தில் ஆளுநர் உரை, தேர்தலுக்கான முன்னோட்டமாக இருக்கலாம். ஆனால். விலைவாசி உள்ளிட்ட மக்களின் வாட்டத்திற்கு இதில் மருந்தில்லை.
*
0 comments:
Post a Comment