பச்சைப் பசேலென்ற
ஆடையணிந்த சிறுமி எழுப்பினாள் அதிகாலையில்
விடிந்தது வனங்களின் ஆண்டு...
கை கோத்துக் கொண்டு அவள் போட்ட
துள்ளல் நடையில்
எதிரே விரிந்தது அடர்ந்த கானகம்
உயிர்க்காற்றைக்
கேளாமல் கொடையளித்துக் கொண்டிருக்கும் மரங்களோடு
வாழ்வின் கீதத்தை வாசித்தபடி புள்ளினங்கள்...
உள்ளத்தின் கழிவுகளை நுரைபோக
ஒத்தித் துடைத்துவிட்ட நறுமண மலர்கள்
இதங்களின் இனிமையைத்
துய்த்துக் கொண்டிருந்த கணத்தில்
உலுக்கிய சிறுமி கை காட்டிய திசையில்...
விலங்குகளையும், மரங்களையும்
எண்ணி இலக்கம் போட்டு
களவு போய்க் கொண்டிருந்தது
காட்டுச் செல்வம்
தங்கக் கோடரிக்குப் பேராசைப் பட்ட
அப்பாவி மரவெட்டியைக் காட்டியே
நீதி போதனை சொல்கிற புத்தகங்களில்
காணமல் போகிறது
வனக் கொள்ளையர்களின் அநீதிக் கதைகள்
சுற்றுச் சூழலுக்கெதிரான வன்கொடுமைகள்...
கசிந்து பரவும் சூரியக் கதிர்கள்
பளபளக்க வைத்துக் கொண்டிருந்த
இயற்கையின் மை தொட்டுச்
சில்லென்ற தனது பிஞ்சு விரல்களால்
எழுதினாள் சிறுமி எனது உள்ளங்கையில்
எல்லா இடங்களையும்
எடுத்தாள்கிற அரசுகளிடம் -
லாபவெறிக் கூட்டத்திற்கு விலைபேசிவிடும் ஆட்சிகளிடம் -
அதன் தலை கனத்த அதிகார பீடங்களிடம் -
தங்களது மண்ணில் வாழ்ந்து மரிக்கக்
வனமக்களின் முகவரி அது....
காடுகளுடையதும்!
எஸ்.வி.வேணுகோபாலன்
0 comments:
Post a Comment