விடிய விடிய ராமன் கதை, விடிஞ்சதன் பின் ராமன் சீதைக்கு என்ன முறை என்று கேட்க அவருக்கு அவா சித்தப்பா என்று யாரோ சொன்னானாம் என்று என் தமிழ் டீச்சர் அடிக்கடி சொல்லுவா. அவ எப்ப அப்படி சொல்லுவா என்றா, மண்டோதரி போர்க்களத்தில புலம்பின பாடலுக்கு முதல் நாள் பொழிப்பு சொல்லித் தந்திட்டு அடுத்தா நாள் அதை கேட்கும் போது, நாங்கள் முகட்டைப் பார்த்து கொண்டு, இரட்டைப் பின்னல்களில் இருக்கும் ரிப்பன்களை மாறி மாறி அவிழ்த்துக் கட்டும் போது சொல்லுவா. அவ நினைக்கிற மாதிரி நாங்களொன்றும் சபையில "நெடு மரங்கள்" மாதிரி நிற்கிறதில்லை. எங்கட மூளைக்குள்ள தனியா ஒரு உலகம் சுத்திக் கொண்டிருக்கும் என்று சொன்னால் நீங்கள் மட்டும் இல்லை, டீச்சேரே நம்பமாட்டா. அதால நாங்கள் சொல்றதும் இல்லை. உண்மையான காரணம், பொழிப்பை சொல்லக் கேட்கும் போது மண்டோதரி பாவம், கண் கண்ட கணவனே போய்ச் சேர்ந்திட்டான், இனி அவட புலம்பல நாங்களும் பாடி ஏன் அவவுக்கு மனக்கஷ்டத்தை கொடுப்பான் என்ற நல்ல எண்ணத்தில நாம பாடமாக்காமல் போக, டீச்சர் அதைப் புரிஞ்சு கொள்ளாமல் நிற்க வைச்சு கேட்கும் போது நள வெண்பாவில் தூது போன அன்னத்தை என் நண்பிக்கு ஒரு நாளாவது வாடகைக்குப் பிடிச்சுக் கொடுத்து எப்படி அவள்ட காதலை சேர்த்து வைக்கிறது என்ற யோசனையில் இருப்பம். ஐடியா கண்டுபிடிச்சா போதுமா? இல்லை தானே, கொழும்பில் தாறுமாறா ஓடுற பேருந்துகள், ஆட்டோகள் தாண்டி அதை எப்படி பாதுகாப்பா அன்ன நடை நடக்க வைச்சு, ஆண்கள் மட்டும் படிக்கிற, பெண்கள் மட்டும் படிக்கிற, பாடசாலைகள் அருகருகே சந்திக்கும் சந்தியில் அந்தக் கூட்டத்திலேயே அவனை மட்டும் பிடிச்சு தூதை பாஸ் பண்றது. பிறகு அவனின் தூது இவளுக்கு வந்து சேர்ந்தது என்று எப்படி உறுதிப்படுத்திறது என்ற ரீதில இருக்கும். சப்பா, கண்ணைக் கட்டுதில்ல. அப்படித்தான், எனக்கும் இருக்கு மன்மதன் அன்பு படம் பார்த்து வந்ததில் இருந்து.
என்ன பெயரே ஒரு மாதிரியா இருக்கு என்ற இழுத்த அம்மா கூட, பிள்ளை பாவம் அந்தப் படத்தில வாற பாட்டைத் திருப்பித் திருப்பிக் கேட்குது. ஏற்கனவே பார்த்திட்டு வந்தவையும் நல்லா சிரிச்சம் என்று சொல்லுகினம், சரி போட்டு வருவம் என்று சொன்னதை நம்பி...நம்பி... கூட வந்தா. கனடாவில திரையரங்குகளுக்கு பஞ்சம் வந்துச்சோ இல்லையோ, தமிழ்ப் படம் அதுவும் தமிழர்கள் அதிகம் வசிக்கும் Scarborough , Toronto வில் படங்கள் போட்டால் குறித்த திரையரங்கு நிரம்பி வழியும். இடப்பற்றாக்குறை, மற்றும் விடுமுறை காலம் என்பதால் இருக்கும் என்றாலும், இது எந்திரன், தீராத விளையாட்டும் பிள்ளை, அங்காடித் தெரு, சிங்கம் போன்ற சில படங்களுக்கு நடக்கவில்லை. ஏனெனில் அவை திரையிடப்பட்ட திரையரங்குகள் வேறு. அவை பிரமாண்டமானவை. ஏற்கனவே படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பை இரு பாடல்கள் ஏற்றி விட்டிருந்தமையாலும், பார்த்தவர்கள் அநியாயத்துக்குப் புகழ்ந்ததாலும் ஏற்கனவே டிக்கெட் முன்பதிவு செய்து போனது மிகவும் நல்லதாகப் போய்விட்டது. என் கண்முன்னே டிக்கெட் இல்லை என்றும், முதல் வரிசைகள் மட்டுமே காலியாக இருக்கின்றன என்பதாலும் ஏமாற்றத்துடன் திரும்பிப் போனவர்களும், அடுத்த காட்சிக்கு முன்பதிவு செய்தவர்களும், இல்லை அடுத்த கிழமை வருவோம் என்று போனவர்களும் ஐம்பது நூறு பேர் இருப்பார்கள். இந்த அளவுகோல் இதுவரையில் இல்லை என்று பேசிக்கொண்டார்கள். அந்த நேரக் காட்சிக்கு வரிசையில் காத்திருந்தவர்கள் அளவுக்கு முதல் காட்சி முடித்து வெளிவந்தார்கள். நாம் படம் பார்த்துவிட்டு வரும்போது, அதே எண்ணிக்கையில் அடுத்த காட்சிக்காகக் காத்திருந்தார்கள் என்பதுவும் குறிப்பிடத்தக்கது. சரி, விசயத்துக்கு வருவோம்.
உள்ளே போய், சீட் இலக்கம் தேடி வசதியா உட்கார்ந்தால் திரையில ஒரு கப்பல். அம்மாவும் சும்மா இருக்காம, பார் என்ன வடிவாயிருக்கு, ஒருக்கா இப்படி ஒரு கப்பலில ஏறிப்பார்க்கனும் என்றா. கப்பல் சீன் வேற போய்க்கொண்டிருக்கே, முடியப்போகுதே, ஒழுங்காப் பார்த்துவைச்சு உழைச்சு அம்மாவை இப்படி ஒரு கப்பலில கூட்டிக் கொண்டு போகணும் என்ற நினைப்பில கப்பலையே பார்த்தா கப்பலே தான் கதையே. சே, கப்பலைப் பார்க்கவா வந்தம் என்று feel பண்ணிக் கொண்டிருந்தால் தொடங்குது கதை. கதை என்ன கதை என்று சொல்றதை விட, அதில கதை என்ற ஒன்று இருக்கா என்று கேட்டா புண்ணியமாப் போகும். நானும் எவ்வளவுதான் சமாளிக்கிறது. நடிகையாகிய திரிஷாவை கண்மூடித்தனமாகக் காதல் செய்கிறார் தொழிலதிபராகிய மாதவன். ஆனால் அவர் நடிகை என்பதால் ஏற்படும் சந்தேகம் வலுத்து சண்டையாகி திரிஷா ஓடும் மாதவனின் ஹமரி வாகனத்திலையும் தொடர்ந்து, கொடைக்கானலில் ஒரு வளைவில், சின்ன கார் ஒன்றை அடிச்சு, காரில் இருந்தவர்களுக்கு என்ன நடந்தது என்றே தெரியாமல் ஓடிவந்து இறங்கி நின்று "பிரிவோம், காதல் இருந்தால் காத்திரு" என்று திரிஷா சொல்வதில் தொடங்குகிறது கதை. ஓய்வாக இருக்கவும், மாதவனுடனான காதலை மறுபரிசீலனை செய்யவும் திரிஷா வந்து சேரும் இடம் சங்கீதாவிடம். சமீபத்தில் விவாகரத்து செய்து கொண்ட சங்கீதா தன் மகளுடனும், மகனுடனும் திரிஷாவுடன் இணைந்து கப்பலில் பயணிக்கத் தொடங்குகிறார். இதில் கமல் என்ன செய்கிறார் என்றால், திரிஷாவை வேவு பார்க்க மாதவனால் அனுப்பப்படுகிறார். வந்த சில நாட்களிலேயே திரிஷாவைப் பற்றி நற்செய்தியறிக்கையை கமல் வாசித்துவிட, ஏற்கனவே ஒப்புக்கொண்ட சம்பளப்பணத்தை வழங்க மாதவன் மறுத்துவிடுகிறார். புற்று நோயால் அவதிப்படும் நண்பரின் மருத்துவ செலவுகளுக்காக இந்தப் பணியில் நிலைத்து நிற்கவேண்டிய நிலையில், திரிஷாவுக்கு பொய்யாக காதலன் ஒருவனை உருவாக்கி கதையைக் கொண்டு செல்கிறார் கமல். இதை நம்பிய மாதவனும், திரிஷா ஏற்படுத்திய விபத்திலேயே தன் காதல் மனைவி இறந்தாள் என்கிற உண்மை தெரிய வரும் கமலும், இறுதியில் உண்மை தெரிந்து கமலின் நண்பருக்காக் கமலுக்கு உதவக் கிளம்பிய சங்கீதாவும் எப்படியெல்லாம் கதையை இழுத்து சென்றார்கள் என்பதும், கடைசியில் யார் யாரோடு சேர்ந்தார்கள் என்பதுவுமே கதை. இறுதியில் சுபம் தான். என்ன ஜோடி மட்டும் மாறுகிறது, அவ்வளவுதான்.
படத்தில் மூன்று பாடல்கள் என்பது நினைவில் நிற்கிறது. ஒன்று ஆரம்பத்தில் திரிஷாவும் சூர்யாவும் ஆடும் பாடல். மற்றது "நீல வானம்" என்று ஒன்று, அடுத்ததாக "தகிடுதத்தம் செய் தகிடுதத்தம்" என்ற பாடல். கமலின் கவிதையான "கண்ணோடு கண்ணைக் கலந்தால்" என்று ஆரம்பிப்பதையும் பின் வரும் "கலவி செய்கையில் காதில் பேசினால்" என்பதையுமே படத்தின் பிளஸ்களில் ஒன்றாக சொல்லலாம். "கலவி செய்கையில்" என்றாரம்பிப்பதாலேயோ இல்லை அது இந்து மக்களின் நம்பிக்கைக்கு வேட்டு வைப்பதாக முடிவதாலேயோ என்னவோ இந்தியாவில் அந்தக் காட்சி திரையிடப்படுவதற்கு தடை பிறப்பிக்கப்பட்டதாய்க் கேள்வி. ஒரு பூங்காவில் கமலும் திரிஷாவும் நடந்து கொண்டே சொல்லிக் கொள்வதை போல அமைக்கப்பட்ட காட்சியில் எந்தவித "அநாகரிகங்களும்" நிகழ்ந்துவிடவில்லை என்பது என் எண்ணம். உண்மையில் கவிதை கொண்ட கருப்பொருளோ, அது கொண்ட வார்த்தைகளோ விமர்சனத்துக்குட்படுத்தப்பட வேண்டுமா எனபதே கேள்விக்குரியது. இதே கமலின் வசூல்ராஜா படத்தில் வரும் "சிரிச்சு சிரிச்சு வந்தா சீனா தான டேய்" என்ற பாடலில் வரும் வார்த்தைகளுக்கோ, இரட்டை அர்த்தங்களுக்கோ சற்றும் சமனில்லை இந்தக் கவிதை. அந்தப் பாடலையும், அதே வகையறாப் பாடல்களையும் பொது மேடைகளில், கூட்டம் போட்டு, நாலு நீதிபதிகள் வைத்து, குழந்தைகள் பாட அனுமதிக்கையில் இந்தக் கவிதை என்ன பாதிப்பை அதே குழந்தைகளிடம் கொண்டு சேர்க்கும் என்பதும் புரியவில்லை. ஆனால் என் முன்னே அமர்ந்திருந்த தம்பதிகள் இருவரும் தமக்கு நடுவே அமர்ந்திருந்த பெண் குழந்தையின் தலைக்கு மேலாய் தங்களுக்குள் பார்வைப் பரிமாற்றம் நிகழ்த்தியதைப் பார்க்க முடிந்தது.
ஆனால் எனக்கு ஒன்று மட்டும் புரியவேயில்லை. ஆரம்பக் காட்சியிலும், இறுதிக்காட்சியிலும் வரும் ஈழத் தமிழன் ஒருவரின் வசன அமைப்பு. பரீசில ஈழத்தமிழன் டாக்ஸி ஒட்டிறதில எந்த சந்தேகமும் இல்லை. அவர்ட கார்ல திரிஷா ஏறுவதிலும் எந்தப் பிரச்சினையும் இல்லை. அதை விட அவர் திரிஷாவின் பரம விசிறியாக இருப்பதிலும் எனக்கு எந்தக் குழப்பங்களும் இல்லை. ஒரு காட்சியில் ஈழத்தமிழர் தான் திரிஷாவின் "செருப்பாகக்" கூட நடிக்கத் தயாராக இருக்கிறதாக சொல்வார். இறுதிக் காட்சியில் "செருப்பாகக் கூட என்று தான் சொன்னேன், செருப்புடன் இல்லை" என்று சொல்வார். இடையில் அவரது மனைவி கடவுளிடம் தன் கணவருக்கு திரிஷாவுடன் நடிக்க வாய்ப்புக் கிடைக்கவேண்டும் என்று பிரார்த்திப்பதாகவும் ஒரு காட்சி. "இந்தக் காட்சிகளில் திரிஷாவுக்குப் பதில் அனுஷ்கா வந்திருந்தா இப்படி சொல்றதில சரி" என்று ஒரு ஈழத்தமிழ் அனுஷ்கா ரசிகன் சொன்னாலும் சொல்லலாம். குறித்த நடிகரின் படத்தை எதிர்க்க வெளிக்கிட்டு அவர்களுக்கு விளம்பரம் தேடிக்கொடுக்கும் வாய்ப்பை வழங்குபவர்கள் நாங்கள். அதைவிட, வெளியில் ஆயிரம் பேசிவிட்டு இரவோடு இரவா, முதல் காட்சியில் படத்தைக் களவாகப் பார்த்துவிட்டும் வருகிற சந்தர்ப்பவாதிகளும் இருக்கிறார்கள்.
ஆனால் கமலுக்கு ஈழத் தமிழர்களை தன் படத்தில் நடிக்கவைக்கும் போது சரி, தானே ஈழத் தமிழனாய் நடித்த (தெனாலி) படத்திலும் சரி, ஏன் கொஞ்சமாவது இயல்பாய் அவர்களைக் காட்ட முடிகிறதில்லை என்ற பாமரனுக்குக் கூடத் தோன்றும் சராசரிக் கேள்வி எழுவதைத் தடுக்க முடியவில்லை. தெனாலி படத்தைப் பார்த்து வயிறு குலுங்க சிரித்த போதும், பயந்தாங்கொள்ளியாய், ஈழத் தமிழின் சாயலில் தமிழில் ஏதோ ஒரு மொழியில் நடித்த அந்த கதாபாத்திரத்தையும், அந்தக் கதாபாத்திரம் அப்படி பயம் மிகுந்தவனாய் இருப்பதற்கு காரணமாகச் சொல்லப்படும் போரால் ஏற்பட்ட மனப் பாதிப்பு (அசட்டுத் தனமான காரணங்கள், பழிவாங்கல்கள் திரைப்படங்களில் நடக்கும் போது இதைக் கொஞ்சமாவது ஏற்கலாம்) என்பதையும் ஏற்க மறுத்து மனதுள் நெருடி வழிந்த விசனம் பின்னாட்களில் மறக்கடிக்கப்பட்டிருந்தது. இருந்தாலும் தெனாலியில் கமல் காட்டிய ஈழத் தமிழனுக்கும், இப்போது காட்டி இருக்கும் தமிழனுக்கும் அதிக வித்தியாங்கள் இல்லை. என்ன, இதில் அந்தக் கதா பாத்திரங்களில் ஈழத் தமிழர்கள் நடித்திருக்கிறார்கள், அவ்வளவே. எனது விசனம் எல்லாம், கமல் ஈழத்தமிழர்களை அதிசிறப்பாகக் காட்டத் தேவையில்லை. ஏன் காட்டவே தேவையில்லை. மன்மதன் அம்பு குறித்து வாசித்த பதிவுகளில் ஒன்று இப்படி சொல்லியது, "ஈழத்தமிழர்கள் ஏற்கனவே நொந்து போயிருக்கிறார்கள், அதில் கமல் இப்படி ஒரு காட்சியை வைத்து அவர்களை இன்னமும் காயப்படுத்தியிருக்கிறார்". போர் காயப்படுத்தியதைப் போலவோ, இல்லைப் பிரிவுகள் காயப்படுத்தியது போலவோ ஈழத் தமிழர்களை எதுவும் காயப்படுத்திவிடாது. இந்தியத் திரைகளில் ஓடும் படங்களில் இதுவரை வந்த ஒரு படம் கூட சொல்லாத அளவுக்கு வலிகளும், கொடூர அனுபவங்களும், சம்பவங்களும் எங்களுள்ளே புதைந்து கிடக்கின்றன. அவற்றில் ஒரு சம்பவத்தை திரைப்படமாக, திரைக்கதையின் கனத்துடன் தர மூன்று மணித்தியாலம் என்ன, மூன்று நிமிடங்கள் போதும். இதில் கமல் ஒன்றும் செய்து விடத்தேவையில்லை. ஒரு நடிகனாய், இயக்குனராய், கதாசிரியராய் ஆக ஒரு கலைஞனாய் கமலைப் பார்க்கும் போது அவருக்கு திரையுலகம் வழங்கும் இடத்தைத் தன் திறமையால் எட்டிப் பிடித்தவர். ரஜினி போல கை அசைவுகளில் கார் திறக்கும் காட்சிகளோ, சுருட்டை அந்தரத்தில் பறக்கவிட்டு பற்றவைக்கும் சாகசங்களோ வைத்து "படம்" காட்டி இந்த இடத்தை எட்டாமல், தன் வித்தியாச முயற்சிகளாலும் திரைக்கதை அமைப்பிலும், இயல்பாய் நடிப்பதாலும் (இப்படி பல காரணங்கள்) அடைந்தவர். அந்த வகையில் அவர் மீது ஈழத் தமிழர்கள் வைத்திருக்கும் மரியாதை இப்படியெல்லாம் சாணி பூசப்பட்டு கேவலப்படுத்தப்படுகிறது என்பது வருத்தத்துக்குரியதே.
பொதுவாக சினிமாப்படங்கள் குறித்து எந்தவித கருத்துக்களையும், பதிவுகளையும் எழுதுவதில் எனக்கு ஆர்வம் இருந்ததில்லை. "அங்காடித் தெரு" படம் பார்த்துவிட்டு கண்ணீர் தாளை நனைக்க எழுதிய குறிப்புத்தான் நினைவில் நிற்கிறது. அந்தப் படம் ஒவ்வொரு விருதுகளையும் பெறுவதைப் பார்க்கும் போது கலைஞர்களின் திறமைகளுக்கு மரியாதையை எழுத்தில் செய்வதிலும் ஒரு சந்தோசம் இருக்கவே செய்கிறது கூடவே ஒரு திருப்தியும். ஏன் இந்தப் படத்துக்கு மட்டும் இப்படி ஒரு பதிவு என்றால், இந்தப் படம் குறித்த எதிர்பார்ப்பு கமல் படமென்பதாலா என்றால், ஆமாம் என்பதும் பதிலாக அமையும். ஏனென்றால் இன்னொரு "மகாநதியை" ரஜினியிடமோ விஜயிடமோ ஏன் கமலிடமே எதிர்பார்க்க முடியாது. ஆனால் இப்படியான சில முயற்சிகளை கமலிடம் எதிர்பார்ப்பதில் நான் எந்தத் தப்பும் செய்துவிடவில்லை. சமீபத்தில் வந்த, வந்துகொண்டிருக்கின்ற சிறு பட்ஜெட் படங்கள் அந்த இயக்குனர்கள் மீது ஏற்படுத்திப் போகும் எதிர்பார்ப்புக்கள் குறிப்பிடத்தக்கவை. இப்படி இருக்க திரைத்துறையில் எதிர்பார்ப்புக்களை எகிறவைக்கும் கமலிடமிருந்து இப்படி ஒன்று என்பதை கொஞ்சம் கசப்பாக இருந்தாலும் நம்ப வேண்டி இருக்கிறது.
இராவணன் பார்த்துவிட்டு வந்து மணிரத்தினம் இப்படி ஒரு படம் பண்ணத் தேவையில்லை. இதை செய்ய நிறைய பேர் இருக்கிறார்கள் என்று எப்படித் தோன்றியதோ, எந்திரன் பார்த்துவிட்டு சிலநாட்களில் "DVD" யில் மைனா பார்க்கும் போது அந்த நூற்றைம்பது கோடியையும் பிரிச்சுக் கொடுங்கப்பா இப்படி ஐந்து படமாவது வரட்டும் என்று எப்படி வாய்விட்டு சொல்லத் தோன்றியதோ அப்படியே இந்தப் படம் பார்த்து விட்டு வெளி வரும்போது கமல் ஒரு நாடகம் போட இவ்வளவு செலவளித்திருக்கத் தேவையில்லை என்று தோன்றியது. பம்மல் கே சம்பந்தம், பஞ்ச தந்திரம் வரிசையில் இன்னொரு மன்மதன் அன்பு. படம் பார்க்கும் போது பாடசாலை நினைவு வந்தது. உயர்தரத்தில் விஞ்ஞான தினத்தில் ஒரு நாடகம் போட்டோம். அதில் இப்போதிருக்கும் தொலைக்காட்ச்சி, தொலைபேசி, அணுகுண்டு போன்றவற்றைக் கண்டுபிடித்த இயற்கை எய்திய விஞ்ஞானிகள் சிவாஜியுடன் சேர்ந்து பூலோகத்துக்கு வருகிறார்கள் தங்கள் கண்டுபிடிப்புக்கள் எப்படியெல்லாம் உபயோகிக்கப்படுகிறது என்று தெரிந்துகொள்ள. வந்த இடத்தில் தங்கள் கண்டுபிடிப்புக்கள் நன்மைகளுக்கு மேலாகவே தீமைகள் செய்கின்றன என்ற மனவருத்தத்தில் மீண்டும் பரலோகத்துக்கே திருப்பி போவார்கள். இதில் சிவாஜியை நடுவராக, வழி காட்டுபவராக படைத்திருந்தோம். காட்சி இறுதியில் சிவாஜியிடம் ஒரு போலீஸ்காரர் "சீக்கிரம் வாங்கோ, பத்மினி வந்திருக்கிறா(பத்மினி அந்தக் காலப்பகுதியில் மறைந்திருந்தார்), உங்களை நலம்தானா கேட்கிறா" என்பது போன்ற உரையாடலை நிகழ்த்துவதாக யோசித்துவிட்டு, பாடசாலையில் நடிகர்களைப்பற்றிய உரையாடலே தப்பு, இதில் பத்மினி வேறா என்று அதை வேறாக மாற்றி அமைத்தோம். இந்த மேடை நாடகத்திற்கும் உங்கள் படத்துக்கும் ஒரு வித்தியாசத்தையும் நான் பார்க்கவில்லை கமல். ஒரு பெரிய கப்பல் செட்டும், பத்து நடிகர்களும் இருந்திருந்தால் அரங்கம் நிரம்ப நிரம்ப ஒரு நாளில் பத்து ஷோ காட்டியிருக்கலாம். என்ன நாங்களாக இருந்தால் ஈழத்தமிழரின் காட்சியை நீக்கியிருப்போம் இல்லை அதை மறுபரிசீலனை செய்து மாற்றியிருப்போம். நீங்கள் அந்தக் கவிதைக் காட்சியில் உங்கள் தயாரிப்பென்றால் அந்தக் காட்சி இடம்பெறும் என்று உங்களை சமாதானம் செய்து கொள்ளவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறீர்கள். என்ன இருந்தாலும் டீல் டீல் தானே!
By the way, Can I have my money back?
- மாயூ மனோ
படிக்கப் பொறுமை தேவைப்படுகிறது. பிழைகள் அதிகம் உள்ளது. எழுத்துப் பிழைகளைத் திருத்தி வெளியிட்டிருக்கலாமே, அப்புறம் தமிழ் டீச்சரை அவ, இவ என ஏகத்தில் அழைப்பது சரியா?
ReplyDeleteஉங்கள் வலி எங்களுக்கு புரியாது.புரியவிடவில்லை அரசியல் வியாபாரிகள்.கமல் அற்ப்புத கலைஞன்.அவன் புரிந்த ஈழத்தை அவன் படைப்பில் தொட்டு காட்டத்தான் முடியும்.மீறி ஒரு அடி எடுத்தால் எப்படி தர்ம அடிவிழும் என்கிற நிஜம் புரிந்த காருண்யன்.
ReplyDeleteகமல் ரசிகனாக படத்திற்கு போன நான் தலை குனிந்த்து திரும்பினேன். ஈழதமிழர்களை மேலும் துன்பபடுத்துவது தேவையா கமல்
ReplyDelete