__________________________________
அரை நூற்றாண்டு காலமாக சினிமாவையும் கதாநாயகர்களையும் கதா நாயகிகளையும் கோயில்கட்டி கொண்டாடத்தெரிந்த நமக்கு திரைப்பட விழாக்களை கொண்டாடுகிற மனநிலைமட்டும் இதுவரை வாய்க்கவில்லையோ என்று தோன்றுகிறது.
டிசம்பர் சீசன் என்பது சென்னையின் அடையாளங்களில் ஒன்று. எங்கெங்கோ கார்ப்பரேட் கம்பெனிகளில் லட்சங்களுக்கு தலையாட்டிக்கொண்டிருக்கும் இளம் முதிய மாமிகள்..வீணையும் கையுமாக கர்னாடக இசைச்சேவை புரிய வந்து குவிந்துவிடுவார்கள். வருஷம் முழுவதும் காலியாக காற்று வாங்கிக்கொண்டிருக்கும் சபாக்களும்..சபா காரியதரிசிகளும் ரொம்ப பிசியாகிவிடுவார்கள்
இதையெல்லாம் மீறி...தகதிமிதா..தாளம் போட்டுவ்ரும் வாய்ப்பாட்டும் புல்லாங்குழலும் வயலினுமாக தலைநகரத்து மாலை நேரங்கள் மயங்கிக்கிடக்கும்.
இதற்கு சற்றும் குறையாதவகையில் டிசம்பர் இறுதியிலோ ஜனவரி துவக்கத்திலோ அறிவின் வாசல்களை திறந்து வைக்கும் சென்னை புத்தகக்கண்காட்சியும் சமீபபல ஆண்டுகளாக நடந்துவருகிறது. அந்த நாட்களில் கண்காட்சியில் கூடும் கூட்டமும் கோடிக்கணக்கான ரூபாய்க்கு புத்தகங்கள் விற்றுத் தீர்வதும் வாசகப்பரப்பின் நம்பிக்கையை அதிகரிக்கச் செய்கிறது.
இசையோடும் புத்தகங்களோடும்..கழிந்த இந்த மாதங்களை சமீப ஆண்டுகளாக அதிரவைத்துவிட்டார்கள். நமது மன்ணின் கலைஞர்கள்.இவர்களின் சங்கமம் நிகழ்ச்சிக்கு என ஒரு அரசியல் இருக்கிறது. (அதை பிறகு பேசலாம்)ஆனால்..தமிழகத்தின் புகழ்மிக்க கிராமியக் கலைஞர்கள் த்ங்களின்புழுதி படிந்த கால்களால் சென்னை தெருக்களின் அழுக்குகளை திசைகளதிர துடைத்துவிட்டார்கள். இவர்களின் உடுக்கைச்சத்தமும் உறுமி மேளமும் பெரு நகர வாழ்வின்மீதான சலிப்பை தற்காலிகமாகவேணும் தீர்த்துவைத்ததை மறக்கமாட்டார்கள்.
ஆனால் இந்த ஆண்டு இந்த சங்கமத்திற்கும் உலைவைத்துவிட்டார்கள். இதுவரைக்கும் அதற்கான ஏற்பாடுகள் துவங்கவேயில்லை. ஊழலில் சுருட்டியதை தங்களுக்குள் பங்கு போட்டுக்கவே நேரம் போதவில்லையாம். இதில் சங்கமமாவது..மண்ணாவது கலையாவது என்று விட்டுவிட்டார்கள் போலிருக்கிறது.
இந்த கவலையை தற்காலிகமாக தீர்த்துவைப்பதுபோல துவங்க இருக்கிறது சென்னை சர்வதேச திரைப்பட விழா. இதுவும் 7 ஆண்டுகளாக சென்னையில் நடந்துகொண்டு இருப்பதுதான். ஆனால் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு இந்த முறை சற்று கூடுதலான கவனத்தை பெற்றுள்ளது.
அரை நூற்றாண்டு காலமாக சினிமாவையும் கதாநாயகர்களையும் கதா நாயகிகளையும் கோயில்கட்டி கொண்டாடத்தெரிந்த நமக்கு திரைப்பட விழாக்களை கொண்டாடுகிற மனநிலைமட்டும் இதுவரை வாய்க்கவில்லையோ என்று தோன்றுகிறது.
பொழுதுபோக்கைத்தவிர சினிமாவில் கொண்டாட என்ன இருக்கிறது என்று நமது சமூகம் நம்பிக்கொண்டிருப்பதுதான் இந்த மனநிலைக்கு காரணமோ என்றுகூட நினைக்கத் தோன்றுகிறது. அதற்கேற்றாற்போலத்தான் இங்கு வெளியாகிற படங்களின் லட்சணமும் இருக்கிறது.
நாலு பாட்டு.. ரெண்டு பைட்டு... ஒருஅயிட்டம் ஸாங்... கொஞ்சம் செண்டிமெண்ட்.. .2 பாட்டில் கிளிசரின்.. ஒரு காமெடி ட்ராக்.. என எல்லாவற்றையும் குலுக்கிப்போட்டு மசாலாக்கலவையாக வரும் இந்த கண்றாவிகளைத்தான்... நாம் சினிமா என்று பார்த்து தொலைக்க வேண்டியிருக்கிறது. அதனால்தான் கொண்டாட ஒன்றுமில்லையென ஒதுங்கிப் போகிறோம் என நினைக்கத் தோன்றுகிறது.
ஆனால் இந்த நினைப்பை சமீபகாலமாக வந்துகொண்டிருக்கிற சில படங்கள் மாற்றிப்போட வைக்கின்றன. சில கவனிப்புக்குரிய படங்களின் வருகை நம்பிக்கையளிப்பதாக இருக்கிறது. வெயில், பசங்க, வெண்ணிலா கபடிக்குழு, மொழி, பேராண்மை, அங்காடித் தெரு, பூ, பெரியார், அம்பேத்கர், காதல், வம்சம், மைனா, இப்போது வந்திருக்கிற நந்தலாலா என பல படங்கள் அந்த நம்பிக்கைக்கு வலு சேர்க்கின்றன.
அதையும் தாண்டி தினம்தினம் வெளியாகிக்கொண்டிருக்கிற உலக சினிமாக்களை பார்ப்பதன் மூலமும்..அதை படிப்பதன் மூலமும்தான் நமது சினிமா ரசனையில் ஏதேனும் மாற்றத்தை கொண்டுவரமுடியும். சினிமா ரசனையில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தாமல் எத்தனை நல்ல படங்களை எடுத்தும் என்ன பலன் கிடைக்கும். அம்பேத்காருக்கு நிகழ்ந்ததைப் போலத்தான் காலியான அரங்குகளில்தான் படம் ஓடிக்கொண்டிருக்கும். அதைப்பற்றிய கவலையே இல்லாமல் விருதகிரிக்கு பேனர் கட்டிக்கொண்டும் இருப்பார்கள்.
அந்த ரசனையை வளர்த்துக்கொள்ளும் வாய்ப்பாக அமைந்திருக்கிறது சென்னை 8ஆவது சர்வதேச திரைப்பட விழா. மும்பை, டெல்லி, திருவனந்தபுரம், கோவா போன்ற பெரு நகரங்களில் நடக்கிற இதுபோன்ற திரைப்பட விழாக்களுக்கு கிடைக்கிற மீடியா வெளிச்சம் சென்னை திரைப்பட விழாவிற்கு கிடைப்பதில்லை என்ற போதிலும் இந்த முறை சற்று கூடுதலான வெளிச்சம் இந்த விழாவிற்கு கிடைத்திருக்கிறது எனலாம்.
இந்தோ சினி அப்ரிசியேஷன் பவுண்டேஷன் என்ற அமைப்பு இந்த விழாவை நடத்துகிறது. தமிழக அரசு இந்த விழாவிற்காக 25 லட்ச ரூபாய் வழங்கியிருக்கிறது. இம்மாதம்15ஆம் தேதி தோடங்கி 23ஆம் தேதிவரை விழா நடக்கிறது. உட்லண்ட்ஸ், உட்லண்ட்ஸ் சிம்பொனி, பிலிம் சேம்பர், ஐநாக்ஸ் ஆகிய தியேட்டர்களில் படங்கள் திரையிடப்படுகின்றன. தினமும் 4 படங்கள் பார்க்கலாம்.
வெளி நாட்டு படங்கள் பிரிவில் 125 படங்களும்.. இந்தியன் பனோரமா பிரிவில் 14 படங்களும் தமிழ்படங்கள் பிரிவில் 12 படங்களும் திரையிடப்படுகின்றன. தமிழில் இருந்து ஓரிரவு, பேராண்மை, அங்காடித்தெரு, களவாணி, ஆயிரத்தில் ஒருவன், மதராசப்பட்டினம், கதை, திட்டக்குடி, இரும்புக்கோட்டை முரட்டுச்சிங்கம், விண்ணைத்தாண்டி வருவாயா மற்றும் நந்தலாலா ஆகிய படங்கள் திரையிடப்படுகின்றன.
'சோல்கிச்சன்’ என்ற ஜெர்மனி படத்துடன் துவங்கும் விழா ’பியூட்டிபுல்’ என்ற ஸ்பெயின் மொழி படத்துடன் நிறைவடைகிறது. துருக்கி, கனடா, நெதர்லாந்து நாடுகளை மையப்படுத்தி படங்கள் திரையிடப்படுகின்றன.
சிறந்த படம், சிறந்த இயக்குனர், சிறந்த தமிழ்படம் உட்பட 5 விருதுகள் வழங்கப்படவுள்ளன. திரைப்படவிழாவிற்கு நுழைவுக்கட்டணம் 500 ரூபாய். மீடியா மாணவர்களுக்கு 300 ரூபாய். 44 நாடுகளின் படங்கள் திரையிடப்படுகின்றன.
கைக்கெட்டும் தூரத்தில் நடக்கிற விழா. வாய்ப்புள்ளவர்கள் இதை தவற விடாதீர்கள்.இந்த படங்களையெல்லாம் போய் பார்த்தால்தான்.. நம்ம ஊர்க்காரகள் எந்த லட்சணத்தில் படம் எடுக்கிறார்கள் என்பதும் சினிமா என்கிற அற்புதத்தை எப்படியெல்லாம் வீணடித்துக்கொண்டிருக்கிறார்கள் என்பதும் புரியவரும்.
எஸ்.கருணா
0 comments:
Post a Comment