கொஞ்ச காலத்துக்கு முன்பு ஒரு பிரபல தொலைக்காட்சியில், ‘வேலை தேடி அலைந்தது அந்தக்காலம்! வேலை வீடு தேடி வருவது இந்தக்காலம்’ என்ற விளம்பரம் தொடர்ந்து ஒளிபரப்பப்பட்டு வந்தது. பிரபல நிறுவனங்கள் தங்களுக்கு தேவையான ஊழியர்களை தேர்வு செய்ய மாவட்டந்தோறும் வேலைச் சந்தைகளை campus interviews ans job fairs நடத்தியதற்கான விளம்பரமே இது!
இத்தகைய வேலைச் சந்தைகளில் எந்த அளவு வேலை கிடைத்தது என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயமே! காலப்போக்கில் பல கல்லூரிகள் இத்தகைய வேலைச் சந்தைகளை நடத்தி அதன் மூலம் நல்ல வருவாயை பெருக்கிக்கொண்டதுதான் மிச்சம்! சமீபத்தில் நாமக்கல் மாவட்டத்தில் இத்தகைய வேலைச் சந்தை ஒரு கல்லூரி நிர்வாகத்தால் நடத்தப்பட்டு, அது வெறும் போலித்தனமானது என்பது தெரியவர, மாணவர்கள் கொதித்தெழுந்து அந்தக்கல்லூரி வளாகத்தையே ஒரு போர்க்களமாக மாற்றிக்காட்டினர்.
உலகம் ஒரு கிராமம் ஆகிவிட்டது என்று உலகமயத்தை வானளாவ புகழ் பவர்கள், உலகமயம், தாராளமயம், தனியார் மயம் என்ற கொள்கைகள் வேலை வாய்ப்புகளை சிதைத்து வருவதை மறைக்கப்பார்க்கின்றனர். வேலை வாய்ப்பு இல்லாத வளர்ச்சி மட்டுமல்ல, உள்ள வேலைவாய்ப்புகளையும் பறிக்கும் வளர்ச்சியாக ‘மயங்களின்’ வளர்ச்சி உள்ளது. பன்னாட்டு நிறுவனங்கள் தொலைத்தொடர்புத்துறையில் ஏற்படுத்தியுள்ள வேலைவாய்ப்புகளை மிகைப்படுத்திக்காட்டுகின்றனர். தற்போதைய பொருளாதார வீழ்ச்சி இதனையும் அம்பலப்படுத்திவிட்டது. இத்தகைய துறைகளில் பணியாற்றுபவர்கள் ஆயிரக்கணக்கில் பணி இழந்து நாடு திரும்பி வருகின்றனர். கடந்த ஆண்டு (2009) நாடாளுமன்றத்தில் வெளிநாடு வாழ் இந்தியர் நலத்துறை அமைச்சர் வயலார் ரவி தெரிவித்த தகவலின் அடிப்படையில், வெளிநாட்டு நிறுவனங்கள் விசாவை புதுப்பிக்காமல் விட்டு விட்டதால் 20 ஆயிரம் இந்தி யர்கள் வேலை இழந்து நாடு திரும்பியுள்ளனர் என்று தெரியவருகிறது. இன்று லட்சக்கணக்கானோர் வேலையிழப்பையும், ஊதியக் குறைப்பையும் சந்தித்து வருகின்றனர்.
இந்த ஆண்டு (2010) செப்டம்பர் மாதத்தில் நார்வேயில் நடைபெற்ற சர்வதேச தொழிலாளர் அமைப்பின் (ஐஎல்ஓ) கூட்டு மாநாட்டில், மோசமாகி வரும் இன்றைய வேலையின்மை மற்றும் வறுமை குறித்து பரிசீலிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மாநாட்டில் வைக்கப்பட்ட அறிக்கையில், உலகம் முழுவதும் 2010-ம் ஆண்டு இதுவரை மட்டும் 210 மில்லியன் தொழிலாளர்கள் வேலையின்றி உள்ளனர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், கடந்த மூன்று ஆண்டுகளில் வேலையின்மை என்பது 34 மில்லியன் உயர்ந்துள்ளது எனவும், உலகில் 80 சதவிகித மக்கள் எவ்வித சமூக நலத்திட்டங்களையும் கொண்டிருக்கவில்லை என்றும், கிட்டத்தட்ட 12 பில்லியன் மக்கள் நாள் ஒன்றிற்கு 2 டாலருக்கும் குறைவாகவே ஊதியம் பெற்று வருகின்றனர் என்றும், அமெரிக்காவில் வேலையின்மை என்பது 7.5 மில்லி யனிலிருந்து 15 மில்லியனுக்கு மேல் உயர்ந்துவிட்டது. ஐரோப்பா முழுவதும் 23 மில்லியனுக்கு மேல் வேலையில்லாமல் உள்ளனர். இது 2007-ல் இருந்ததை விட 36 சதவிகிதம் அதிகமாகும் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அம்மாநாட்டில் உரையாற்றிய, சர்வ தேச தொழிலாளர் அமைப்பின், வேலைகள் மற்றும் சமூக விவகாரங்கள் குறித்த ஐரோப்பிய ஆணையாளரான லாஸ்லோ ஆண்டர் குறிப்பிடுகையில், 2010 வேலையின்மையை பொறுத்தவரை 2010-ம் ஆண்டு ஒரு மோசமான ஆண்டு என்றும் இதை சரியாக எதிர்கொள்ளவில்லை என்றால் 2011-ம் ஆண்டு மிக மோசமான ஆண்டாக மாறிவிடும் என எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ஐஎம்எப் தலைவர் டொமினிக் ஸ்ட்ராஸ் கான், ‘உலக நிதி நெருக்கடி என்பது, வேலையின்மை என்ற வீணடைந்த பூமியை கொண்டுவந்துள்ளது’ என்றும் ஒரு வேலை பெறுவது என்பது ‘வாழ்வா சாவா’ என்ற பிரச்சனையாக மாறிவிட்டது என்றும், உயரும் வேலையின்மை வன்முறை மோதல்களுக்கு வழிவகுக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.
இம்மாநாட்டின் முக்கிய பேச்சாளர்களான ஸ்பெயினின் பிரதமர் ஜோஸ் லூயி ரோட்ரிக்ஸ் ஜாபடெரோ, கிரேக்க அமைச்சர் ஜோர்ஜ் பாபபாண்ட்ரூ, வேலை யின்மை இப்படியே நீடித்தால் ஐரோப்பா முழுவதும் உள்ள அரசாங்கங்கள் மீது மக்கள் நம்பிக்கை இழந்து விடுவார்கள் என்றும் எச்சரித்துள்ளனர்.
இதன் விளைவாகவே சமீபத்தில் நடைபெற்ற பிரிட்டன், ஆஸ்திரேலியா மற்றும் சுவீடன் நாட்டு தேர்தல்களில் ஆளுங்கட்சிகளுக்கு பின்னடைவு ஏற்பட்டு, அங்கு தொங்கும் நாடாளுமன்றங்கள் அமைந்துள்ளன. அமெரிக்காவில் நவம்பரில் நடைபெற்ற தேர்தல்களில் ஓபாமாவின் ஜனநாயகக் கட்சி பெரும் தோல்வியை சந்தித்துள்ளது. அமெரிக்காவில் கடந்த ஏழு மாதங்களில் மட்டும் 90 வங்கிகள் மூடப்பட்டுள்ளன. சராசரியாக ஒரு மாதத்திற்கு 13 வங்கிகள் அங்கு மூடப்பட்டு வருகின்றன. ஊக்குவிப்பு சலுகைகள் அறிவிக்கப்பட்ட போதும் நிதி ஆதாரமின்றி வங்கிகள் மூடப்பட்டு வருகின்றன. அங்கு கடந்த ஓராண்டாக நிலவி வரும் பொருளாதார மந்த நிலைமை உலகம் முழுவதும் மந்த நிலையை ஏற்படுத்தியுள்ளது.
சர்வதேச தொழிலாளர் அமைப்பின் மாநாட்டு ஆவணம், வேலை இழப்பு களால் பாதிக்கப்பட்டுள்ள இளைஞர்கள் அரசியல் திறனில் தீவிரமடைந்திருப்பதை சுட்டிக் காட்டுகிறது. உலகெங்கிலும் வேலை கிடைக்காத இளைஞர்களின் எண்ணிக்கை 6.6 மில்லியன் ஆகும். வேலையின்மை என்பது ஜனநாயகத்தின் திறன் குறித்து கேள்வி எழுப்பி யிருப்பதாகவும், இது ஒரு மாற்றுத் தலைமையை நாடிச் செல்லும் என்றும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இம்மாநாட்டில் கலந்துகொண்ட முதலாளித்துவ நாடுகளின் தலைவர்கள், வேலையின்மை குறித்து கவலைப்பட்டவர்களாக காட்டிக்கொண்டாலும், முதலாளித்துவம் அல்லது அதன் அரசியல் பிரதிநிதிகள் தொழிலாளர் வர்க்கத்தினருக்கு எந்தவித தீர்வுகளையும் அளிக்க இயலாத நிலைமையை மாநாட்டு விவாதத்தில் காண முடிந்தது. இச்சூழலில் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர் களிடையே புரட்சிகர உணர்வுகள் எழுச்சி பெறுவது முதலாளித்துவ சக்திகளுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
மாநாட்டின் இறுதி அறிக்கையானது, “வேலைகளை தோற்றுவிக்கும் வளர்ச்சி” “வறுமையில் வாடும் மக்களுக்கு குறைந்தபட்சம் சமூகப் பாதுகாப்பு நிலை” ஆகியவற்றிற்கு உழைப்பதாக உறுதிமொழி கூறியுள்ளது.
இந்த மாநாட்டின் வாயிலாக முதலாளித்துவம் தனக்கு ஏற்பட்டுள்ள உலகளவிலான நெருக்கடியை உணர்ந்து கொண்டுள்ளது. அது தொழிலாளி வர்க்கத்தின் அடிப்படை உரிமைகளை பறித்திட திட்டமிட்டுள்ளது. தொழிலாளி வர்க்கம் இதை புரிந்துகொண்டு எதிர் தாக்குதலுக்கு தயாராவதே இன்று தலையாயக் கடமையாக உள்ளது.
-க.ராஜ்குமார்
(நன்றி: தீக்கதிர்)
''''''''மேலும், கடந்த மூன்று ஆண்டுகளில் வேலையின்மை என்பது 34 மில்லியன் உயர்ந்துள்ளது எனவும், உலகில் 80 சதவிகித மக்கள் எவ்வித சமூக நலத்திட்டங்களையும் கொண்டிருக்கவில்லை என்றும், கிட்டத்தட்ட 12 பில்லியன் மக்கள் நாள் ஒன்றிற்கு 2 டாலருக்கும் குறைவாகவே ஊதியம் பெற்று வருகின்றனர் என்றும், அமெரிக்காவில் வேலையின்மை என்பது 7.5 மில்லி யனிலிருந்து 15 மில்லியனுக்கு மேல் உயர்ந்துவிட்டது. ஐரோப்பா முழுவதும் 23 மில்லியனுக்கு மேல் வேலையில்லாமல் உள்ளனர். இது 2007-ல் இருந்ததை விட 36 சதவிகிதம் அதிகமாகும் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.''''''
ReplyDeleteஉலகமயம் தனக்கான நெருக்கடிகளை முன்வைத்து அதிலும் தனக்கான லாபம் பார்க்கும் என்பதற்கு இது நல்ல உதாரணம். நல்ல பதிவு.
ReplyDelete