தலைவாரி பூச்சூட்டி உன்னைப்
பாடசாலைக்குப் போ என்று
சொன்னாள் உன் அன்னை....
என்ற பாரதிதாசனின் கவிதை வரிகள் இளந்தளிர் முஸ்கான் ஜெயினுடைய தாய்க்குத் தெரிந்திருக்க வாய்ப்பு குறைவு. ஆனாலும் தனது செல்வச் சிறுமியையும், செல்ல மகனையும் வழக்கமான உற்சாகத்தோடு அன்றும் பாடசாலைக்கு தயார் பண்ணிக் கொண்டிருந்தார். தனது தம்பி ரித்திக் அருகே அன்போடு நிற்க இந்தச் சிட்டுக் குருவி முஸ்கான் கோவையில் தனது வீட்டருகே அன்று காலை எட்டு மணிக்குக் காத்திருந்தது பள்ளிக்குத் தங்களை ஏற்றிச் செல்ல இருந்த வாகனத்திற்காக அல்ல, தங்களது கதையையே முடிக்க இருந்த ஒரு வெறி பிடித்த மிருகத்திற்கு என யாருக்கும் தெரிந்திருக்கவில்லை.
மோகனகிருஷ்ணனை அவன் திருப்பிச்செலுத்த வேண்டியிருந்த கடன் தொகையும், அவனது தவறான வாழ்க்கைப் பாடங்களும் சேர்ந்து அப்படியொரு கொடிய செயலுக்குத் தூண்டியிருந்தன. அந்த அளவுக்கு நமது சமூகச் சூழல், அச்சம் தரும் அளவு மலினப்பட்டுக் கொண்டிருப்பதை நின்று நிதானித்து கவனிக்கும் நிலையில் யாரும் இல்லை. நெஞ்சம் நினைக்கவே துடி துடிக்கும் அந்த வன்செயலை இன்று நாடு முழுவதும் விவாதித்துக் கொண்டிருக்கிறது.
பிள்ளைகளைக் கடத்திக் கொண்டுபோய் பதுங்கிக் கிடந்து, பின், பதறிக் கிடக்கும் பெற்றோரோடு பேரம் நடத்தித் தனது பொருளாதார சிக்கல்களுக்குத் தற்காலிகமாக ஒரு விடுதலை பெற்றுவிட முடியும் என்று நம்பியிருந்த மோகனகிருஷ்ணன் தான் சிக்கிக் கொண்டுவிடுவோம், எல்லாமே பாழ், வெற்று வேலை என்று தோன்றிவிட்ட ஒரு தருணத்தில், தன்னைக் காத்துக் கொள்ள சாட்சிகளை இல்லாதுபோகச் செய்துவிடும் ஆளாக மாறவும், அவனது குற்றங்கள் வளர்ந்துவிட்டது. கோவை மாநகரத்தின் மனிதர்கள் எல்லோருமே தத்தம் குழந்தையைப் பறி கொடுத்ததுபோல் அதிர்ச்சியுண்டு கதறிக் கதி கலங்கி நிற்கும்படியாய் இருந்தது அவன் செய்த செய்கை.
பள்ளிக் குழந்தைகள் கடத்தல் என்பது அது ஒன்றும் முதலாவது நிகழ்வு இல்லை என்றாலும், ஓர் இளந்துளிருக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட பாலியல் வன்முறையும், இரண்டு குழந்தைகளின் உயிர் பறிக்கப்பட்டதும், குற்றவாளியின் மீது ஏற்படுத்திய கொதிப்பு, ஆத்திரம் எல்லாம் மாநகர் முழுக்கவும், இணையதள பக்கங்களிலும் இன்றும் நிறைந்திருக்கின்றன. பின்னர், காவல்துறை நடத்திய என்கவுன்ட்டர் கொலையில் மோகனகிருஷ்ணன் கதை முடிந்த போது, கோவை மாநகரம் அதை நரகாசூர வதம் போலக் கொண்டாடியதில் அது வெளிப்பட்டது. இதன் மீதான் வெளிச்சத்திற்குப் பிறகு வருவோம்.
இதே காலத்தில், சென்னையில் கீர்த்திவாசன் என்ற சிறுவன் கடத்தப்பட்டதும், பின் மீட்கப்பட்டதும் சென்னைவாசிகளுக்கு உயிரை மீட்டுக் கொடுத்த மாதிரி இருந்தது. அதில் கடத்தல் செய்தவர்களுக்கு அவர்கள் கேட்ட பணயத் தொகையில் பெரும்பகுதியைக் கொடுப்பது போல் கொடுக்க வைத்து காவல்துறை பொறி வைத்ததில் சிக்கிக் கொண்ட விஜய குமார், பிரபு இருவருமே உயர் கல்வி படித்தவர்கள். குறுகிய வழியில் பெரும்பணம் பார்க்கத் தான் இந்தக் கடத்தல் வேலையை அவர்கள் செய்திருக்கக் கூடும் என்பது பொதுவான அனுமானம். அவர்களுக்குள் ஓடிய ஓட்டம் என்ன என்பது அவர்களாகச் சொல்லாமல் வெளியே வரப்போவதில்லை.
பள்ளிச் சிறுவர்கள் கடத்தப்படுவது குறித்து எழுதும் பத்திரிகைகள் தரும் புள்ளி விவரங்கள் நாடு முழுவதும் ஆண்டு தோறும் பல்லாயிரக் கணக்கில் இப்படி நடப்பதாகத் தெரிவிக்கின்றன. ஆனாலும், கோவையில் நேர்ந்த பயங்கரம் பெற்றோரைப் பெரிய அளவில் உலுக்கியிருப்பதை அடுத்து, பள்ளிக் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விவாதம், அரசு தரப்பு உத்திரவாதம், காவல் துறை வலியுறுத்தும் அறிவுரைகள், தற்காப்பு நுணுக்கங்கள்....என பெரிய அளவில் இந்த விஷயம் பரந்த கவனத்தை ஈர்த்திருக்கிறது.
குறு, நடுத்தர, பெரு நகரங்கள் எல்லாவற்றிலுமே குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்புவது ஒரு முக்கிய பிரச்சனைதான். பல காரணங்களுக்காக, பெற்றோர் சற்று தொலைவில் இருக்கும் பாடசாலையில் தமது பிள்ளைகளைச் சேர்க்கின்றனர். அப்புறம், தங்களது பொறுப்பில் அன்றாடம் கொண்டுவிட வசதியும், வாய்ப்பும் அற்றவர்கள், தத்தம் பொருளாதாரம் அனுமதிக்கும்படி, அல்லது அனுமதிப்பதை மீறி ரிக் ஷா, ஆட்டோ ரிக் ஷா, வேன் எதிலாவது பள்ளிக்கு அனுப்பி வைக்கின்றனர். குழந்தைகளை அன்றாடம் குறித்த நேரத்தில் அனுப்புவதும், பிறகு யாராவது பொறுப்பாக மாலை நேரத்தில் அவர்கள் திரும்பிவரும் நேரத்தில் இருந்து உறுதி செய்துகொள்வதும் மாநகரங்களில் விவரிக்க இயலாத பதட்டங்களோடு இணைந்த நேரங்கள். குழந்தை தனக்குரிய வாகனம் புறப்படும் நேரத்தில் வேறு எங்காவது விளையாடிக் கொண்டு விடுபட்டுப் போவதும், தேடுவதும், குழந்தையைப் பத்திரமாக மீண்டும் வீட்டுக்கு அழைத்துவருவதும் ஒரு பாடு. வாகன ஓட்டுனர் குறித்து குழந்தையின் புகார், குழந்தையின் ஒத்துழையாமை குறித்த வாகன ஓட்டுனர் புகார் எல்லாவற்றையும் பக்குவத்தோடு சமாளிக்க வேண்டிய நிலையில் பெற்றோர், வாகனத்தை மாற்றிவிட்டால் படும் கூடுதல் பாடு....என தினம் தினம் ஒரு அனுபவத்தை ஊட்டும் விஷயம் இந்தப் பள்ளிப்பயணம்.
இதில்தான் வேன் குறித்த, வேன் ஓட்டுனர் குறித்த, புதிய ஆள் திடீர் நுழைவு குறித்த எச்சரிக்கைகள் பற்றி காவல்துறை அழுத்தமாகக் கூறியிருப்பது. கோவையில், தற்காலிகமாகக் கொஞ்ச நாள் ஒட்டிய பரிச்சய துணிச்சலில்தான் மோகனகிருஷ்ணன் கொலைபாதகம் செய்தான் என்றால், சென்னையில் கார் ஓட்டுனரை ஏமாற்றி கலர்ப் பொடி தூவி சிறுவனைக் கடத்தி இருக்கின்றனர். இரண்டு நிகழ்சிகளிலுமே உயர் பணக்காரக் குடும்பங்களைச் சார்ந்தவர்களே கடத்தப் பட்டனர். என்றாலும் எல்லோருக்குமே அச்சம் பரவி இருக்கிறது.
பள்ளிகளில் ஏற்கெனவே, அறிமுகமற்ற ஆட்கள் வந்து பிள்ளைகளை அழைத்துப் போவதை எந்த நிர்வாகமும் பொதுவாக அனுமதிப்பதில்லை. என்றாலும் கூடுதல் கவனம் செலுத்த அரசு வற்புறுத்தியுள்ளது. முக்கிய இடங்களில் புகைப்படக் கருவிகள் வைக்கவும், கண்காணிக்கவும் சொல்லியிருக்கின்றனர். வாகன ஓட்டுனர் குறித்த செய்திகள், விவரங்கள், புகைப்படம் அவசியம் பெற்றோர் எப்போதும் வைத்திருக்கவேண்டும் என்கிறது காவல்துறை. அருகமைப் பள்ளிகள் தேவை என்கிற குரல் இப்போது அதிகம் ஓங்கி ஒலிக்கிறது ஒரு நல்ல விஷயம். அதிக தூரம் அனுப்பப்படும் குழந்தைகளுக்கு விளையாட்டு முற்றிலும் மறுக்கப் படுகிறது. காலை உணவு பிரச்சினை ஆகிறது. மாலை திரும்பும் நேரம் தினம் ஒரு சோதனை நேரம். போக்குவரத்துச் செலவையும், பாதுகாப்பு குறித்த அச்சத்தையும் தவிர்த்து, குழந்தைகளுக்கு எந்தப் பதட்டமும் அற்ற அன்றாட நடைமுறையையும் வழங்கும் அருகமைப் பள்ளிகள் சிறந்த மாற்றத்தைக் கொண்டுவரும்.
கோவையைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரியான அருண் என்ற இளைஞர், குழந்தைகளின் பெல்ட், டிபன் பாக்ஸ், பள்ளிக்கு எடுத்துச் செல்லும் பை, பேனா வைக்கும் பெட்டி என எதில் வேண்டுமானாலும் பொருத்திக் கொள்ளும் ஒரு சிறிய கருவியைக் கண்டு பிடித்திருக்கிறார். அதை குழந்தை மெல்ல அழுத்தினால், அது தான் கடத்தப்படுகிறோம் என்ற குறுஞ் செய்தியை பெற்றோருக்கு அனுப்பிவிடும். அது மட்டுமல்ல, அந்தக் குழந்தை எங்கு அழைத்துச் செல்லப்பட்டாலும் அவனது இருப்பிடத்தைப் பற்றிய குறுஞ்செடீநுதி தொடர்ந்து வந்துகொண்டே இருக்கும். இந்தக் கருவியை அதிக எண்ணிக்கையில் தயாரித்தால் மிக மலிவான விலையில் சந்தைக்குக் கொண்டுவந்துவிட முடியும் என்கிறார் அந்த மாணவர். பெற்றோரின் அச்சத்தைக் குறைக்கும் வண்ணம் இத்தகைய கண்டுபிடிப்புகளை அரசு நிச்சயம் ஊக்குவிக்கலாம். வேண்டும்.
இதில் கவனத்தை ஈர்க்கிற வேறு நிறைய செய்திகள் இருக்கின்றன.
தாராளமய உலகில், பொருளாதார ஏற்றத் தாழ்வுகளின் வீச்சு கற்பனைக்கு அப்பாற்பட்ட குற்றங்களைத் தூண்டுகிறது. மனிதநேயத்தை உதறித் தள்ள வைக்கிறது. செல்வச் செழுமையில் திளைக்கிற மாந்தர்களுக்குத் தங்களது பணம் எல்லாவற்றையும் தங்களுக்கு வசப்படுத்திவிடும் என்ற எண்ணத்தை ஊட்டுகிறது. பணம், அதிகப் பணம், எப்படியாவது பணம், மேலும் பணம், இன்னும் இன்னும் பணம் என்கிற சிந்தனைப் போக்கு இன்னொரு முனையில் பணத்திற்காக என்னவும் செய்யலாம் என்கிற மனிதர்களையும் தயாரித்துக் கொண்டிருக்கிறது.
ஒரு மருத்துவரை, ஒரு பொறியாளரை, ஒரு வழக்கறிஞரை உருவாக்க அரசுக்கு இத்தனை பணம் செலவாகிறது என்று புள்ளிவிவரம் தருபவர்கள் மிகப் பெரிய மனிதர்களுக்கான பாதுகாப்புக்கு எவ்வளவு செலவாகிறது என்பதைச் சொல்வதில்லை. மேலே பேசப்பட்ட நிகழ்வுகள் போன்ற ஒரு குற்றம் பெரிய அளவில் நடைபெறும்போது அதைச் செய்தவர்களைக் கண்டுபிடிக்கக் குவிக்கப்படும் காவல்துறை இயந்திரத்திற்கான செலவு என்ன என்பது எப்போதும் விவாதிக்கப்படுவதில்லை. கீர்த்திவாசனைக் கண்டுபிடிக்க 400 பேர் கொண்ட காவல்துறை படை அமைக்கப்பட்டதாக செய்தி வந்திருந்தது. நோய் வந்த பிறகு செலவழிக்கப்படும் தொகையை விட, நோய்த் தடுப்பு வேலைகள் குறைவான செலவைத் தானே வைக்கும்? அது உடலுக்கும் நல்லதல்லவா..
பெருகிவரும் குற்றங்கள் சமூகத்தின்மீது பழிவாங்கத் துடிக்கும் மனிதர்களின் வெளிப்பாடு என்பதை ஆட்சியாளர்கள் உணரவேண்டும். வெறும் சட்டம், ஒழுங்கு சமாசாரங்களை மட்டும் வைத்துக் கொண்டு இந்த சவால்களை எதிர்கொள்ள முடியாது என்பதை அவர்களுக்கு ஊடகங்கள் எடுத்துச் சொல்லவேண்டும். குறிப்பாக, என்கவுண்டர்கள் அதற்கான எளிய வழியில்லை என்பதை உரத்துச் சொல்லவேண்டும்.
மோகனகிருஷ்ணன் மீது பொங்கிய ஆத்திரத்தில், இணையதளத்தில் எழுதப்பட்ட நெருப்பு எழுத்துக்களில் ஒருவர், குற்றவாளியை மக்களிடம் விட்டுவிடு, அடித்துக் கொல்லட்டும் என்றார், இன்னொருவர், இரண்டு வாரங்கள் தீனி மறுக்கப்பட்ட பத்து, இருபது வெறி நாய்களைத் துரத்தவிட்டு அவனை குரூரக் கொலை செய்ய வேண்டும் என்றார். (மனித ரத்தம் ருசித்துக் கொள்ளும் அந்த நாய்களுக்கு அடுத்த நாளில் இருந்து யார் என்ன தீனி போடுவார் என்பதெல்லாம் மிகவும் படித்த இணையதள வாசகர்களுக்கே தோன்றுவதில்லை என்பது ஒரு சோகம்!). என்கவுண்டரில் மோகனகிருஷ்ணன் கொல்லப்பட்டதைக் கொண்டாடியவர்களும், காவல்துறையின் அதிகார வெறியை அது மேலும் விசிறிவிடும் என்றோ, அதற்கு எதிர்காலத்தில் யாரெல்லாம் பலியாவார்கள் என்றோ புரியும் மனநிலையில் அன்று இல்லை. (என்கவுண்டருக்கு எதிராக அன்றே கோவையில் ஆர்ப்பாட்டம் நடத்திய வழக்கறிஞர்கள், மனித உரிமை அன்பர்கள் விரட்டப்பட்டிருக்கின்றனர்).
சக மனிதர்கள் குறித்த கரிசனம் இன்று தேய்ந்துவருவது கூட சமூகக் குற்றம் புரிவோருக்கு வசதியாக அமைகிறது. பண்பாட்டுச் சூழலில் நவீனமயம், தாராளமயம் நிகழ்த்திக் கொண்டிருக்கும் வன்முறைகள் கொஞ்ச நஞ்சமல்ல. எதற்கும் பொறுப்பேற்றுக் கொள்ள மறுப்பவர்கள், கூட்டாகவும் இயங்கத் தயாரில்லாது போகின்றனர். இந்த இடைவெளிகளில் நிகழும் கோர சம்பவங்கள் அந்த நேரத்துக் கொதிப்பைத் தருவதைத் தாண்டி நிரந்தர தீர்வு குறித்த சிந்தனைக்கான நேரத்தைக் கூட மனிதர்களுக்கு வழங்குவதில்லை இன்றைய வாழ்க்கை முறை
கோவையில் துள்ளத் துடிக்கத் தனது வயதை மீறிய ஒரு வன்முறையை எதிர்கொண்ட ஒரு சிறுமியும், அதைக் கண்ணுற நேர்ந்த இன்னொரு குழந்தையும் பள்ளிகளில், பொது வெளியில், வீடுகளில், பண்பாட்டுச் சூழலில், அன்றாட வாழ்க்கையில் பாதுகாப்புக்கு நேர்ந்துவரும் சவால்களின் பலி பீடத்தில் நின்று கதறிய கதறல்கள் இந்த அதிர்ச்சி நிகழ்வுகள் நேர்ந்த இடம், பின்புலம் எல்லாம் கடந்து நின்று பாடங்களைக் கொடுக்கின்றன. அதிலிருந்து திசைகளை அறிய வேண்டியது சமூகத்தின் பொறுப்பு.
-எஸ்.வி.வேணுகோபாலன்
பண்பாட்டுச் சூழலில் நவீனமயம், தாராளமயம் நிகழ்த்திக் கொண்டிருக்கும் வன்முறைகள் கொஞ்ச நஞ்சமல்ல. எதற்கும் பொறுப்பேற்றுக் கொள்ள மறுப்பவர்கள், கூட்டாகவும் இயங்கத் தயாரில்லாது போகின்றனர்.
ReplyDeleteமிகச்சரியான வார்த்தைகள்
பொதுவாக இதுபோன்ற நபர்களை உருவாக்கும் இன்றைய தனியார்மைய உலகம். குறித்த தெளிவான பார்வை தேவைப்படுகிறது.
ReplyDeleteஒரு 25 வயதே நிறைந்த ஒரு இளைஞன் சமூகத்தின் கோர கட்டமைப்பால் குறுகிய நோக்கத்தில் பணத்தை பெறவும் அதன் மூலம் ஒரு சக வாழ்வை பெறவும் எதையும் செய்யலாம் என்கிற கண்னோட்டம் வளர்ந்து வருவதும்.
குறிப்பிட்ட வயதில் அவனுக்கு தேவையான கல்வி, ஒரு நிரந்திர வேலை, ஒரு திருமண வாழ்க்கை கிடைப்பதற்கான எந்த உத்திரவாதம் அற்ற சமூகத்தில் இது போன்ற அப்பாவி மோகனகிருஷ்ணன்கள் உருவாகிக்கொண்டே இருப்பார்கள்
மனிதாபிமானம் மரணித்து, சமூகம் பற்றி அக்கறை கொள்ளாது, தன் வாழ்வை மட்டும் வளமாக்கும் எண்ணம் வருவதால்தான் இவை நடக்கின்றன. நல்ல பதிவு.
ReplyDelete