பிறப்பால் பிராமணரான ஒருவருக்கும் தேவதாசி தாய்க்கும் பிறந்த ஒரு பெண்ணுக்கும் திருமணம் என்றால் அதுவும் 1925ஆம் ஆண்டு நடந்ததென்றால் அது சாதாரணச் செய்தி அல்ல. அந்தச் செய்தி அந்தந்த சாதிக்குள்ளும் ஒட்டுமொத்த சமூகத்துக்குள்ளும் எவ்விதமான எதிர் வினைகளை தோற்றுவித்திருக்கும் என்பதை கூறவும் வேண்டுமோ? இதுதான் முதல் சுயமரியாதைத் திருமணம் என்று முனைவர் பி.எஸ்.சந்திரபாபு தன் ஆய்வேட்டில் அடிக்கோடிட்டுப் பதிவு செய்துள்ளார்.
சுயமரியாதைத் திருமணம் என்றால் என்ன? இக்கேள்விக்கு வெ. ஆனைமுத்து கூறுகிறார். “இது பிராமணக் குருக்களை அழைக்காமல், அர்த்தமற்ற பழக்க வழக்கங்கள், சடங்குகள், எதையும் செய்யாமல் மூடப்பழக்கங்களை மேற்கொள்ளாமல் நடத்தப்படுகிற ஒரு சீர்திருத்த முறையிலான திருமணத்தின் சிறப்பு வகையாகும். மேலும் தேவையற்ற வீணான செலவுகள் இல்லாத ஒரு எளிய முறைத் திருமணமாகும்”.
இந்தக் கருத்து ஆரம்பத்தில் இதே அளவில் உருப்பெறவில்லை. மாறாக பிராமணக் குருக்களுக்கு பதிலாக தமிழ்ப் பண்டிதர்களை வைத்து; சமஸ்கிருத மந்திரங்களுக்கு பதிலாக தமிழில் மந்திரங்கள் ஓதி திருமணம் நடத்து வதை சுயமரியாதை இயக்கம் துவக்குவதற்கு முன்பே பெரியார் பிரச்சாரம் செய்து வந்துள்ளார். குறிப்பாக கைவல்யம் சுவாமியார் என்பவர் பிராமண மந்திரங்களை விமர்சித்தும் தமிழ் மந்திரங் களை உயர்த்திப் பிடித்தும் தமிழ்த் திருமண முறை ஒன்றை முன்னிறுத்தியும் தொடர்ந்து பிரச்சாரம் செய்தார். அத்தகைய திருமணங்களை நடத்தியும் வைத்தார். அப்போது குழந்தைத் திருமணம் வழக்கில் இருந்தது. எனவே திருமண வயதாக 16 வயதை நிர்ணயிக்கவும் அவர் வற்புறுத்தினார். இதனை பெரியாரும் ஆதரித்தார்.
திருச்சியில் எஸ்.எம். பரமசிவத்தைச் செயலாளராகக் கொண்ட புரோகித எதிர்ப்பு லீக் இத்தகைய சுயமரியாதைத் திருமணத்தை பிரச்சாரம் செய்தது. ஆயினும் மக்களிடம் விரைவாக போய்ச் சேரவில்லை. இந்த சூழலில்தான் சுய மரியாதை இயக்கம் தோன்றியது தொட்டு சுயமரியாதைத் திருமணத்தை பிரச்சாரம் செய்யலானது. 1927ஆம் ஆண்டு ஜூலை 24ஆம் நாள் திருச்சியில் ‘சுயமரியாதை அல்லது மூன்று நண்பர் கள்’ என்ற நாடகம் அரங்கேற்றப்பட்டது. கி.ஆ.பெ. விஸ்வநாதம் இந்த நாடகத்தை பொறுப்பேற்று நடத்தினார். கலப்புத் திருமணம், விதவை மறுமணம், இவை குறித்து இந்நாடகத்தின் பாத்திரங்கள் வலியுறுத்தின. மத புரோகிதர்கள் இல்லாமல் திருமணங்கள் நடத்தப்பட வேண்டுமென இந்நாடகம் பேசியது’. ஆக பிராமண புரோகிதர்களுக்கு பதிலாக தமிழ்ப் பண்டிதர்கள் நடத்தும் திருமணம் என்ற முந்தைய நிலையை விட மேலும் ஒரு படி முன்னேற காரணமான திருமண முறையாக இது முன் மொழியப்பட்டது.
இந்தச் சூழலில்தான் கட்டுரையின் ஆரம்பத்தில் குறிப்பிட்ட அத்திருமணம் புதிய வரையறைகளுக்கு உட்பட்டு நடத்தப்பட்ட முதல் சுயமரியாதைத் திருமணம் என வரலாற்று ஏட்டில் பதிவானது. குடியரசு ஏட்டின் துணை ஆசிரிய ரான சாரநாதன் என்ற பிராமணருக்கும் (பின்னர் பிராமண எதிர்ப்பில் அதி தீவிரம் காட்டிய குடியரசு ஏட்டின் துணை ஆசிரியராக ஒரு பிராமணரே செயல்பட்டுள்ளார் என்பதை கவனிக்க வேண்டும்) பாலக்காட்டைச் சேர்ந்த தேவதாசிக்குப் பிறந்த லட்சுமிக்கும் இத்திருமணம் நடை பெற்றது. இதனை பெரியார் முன் னின்று நடத்தினார். இதில் எந்தச் சடங்குகளும் மேற்கொள்ளப்படவில்லை.
இதைத் தொடர்ந்து காரைக்குடியில் முருகப்பா என்ற நாட்டுக் கோட்டை சமூகத்தைச் சேர்ந்தவருக்கும் மரகதவல்லி என்ற பொற்கொல்லர் சமூகத்தைச் சேர்ந்த ஒரு விதவைப் பெண்ணுக்கும் சுயமரியாதை செயல்வீரர் மூவலூர் ராமாமிர்தம் அம்மாள் முன்னிலையில் நடைபெற்ற திருமணம் இரண்டாவது சுயமரியாதைத் திருமணம் என வரலாற்று ஆசிரியர்கள் குறிக்கிறார்கள்.
சுயமரியாதை இயக்கத்தின் தொடர்ச்சியான பிரச்சாரம் காரணமாக இத்தகைய சுயமரியாதைத் திருமணங்கள் பெருக ஆரம்பித்தன. இதற்கு முன்பே சென்னையில் சமூகப்பணியாளரான சின்னைய்யா செட்டியாரை செயலாளராகக் கொண்டு ‘விதவை மறுமண சங்கம்’ செயல்பட்டது என்பது ஆச்சரியமான உண்மை. இன்றும் பெரும் பாலோர் தயங்குகிற ஒரு செயலில் 90 ஆண்டுகளுக்கு முன்னால் ஒரு அமைப்பே செயல்பட்டது என்றால் தமிழ கம் சமூக சீர்திருத்தத்தில் இயல்பாகக் கொண்டிருந்த அக்கறை புலனாகும். ராஜாஜி போன்ற பிராமண சாதியில் பிறந்த தலைவர்களும், ஹிந்து நாளேட்டின் ஆசிரியராக இருந்த சுப்பிரமணிய அய்யர் போன்றவர்களும் சமூக சீர்திருத்தத் திருமணங்களை ஆதரித்தது குறிப்பிடத்தக்கது.
அதேபோல சென்னையில் செயல் பட்ட தென்னிந்திய புத்த சங்கம் சார்பில் லட்சுமிநரசுவின் முன் முயற்சியால் சுயமரியாதை வகையிலான சீர்திருத்தங்கள் சில நடந்தன. திருமணம் செய்து கொண்டவர்கள் புத்த மதத்தைச் சார்ந்தவர்களாகவே இருந்தனர். எண்ணிக்கை அளவில் குறைவாக இருப்பினும் இத்தகைய திருமணங்கள் சமூக சீர்திருத்த இயக்கத்திற்கு வலுவூட்டுபவையாகவே அமைந்தன.
ஆரம்ப கட்டத்தில் நடைபெற்ற ஒரு சீர்திருத்த திருமணத்தில் அக்காள் தங்கை இருவருக்கும் ஒருவர் சடங்குகள் இல்லாமல் தாலி கட்டினார் என்பதும் இதில் பெரியார் கலந்துகொண்டார் என்பதும் பேராசிரியர் கேசவன் தருகிற செய்தி. ஆயினும் உள்ளடக்க ரீதியாக அதை முதல் சமூக சீர்திருத்த திருமணமாக ஏனைய வரலாற்று ஆய்வாளர்கள் ஏற்கவில்லை.
மேலும் ஆரம்பகட்ட இத்தகையத் திருமணங்களில் தாலி மறுப்பு இடம் பெறவில்லை. மங்கலநாண் அணிவிப்பது அப்போது விமர்சிக்கப்படவில்லை. மாறாக அதுவும் சுயமரியாதைத் திருமணங்களின் ஒரு கூறாகவே இடம் பெற்றது.
1932ஆம் ஆண்டு நெ.து. சுந்தர வடி வேலு - டி.எஸ். காந்தம் திருமணம் தாலி இல்லாமல் நடைபெற்றது. திருமணம் பதிவு செய்யப்பட்டது. ஆயினும் 1967ல் அண்ணா ஆட்சியில் கொண்டு வரப்பட்ட இன்றைய சுயமரியாதைத் திருமண சட்டம் அன்று இல்லாததால் அமலிலிருந்த சட்டத்திற்குள் அது பதிவு செய்யப்பட்டது.
மத புரோகிதச் சடங்குகள் மறுப்பு சாதி மறுப்பு, தாலி மறுப்பு, என படிப்படியாக முன்னேறியபோதும்; எளிமையான திருமணம், ஆடம்பரம் இல்லாத திருமணம் என்பவை வலியுறுத்தப்பட்ட போதும்; வரதட்சணை இல்லாத் திருமணங்கள் நடத்தப்பட்டதா என்பதை உறுதியாகக் கூற இயலவில்லை.
பெண்களுக்கு சொத்தில் சமபங்கு வழங்கும் சட்டம் அன்று இல்லை. ஆகவே அன்றையச் சூழலில் வரதட்சணை என்பதும் மறைமுகமாக சொத்தில் பங்குபெறுவதாகவே அமைந்திருக்கக் கூடுமோ அல்லது இக்காரணத்தால் இவ்விஷயம் பேசப்படாமல் போயிருக்குமோ? அது மட்டுமின்றி அடித்தட்டு மக்களிடையேயும் உழைக்கும் மக்களிடையேயும் பிராமணரல்லாத பெரும்பாலான சாதியினரிடத்தும் அன்று வரதட்சணை பழக்கம் வழக்கத்தில் இல்லை. மாறாக ஆண்தான் பெண் ணுக்கு பரிசம் போட்டு திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற உயர்ந்த பண்பாடும் சமூகத்தில் ஒரு பகுதியினரிடத்தில் இருந்தது. பிராமணர் மற்றும் மேல்சாதியினரிடம்தான் வரதட்சணை என்கிற கொடிய தொற்றுநோய் இருந்தது. பின்னர் காலப்போக்கில் இது அனைத்து சாதியினரையும் தொற்றிக்கொண்டது.
சுயமரியாதைத் திருமணங்கள் பொதுவுடைமை இயக்கத்தினரால் மிகப் பெருமளவில் செய்யப்பட்டது. இன்னும் சொல்லப்போனால் சாதியை மீறிய காதல் திருமணங்களையும் கலப்புத் திருமணங்களையும் பொதுவுடைமை இயக்கம் வலுவாக ஆதரித்தது. பொதுவுடைமை இயக்கத்தின் மூத்த தலைவர்கள் பி. ராமமூர்த்தி, என். சங்கரய்யா, கே.ரமணி, ஜீவானந்தம், ஆர்.உமாநாத், என். வரதராஜன், கே.டி.கே. தங்கமணி, ஆர். நல்லக்கண்ணு, கே.முத்தையா உட்பட ஏராளமான முன்னணி கம்யூனிஸ்ட் தலைவர்கள் சொந்த வாழ்வில் மற்றவர்களுக்கு வழிகாட்டியாக சுயமரியாதை திருமணம், சாதியை மீறிய கலப்புத் திருமணம் செய்துகொண்டனர்.
சுயமரியாதைத் திருமணங்களுக்கு ஆரம்பத்தில் எதிர்ப்பு இருந்த போதிலும் பின்னர் ஆதரவும் பெருக ஆரம்பித்தது. இத்திருமணங்களின் தன்மைக்குறித்து பெரியார் சொல்லுகிறபோது, இத்திருமணங்களுக்கு 1950ஆம் ஆண்டு திருமணம் மாதிரி, 1960ஆம் ஆண்டு திருமணம் மாதிரி என்று சொல்லுங்களேன் என்று கூட ஒருகட்டத்தில் கூற ஆரம்பித்தார். காரணம் சாதி மறுப்பு, சடங்கு மறுப்பு மட்டுமல்ல, முழுமையான பெண்சமத்துவம் நோக்கி படிப்படியாக உயர்ந்த கட்டத்திற்கு இத்திருமணமுறை பரிணாம வளர்ச்சிப் பெறவேண்டும் என விரும்பினார். அதையே வலியுறுத்தவும் செய்தார். இன்றைக்கு வாழ்க்கைத் ‘துணை’ என்று கூறுகிற நிலைமை மாறி ‘இணை’ என்று கூறுகிற போக்கு ஒரு பக்கம் வளர்ந்துள்ளது.
மறுபக்கம், ஆடம்பரத் திருமணங்களும் லட்சக்கணக்கில் பணபேரங்களும் மிகுந்த திருமணங்களை ஒரு தலைவர் தலைமை தாங்கி நடத்துவதாலேயே அவை சுயமரியாதைத் திருமணங்களாகவோ முற்போக்குத் திருமணங்களாகவோ மாறிவிடுமோ? உண்மையில் சாதி-மத வேறுபாடு பார்க்காமல், சமூக அந்தஸ்து பார்க்காமல் பணச் செல்வாக்கு பார்க்காமல், வரதட்சணை வாங்காமல், பணபேரம் நடத்தாமல், மதச்சடங்குகள் இல்லாமல் ஆடம்பரம் இல்லாமல் எளிமையாக ஆணும் பெண்ணும் காதலித்து கைப்பிடிக்கும் இனிய நாளே உண்மையான சுயமரியாதைத் திரு மணத்தின் துவக்கமாகும். அதை நோக்கிய பயணத்திற்கு 1920களில் போடப் பட்ட விதை எந்த அளவு பலன் தந்திருக்கிறது? இன்னும் பயணம் போகவேண்டியது எவ்வளவு தூரம்?
(நன்றி:தீக்கதிர்)
ஓவியம்:செழியன்
தமிழ்மணம் மூலம் உங்களை அறிந்தேன்...
ReplyDeleteமிக்க மகிழ்ச்சி..
ரொம்ப சீரியசான ஆளோ.???
இங்கும் வாருங்கள் நண்பரே...
ReplyDeletehttp://kirukaninkirukals.blogspot.com/
http://ram-all.blogspot.com/
நன்றி கூர்மதியன் ... மக்களின் விடிவைத் தேடும் சீரியசான விசயங்களை பேச நினைக்கும் சாதாரமானவர்களின் கூட்டம்தான் இது ... உங்களை தொடர்ந்து வாசிக்கிறோம். எழுதுக ... எழுக ...
ReplyDelete