2010ம்ஆண்டு கிட்டதட்ட நூற்றுக்கும் மேற்பட்ட தமிழ் திரைப்படங்கள் வெளிவந்துள்ளன. தமிழ் திரைப்பட வரலாற்றில் மனித உணர்வினை யாதர்த்த நிகழ்வுகளுடன் வெளிப்படுத்திய திரைப்படங்களே அதிகளவில் வெளிவந்து வெற்றியும் பெற்றதால் இவ்வாண்டினை தமிழ் திரைப்படத்தின் யாதர்த்த ஆண்டு என்று கூட கூறலாம்.
குறிப்பாக இவ்வாண்டின் மத்தியில் இயக்குநர் வசந்த பாலன் இயக்கத்தில் வெளிவந்த முறைசாரா தொழிலாளர்களின் உழைப்பு சுரண்டலையும், உணர்வுகளையும் நசுக்கும் முதலாளித்துவத்தின் கோரமுகத்திரையை அப்பட்டமாக அம்பலப்படுத்தி மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது அங்காடித்தெரு திரைப்படம். சர்வதேச திரைப்பட விழாவில் மிகச்சிறந்த திரைப்படமாகவும் தேர்வு செய்யப்பட்டது.
அடுத்து,அறிமுக இயக்குநர் சற்குணம் இயக்கத்தில் எவ்வித எதிர்பார்புமின்றி வெளிவந்து கிராமத்து இளைஞனின் நாயகத்தனத்தை நகைச்சுவை உணர்வுடன் யாதர்தமாக கூறி வெற்றி பெற்றது களவாணி என்கிற திரைப்படம்.
அமெரிக்க ஏகாதிபத்தின் சுயரூபத்தை வெளிப்படுத்தி,அதிலும் குறிப்பாய் அணுசக்தி ஒப்பந்தம் போன்ற இன்றைய அரசியல் நடப்புகளை நகைச்சுவை உணர்வுடன் விமர்சித்து சிம்புதேவன் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம். கௌபாய் என்கிற கதாப்பாத்திரத்தில் நாயகன் தோன்றி தமிழக மக்களின் புதிய ரசனை மாற்றத்திற்கு அடித்தளமிட்டது.
இந்திய சுதந்திரத்திற்கு முன்பு நடைபெறுவதாய் கதையமைப்பை கொண்டு இயக்குநர் விஜய்யால் இயக்கப்பட்டு வெளிவந்த திரைப்படம் மதராச பட்டணம்.ஆறுபது வருடங்களுக்கு முன்பு இருந்த சென்னை நகரத்தை அழகாக காட்டியது.அதிகபட்ச லாபவெறியால் தொழிற்சாலை கழிவுகளால் நசப்படுத்தப்பட்ட அழகிய கூவம் நதியில் படகு சவாரி செய்யும் வகையில் அமைக்கப்ட்ட காட்சிகள் இன்றைய சென்னை நகர மக்களுக்கு ஏக்கத்தை ஏற்படுத்தியது.
மலைகிராமத்து மண்ணின் வாசனையுடன் வெளிவந்து யதார்த்த காதலை மிகச்சிறந்த சித்தரிப்புடன் வெளிகொண்டு வந்து வெற்றி பெற்ற மைனா. இயக்குநர் பிரபு சாலமனுக்கு திருப்புமுனை ஏற்படுத்தி அனைவராலும் பாராட்டப்பட்ட திரைப்படம்.
மனித உறவுகளின் பாசப்பிணைப்பினை காட்சி படுத்தி பலரின் பாராட்டை பெற்றது மிஷ்கின் இயக்கத்தில் இவ்வாண்டின் இறுதியில் வெளிவந்த நந்தலாலா.ஜப்பானிய மொழித்திரைப்படத்தின் தழுவல் என விமர்சிக்கப்பட்டாலும்,நல்ல படைப்புகள் எங்கிருப்பினும் அதன் உணர்வுகளை சிதைக்காமல் மற்றொரு தளத்தில் தருவது தவறில்லை என்கிற வகையில் வெளிவந்து வெற்றியும் பெற்றிருக்கிறது இப்படம்.
இப்படி,சிறு பட்ஜெட்டில் வெளிவந்த திரைப்படங்களே அதிகளவில் வெற்றி பெற்றிருக்கிறது என்றாலும்.தமிழ் திரைப்பட வரலாற்றிலேயே அதிகளவில் செலவு செய்யப்பட்டு தயாரிக்கப்பட்டு நட்சத்திர நடிகர் ரஜினிகாந்த் நடித்த எந்திரன் திரைப்படமும் இவ்வாண்டுதான் வெளிவந்தது. பிரமாண்டத்தின் பெயரில் ரசிகர்களை தன்னுடைய படத்திற்கு வரவைக்கும் யுத்தியை கொண்டிருக்கிற ஷங்கர் இயக்கத்தில் வெளிவந்தது .கலாநிதியின் சன் பிக்சர்ஸ் தயாரித்த இப்படத்தின் இசை வெளியிட்டு விழாவினை மலேசியா நாட்டில் நடத்தி தமிழ் திரைப்படவுலகில் ஒரு புதிய கலாச்சாரத்தை நுழைத்து தமிழ் திரைப்பட தயாரிபாளர்களின் பட்ஜெட்டில் அச்சத்தை எற்படுத்தியுள்ளார்கள்.
பொதுவாக இவ்வாண்டு தமிழ்திரைப்பட உலகு சிறப்பாக இருந்தபோதிலும்,ஒருசில குறிப்பிட்ட நிறுவனங்கள் அல்லது ஒருகுடும்பத்தின் அதிக்கமோ அதிகமாக இருந்தது பல தயாரிப்பாளர்கள் மற்றும் புதிய இயக்குநர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
சர்ச்சைகள்:
வீட்டு வேலை செய்யும் தமிழ்ப்பெண்ணை இழிவாகப் பேசிவிட்டார் என்று பிரபல நடிகர் ஜெயராம் குறித்து சர்ச்சை எழுந்தது. அவர் மன்னிப்பு கேட்டபிறகு சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.
பிப்.6ம்தேதி தமிழக முதல்வருக்கு தமிழ் திரைப்படயுலகினர் சார்பாக பாராட்டு விழா நடைபெற்றது.இதில் கலந்து கொண்டு பேசிய நடிகர் அஜீத்குமார், அரசியல் தலைவர்கள் கலந்து கொள்ளும் இத்தகைய பாராட்டு விழாவில் நடிகர்கள் கட்டாயம் பங்கேற்க வேண்டும் என சில தனியார் தொலைக்காட்சி நிறுவனங்கள் உள்பட சிலர் மிரட்டுவதாக பகிரங்கமாக புகார் கூறினார். இதனால் மேடையில் இருந்த முதல்வர் கருணாநிதி உள்ளிட்டோர் பரபரப்படைந்தனர்.
வா குவார்ட்டர் படத்தின் தலைப்பு தமிழில் இருப்பதாக தமிழக அரசு சலுகையளித்தது. பல்வேறுத் தரப்பிலிருந்தும் கண்டனங்கள் எழுந்தன.
காதல் சொல்ல வந்தேன் என்ற படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்க பத்தாயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய தணிக்கை வாரிய மண்டல அதிகாரி ராஜசேகர் சென்னையில் கைது செய்யப்பட்டார்.
அம்பேத்கருக்காக 12 ஆண்டுகள் போராட்டம்!
ஒட்டுமொத்த சமூக விடுதலைக்காகக் குரல் கொடுத்த பாபாசாகேப் அம்பேத்கரை வெள்ளித்திரையில் கொண்டு முயற்சிக்காக 1991 ஆம் ஆண்டில் 7.7 கோடி ரூபாயை மகாராஷ்டிர அரசு ஒதுக்கியது. ஜப்பார் படேல் இயக்கத்தில் உருவான இந்தப்படத்தில் அம்பேத்கரின் பாத்திரத்தில் நடிப்பதற்காக ஆயிரக்கணக்கான நடிகர்களைப் பார்த்தபிறகு மம்முட்டிதான் பொருத்தமாக இருப்பார் என்று அவரைத் தேர்வு செய்தனர்.
1998 ஆம் ஆண்டில் இந்தப்படம் ஆங்கிலத்தில் வெளியானது. ஒன்பது இந்திய மொழிகளில் இந்தப்படம் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டது. சிறந்த நடிகர், சிறந்த கலை இயக்கம் உள்ளிட்ட பல பிரிவுகளில் தேசிய விருதையும் இந்தப்படம் பெற்றது. இவ்வளவு சிறப்புகளைப் பெற்ற அம்பேத்கர் படம் தமிழில் வெளியாகாமல் இருந்தது.
முதலில் மொழிமாற்றம் செய்வதற்குப் பணமில்லை என்றார்கள். பின்னர், பணம் ஒதுக்கியபிறகும் ஆறு ஆண்டுகள் கிடப்பில் போட்டனர். வழக்கறிஞர் சத்தியச்சந்திரன் நீதிமன்றத்தின் கதவுகளைத் தட்டியபிறகே, படம் வெளியாவதற்கான நம்பிக்கை பிறந்தது. ஒருவழியாக, டிசம்பர் 3 ஆம் தேதியன்று மாநிலத்தின் பல பகுதிகளிலும் திரையிடப்பட்டது. திரையிடாத பகுதிகளில் படத்தைப் போடுவதற்கான வேலைகளில் பல்வேறு அமைப்புகள் முயற்சி எடுத்து வருகின்றன.
அஞ்சலி:
நடிகர் முரளி
பூ விலங்கு என்ற படத்தின் முலம் கதாநாயகனாக தமிழ் திரையுலகில் நுழைந்தவர் நடிகர் முரளி.இவர் பிரபல திரைப்படத் தயாரிப்பாளர் சித்தலிங்கையா மகனாவர்.புது வசந்தம்,பகல் நிலவு ,பொற்காலம்,வெற்றிகொடி கட்டு போன்ற பல வெற்றி படங்களின் நடித்துள்ளார்.இதயம் திரைப்படத்தின் மிகப்பெரிய வெற்றியின் முலம் இதயம் முரளி என்றே தமிழ்திரையுலகில் அழைக்கப்பட்டார். கடல் பூக்கள் என்ற திரைப்படத்தில் சிறப்பாக நடித்தற்காக தமிழக அரசின் சிறந்த நடிகருக்கான விருதை பெற்றார்.இவர் கடந்த செப்.8ம் தேதி மாரடைப்பால் காலமானார். இவரின் மகன் அதர்வா சமீபத்தில் வெளியான பாணா கத்தாடி என்கிற திரைப்படத்தின் முலம் தமிழில் அறிமுகமானர்.நடிகர் முரளி கடைசியாக இப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்தது குறிப்பிடதக்கதாகும்.
பின்னணி பாடகி சுவர்ணலதா
தென்னிந்திய திரைப்படயுலகில் ஐநூறுக்கும் மேற்பட்ட பாடல்களை பாடி புகழ்பெற்றவர் பாடகி சுவர்ணலதா .கேப்டன் பிராபகரன்,சின்னத்தம்பி ,சத்திரியன் போன்ற படங்களில் பாடியுள்ளார் . ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பில் கருத்தம்மா படத்தில் இவர் பாடிய போறாளே பொன்னுத்தாயி என்ற பாடலுக்காக சிறந்த பாடகிக்கான தேசிய விருது பெற்றார்.இவர் கடந்த செப்.12 ம் தேதி சென்னையில் காலமானார்.
கொச்சி அனிபா
மகாநதி ,லேசா லேசா,ஏகன்,சிவாஜி,வேட்டைக்காரன் போன்ற திரைப்படங்களில் நடித்தவர் கொச்சி அனிபா.இவ்வாண்டு வெளியான மதராச பட்டணம் திரைப்படத்தில் ஆங்கிலேயருக்கு மொழி மாற்றம் செய்யும் டிரான்ஸ்லேட்டர் கதாப்பாத்திரத்தில் நகைச்சுவையாக நடித்து தமிழக மக்களை ரசிக்க வைத்தவர். தமிழ் ,மலையாளம் உள்ளிட்ட தென்னிந்திய திரைப்படயுலகில் 300 க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ள கொச்சி அனிபா பிப்.2ம் தேதி காலமானார்.
இசையமைப்பாளர் சந்திரபோஸ்
ஆறு புஷபங்கள் படத்தில் வரும் ”ஏண்டி முத்தம்மா” என்ற பாடல் மூலம் தமிழக மக்களைக் கவர்ந்தவரும், இசையமைப்பாளருமான சந்திரபோஸ் அவர்கள் காலமானார்.
விளம்பர நிறுவனங்களின் படையெடுப்பு
பல பிரபலமான வியாபார நிறுவனங்கள் இலாபத்தை அதிகரிக்க தங்கள் சந்தை பொருட்களை பற்றி நடிகைகளை கொண்டு விளம்பரங்கள் செய்து வந்தன.ஆனால் இவ்வாண்டு நடிகர்கள் விஜய்,விக்ரம்,மாதவன்,கார்த்திக்,பிரபு, சத்தியராஜ் போன்றவர்களை தங்கள் நிறுவன விளம்பர தூதுவர்களாக ஒப்பந்தம் செய்து புதிய யுத்திக்கு மாறியுள்ளார்கள்.
விருதுகள்
அமெரிக்காவின் புகழ்பெற்ற கிராமி விருதை ஏ.ஆர்.ரகுமான் பெற்றார். 52வது விருது வழங்கும் விழாவில் அவருக்கு இரண்டு கிராம்மி விருதுகள் கிடைத்தன.
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் சினிமாஸ்கோப் படத்திற்கு ஒளிப்பதிவு செய்த வி.கே.மூர்த்திக்கு 2008 ஆம் ஆண்டுக்கான தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட்டது.
தேசிய சினிமா விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி தலைநகர் தில்லியில் நடைபெற்றது. இதில் நான் கடவுள் படத்திற்காக சிறந்த இயக்குநர் விருது பிரபல இயக்குநர் பாலாவுக்கு வழங்கப்பட்டது.
பிரபல இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு பத்மபூஷன் விருது தரப்பட்டது.
ஃபிலிம்பேர் திரைப்பட விருதுகள் வழங்கப்பட்டன. தமிழில் சிறந்த படமாக நாடோடிகள் தேர்வு செய்யப்பட்டது. சிறந்த நடிகருக்கான விருது காஞ்சிவரம் படத்தில் நடித்ததற்காக பிரகாஷ்ராஜ், நடிகைக்கான விருது நான் கடவுள் நடித்ததற்காக நடிகை பூஜா ஆகியோருக்கு வழங்கப்பட்டன.
தேசிய திரைப்பட விருதுகள் வழங்கப்பட்டன. பசங்க படத்தில் நடித்ததற்காக ஸ்ரீராம் மற்றும் கிஷோர் ஆகிய இரு சிறுவர்களும் விருதுகளைப் பெற்றனர்.
தொகுப்பு : ஏ.ஆர்.ராஜா, ஹரி
nice look back of tamil cinema in 2010...!!!
ReplyDeletehttp://scrazyidiot.blogspot.com/
நல்ல தொகுப்பு ...
ReplyDelete120 திரைப்படங்கள் வெளியான இவ்வாண்டில், விரல் விட்டு எண்ணக்கூடிய அளவிற்கான படங்களையே நல்லபடங்கள் வரிசையில் வைக்க முடிகிறது....
ReplyDeleteநல்ல தொகுப்பு....
இப்பட்டியலில் தென்மேற்கு பருவக்காற்றும் இடம்பெற்றிருக்கலாம் என்பது என் கருத்து...