அரசு மருத்துவமனை ஒன்றின் அமரர் அறை - மார்ச்சுவரி. மிக விரிவாக, பளிச்சென்ற தோற்றத்தில், முற்றிலும் குளிரூட்டப்பட்டதாக உள்ள அந்த நீண்ட அறையின் பக்கவாட்டுச் சுவர் போல் அமைந்திருக்கிற இரும்புக் கூண்டின் தனித்தனி அறைகளில் சடலங்கள் உள்ளன. சீரான வரிசையில் உள்ள தள்ளுவண்டிக் கட்டில்களிலும் சடலங்கள் தூய வெண்துணியால் மூடிவைக்கப்பட்டிருக்கின்றன.
திரைப்படங்களில் காட்டப்படுகிற இது போன்ற அமரர் அறைக்காட்சிகளைக் கண்ட நினைப்போடு உண்மையான அரசு மருத்துவமனை அமரர் அறைக்குச் சென்று பார்த்தால் எப்படி இருக்கும்? ஒரு உறவினர் விபத்தில் மரணமடைய அவரது சடலத்தைப் பெறுவதற்காக சென்னையின் ஒரு அரசு மருத்துவமனையில் உள்ள அமரர் அறைக்குச் சென்றபோது ஏற்பட்ட முதல் உணர்வு ஒரு அதிர்ச்சிதான்.
மனிதர்கள் உயிருடன் இருக்கும்போதுதான் என்னென்னவோ அவமதிப்புகளையும் பாகுபாடுகளையும் சந்திக்கிறார்கள் என்றால், இறப்புக்குப் பிறகுமா அவர்களுக்கு இப்படிப்பட்ட அவலம் என்ற எண்ணமே மேலோங்குகிறது. மரணத்தின் காரணமறிய மருத்துவ சோதனை, காவல்துறை விசாரணை, குடும்பத்தினர் எடுத்துச்செல்லாமை போன்ற பல காரணங்களுக்காக சடலங்களை அமரர் அறையில் பராமரிக்கப்படுகின்றன.
குறிப்பிட்ட அமரர் அறையில் சோதனை நடவடிக்கைகள் முடிந்து, உரிய வேதிப்பொருள்கள் தடவப்பட்ட பல சடலங்கள், தரையில் கிடத்தப்பட்டிருந்தன. கிழிந்த துணியால் மூடி வைக்கப்பட்டிருந்த அந்தச் சடலங்களைப் பார்த்த போதே அவை ஏழைகளாக வாழ்ந்து முடிந்தவர்களுடையவையாகத்தான் இருக்கும் என்று ஊகிக்க முடிகிறது. அடிப்படை வசதிகள் முழுமையாகச் செய்யப்படாததால் இப்படி நீண்ட நாட்களாகத் தரையில் கிடத்தப்பட்டிருக்கிற பிணங்களின் அங்கங்கள் அவ்வப்போது பெருச்சாளிகளுக்கு உணவாகிற கொடுமை சர்வ சாதாரணம். ஏன் இந்த நிலைமை என்று விசாரித்தபோது தெரியவந்த தகவல்கள், என்ன கொடுமை இது என்று கேட்க வைக்கின்றன.
அமரர் அறைக்குப் பொதுவாக மூன்று வகையான சடலங்கள் கொண்டுவரப்படுகின்றன. விபத்துகளில் இறந்தவர்களின் சடலங்கள், நோய்களின் தாக்குதலுக்கு இலக்காகி சிகிச்சை பலனின்றி உயிரிழப்போரின் சடலங்கள், கொலை செய்யப்பட்டோர்-தற்கொலை செய்துகொண்டோர் பிணங்கள் என அவற்றை வகைப்படுத்தலாம்.
முன்னொரு காலத்தில் மருத்துவமனைகளில் வைத்துப் பராமரித்தாக வேண்டியிருந்த சடலங்களில் சராசரி எண்ணிக்கைக்கு ஏற்பக் கட்டப்பட்ட அமரர் அறைகளே இன்றும் அப்படியே நீடிக்கின்றன. இன்று விபத்துகள் அதிகரித்துவிட்டன என்பது உள்ளிட்ட காரணங்களால் இந்த அறைகளுக்குக் கொண்டுவரப்படும் பிணங்களின் எண்ணிக்கையும் அதிகரித்துவிட்டது. இந்தக் கூடங்களை விரிவுபடுத்த வேண்டும், நவீன வசதிகளைப் பொருத்த வேண்டும் என்ற ஆலோசனைகள், வல்லுநர்களாலும் சமூக அக்கறையாளர்களாலும் சொல்லப்பட்டிருக்கின்றன. அரசு மருத்துவமனை நிர்வாகம் தன் சொந்தச் செலவில் இதைச் செய்ய இயலாது. அரசு எந்திரம் அந்த ஆலோசனைகளைச் செயல்படுத்த முன்வந்தால்தான் அடிப்படை நிலைமை மாறும். அரசுக்கு ஏன் அந்த அக்கறை ஏற்படவில்லை? இறந்தவர்கள் எழுந்து போராடப்போவதில்லை என்பதாலா?
பிணங்களை நீண்ட நாட்கள் பாதுகாக்க வேண்டுமானால் குளிர் வசதி சரியான அளவில் இருக்க வேண்டும். அப்படி இல்லாததால் சில நாட்களில் அழுகத் தொடங்குகின்றன. அவற்றிலிருந்து கிளம்பும் கெட்ட வாடை கூடம் முழுவதும் பரவியிருக்கிறது. இந்த காரணத்தினால் அறையின் பணியாளர்கள் சிலர் சிறிது மது அருந்திவிட்டு தங்கள் வேலைகளைச் செய்கிறார்கள்.
உடல்களைப் பரிசோதனை செய்வதற்கு ஒரு முதன்மை மருத்துவரின் கீழ் நான்கு மருத்துவர்களும் ஊழியர்களும் இருக்க வேண்டும். ஆனால், உயிரோடு இருப்பவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கே போதிய மருத்துவர்கள் இல்லை என்கிறபோது, இறந்தவர்களை கவனிப்பதற்கான மருத்துவர்களும் ஊழியர்களும் மட்டும் போதுமான அளவுக்கு இருப்பார்களா என்ன? அரசு மருத்துவ மனைகளில் புதிய மருத்துவர்கள் நியமிக்கப்படுவார்கள் என்று அவ்வப்போது பிரச்சனை வரும்போது ஆட்சியாளர்கள் அறிவிப்பார்கள். அப்படி சில புதிய மருத்துவர்கள் நியமிக்கப்பட்டிருக்கலாம். ஆனால் பணி ஓய்வு பெற்று காலியாகிற இடங்கள் முழுமையாக நிரப்பப்படுகின்றனவா? அதிகரித்துள்ள நோயாளிகள் எண்ணிக்கைக்கு ஏற்ப அறிவியல்பூர்வமாக மருத்துவர், மருத்துவ உதவியாளர்கள் நியமிக்கப்படுகிறார்களா?
“உயிரைக் காப்பது எங்கள் கடமை. ஆனால் நாங்களும் மனிதர்கள்தான். அமரர் அறை இந்த லட்சணத்தில் இருக்கிற போது உள்ளே செல்வதில் எங்களுக்கும் உடல் பாதிப்புகளும் மனச்சங்கடங்களும் உள்ளன. இதை நாங்கள் யாரிடம் சொல்வது,” என்று கேட்டார் ஒரு மருத்துவர்.
இத்தகைய காரணங்களால் பெரும்பாலான இடங்களில் அனுபவமில்லாதவர்கள்தான் இந்த வேலைகளில் ஈடுபடுத்தப்படுகிறார்கள். அனுபவமிக்க, சிறப்புப் பயிற்சி பெற்ற தடய அறிவியல் மருத்துவர்கள் மிகக் குறைவாகவே இப்பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதனால் ஏற்படுகிற பணிச்சுமையும் நிலைமையை பாதிக்கிறது.
அமரர் அறையில் பிண அறுவைச் சோதனை உள்ளிட்ட பணிகளில் ஈடுபடுவோருக்கு அளிக்கப்படும் சிறப்புப் படிகள் காலத்திற்குப் பொருந்தாததாக, அவர்களை ஊக்குவிக்காததாக இருப்பதை அரசு மருத்துவமனையில் ஒரு மூத்த அலுவலர் தெரிவித்தார். ஒரு பிண அறுவை சோதனை செய்ய மருத்துவருக்கு வழங்கப்படுவது ரூ. 75, உதவியாளருக்கு ரூ.25 மட்டுமே.
தமிழ்நாடு மக்கள் நல மருத்துவ இயக்கத்தின் சார்பில் சில முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதைக் கேள்விப்பட்டு அவர்களை அணுகிய போது, அதன் பொதுச்செயலாளர் மருத்துவர் ரெக்ஸ் சற்குணம் இவ்வாறு கூறினார்: “மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு இறந்தவர்களை அறையில் மட்டும் பதிவு செய்துவிட்டு பிணங்களை உடனே உறவினர்களிடம் ஒப்படைத்து அப்புறப்படுத்தலாம். இதனால் இந்த அறைகளில் பராமரிக்கப்படும் சடலங்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறையும். இரவு நேரங்களில் பிணம் எடுத்துச் செல்ல அனுமதிப்பதில்லை என்ற விதி இப்போதும் இருக்கிறது. அந்தக் காலத்தில் இரவு நேரங்களில் வெளிச்சம் இல்லாததால் பிணங்கள் மாறிவிடும், சரியாக சோதனை செய்ய இயலாமல் போய்விடும் என்பன போன்ற காரணங்களால் அந்த விதி ஏற்படுத்தப்பட்டது. இன்று இந்தப் பிரச்சனை இல்லை என்பதால் இப்படிப்பட்ட சடலங்களையாவது உடனுக்குடன் அப்புறப்படுத்த அனுமதிக்கலாம்.”
“சடலங்களை மைனஸ் டிகிரி குளிரில் வைத்திருக்க வேண்டும். பெட்டியில் மூடி வைக்கவேண்டும். வேதிப் பொருள்களால் சடலம் அழுகு வதைக் கட்டுப்படுத்த வேண்டும். அப்போதுதான் அறையில் கெட்ட வாடை வருவதைத் தடுக்க முடியும். அறையை எந்நேரமும் தூய்மையாக வைத்திருக்கத் தேவையான கருவிகள் புதிதாக வாங்கப்பட வேண்டும். பழுதடையும் கருவிகளை உடனுக்குடன் சரிசெய்வதற்கான ஏற்பாடுகள் உறுதிப்படுத்தப்பட வேண்டும். சடலங்களை பராமரிக்க போதிய வேதிப்பொருள் தயாராக இருக்க வேண்டும். அனுபவமுள்ள மருத்துவர்களைக் கூடுதலாக நியமிக்க வேண்டும். பிண அறுவையின்போது இவர்களுக்குக் கிருமிகள் தொற்றும் அபாயம் அதிகமாக இருப்பதை உணர்ந்து அதை ஈடுகட்டும் வகையில் கூடுதல் ஊதியம், அல்லது கூடுதல் சிறப்புப் படிகள் என்று வழங்க வேண்டும்,” என்று அடிப்படையான நடவடிக்கைகளைச் சுட்டிக்காட்டினார் ரெக்ஸ். அமரர் அறைகளை விரிவு படுத்துதல் போன்ற உடனடி நடவடிக்கைகளையும் அவர் வலியுறுத்துகிறார்.
சென்னை குழந்தைகள் மருத்துவ மனையின் இயக்குநர் பொறுப்பு உட்பட பல நிலைகளில் அரசு மருத்துவராக சேவை செய்துள்ள இவரது அனுபவ வார்த்தைகளை இனியாவது அரசும் மருத்துவத் துறையும் ஆராய்ந்து ஆவன செய்யுமா? சவக்கிடங்கு என்றிருந்த பெயரை அமரர் அறை என மாற்றியது கவுரமானதுதான். அந்த கவுரவம் அமரரானவர்களின் உடல்களுக்கும் ஏற்றத் தாழ்வின்றி கிடைத்தாக வேண்டாமா?
-ஹேமாவதி
நல்ல பதிவு, தொடருங்கள் தோழரே!
ReplyDelete