Sunday, July 7, 2013

கண்ணகியை எரித்த கொலை வழக்கு ! - ஆதவன் தீட்சண்யா


சாமிக்கண்ணு: பிரசரண்டு மகன் மருதுபாண்டியும் அவங்காளுங்க அஞ்சாறு பேரும் அன்னிக்கு (6.7.2003) காத்தால எங்கிட்ட வந்து உம்மவன் முருகேசன் எங்கே? பத்தாயிரம் ரூவா கடன் வாங்கிட்டு இன்னிக்கு நாளைக்கின்னு இழுத்தடிக்கிறான். எனக்கு இன்னிக்கு அவசரமா பணம் வேணும்னான். பத்தாயிரம் வாங்குற அளவுக்கு எம்மவனுக்கு ஒரு செலவுமில்லியேன்னு எனக்கு குழப்பம். எங்கயோ போயிருக்கான். வந்ததும் உங்ககிட்டு கூட்டியாறேன்னேன். அவன் வர்றவரைக்கும் காத்துனிருக்க முடியாது, நீ இப்பவே அவனை தேடிப் பிடிச்சு கூட்டியான்னு சத்தம் போட்டானுங்க. அவங்கப் பேச்ச தட்டமுடியுமா? சரின்னுட்டு எம்மவவூட்டுக்கு (வண்ணான்குடி காடு- குப்பநத்தத்துல இருந்து 25 கி.மீ. தூரமிருக்கும்) போய் பாத்துட்டு அங்கயில்லன்னா எங்க சொந்தக்காரங்க ஊருங்களுக்கும் பையனோட படிச்ச வங்க வூடுங்களுக்கும் போய் தேடி இழுத்தாறலாம்னு கிளம்பிப் போயிட்டேன்.

வேல்முருகன்: அன்னிக்கு காலையில் ஒரு கல்யாணத்துக்குப் போய்விட்டு வீடு திரும்பறப்ப என்னை வழிமறிச்ச மருதுபாண்டி எங்கடா உங்கண்ணன் முருகேசன்னு விசாரிச்சான். இங்கதான் எங்காவது இருப்பார்னு சொல்லிட்டு வூட்டுக்குப் போயிட்டேன். அண்ணனைத் தேடி எங்கப்பா போயிருக்கிறது எனக்குத் தெரியாது. கொஞ்சநேரம் கழிச்சு எங்க வீட்டுக்குள்ளாற புகுந்த மருதுபாண்டி கொடியில கழத்திப்போட்டிருந்த என் சட்டையை எடுத்து பாக்கெட்டைத் துழாவி அதிலிருந்த பஸ் டிக்கட்டையெல்லாம் பரிசோதிச்சான். எதுக்காக இப்படிப் பண்றேன்னு கேட்டேன். நெசமாவே உங்கண்ணன் எங்கயிருக்கான்னு உனக்குத் தெரியாதான்னான். நான் தெரியாதுன்னேன். அவன் பத்தாயிரம் ரூவா கடன் வாங்கியிருக்கான், இப்ப அவசரமா பணம் தேவை, அவனைக் காட்டுன்னு வற்புறுத்தினான். அவன் பேச்சிலிருந்து வேறெதையும் என்னால யூகிக்க முடியல. சரி வா வெளியபோலாம்னு அவன் கூப்பிட்டதை நம்பி சட்டையைப் போட்டுட்டு அவனோடு ரோட்டுக்குப் போனேன். ரோட்டோரத்திலிருந்த மோட்டார் ரூம் பக்கத்துல கூடியிருந்த அவங்க சாதிப் பையன்களோட சேர்ந்து என்னை அந்த ரூமுக்குள்ள தள்ளினான். பக்கத்து மைதானத்துல பந்து விளையாடிக்கிட்டிருந்தவங்களும் சேர்ந்துக்கிட்டாங்க.

உங்கண்ணன் எங்க இருக்கான்னு சொல்லப்போறியா இல்லையான்னு கேட்டு என்னை அடிக்க ஆரம்பிச்சாங்க. எங்கண்ணன் எங்க போயிருக்கார்னு தெரியல.. வந்ததும் விசாரிச்சு பணம் வாங்கியிருந்தா திருப்பித்தர ஏற்பாடு பண்றேன்... என்னை அவுத்து விடுங்க..ன்னு கெஞ்சினேன். யாரும் இரங்கல. அடிதாளாம கதறிக்கிட்டிருந்தேன். சித்தப்பா அய்யா சாமிக்கு எப்படியோ விசயம் தெரிஞ்சு ஓடிவந்து என்ன ஏதுன்னு அவங்கள விசாரிச்சார். முருகேசனை தேடிக் கொண்டாறது என்னோட பொறுப்பு, இவனை அவுத்துவுடுங்கன்னு கேட்டதுக்கு மொதல்ல அவனைக் கூட்டிவா, அப்புறம் பாக்கலாம்னு மறுத்துட்டாங்க.

அய்யாசாமி (தற்போது குப்பநத்தம் ஊராட்சி மன்றத்தலைவர்): நான் எதிர்பாத்த மாதிரியே முருகேசன் வண்ணான்குடி காட்ல அவங்கக்கா வூட்லதான் இருந்தான். எங்கயோ போயிட்டு அவனும் அப்பதான் அங்க வந்து சேர்ந்தானாம். அவங்கப்பாவும் (எங்கண்ணன்) அங்கதான் இருந்தார். நடந்த விசயத்த சொல்லி நீ வந்தாத்தான் உன் தம்பி வேல்முருகனை விடுவிப்பாங்க, உடனே கிளம்புடான்னு முருகேசனை வண்டியில ஊருக்கு அழைச்சினு வந்துடலாம்னு ரெடியாகிறப்ப சாயங்காலம் ஆறுமணி வாக்குல வேல்முருகனை விடுவிச்ச தகவல் கிடைச்சதால இப்ப உடனே போகவேணாம் காலையில போலாம்னு அங்கயே தங்கிட்டோம். மறுநாள் (7.7.2003) சாயங்காலம் முருகேசனோட நாங்க புதுக்கூரைப்பேட்டைக்கு திரும்பறதுக்குள்ள மருதபாண்டி ஆளுங்க எங்க வீட்டுக்கிட்ட வந்து பொம்பளைங்க கிட்ட தகராறு பண்ணிக்கிட்டிருந்தாங்க. முருகேசனை வேறஇடத்துல நிக்கவச்சுட்டு அவங்ககிட்டப் போனேன்.

என்னைப் பாத்ததும் முருகேசன் எங்கன்னு அடிக்க வந்தானுங்க. முருகேசன் பணம் வாங்கலங்கிறான் சொல்றான். நீங்க எதுக்கு இங்க தகராறு பண்றீங்கன்னேன். இல்ல அவனைக் காட்டு நாங்க பேசிக்கிறோம்னு ஒரே தள்ளுமுள்ளு. போய் முருகேசனை கூப்பிட்டேன். வர்றதுக்கு தயங்கினான். பணம் வாங்க லன்னா நேர்ல வந்து நான் வாங்கலன்னு சொல்லிட்டு வந்துடுன்னு நான்தான் ரொம்பவும் வற்புறுத்தி இழுத்துனுப் போனேன். வரமாட்டன்னு தயங்கினவனை நானே இழுத்துனு போயி அந்த படுபாவிங்ககிட்ட ஒப்படைச்சத நெனச்சாத்தான் இன்னமும் பதறது. பையனைப் பாத்ததும் மருதுபாண்டி, சோதி, கந்தவேல், ராமதாசுன்னு ஏழெட்டுப்பேர் வளைச்சுப் பிடிச்சு அடிக்க ஆரம்பிச்சானுவ. கடன் வாங்கியிருக்கான் பையனைக் கூட்டியான்னு சொன்னீங்க, கூட்டியாந்திருக்கேன். அதை விசாரிக்காம இப்படிப் போட்டு அடிச்சா என்னா அர்த்தம்னு தடுக்கப்போன என்னையும் அடிச்சானுங்க. துணியெல்லாத்தையும் கிழச்செறிஞ்சுட்டு அவனை வெறும் ஜட்டியோட நிக்கவச்சு அடிச்சானுங்க.

என்னால தாங்கவும் முடியல. தடுக்கவும் முடியல. அவன் கை காலை கட்டினானுங்க. சொல்லுடா பொண்ண எங்க ஒளிச்சுவச்சிருக்கிறன்னு ஆணுபொண்ணு அத்தனையும் அடிக்குது. காறித்துப்பறவங்களும் கழுத்த நெறிக்கறவங்களும்... எங்கண்ணியும் என்தங்கச்சியும் (முருகேசனோட அம்மா, அத்தை) ஒடியாந்து தடுத்தாங்க. அவங்களுக்கும் அடி. எனக்கு ஒண்ணும் புரியல. முருகேசன் எனக்குத் தெரியாதுன்னே சொல்லிக்கிட்டிருந் தான். இவனை இப்பிடியே கேட்டுக்கிட்டிருக்கிறதால பிரயோஜனமில்லன்னு சொல்லிக்கிட்டு அங்கயிருக்கிற கொழாவுக்குள்ள அவனை தலைகீழா எறக்கி இழுத்து சேந்தினாங்க. (நிலக்கரி இருக்கான்னு சோதனை போடறதுக்காவ என்.எல்.சி.காரங்க இந்த ஏரியாவுல இந்தமாதிரி அங்கங்க கொழா போட்டுருக்காங்க. அதுல ஒன்னுதான் இது. 300 அடி ஆழமிருக்கும். குறுகலானதுதான். 16 அங்குலமோ என்னமோ சைஸ். அனாமத்துப் பொணங்க அதுக்குள்ள நிறைய கிடக்கும்னு ஒரு பேச்சிருக்கு.) ரண்டாவது தடவ ரொம்ப ஆழத்துல எறக்கி மேல இழுத்தப்பதான் ‘கண்ணகி மூங்கத்துறைப்பட்டுல எங்க சொந்தக்காரங்க வூட்டுல இருக்கு’ன்னான் முருகேசன். கண்ணகிங்கிறது பிரசரண்டு துரைசாமி மவ. மருது பாண்டியோட தங்கச்சி. அவ்வளதுதான், அவங்க எதிர்பார்த்த தகவல் கிடைச்சிருச்சு, பையனை விட்ருவாங்கன்னு நெனைச்சேன். ஆனா வந்து வூட்டக்காட்டுடான்னு காருக்குள்ள என்னைத் தூக்கிப் போட்டுக்கிட்டு பத்து பத்துகால் மணிக்கு கிளம்பினாங்க. ராவோடராவா மூங்கத்துறைப்பட்டுக்கு போனோம். அங்கயிருந்து 100 மைல் வரும்.

சின்னப்புள்ள: பையனை கட்டிப்போட்டு அடிக்கிறாங் கன்னு கேள்விப்பட்டு நானும் என் நாத்தனாரும் அங்க ஓடினோம். எம்புள்ளைய மன்னிச்சிருங்க சாமி... என் காடுகரை எல்லாத்தையும் உட்டுட்டு இந்த தெசைப் பக்கமே வராம எங்கியாச்சும் கண்காணாத தேசத்துக்கு ஓடிப்போயி பொழைச்சுக்கிறோம்... எம்புள்ளைய வுட்டுருங்கன்னு கையடுத்துக் கும்புட்டு பிரசரண்டு கால்ல வுழுந்து கதறினேன். புள்ள வளக்கத் தெரியாத வல்லார ஓழின்னு திட்டிக்கிட்டே என்னையும் அடிச்சானுங்க. ஓடிப்போயிருன்னு துரத்தினாங்க. தம்புள்ள அடிவாங்கிச் சாகிறத ஒரு மரத்துக்குப் பின்னால ஒளிஞ்சிருந்து பாக்கற கெதி யாருக்கும் வரக்கூடாது. கண்ணகிக்கும் எம்மவனுக்கும் பழக்கமிருக்கிறது முந்தியே தெரிஞ்சிருந்தா நாங்களே அவனை தடுத்து காப்பாத்தியிருப்போம். தெரி யாமப் போச்சு. அய்யாசாமிய ஏத்திக்கிட்டு கார் மூங்கத் தொறைப்பட்டுக்கு போனப்புறமும் முருகேசனை அடிக்கிறதை நிறுத்தல. பொண்ணு வந்து சேரட்டும். இவனைக் கொன்னு எரிச்சிடுவம்னு பேசிக்கிட்டாங்க. எதுக்கும் அஞ்சாத பாவிங்களாச்சே, செஞ்சாலும் செய்வானுங்கன்னு பயந்து நாங்க ரெண்டுபேரும் எங்க சொந்தக்காரங்களோட விருத்தாச்சலம் போலிஸ் ஸ்டேசனுக்கு ஓடினம். ‘பறப்பையன் படையாச்சிப் பொண்ணைத் தொட்டா பாத்துக்கிட்டு சும்மா இருப்பாங்களா’ன்னு அங்கிருந்த போலிஸ்காரங்க என்னையவும் நாத்தனாரையும் அடிச்சு விரட்டுனாங்க. இன்ன விசயம்னு நாங்க சொல்லாமயே இதுக்காகத்தான் நாங்க வந்திருக்கம்னு போலிஸ்காரங்க சொல்றாங்கன்னா அவங்களுக்கு ஏற்கனவே விசயம் தெரிஞ்சிருக்குன்னுதானே அர்த்தம்? இனிமே இவங்கக்கிட்ட நின்னு புண்ணியமில்லன்னு மறுபடியும் புதுக்கூரைப் பேட்டைக்கு ஓடியாறம். அங்க யாரையும் காணல. இருட்டுலயே தேடுறம். பிரசரண் டுக்கு பங்காளியோட முந்திரிக்காட்டுக்குள்ள வந்த சத்தத்தக் கேட்டு அங்கப் போய் பார்த்தா ஊரே தெரண்டு நிக்கிது. எம்பையன் நடுவுல. வாய்விட்டு அழவும் முடியாம நாங்க இருட்டுல மறஞ்சி நின்னிருந்தோம்.

அய்யாசாமி: எங்க சொந்தக்காரங்க வூட்டுக்குள்ள (08.07.2003) ராத்திரி ஒன்னரை மணிக்குப் பூந்து தேடி கண்ணகிய இழுத்துப் போட்டுக்கிட்டு மூங்கத்துறைப்பட்டுல இருந்து வண்டி திரும்புச்சு. வழிநெடுக அந்தப் பொண்ணை பண்ணின சித்ரவதைய சொல்லி மாளாது. விடிகாலை 3மணி சுமாருக்கு புதுக்கூரைப்பேட்டை ஊருக்குள்ள போகாம வண்டி முந்திரித்தோப்புக்கு திரும்புச்சு. அங்க கைகால் கட்டி முருகேசனை கீழ தள்ளியிருந்தாங்க. பொண்ணு கிடைச்சிட்டதால பையனை இப்பவாச்சும் விட்டுருவாங்கன்னு நினைச்சேன். ஆனா, அவன் விழுந்து கிடக்குற எடத்துக்குப் பக்கத்துல இருந்த ஒரு முந்திரிமரத்துல என்னையும் கட்டிப்போட்டாங்க. அந்த எடத்துலயிருந்து கொஞ்சம் தள்ளியிருக்கிற மரத்துக்கிட்ட அந்தப் பொண்ணை கட்டிப்போட்டுட்டு வெங்கடேசனை காவல் வச்சுட்டு இங்க வராங்க. அதுக்குள்ள விடிஞ்சு ஏழுமணியாயிருச்சு. முன்னாடியே திட்டம் போட்டு எல்லாம் தயார் பண்ணியிருக்கானுங்க. நமக்குத் தெரியல. சோதி, மணி, கோதண்டபாணி, மொளையான்- இவங்கல்லாம் முருகேசனை அசையவுடாம அமுக்கிப் புடிச்சிக்கிட்டானுங்க. கந்தவேல் டப்பா மூடிய கத்தியால கீறித் தெறந்து டம்ளர்ல விஷத்த ஊத்திக் கொடுத்தான். பொண்ணோட அண்ணன் மருதுபாண்டி முருகேசன் வாய்ல விஷத்த ஊத்தினான். என் கண்ணு முன்னாடியே எம்புள்ள சாகுது. மரமாச்சும் அசையும். என்னால அதுவும் முடியாம கத்தறேன். அடுத்தாப்ல அந்தப் பொண்ணுக்கு ஊத்தப் பாக்குறாங்க. அது பல்லை இறுக்கி கடிச்சிக்கிட்டு வாயைத் தெறக்காம இருக்கு. அடிச்சு ஒதைச்சாலும் அது பிடிவாதம் குறையல. வாய் திறக்காததால அமுக்கிப் புடிச்சி காதுலயும் மூக்குலயும் விஷத்த ஊத்தினாங்க. நம்ம பொண்ணாச்சே...வேண்டாம் பாவம்னு எரக்கப்பட்டுத் தடுக்க ஒரு ஆள் இல்ல. ஊரே தெரண்டிருக்க ரண்டு உசுரும் போயிருச்சு. ரண்டு பொணத்தையும் தூக்கிக்கிட்டு சுடலைக்கு போனாங்க. என்னையும் இழுத்துக்கிட்டுப் போனாங்க கூடவே. பொண்ணை அவங்க சாதி சுடுகாட்டுலயும் பையனை சுடுகாட்டுக்கு பக்கத்துல இருக்குற ஓடையிலயும் (சுடுகாடு தீட்டாயிடக்கூடாதுன்னு) போட்டாங்க. அங்க வெறகுக்கட்டை அடுக்கி எல்லாமே ரெடியா இருந்துச்சு. கொன்னது படையாச்சிங்களா இருந்தாலும் எரிக்கறது எங்காளுங்களோட வேலை தானே. புதுக்கூரைப்பேட்டை காலனி ஆளுங்க(எங்க சொந்தக்காரங்கதான்)தான் ரெண்டு பொணத்தையும் எரிச்சாங்க.

அமராவதி (முருகேசனின் அத்தை): நானும் எங்கண்ணியும் எல்லாத்தையும் இருட்டுக்குள்ள இருந்து பாத்துக்கிட்டிருந்தோம். ஆனா ஒன்னும் பண்ண முடியல. விடிஞ்சி காத்தால ஏழுமணி சுமாருக்கு (8.7.2003) முருகேசனுக்கும் கண்ணகிக்கும் விஷத்தை ஊத்தி கொன்னு தூக்கிக்கிட்டு, கட்டிவச்சிருந்த எங்கண்ணன் அய்யாசாமியவும் கூட்டிட்டு சொடலைக்குப் போனாங்க. நானும் எங்கண்ணியும் மறஞ்சு மறஞ்சு பின்னால போனம். அப்ப சொடலைக்கு வந்த போலிஸ்காரர் (எஸ்.ஐ.யோ இன்ஸ்பெக்டரோ தெரியல) எரிஞ்சிக்கிட்டிருந்த முருகேசனை பூட்ஸ் காலால புரட்டிப் பாத்துட்டு எதுவுமே சொல்லாம கௌம்பிப் போயிட்டார். அதுக்கப்புறம் படையாச்சிங்களும் எரிய வுட்டுக்கிட்டிருந்தவங்களும் போயிட்டாங்க. நானும் அண்ணியும் பதைச்சுக்கிட்டு ஓடிப் பாத்தப்ப முருகேசன் வெந்து கரிக்கட்டையா கிடந்தான். நெஞ்சுக்கூடு மட்டும் வேகாம பொகஞ்சிக்கிட்டு இருந்துச்சு. நான் ஆத்தாமையில அதை அப்படியே கையால அள்ளிட்டேன். கையெல்லாம் பிசுபிசுன்னு என்னமோ ஒட்டுது. அவன வளக்க எங்கக் குடும்பம் எத்தினி கஷ்டப்பட்டிருக்கும்... வாழ்றதுக்குத்தான் கஷ்டப்பட்டம்னா செத்து முழுசா எரியறதுக்கும் குடுப்பினை இல்லாமப் போயிடுச்சேன்னு நெனைக்க நெனைக்க மனசே ஆறல. அப்பறம் நாங்க ரண்டு பேரும் அங்கயிருந்த செடிசெத்தைங்கள அரிச்சுப் போட்டு அது வேகற மட்டும் அங்கயே இருந்தோம். எரிஞ்சிருந்த அவன் கைவிரல்ல கருகிக்கிடந்த மோதிரத்தை எடுத்து எங்கண்ணிக்கிட்ட கொடுத்தேன். ஒரு தாய்க்கு அது போதுமா? அவ முருகேசனை பெத்தவ இல்ல சித்திதான்னாலும் எவ்வளவு பாசமா வளத்தா...

சாமிக்கண்ணு: எம்புள்ள இனி இல்லன்னு ஆயிட்டான். எனக்கு கல்யாணமாகி ரண்டு வருசம் கழிச்சுத்தான் முருகேசன் பொறந்தான். அதுக்காவ நானும் அவங்கம்மாவும் வேண்டாத சாமியில்ல. போகாத கோயிலில்ல. அவன்பேர்ல குலதெய்வத்துக்கு நேர்ந்துட்ட பன்னி நெஞ்சளவுக்கு வளர்ந்திருந்துச்சு. ரெண்டுமாசம் கழிச்சு பொங்க வைக்கணும்னு இருந்தேன். அதுக்குள்ள எம் புள்ளையே இல்லன்னு ஆயிருச்சே... அவங்கம்மா செத்தப்புறம் ரண்டாந்தாரமா சின்னப்புள்ளய கட்டி புள்ளைங்க பொறந்திருந்தாலும் முருகேசன்மேலதான் நாங்க உசுர வச்சிருந்தம். எல்லாம் போச்சு. பழனிவேலு வக்கீலு கூப்பிட்டார்னு அவரோட பள்ளிக்கூடத்துக்குப் போனா அங்க ஒரு 500 பேர் இருக்காங்க. அவர் என்னை பத்திரத்துல கையெழுத்துப் போடுன்னார். எதுக்குன்னு கேட்டேன். எங்களுக்குள்ள சமாதானமா போயிடறம்னு எழுதியிருக்கு. போடுன்னார். எம்புள்ளைய என்ஜினீர் காலேஜ்ல சேக்கறதுக்கும் காலேஜ் செலவுக்கும் என் நிலத்தை விக்கிறதுக்கும் நீதான் கையெழுத்து வாங்கின. இப்ப புள்ளைய பறிகொடுத்துட்டு நிக்கற என்கிட்ட நீ கேக்குறதுல எதாச்சும் நியாயமிருக்கான்னு திட்டிட்டு வந்துட்டேன். அப்புறம் விடுதலை சிறுத்தை கட்சிக்காரங்க வந்து திருமா வளவனோட போன்ல பேச வச்சாங்க. அவர் ஸ்டேசனுக்கு பேசிட்டு மறு படியும் எங்களக் கூப்பிட்டு தைரியம் சொன்னார். போலிஸ் நடவடிக்கை எடுப்பாங்கன்னார். நேர்ல பாக்கறதுக் காக மெட்ராஸ் போனோம். அவர் பேப்பர்காரங்களைக் கூப்பிட்டு விசயத்தைச்சொன்னார்.அதுக்கப்புறந்தான் பேப்பருங்கள்ல விசயம் வந்துச்சி. விசயம் வெளியில தெரியுதுன்னதும் ஆத்திரப்பட்ட போலிஸ், துரைசாமி வகையறாவுல நாலுபேரையும் எங்காளுங்க நாலுபேரையும் அரெஸ்ட் பண்ணிட்டாங்க. கொலைகாரங்கள அரெஸ்ட் பண்ணினா கரெக்ட். மகனை பறிகொடுத்த என்னையும் எங்க சொந்தக்காரங்களையும் எதுக்கு அரெஸ்ட் பண்ணனும்? இப்படியொரு அக்கிரமம் எங்கயும் உண்டான்னு நான் கேட்டதுக்கு அந்த எஸ்.ஐ. தமிழ்மாறன் என்னை லத்தியால அடிச்சான். கை வீங்கிருச்சு. உயிர்போற வலி. வைத்தியம் பண்ற துக்குக்கூட விடல. எங்களை மிரட்டிப் பணிய வைக்கிற துக்காவ, அவங்க பொண்ணை அவங்க கொன்னுட்ட மாதிரியும் எங்க பையனை நாங்களே கொன்னுட்ட மாதிரியும் ஜோடனையா கேஸ்போட்டு ரிமாண்ட் பண்ணி கடலூர் ஜெயில்ல அடைச்சிட்டாங்க. அப்புறம் ரத்தினம் ஐயா வந்துதான் என்னை வெளிய கொண்டாந்தார். வெளியவந்து எட்டாயிரம் ரூவா செலவழிச்சு என் கைக்கு வைத்தியம் பண்ணினேன்.

வழக்கறிஞர் ரத்தினம்: நக்கீரன்ல செய்திய பாத்துட்டுத்தான் நான் அந்த கிராமத்துக்கு வந்து இந்த குடும்பத்தைச் சந்திச்சேன். கொலைக்குற்றவாளிகளும் உள்ளூர் போலிசும் ஒரே சாதி. கொலைகாரனுங்க நல்ல வசதியோட இருக்கிறதால லஞ்சத்துக்கும் குறையில்ல. அதனால முருகேசன் குடும்பத்தை மிரட்டி வழக்கை ஒன்னு மில்லாம செஞ்சுடலாம்னு நினைச்சாங்க. பாதிக்கப் பட்டவங்களையே குற்றவாளியாக்கி சிறையில அடைச் சது மட்டுமில்ல. முதல் குற்றவாளி துரைசாமி ஊராட்சி மன்றத் தலைவர், தொடர்ந்து முப்பதுநாள் சிறையிலிருந்தா அவர் பதவி இழக்க நேரும்னு அரசு வழக்கறிஞர் சொன்னதை ஏத்துக்கிட்டு கடலூர் மாவட்ட நீதிபதி 23ம் நாள் அவரை ஜாமீனில் விடுதலை செஞ்சிட்டார். ஆனா மகனைப் பறிகொடுத்த சாமிக்கண்ணு 36வது நாள்தான் ஜாமீன்ல விடப்படறார். அந்தளவுக்கு நீதிமன்ற நடவடிக்கையும்கூட இவ்விசயத்தில கொலைகாரங்க ளுக்குத்தான் உதவியாயிருந்துச்சு. இனிமேல உள்ளூர் போலிசை நம்பமுடியாதுன்னு சென்னை உயர்நீதிமன்றம் போய் வழக்காடி வழக்கை 22.04.04 அன்று சி.பி.ஐக்கு மாத்தினோம்.

அய்யாசாமி: இதுக்கிடையில விடுதலை சிறுத்தையில இருக்குற எங்க சொந்தக்காரன் ஊத்தங்கால் சண்முகம் ஒருநாள் வந்தான். இந்தாங்க அண்ணன் (திருமாவளவன்) பேசறார்னு செல்போனை என்கிட்ட கொடுத்தான். ‘கேஸ் அதுஇதுன்னு விசயத்தை பெருசு பண்ணாதீங்க. படையாச்சிங்க ரொம்பக் கோவமா இருக்காங்க. நாளைக்கு அவங்களுக்கு எதிரா எதாச்சும் தீர்ப்பாயிட்டா அது காலத்துக்கும் பகையாயிரும்னார். எனக்கு திகீர்னு ஆயிருச்சு. என்ன இப்படி சொல்றீங்கன்னு கேட்டேன். அன்புமணி மூலமா ரொம்ப பிரஷர் தர்றாங்க... நீங்கதான் பக்குவமா முடிவெடுக்கனும்னு அவர் சொன்னதை என்னால நம்பவே முடியல. நான் போனை எங்கண்ணன் சாமிக்கண்ணுகிட்ட கொடுத்தேன்.

 சாமிக்கண்ணு: வழக்கை வாபஸ் வாங்கிடுங்கன்னார் திருமாவளவன். அதெல்லாம் வக்கீல் ஐயாதான் முடிவெ டுக்கனும்னு சொன்னேன். வழக்கு போட்டது நீங்க. இதுல வக்கிலுக்கு என்ன வேலை நடுவுல? நீங்க முடி வெடுங்க. ஒத்துக்கிட்டா பணம்கூட கணிசமா தர்றதா சொல்றாங்கன்னார் அவர். காசு வரும். எம்புள்ள வரு மான்னு கேட்டுட்டு போனை கட் பண்ணிட்டேன். அப்புறம் ஐயாவுக்கு போன்போட்டு விசயத்த சொன் னோம். அவர் இந்தப்பையன் சண்முகத்தைப் பிடித்து சத்தம் போட்டார். இந்த மாதிரி கட்டப் பஞ்சாயத்து வேலை செய்யற நெனப்பிருந்தா சொந்தக்காரன்னும் பாக்கமாட்டம்னு நாங்களும் திட்டி அவனை தொரத்தியுட்டோம்.

வழக்கறிஞர் ரத்தினம்: தனவேல்னு ஒரு ஐ.ஏ.எஸ். ஆபிசர் இந்த புதுக்கூரைப் பேட்டைக்காரர். துரைசாமி குடும்பத்துக்கு நெருங்கின சொந்தமாம். அவர் இப்ப மந்திரி அன்புமணிகூட இருக்கிறதா சொல்றாங்க. (தனவேல் திருநெல்வேலி கலெக்டரா இருந்தப்பதான் மாஞ்சோலை தொழிலாளர்கள் 17 பேரை சுட்டுக் கொல்ல உத்தரவிட்டார்) அவர்மூலமா அன்புமணிய தொடர்பு கொண்டு கேஸை ஒன்னுமில்லாம பண்ணிடுவோம்னு இவங்கள மிரட்டறாங்க.

அய்யாசாமி: அதுக்கப்புறம் விசாரிச்சதுல தெரிஞ்சது என்னன்னா, எங்காளுங்க நாலு பேர் மேலயும் கேஸ் போடறதுக்கு ஐடியா கொடுத்ததே விடுதலை சிறுத்தை கடலூர் மாவட்ட அமைப்பாளர் கருப்புசாமிதானாம். எங்க மேலயும் கேஸ்போட்டாத்தான் பயந்து போய் பேச்சுவார்த்தைக்கு வருவோம்னு இந்த ஏற்பாடு. அப்பு றம் ஒருநாள் வி.சி. மாநில விவசாய அணி செயலாளர் திருச்சி கிட்டு கோர்ட்டுக்கே வந்து எங்ககிட்ட சமாதானமா போகச் சொல்லி பேசினார். நாங்க முடியாதுன்னு சத்தம் போட்டு அனுப்பிட்டோம். பிறகு நெய்வேலி சிந்தனைச் செல்வன்.

ரத்தினம்: சிபிஐ ஆரம்பத்துல ஒழுங்காத்தான் விசாரணை நடத்துச்சு. தலித்கள் பாதிக்கப்பட்டிருக்கிறதால விடுதலை சிறுத்தை பிரச்னை பண்ணும்னு பயப்பட வேண்டி யதில்லை, அதை படையாச்சிங்க சரிக்கட்டிட்டாங்கன்னு தெரிஞ்சோ அல்லது வேறு என்ன காரணமோ திடீர்னு குற்றப்பத்திரிகையில முருகேசனோட சித்தப்பா அய்யாசாமியை நாலாவது குற்றவாளியா சேர்த்தது சி.பி.ஐ. முருகேசன் வாயில விஷத்தை ஊத்தினது அய்யாசாமிதான்னு குற்றச்சாட்டு. கொலைக்குற்றவாளிகளான சாதி வெறியர்களை காப்பாத்தி, பாதிக்கப்பட்ட குடும்பத்தாரையே தண்டிக்கிற இந்த முயற்சியை கடுமையா எதிர்த்த பிறகு, நேரடி சாட்சி யாரும் இல்லாததாலதான் அவரை குற்ற வாளியா சேர்த்திருக்கோம். அவர் குற்றத்தை ஒப்புக்கிட்டு அப்ரூவராயிட்டா கேஸ் வலுவா யிடும். அவரை நாங்க விடுவிச்சுடுவோம்னு ஒரு வியாக்யானம் சொல்றாங்க. முருகேசனோட அம்மா சின்னப்புள்ளயும் அத்தை அமராவதியும் கொலையை நேரடியா பாத்த வங்க. அவங்களை சாட்சியா போடலாம். ஆனா சிபிஐ மறுக்குது. தலித்களை பணிய வைக்கிறதுக்கு பாதிக்கப் பட்ட அவங்க மேலயும் கேஸ் போட்டுவழிக்கு கொண்டு வரணும்கிறதுதான் இதோட நோக்கம். இப்ப குற்றப்பத்திரிகையிலிருந்து அய்யாசாமியை விடுவிக்க சட்டரீதியா போராட வேண்டியிருக்கு. (இந்த சிபிஐ டீம் தான் கயர்லாஞ்சி படுகொலையை விசாரிக்கப் போனது. ஊரறிய அங்கே நடந்த பாலியல் வன்முறைகளை மறைச்சு அப்படியேதும் நடக்கலன்னு அறிக்கை கொடுத்திருக்கு)

வேல்முருகன்: விசயம் இத்தோட முடியல. தொடர்ந்து அவங்க எங்களுக்கு பலவிதமா நெருக்கடி தர்றாங்க. படையாச்சிங்கள தாக்கினதா எங்கண்ணன் பழனிமுரு கன் மேல ஒரு பொய்வழக்கு. போகிப்பண்டிகை அன்னிக்கு ராத்திரி நான் காலேஜ்ல இருந்து பொங்கல் லீவுல வீட்டுக்கு வந்தேன். ராத்திரி ஒன்னரைமணிக்கு வீட்டு கதவை உடைச்சு உள்ளே வந்த அண்ணாத்துரை யும் மத்த போலிஸ்காரங்க அஞ்சு பேரும் எங்கடா உங்கண்ணன்னு கேட்டு என்னை அடிச்சு இழுத்துப் போனாங்க. ஸ்டேசனுக்குப் போயும் அடி. பழனிமுருகனை ஒப்படைச்சிட்டு இவனை கூட்டிட்டுப் போங்கன்னு சொல்லிட்டாங்க. ரத்தினம் ஐயா தலை யிட்ட பின்னாடிதான் நான் வெளிய வர முடிஞ்சது. பழனி முருகன் கண்டிசன் பெயில்ல ஸ்டேசனுக்கு கையெழுத்துப் போட தினமும் போயிட்டு வர்றார்.

 பழனிமுருகன்: கையெழுத்துப் போட உள்ள போனா ஒவ்வொரு நாளும் ஒவ்வொருவிதமா மிரட்டல். பத்து மணிக்கு முன்னாடியும் வரக்கூடாது பின்னாடியும் வரக்கூடாது... இன்னிக்கு காலையில போனப்ப, என்னடா ஐகோர்ட் வக்கீல் சப்போர்ட் இருக்குன்னு ஆட்டம் போடறீங்களா... ரவுடி லிஸ்ட்ல சேர்த்து என்கவுண்டர்ல போட்டுத் தள்ளிருவோம்னு எஸ்.ஐ.பழமலை மிரட்டுறார். இன்னம் ரண்டுநாள் எப்படி அங்க போயிட்டு வர்றதுன்னே தெரியல.

அய்யாசாமி: இவன் எங்கக்கா மகன். ( காதைச் சுற்றி கட்டு போட்டுக் கொண்டிருந்தார்) நேத்து இவனை வழி மறிச்சு தகராறு பண்ணி மமுட்டியால வெட்ட வந்திருக்கான் ஒரு படையாச்சிப் பையன். ஒதுங்கி தப்பிச்சிட்டான். ஆத்திரம் அடங்காம கத்திய வீசியிருக்கான். இவன் தலைய சாய்ச்சதுல கத்தி பட்டு காதறுந்துருச்சி. ஸ்டேசனுக்குப் போனா அவன் வெட்டு வான்னு தெரியுமில்ல, அங்க எதுக்குப் போனேன்னு கேக்குறாங்க. கடைசில இவன் மேலயே கேஸ் போடறதுக்கு ஏற்பாடு பண்ணிக்கிட்டிருக்காங்க.

 வேல்முருகன்: பஸ்கூட இல்லாத இந்த ஊர்ல பொறந்து வளந்து ஒரு தலித், பி.இ பட்டதாரியா உருவாகறது எவ்வளவு கஷ்டம்? படிப்பு முடிஞ்சதும் பெங்களூர்ல வேலை கிடைச்சது. அப்பவே ஏழாயிரம் சம்பளம். கெமிக்கல் இன்ஜினியரிங் முடிச்சிருந்ததால அவர் இன்னிக்கெல்லாம் இருந்திருந்தா எவ்வளவோ பெரிய வேலைக்கெல்லாம் போயிருக்க முடியும். அவ்வளவை யும் ஒருநொடியில காலியாக்கிட்டாங்க. எங்கண்ணன் கொலைக்கு நியாயம் கேட்டு நாங்க உறுதியா இருக்கறத அவங்களால சகிச்சுக்க முடியல. அதனால தொடர்ந்து அவங்க எங்களுக்கு தொல்லை கொடுக்கறாங்க. எல்லாத்தையும் தாங்கிக்கிறதுன்னு முடிவோட இருக்கோம். (18.02.2007 அன்று பேரா.அய்.இளங்கோவன், எழுத்தாளர் ஆதவன் தீட்சண்யா, வழக்கறிஞர்கள் லூஸி, செபாஸ்டியன், ரஜினிகாந்த், மங்கம்மாள், செங்கொடி, மூர்த்தி உள்ளிட்டோர் அடங்கிய உண்மை அறியும் குழு கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் வட்டம் குப்பநத்தம் கிராமத்திற்கு சென்று கொலையுண்ட முருகேசன் குடும்பத்தாரை சந்தித்து திரட்டிய தகவல்கள் இவை. என்எல்சி தோண்டியிருக்கும் குழாய், விஷம் புகட்டப்பட்ட இடம், எரிக்கப்பட்ட இடம் என கொலையோடு தொடர்புடைய இடங்களை பார்வையிட்டோம். எரிக்கப்பட்ட ஓடையில் அதற்கான சுவடுகளே இல்லை. ஏற்கனவே அங்கு கிடைத்த முருகேசனின் ஒன்றிரண்டு எலும்புகள் வழக்குக்காக பாதுகாக்கப்படுவதாக அறிந்தோம். தமது சொந்த ஊரான குப்பநத்தத்தில் உறவினர்களோடு ஏற்பட்ட மனஸ்தாபத்தினால் புதுக்கூரைப்பேட்டை தலித் காலனிக்கு குடிபெயர்ந்திருந்த சாமிக்கண்ணு குடும்பம் முருகேசன் கண்ணகி படுகொலைக்குப் பிறகு குப்பநத்தத்திற்கே திரும்பிவிட்டது. முருகேசனின் தம்பி வேல்முருகன்

(திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி மாணவர்) வழக்கில் உறுதியாயிருப்பதால் அவரும் சாதி வெறியர்களின் இலக்காகியிருக்கிறார். மேலவளவு முருகேசன் உள்ளிட்ட ஆறு தலித்கள் கொல்லப்பட்ட வழக்கில் - கொலை மிரட்டலுக்கும் அஞ்சாது- தலித்களுக்கு நீதியும் குற்றவாளிகளுக்கு தண்டனையும் பெற்றுத்தந்த வழக்கறிஞர் இரத்தினம் அவர்கள், கண்ணகி-முருகேசன் வழக்கிலும் மிகுந்த அக்கறை கொண்டுள்ளார். அவருடைய தலையீடும் உதவியும்தான் இன்று முருகேசன் குடும்பத்தை உள்ளூர் சாதிவெறியர்கள், காவல்துறையினர், துரோகிகள் யாவரி டமுமிருந்தும் பாதுகாக்கிறது. இக்கொலைகளை வெளியுலகுக்கு கொண்டு வந்து பாதிக்கப்பட்ட தலித்களுக்கு நியாயம் கிடைப்பதற்காக தொடக்கம் முதலே பணியாற்றி வரும் மனிதஉரிமைப் போராளி புதுவை சுகுமாரன் இதுகுறித்த அனைத்துத் தகவல்களையும் திரட்டிவைத்துள்ளார். பாதிக்கப்பட்ட ஒரு தலித் குடும்பத்தை வஞ்சிப்பதற்கு துணைபோகிற வி.சியின் செயல்பாட்டை விமர்சிக்கிறவர்களை தலித் விரோதிகளென சித்தரிக்கும் போக்கு தலைதூக்கியுள்ளது. எனவே விசி அமைப்பினர் யாரையும் எங்கள் குழு சந்திக்கவில்லை. இருவரும் எரிக்கப்படுவதை காணச் சகியாமல் தொலைபேசி மூலம் போலிசுக்கு தெரிவித்த மனசாட்சியுள்ள யாரோ ஒரு படையாச்சி அங்கு மறைந்து வாழ்கிறார். யாரெனத் தெரிந்தால் கண்ணகிக்கு நேர்ந்த கதி அவருக்கும் நேரக்கூடும். எனவே அவரை தேடிப் பேச எங்கள் குழு முயற்சிக்கவில்லை. முருகேசன் குடும்பத்தார் மீது உள்ளுர் போலிசார் கொண்டிருக்கும் வன்மம் இன்னும் தணியவில்லை. இதுகுறித்து உண்மையறியும் குழு சார்பில் விருத்தாச்சலம் காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார்கடிதம் தரப்பட்டுள்ளது. ஒருவர் திருமணம் செய்துகொள்வதற்கான எல்லையே சாதியாக வரையறுக்கப்பட்டுள்ளது. ஆண்பெண் ரத்தக் கலப்பு ஒரு சாதிக்குள்ளேயே நிகழும்போது உருவாகும் சுத்தரத்தம் மறுபடியும் சாதியத்தையே தழைக்கச் செய்கிறது. எனவே வெறும் உணர்வாக மட்டுமேயல்லாது வாழ்வில் கடைபிடிக்க வேண்டிய நெறியாகவும் ஒவ்வொரு தனிமனிதனின் மீதும் சாதி சுமத்தப்பட்டுள்ளது. இதை உயிரைக் கொடுத்தோ எடுத்தோ பாதுகாக்க வேண்டும் என்பதுதான் மானம் என்று போற்றப்படுகிறது. இதில் எவ்வித ஊசலாட்டத்திற்கும் ஒரு பெண் ஆளாகிவிடக்கூடாது என்பதானாலேயே கற்பு, புனிதம், பத்தினி, பால்யவிவாகம், உடன்கட்டை, கைம்மை ஆகியவற்றை அவளுக்கு ஒழுக்கங்களாக போதித்து வளர்க்கிறது சாதியச் சமூகம். பெண் இந்த ஒழுக்கங்களை வழுவாது பாதுகாக்கிறாளா என்பதை ஒற்றர்களைப் போல வேவுபார்ப்பதும், மீறும் பெண்களை ஒழுங்குபடுத்தி சுயசாதி ஆதிக்கத்திற்குள் பிணைத்துப் போடுவதும்தான் நல்லதொரு குடும்பத்தின் இலக்கணமாக மாற்றப்பட்டுள்ளது. சாதிக் கொடுமைகள் நிகழும்போது களத்தில் தலையிடாமல், சாதியத்தின் தோற்றம், வளர்ச்சி, இன்றைய நிலை என எல்லாவற்றுக்கும் காரணகாரியங்களோடு வியாக்கியானம் பேசி நிம்மதி கொள்கிறவர்களும், சாதியம் நீடிப்பதற்கான அடிப்படைக் காரணங்களை கண்டு கொள்ளாமல் அவ்வப்போதான கொடுமைகளை மட்டுமே எதிர்க்கிற உணர்ச்சிப்பிழம்புகளும் சாதியம் நீடிக்கவே ஒத்துழைக்கின்றனர். கலாச்சாரம் என்கிற சாதி அனாச்சாரங்களுக்கான தத்துவார்த்தத் தலைமையை பார்ப்பனர்களும் செயலாக்கப் பொறுப்பை இடைநிலைச் சாதியினரும் பகிர்ந்து கொண்டுள்ளனர். இவ்விரண்டு பிரிவுகளிலும் உள்ள சாதி மறுப்பாளர்கள் நீங்கலாக மற்றவர்களின் சாதியார்ந்த நடவடிக்கைகளை எதிர்த்த ஒருமுகப்பட்ட செயல்பாடுகளே இனியொரு கண்ணகியும் முருகேசனும் எரியுறாமல் காப்பாற்றும். எந்த புரட்சிகர வசனங்களும் பேசாமல் இந்த நியதிகளையெல்லாம் மீறிவந்த கண்ணகி தன் குடும்பத்தாராலேயே எரிக்கப்பட்டுவிட்டாள். இதுபற்றி யாதொரு பிரக்ஞையும் இல்லாமல் மதுரையை எரித்த கண்ணகி பற்றியே மாய்ந்து மாய்ந்து பேசிக் கொண்டிருக்கிறது தமிழ்ச் சமூகம். சாதிகடந்த ரத்தக்கலப்பு நிகழாமல் சாதியம் ஒழியாது என்றனர் அம்பேத்கரும் பெரியாரும். தூய்மைவாதத்திற்குள் ஒளிந்து கொண்டிருக்கும் எந்தவொரு சாதியையும் தீட்டுப்படுத்துவது என்பதல்ல இதன் பொருள். மனிதன் என்ற பேரடையாளத்தை நோக்கி ஒவ்வொரு தனிமனிதனும் நகர வேண்டிய பண்புரீதியான மாற்றத்தையே அவர்கள் முன்மொழிந்தனர். கண்ணகியும் முருகேசனும் தங்களது உயிரைக் கொடுத்து வழிமொழிந்துள்ளனர். காவல்நிலையச் சாவுகள், காவல்நிலைய பாலியல் வன்முறைகள், மனிதவுரிமை மீறல்கள் போன்றவை நிகழும்போது தலையிடுகின்ற பல்வேறு மக்கள் இயக்கங்கள் இப்படுகொலை குறித்து கண்டும் காணாமல் இருப்பதில் ஆச்சர்யப்பட ஏதுமில்லை. பொத்தாம் பொதுவான பிரச்னைகளில் ஆட்சியாளர்களையோ அரசு நிர்வாகத்தையோ அமெரிக்காவையோ கண்டிப்பது எளிதானதே. ஆனால் இப்பகுதியில் செல்வாக்குள்ள படையாச்சிகளின் சாதிவெறியைக் கண்டித்துவிட்டு அங்கே எவ்வாறு அரசியல் நடத்துவது என்கிற அச்சமும்கூட காரணமாயிருக்கலாம். ஆனால், தனித்துவிடப் பட்டுள்ள முருகேசனின் குடும்பம் இன்னும் தாங்கவேண்டிய துயரங்களுக்காக ஒரு போராளியைப் போல காத்துக்கொண்டிருக்கிறது. நாங்கள் பேசிக் கொண்டிருந்தபோது மணிகண்டன் ( 14 ) என்ற சிறுவன் மிகுந்த கவனத்தோடு எல்லாவற்றையும் கேட்டுக்கொண்டிருந்தான். அவனிடம் பேச்சு கொடுத்தோம். எங்க ஊரும் புதுக்கூரைப்பேட்டைதான். எங்கப்பா டி.அஞ்சாபுலி. அம்மா லட்சுமி. அம்மாவுக்கு இந்த குப்பநத்தம்தான் ஊர். பிரசரண்ட் மவன் மருதுபாண்டி எங்கம்மாவ வச்சிருக்கான். அவன் பொண்டாட்டி வெண்ணிலாவ தொரத்திட்டான். எப்பவும் எங்கூட்லியே இருப்பான். எங்கப்பாவால எதுத்து கேக்க முடியல. 2003 ல செத்துட்டார். நெஞ்சுவலின்னு சொன்னாங்க. (ஆனால் அடக்கத்தின் போது வெஷம் வச்சி கொன்னுட்டு நெஞ்சுவலின்னு நாடகமாடுறீங்களான்னு ஒருவர் சத்தம் போட்டிருக்கார். இரண்டுநாள் கழித்து அவரது வீடு எரிக்கப்பட்டது)

அங்கிருந்தா எதாச்சும் பண்ணிடுவான்னு எங்க பாட்டி இங்க குப்பநத்தத்துக்கு என்னை கூட்டியாந்திருச்சு. இங்கிருந்துதான் ஸ்கூல் போறேன். 9வது படிக்கிறேன்.... என்றான்.

எஸ்.சி பையன்கிட்ட பழகினதுக்காக தங்கச்சிய கொன்னு எரிச்ச அந்த மருதுபாண்டி, எங்கம்மாகிட்ட வர்றானே அதுக்கு அவனை என்ன பண்றதுன்னு கேட்டான். அவன் முகத்தையே பார்க்க முடியவில்லை. அத்தனைக் கடுமை. யாரும் பதில் சொல்லவில்லை. பதில் தெரியவில்லை.

புதுவிசை: ஏப்ரல் - ஜூன் 2007

0 comments:

Post a Comment

Labels

Coca Cola (1) Peak Oil (1) Permaculture (1) Power of Community (1) Renewable energy (1) Solar energy (1) SOPA (1) sustainable agriculture (1) அ.குமரேசன் (6) அங்காடிதெரு (1) அணு ஆற்றல் (2) அணுமின் (1) அண்ணா (4) அண்ணா நூலகம் (1) அதிர்ச்சி (1) அத்வானி (2) அந்நிய முதலீடு (2) அபிநயா (1) அப்துல் கலாம் (1) அப்பணசாமி (2) அமெரிக்கா (20) அம்பானி (1) அம்பேத்கர் (9) அரசியல் (177) அரசியல்.நிகழ்வுகள் (6) அரசு (14) அரசு மருத்துவமனை (1) அரசு விடுதி மாணவர்கள் (1) அரவான் (1) அருந்ததியர் (1) அர்ஜெண்டினா (1) அலசல் (1) அவலம் (19) அழகு (1) அறிமுகம் (1) அனுபவம் (28) அன்னா ஹசாரே (1) அஜயன் பாலா (1) ஆ.ராசா (1) ஆணையம் (2) ஆதவன் தீட்சண்யா (3) ஆப்கானிஸ்தான் (1) ஆப்பிரிக்கா (2) ஆர்.மீனா (1) ஆர்எஸ்எஸ் (2) ஆவணப்படம் (3) ஆனந்தன் (2) இ.எம்.ஜோசப் (1) இ.பா.சிந்தன் (22) இட ஓதுக்கீடு (3) இடஒதுக்கீடு (1) இடதுசாரிகள் (4) இணையம் (2) இதழ்கள் (6) இந்தியா (69) இந்துத்துவா (8) இந்துஜா (1) இமு (2) இமு டிச11 (5) இமு நவமபர் 2011 (6) இயக்கம் (7) இயக்குனர் ஷங்கர் (1) இரா.சிந்தன் (5) இரா.செழியன் (2) இரா.நடராஜன் (3) இராம.கோபாலன் (1) இல.சண்முகசுந்தரம் (2) இலக்கியம் (38) இலங்கை (6) இலங்கைத் தமிழர் (4) இலவசக் கல்வி (1) இலவசங்கள் (1) இளவரசன் கொலை (1) இளைஞர் முழக்கம் (11) இஷ்ரத் (2) இஸ்ரேல் ஆக்கிரமிப்பு (1) இஸ்லாம் (3) ஈராக் (1) ஈரான் (2) உ.வாசுகி (1) உச்ச நீதிமன்றம் (1) உணவு நெருக்கடி (2) உதயசங்கர் (1) உத்தப்புரம் (1) உயர்கல்வி (2) உரையாடல்கள் (2) உலக சினிமா (4) உலகமயம் (5) உலகம் (46) உளவியல் (1) உள்ளாட்சி (1) உள்ளாட்சித் தேர்தல் (1) ஊடகங்கள் (14) ஊடகம் (8) ஊழல் (30) எடியூரப்பா (1) எம்.எப்.ஹூசேன் (1) எம்.சிவக்குமார் (2) எரிசக்தி (1) எல்.கே.ஜி (1) என்.ஜி.ஓ (1) என்கவுண்டர் (1) எஸ். பாலா (1) எஸ்.கண்ணன் (1) எஸ்.கருணா (3) எஸ்.பி.ராஜேந்திரன் (3) எஸ்.வி.வேணுகோபாலன் (2) ஏகாதிபத்தியம் (13) ஏமன் (1) ஒபாமா (4) ஓம்பிரகாஷ் வால்மீகி (1) ஓளிப்பதிவு (1) ஃபாக்ஸ்கான் (1) கச்சத் தீவு (1) கட்டுரை (51) கட்டுரைகள் (2) கணிணி (2) கணினி தொழில் நுட்பம் (1) கமல்ஹாசன் (1) கம்யூனிசம் (12) கருணாநிதி (11) கருத்து சுதந்திரம் (1) கருத்துரிமை (3) கலைஞர் (6) கல்வி (14) கவிதை (21) கவிதைகள் (1) கறுப்புப்பணம் (3) கனிமொழி (2) காங்கிரஸ் (10) காதல் (2) கால்பந்து (1) காவல்துறை (4) காஷ்மீர் (1) கி.பார்த்திபராஜா (1) கிங்பிஷர் (1) கியூபா (4) கிரீஸ் (1) குடும்பம் (1) குட்டி ரேவதி (1) குப்பன் சுப்பன் (1) குலாத்தி (1) குழந்தைகள் (9) குழந்தைகள் கடத்தல் (1) குஜராத் கலவரம் (1) குஜராத் படுகொலைகள் (1) கூகிள் அந்தரங்கம் (1) கூடங்குளம் (2) கே.சாமுவேல்ராஜ் (1) கே.பாலமுருகன் (1) கேள்விகள் (1) கைப்பற்றுவோம் போராட்டம் (1) கோவில் (1) ச.தமிழ்ச்செல்வன் (1) ச.மாடசாமி (1) சக்திஜோதி (1) சங்கமம் (1) சசிகலா (1) சச்சின் (1) சட்டசபை (2) சட்டம் (4) சத்யஜித் ரே (1) சந்திரகாந்தன் (1) சமச்சீர் கல்வி (4) சமவூதியம் (1) சமூக நீதி (2) சமூக வலைத்தளம் (1) சமூகப் பாதுகாப்பு (2) சமூகம் (177) சம்பு (1) சரத் பவார் (1) சர்வதேச பெண்கள் தினம் (1) சல்மான் ருஷ்டி (1) சா.கந்தசாமி (2) சா.செயக்குமார் (1) சாகித்திய அகாதமி விருது (1) சாக்லேட் (1) சாதீயம் (4) சாரா விஜி (2) சாலிம் அலி (1) சி.பி.எம் (9) சிக்கிம் (1) சிந்தனை (5) சிபி (1) சிராஜுதீன் (1) சில்லரை வர்த்தகம் (4) சிறப்பு பொருளாதார மண்டலங்கள் (1) சிறுகதை (12) சினிமா (52) சினிமா செய்திகள் (4) சினிமாச் செய்திகள் (4) சீத்தாராம் யெச்சூரி (2) சு.பொ.அகத்தியலிங்கம் (2) சு.வெங்கடேசன் (1) சுகாதாரம் (1) சுதிர் ரா (1) சுயமரியாதைத் திருமணம் (1) சுவாரசியம் (1) சுற்றுப்புறச் சூழல் (3) சூர்யா (1) செம்மலர் (4) செம்மலர் அக் 2011 (4) செய்திகள் (112) சென்னை (1) சோவியத் (1) சோஷலிசம் (1) டெல்லி (2) டேம் 999 (1) த.தமிழரசி (1) தகவல் உரிமை (1) தகவல் திருட்டு (2) தண்ணீர் (3) தமிழக மீனவர்கள் (1) தமிழகம் (66) தமிழர் (1) தமிழ்ச் சினிமா (1) தமிழ்நதி (1) தமுஎகச (4) தலித் (21) தற்கொலை (1) தனியார்மயம் (4) தனுஷ் (1) தி.க (2) திமுக (1) திரிணாமுல் (1) திருப்பூர் (2) திருமணம் (2) திரைக்குப் பின்னால் (2) திரைத்துறை (1) திரைப்பட விழா (1) திரைப்படம் (4) தினகரன் (1) தினமணி (3) தீக்கதிர் (9) தீண்டாமை (22) தீண்டாமையின் அடையாளங்கள் (1) தீபாவளி (1) தேசியச் செய்திகள் (4) தேர்தல் (4) தொண்டு நிறுவனங்கள் (1) தொலைக்காட்சி (2) தொழிலாளர் (6) ந.பெரியசாமி (1) நகர்ப்புற விவசாயம் (1) நகைச்சுவை (1) நக்கீரன் (1) நதிம் சயித் (1) நந்தலாலா (1) நந்தன் (1) நரேந்திர மோடி (6) நலத்திட்டங்கள் (2) நவம்பர் புரட்சி (1) நாடகம் (1) நாடாளுமன்றத் தேர்தல் 2014 (2) நாணய மதிப்பு (1) நாறும்பூநாதன் (1) நிகழ்வுகள் (154) நிலப்பிரபுத்துவம் (1) நிலமோசடி (1) நீதித்துறை (2) நீலவேந்தன் (2) நுகர்வுக் கலாச்சாரம் (2) நூல் அறிமுகம் (12) நூல் வெளியீடுகள் (1) நெல்சன் மண்டேலா (1) நேட்டோ (2) நையாண்டி (26) நையாண்டி் (14) ப.சிதம்பரம் (3) பசுபதி (1) படுகொலை (3) படைப்புகள் (2) பட்ஜெட் (1) பணவீக்கம் (2) பதிவர் வட்டம் (3) பதிவர்வட்டம் (1) பதிவுலகம் (1) பரிந்துரைகள் (5) பழங்குடி (1) பள்ளிக்கூடம் (1) பறவைகள் (1) பன்னாட்டுக் கம்பெனிகள் (3) பா.ஜ.க (3) பாகிஸ்தான் (2) பாடல் (5) பாதல் சர்க்கார் (1) பாதுகாப்பு (1) பாரதி (2) பாலபாரதி (1) பாலஸ்தீனம் (1) பாலியல் வன்முறை (6) பாலு மகேந்திரா (1) பால் சமத்துவம் (1) பாஜக (1) பி.சுகந்தி (1) பி.ராமமூர்த்தி (1) பிடல் காஸ்ட்ரோ (3) பிரணாப் முகர்ஜி (1) பிரபாத் பட்நாயக் (3) பிரளயன் (2) பிரிட்டன் (1) பிர்தவ்ஸ் ராஜகுமாரன் (1) பிளின் (1) பு.பெ.நவமபர் 2011 (1) புகைப்படங்கள் (1) புதிய பரிதி (2) புது விசை (12) புதுமை (1) புத்தக அறிமுகம் (2) புத்தகக் கண்காட்சிகள் (2) புத்தகம் (18) புத்தகம் பேசுது (17) புத்தகம் பேசுது நவம்பர் 2011 (8) புத்தகாலயம் (2) புத்தாண்டு (1) புபே (2) புபே டிச11 (8) புரட்சி (2) புவி (1) புவி டிச11 (5) புவி நவ 2011 (7) புனைவு (1) புஷ் (1) பெட்ரோல் (7) பெண் (11) பெண் விடுதலை (1) பெண்குழந்தை (1) பெண்ணியம் (9) பெண்ணெழுத்து (1) பெரியார் (2) பெருமுதலாளிகள் (7) பேட்டி (2) பேரா.சிவசுப்பிரமணியன் (2) பேஸ்புக் (1) பொருளாதார நெருக்கடி (2) பொருளாதாரம் (24) போக்குவரத்து (1) போராட்டம் (15) போலீஸ் தாக்குதல் (3) ப்ரிசம் (4) ப்ரிசம் - தகவல் திருட்டு (7) ப்ரியா தம்பி (1) மக்களுக்கான மருத்துவம் (1) மக்கள் நலப்பணியாளர்கள் (2) மக்கானா (1) மத அடிப்படை வாதம் (1) மதவெறி (3) மதுசூதனன் (1) மம்தா (3) மம்முட்டி (1) மரபணு (1) மலாலாய் சோயா (1) மவோயிஸ்டுகள் (1) மன்மதன் அம்பு (1) மன்மோகன்சிங் (10) மா ற்று (1) மாட்டுக்கறி (1) மாதர் சங்கம் (1) மாதவராஜ் (2) மாவோ (1) மாற்ற (1) மாற்று (223) மின்கட்டணம் (1) மின்சாரம் (1) மீள்பார்வை (2) முதலாளி (1) முதலாளித்துவம் (11) முத்தமாக மாறேன் (1) முத்துக்கண்ணன் (1) முல்லைப் பெரியாறு (7) முறைகேடுகள் (5) மெகாசீரியல் (1) மே.வங்க அரசு (1) மே.வங்கம் (1) மேதினம் (1) மேற்கு வங்கம் (1) மொக்கை (1) மொழி (2) மொழிபெயர்ப்பு (1) மோசடி (1) மோடி (3) மோனிகா (1) யுத்தம் (2) ரத யாத்திரை (1) ரமேஷ் பாபு (2) ராகுல் காந்தி (2) ராடியா (2) ராஜ பக்‌ஷே (1) ரிலையன்ஸ் (1) ருமேனியா (1) லட்சுமணப்பெருமாள் (2) லெனின் (2) லோக்பால் (5) வசந்த பாலன் (1) வண்ணக்கதிர் (1) வரலாறு (19) வலைப்பூக்கள் (1) வழக்கு விசாரணை (1) வாசிப்பு (5) வாச்சாத்தி (1) வால் ஸ்டிரிட் (3) வால்மார்ட் (1) வால்ஸ்டிரிட் போராட்டம் (2) வாழ்க்கை (4) வானியல் (2) விக்கிபீடியா (1) விக்கிலீகஸ் (1) விக்கிலீக்ஸ் (7) விஞ்ஞானம் (2) விமர்சனம் (10) விலையேற்றம் (2) விலைவாசி (11) விலைவாசி உயர்வு (2) விவாதங்கள் (1) விவாதம் (9) விளம்பரம் (1) விளையாட்டு (4) வினவு (1) விஜய் (2) விஜய் மல்லையா (1) வீட்டுவசதி வாரியம் (1) வீரமணி (2) வெண்மணி (2) வெள்ளம் (2) வெனிசுவெல்லா (1) வேலையின்மை (2) வோடாபோன் (1) ஜப்பான் நெருக்கடி (2) ஜாக்கிசான் (1) ஜாதி (1) ஜாபர் பனாகி (1) ஜூலியன் அசாங்க (1) ஜெயலலிதா (9) ஜோதிடம் (1) ஸ்டீவ் ஜாப்ஸ் (1) ஸ்பீல்பர்க் (2) ஸ்பெக்ட்ரம் (6)