Sunday, March 4, 2012

நமது செல்போன்களில் படிந்திருக்கும் காங்கோ மக்களின் இரத்தம் (Blood in Mobile - Film)


காங்கோவின் வரலாறு 
1885 ஆம் ஆண்டில் பெல்ஜியம் மன்னர் இரண்டாம் லியோபோல்ட், காங்கோ நாட்டினை தன்னுடைய தனிப்பட்ட சொத்தாக ஆளத்துவங்கினார். அப்போது காங்கோ நாட்டிலிருந்து அம்மக்களை வைத்தே ரப்பரை எடுத்து ஐரோப்பிய நாடுகளுக்கு விற்று காசு பார்த்தார் அந்த மன்னர். அதன்மூலம் உலகின் மிகப்பெரிய பணக்காரராக திகழ்ந்தார். தொழிற்புரட்சியின் ஆரம்ப காலமது. கார் தயாரிப்புகளும் அதிவேக வளர்ச்சியை அடையத்துவங்கிய நாட்களும் அதுவே. அதனால் ரப்பரின் தேவை அதிகமாக இருந்தது. காங்கோவின் ரப்பரை நம்பியே ஒட்டுமொத்த கார் தயாரிப்பு தொழிலும் இருந்தது என்றுகூட சொல்லலாம். அந்த அளவிற்கு காங்கோவின் ரப்பர் உலகம் முழுவதும் பயன்படுத்தப்பட்டு வந்தன. 

ஒவ்வொரு காங்கோ குடிமகனுக்கும் குறிப்பிட்ட அளவு ரப்பரை எடுக்கவேண்டுமென்று நிர்ணயிக்கப்பட்டிருந்தது. நிர்ணயிக்கப்பட்ட அளவு ரப்பரை எடுத்து கொடுக்காவிட்டால், அவர்களை கொல்ல வேண்டும் என்பது லியோபோல்டின் உத்தரவு. ஒரு கட்டத்தில் ஏராளமான மக்களை கொன்று குவிக்கத்துவங்கியது லியோபோல்டின் இராணுவம். அந்த அளவிற்கு துப்பாக்கி குண்டுகள்கூட இல்லாத நிலையில், எப்படி வேண்டுமானாலும் அம்மக்களை கொள்ளலாம். ஆனால் கொன்றவர்களின் வலது கையினை ஆதாரமாக எடுத்துவர வேண்டுமென்கிறான் மன்னன். காங்கோவிலிருந்து ரப்பரை எடுத்து ஐரோப்பிய நாடுகளுக்கு விற்பதற்கென்றே அபிர் என்கிற நிறுவனமும் தோற்றுவிக்கப்பட்டது. இந்நிறுவனம் உலகம் முழுவதுமுள்ள பல நாடுகளுக்கு காங்கோ ரப்பரை ஏற்றுமதி செய்தது.  


காங்கோ மக்களை கொன்றும், பஞ்சத்தை உருவாக்கியும் சுமார் 20 ஆண்டுகளில் மட்டும், காங்கோவில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 கோடி முதல் 3 கோடி வரை இருக்கலாம் என்று ஆடம் ஹோக்ஸ்கில்ட், இசிடோரே, பிரெட்ரிக் வர்தம் ஆகிய வரலாற்று ஆய்வாளர்கள் சொல்கிறார்கள். 

25 ஆண்டுகள் வரை நடந்த லியோபோல்ட் ஆட்சியினை, உலகின் பல்வேறு நாடுகளின் எதிர்ப்பினை சமாளிக்கமுடியாமல் தன்னுடைய சொந்த கட்டுப்பாட்டில் இருந்த காங்கோவை பெல்ஜியம் அரசின் கீழ் கொண்டுவந்தார். ஆட்சிதான் மாறியதே தவிர அவலங்கள் மாறவில்லை. மேலுமொரு 50 ஆண்டுகளுக்கும் மேலாக பெல்ஜியம் அரசாங்கத்தின் காலனி நாடாகவே இருந்து வந்தது காங்கோ. 

1960 இல் பெல்ஜியத்திடமிருந்து காங்கோ விடுதலை பெற்றது. அன்று முதல் இன்று வரை, இருபெரும் உள்நாட்டு போர்களை சந்தித்திருக்கிறது. கோடிக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். காங்கோவில் இன்று வாழும் ஒட்டுமொத்த பெண்கள் எண்ணிக்கையில், 30 சதவீதப்பெண்கள் பாலியல் வன்புணர்வுக்கு ஆளாகியிருக்கிறார்கள் (வெளியே சொல்லாதவர்களின் எண்ணிக்கையை சேர்த்தால், இச்சதவீதம் மிகப்பெரியதாக இருக்கும்). செல்வங்களின் மதிப்பை கணக்கிட்டால், உலகின் பணக்கார நாடாக இருந்திருக்க வேண்டிய காங்கோ, இன்று உலகின் மிகப்பெரிய ஏழை நாடாக இருக்கிறது... காரணம் என்ன? காரணமானவர்கள் யார்?
திரைக்கதை
"காங்கோ நாட்டிலிருந்து எடுக்கப்படும் கனிமங்கள் செல்போன்களில் பயன்படுத்தப்படுகின்றன."
"கடந்த 15 ஆண்டுகளில் மட்டும் 50 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் காங்கோவின் உள்நாட்டுப்போரில் கொல்லப்பட்டிருக்கிறார்கள்"
"இந்த இரண்டிற்கும் தொடர்பு இருக்கிறது என்று ஐ.நா சபையும் ஒப்புக்கொண்டிருக்கிறது"
என்கிற வரிகளுடன் இத்திரைப்படம் துவங்குகிறது.

டென்மார்க்கைச்சேர்ந்த பிராங்க் என்கிற திரைப்பட இயக்குனர், இது குறித்து ஆய்வு செய்ய முடிவெடுக்கிறார். காங்கோ நாட்டில் நடக்கும் போருக்கு நிதியுதவிசெய்வதே செல்போன்களில் பயன்படுத்தப்படுகிற கனிமங்கள்தானோ என்கிற சந்தேகத்தின் அடிப்படையில், நோக்கியா நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பிலிருப்போரிடம் பேட்டியெடுக்க முயற்சிக்கிறார். ஆனால் அவருக்கு அனுமதி மறுக்கப்படுகிறது. அவரது தொடர்முயற்சிகள் வீணாகிறது.

ஸ்பெயின் நாட்டில் நடக்கிற உலக செல்போன் நிறுவனங்களின் மாநாட்டிற்கு சென்று அங்கிருக்கும் பிரதிநிதிகளிடம், "காங்கோ நாட்டில் உள்நாட்டு போருக்கு நிதியளித்து, அதற்கு பதிலாக அங்கிருந்து கனிமங்கள் எடுக்கப்பட்டு அவைதான் செல்போன்களில் பயன்படுத்தப்படுகின்றனவா?" என்று கேட்கிறார். அவரது கேள்விக்கு யாருமே பதிலளிக்க விரும்பவில்லை என்கிறார்கள்.

'உண்மையிலேயே நமது செல்போன்களில், காங்கோவில் நடக்கும் போருக்கு நிதிதிரட்டிக்கொடுக்கிற கனிமங்கள் இருக்கின்றனவா? இந்த உண்மை பலருக்கு தெரிந்திருந்தால், ஏன் யாரும் எதுவுமே செய்யவில்லை? காங்கோ எங்கோதானே இருக்கிறது என்கிற அலட்சியமா? எங்கோ நடக்கிற போருக்கு நான் வைத்திருக்கும் என்னுடைய செல்போன்தான் காரணம் என்கிற உண்மையை என்னால் சகித்துக்கொள்ளமுடியவில்லை! ஒரு வேளை, காங்கோவில் பல உயிர்களை கொன்றுகுவித்து அவர்களின் இரத்தக்கறை என்னுடைய செல்போனிலும் படிந்திருந்தால், இனியும் எனது மனைவிக்கு அன்புகலந்த குறுஞ்செய்திகளை அனுப்பிக்கொண்டும், எனது மகள்களுடன் பேசிக்கொண்டும் என்னால் இருக்கமுடியாது.'
என்று மனதிற்குள் சொல்லிக்கொண்டே, தன்னுடைய ஐயத்தினை தீர்த்துவைக்க அம்மாநாட்டில் வேறு யாரேனும் கிடைப்பார்களா என தேடிப்பார்க்கிறார்.
அவருடைய கேள்விக்கு பதிலளிப்பதற்கு அம்மாநாட்டில் யாருமில்லை என்கிறார்கள். மிகுந்த வருத்தத்துடன் மாநாட்டிலிருந்து வெளியேறுகிறார்.

நோக்கியாவின் மக்கள் தொடர்பு எண்கள் அனைத்திற்கும் பல மாதங்கள் தொடர்ந்து தொடர்பு கொண்டே இருக்கிறார். யாரும் அவருக்கு எவ்வித தகவலும் தரமுன்வரவில்லை. இது குறித்து, யாரைத்தொடர்பு கொள்ளவேண்டுமென்றே தங்களுக்குத் தெரியாது என்று ஒட்டுமொத்தமாக கைவிரிக்கிறார்கள்.

'யாருமே ஏன் எனக்கு பலளிக்கமுன்வரவில்லை? ஒரு வேளை, காங்கோவில் நடக்கும் போருக்கும் என்னுடைய கையில் இருக்கும் செல்போனின் தயாரிப்பிற்கும் உண்மையிலேயே தொடர்பு இருக்குமோ? அவ்வுண்மை தெரிந்தும் இவர்கள் மறைக்கிறார்களா? இந்நிறுவனங்களுக்கெல்லாம் உண்மையிலேயே சமூகப் பொறுப்பு இல்லையா?' என நிறைய கேள்விகளை தனக்குள்ளே எழுப்பிக்கொண்டே போகிறார் பிராங்க். அக்கேள்விகள் அனைத்தும் காங்கோவில் என்னதான் நடக்கிறது, செல்போன் நிறுவனங்களுக்கு எங்கிருந்து எவ்வாறு கனிமவளங்கள் கிடைக்கிறது? என்பதனை நேரில் சென்று பார்க்கிற ஆவலைத்தூண்டுகிறது பிராங்கிற்கு. 
காங்கோவில் நடப்பது என்ன?
விமானம் மூலமாக காங்கோ நாட்டிற்கு சென்றடைகிறார் பிராங்க். காங்கோவிலிருந்து கனிமவளங்கள் எவ்வாறு மேற்குலக நாடுகளில் இருக்கும் செல்போன் நிறுவனங்களுக்கு கொண்டு செல்லப்படுகின்றன என்கிற உண்மையினை கண்டுபிடிக்கிற செயல் சற்று மலைப்பாகத் தோன்றியது பிராங்கிற்கு.

காங்கோ நாட்டு சுரங்கத் தொழிலமைச்சகத்தின் உயர் அதிகாரியான 'காம்பேகாம்பே' என்பவருடன் ஒரு சந்திப்பிற்கு அனுமதி கிடைக்கிறது பிராங்கிற்கு. அவர் தனக்கு சரியான பாதையைக்காட்டுவார் என்று நம்பி அவரை சந்திக்கச்செல்கிறார்.
கிவு என்கிற பகுதியிலிருந்து கொண்டு வரப்பட்ட 'கசிடரைட்' (http://en.wikipedia.org/wiki/Cassiterite ) மற்றும் 'கோல்டன்' (http://en.wikipedia.org/wiki/Coltan ) ஆகிய கனிமங்களின் மாதிரியை பிராங்கிற்கு காண்பிக்கிறார் காம்பேகாம்பே. அவையிரண்டும் செல்போன்கள் தயாரிக்கப்பயன்படுகின்றன என்கிற தகவலையும்  சொல்கிறார்.
காம்பேகாம்பே சுரங்கத்தொழிலமைச்சகத்தின் உயரதிகாரியாகவும் இருந்துகொண்டு, பன்னாட்டு நிறுவனங்களுக்கு அரசாங்கத்திடமிருந்து சுரங்க உரிமங்கள் பெற்றுத்தரும் தனியார் நிறுவனமொன்றினையும் நடத்திவருவதை அறிகிறார் பிராங்க்.
"என்னுடைய சொந்த நிறுவனத்தின் அனுபவத்தை அரசாங்கத்திலும், அரசு வேலையில் கிடைக்கும் அனுபவத்தினை என்னுடைய சொந்த நிறுவனத்திலும் பயன்படுத்திக்கொள்கிறேன்." என்கிறார் காம்பேகாம்பே.
காம்பேகாம்பேவைச் சந்தித்தபின், அரசாங்கத்தின் உதவியை நாடுவது தனக்கு பலனளிக்கப்போவதில்லை என்பதை உணர்ந்துகொள்கிறார் பிராங்க். காங்கோவிலிருக்கும் ஐ.நா. வின் உதவியை நாடி, அதன்மூலம் வடக்கு கிவு பகுதியிலிருக்கும் 'கோமா'விற்கு செல்ல தயாராகிறார். 'கிவு' பகுதியிலிருந்துதான் கனிமங்கள் எடுக்கப்படுகின்றனவா என்பது உறுதியாகத் தெரியவில்லையெனிலும், காம்பேகாம்பே மூலம் அவர் அறிந்துகொண்டே ஒரே பகுதி 'கிவு'தான்.

வடக்கு கிவுவில் இருக்கும் 'கோமா'வில் நுழைந்து பார்க்கிறபோது, உலகின் வேறந்த பகுதிகளையும் விட மிக அதிகமான அளவிற்கு ஐ.நா.வின் அமைதி காக்கும் படையினர் சாலையெங்கும் குவிக்கப்பட்டிருந்தனர். ஆயுதக் குழுக்களிடமிருந்து பொதுமக்களை காப்பதே அவர்களது நோக்கமென்று சொல்லப்படுகிறது. ஆனால் அவர்கள் நகரின் மையப்பகுதியைத்தாண்டி வேறெங்கும் நகர்வதாகத்தெரியவில்லை.

இங்கிருக்கும் கனிமவளங்களை வைத்து இலாபம் சம்பாதிப்பது யாராக இருக்குமென்ற தகவல் ஐ.நா.விற்கு நிச்சயமாக தெரிந்திருக்கும். எனவே வாளிகாளி பகுதியின் ஐ.நா. பொறுப்பாளரான மேஜர் ரகுமானை சந்திக்கிறார் பிராங்க்.
மேஜர் ரகுமான்: "இதுதான் வாளிகாளி பிராந்தியத்தின் வரைபடம். இயற்கை வளங்கள் மற்றும் சுரங்கங்கள் நிறைந்த மிக முக்கியமான பகுதி இது. இங்கே பிசீ மற்றும் கிளம்போ ஆகிய இரண்டு முக்கியமான இடங்கள் உள்ளன. கசிடரைட் மற்றும் பாக்சைட் ஆகிய கனிமங்கள் அங்கிருந்து தோண்டி எடுக்கப்படுகின்றன. பிசீ பகுதியில் மட்டும் 15 ஆயிரம் முதல் 20 ஆயிரம் மக்கள்வரை கனிமங்களை தோண்டி எடுத்துச்செல்கிற பணியில் ஈடுபட்டிருக்கிறார்கள். அங்கிருந்து ஜிங்களா, ஒசகாரி மற்றும் முபி ஆகிய இடங்களுக்கு எடுத்துச்செல்லப்படுகிறது. அவ்விடங்களுக்கு கனிமங்களை எடுத்துச்செல்வதற்கு இரண்டு நாட்களாவது ஆகும்."
பிராங்க்: "ஆயுதக்குழுக்கள் இருக்கும் பகுதி?"
மேஜர் ரகுமான்: "அது பற்றியெல்லாம் நான் பேசமுடியாது"
தொடர்ந்து பிராங்க் கேட்கிற எந்தக் கேள்விக்கும் பதிலளிக்காமல் மழுப்பிவிடுகிறார் ஐ.நா. வின் மேஜர் ரகுமான். ஐ.நா. அதிகாரிகளும் தன்னுடைய கேள்விக்கு நேரடியாக பதிலளிக்க மறுப்பதற்கு காரணமென்னவாக இருக்கும் என்று யோசித்துக்கொண்டே அங்கிருந்து வெளியேறுகிறார்.
மிகப்பெரிய கனிம சுரங்கங்கள் இருப்பதாக சொல்லப்படும் பிசீ பகுதிக்கு செல்வதற்கு ஐ.நா. செய்தி தொடர்பு அதிகாரிகளிடம் அனுமதி கேட்கிறார். பிராங்கிற்கு எவ்வித தகவலும் தருவதற்கு ஐ.நா. மறுத்தாலும், பிசீ செல்வதற்கு அவருக்கு தடையேதும் விதிக்கவில்லை. அதிகாரப்பூர்வ அனுமதி கிடைக்க, இரண்டு நாட்கள் ஆகும் என்கிறார்கள் ஐ.நா. அதிகாரிகள்.

அன்று கோமா நகரிலேயே தங்கிவிடுகிறார் பிராங்க். அன்றைய இரவு, அருகிலிருக்கும் ஐரோப்பியர்கள் வந்துபோகும் மதுவருந்தகத்திற்கு சென்று ஏதாவது தகவல் கிடைக்குமா என்று பார்க்கிறார். அங்கே எம்.பி.சி. (Mining Processing Company) நிறுவனத்தில் வேலை செய்வோருடன் அவருக்கு பழக்கம் ஏற்படுகிறது. அதன்மூலம் அவர்களிடமிருந்து சில தகவல்களைப் பெறுகிறார் பிராங்க். (பிசீயில் இருக்கும் சுரங்கமொன்றிலிருந்து கனிமவளங்களை எடுக்க உரிமம் பெற்ற நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது)
எம்.பி.சி.யின் ஊழியர் : "இந்த வரைபடத்தில் நாம் இருக்கிற கோமா என்கிற ஊர் இதோ இருக்கிறது. கோமாவிற்கும் கனிமவளங்கள் எடுக்கப்படும் பிசீ என்கிற ஊரிற்கும் இடையிலான தூரம் 170 கிலோமீட்டர். நடுவில், 130 கிலோமீட்டர் தொலைவில் வாளிகாளி இருக்கிறது. பிசீயிலிருந்து கனிமவளங்கள் கொண்டு வருவதற்கு, ஆங்காங்கே ஏராளமான ஆயுதக்குழுக்களுக்கு வரி செலுத்த வேண்டும். சிம்பா, இன்டராம்வே (10 லட்சம் மக்களின் உயிரைக்குடித்த ருவாண்டா இனப்படுகொலையில் முக்கிய பங்காற்றியவர்கள்) போன்ற ஏராளமான ஆயுதக்குழுக்கள் இடையில் ஆதிக்கம் செலுத்துகின்றன."
எல்லா இனக்குழுக்களையும் சரிகட்டி, பிசீ பகுதிக்கு செல்வதற்கு இரண்டாண்டுகள் ஆயிற்றாம் எம்.பி.சி. நிறுவனத்திற்கு. காங்கோ அரசின் இராணுவமும் (FRDC) மற்றுமொரு ஆயுதக்குழு போல்தான் செயல்படுகிறது என்கிறார்கள் எம்.பி.சி ஊழியர்கள்.

ஐ.நா.வில் வேலை செய்யும் காங்கோ நாட்டைச்சேர்ந்த பெர்னார்ட் என்பவர், தன்னுடைய வீட்டிற்கு வந்தால் பிராங்கிற்கு சில தகவல்கள் சொல்வதாக உறுதியளிக்கிறார். அதன்படி அவரது வீட்டிற்கும் செல்கிறார். செல்லும் வழியில் ஊரெங்கும் ஒரே பதட்டமான சூழ்நிலை நிலவுகிறது.
பெர்னார்ட் : "இன்றைக்கு ஏதோ ஒரு 'மாயி மாயி' குழுவினர் 40 கிலோமீட்டர் தொலைவிலிருந்து இங்குவந்து சுரங்கத்தொழிலாளிகளிடம் திருடிவிட்டுச்செல்லவந்திருக்கிறார்கள். (மாயி-மாயி என்பது பெயரிடப்படாத ஆயுதக்குழுக்களை பொதுவாக குறிக்கும் பெயர். அவர்கள் ஒரு ஊரின் குழுவாகவோ கூட இருக்கலாம்). இது தொடர்ந்து நடந்து கொண்டேதான் இருக்கிறது. 'மாயி மாயி'யோ அல்லது FDLR ஆயுதக்குழுவைச் சேர்ந்தவர்களோ அல்லது வேறு ஏதோ ஒரு ஆயுதக்குழுவோ பிசீ என்கிற ஊருக்கு சென்று 'கோல்டன்' மற்றும் 'காசிரைட்'  போன்ற கனிமங்களை எடுத்து, காங்கோ வியாபாரிகளின்மூலம் கோமா என்கிற ஊருக்கு கொண்டு சென்று, பின்னர் உகாண்டவிற்கோ அல்லது ருவாண்டாவிற்கோ கொண்டு சென்று, இறுதியில் ஐரோப்பாவிற்கு கொண்டு சேர்க்கிறார்கள். எதற்காக? கணிப்பொறி செய்வதற்கும் செல்போன்கள் செய்வதற்கும்தான். அதில் கிடைக்கும் காசில், இவர்கள் என்ன செய்கிறார்கள் தெரியுமா? துப்பாக்கி வாங்குகிறார்கள். மீண்டும் போரினைத் தொடர்ந்து நடத்தவே தொடர்ந்து துப்பாக்கி வாங்குகிறார்கள். இதே மக்களிடமிருந்து சுரண்டி எடுக்கப்பட்ட கனிமங்களை ஐரோப்பாவில் விற்று, அதில் வரும் காசினை வைத்து துப்பாக்கி வாங்கி, மீண்டும் அதே மக்களை கொல்கிறார்கள், பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்குகிறார்கள்...."
பெர்னார்ட் : "இன்றைக்கு மசிகா என்கிற பெண்ணை சந்தித்தேன். அவளை இதுவரை மூன்று முறை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியிருக்கிறார்கள். முதன்முறை, அவள்கண் முன்னாலேயே அவளது கணவனைக்கொன்று, துண்டுதுண்டாக வெட்டி, அத்துண்டுகளின் மீது அவளைப் படுக்கவைத்து, அவளை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியிருக்கிறார்கள். உங்களால் நினைத்துப் பார்க்கமுடிகிறதா?"
பெர்னார்ட் : "நீங்கள் வாளிகாளி செல்லப்போவதாக கேள்விப்பட்டேன். நீங்கள் மிகுந்த கவனத்துடன் செல்லவேண்டும். ஏனெனில் அங்கே என்னவேண்டுமானாலும் நடக்கலாம். FRDC (காங்கோ நாட்டு இராணுவம்) ஏதேனும் தவறு செய்வதாக நீங்கள் கண்டுபிடித்துவிட்டால்,  நீங்கள் பிரச்சனையில் மாட்டிக்கொள்வீர்கள். FDLR (ஆயுதக்குழு) தவறு செய்வதாக கண்டுபிடித்துவிட்டால், அப்போதும் நீங்கள் பிரச்சனைக்குள்ளாவீர்கள். மாயி-மாயி ஆயுதக்குழுக்கள் தவறு செய்வதாக நீங்கள் கண்டறிந்துவிட்டால், நீங்கள் உயிரோடு இருக்கவே முடியாது. அதனால் நீங்கள் செல்லும் எல்லா இடங்களிலும் ஆபத்து இருக்கிறது. மிகுந்த கவனமாக இருங்கள்"
இரண்டு நாட்கள் முடிந்திருந்தமையால், ஐ.நா. அலுவலகம் சென்று வாளிகாளி மற்றும் பிசீ செல்ல அதிகாரப்பூர்வ அனுமதி வாங்கச்செல்கிறார். ஆயுதக்குழுக்கள் தொடர்ந்து மிகக்கொடூரமாக தாக்கிவருவதாகவும், அதனால் ஐ.நா. வைச் சேர்ந்தவர்கள் யாரும் பிராங்கிற்கு வழிகாட்ட உடன்வரமுடியாது என்றும் தெரிவித்துவிடுகிறார்கள்.

ஐ.நா. கைவிட்டபிறகு அடுத்து என்ன செய்வதென்று தெரியாமால் போனாலும், தன்னுடைய முயற்சியனை அப்படியே விட்டுவிட்டு நாடுதிரும்பவும் மனமில்லை பிராங்கிற்கு. அனுமதியின்றி இனி ஓரடியும் நகரமுடியாதென்பதை உணர்ந்த பிராங்க், FRDC (காங்கோ நாட்டு இராணுவம்) யின் உயர் இராணுவ அதிகாரியொருவரைச் சந்திக்கிறார். அவரிடம் அன்பாகப்பேசி, அவர் அள்ளிவீசும் சுயபெருமைகளை எல்லாம் இரசித்துக் கேட்பதைப்போல் நடித்து, அவரிடம் கையெழுத்து வாங்கிவிடுகிறார். வாளிகாளியிலிருந்து கனிமங்கள் கொண்டுவருவதற்காக கோமாவிலிருந்து செல்லும் ஒரு சிறிய சரக்கு விமானத்தில் ஏறிக்கொள்கிறார் பிராங்க். அவ்விமானம் நடுக்காட்டில் மிகச்சிறிய சாலையில் தரையிறங்கியது. விமானம் நின்றது, பல மூட்டைகளை கொண்டுவந்து விமானத்திற்குள் ஏற்றுகிறார்கள். இவையெல்லாம் எங்கிருந்து வருகிறது என்று விமானியிடம் கேட்டுப்பார்க்கிறார். எதிர்பார்த்ததைப்போலவே 'தெரியாது' என்கிற ஒற்றை பதில்தான் கிடைக்கிறது பிராங்கிற்கு.

இப்போது பிராங்க் வந்து சேர்ந்திருக்கும் பகுதிதான் வாளிகாளி. அவ்வூரில் சான்ஸ் என்கிற 16 வயது சிறுவனைப்பற்றி கேள்விப்படுகிறார். அவன் மூன்று ஆண்டுகளாக பிசீ பகுதியில் இருக்கும் சுரங்கமொன்றில் வேலைபார்த்திருக்கிறான். ஒரு வாரத்திற்கு முன் நடந்த கலவரத்தினால், அங்கிருந்து தப்பித்து வாளிகாளிக்கே ஓடி மீண்டுவந்திருக்கிறான்.

சிறுவன் சான்ஸ் : "சுரங்கமொன்றில் வேலைசெய்தால், அதில் வரும் வருமானத்தை வைத்து சொந்தமாக ஒரு வீடு கட்டலாம் என்று நினைத்தேன். அதனால் பிசீ சென்று வேலைக்கு சேர்ந்தேன். முதல்முறை மிகச்சிறிய வழியினைக்கொண்ட அக்குழிக்குள் இறங்கினேன். நீண்ட நேரம் என்னால் இருக்கவே முடியவில்லை. அந்த சூடு எனக்கு ஒத்துக்கொள்ளவேயில்லை. அதனால் இரண்டே மணிநேரத்தில் வெளியே வந்துவிட்டேன். ஆனால் மீண்டும் மீண்டும் உள்ளே போகவேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டதால், உள்ளே சென்று நிறைய உழைக்கவேண்டியிருந்தது. அவ்வளவு அதிகமான சூட்டினை என்னால் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை. என்னால் என்னுடைய கனவு வீட்டினையும் கட்டமுடியவில்லை. நான் அங்கிருந்து ஓடி வந்துவிட்டேன். இப்போது இங்கிருக்கும் பள்ளியில் என்னுடைய படிப்பினை தொடர்கிறேன்."

அச்சிறுவனுக்கு கனிமவளங்களை எடுக்கிற சுரங்கங்கள் இருக்கிற இடம் தெரியுமென்பதால், அதற்கு வழிகாட்டவேண்டி அச்சிறுவனிடமும் அவனது பெற்றோரிடமும் அனுமதி வாங்கிக்கொண்டு அவனை அழைத்துசெல்கிறார் பிராங்க். வழிநெடுக ஏராளமான மக்கள் மூட்டையும் கையுமாக வந்துகொண்டே இருந்தனர். நிச்சயமாக அது ஒரு மிகப்பெரிய சுரங்கமாக இருக்குமென்று கற்பனை செய்துபார்க்கத்துவங்கிவிட்டார் பிராங்க். ஒவ்வொருவரும் சுமார் 50 கிலோ எடையுள்ள கனிமங்களை எடுத்துக்கொண்டு பிசீயிலிருந்து 90 கிலோமீட்டர்கள் நடந்து வருகிறார்கள். அதற்கு இரண்டு நாட்கள் ஆகுமென்கிறார்கள். ஒரு நாளைக்கு சுமார் 30 டன் கனிமங்களை 600 பேர் தங்கள் கைகளில் சுமந்துகொண்டு எடுத்துவருகின்றனர். சுரங்கங்களை நோக்கிச்செல்கிற மக்களோடு மக்களாக அபாயங்கள் நிறைந்திருக்கும் இருள்போர்த்திய அடர்ந்த நடுக்காட்டினில் நடந்து செல்கிறார்கள் பிராங்கும் சிறுவனும்.

பிசீயை வந்தடைகிறபோது, அங்கே மிகப்பெரிய மரக்கட்டைகளாலான நுழைவாயிலும் ஊருக்குள் நுழைகிறவர்களிடமும் ஊருக்குள்ளிருந்து வெளியே செல்கிறவர்களிடமும் ஒரு ஆயுதக்குழு வரிவசூலித்துக்கொண்டிருந்தது. பிசீயில் இருக்கும் மக்களிடம் மிகக்கடினமாக வேலைவாங்குகிறார்கள் பல்வேறு ஆயுதக்குழுவினர். மிகச்சிறிய ஊதியம் கொடுத்துவிட்டு, அதனை மீண்டும் மிகக்கடுமையான வரிபோட்டு வாங்கிக்கொள்கின்றனர். சுற்றுவட்டாரத்தில் பல ஊர்களிலிருந்தும் காசு சம்பாதிக்கும் நோக்கில் வரும் மக்கள், இவர்களிடம் மாட்டிக்கொள்கின்றனர். சம்பாதிப்பதைவிட அதிகமாக வரிசெலுத்தவேண்டிவருகிறது அவர்களுக்கு. 

சிறுவன் வேலைசெய்தபோது தங்கியிருந்த வீட்டிற்கு  பிராங்கை அழைத்துச்செல்கிறான். சுரங்கத்தின் அருகே கடும் வெயிலில் நாற்புறமும் கோணிப்பைகளை கட்டிவைத்து அதற்குள்ளே நூற்றுக்கணக்கானோர் தங்கியிருக்கிறார்கள். அதுதான் வீடு என்கிறார்கள். எங்கு நோக்கினும் சிறுவர்கள் சுத்தியலுடனும் சுரங்க வேலைக்கு தேவைப்படும் ஆயுதத்துடனும் காணப்பட்டார்கள். அச்சிறுவர்கள் ஒவ்வொருவரிடமும் எண்ணற்ற கண்ணீர்க்கதைகள் இருக்கிறது.

"எப்போது குண்டு வருமென்றே தெரியாது. இங்கு ஒரு மருந்தகம் இருந்தது. அதில் இருந்த மருந்துகடைக்காரரை இப்போதுதான் சுட்டார்கள்" என்று அவ்விடத்திலிருந்து சற்று தோண்டி சில குண்டுகளை எடுத்துக்காட்டினான் ஒரு சிறுவன்.
சிறுவன்: "நான் வேலை பார்க்கிற சுரங்கக்குழி 330 அடி ஆழம் இருக்கும். அதில் இறங்கி ஏறுவது மிகக்கடினமாக இருக்கும். அதிகமான நேரமும் ஆகும். சில நேரம் ஒரு வாரம் வரை கூட சுரங்கக்குழிக்குள்ளேயே தங்கி இருக்கிறேன். ஏதாவது ஒரு குழி திடீரென மூடிக்கொள்ளும். அதனால் ஏராளமானோர் இந்த குழிக்குள்ளேயே இறந்திருக்கின்றனர்"
சிறுவனுடன் சேர்ந்து பிராங்கும் குழுக்குள் இறங்குகிறார். ஒரு ஆள் நுழைகிற அளவே வழியிருக்கிற அக்குழியினுள் நுழைந்ததும், அதிர்ச்சியடைகிறார். உலகின் மிக மோசமான ஓரிடத்தில் நூற்றுக்கணக்கானோர் கனிமங்களை வெட்டி எடுத்துக்கொண்டிருந்தனர். அவர்கள் வேலைசெய்வதை நோட்டமிடவே வந்திருப்பதாக பிராங்கைக்கண்டு அஞ்சுகின்றனர். சிறுவன் கசிடரைட் கனிமத்தை தன்னுடைய சுத்தியொன்றினால் வெட்டியெடுத்து பிராங்கிடம் காட்டுகிறான். அதற்குமேல் அக்குழிக்குள் இருக்கமுடியாமல் கண்ணீரோடு காங்கோவைவிட்டே வெளியேறுகிறார் பிராங்க்.

செல்போன் நிறுவனத்தின் பொறுப்புணர்வு(?!?) 
காங்கோவில் தனக்குக் கிடைத்த ஆதாரங்களையெல்லாம் வைத்துக்கொண்டு நோக்கியாவின் தலைமை அலுவலகத்திற்குச்செல்கிறார் பிராங்க். ஆனால் மீண்டும் அவருடைய கேள்விகளுக்கு பதிலளிக்க யாருமே தயாராகயில்லை.
"எங்களுக்குதெரியாது...."
"மக்கள் தொடர்பு அதிகாரியுடன் பேசுவதற்கு ஏற்பாடு செய்கிறோம். ஆனால் நீ படம்பிடிக்கக் கூடாது.."
இப்படியான பதில்கள்தான் அவருக்குக் கிடைக்கிறது.
பிராங்க் : "நான் ஓராண்டாக நோக்கியா அலுவலகத்திற்கு வந்து போகிறேன். நீங்கள் யாருமே பதிலளிக்க மறுப்பதேன்? நான் நோக்கியா போன்தான் பயன்படுத்துகிறேன். எனக்கு நீங்கள் பதிலளித்தே ஆக வேண்டும். நான் இந்த உலகத்தின் குடிமகன். அதனால் இதுகுறித்து நான் அதிகம் கவலைகொள்கிறேன். என்னுடைய கேள்விகளுக்கு பதில் கிடைக்காமலோ, அல்லது சந்திப்பிற்கான தேதி கிடைக்காமலோ இவ்விடத்தைவிட்டு நான் போகப்போவதில்லை" என்று கோபமாகவே பேசிவிடுகிறார்.

பிராங்கின் மன உறுதியைக் கண்டு, வேறு வழியின்றி ஒரு இடைநிலை அதிகாரியுடனான சந்திப்பிற்கு அனுமதி அளிக்கிறார்கள் நோக்கியா நிறுவனத்தினர்.
நோக்கியா அதிகாரி : "2001 இலேயே காங்கோவிலிருந்துதான் எங்களுடைய நோக்கியா செல்போன்கள் தயாரிக்கப்பயன்படும் கனிமங்கள் கிடைக்கிறது என்று எங்களுக்குத் தெரியவருகிறது. ஆனால், யார் அக்கனிமங்களை எடுக்கிறார்கள், எப்படி எடுக்கிறார்கள், எந்தெந்த சுரங்கத்திலிருந்து எடுக்கிறார்கள் என்பதையெல்லாம் கண்டுபிடிப்பது கடினம் என்பதால் எங்களால் எதுவும் செய்யமுடியவில்லை..."
10 ஆண்டுகளுக்கே முன்பே உண்மை தெரிந்திருந்தும், உலகிற்கும் சொல்லாமல் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இப்படி இருக்கிறார்களே என்று பிராங்க் அதிர்ச்சியடைகிறார். ஜெர்மனியில் இருக்கும் 'இயற்கை வளங்கள் மற்றும் புவியியல் அறிவியல் மைய நிறுவனத்திற்கு' சென்று விசாரிக்கிறார். அங்கிருக்கும் விஞ்ஞானிகள், "இது மிக எளிதான ஒன்று. கனிமத்தின் மாதிரியை வைத்துக்கொண்டு, அது உலகின் எந்தப்பகுதியிலிருந்து எடுக்கப்பட்டது என்பதனை எளிதில் கண்டுபிடிக்கலாம். காங்கோவில் எந்தச் சுரங்கத்திலிருந்து எடுக்கப்பட்டது என்பது வரை கண்டுபிடிக்கலாம்" என்று சொல்கிறார்கள். இதனைக்கண்டுபிடிக்க மிகப்பெரிய விஞ்ஞானிகள்கூட தேவைப்படாது என்பதை அறிந்துகொள்கிறார் பிராங்க்.

 மீண்டும் நோக்கியா தலைமை அலுவலகத்திற்கு செல்கிறார். இம்முறை அவருக்கு ஒரு உயர் அதிகாரியைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கிறது.
நோக்கியா உயர் அதிகாரி : "எங்களால் இதற்கு சரியான தீர்வை கொண்டு வர முடியவில்லை. ஒட்டு மொத்த தொழிற்துறையும் இதற்கு ஒத்துழைப்பு அளித்தால்தான் நாங்களும் இப்பிரச்சனைக்கு ஏதாவது செய்யமுடியும்."
பிராங்க் : "மற்ற நிறுவங்கள் ஒரு புறம் இருக்கட்டும். நீங்கள் தான் உலகின் மிகப்பெரிய செல்போன் தயாரிக்கும் நிறுவனம். உலகில் தயாராகும் ஒவ்வொரு நான்காவது செல்போனும் நோக்கியாவுடையதுதான். நீங்கள் யாரிடமிருந்தெல்லாம் கனிமங்கள் வாங்குகிறீர்கள், உங்களுக்கு கனிமங்கள் விற்பவர்கள் எங்கிருந்து எடுக்கிறார்கள் என்பதனையும் நீங்கள் வெளிப்படையாக அறிவிக்கலாமே. "
நோக்கியா உயர் அதிகாரி : "தொழிலில் போட்டி, இலாபம் ஆகியவை காரணமாக அதையெல்லாம் நாங்கள் சொல்லமுடியாது."
பிராங்க் : "ஒரு புறம் போட்டி, இலாபம் என்று பேசுகிறீர்கள், மறுபுறம் லட்சக்கணக்கான மக்கள் (குழந்தைகள் உள்பட) இறப்பதும் எண்ணிலடங்காதப் பெண்கள் பாலியல் வன்புணர்ச்சிக்காளாவதும் நடக்கிறது." என்று வருத்தம் கலந்த கோபத்தோடு பேசுகிறார் பிராங்க்.
நோக்கியா உயர் அதிகாரி : ".........................................."

காங்கோவில் சுரங்கத்தினுள் இறங்கும் சிறுவர்கள் பிராங்கின் கண்களுக்குள் வந்து கண்ணீரை வரவழைத்துவிட்டு போயினர்... தன்னுடைய கையினில் இருக்கும் செல்போனை தூக்கியெறிய வேண்டும்போல இருந்தது பிராங்கிற்கு.

'இன்று உலக மக்கள் தொகையில் பாதியளவிற்கு செல்போன்கள் விற்கப்பட்டிருக்கின்றன. அவையனைத்தும் காங்கோவில் இருக்கும் மக்களின் வாழ்க்கையை மேலும் மேலும் மோசமாக்குகிறது. கடந்த 15 ஆண்டுகளாக நான் செல்போன் பயன்படுத்தி வருகிறேன். நானும் இந்த போருக்கு மறைமுகமாக நிதியளித்திருக்கிறேன். இந்த 15 ஆண்டுகளில் நோக்கியா நிறுவனம் உலகின் மிகப்பெரிய நிறுவனமாக வளர்ந்திருக்கிறது. நோக்கியாவின் சி.இ.ஓ.வைச் சந்தித்து நேருக்கு நேர் கேள்விகேட்க வேண்டும்போல் இருக்கிறது' என்று மனதிற்குள் நினைத்துக்கொண்டே மீண்டும் நோக்கியாவின் தலைமை அலுவலகத்திற்கு செல்கிறார் பிராங்க்.

அவருக்கு நோக்கியாவின் சி.இ.ஓ.வைச் சந்திப்பதற்கு வாய்ப்பு மறுக்கப்படுகிறது. அதற்கு பதிலாக நோக்கியாவின் சமூகப் பொறுப்புணர்வுக்கான துறையின் இயக்குனர் பெக்காவைச் சந்திக்க வாய்ப்பு கிடைக்கிறது.
பிராங்க் : "காங்கோவில் இருக்கும் குழந்தைகள் இந்த மோசமான நிலைமையினை ஏற்றுக்கொண்டு மகிழ்கிற மோசமான மனிதர்கள் நோக்கியாவில் இருக்கமாட்டார்கள் என்று நம்புகிறேன். ஆனால் இந்த பிரச்சனை உங்களுக்குத் தெரிந்து 10 ஆண்டுகள் ஆயிற்று. இந்த 10 ஆண்டுகளில் என்ன செய்திருக்கிறீர்கள் என்று தெரிந்துகொள்ள விரும்புகிறேன்."
நோக்கியா உயரதிகாரி பெக்கா : "என்ன செய்யலாம் என்று செல்போன் தயாரிக்கும் தொழிலில் ஈடுபட்டிருக்கும் நிறுவனங்களோடு பேசி வருகிறோம். சில என்.ஜி.ஓ.க்களுடனும் பேசி வருகிறோம். எங்களுக்கு கனிமங்கள் வழங்குவோரிடமும் பேசி வருகிறோம். இதன்மூலம் பிரச்சனை என்னவென்று கண்டுபிடிப்பதுதான் எங்களது முதல்படி"
பிராங்க் : "நீங்கள் இங்கே உட்கார்ந்துகொண்டு முதல்படி குறித்து பேசிக்கொண்டிருக்கிறீர்கள். 10 ஆண்டுகள் ஆகிவிட்டதை உணர்ந்திருக்கிறீர்களா?
நோக்கியா உயரதிகாரி பெக்கா : "எங்களால பெரியதாக ஒன்றும் செய்யமுடியாது"
பிராங்க்: "வாளிகாலியில் நான் பார்த்த சிறுவர்களிடம் அவர்களை வைத்து இலாபம் சம்பாதிக்கும் நோக்கியாவிடம் சென்று அச்சிறுவர்களின் துயரம் குறித்துப் பேசுகிறேன் என்று வாக்குறுதி கொடுத்திருக்கிறேன். அவர்களுக்கு நான் என்ன பதில் சொல்ல?
நோக்கியா உயரதிகாரி பெக்கா : "அவர்களை நம்பிக்கையோடு இருக்க சொல்லுங்கள். சமுதாயம் அவ்வளவு எளிதில் மாறப்போவதில்லை. அவர்களுக்குத் தீர்வு வருகிறதோ இல்லையோ, ஆனால் அவர்களின் நிலை குறித்து நாங்கள் வருத்தப்படுகிறோம் என்று சொல்லுங்கள்" என்று சொல்லிவிட்டு தனக்கு நேரமாகிறது என அங்கிருந்து கிளம்பிவிடுகிறார் பெக்கா
இதனைக்கேட்கிறபோது மனிதநேயமற்ற கார்ப்பரேட்டு நிறுவனங்களின்மீது கோபத்தின் உச்சத்திற்கே போகிறார் பிராங்க். வேறு வழியின்றி பெக்காவின் அறையிலிருந்து வெளியே வருகிறார். 

நோக்கியா அலுவலத்திலிருந்து வெளியேறுமுன், பெக்காவை சந்திக்க ஏற்பாடு செய்த சாரா என்கிற இடைநிலை அதிகாரியிடம் கேட்கிறார், "பத்து ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது. ஆனாலும் இதனை மாற்றிக்கொள்ளவோ எந்தவொரு நடவடிக்கைகளையும் எடுக்கவோ யாருமே தயாராகயில்லை. எதையும் செய்யவில்லையின்றாலும், குறைந்தபட்சம் தங்களுடைய தவறினை ஒப்புக்கொள்ளக்கூட மறுக்கிறீர்களே?"
சாரா : "நாங்கள் செய்வது தவறு என்று எங்களுக்கே தோன்றாமல், நாங்கள் ஏன் தவறு என்று ஒப்புக்கொள்ளவேண்டும்?"
சாரா சொல்லிவிட்டார், ஆனால் பிராங்க் சந்தித்த மற்ற உயரதிகாரிகள் யாரும் சொல்லவில்லை என்பதைத்தவிர வேறு எந்த வேறுபாடுமில்லை.

பெல்ஜியம் மன்னரின் கட்டுப்பாட்டில் அடிமை நாடாக நடத்தப்பட்ட காங்கோவிற்கும் இன்றைய காங்கோவிற்கும் என்ன வேறுபாடு இருக்கிறது?நூற்றுக்கணக்கான சுரங்கங்களும் அதில் இலட்சக்கணக்கான மக்களும் கிழக்கு காங்கோவில் சுரண்டப்படுகிறார்கள். நூறு ஆண்டுகளுக்கு முன்பு நோக்கியா நிறுவனம் ரப்பர் காலணிகள் செய்யும் நிறுவனமாக இருந்தது. அப்போது காங்கோவை அடிமை நாடாக வைத்திருந்த பெல்ஜியம் மன்னர் லியோபோல்ட் மூலமாக, காங்கோவிலிருந்து ரப்பரை எடுத்துக்கொண்டிருந்தது நோக்கியா நிறுவனம். அதே நோக்கியா நிறுவனம் இன்று ஒரு மிகப்பெரிய செல்போன் தயாரிக்கும் நிறுவனமாக இருக்கிறது. உலகில் தயாரிக்கப்படும் நான்கில் ஒரு செல்போனை நோக்கியாதான் தயாரிக்கிறது. இன்று காங்கோ மக்களின் இரத்தம் குடிக்கும் உள்நாட்டுப் போருக்கு நிதியளித்து, தனது செல்போன் உற்பத்தித்தொழிலை நடத்திக்கொண்டிருக்கிறது. நோக்கியா போன்ற மிகப்பெரிய நிறுவனமே இதனைச்செய்தால், சந்தையில் இருக்கும் மற்ற நிறுவனங்களும் அதையேதான் பின்பற்றும் என்பதில் ஐயமேதும் நமக்கு வேண்டாம். 
-இ.பா.சிந்தன்

10 comments:

  1. எவ்வளவு தகவல்கள்..எல்லாமே புதியது..நீண்ட பதிவானாலும் விரும்பி படித்தேன்..மிக்க நன்றி.
    Falling Down (1993) - ஹாலிவுட் "இந்தியன்" தாத்தா (திரைப்பார்வை)

    ReplyDelete
  2. இதயம் நொறுங்கும் பதிவு சிந்தன். வன்மங்களின் மீது கட்டப்பட்ட நாகரீகம் வெட்க்கப்பட வைக்கிறது. அறிமுகத்திற்கு நன்றி.

    ReplyDelete
  3. நோக்கியாவை மட்டும் குறி வைத்து தாக்கும் நோக்கம்/பின்புலம் என்ன

    ஆப்பிள், சாம்சங், ப்லேக்பெர்ரி போன்களில் காங்கோ கனிம ரத்தக் கறைகள் கிடையாதா

    ReplyDelete
  4. //நோக்கியாவை மட்டும் குறி வைத்து தாக்கும் நோக்கம்/பின்புலம் என்ன
    ஆப்பிள், சாம்சங், ப்லேக்பெர்ரி போன்களில் காங்கோ கனிம ரத்தக் கறைகள் கிடையாதா//

    @ராம்ஜி_யாஹூ
    ஆப்பிளும், சாம்சங்கும் நற்சான்று பெறத்தகுதியான நிறுவனங்கள் ஒன்றும் இல்லை.... அவர்கள் தயாரிக்கும் செல்போன்களும் இரத்தத்தை உறிஞ்சி எடுக்கப்பட்ட கனிமங்களில் செய்யப்பட்டவைதான்...
    இத்திரைப்படத்தின் இயக்குனர் நோக்கியாவை ஒரு சான்றாக எடுத்துக்கொண்டு இவ்வாய்வினை நடத்தியிருக்கிறார். ஆனால் இத்திரைப்படத்தில் சொல்லப்பட்டிருக்கும் அனைத்தும், எல்லா செல்போன் நிறுவனங்களுக்கும் பொருந்தும் என்பதனை படம்முழுக்க மிக ஆழமாகவே பதிவு செய்திருக்கிறார்.

    கீழ்கண்ட வரிகளையும் படியுங்கள்...
    //நோக்கியா போன்ற மிகப்பெரிய நிறுவனமே இதனைச்செய்தால், சந்தையில் இருக்கும் மற்ற நிறுவனங்களும் அதையேதான் பின்பற்றும் என்பதில் ஐயமேதும் நமக்கு வேண்டாம். //

    ReplyDelete
  5. 1960 இல் இருந்தே காங்கோ சுதந்திரம் அடைந்துவிட்டது. தவறுகள் யாரிடம் உள்ளது? காங்கோவின் உள்நாட்டுப் போருக்கு நிதியளித்து நோக்கியா உற்பத்தித்தொழிலை நடத்திக்கொண்டிருக்கிறது என்பது எவ்வளுவு துரம் சரியானது? உள்நாட்டுப் போர் நடைபெறாவிட்டால் உற்பத்தித்தொழில் சிறப்பாக நடைபெறுமே!

    ReplyDelete
  6. சில நேரங்களில் இது போன்ற திரைப்படங்கள் வருவது சற்று ஆறுதல் ஆன விஷயம் தான்.

    ReplyDelete
  7. சில நேரங்களில் இது போன்ற திரைப்படங்கள் வருவது சற்று ஆறுதலான விஷயம் தான்

    ReplyDelete
  8. //வன்மங்களின் மீது கட்டப்பட்ட நாகரீகம் வெட்க்கப்பட வைக்கிறது//

    உண்மைதான்... கட்டுரையினை எழுதிமுடித்துவிட்டு, ஒரு முறைவாசித்தபோது கட்டுரையை எழுதிய நானே கண்ணீர்விட்டு அழுதேன்...

    ReplyDelete
  9. புதியதாய் நிறைய விஷயங்கள் தெரிந்து கொண்டேன். அதிர்ச்சியை கொடுகிறது, நீங்கள் எழுதிய இந்த கட்டுரை. தகவலுக்கு நன்றி.

    ReplyDelete
  10. அருமையான கட்டுரை. காங்கோ நாட்டின் ஏழ்மைக்கு பல காரணங்கள் இருக்கும் நிலையில் இந்த கட்டுரை புதிய தகவலை திரைப்படத்தின் மூலம் பதிவு செய்து இருப்பது பாராட்டத்தக்கது.

    ReplyDelete

Labels

Coca Cola (1) Peak Oil (1) Permaculture (1) Power of Community (1) Renewable energy (1) Solar energy (1) SOPA (1) sustainable agriculture (1) அ.குமரேசன் (6) அங்காடிதெரு (1) அணு ஆற்றல் (2) அணுமின் (1) அண்ணா (4) அண்ணா நூலகம் (1) அதிர்ச்சி (1) அத்வானி (2) அந்நிய முதலீடு (2) அபிநயா (1) அப்துல் கலாம் (1) அப்பணசாமி (2) அமெரிக்கா (20) அம்பானி (1) அம்பேத்கர் (9) அரசியல் (177) அரசியல்.நிகழ்வுகள் (6) அரசு (14) அரசு மருத்துவமனை (1) அரசு விடுதி மாணவர்கள் (1) அரவான் (1) அருந்ததியர் (1) அர்ஜெண்டினா (1) அலசல் (1) அவலம் (19) அழகு (1) அறிமுகம் (1) அனுபவம் (28) அன்னா ஹசாரே (1) அஜயன் பாலா (1) ஆ.ராசா (1) ஆணையம் (2) ஆதவன் தீட்சண்யா (3) ஆப்கானிஸ்தான் (1) ஆப்பிரிக்கா (2) ஆர்.மீனா (1) ஆர்எஸ்எஸ் (2) ஆவணப்படம் (3) ஆனந்தன் (2) இ.எம்.ஜோசப் (1) இ.பா.சிந்தன் (22) இட ஓதுக்கீடு (3) இடஒதுக்கீடு (1) இடதுசாரிகள் (4) இணையம் (2) இதழ்கள் (6) இந்தியா (69) இந்துத்துவா (8) இந்துஜா (1) இமு (2) இமு டிச11 (5) இமு நவமபர் 2011 (6) இயக்கம் (7) இயக்குனர் ஷங்கர் (1) இரா.சிந்தன் (5) இரா.செழியன் (2) இரா.நடராஜன் (3) இராம.கோபாலன் (1) இல.சண்முகசுந்தரம் (2) இலக்கியம் (38) இலங்கை (6) இலங்கைத் தமிழர் (4) இலவசக் கல்வி (1) இலவசங்கள் (1) இளவரசன் கொலை (1) இளைஞர் முழக்கம் (11) இஷ்ரத் (2) இஸ்ரேல் ஆக்கிரமிப்பு (1) இஸ்லாம் (3) ஈராக் (1) ஈரான் (2) உ.வாசுகி (1) உச்ச நீதிமன்றம் (1) உணவு நெருக்கடி (2) உதயசங்கர் (1) உத்தப்புரம் (1) உயர்கல்வி (2) உரையாடல்கள் (2) உலக சினிமா (4) உலகமயம் (5) உலகம் (46) உளவியல் (1) உள்ளாட்சி (1) உள்ளாட்சித் தேர்தல் (1) ஊடகங்கள் (14) ஊடகம் (8) ஊழல் (30) எடியூரப்பா (1) எம்.எப்.ஹூசேன் (1) எம்.சிவக்குமார் (2) எரிசக்தி (1) எல்.கே.ஜி (1) என்.ஜி.ஓ (1) என்கவுண்டர் (1) எஸ். பாலா (1) எஸ்.கண்ணன் (1) எஸ்.கருணா (3) எஸ்.பி.ராஜேந்திரன் (3) எஸ்.வி.வேணுகோபாலன் (2) ஏகாதிபத்தியம் (13) ஏமன் (1) ஒபாமா (4) ஓம்பிரகாஷ் வால்மீகி (1) ஓளிப்பதிவு (1) ஃபாக்ஸ்கான் (1) கச்சத் தீவு (1) கட்டுரை (51) கட்டுரைகள் (2) கணிணி (2) கணினி தொழில் நுட்பம் (1) கமல்ஹாசன் (1) கம்யூனிசம் (12) கருணாநிதி (11) கருத்து சுதந்திரம் (1) கருத்துரிமை (3) கலைஞர் (6) கல்வி (14) கவிதை (21) கவிதைகள் (1) கறுப்புப்பணம் (3) கனிமொழி (2) காங்கிரஸ் (10) காதல் (2) கால்பந்து (1) காவல்துறை (4) காஷ்மீர் (1) கி.பார்த்திபராஜா (1) கிங்பிஷர் (1) கியூபா (4) கிரீஸ் (1) குடும்பம் (1) குட்டி ரேவதி (1) குப்பன் சுப்பன் (1) குலாத்தி (1) குழந்தைகள் (9) குழந்தைகள் கடத்தல் (1) குஜராத் கலவரம் (1) குஜராத் படுகொலைகள் (1) கூகிள் அந்தரங்கம் (1) கூடங்குளம் (2) கே.சாமுவேல்ராஜ் (1) கே.பாலமுருகன் (1) கேள்விகள் (1) கைப்பற்றுவோம் போராட்டம் (1) கோவில் (1) ச.தமிழ்ச்செல்வன் (1) ச.மாடசாமி (1) சக்திஜோதி (1) சங்கமம் (1) சசிகலா (1) சச்சின் (1) சட்டசபை (2) சட்டம் (4) சத்யஜித் ரே (1) சந்திரகாந்தன் (1) சமச்சீர் கல்வி (4) சமவூதியம் (1) சமூக நீதி (2) சமூக வலைத்தளம் (1) சமூகப் பாதுகாப்பு (2) சமூகம் (177) சம்பு (1) சரத் பவார் (1) சர்வதேச பெண்கள் தினம் (1) சல்மான் ருஷ்டி (1) சா.கந்தசாமி (2) சா.செயக்குமார் (1) சாகித்திய அகாதமி விருது (1) சாக்லேட் (1) சாதீயம் (4) சாரா விஜி (2) சாலிம் அலி (1) சி.பி.எம் (9) சிக்கிம் (1) சிந்தனை (5) சிபி (1) சிராஜுதீன் (1) சில்லரை வர்த்தகம் (4) சிறப்பு பொருளாதார மண்டலங்கள் (1) சிறுகதை (12) சினிமா (52) சினிமா செய்திகள் (4) சினிமாச் செய்திகள் (4) சீத்தாராம் யெச்சூரி (2) சு.பொ.அகத்தியலிங்கம் (2) சு.வெங்கடேசன் (1) சுகாதாரம் (1) சுதிர் ரா (1) சுயமரியாதைத் திருமணம் (1) சுவாரசியம் (1) சுற்றுப்புறச் சூழல் (3) சூர்யா (1) செம்மலர் (4) செம்மலர் அக் 2011 (4) செய்திகள் (112) சென்னை (1) சோவியத் (1) சோஷலிசம் (1) டெல்லி (2) டேம் 999 (1) த.தமிழரசி (1) தகவல் உரிமை (1) தகவல் திருட்டு (2) தண்ணீர் (3) தமிழக மீனவர்கள் (1) தமிழகம் (66) தமிழர் (1) தமிழ்ச் சினிமா (1) தமிழ்நதி (1) தமுஎகச (4) தலித் (21) தற்கொலை (1) தனியார்மயம் (4) தனுஷ் (1) தி.க (2) திமுக (1) திரிணாமுல் (1) திருப்பூர் (2) திருமணம் (2) திரைக்குப் பின்னால் (2) திரைத்துறை (1) திரைப்பட விழா (1) திரைப்படம் (4) தினகரன் (1) தினமணி (3) தீக்கதிர் (9) தீண்டாமை (22) தீண்டாமையின் அடையாளங்கள் (1) தீபாவளி (1) தேசியச் செய்திகள் (4) தேர்தல் (4) தொண்டு நிறுவனங்கள் (1) தொலைக்காட்சி (2) தொழிலாளர் (6) ந.பெரியசாமி (1) நகர்ப்புற விவசாயம் (1) நகைச்சுவை (1) நக்கீரன் (1) நதிம் சயித் (1) நந்தலாலா (1) நந்தன் (1) நரேந்திர மோடி (6) நலத்திட்டங்கள் (2) நவம்பர் புரட்சி (1) நாடகம் (1) நாடாளுமன்றத் தேர்தல் 2014 (2) நாணய மதிப்பு (1) நாறும்பூநாதன் (1) நிகழ்வுகள் (154) நிலப்பிரபுத்துவம் (1) நிலமோசடி (1) நீதித்துறை (2) நீலவேந்தன் (2) நுகர்வுக் கலாச்சாரம் (2) நூல் அறிமுகம் (12) நூல் வெளியீடுகள் (1) நெல்சன் மண்டேலா (1) நேட்டோ (2) நையாண்டி (26) நையாண்டி் (14) ப.சிதம்பரம் (3) பசுபதி (1) படுகொலை (3) படைப்புகள் (2) பட்ஜெட் (1) பணவீக்கம் (2) பதிவர் வட்டம் (3) பதிவர்வட்டம் (1) பதிவுலகம் (1) பரிந்துரைகள் (5) பழங்குடி (1) பள்ளிக்கூடம் (1) பறவைகள் (1) பன்னாட்டுக் கம்பெனிகள் (3) பா.ஜ.க (3) பாகிஸ்தான் (2) பாடல் (5) பாதல் சர்க்கார் (1) பாதுகாப்பு (1) பாரதி (2) பாலபாரதி (1) பாலஸ்தீனம் (1) பாலியல் வன்முறை (6) பாலு மகேந்திரா (1) பால் சமத்துவம் (1) பாஜக (1) பி.சுகந்தி (1) பி.ராமமூர்த்தி (1) பிடல் காஸ்ட்ரோ (3) பிரணாப் முகர்ஜி (1) பிரபாத் பட்நாயக் (3) பிரளயன் (2) பிரிட்டன் (1) பிர்தவ்ஸ் ராஜகுமாரன் (1) பிளின் (1) பு.பெ.நவமபர் 2011 (1) புகைப்படங்கள் (1) புதிய பரிதி (2) புது விசை (12) புதுமை (1) புத்தக அறிமுகம் (2) புத்தகக் கண்காட்சிகள் (2) புத்தகம் (18) புத்தகம் பேசுது (17) புத்தகம் பேசுது நவம்பர் 2011 (8) புத்தகாலயம் (2) புத்தாண்டு (1) புபே (2) புபே டிச11 (8) புரட்சி (2) புவி (1) புவி டிச11 (5) புவி நவ 2011 (7) புனைவு (1) புஷ் (1) பெட்ரோல் (7) பெண் (11) பெண் விடுதலை (1) பெண்குழந்தை (1) பெண்ணியம் (9) பெண்ணெழுத்து (1) பெரியார் (2) பெருமுதலாளிகள் (7) பேட்டி (2) பேரா.சிவசுப்பிரமணியன் (2) பேஸ்புக் (1) பொருளாதார நெருக்கடி (2) பொருளாதாரம் (24) போக்குவரத்து (1) போராட்டம் (15) போலீஸ் தாக்குதல் (3) ப்ரிசம் (4) ப்ரிசம் - தகவல் திருட்டு (7) ப்ரியா தம்பி (1) மக்களுக்கான மருத்துவம் (1) மக்கள் நலப்பணியாளர்கள் (2) மக்கானா (1) மத அடிப்படை வாதம் (1) மதவெறி (3) மதுசூதனன் (1) மம்தா (3) மம்முட்டி (1) மரபணு (1) மலாலாய் சோயா (1) மவோயிஸ்டுகள் (1) மன்மதன் அம்பு (1) மன்மோகன்சிங் (10) மா ற்று (1) மாட்டுக்கறி (1) மாதர் சங்கம் (1) மாதவராஜ் (2) மாவோ (1) மாற்ற (1) மாற்று (223) மின்கட்டணம் (1) மின்சாரம் (1) மீள்பார்வை (2) முதலாளி (1) முதலாளித்துவம் (11) முத்தமாக மாறேன் (1) முத்துக்கண்ணன் (1) முல்லைப் பெரியாறு (7) முறைகேடுகள் (5) மெகாசீரியல் (1) மே.வங்க அரசு (1) மே.வங்கம் (1) மேதினம் (1) மேற்கு வங்கம் (1) மொக்கை (1) மொழி (2) மொழிபெயர்ப்பு (1) மோசடி (1) மோடி (3) மோனிகா (1) யுத்தம் (2) ரத யாத்திரை (1) ரமேஷ் பாபு (2) ராகுல் காந்தி (2) ராடியா (2) ராஜ பக்‌ஷே (1) ரிலையன்ஸ் (1) ருமேனியா (1) லட்சுமணப்பெருமாள் (2) லெனின் (2) லோக்பால் (5) வசந்த பாலன் (1) வண்ணக்கதிர் (1) வரலாறு (19) வலைப்பூக்கள் (1) வழக்கு விசாரணை (1) வாசிப்பு (5) வாச்சாத்தி (1) வால் ஸ்டிரிட் (3) வால்மார்ட் (1) வால்ஸ்டிரிட் போராட்டம் (2) வாழ்க்கை (4) வானியல் (2) விக்கிபீடியா (1) விக்கிலீகஸ் (1) விக்கிலீக்ஸ் (7) விஞ்ஞானம் (2) விமர்சனம் (10) விலையேற்றம் (2) விலைவாசி (11) விலைவாசி உயர்வு (2) விவாதங்கள் (1) விவாதம் (9) விளம்பரம் (1) விளையாட்டு (4) வினவு (1) விஜய் (2) விஜய் மல்லையா (1) வீட்டுவசதி வாரியம் (1) வீரமணி (2) வெண்மணி (2) வெள்ளம் (2) வெனிசுவெல்லா (1) வேலையின்மை (2) வோடாபோன் (1) ஜப்பான் நெருக்கடி (2) ஜாக்கிசான் (1) ஜாதி (1) ஜாபர் பனாகி (1) ஜூலியன் அசாங்க (1) ஜெயலலிதா (9) ஜோதிடம் (1) ஸ்டீவ் ஜாப்ஸ் (1) ஸ்பீல்பர்க் (2) ஸ்பெக்ட்ரம் (6)