Sunday, January 15, 2012

கொலம்பஸின் காலனியாதிக்கமும், பொலிவியாவின் தண்ணீர்ப்புரட்சியும் (Even the Rain - Spanish Film)
'கொலம்பஸ் அமெரிக்காவைக் கண்டுபிடித்தார்' என்கிற ஒற்றை வரிதான் கொலம்பஸ் குறித்து நமக்கு சொல்லித்தரப்பட்டிருக்கிறது. யாரந்த கொலம்பஸ்? அவர் எதற்காக ஐரோப்பாவிலிருந்து கடல்வழிமார்க்கமாக பல ஊர்களுக்குச் சென்றார்? என்பதற்கான பதில்களெல்லாம் நமக்குச்சொல்லித்தரப்பட்டதே இல்லை. கொலம்பஸ் சென்ற நாடுகளிலெல்லாம் அம்மக்களை அடிமைப்படுத்தி கொடுங்கோல் ஆட்சி புரிந்தார் என்பதும், தங்கம் மற்றும் இன்ன பிற செல்வங்கங்களை கொலம்பஸின் காலடியில் போடாதவர்களின் கைகள் வெட்டியெறியப்பட்டன, எதிர்த்துக்கேள்வி கேட்போரெல்லாம் தீயிட்டுக் கொளுத்தப்பட்டனர் என்பதெல்லாம் நமக்குச் சொல்லித்தரப்பாத உண்மை வரலாறு. இது காலனியாதிக்கம்...

"தண்ணீரை தனியார்மயமாக்கு"
"இலவசமாக கல்வி வழங்காதே"
"விவசாயிகளுக்கு மானியம் கொடுக்காதே"
"இதனைச்செய்யாவிடில் உனக்கு கடனுதவி கிடையாது"
என்னும் உலகவங்கியின் கட்டளைகளை ஏற்று செயல்படுத்துகிற அரசுகள் பெரும்பாலான மூன்றாமுலக நாடுகளில் இன்றும் இருந்து வருகின்றன. அதன்பிறகு வளர்ந்தநாடுகளிலுள்ள பன்னாட்டு நிறுவனங்கள் அம்மூன்றாமுலக நாடுகளுக்குள் நுழைந்து தங்கள் வியாபாரக்கடைகளை விரித்து, கல்லாகட்டிவிடும்... இது மறுகாலனியாதிக்கம்....

பொலிவிய நாட்டில் கொச்சாபம்பா என்கிற நகரிற்கு செமாபா (SEMAPA) என்னும் அரசு நிறுவனம்தான் தண்ணீர் வழங்கிவந்தது. தண்ணீரை தனியார்மயமாக்காவிட்டால் பொலிவியாவிற்கு எவ்விதமான கடனுதவியும் செய்யப்படமாட்டாது என்று உலகவங்கி அறிவித்துவிட்டது. அதனையேற்று, 1998 இல் கொச்சாம்பாவிற்கு தண்ணீர் வழங்குவதற்கு 'அகுவாஸ் டெல் டுனாரி' என்கிற பன்னாட்டு நிறுவனத்துடன் பொலிவிய அரசு ஒப்பந்தம் போட்டது. இங்கிலாந்தின் 'சர்வதேச தண்ணீர் நிறுவனம்', இத்தாலியின் 'எடிசன்' நிறுவனம், அமெரிக்காவின் 'பெக்டெல் என்டர்ப்ரைஸ் ஹோல்டிங்க்ஸ்', ஸ்பெயினின் 'அபெங்கோவா' நிறுவம் மற்றும் இரண்டு பொலிவிய தனியார் நிறுவனங்கள் ஆகியவற்றிய உள்ளடக்கிய ஒரு பன்னாட்டு நிறுவனம்தான் 'அகுவாஸ் டெல் டுனாரி'. கொச்சாம்பாவில் குடிநீர், பாசன நீர் மற்றும் மழைநீர் உட்பட அனைத்து வகையான நீரிற்கும் உரிமைகொண்ட ஒரே நிறுவனம் 'அகுவாஸ் டெல் டுனாரி' தான் என்று பத்திரமே எழுதிக்கொடுத்துவிட்டது பொலிவிய அரசு. 

(இதனை எதிர்த்து மக்கள் பெரிய அளவில் போராடினார்கள். நாட்டின் எல்லா பகுதிகளிலிருந்தும் அப்போராட்டத்திற்கு ஆதரவு கிடைத்தது. அதன் விளைவாக பொலிவியாவில் ஒரு ஆட்சிமாற்றமே நிகழ்ந்திருக்கிறது என்பது தனி கதை)


கதைச்சுருக்கம்:

கொலம்பஸின் வாழ்க்கையை திரைப்படமாக்கி, அவரது உண்மை முகத்தை உலகறியச்செய்திட இயக்குனர் செபாஸ்டின், தயாரிப்பாளர் கோஸ்டா ஆகியோர் ஒரு சிறிய குழுவுடன் பொலிவியா வருகிறார்கள். இயற்கை அழகைக் கருத்தில்கொண்டு இயக்குனர் செபாஸ்டின் பொலிவியாவைத்தேர்ந்தேடுக்கிறார். ஆனால் தயாரிப்பாளர் கோஸ்டாவோ, ஒரு நாளைக்கு வெறும் 2 டாலர் கொடுத்தாலே வேலைக்கும் நடிக்கவும் ஆட்கள் கிடைப்பார்கள் என்கிற நோக்கில்  பொலிவியாவைத் தேர்ந்தெடுக்கிறார். உள்ளூர் மக்களையே அத்திரைப்படத்தில் நடிக்கவைக்கிறார்கள். அவர்கள் நடிக்கத்தேர்ந்தெடுத்த உள்ளூர்க்காரர்களில் ஒருவர், பொலிவிய அரசு தண்ணீரை தனியார்மயமாக்குவதை எதிர்க்கும் போராட்டத்தின் முக்கிய போராளியாக இருக்கிறார். கொலம்பஸின் காலனியாதிக்கத்தை/கொடூரமுகத்தை ஒருபுறமும், உலகவங்கியின்மூலமாக மூன்றாமுலக நாடுகளை தனியார்மய வலைக்குள் சிக்கவைத்து, மீன்பிடித்து மகிழும் மேற்கத்திய நாடுகளின் மறுகாலனியாதிக்கத்தை பொலிவியாவின் தண்ணீர் பிரச்சனையின் வழியாக மறுபுறமும் எடுத்துரைக்கிற திரைப்படம்தான் "EVEN THE RAIN"


கொலம்பஸின் வாழ்க்கையாக இத்திரைப்படத்தில் வருபவை....

கொலம்பஸ் : "இயேசு கிறிஸ்துவின் ஆசீர்வாதத்துடன் ஆட்சிபுரியும் ஆரகோன் அரசர் பெர்டினன்ட் மற்றும் அரசி இசபெல்லா ஆகியோரின் ஆணைப்படி இங்கிருக்கும் நிலங்களையும் கடல்களையும் அவற்றிலிருக்கும் அனைத்தையும் சொந்தமாக்கிக்கொள்ள வந்திருக்கிறேன். இந்நிலங்களின் கடல்களின் இறையாண்மையை அவர்களின் சார்பாக காப்பேன் என்று உறுதிகூறுகிறேன்" என்று அறிவிக்கிறார் கொலம்பஸ்.

தன்னுடைய குழுவினரிடம், 
கொலம்பஸ் : "இம்மக்கள் மிகவும் அமைதியானவர்களாக இருக்கிறார்கள். அதோ அதுதான் அவர்களது கிராமமென்று நினைக்கிறேன். ஒரு கோட்டை கட்டுவதற்கு சிறந்த இடம் அது. நீங்கள் அனைவரும் இம்மக்களுடன் கலந்துவிடுங்கள். உங்களில் யார் முதலில் தங்கத்தை கண்டுபிடிக்கிறீர்களோ, அவர்களுக்கு நிச்சயம் பரிசு உண்டு. அதுமட்டுமில்லாமல், அவர்களிடம் என்ன மாதிரியான ஆயுதங்கள் இருக்கிறது என்பதையும் கண்டறியுங்கள்"

அம்மக்களின் வாழ்க்கையினை நன்கு அறிந்தபிறகு, அவர்களை ஓரிடத்தில் அழைத்து கொலம்பஸ் மீண்டும் பேசுகிறார்.
கொலம்பஸ்: "தேவாலயத்தையும் போப்பையும் இப்பிரபஞ்சத்தை ஆள்பவர்களாகவும், ஸ்பெயின் அரசரையும் அரசியையும் இந்நிலங்களின் ஆட்சியாளர்களாகவும் நீங்கள் ஏற்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன். அதற்கு பிரதிபலனாக, எங்களது அன்பை உங்களுக்குத் தருவோம்."
ஒரு இந்தியர்: "ஏற்றுக்கொள்ளவில்லையென்றால்?"
கொலம்பஸ் : "உங்களை அடிமையாக்குவோம். உங்களது உடைமைகளை ஆக்கிரமிப்போம். எங்களால் இயன்றவரை உங்களை துன்புறுத்துவோம்."
ஒரு இந்தியர்: "எங்களிடமிருந்து என்னதான் வேண்டும் உங்களுக்கு?"
கொலம்பஸ் : "வரி"
கொலம்பஸ் : "ஒவ்வொரு இந்தியனும் இந்த குண்டுமணி அளவிற்கு தங்கம் கொண்டுவர வேண்டும்." 
என்கிற ஆணை பிறப்பிக்கிறார் கொலம்பஸ்.

அதன்பிறகு ஒவ்வொரு நாளும், அம்மக்களை வரிசையில் நிற்கவைத்து எல்லோரும் ஒரு குண்டுமணி அளவிற்கு தங்கம் கொண்டுவந்திருக்கிறார்களா என்று எடைபோட்டு பார்க்கிறார்கள். தங்கத்தின் அளவு சிறிது குறைவாக இருந்தாலும் கூட, அம்மக்களின் கைகளை வெட்டியெறிகிறார்கள் கொலம்பஸின் உத்தரவுடன் அவரது ஆட்கள்.

இக்கொடுமைகளில் இருந்து தப்பித்து ஓடுகிறவர்களையும், எதிர்த்து கேள்விகேட்போரையும் பொதுவிடத்தில் எரித்துவிடுகின்றனர் கொலம்பசும் அவரது கூட்டமும்.ஈவன் தி ரெயின்திரைப்படத்தின் திரைக்கதை:

'நடிக்க ஆள் வேண்டும். எல்லோருக்கும் வாய்ப்பளிக்கப்படும்' என்ற விளம்பரத்தைப்பார்த்து , திரைப்படக்குழு அலுவலகத்தின் முன்பு ஆயிரக்கணக்கானோர் பெருங்கூட்டமாக வந்து குவிகிறார்கள். இயக்குனர் செபாஸ்டின் அவருக்குத் தேவையான சிலரை, வரிசையின் முதலிலிருந்து தேர்ந்தெடுத்துவிட்டு, வரிசையின் பின்னாலிருப்போரை கிளம்பச்சொல்கிறார். உடனே அக்கூட்டத்திலிருந்து டேனியல் என்பவர், திரைப்படக்குழுவினருடன் வாக்குவாதத்தில் ஈடுபடுகிறார். 
"எல்லோரையும் பார்த்துவிட்டு, அதன் பிறகே நீங்கள் முடிவெடுக்கவேண்டும். இந்த வேலைக்காக நாங்கள்லாம் எத்தனை கிலோமீட்டர் நடந்து வந்துருக்கோம் தெரியுமா உங்களுக்கு? உங்களுக்கு எங்க கஷ்டங்களெல்லாம் புரியாது..." என்று திரைப்படக்குழுவினருடன் கோபமாக வாதிடுகிறார் டேனியல். 

டேனியலின் கோபம் தன்னுடைய படத்திற்கு உதவும் என்று நம்பி, 'வரிசையில் இருக்கும் எல்லோரையும் பார்த்துவிட்டே தேர்வு செய்வோம்' என்று அறிவிக்கிறார் செபாஸ்டின். கூட்டத்திலிருக்கும் எல்லோரும் டேனியலை பாராட்டி கைதட்டுகிறார்கள்.

டேனியலின் முகமும் அவரிடம் காணப்படுகிற போராட்ட குணமும் படத்தில் கொலம்பஸை எதிர்த்துப் போராடும் இந்தியர் வேடத்திற்கு பொருந்துமென்பதால் டேனியலையும் அவரது மகளையும் தன்னுடைய திரைப்படத்தில் நடிக்க தேர்வுசெய்கிறார் இயக்குனர் செபாஸ்டின்.

மற்றொருநாள் திரைப்படக்குழு அலுவலகம் அருகிலேயே டேனியலும் அந்த ஊர் மக்கள் சிலருமாக சேர்ந்து அங்கே குழி தோண்டிக்கொண்டிருக்கிறார்கள். திரைப்படக்குழுவிலுள்ள ஒரு பெண், டேனியலைப் பார்த்து, 'எதற்காக இங்கே தோண்டுகிறீர்கள்?" என்று கேட்கிறாள்.
டேனியல் : "எங்களுக்கு இங்க குடிக்க தண்ணியே இல்ல. அதான் நாங்க எல்லாரும் சேர்ந்து காசு போட்டு, இங்க இருந்து ஏழு கிலோமீட்டர் தூரத்தில் அதோ தெரியுதே அந்த மலைக்கு பக்கத்துல ஒரு கிணறு வாங்கிருக்கோம். அங்க இருந்து பூமிக்கு கீழே குழாய்வழியாக தண்ணீரை இங்கே கொண்டுவருவதற்குதான் தோண்டிக்கிட்டு இருக்கோம்."
இதனைக்கேட்ட அப்பெண் அதிர்ச்சியுருகிறாள். அப்போது 'அகுவாஸ் டெல் டுனாரி' என்கிற பன்னாட்டு தனியார் தண்ணீர் நிறுவனத்தைச்சேர்ந்த சிலர் அங்கே வந்து ஏதோ கணக்கெடுத்துக்கொண்டிருக்கிறார்கள். அதனைக்கண்ட டேனியலும் ஊர்மக்களும் தனியார் நிறுவன வண்டியை அடித்து நொறுக்கி அதில் வந்தவர்களையும் அடித்துத் துரத்துகிறார்கள்.
மற்றொருநாள் 'அகுவாஸ் டெல் டுனாரி' நிறுவன ஆட்கள் பொலிவிய காவல்துறை சகிதமாக வந்து, கொச்சாபம்பா மக்கள் தங்கள் சொந்த செலவில் கட்டிவைத்த தண்ணீர் தொட்டிகளை சீல்வைத்து மூடுகிறார்கள்.
இதனைக்கண்டு வீடுகளிலிருக்கும் பெண்கள் ஓடிவருகிறார்கள்...
பெண்கள் : "எங்களுடைய சொந்த உழைப்பில் தோண்டிய கிணறும் தொட்டிகளும் இவை."
பெண்கள் : "இதனை மூட உங்களுக்கு எந்த உரிமையும் இல்லை"
பெண்கள் : "நாங்க அழுக்குத் தண்ணீரோடு எப்படி வாழ்வது?"
பெண்கள் : "எங்களோட நிலத்தை எடுத்துக்கொண்டீர்கள்... எங்களுடைய கிணறுகளையும் எடுத்துக்கொண்டீர்கள்.... காற்றையும் எடுத்துக்கொள்வீர்களா?"
பெண்கள் : "இதுக்கு மேலும் தண்ணீருக்கு உங்களுக்கு எங்களாலு காசு கொடுக்கமுடியாது"
காவல்துறை அதிகாரி : "அவங்களை அவங்களோட வேலையை செய்யவிடுங்க"
பெண்கள் : "என்ன வேலை? எங்களோட தண்ணீரை எடுத்துக்குற வேலையா?"
பெண்கள் : "இது எங்களோட தண்ணீர்.... எங்க குழந்தைகளுக்கான தண்ணீர். இதில் கைவைக்காதீர்கள்...."
அப்பெண்களின் கெஞ்சுகுரல்களுக்கெல்லாம் அவர்கள் செவிசாய்க்காமல் தொட்டிகளுக்கு பூட்டுபோடத்துவங்குகிறார்கள். இப்போது பெண்கள் அனைவரும் கெஞ்சுவதை நிறுத்தி, காவல்துறையினரை விரட்டி அடிக்கிறார்கள்.

விவரம் அறிந்த டேனியலும் சிறிய அளவிலான மக்களும் 'அகுவாஸ் டெல் டுனாரி' நிறுவனத்தின் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுகிறார்கள். டேனியல் ஒரு சிறிய ஒலிபெருக்கியின் வழியாக அம்மக்கள்முன் ஆவேசமாக பேசுகிறார்.
டேனியல் : "தோழர்களே! அவர்கள் நமது விருப்பத்துக்கு மாறாக, நம்முடைய ஆறுகளை குளங்களை ஏரிகளை விற்றார்கள்... நம் தலைமீது விழும் மழைத்தண்ணீரைக்கூட சட்டம்போட்டு விற்றார்கள்... இது நம்ப முடியாத உண்மை தோழர்களே! மழைநீரைக்கூட நம்மை எடுக்கவிடுவதில்லை. ஆனால் அதனை யார் எடுக்கிறார்கள்? லண்டனிலும் கலிபோர்னியாவிலும் இருக்கிற முதலாளிகளின் நிறுவனங்கள்தான் எடுக்கின்றன..."
டேனியல் : "தோழர்களே! அடுத்தது அவர்கள் எதனை நம்மிடமிருந்து திருடப்போகிறார்கள்? நம்முடைய மூச்சுக்காற்றையா? நம்முடைய நெற்றி வியர்வையா? ஆனால் அவர்களுக்குக் கிடைக்கப்போவது நம்முடைய சிறுநீர்மட்டுந்தான்" 
என்று பேசிமுடிக்கையில் காவல்துறையினர் டேனியலை அப்புறப்படுத்துகிறார்கள்.
இதனை சற்று தொலைவில் நின்று பார்த்துக்கொண்டிருந்த 'கொலம்பஸ் திரைப்படத்தின் தயாரிப்பளருக்கு பயமும் கோபமும் ஒருசேர உருவாகிறது. டேனியலை தனியே அழைத்து எச்சரிக்கிறார். தண்ணீர்ப் போராட்டங்களிலிருந்து ஒரு மூன்று வாரத்திற்கு தள்ளியே இருக்குமாறு டேனியலை வற்புறுத்துகிறார். டேனியல் எவ்வித பதிலும் சொல்லாமல் அமைதிகாக்கிறார்.

அடுத்தநாள் டேனியல் மக்களோடிணைந்து தண்ணீர் தனியார்மயமாவதை எதிர்க்கிற தங்கள் போராட்டத்தின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கிறார். ஆலோசனையின் முடிவில், தண்ணீர் நிறுவனத்தை முற்றகையிடுவதென்றும் தண்ணீர் கிடைக்கும்வரை அங்கிருந்து நகர்வதில்லையென்றும் உறுதிஎடுக்கிறார்கள். அதன்படி எல்லோரும் தண்ணீர் நிறுவனத்தின்முன்பாக கூடுகிறார்கள். டேனியல் மக்கள்முன்பு பேசத்துவங்குகிறார்.
டேனியல் : "அடுத்த 48 மணிநேரத்திற்குள் தண்ணீரினை தனியார்மயமாக்குவதை திரும்பப் பெறவில்லையெனில், நகரின் சாலைகளனத்தையும் மறித்துப் போராட்டம் நடத்துவோம்."
 கூடியிருக்கிற மக்கள் அனைவரும் கைதட்டி தங்கள் ஆதரவைத் தெரிவிக்கிறார்கள்.

பொலிவிய அரசு மக்களின் குரலுக்கு செவிசாய்க்காமல், அவர்களது போராட்டத்தை ஒடுக்கவே முயற்சிக்கிறது. காவல்துறையினரால் எல்லோரும் கடுமையாக அடிக்கப்படுகிறார்கள். அதில் டேனியலுக்கும் நன்றாகவே அடியும் உதையும் விழுகிறது. இதனைகேள்விப்பட்ட 'கொலம்பஸ்' திரைப்பட இயக்குனரும், தயாரிப்பாளரும் டேனியல் மீது கடும் கோபதிற்குள்ளாகிறார்கள். தயாரிப்பாளர் கோஸ்டா டேனியலின் வீட்டிற்கே வந்து, 'இனியாவது எந்தப் போராட்டத்திற்கும் போகாதே' என்று எச்சரித்துவிட்டுப்போகிறார்.

ஆனால் அடுத்தநாளும் போராட்டம் தொடர்கிறது. காவல்துறையினரின் கடும் தாக்குதலுக்காளாகி இரத்தவெள்ளத்துடன் டேனியல் கைதாவதை தொலைக்காட்சியில் பார்க்கிறார்கள் கோஸ்டாவும் செபாஸ்டினும். டேனியலை அடைத்துவைத்திருக்கிற சிறைக்கு சென்று, உயர் காவல் அதிகாரிக்கு லஞ்சம் கொடுத்து டேனியலை மீட்கிறார்கள். திரைப்படம் எடுத்துமுடித்தபின்னர் டேனியலை மீண்டும் சிறைக்கே வந்து ஒப்படைப்பதாக டேனியலுக்குத்தெரியாமல் சிறையதிகாரிக்கு வாக்குகொடுக்கிறார்கள்.
தயாரிப்பாளர் கோஸ்டா: ஏன் இப்படி செஞ்ச டேனியல்? என்னோட வார்த்தையை நீ மீறிவிட்டாயே?
டேனியல் : தண்ணீர்தான் வாழ்க்கை. அது உங்களுக்கு புரியாது...

அடுத்தநாள் படப்பிடிப்பிற்கு டேனியல் வருகிறார். நடித்துக்கொண்டிருக்கும்போதே, காவல்துறைவந்து டேனியலை கைது செய்யமுயல்கிறது. கூடியிருக்கிற மக்களனைவரும் காவல்துறையினரை அடித்துவிட்டு, டேனியலை தப்பவிடுகிறார்கள். கொச்சாபம்பா நகரின் மக்களுடைய பேராதரவுடன் போராட்டமும் பலமடங்கு பெரியதாகிறது. கொச்சாபம்பாவில் படப்பிடிப்பைத் தொடர இயலாத காரணத்தால், எட்டு மணிநேரம் பயணித்து வேறுவொரு கிராமத்திற்கு சென்று படப்பிடிப்பைத் தொடரலாமென்று முடிவெடுக்கிறார்கள் திரைப்படக்குழுவினர். அவர்கள் கிளம்புகிற நேரத்தில், டேனியலின் மனைவி அங்கே வந்து, தன்னுடைய மகள் அடிபட்டு கிடப்பதாகச்சொல்லி தயாரிப்பாளர் கோஸ்டாவின் உதவியைக்கேட்கிறாள். அவளது அழுகை கோஸ்டாவை அவளுடன் செல்லவைக்கிறது. இயக்குனர் செபாஸ்டினும் திரைப்படக்குழுவினரும் அங்கிருந்து புதிய படப்பிடிப்புத்தளத்திற்கு செல்கிறார்கள். கோஸ்டா மட்டும் டேனியலின் மனைவியுடன் அவளது மகளைத்தேடிச்செல்கிறார். 

கோஸ்டா செல்லும் வழியெங்கும் பிணங்கள், இரத்தவாடை, மனித பாகங்களின் சிதறல்கள், முழுவதுமாக சேதமடைந்த நகர வீதிகள்/வீடுகள் என எல்லாமுமாகச்சேர்ந்து கோஸ்டாவின் மனதை ஏதோ செய்தது. இறுதியாக டேனியலின் மகளைக்கண்டுபிடிக்கிறார்கள். அவ்விடத்தில் ஏராளமானோர் காயங்களோடு உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கின்றனர். கோஸ்டா தன்னுடைய காரிலேயே டேனியலின் மகள் உட்பட பலரையும் ஏற்றிக்கொண்டு மருத்துவமனைக்குச் செல்கிறார். இரவு முழுவதும் மருத்துவமனையிலேயே இருந்துவிடுகிறார் கோஸ்டா. மறுநாள் எல்லோரும் அபாய கட்டத்தை தாண்டிவிட்டார்கள் என்கிற செய்தியை அறிந்ததும், டேனியலைத்தேடி நகரத்தின் மையப்பகுதிக்கு வருகிறார் கோஸ்டா. 

நகரமே அமைதியாக இருக்கிறது. தனியார் தண்ணீர் நிறுவனத்தின் பெயர்ப்பலகை சாய்ந்து விழுந்து கிடக்கிறது. 
சாலையில் ஒருவர் மணியடித்தபடி
"போராட்டத்தை நிறுத்துங்கள்... தண்ணீர் உங்களுடையதுதான்...
 போராட்டத்தை நிறுத்துங்கள்... தண்ணீர் உங்களுடையதுதான்..."
சொல்லிக்கொண்டே போவதைப்பார்த்து கொச்சாபம்பா மக்கள் வெற்றிபெற்றுவிட்டார்களே என்று கோஸ்டாவும் மகிழ்ச்சியடைகிறார்.
அதன்பின் டேனியலையும் சந்திக்கிறார். கோஸ்டா கண்ணீர் மல்க டேனியலிடமிருந்து விடைபெற்றுக்கொண்டு கிளம்புகையில் கோஸ்டாவிற்கு டேனியல் அன்புப்பரிசொன்று கொடுக்கிறார். 
காரில் பயணிக்கையில் டேனியல் கொடுத்த பரிசுப்பொட்டலத்தை திறந்துபார்க்கிறார் கோஸ்டா. அதனுள்ளே தண்ணீர் நிரப்பப்பட்ட ஒரு பாட்டில் இருக்கிறது... "யாக்கு" (ஸ்பானிஷ் மொழியில் தண்ணீர்) என்று தனக்குத்தானே ஒருமுறை சொல்லிக்கொள்கிறார் கோஸ்டா....


3 comments:

 1. உலகில் இன்று வளர்ந்த நாடுகள் என்று பீத்திக்கொள்ளும் முதலாளித்துவ நாடுகளும், உலகத்தையே அடிமையாக்கி அதன்மூலம் லாபவெறி அடைய முயலும் ஜி8 நாடுகளும் எவ்வாறு வளர்ந்தன? அதன் வளர்ச்சியில் எத்தனை உயிர்களும், எத்தனை வளங்களும் சுரண்டப்பட்டன என்பதற்கு இந்த கட்டுரை நல்ல உதாரணம். சோசலிசமே இதற்கு பதிலடியாக அமையும், கம்யூனிசமே நல்ல உலகத்தை உருவாக்கும்.

  ReplyDelete
 2. அனைவரும் படிக்க வேண்டிய அற்புத படைப்பு. பகிர்வுக்கு மிக்க நன்றி.

  ReplyDelete
 3. அனைவரும் பார்க்க வேண்டிய படம். இதோடு சேர்த்தார்போல் மான்டெக் சின் அலுவாலியாவின் 12வது ஐந்தாண்டுத் திட்டம் பற்றியான கட்டுரையை வாசிக்கவும். நிறைய புரிந்துகொள்ளலாம்.
  நன்றி

  ReplyDelete

Labels

Coca Cola (1) Peak Oil (1) Permaculture (1) Power of Community (1) Renewable energy (1) Solar energy (1) SOPA (1) sustainable agriculture (1) அ.குமரேசன் (6) அங்காடிதெரு (1) அணு ஆற்றல் (2) அணுமின் (1) அண்ணா (4) அண்ணா நூலகம் (1) அதிர்ச்சி (1) அத்வானி (2) அந்நிய முதலீடு (2) அபிநயா (1) அப்துல் கலாம் (1) அப்பணசாமி (2) அமெரிக்கா (20) அம்பானி (1) அம்பேத்கர் (9) அரசியல் (177) அரசியல்.நிகழ்வுகள் (6) அரசு (14) அரசு மருத்துவமனை (1) அரசு விடுதி மாணவர்கள் (1) அரவான் (1) அருந்ததியர் (1) அர்ஜெண்டினா (1) அலசல் (1) அவலம் (19) அழகு (1) அறிமுகம் (1) அனுபவம் (28) அன்னா ஹசாரே (1) அஜயன் பாலா (1) ஆ.ராசா (1) ஆணையம் (2) ஆதவன் தீட்சண்யா (3) ஆப்கானிஸ்தான் (1) ஆப்பிரிக்கா (2) ஆர்.மீனா (1) ஆர்எஸ்எஸ் (2) ஆவணப்படம் (3) ஆனந்தன் (2) இ.எம்.ஜோசப் (1) இ.பா.சிந்தன் (22) இட ஓதுக்கீடு (3) இடஒதுக்கீடு (1) இடதுசாரிகள் (4) இணையம் (2) இதழ்கள் (6) இந்தியா (69) இந்துத்துவா (8) இந்துஜா (1) இமு (2) இமு டிச11 (5) இமு நவமபர் 2011 (6) இயக்கம் (7) இயக்குனர் ஷங்கர் (1) இரா.சிந்தன் (5) இரா.செழியன் (2) இரா.நடராஜன் (3) இராம.கோபாலன் (1) இல.சண்முகசுந்தரம் (2) இலக்கியம் (38) இலங்கை (6) இலங்கைத் தமிழர் (4) இலவசக் கல்வி (1) இலவசங்கள் (1) இளவரசன் கொலை (1) இளைஞர் முழக்கம் (11) இஷ்ரத் (2) இஸ்ரேல் ஆக்கிரமிப்பு (1) இஸ்லாம் (3) ஈராக் (1) ஈரான் (2) உ.வாசுகி (1) உச்ச நீதிமன்றம் (1) உணவு நெருக்கடி (2) உதயசங்கர் (1) உத்தப்புரம் (1) உயர்கல்வி (2) உரையாடல்கள் (2) உலக சினிமா (4) உலகமயம் (5) உலகம் (46) உளவியல் (1) உள்ளாட்சி (1) உள்ளாட்சித் தேர்தல் (1) ஊடகங்கள் (14) ஊடகம் (8) ஊழல் (30) எடியூரப்பா (1) எம்.எப்.ஹூசேன் (1) எம்.சிவக்குமார் (2) எரிசக்தி (1) எல்.கே.ஜி (1) என்.ஜி.ஓ (1) என்கவுண்டர் (1) எஸ். பாலா (1) எஸ்.கண்ணன் (1) எஸ்.கருணா (3) எஸ்.பி.ராஜேந்திரன் (3) எஸ்.வி.வேணுகோபாலன் (2) ஏகாதிபத்தியம் (13) ஏமன் (1) ஒபாமா (4) ஓம்பிரகாஷ் வால்மீகி (1) ஓளிப்பதிவு (1) ஃபாக்ஸ்கான் (1) கச்சத் தீவு (1) கட்டுரை (51) கட்டுரைகள் (2) கணிணி (2) கணினி தொழில் நுட்பம் (1) கமல்ஹாசன் (1) கம்யூனிசம் (12) கருணாநிதி (11) கருத்து சுதந்திரம் (1) கருத்துரிமை (3) கலைஞர் (6) கல்வி (14) கவிதை (21) கவிதைகள் (1) கறுப்புப்பணம் (3) கனிமொழி (2) காங்கிரஸ் (10) காதல் (2) கால்பந்து (1) காவல்துறை (4) காஷ்மீர் (1) கி.பார்த்திபராஜா (1) கிங்பிஷர் (1) கியூபா (4) கிரீஸ் (1) குடும்பம் (1) குட்டி ரேவதி (1) குப்பன் சுப்பன் (1) குலாத்தி (1) குழந்தைகள் (9) குழந்தைகள் கடத்தல் (1) குஜராத் கலவரம் (1) குஜராத் படுகொலைகள் (1) கூகிள் அந்தரங்கம் (1) கூடங்குளம் (2) கே.சாமுவேல்ராஜ் (1) கே.பாலமுருகன் (1) கேள்விகள் (1) கைப்பற்றுவோம் போராட்டம் (1) கோவில் (1) ச.தமிழ்ச்செல்வன் (1) ச.மாடசாமி (1) சக்திஜோதி (1) சங்கமம் (1) சசிகலா (1) சச்சின் (1) சட்டசபை (2) சட்டம் (4) சத்யஜித் ரே (1) சந்திரகாந்தன் (1) சமச்சீர் கல்வி (4) சமவூதியம் (1) சமூக நீதி (2) சமூக வலைத்தளம் (1) சமூகப் பாதுகாப்பு (2) சமூகம் (177) சம்பு (1) சரத் பவார் (1) சர்வதேச பெண்கள் தினம் (1) சல்மான் ருஷ்டி (1) சா.கந்தசாமி (2) சா.செயக்குமார் (1) சாகித்திய அகாதமி விருது (1) சாக்லேட் (1) சாதீயம் (4) சாரா விஜி (2) சாலிம் அலி (1) சி.பி.எம் (9) சிக்கிம் (1) சிந்தனை (5) சிபி (1) சிராஜுதீன் (1) சில்லரை வர்த்தகம் (4) சிறப்பு பொருளாதார மண்டலங்கள் (1) சிறுகதை (12) சினிமா (52) சினிமா செய்திகள் (4) சினிமாச் செய்திகள் (4) சீத்தாராம் யெச்சூரி (2) சு.பொ.அகத்தியலிங்கம் (2) சு.வெங்கடேசன் (1) சுகாதாரம் (1) சுதிர் ரா (1) சுயமரியாதைத் திருமணம் (1) சுவாரசியம் (1) சுற்றுப்புறச் சூழல் (3) சூர்யா (1) செம்மலர் (4) செம்மலர் அக் 2011 (4) செய்திகள் (112) சென்னை (1) சோவியத் (1) சோஷலிசம் (1) டெல்லி (2) டேம் 999 (1) த.தமிழரசி (1) தகவல் உரிமை (1) தகவல் திருட்டு (2) தண்ணீர் (3) தமிழக மீனவர்கள் (1) தமிழகம் (66) தமிழர் (1) தமிழ்ச் சினிமா (1) தமிழ்நதி (1) தமுஎகச (4) தலித் (21) தற்கொலை (1) தனியார்மயம் (4) தனுஷ் (1) தி.க (2) திமுக (1) திரிணாமுல் (1) திருப்பூர் (2) திருமணம் (2) திரைக்குப் பின்னால் (2) திரைத்துறை (1) திரைப்பட விழா (1) திரைப்படம் (4) தினகரன் (1) தினமணி (3) தீக்கதிர் (9) தீண்டாமை (22) தீண்டாமையின் அடையாளங்கள் (1) தீபாவளி (1) தேசியச் செய்திகள் (4) தேர்தல் (4) தொண்டு நிறுவனங்கள் (1) தொலைக்காட்சி (2) தொழிலாளர் (6) ந.பெரியசாமி (1) நகர்ப்புற விவசாயம் (1) நகைச்சுவை (1) நக்கீரன் (1) நதிம் சயித் (1) நந்தலாலா (1) நந்தன் (1) நரேந்திர மோடி (6) நலத்திட்டங்கள் (2) நவம்பர் புரட்சி (1) நாடகம் (1) நாடாளுமன்றத் தேர்தல் 2014 (2) நாணய மதிப்பு (1) நாறும்பூநாதன் (1) நிகழ்வுகள் (154) நிலப்பிரபுத்துவம் (1) நிலமோசடி (1) நீதித்துறை (2) நீலவேந்தன் (2) நுகர்வுக் கலாச்சாரம் (2) நூல் அறிமுகம் (12) நூல் வெளியீடுகள் (1) நெல்சன் மண்டேலா (1) நேட்டோ (2) நையாண்டி (26) நையாண்டி் (14) ப.சிதம்பரம் (3) பசுபதி (1) படுகொலை (3) படைப்புகள் (2) பட்ஜெட் (1) பணவீக்கம் (2) பதிவர் வட்டம் (3) பதிவர்வட்டம் (1) பதிவுலகம் (1) பரிந்துரைகள் (5) பழங்குடி (1) பள்ளிக்கூடம் (1) பறவைகள் (1) பன்னாட்டுக் கம்பெனிகள் (3) பா.ஜ.க (3) பாகிஸ்தான் (2) பாடல் (5) பாதல் சர்க்கார் (1) பாதுகாப்பு (1) பாரதி (2) பாலபாரதி (1) பாலஸ்தீனம் (1) பாலியல் வன்முறை (6) பாலு மகேந்திரா (1) பால் சமத்துவம் (1) பாஜக (1) பி.சுகந்தி (1) பி.ராமமூர்த்தி (1) பிடல் காஸ்ட்ரோ (3) பிரணாப் முகர்ஜி (1) பிரபாத் பட்நாயக் (3) பிரளயன் (2) பிரிட்டன் (1) பிர்தவ்ஸ் ராஜகுமாரன் (1) பிளின் (1) பு.பெ.நவமபர் 2011 (1) புகைப்படங்கள் (1) புதிய பரிதி (2) புது விசை (12) புதுமை (1) புத்தக அறிமுகம் (2) புத்தகக் கண்காட்சிகள் (2) புத்தகம் (18) புத்தகம் பேசுது (17) புத்தகம் பேசுது நவம்பர் 2011 (8) புத்தகாலயம் (2) புத்தாண்டு (1) புபே (2) புபே டிச11 (8) புரட்சி (2) புவி (1) புவி டிச11 (5) புவி நவ 2011 (7) புனைவு (1) புஷ் (1) பெட்ரோல் (7) பெண் (11) பெண் விடுதலை (1) பெண்குழந்தை (1) பெண்ணியம் (9) பெண்ணெழுத்து (1) பெரியார் (2) பெருமுதலாளிகள் (7) பேட்டி (2) பேரா.சிவசுப்பிரமணியன் (2) பேஸ்புக் (1) பொருளாதார நெருக்கடி (2) பொருளாதாரம் (24) போக்குவரத்து (1) போராட்டம் (15) போலீஸ் தாக்குதல் (3) ப்ரிசம் (4) ப்ரிசம் - தகவல் திருட்டு (7) ப்ரியா தம்பி (1) மக்களுக்கான மருத்துவம் (1) மக்கள் நலப்பணியாளர்கள் (2) மக்கானா (1) மத அடிப்படை வாதம் (1) மதவெறி (3) மதுசூதனன் (1) மம்தா (3) மம்முட்டி (1) மரபணு (1) மலாலாய் சோயா (1) மவோயிஸ்டுகள் (1) மன்மதன் அம்பு (1) மன்மோகன்சிங் (10) மா ற்று (1) மாட்டுக்கறி (1) மாதர் சங்கம் (1) மாதவராஜ் (2) மாவோ (1) மாற்ற (1) மாற்று (223) மின்கட்டணம் (1) மின்சாரம் (1) மீள்பார்வை (2) முதலாளி (1) முதலாளித்துவம் (11) முத்தமாக மாறேன் (1) முத்துக்கண்ணன் (1) முல்லைப் பெரியாறு (7) முறைகேடுகள் (5) மெகாசீரியல் (1) மே.வங்க அரசு (1) மே.வங்கம் (1) மேதினம் (1) மேற்கு வங்கம் (1) மொக்கை (1) மொழி (2) மொழிபெயர்ப்பு (1) மோசடி (1) மோடி (3) மோனிகா (1) யுத்தம் (2) ரத யாத்திரை (1) ரமேஷ் பாபு (2) ராகுல் காந்தி (2) ராடியா (2) ராஜ பக்‌ஷே (1) ரிலையன்ஸ் (1) ருமேனியா (1) லட்சுமணப்பெருமாள் (2) லெனின் (2) லோக்பால் (5) வசந்த பாலன் (1) வண்ணக்கதிர் (1) வரலாறு (19) வலைப்பூக்கள் (1) வழக்கு விசாரணை (1) வாசிப்பு (5) வாச்சாத்தி (1) வால் ஸ்டிரிட் (3) வால்மார்ட் (1) வால்ஸ்டிரிட் போராட்டம் (2) வாழ்க்கை (4) வானியல் (2) விக்கிபீடியா (1) விக்கிலீகஸ் (1) விக்கிலீக்ஸ் (7) விஞ்ஞானம் (2) விமர்சனம் (10) விலையேற்றம் (2) விலைவாசி (11) விலைவாசி உயர்வு (2) விவாதங்கள் (1) விவாதம் (9) விளம்பரம் (1) விளையாட்டு (4) வினவு (1) விஜய் (2) விஜய் மல்லையா (1) வீட்டுவசதி வாரியம் (1) வீரமணி (2) வெண்மணி (2) வெள்ளம் (2) வெனிசுவெல்லா (1) வேலையின்மை (2) வோடாபோன் (1) ஜப்பான் நெருக்கடி (2) ஜாக்கிசான் (1) ஜாதி (1) ஜாபர் பனாகி (1) ஜூலியன் அசாங்க (1) ஜெயலலிதா (9) ஜோதிடம் (1) ஸ்டீவ் ஜாப்ஸ் (1) ஸ்பீல்பர்க் (2) ஸ்பெக்ட்ரம் (6)