எண்பதுகளின் துவக்கத்தில் தமிழகத்தை கடும் தண்ணீர் பஞ்சம் வாட்டியபோது சென்னையில் மாதர் சங்கம் பேரணி நடத்தியது. எம்.ஜி.ஆர். பேரணிக்கே வந்து மனுவைப் பெற்றுக்கொண்டு பரபரப்பை ஏற்படுத்தினார். அந்த சமயத்தில் தினசரி மணியடிக்கும் காலைப் பத்திரிகை ஒரு செய்தியையும் கட்டுரையையும் வெளியிட்டது. வெளிநாட்டி லிருந்து வரும் கிரிக்கெட் அணியினர் குடிநீரை தங்கள் நாட்டிலிருந்தே கொண்டுவருகின்றனர், காரணம் இங்கு மினரல் வாட்டார் கிடைப்பதில்லை, மேலும் இங்குள்ள தண்ணீர் குடிக்க லாயக்கற்றது எனக் கூறியது. அதைத் தொடர்ந்து பல ஏடுகள் அதே செய்தியை பரபரப்பாக்கின. அப்போது வெளியிடப்பட்ட கட்டுரையில் குடிநீரை காசு கொடுத்தும் வாங்கும் பண்பாடு நம்நாட்டில் வளரவில்லையே என வருந்தியது அந்த ஏடு.
இந்தியாவின் தண்ணீர் சந்தை எவ்வளவு பரந்து விரிந்து கிடக்கிறது என்பது குறித்து அடுத்து அடுத்து கட்டுரைகள் வெளியாயின. தண்ணீரை விற்பனைச் சரக்காக்க உலக வங்கி திட்டமிடுகிறது என இடது சாரிகள் மட்டுமே பேசினர். எழுதினர். பெரிய ஊடகங்களோ பெரும் வாக்கு வங்கியை வைத்திருந்த தலைவர்களோ பேசவில்லை. இன்னும் சொல்லப்போனால் இடதுசாரிகள் கேலி செய்யப்பட்டனர். ஆனால் நடந்ததென்ன? உலக வங்கி வெற்றி பெற்றுவிட்டது. வாட்டர் பாட்டிலோ வாட்டர் கேனோ இல் லாத நகரமும் இல்லை, கிராமமும் இல்லை, பயணமும் இல்லை என்றாகிவிட்டது. எப்படி நடந்தது?
உலக வங்கி ஒரு திட்டம் அறிவிக்கும் போதே அதற்கு எதிர்ப்பு வருமல்லவா அதையும் சரிகட்டி மக்களை இணங்கச் செய்ய கால அவகாசத்தையும் கணக்கில் கொண்டு முன்கூட்டியே தொடங்குகிறது. ஆரம்பத்தில் எதிர்ப்பு இருக்கும் மெல்ல மெல்ல அது வடிந்து மக்கள் தங்களுக்கு ஏற்ப படிந்து விடுவார்கள் என்பதே அவர்கள் கணக்கு. அந்த சமூக உளவியலை வார்தெடுப்பதற்காக எதையும் செய்வார்கள்.
இது ஒரு எடுத்துக்காட்டு மட்டுமே. இன் னும் பல உண்டு. காசு கொடுத்துத்தான் வைத்தியம் செய்து கொள்ளவேண்டும். காசு கொடுத்துத்தான் கல்வி கற்க வேண்டும். தரமான கல்வி மருத்துவம் வேண்டுமெனில் காசு கொடுப்பதில் தவறென்ன என்று மக்களில் ஒருசாராரிடம் வலுவான கருத்தாக்கத்தை ஏற்படுத்திவிட்டார்களே. இதற்கு விளக்கம் தேவையில்லை. நாட்டு நடப்பு கூறும்.
உலக மயத்திலும் தாரளமயத்திலும் எல்லாவற்றையும் சந்தைதான் தீர்மானிக்கிறது என அவர்கள் சத்தியம் செய்கிறார்கள். சாதுரியம் பேசுகிறார்கள். மக்களின் தேவையை நிறைவு செய்யும் சந்தை என்பது பாரம்பரியமானது. அதை யாரும் மறுக்க முடியாது, தேவையும்கூட. ஆனால் உலக மயம் பேசும் சந்தை அதுவல்ல. அந்த சந்தையையே அவர்கள்தான் கட்டமைக்கிறார்கள். உங்கள் பாட்டிக்கு துவரம் பருப்பு தெரியும், கடலை பருப்பு தெரியும் ஆனால் இன்று 'கடயம் பருப்பு' 'விடயம் எண்ணை''என வர்த்தகப் பெயர்களுக்கு அடிமையாகிப் போகிறோமே எப்படி? நாம் எதை உண்ண வேண்டும்? எதை உடுத்தவேண்டும்?எதை ரசிக்க வேண்டும்? இப்படி எல்லாவற்றையும் யார் முடிவெடுக்குகிறார்கள்?
தரம், சுத்தம், அழகு என்ற மக்களின் சாதாரண விருப்பத்தை தங்களின் மூலதனமாக்கி தாங்கள் விற்பது மட்டுமே தரமானது உயர்வானது என்ற பிரம்மையை மக்கள் நெஞ்சில் விதைத்து விடுகிறார்கள். விளம்பரம் மூலமும் ஆய்வுத் தகவல்கள் என்கிற போர்வையிலும் மெய் போல் ஜோடிக்கப்பட்ட பொய்கள் பரப்பப்படுகின்றன. இதன் மூலம் தங்கள் சரக்குகளையே விரும்பிவாங்கும் நுகர்வோர்கள் உருவாக்கப்படுகிறார்கள். அவர்களுக்கு உகந்த சந்தையை உருவாக்குகிறார்கள்.
மக்கள் வெறும் மந்தை என்றான் ஹிட்லர். வெறியூட்டி அந்த மந்தையை தான் விரும்பிய திசையில் ஓட்டமுடியும் என்றான் அவன். மக்களை வெறும் சந்தையாகப் பார்க்கிறது உலகமயம். அந்த சந்தையையும் தனக்கு ஏற்ப பிசைந்து உருவாக்குகிறது பன்னாட்டு நிறுவனங்கள். இந்த பின்னணியில் வால்மார்ட் வருகிறது. சில்லறை வணிகத் தில் அந்நியர் வருகிறார்கள். ( 'டிராபிக் ராமசாமிகளும் எக்ஸ்பிரஸ் அவென்யூக்களும்' என்ற கட்டுரையை படிக்கவும்) அவர்கள் சரக்குகளை விற்க உலகத்தரம், உன்னத வடிவமைப்பு பற்றி இப்போதே பேசத்தொடங்கிவிட்டனர். ஏற்கெனவே காளிமார்க் கலர் போச்சு கோக்கும் பெப்சியும் வந்தாச்சு. இனி ‘கடயம் பருப்பு’ ‘விடயம் எண்ணை’ என்பதற்கும் ஆபத்து வரும். ‘பெக்ரண்ட் டால்’, ‘டோனி ஆயில்’ என்பதுபோல் நமது பருப்பும் எண்ணையும் புதிய நாமம் பெறும். அதுதான் உசத்தி என்று நம்மையே பேச வைத்து விடுவார்கள். நடைபாதை கடைகள் போயாச்சு. சரவணாக்களும் மூடப்படும். வால்மார்ட் எங்கும் கடை விரிக்கும்.
உடலால் இந்தியர்கள் உள்ளத்தால் ஆங்கிலேயர்கள் என நம்மை உருவாக்க மெக்காலே கல்விமுறையைக் கொண்டு வந்தான் பிரிட்டிஸ்காரன். இப்போது உடலால் இந்தியன் தமிழன் எப்படி வேண்டுமானலும் இரு. ஆனால் உன் உள்ளம் என் விருப்பம் போல் ஆடட்டும் என்கிறான் பன்னாட்டுக் கொள்ளைக்காரர்கள். ஒய் கொலை வெறி கொலைவெறி..’ எனப் பாடு. உன் மொழி, இனம், தேசம் எல்லாம் என் விருப்பத்துக்கே என்கிறது அந்த பன்னாட்டு முதலை கூட்டம். மொழி,பண்பாடு அனைத்தும் சிதைக்கப்படும். ஆனால் அதையும் நம்மை ரசிக்க பழக்கிவிடுகிறது. மொத்த சமூகமும் அவர்கள் தாளத்துக்கு ஆட்டம் போட வேண்டும். அதற்கு ஏற்ப உன்னை வடிவமைப்பதுதான் தகவல் தொழில் நுட்பம், ஊடகங்கள் இவற்றின் தலையாய பணியாக உள்ளது.
எல்லாம் சரி, வால்மார்ட்டுக்கு பலமான எதிர்ப்பு உள்ளதே எனக் கேட்கலாம். வாட்டர் பாட்டிலையும் வாட்டர் கேனையும் ஒரு பத்தாண்டுகளில் நம்மை ஏற்கசெய்துவிடவில்லையா? வால்மார்ட்டும் அதற்குத்தான் பிள்ளையார் சுழி போடுகிறான். ஊடகங்கள் மூலம் இனிக்கும் மொழியில் பேசி நம்மை மயங்கி இணங்கி வைக்கப்போகிறான். அதற்கு முன் நமது கடைகளில் உள்ள பொருட்கள் தரமற்று இருப்பது குறித்து நம் ஆய்வாளர்களைக் கொண்டே பேசவைப்பார்கள். ஏன் ஆணுறை ,செக்ஸ் களிம்புகள், மாத்திரைகள் விற்பனைக்காக இந்திய செக்ஸ் பழக்கம் மாறிவருவதை சர்வே செய்து சில ஏடுகள் பக்கம் பக்கமாய் வெளியிடவில்லையா?அதில் நடிகைகளை பேரில் எதையாவது எழுதி பரபரப்பாக்கி அந்த சர்வே பக்கம் எல்லோரின் பார்வையையும் திருப்பவில்லையா?இப்படி ஒவ்வொன்றுக்கும் அவர்கள் தொடர்ந்து நடத்தும் உளவியல் யுத்தத்தை புரிந்துகொள்ள வேண்டும்.
ஜான் பெர்க்கின்ஸ் எழுதிய ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்கு மூலம் என்கிற நூலில் இதுவெல்லாம் பேசப்படுகிறது. நம்மை ஏமாற்ற நிபுணர்கள் வல்லுனர்கள் மூலம் எப்படியெல்லாம் ஏகாதிபத்தியம் பேசும், நம்மை நம்ப வைத்து கழுத்தை அறுக்கும் என்பதைப் புரிந்து கொள்ளமுடியும்.
கார்ப்பரேட் ஊடகங்களை நம்பிப் பயன் இல்லை. பஸ் கட்டணம் பால்விலை உயர்த்தப்பட்டுவிட்ட்தும் என்ன நடந்த்து? ஒரு ஏடு தனது கார்ட்டூனில், பயணியின் கோவணத்தைகூட உருவிவிடுவதாக கிண்டலடித்தது. அதை பார்த்து மயங்கி தொடர்ந்து அந்த ஏட்டைப் படிக்கும் வாசகனிடம் விலைஉயர்வை நியாயப்படுத்திக்கொண்டே இருக்கிறது. இந்த வஞ்சக வலையை அறியாமல் விளக்கை நாடும் விட்டில் பூச்சியாக வாசகன் விழநேர்கிறது. ‘அவள் சிரிக்கிறாள் என்பதற்காக மயங்கிவிடாதே, அது சூனியக்காரியின் பழம் பாடல்’ என்று ஏகாதிபத்தியத்தைப் பற்றி கவிஞன் இக்பால் விடுதலைப் போராட்ட காலத்தில் கூறினார். இன்றைக்கும் அது பொருத்தமாகத்தான் உள்ளது.
அரசியல் பொருளாதாரக் கோணத்தில் பேசினால் மட்டும் போதாது. சமூக உளவி யலை சரியான திசையில் கட்டமைக்க நமது பிரச் சார ஆயுதங்களை கூர்தீட்ட வேண்டிய அவசியம் வந்திருக்கிறது.
-சு.பொ.அகத்தியலிங்கம்
மிக நேர்த்தியான கட்டுரை. கடைசி இரண்டு வரிகள் ஆழ்ந்து சிந்திக்க வேண்டிய கருத்து.
ReplyDelete