இஸ்ரத் ஜஹான் துறை ரீதியான உள்ளிட்ட நான்கு பேர் குஜராத் காவல்துறையுடனான மோதலில் சுடப்படவில்லை என்றும், அவர்கள் கொல்லப்பட்டது போலி என்கவுண்டரில்தான் என்றும் தெரியவந்துள்ளது. அண்மையில் இந்த விவகாரத்தை விசாரித்த சிறப்புப் புலனாய்வுக்குழு இதனை அம்பலப்படுத்தியது.
எந்தத் தேதியில் மோதல் நடந்ததாக காவல்துறையினர் சொன்னார்களோ, அதற்கு ஒருநாள் முன்னதாகவே இஸ்ரத் ஜஹான் சுடப்பட்டார் என்பதும் விசாரணையில் தெரிய வந்தது. இறந்த உடல்கள் மீது துப்பாக்கிக் குண்டுகளைப் பாய்ச்சி நாடகம் ஆடினர் குஜராத காவல்துறையினர். இவையனைத்துமே ஆட்சியாளர்களைத் திருப்திப்படுத்தி துறை ரீதியான பதவி உயர்வுகளையும், விருதுகளையும் பெறவே செய்யப்பட்டது என்பது சுட்டிக்காட்டப்பட்டது. இந்த சம்பவங்களில் தொடர்புடைய அதிகாரிகள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில்தான் நரேந்திர மோடியை தற்கொலைப் படைத் தாக்குதல் மூலம் கொல்வதற்காக இஸ்ரத் ஜஹான் உள்ளிட்டோர் கொண்டு வந்ததாகச் சொல்லப்பட்ட வெடிமருந்து, உண்மையில் உரம்தான் என்று இப்போது தெரிய வந்திருக்கிறது. சி.பி.ஐ (மத்திய புலனாய்வுக்குழு) நீதிமன்றத்தில் தாக்கல் முதல் தகவல் அறிக்கையில் இது குறிப்பிடப்பட்டிருக்கிறது. “17 கிலோ எடையுள்ள மஞ்சள் பொடி அடங்கிய சாக்கு மூடை ஒன்று இஸ்ரத் ஜஹான் உள்ளிட்டோர் பயணம் செய்ததாகச் சொல்லப்படும் இண்டிகா காரிலிருந்து கைப்பற்றப்பட்டது. காந்திநகரிலுள்ள பரிசோதனை நிலையம் மற்றும் வரோதாவில் உள்ள வெடிமருந்து துணை அதிகாரி அலுவலகம் ஆகியவற்றில் ஆய்வு செய்யப்பட்டது. அதில் இருந்த கலவை வெடிமருந்தல்ல என்று இரண்டு பரிசோதனைகளிலுமே தெரிய வந்துள்ளது என்று முதல் தகவல் அறிக்கை கூறுகிறது. யூரியா, சல்ஃபர், கால்சியம் சல்பேட் ஆகியவற்றைக் கலந்து செய்யப்பட்டிருந்தது.
மேலும் சம்பவ இடத்திற்கு காவல்துறையினர் விரைந்தது பற்றியும் சி.பி.ஐ கேள்வி எழுப்பியுள்ளது. காவல்துறை குற்றப்பிரிவு தாக்கல் செய்திருந்த முதல் தகவல் அறிக்கையில், காவல்துறை துணை ஆணையர் ஜி.எல்.சிங்கால் மணிக்கு 115 கி.மீ வேகத்தில் சம்பவ இடத்தையடைந்தார் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதையும் சி.பி.ஐ கேள்விக்குள்ளாக்கி இருக்கிறது. “காவல்துறையினர் ஒரு மாருதி ஜிப்ஸி மற்றும் இரண்டு மகிந்திரா ஜீப்புகளில் சென்றனர். அதில் மாருதி ஜிப்ஸி 2 லட்சத்து 9 ஆயிரத்து 765 கீ.மீ தூரம் ஏற்கனவே ஓடியுள்ளதாகவும் மற்ற இரண்டு மகிந்திரா ஜீப்புகளில் ஒன்று 1 லட்சத்து 85 ஆயிரத்து 445 கி.மீ, மற்றொன்று 1 லட்சத்து 67 ஆயிரத்து 732 கி.மீ ஓடியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 2004ஆம் ஆண்டு சாலைகளும் சரியான நிலையில் இல்லை. இதனால் இந்திரா பாலத்திலிருந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இண்டிகா காரை எதிர்கொண்டதாகச் சொல்லப்படுவது நம்பும்படியாக இல்லை” எனவும் சி.பி.ஐயின் முதல் தகவல் அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
சம்பவத்தில் காவல்துறையினர் கையாண்டதாகச் சொல்லப்படும் உத்திகளூம் அறிவியல் பூர்வமாக இல்லை. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் ஆங்காங்கே மறைந்து நின்று கொண்டதாகவும், இஸ்ரத் ஜஹான் உள்ளிட்ட பயணம் செய்து கொண்டிருந்த இண்டிகா கார் அருகில் வந்தவுடன் காவல்துறையினர் சுட்டதில் இடதுபுற டயரில் குண்டு பாய்ந்ததாகவும், அப்போது கார் மேலும் வலது புறமாக முன்னேறிச் சென்றதாகவும் காவல்துறையினர் விளக்கமளித்திருந்தனர். ஆனால் அப்படி வலதுபுறமாகச் சென்றிருக்கும் வாய்ப்பு குறைவு என்று அமெரிக்க கலிபோர்னியா பலகலைக்கழகத்தின் மெக்கானிக்கல் பிரிவு ஆய்வாளர்கள் மேற்கொண்ட ஆய்வைச் சுட்டிக்காட்டி விளக்குகிறது சிறப்பு புலனாய்வுக்குழு.
இந்த போலி என்கவுண்டரில் தொடர்புடைய பல காவல்துறையினரை சி.பி.ஐ விசாரித்துள்ளது. முரண்பட்ட வாக்குமூலங்களைக் கொடுத்திருக்கின்றனர். இவர்களில் பலர் கைது செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. சி.பி.ஐயின் விசாரணை, காவல்துறையினர் ஜோடித்திருந்த அனைத்து அம்சங்களையும் உடைத்து, அம்பலப்படுத்தியுள்ளது. நீதிமன்றம் அமைத்த இந்த சிறப்பு புலனாய்வுக்குழுவில் மாநில அரசு தலையீடு செய்ய முடியாது. அதனால்தான் மோடி அரசின் மோசடிகளும் கொலைகளும் அம்பலமாகி வருகின்றன.
0 comments:
Post a Comment