நதியின் வாழ்க்கை
நாக்கறுந்து கிடக்கிறது
நதியின் மூலமும் ஆழமும்
கண்டதில்லை என்ற
முதியவருக்கு வயது தொண்ணூத்து எட்டு.
மட்டை அடித்து விளையாடும்
சிறுவனுக்கு இன்று மைதானம்
ஏக்கத்துடன் பேசிய முதியவருக்கு
நகரத்து நீச்சல் குளத்தில்
நண்டுகளாய்ப் போய்விட்ட சிறுவர்கள்
என்ன சொல்லக்கூடும்?
சிறுவர்கள் மீன்களாகவும்
மீன்கள் சிறுவர்களாகவும்
மாறிக் கொண்டனர்
பாடத்தில் படித்த
பள்ளிச்சிறுமி
நதியைப் பார்க்க வந்து
பூகோளம் பொய்யென்று சொன்னாள்
புகையைக் கக்கியபடி
ஓடும் பேருந்துகளிலிருந்து
ஓடாத நதியைப் பார்க்கிறேன்
நுரைத்த அழுக்குகளுடன்
பொங்கியெழும் நீர்
நதியின் கண்ணீரை
மொழி பெயர்க்க முடியாமல்
விரைகிறது காலம்.
- மஞ்சுளா
0 comments:
Post a Comment