பல்லடம் உமா மகேஸ்வரி அவர்களுடன் குடும்பம் நடத்திவிட்டு திருமணம் செய்ய மாட்டேன் என ஏமாற்றிய குன்னூர் தங்கராஜு அவர்களை கைது செய்தது பற்றி பரபரப்பான விவாதம் ஓடிக்கொண்டேயிருக்கிறது. இதிலே ஆரம்பத்திலேயே எல்லோரும் செய்கிற தவறே, உமா மகேசுவரி அவர்களை காவல்துறை உதவி ஆய்வாளராகப் பார்ப்பதும், தங்கராஜு அவர்களை நீதிபதியாகப் பார்ப்பதும் தான்.
தங்கராஜு அவர்களைக் கைது செய்த பிறகு ஜாமீனில் விட்ட நீதிமன்றத்தின் நடைமுறையும் வழக்கறிஞர் சங்கங்களின் நீதிமன்றப் புறக்கணிப்புப் போராட்டங்களும், ஒரே ஒரு கேள்வியைத்தான் அவர்களை நோக்கி கேட்க வைக்கிறது. அது, சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்று நீங்கள் சொல்வதை இன்னமும் நாங்கள் நம்ப வேண்டுமா? என்பது தான்.
கன்னியாகுமரியில், உடுமலை குடிமங்கலத்தில், பல்லடத்தில் என மூன்று ஊர்களில் தங்கராஜு அவர்கள் உமா மகேசுவரியுடன் கணவன் மனைவியாக குடும்பம் நடத்தி விட்டு, வேறொரு பெண்ணை திருமணம் செய்ததால் தான் தங்கராஜு மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார். தங்கராசு அவர்கள் சார்ந்திருக்கிற நீதித்துறையின் சென்னை உயர்நீதிமன்றம் தான் இரு வாரங்களுக்கு முன்பாக, திருமணம் என்றால் தாலி, சடங்கு, சம்பிரதாயம் என்பதெல்லாம் கட்டாயம் அல்ல. வயந்துவந்த இருவர், மனதொத்து சேர்ந்து வாழ்ந்திருந்தாலே, கணவன் மனைவிதான் என்று உயர்நீதிமன்ற நீதிபதி கர்ணன் அவர்கள் தீர்ப்பு வழங்கியிருக்கிறார். உயர்நீதிமன்ற தீர்ப்பை மதிக்கிறார்களா? என்று வழக்கறிஞர் சங்கங்கள் தெளிவுபடுத்த வேண்டும்.
இருவரும் சேர்ந்து குடும்பம் நடத்தியதற்கான பல்வேறு சாட்சிகளையும் (குடிமங்கலத்தில் குடியிருந்த வீட்டின் உரிமையாளர் உட்பட) பல்வேறு ஆதாரங்களையும் உமா மகேசுவரி அவர்கள் (குறுந்தகவல்கள், புகைப்படங்கள், செல்போன் உரையாடல்கள்) வைத்திருக்கிறார்.
திருமணம் செய்து கொள்வதாக நம்ப வைத்து உறவு வைத்துக்கொண்டு ஏமாற்றினால் அது பாலியல் பலாத்காரம் என்று நீதித்துறைதான் சொன்னது. அதன்படிதான் 376வது பிரிவின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது. ஒரு நீதிபதி அதை முறையாக எதிர்கொண்டு வழக்கில் வாதாடித்தான் வெற்றி பெற வேண்டுமே தவிர அவரைக் கைதே செய்யக்கூடாது என்று கற்பிப்பதைத்தான் புரிந்து கொள்ள முடியவில்லை. எந்தத்தவறுமே செய்யாதவர் என்றே வைத்துக்கொள்வோம். எந்தத்தவறுமே செய்யாதவர் முகத்தை மூடிக்கொண்டு நீதிமன்றத்திலிருந்து ஓடுவது ஏன்?
கைது செய்யப்பட்ட (arrest) அனவைரையுமே இயந்திரத்தனமாக நீதிமன்றக்காவலுக்கு (remand) அனுப்பக்கூடாது வாதிடும் சட்ட வல்லுனர்கள் வழக்கறிஞர்கள் அல்லாத, நீதிபதிகள் அல்லாத யாருக்கேனும் இப்படிப் போராடியிருக்கிறார்களா? அதிகாரம் இருக்கிற யார் வேண்டுமானாலும் என்ன கிரிமினல் நடவடிக்கையில் வேண்டுமானாலும் ஈடுபடலாமா?
அமர்வு நீதிமன்றத்தால் மட்டுமே விசாரிக்கப்படத்தக்க ஜாமீனில் விடமுடியாத வழக்குப் பிரிவுகளில்சனிக்கிழமை கைது செய்யப்பட்டவருக்கு திங்கள் கிழமை திருப்பூர் மாவட்ட நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்படுகிறது. அன்றே அது கோப்பிற்கு எடுத்துக்கொள்ளப்பட்டு, அன்றே அரசு தரப்பு வழக்கறிஞருக்கு அறிவிப்பு வழங்கப்பட்டு, அன்றே அவரிடமிருந்து பதில் பெறப்பட்டு அன்றே உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, அதுவும் எந்த நிபந்தனையும் இல்லாமல், ஜாமீன் தாரர்கள் கோரப்படாமல், ஜாமீன் வழங்கப்பட்டு, அந்த உத்தரவும் அன்றே வழங்கப்பட்டு, அது உடனடியாக பல்லடம் நீதிமன்றம் போய் சேர்ந்து, அங்கு உடனே ஜாமீன் பத்திரம் தயார் செய்யப்பட்டு. அது உடனடியாக அங்கிருந்து கோவை மத்திய சிறைச்சாலைக்குச் சென்று அங்கு நடைமுறைகள் முடித்து 5 மணிக்குள்ளாக விடுதலை செய்யப்படுகிறார் என்றால், இதுபோல விரைவான நடவடிக்கைகள் யாருக்கேனும் நடத்தப்பட்டிருக்கிறதா? தங்கராஜு அவர்கள் தேச விடுதலைப் போராட்டத்தில் கைது செய்யப்பட்டவரா? மக்கள் நலன் காக்க சிறை சென்றவரா? பொது நோக்கிற்காக சிறை சென்ற யாருக்கேனும் இதுபோல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருக்கிறதா? அப்படியெல்லாம் இல்லாவிட்டாலும் கூட நீதிபதியைத்தவிர வேறு ஒரே ஒருவருக்காவது இப்படி நடத்தப்பட்டிருக்கிறதா?
வழக்கறிஞர் சங்கங்கள் நீதிமன்றத்தைப் புறக்கணித்துப் போராட்டங்களுக்கு அறைகூவல் விடுக்கிறார்களே? பொது நோக்கத்திற்காக சிறை சென்ற யாருக்காகவேனும் இப்படிப் போராட்ட அறைகூவல் விடுத்திருக்கிறார்களா? அப்படி சிலர் சிறை சென்றபோது, இது அவர்களுடைய தனிப்பட்ட நடவடிக்கை என்று ஒதுங்கிக்கொண்ட சங்கங்கள், இன்று தங்கராஜு அவர்களுக்காக களமிறங்குகிறதே? தங்கராஜுவின் நடவடிக்கை துறை சார்ந்ததா? பொது நலன் சார்ந்ததா? தனிநபர் குற்றத்திலும் மோசமான குற்றத்தில் அல்லவா சம்மந்தப்பட்டிருக்கிறார்?
அதிகாரம் ஒன்றைத்தவிர தங்கராஜுக்காக போராடவைக்கிற சக்தி எது? வழக்கின் பின்னணியை ஒருதுளி கூட ஆராய மறுப்பதுதான் கற்றறிந்த வழக்கறிஞர்களின் பகுத்தறிவா? உணர்வு வயப்பட்டே சில கேள்விகளைக் கேட்கிறோம். வழக்கறிஞர்களின் அக்கா தங்கைகள் இவ்வாறாக பாதிக்கப்பட்டாலும் கூட இப்படித்தான் எல்லாவற்றையும் ஒதுக்கிவிட்டு நீதிபதி வழக்கறிஞர் என்ற அளவுகோலை மட்டும்தான் எடுத்துக்கொள்வீர்களா?
நியாயமாகப் பார்த்தால் தங்கராஜு அவர்களே நேர்மையாக தனது பதவியை விட்டு விலகி, வழக்கை எதிர்கொண்டு நிரபராதி என நிரூபித்துவிட்டு பதவி ஏற்றுக்கொள்கிறேன் எனச்சொல்லியிருக்க வேண்டும். ஒரு நீதிபதியை இன்னொரு நீதிபதி எப்படி மனச்சாய்வு இல்லாமல் நேர்மையான வழக்கு விசாரணையை நடத்துவார்? என்கிற பொதுஜனங்களின் கேள்விக்கு என்ன பதிலை வைத்திருக்கிறார்கள்?
வழக்கறிஞர்களும், நீதிமன்றங்களும் சட்டத்திற்கு அப்பாற்பட்டவை அல்ல. அதிகாரம் இருந்தால் யார் குடியை வேண்டுமானாலும் கெடுக்கலாம் என்ற தவறான முன்னுதாரணத்தை நாம் அனுமதிக்க முடியாது.
- நீலவேந்தன், வழக்கறிஞர்.
ஒரே ஒரு கேள்வியைத்தான் அவர்களை நோக்கி கேட்க வைக்கிறது. அது, சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்று நீங்கள் சொல்வதை இன்னமும் நாங்கள் நம்ப வேண்டுமா? என்பது தான்.
ReplyDeleteஏற்கனவே நீதிபதிகள் தங்கள் சொத்துக்கணக்குகளை தாக்கல் செய்யவேண்டும் என்ற நிலை வந்தபோது அதற்கு எழுந்த எதிர்வினையை நாம் மறந்திருக்கமுடியாது...
அதேபோலத்தான் இதுவும்... இதைவிட கொடுமை குற்றம்சாட்டப்பட்ட தங்கராஜீ ஜாமீனில் வந்து மீண்டும் மாஜிஸ்திரேட்டாக பதவியேற்றுக்கொண்டாராம். அட்லீஸ்ட் தன்மீதான வழக்கு முடியும்வரையாவது அந்தப்பதவியில் அவர் அமராமல் இருந்திருந்தால் இவர்கள் நீதிதேவதையை மதிக்கிறார்கள் என்று நாம் நம்பியிருந்திருக்கலாம்... இந்த நாட்டின் மூலை முடுக்கு, சந்து பொந்துகள் என்று எங்காவது ஒரு துளியூண்டு நீதியாவது இருக்காதா என்பதெல்லாம் வெறும் கனவுதான் போல... வாழ்க ஜனநாயகம்...