Showing posts with label விமர்சனம். Show all posts
Showing posts with label விமர்சனம். Show all posts

Saturday, April 13, 2013

களவாடப்பட்ட சமூக நீதி



ஆசிரியர் தகுதித்தேர்வு மற்றும் பணி நியமனத்தில் சமூக நீதியை நிலைநாட்டும் இடஒதுக்கீடு முற்றிலும் திருடப்பட்டிருக்கிறது. ஆசிரியர் தரத்தை உயர்த்துவதில் யாருக்கும் ஆட்சேபணை இருக்காது. அதற்கு முதலில் ஆசிரியர் பயிற்சி நிறுவனம் மற்றும் கல்வியியல் கல்லூரி உள்ளிட்டவற்றில் பாடத்திட்ட முறையில் மாற்றம் கொண்டு வரலாம். காலத்திற் கேற்ப நவீன தொழில்நுட்பங்களுடன் கூடிய பயிற் சியை அளித்தும், பயிற்றுவிக்கவும் கற்றுக் கொடுக்கலாம். மருத்துவக்கல்வி தகுதித் தேர்வு உள்ளிட்டு நெட், ஸ்லெட், டெட் போன்ற அனைத்து தகுதி தேர்வுகளிலும் வகுப்பு வாரியாக தகுதி மதிப்பெண் நிர்ணயம் செய்யப்பட்டு, இடஒதுக்கீடு கடைப்பிடிக்கப்படுகிறது. ஆனால் தமிழகத்தில் தற்போது நடைபெற்ற ஆசிரியர் தகுதி தேர்வில் வகுப்புவாரியாக தகுதி மதிப்பெண் நிர்ணயம் செய்யப்படவில்லை.

இத்தகைய தவறு நடந்து விடக்கூடாது என்பதற்காகவே தேசிய ஆசிரியர் கல்விக்கழகத்தின் இடஒதுக்கீடு விதியும் தெளிவாக வரையறுக்கப்பட்டிருக்கிறது. ஆசியர் தகுதி தேர்வு மதிப்பெண் 60 சதவிகிதம் என்று பொதுப் பிரிவினருக்கு நிர்ணயித்திருக்கும் அதே வேளையில், அந்தந்த மாநிலங்களில் உள்ள இட ஒதுக்கீட்டுக் கொள்கை அடிப்படையில் மதிப் பெண்களை, வகுப்புவாரியாக நிர்ணயித்துக் கொள்ளலாம் என தெளிவாக சுட்டிக்காட்டப்பட்டிருக்கிறது.ஆனால் இந்த 60 சதவிகிதத்தை மட்டும் வைத்துவிட்டு, இடஒதுக்கீட்டுக்கு ஏற்ப வகுப்பு வாரியாக தனித்தனி தகுதி மதிப்பெண் நிர்ணயம் செய்யப் படவில்லை. அதாவது கல்வியில் இடஒதுக்கீடு என்னும் அரசியல் சாசன உரிமை அப்பட்டமாக ஒழித்துக் கட்டப்பட்டிருக்கிறது. 
எப்படி ஆசிரியர் தகுதி மதிப்பெண்னுக்கு இட ஒதுக்கீடு முறை பின்பற்றப்படவில்லையோ அதே போல் பணி நியமனத்திலும் இடஒதுக்கீடு வழங்கப்படவில்லை. எப்போதுமே பணி நியமனத்தின் போது வகுப்பு வாரியாக காலிப்பணியிட விபரங்களை கொண்டு முறையான அறிவிக்கை வெளியிட வேண்டும். அதன் பின்பு தான் பணியிடங்களை நிரப்ப வேண்டும்.

இந்தியாவிலேயே முதன் முறையாக இந்த சட்ட மீறல் தமிழகத்தில் நடைபெற்றிருக்கிறது. அப்படி ஒரு அறிவிக்கை ஆசிரியர் தேர்வு வாரியத்தில் வெளியிடப்படாமலேயே ஏறக்குறைய 19 ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்பட்டிருக்கின்றன. இது வெளியில் தெரியாமல் இருப்பதற்காக தகு தித் தேர்வையே போட்டித்தேர்வு என்பது போன்ற தோற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஆந்திரா உள்ளிட்ட மற்ற மாநிலங்களில் வகுப்பு வாரியாக மதிப்பெண் நிர்ணயிக்கப்பட்டு கல்வி சான்றிதழ் வழங்கப்பட்டது. அதன் பின் னர் பணி நியமனத்திற்காக முறையாக அறிவிக்கை வெளியிடப்பட்டு, அதில் இடஒதுக்கீட்டைப் பின்பற்றியே பணி நியமனம் செய்யப்பட் டிருக்கிறது.

ஆக இந்த பணி நியமனம் முழுவதும் சமூக நீதிக்கு எதிராக மோசடியான முறையில் நிரப்பப்பட்டுள்ளது என்பது இதன் மூலம் தெளிவாகும். கல்வியிலும் இடஒதுக்கீடு, வேலை வாய்ப்பிலும் இடஒதுக்கீடு என்னும் அரசியல் சாசன உரிமையை முறையாக வழங்கிட வேண்டும். நடைபெற்றுள்ள முறைகேடுகளை முற்றி லும் களைந்து தமிழகத்திற்கு இதன் மூலம் களங்கத்தை ஏற்படுத்தியிருப்பவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கிட வேண்டும். சமூக நீதியை தமிழகத்தில் முழுமையாக நிலைநாட்ட வேண்டும்.

Friday, January 13, 2012

நலிந்து கிடக்கும் நாளைய இந்தியா

“நன்மையிலேயே, உடல் வன்மை யிலேயே - செல்வப் பன்மையிலேயே” சிறந்த நாடு பாரத நாடு என்று அடிமை இந்தியாவில் வாழ்ந்த மகாகவி பாரதி பாடிவிட்டுப் போனார்.

 1947ம் ஆண்டு சுதந்திரம் பெற்ற இந்திய திருநாட்டின் மக்கள் உடல் வன்மையிலேயே சிறந்து விளங்குகிறார்களா என்று கேள்வி எழுப்பினால், இல்லை என்பதே பதிலாக இருக்கிறது. இந்திய குழந்தைகளில் 42 சதவீதம் பேர் ஊட்டச்சத்து குறைவு என்ற நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அண்மையில் நடத்தப்பட்ட ஆய்வு முடிவு தெரிவிக்கிறது. பட்டினி மற்றும் ஊட்டச்சத்து குறித்து நடத்தப்பட்ட ஆய்வின் முடிவை வெளியிட்டு உரையாற்றிய பிரதமர் மன்மோகன் சிங், இது “ஒரு தேசிய அவமானம்” என்று மனம் வெடித்து கூறியிருக்கிறார். மத்திய அரசின் உணவுக் கிடங்குகளில் கோடிக்கணக்கான டன் உணவு தானியங்கள் சேமிக்கப்பட்டு, யாருக்கும் தரப்படாமல் மக்கி மண்ணாகிறது. இதுகுறித்து உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பிய போது, இதுபோன்ற அரசின் கொள்கை முடிவுகளில் நீதித்துறை தலையிடலாகாது என்று கூறிய பிரதமர் மன்மோகன்சிங்கின் அதே திருவாய்தான், இப்போது தேசிய அவமானம் என்றும் கூறியிருக்கிறது.

இந்தியா வளர்கிறது என்று அவ்வப்போது மத்திய ஆட்சியாளர்கள் குதியாட் டம் போடுவார்கள். பளபளக்கும் பன்னாட்டு நிறுவன கார்கள் அதிகரித்துவிட்டதாக வாய்நீளம் காட்டுவார்கள். ஆனால், மறுபுறத்தில் மழலை இந்தியா எழுந்து நடக்க சக்தியின்றி நலிந்து கிடக்கிறது.

வருமானம் குறைவாக உள்ள குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகள்தான் ஊட்டச் சத்தின்மையால் பெருமளவு பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்றும் அந்த ஆய்வு முடிவு கூறுகிறது. நகர்ப்புற மக்களில் நாளொன்றுக்கு ரூ.31 செலவிடுவோரும், கிராமப்புறங்களில் ரூ.29 செலவிடுவோரும் வறுமைக்கோட்டுக்கு மேலே தாண்டி சென்றுவிட்டார்கள் என்று மத்திய திட்டக்குழு உச்சநீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தது. இவர்களது கணக்குப்படி, இந்திய மக்களில் பெரும்பகுதியினர் வறுமைக் கோட்டை வளைத்து தாண்டி தப்பித்து விட்டார்கள் என்று பொருள். இதன் சூட்சமம் என்னவென்றால், வறுமைக்கோட்டுக்கு மேலே சென்றவர்களுக்கு உணவு மானியம் உள்ளிட்ட எந்த மானியமும் கிடையாது. இவர்கள் பொதுவிநியோக முறையி லிருந்து தள்ளிவைக்கப்படுவார்கள். இதற் காகத்தான் இந்த மோசடி கணக்கு தயாரிக்கப்படுகிறது. ஆனால், ஊட்டச்சத் தின்மை குறித்த கணக்கு இந்த பொருளா தாரப் புலிகளின் முகத்தில் ஓங்கி அறைந் திருக்கிறது.

இந்த ஆய்வு முடிவு மேலும் சில இருட்டுப் பகுதிகள் மீதும் வெளிச்சம் பாய்ச்சியிருக்கிறது. ஊட்டச்சத்து குறை வால் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகள் சிறு பான்மை முஸ்லிம் மற்றும் தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் குடும்பங்களைச் சேர்ந்தவர்களாக உள்ளனர் என்பதையும் ஆய்வு முடிவு தெளிவுபடுத்தியிருக்கிறது.

இந்தியாவில் உள்ள சிறுபான்மை முஸ்லிம் மக்களின் வாழ்நிலை மிக மிக மோசமாக உள்ளது என்று நீதிபதி ராஜேந்திர சச்சார் குழு அறிக்கை கூறியபோது, ஆர்எஸ்எஸ் - பாஜக பரிவாரம் இதில் உண்மையில்லை என்றது. முஸ்லிம்களுக்கு குறிப்பிட்ட சதவீதம் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா குழு பரிந்துரை செய்தபோது, அதைக் கண்டித்து கலகம் செய்தது ஆர்எஸ்எஸ் பரிவாரம். ஆனால், ஊட்டச்சத்து குறை வால் அதிகம் பாதிக்கப்படுவது சிறுபான்மை முஸ்லிம் குடும்பங்களைச் சேர்ந்த குழந்தை கள்தான் என்று இந்த ஆய்வு தெரிவித்துள் ளது. முஸ்லிம் குழந்தைகள் மட்டுமல்ல, பெரும்பகுதி முஸ்லிம் சமுதாயமே ஊட்டச் சத்தின்மையால் பாதிக்கப்பட்டுள்ளது என் பதுதான் உண்மை.

இந்த நாட்டின் வளர்ச்சிக்கு எதிரியே இட ஒதுக்கீடுதான் என்றும், எனவே இடஒதுக்கீட்டை முற்றாக ரத்து செய்ய வேண்டும் என்ற குரல்களும் அவ்வப்போது எழுகின்றன. இடஒதுக்கீட்டினால் திறமைகள் பின்னுக்குத் தள்ளப்பட்டதாகவும், சிலர் புலம்புகின்றனர். ஆனால், தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினத்தைச் சேர்ந்த குழந் தைகள் ஊட்டச்சத்தின்மையால் பாதிக்கப் பட்டுள்ளனர் என்று இந்த ஆய்வு தெரிவிக் கிறது. தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மக்கள் முன்னேற வேண்டுமானால் இட ஒதுக்கீடு மட்டுமல்ல, உரிய உணவு ஒதுக்கீடும், நில ஒதுக்கீடும் நிலை பெற வேண்டும் என் பதையும் இந்த ஆய்வின் வெளிச்சத்தில் புரிந்து கொள்ளலாம்.

நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங் களில் மகளிருக்கு இடஒதுக்கீடு வழங்க மத வாத, சாதிய சக்திகள் தொடர்ந்து முட்டுக் கட்டை போடுகின்றன. இந்த சமூகத்தில் பெண்களுக்கு இழைக்கப்படும் கொடுமை கள் கொஞ்சநஞ்சமல்ல. கருவறையிலேயே துவங்கி விடுகிறது பெண்களுக்கு எதிரான கொடுமைகள். ஊட்டச்சத்தின்மை குறித்த இந்த ஆய்வும் பெண் குழந்தைகள் சமூக வாழ்வில் ஒடுக்கப்படுவதை உறுதி செய் துள்ளது. குழந்தைகளின் எடை மற்றும் உய ரத்தைக் கொண்டு ஊட்டச்சத்து போதிய அளவு உள்ளதா என்று கணக்கிடப்படு கிறது. குழந்தை பிறந்து முதல் மாதத்தில், பெண் குழந்தைகள் இந்த விகிதத்தின் அடிப்படையில் ஊட்டச்சத்து உள்ளவை யாக இருந்தபோதும், வளர வளர ஊட்டச் சத்தின்மையால் பாதிக்கப்படுகின்றன என்று இந்த முடிவு கூறுகிறது. அதாவது, பெண் குழந்தைகளுக்கு போதிய அளவு ஊட்டச்சத்து வழங்கப்படுவதில்லை. இத னால் அவர்களது வளர்ச்சி எதிர்விகிதத் தில் செல்கிறது என்பதுதான்.

ஆய்வு நடத்தப்பட்ட பகுதிகளில் பெரும்பாலான ஏழைத் தாய்மார்கள் ஊட் டச்சத்து என்பது குறித்து அறிந்திருக்க வில்லை என்றும், போதிய கல்வி அறிவு இல்லாததே இதற்கு காரணம் என்றும் அந்த ஆய்வு தெரிவிக்கிறது. பெண்களுக்கு கல்வி அறிவு தரப்படாதது குறித்த அடிப்படை கேள்வியையும் இந்த ஆய்வு எழுப்புகிறது. பெரும்பாலான இந்திய பெண்கள் இரத்தசோகையால் பாதிக்கப் படுகிறார்கள் என்பது ஏற்கெனவே வெளி வந்துள்ள ஆய்வு முடிவுகள் தெரிவிக்கும் உண்மையாகும்.

இந்த ஆய்வு முடிவு தெரிவிக்கும் ஆறுதலான செய்திகளில் ஒன்று, ஊட்டச்சத்து விஷயத்தில் கேரளம், தமிழ்நாடு, இமாச்சலப்பிரதேச மாநிலங்கள் ஒப்பீட்டு அளவில் பரவாயில்லை என்பதுதான். கேரளத்தில் தொடர்ச்சியாக இடதுசாரிகள் தலைமையிலான அரசு இருந்து வந்துள்ளதும், பொது விநியோக முறை சிறப்பாக உள் ளதும் காரணமாக இருக்கலாம். தமிழ் நாட்டில் பள்ளிக் குழந்தைகளுக்கு சத் துணவு திட்டம் அமலில் இருப்பதும், ஒப் பீட்டு அளவில் பொதுவிநியோக முறை நன்கு செயல்படுவதும் காரணமாக இருக்கலாம்.

வயிறும், தலையும் வீங்கி, கைகால்கள் சூம்பிப் போய் இளைத்து கிடக்கிறது நாளைய இந்தியா. குளிரூட்டப்பட்ட அரங்குகளில் இந்தியா வளர்வதாக வாய்கிழிகிறது.

- மதுக்கூர் இராமலிங்கம்

Tuesday, January 10, 2012

வைரமுத்துவின் வார்த்தை ஜாலமும் வர்க்கப் பாசமும்


 சில நாட்களுக்கு முன் தீக்கதிர் இதழின் திரைக்கதிர் பகுதியில் கவிஞர் வைரமுத்து அவர்களின் சினிமா குறித்த கருத்து பிரசுரமாயிருந்ததை வாசித்தேன்.கொஞசம் அதிர்ச்சி அடைந்தேன்.விவரம் அறிந்தவர்,சிரமப்பட்டு முன்னுக்கு வந்தவர்,பிற்போக்குவாதியாக இல்லாதவர் என்ற நோக்கில் இன்றைய தமிழ் சினிமா உலகம் குறித்த கவிஞரின் கருத்து ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்றாகவே உள்ளது

“பெரிய படங்கள் மட்டுமல்ல சிறிய படங்களும் கவனிக்கப் படவேண்டும். காட்டில் குயில் மட்டும் கூவினால் காடு நிசப்தமாகி விடும்.எல்லா சத்தங்களாலும் நிறைந்திருந்தால்தான் காடாக இருக்கும்.”(தீக்கதிர்)

 .சில நாட்கள் முன் சென்னையில் நடைப் பெற்று முடிந்த 9 ஆவது சர்வதேச உலகத் திரைப்படவிழாவில்  திரையிட மறுக்கப்பட்டு பின் திரையிடப்பட்ட தென்மேற்கு பருவக்காற்று திரைப்படம் குறித்த அவரின் பரிவுணர்ச்சியை தெரிவிக்கும் போது வெளிவந்த கருத்தாக இது இருக்கலாம். என்றாலும் அவரின் இந்த சொல்லாடலும் உவமையும் சரியானதாக இல்லை:மட்டுமல்ல இவர் யாரின் பிரதிநிதியாக பேசுகிறார் என்கிற சிக்கலும் வந்து விடுகிறது.

வைரமுத்து சொன்ன முன் பகுதி சிறிய படங்களுக்கான ஆதரவுக் குரல் போலவும், பின்பகுதி பெரிய படங்களுக்கான நியாயக் குரல் போலவும் வெளிப்பட்டுள்ளது. இன்றைய தமிழ் திரைப்பட அகராதியில் சிறிய படம் என்பது 2 கோடி வரையிலும் பெரிய படங்கள் என்றால் 25 கோடி வரையிலும் .எடுக்கப்படும் படம் என அர்த்தப்படும். 2கோடி செலவில் படம் எடுப்போர் சொந்த பணம் மட்டுமின்றி வட்டிக்கு வாங்கி படம் எடுப்போராகவே பெரும்பாலும் உள்ளனர் இதன் பெரும்பகுதி நடிகர்களின் ,தொழில்நுட்பக் கலைஞர்களின் சம்பளமாகவே போய் விடுகிறது. சங்கங்களின் உடன்படிக்கைக்கு உட்படாத அல்லது அடாவடியாக மீறுகிற சம்பளக் கட்டாயம் பெரும் மூலதனம் போட்டு படம் எடுப்போர்களால் திணிக்கப்பட்டது.

பெறும் சிரமப்பட்டு படம் எடுக்கும் சிறிய தயாரிப்பாளர்களின் படத்தை திரையிட அரங்குகளும் கிடைப்பதில்லை. கிடைப்பதில்லை என்றால் இதுவும் பெரு மூலதனக்காரர்களால் உருவாக்கப்பட்ட சதிவலைதான்.ஆண்டுக்கு 10 அல்லது 15 என்ற அளவில் வெளிவரும் பெருமூலதனத்தில் வெளிவரும் படங்களின் சந்தையை மனதில் வைத்து போட்டி அற்ற களத்தை உருவாக்குவதற்காக சிறுமூலதன படங்களுக்கு திரைஅரங்கை மறுக்க வைப்பது தொடர்ச்சியாக நடைபெறுகிறது.இதை எல்லாம் மீறிய ரசிகர்களின் புத்தெழுச்சி சிறுபடங்களுக்கான தளமாக உள்ளது.

ஆண்டுக்கு 100 முதல் 130 வரை வெளியாகிற தமிழ்படங்களில் பெருநட்சத்திர, பெருமூலதன படங்களை கழித்து விட்டால் தொண்ணூறு சதம் படங்கள் சிறிய மூலதன படங்கள்தான்.இந்தப் படங்கள்தான் தமிழ் திரைக்கு புத்தெழுச்சியும்,புதுப்பார்வையும் தந்துகொண்டு வருகின்றன.மொத்த தமிழ்திரை உலகின் சந்தையாகவும்,சிறுகலைஞர்கள்,தொழில் நுட்பக்கலைஞர்கள், திரைஅரங்குகள் உள்ளிட்ட மொத்த திரைஉலகின் வாழ்வாதாரமாகவும் இருந்து வருகிறது.

இந்த சிறுமூலதன படங்களால்தான் தமிழ்திரைக்கு உலகளாவிய அங்கீகாரமும் மரியாதையும் உருவாகி வருகின்றன.இந்திய அளவில்  சொந்த மண்,மக்கள் அடையாளத்தை முன்னிறுத்தி புதுப்பாதையை திறந்து விட்டதும் இந்த படங்கள்தான். உலகாளாவிய சந்தையும் கவனமும் வட்டார மொழியில் வட்டார பண்பாட்டு அடையாளத்தை முன்னிறுத்துகிற போதே பெறப்பட்டு அந்த வகைப் படங்களே உலகப்படங்களாக கொண்டாடப்படுகின்றன.

இந்த வகைப் படங்களுக்கு பிறில்லாமல் குரல் கொடுக்க வேண்டிய வைரமுத்து,தன்னை வளர்த்த தனக்கு ஒர் அடையாளத்தை கொடுத்த சிறு மூலதனப்படங்கள் மட்டும் போதாது குயில்கள் மட்டும் கூவினால் போதாது;சிங்கம்,புலி,காண்டாமிருகம் வகையிலான தயாரிப்பாளர்கள்,நட்சத்திரங்கள் இருந்தால்தான் காடு அல்லது திரைஉலகமாக இருக்கும் என்று அவர் உதிர்த்திருக்கும் கருத்து பெருமூலதனங்களுக்கு அடிக்கிற ஜால்ரா அல்லது அவர்கள் பயணத்திற்கு விரிக்கப்படுகிற நடைப்பாவாடை என்றே அர்த்தம்.
இரா.தே.முத்து

Saturday, May 7, 2011

ஐ. நா. குழு அறிக்கை: அடுத்து என்ன?


இலங்கை ராணுவத்திற்கும் விடுதலைப் புலிகளுக்கும் நடைபெற்ற போர் 2009-ஆம் ஆண்டு மே 19 அன்று முடிவுக்கு வந்ததாக இலங்கை அரசு அறிவித்தது. வன்னி பகுதியில் சுமார் 3 லட்சம் பேருக்கு சொல்லொணாத்துயரங்களை ஏற்படுத்திய கொடூரமான போராக இது நடந்தது. போர் துவங்கிய 2008 செப்டம் பரிலிருந்து போரின் இறுதி வரை கடுமையான போர்க் குற்றங்கள் நிகழ்ந்துள்ளன. அப்பாவி மக்கள் படுகொலை, மனித உரிமை மீறல்கள் ஏராளமாக நிகழ்ந்துள்ளன. சர்வதேச மனிதநேய சட்டங்கள் மற்றும் மனித உரிமை சட்டங்களை மீறும் வகையில் இழைக்கப் பட்ட இத்தகு குற்றங்களை ஐக்கிய நாட்டு மன்றத்தின் நிபுணர்குழு, தனது அறிக்கையில் தொகுத்துள்ளது. 2009, மார்ச் மாதம் இலங்கை யின் ஜனாதிபதி ராஜபக்சேவும், ஐ.நா. தலை மைச் செயலரும் கையெழுத் திட்ட ஒரு பிரகட னம் அடிப்படையில் இந்த அறிக்கை தயாரிப்பு பணியில் மூன்று பேர் கொண்ட ஐ.நா. குழு ஈடு பட்டது.

இந்த அறிக்கை ஒரு உண்மை அறியும் குழுவினால் உருவாக்கப்பட்ட புலனாய்வு அறிக்கை அல்ல. அந்தப் பணி இந்த மூன்று பேர் கொண்ட குழுவிற்கு நிர்ணயிக்கப்பட வில்லை. நம்பகத்தன்மை கொண்ட ஆதாரங் களோடு கூடிய குற்றச்சாட்டுகள் எவை என் பதை வரையறுத்து, ஐ.நா. செயலருக்கு அறிக்கை அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்ட அடிப்படையில் மூவர் குழு செயல்பட்டுள் ளது. இந்த அறிக்கையின் பரிந்துரைகளை அமலாக்கிட இலங்கை அரசிடம் ஐ.நா. அறி வுறுத்தும்.

நேரடியாக நடவடிக்கை எடுக்க ஐ.நா. விற்கு அதிகாரம் இல்லை. ஆனால், இலங் கையில் உள்ள குற்ற நடவடிக்கைகளை விசா ரிக்கும் அமைப்புகளில் ஏராளமான குறைபாடுகள் உள்ளன. இவற்றையும் அறிக்கை தெளிவாக்கியுள்ளது. ஆதாரங்கள் மிகுந்த குற்றச்சாட்டுக்கள் மீது சரியான நடவடிக்கை எடுக்கும் வகையில், இலங்கையின் குற்றவியல் நீதித்துறையில் உள்ள குறைபாடுகள் அகற்றப்பட வேண்டும். அறிக்கை முன்வைத்துள்ள குற்றச்சாட்டுக்களுக்கும் அவற்றின் மீதான சரியான தொடர் நடவடிக்கைகளுக்கும் இலங்கை அரசு பொறுப்பேற்க வேண்டும் என்பதே இந்த அறிக்கையின் அடிப்படையான உள்ளடக்கம்.

ஆதாரங்கள் கொண்ட குற்றச்சாட்டுக்கள் எவை என்பதை, அறிக்கை தெளிவாக விளக்குகிறது. அந்தக் குற்றச்சாட்டுக்களுக்கான ஆதாரங்களை எந்த வகையில் மூவர் குழு சேகரித்தது என்பதும் அறிக்கையில் தெளி வாக விளக்கப்பட்டுள்ளது.

ஐ.நா.வின் இணையதளத்தில் குற்றச்சாட் டுக்களை பதிவு செய்ய வேண்டுகோள் விடுக்கப்பட்டது. இதில் 4000க்கும் மேற்பட்ட குற்றச்சாட்டுக்கள் பதிவு செய்யப்பட்டன. இந்தக் குற்றச்சாட்டுக்களுக்கான பின்னணி ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டன. இலங்கை ராணுவம் மற்றும் அமைச்சகங்களின் அறிக் கைகள், ஊடகங்களில் வந்த செய்திகள், படங்கள், போர் நடக்கும் போது அங்கிருந்த ஐ.நா. வின் உதவிக்குழுக்கள், செஞ்சிலுவை சங்கத்தின் குழுக்கள் போன்றவற்றின் பதிவு செய்த ஆவணங்கள் என பல வகை ஆதாரங்க ளையும் ஒப்பிட்டு குற்றங்கள் ஆராயப்பட்டன. இந்த ஆய்வுக்குப் பிறகு, உண்மையான குற்றச்சாட்டுக்கள்தான் என்று மூவர் குழு முடிவுக்கு வந்த குற்றச்சாட்டுக்கள் இந்த அறிக்கையில் தொகுக்கப்பட்டுள்ளன.

இந்தக் குழு இலங்கைக்கு சென்று போர் நடந்த இடங்களை ஆராயவில்லை. இதற் கான அனுமதியை இலங்கை அரசு வழங்க வில்லை. இந்த அறிக்கையில் இலங்கைக்குச் செல்ல அனுமதிக்காதது சரியல்ல என்று சொல்லப்பட்டுள்ளது. அங்கு செல்லவில்லை என்றாலும், குற்றச்சாட்டுக்களை வரையறுக்க மேற்கண்ட ஆதாரங்கள் போதுமானவை என்று அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.

இதன் காரணமாக, இந்தக் குற்றச் சாட்டுக்கள் போதுமான ஆதாரங்கள் கொண்ட வையாக இருப்பினும், உரிய தண்டனை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், பொறுப்பானவர்கள் கண்டறியப்பட்டு தண்டனைக்கு உள் ளாக்கிடவும் முழு விசாரணை இலங்கையில் நிகழ்ந்த வேண்டியுள்ளது. இலங்கையில் உள்ள மனித உரிமை ஆணையம், புலனாய்வு அமைப்புகள், நீதிமன்றங்கள் உள்ளிட்ட பல அமைப்புகள் இப்பணியை மேற்கொள்ள வேண்டும்.

மற்றொரு பிரச்சனையும் முக்கியமானது. நடைபெற்ற போரில் ஐ.நா. தொகுத்துள்ள குற்றச்சாட்டுக்கள் மட்டுமல்லாது, இன்னும் ஏராளமான குற்றங்கள் நிகழ்ந்திருப்பதற்கான சாத்தியக்கூறுகள் இருந்தன. இலங்கையில் உள்ள அமைப்புகள் முழு விசாரணை மேற் கொண்டால்தான் இவற்றைத் தொகுக்க இயலும்.

அங்கு அமைக்கப்பட்டுள்ள ‘கற்றுக் கொண்ட படிப்பினைகள் மற்றும் நல்லிணக் கக்குழு’ இந்தக் குற்றங்களை முறையாக சேகரிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட வேண்டும். இந்த அமைப்பில் குறைபாடுகள் இருந்தாலும் குற்றங்களை ஆய்வு செய்ய “இது ஒரு பயனுள்ள, சக்தி வாய்ந்த அமைப்பு” என ஐ.நா. நிபுணர்குழு அறிக்கை கூறுகிறது.

இலங்கையில் உள்ள விசாரணை அமைப் புக்கள் முறையாக செயல்படாதது, இன ரீதியான பாரபட்ச அணுகுமுறை உள்ளிட்ட பல முக்கிய குறைபாடுகளை அறிக்கை சுட்டிக் காட்டியுள்ளது. விசாரணைகளை தாமதப் படுத்துவது, புகார் அளிப்பவர்களை மிரட்டுவது, துன்புறுத்துவது போன்றவற்றால் இலங்கையின் குற்றவியல் நீதித்துறை நம்பகத் தன்மை இழந்திருப்பதாக அறிக்கை கருது கிறது. இந்தக் குறைபாடுகளை அகற்றுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிக்கையின் வழிகாட்டுதல்களும் உதவிடும். ஆனால் இந்த அமைப்புகளின் குறைகளை அகற்றும் வேலையை அரசு மேற்கொள்ள வேண்டுமானால், வலுவான மக்கள் இயக்கத்தின் நிர்ப்பந்தம் அவசியமானது.

வான்வழியே குண்டு மழை பொழிந்து அப்பாவி மக்களை படுகொலை செய்வது, மருத் துவமனைகள் மீது குண்டு வீச்சு நடத்துவது, மக்களை உள்நாட்டிலேயே அகதிகளாக்கி, எவ்வித அடிப்படை வசதியும் இல்லாத முகாம்களில் தங்க வைப்பது, துன்புறுத்துவது, சித்ரவதை செய்வது, பெண்களை பாலியல் பலாத்காரம் செய்வது, குழந்தைகளை கட்டா யப்படுத்தி போரில் ஈடுபட வைப்பது, தலைமையைக் காப்பாற்ற அப்பாவி மக்களை கேடயமாக பயன்படுத்துவது, குழந்தைகளை கொல்வது, தீவிரவாதிகள் என்ற பெயரில் பிடித்து வைத்துள்ள அப்பாவிகளை சிறையில் அடைத்து துன்புறுத்துவது, அரசை விமர்சிப்ப வர்களை கடத்திச் செல்வது, பலரை காணாமல் செய்வது போன்ற கொடூர குற்றங்கள் இலங்கையில் மட்டுமல்ல, எங்குமே நிகழாமல் தடுப்பதற்கு, இந்தக் குற்றங்கள் ஆதாரப் பூர்வமாக தொகுக்கப்பட்டு, உரியவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்.

ராணுவமும், அரசு அதிகாரமும் தங்கள் கைவசம் உள்ள நிலையில், இலங்கை அரசு தான், நடைபெற்ற குற்றங்களுக்கு அதிகமாக பொறுப்பேற்க வேண்டும் என்பதை அறிக்கை சுட்டிக் காட்டுகிறது. இந்தப்போரில் படுகொலை செய்யப்பட்ட பொதுமக்களின் எண்ணிக்கையை அரசாங்கம் வெளிப்படைத் தன்மையோடு இன்னமும் அறிவிக்கவில்லை. அரசு, எண்ணிக்கையை குறைத்துக் காட்ட முயற்சிக்கிறது. போர் நிகழ்ந்த போது வன்னிப் பகுதியில் சிக்குண்டவர்கள் 3,30,000 பேர் எனவும் விடுதலைப்புலிகள் ஆக்கிரமித் திருந்த பகுதியில் சிக்குண்டவர்கள் 35,000 பேர் எனவும் கணக்கிடப்படுகிறது. போர் முடிந்து, வெளியே வந்தவர்கள் எண்ணிக்கை 2,90,000 என மதிப்பிடப்படுகிறது. ஆக 75,000 பேர் உயிரிழந்திருக்கலாம் என்ற மதிப்பீடு, ஊக அடிப்படையில் சொல்லப்படுவதாக அறிக்கை கூறுகிறது. நம்பத்தகுந்த ஆதாரங்களோடு சொல்லப்படும் மதிப்பீடு அடிப்படை யில் பார்க்கும் போது, உயிரிழந்தோர் 40,000 பேருக்கு குறைய வாய்ப்பில்லை என்று கூறுகிறது. உறுதியான உண்மையான விபரங் களை அரசு சேகரித்தால்தான் சரியான முடி வுக்கு வர முடியும் என்று அறிக்கை வலியு றுத்துகிறது. அப்பாவி மக்கள் படுகொலை குறித்து அரசுத் தரப்பு மீது ஆதாரங்களோடு பல குற்றச்சாட்டுக்களை ஐ.நா. அறிக்கை தெளி வாக எடுத்துரைக்கிறது.

வன்னிப் பகுதியில் விடுதலைப் புலிகளோடு நடந்த இறுதிப்போரின் போது அப்பாவி மக்களுக்கு மனிதாபிமான, பாதுகாப்பு நட வடிக்கைகளை செய்திட அரசு தவறியுள்ளது. யுத்தப் பகுதியிலிருந்து இடம் பெயர்ந்த மக்கள், தங்களது குடும்பத்தினர், உற்றார் உறவினரை இழந்து தாக்குதலுக்கு ஆளாகி, உடல் உறுப் புக்களை இழந்து கொடூரமான நிலைக்குத் தள்ளப்பட்டனர். பெண்களும், குழந்தைகளும், முதியவர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டனர். உணவு, மருந்துகள், குடிநீர் இல்லாத நிலையில் பலர் உயிரிழந்தனர். பெண்கள் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாயினர்.

யுத்தப்பகுதியிலிருந்து அரசின் கட்டுப் பாட்டு பகுதிக்கு வந்தாலும் ராணுவத்தின் கடுமையான பரிசோதனைக்கு ஆளாக வேண்டியிருந்தது. பலர் விடுதலைப்புலிகள் என சந்தேகிக்கப்பட்டு தனி முகாம்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டு சித்ரவதை செய்யப்பட்டனர். இதில் கணிசமானோர் பெண்களும், குழந்தைகளும் ஆவர்.

இலங்கை அரசின் கொடுரங்களை ஐந்து பிரிவுகளில் அறிக்கை இந்தக் குற்றங்களை தொகுக்கிறது.

வான்வழி குண்டு மழை பொழிந்து அப்பாவி மக்களை கொன்றது; மனிதநேய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் சர்வதேச, உள்நாட்டு அமைப்புகளை செயல்படவிடாமல் தடுத்ததோடு, மருத்துவ மனைகள் மீதும் குண்டு வீச்சு நடத்தியது; பாதிக்கப்பட்டோருக்கு நிவாரண உதவிகளை செய்யாதது; குண்டுவீச்சில் பாதிக்கப்பட்டோர், இடம் பெயர்ந்து முகாம்களுக்கு வந்தவர்கள் ஆகிய அனைவரையும் மனித உரிமைகள் மீறலுக்கு உள்ளாக்கியது; மோதல் பகுதியல்ல என்று ராணுவத்தால் அறிவிக்கப் பட்ட இடங்களில் கூட குண்டு வீச்சு நடத்தி, அங்கு தப்பி வந்த மக்களைப் படுகொலை செய்தது போன்றவை இந்தப் பிரிவுகளில் அடங்கிடும். அத்துடன் ஊடகத்தின் மீதான அடக்குமுறையை இலங்கை அரசு கட்ட விழ்த்ததையும் அறிக்கை விவரிக்கிறது.


விடுதலைப்புலிகள் தரப்பில் வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களை ஆறு பிரிவுக ன் கீழ் தொகுத்துள்ளனர்.

அப்பாவி மக்களை கேடயமாகப் பயன்படுத்தி போரில் ஈடுபட்டது; புலிகள் ஆதிக்கத்தில் இருந்த பகுதிகளி லிருந்து வெளியேறிய அப்பாவி மக்களை சுட்டுக் கொன்றது; மனித வெடி குண்டு களைப் பயன்படுத்தியது. தமிழர்களை தங்க ளது போர் தேவைகளுக்காக கட்டாயப்படுத்தி வேலை வாங்கியது; குழந்தைகளை கட்டாயப் படுத்தி போரில் ஈடுபடுத்தியது; தற்கொலை படை மூலம் அப்பாவி மக்களைக் கொன்றது போன்ற குற்றங்களை விடுதலைப்புலிகள் நிகழ்த்தியுள்ளனர் என அறிக்கை கூறுகிறது.

வெளிநாடுகளில் வசிக்கும் புலம் பெயர்ந்த தமிழர்களும், வெளிநாடு வாழ் தமிழர்களும் செயல்படுகிற பல அமைப்புகளின் செயல் பாடுகளை அறிக்கை கடுமையாக விமர்சிக் கிறது. இவர்களின் கண்மூடித்தனமான விடுத லைப் புலி ஆதரவுப் பிரச்சாரங்கள், தமிழ் தேசியவாத வெறியை தூண்டியது, இத்தகு செயல்பாடுகளுக்காக பெரும் நிதியைத் திரட்டி செலவிட்டது ஆகியன அனைத்தும் இலங்கை தமிழ்ச் சமூகத்தில் பிளவை ஏற்ப டுத்தியது. அத்துடன் சிங்களத் தீவிரவாதம் வலுப்பெறவும் உதவியுள்ளதாக அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. விடுதலைப்புலிகள் சேகரித்து வைத்துள்ள பெரும்நிதி இலங் கைக்குள் கொண்டு வரப்பட வேண்டு மெனவும் தற்போது பாதிக்கப்பட்ட தமிழர் களுக்கு உதவிட அதனை பயன்படுத்த வேண்டுமென்றும் அறிக்கை கூறுகிறது.

ஐ.நா.நிபுணர்குழு அறிக்கையில் இனி செய்ய வேண்டுவன குறித்த பரிந்துரைகள் மிக முக்கியமானவை. இந்தப் பரிந்துரைகளை “இலங்கை அரசு, ஐ.நா. மற்றும் இதரத் தரப்பினர் இணைந்து அமலாக்க வேண்டு மென” அறிவுறுத்தப்பட்டுள்ளது. அறிக்கை யில் குறிப்பிட்டுள்ள குற்றச்சாட்டுக்களை நியாயமான, பாரபட்சமற்ற முறையில் புல னாய்வு செய்திட வேண்டும். மனித நேய மற் றும் மனித உரிமைச் சட்ட மீறல்கள் எனும் வகையில் ராணுவமும், விடுதலைப்புலிகளும் செய்த குற்றங்களை முறையாக பதிவு செய்திட வேண்டும்.

இறுதிகட்ட போர் நடைபெற்ற வன்னிப் பகுதியில் தற்போது வசித்து வருவோருக்கும், பாதிக்கப்பட்டோருக்கும் கவுரவமான வாழ்க் கையை உறுதி செய்ய வேண்டும். அவர்களது வாழ்வாதார உரிமைகளை பாதுகாத்திட இலங்கை அரசு முழுக்கவனம் செலுத்திட வேண்டும். எந்த வடிவத்திலும் வன்முறை நிகழாமல் தடுத்து நிறுத்திடும் வகையில் அரசு தனது “இணை ராணுவம் உள்ளிட்ட அரசு இயந்திரங்களை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும்”. இறப்புச் சான்றிதழ்கள் வழங் குவது, பாதிக்கப்பட்டோரின் மன நலன் காக் கும் நடவடிக்கைகள், இடம் பெயர்ந்தோர் மீண் டும் தங்களது சொந்த இடங்களில் குடியேறு வதற்கான ஏற்பாடுகள், அவர்களது மறுவாழ் வுக்கான நடவடிக்கைகள், அவர்களுக்கு இடைக்கால உடனடி நிவாரணம் வழங்குவது, ‘காணாமல் போனவர்கள்’ என்று அறிவிக்கப் பட்டவர்கள் பற்றிய விபரங்களை உடன் வெளி யிடுவது, அவசரகால சட்டங்கள் மற்றும் அடக்குமுறை நடவடிக்கைகளுக்கான சட் டங்களை விலக்கிக் கொள்வது, விடுத லைப்புலிகள் என்று சந்தேகிக்கப்பட்டு, சிறையில் இருப்போர் பற்றிய முழு விபரங் களை வெளியிடுவது, குற்றம் புரிந்தோர் என்ப தற்கான போதுமான ஆதாரங்கள் உள்ளவர் களைத் தவிர்த்து, மற்ற அனைவரையும் விடு தலை செய்வது - போன்றவற்றை உடனடி குறுகியகால நடவடிக்கைகளாக அறிக்கை பரிந்துரை செய்துள்ளது. இத்தகு பரிந்துரைகள் அனைத்தும் உடன் அமலாக்குவது அவசியம்.

இவ்வாறு உடனடி நிவாரணங்கள் பற்றி அளிக்கப்பட்டுள்ள பரிந்துரைகளை தாமதிக் காமல் அமலாக்கிட, இந்தியாவில் உள்ள மத்திய அரசு இலங்கை அரசிடம் அழுத்தமாக வலியுறுத்த வேண்டும். இலங்கையில் உளள் தமிழ்ச் சமூகத்தை பாதுகாக்க இந்திய அரசு பொறுப்புணர்வோடு செயலாற்றிட வேண்டும்.

ஒன்றுபட்ட இலங்கைக்குள் தமிழ் மக்களின் அனைத்து உரிமைகளையும் உறுதிப் படுத்துவது, சுயாட்சி அதிகாரங்கள் கொண்ட தமிழ் மாகாணங்களை அமைப்பது எனும் வகையில் தமிழ் இனப் பிரச்சனைக்கு நிரந் தரத் தீர்வு காண வேண்டும். தற்போது தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கும் அரசிற்கும் பேச்சு வார்த்தை நடைபெற்று, நான்கு கட்டங்கள் முடிந்துள்ளன. இதனை விரைவுபடுத்துவது முக்கியமானது. இரத்தம் தோய்ந்த இன்றைய இலங்கை, நல்லிணக்கம் தவழும் பூமியாக மாறிட, அரசியல் தீர்வு ஒன்றே வழி. அங்குள்ள முற்போக்காளர்கள், மனித நேயம் கொண் டோர், உழைப்பாளி மக்கள் அனைவரும் அதிகாரப் பகிர்வுக்காகவும், அரசியல் தீர்வுக் காகவும் ஒன்றுபட்டு போராட வேண்டிய தருணம் இது.

இன்று, இலங்கை நிகழ்வுகள் உலகத் தாக் கத்தை ஏற்படுத்தியுள்ளன. கொடூரமான காலனியாதிக்கமும், இரண்டு உலகப் போர்க ளும் நிகழ்ந்த காலக்கட்டத்தில் அமெரிக்கா உள்ளிட்ட ஏகாதிபத்திய நாடுகள் கோடிக் கணக்கான அப்பாவி மக்களை கொன்று குவித் தன. அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுக ளின் படைகள், நேட்டோ போன்றவை இராக், ஆப்கானிஸ்தான், வியட்நாம் மற்றும் இலத்தீன் அமெரிக்க நாடுகளில் இழைத்துள்ள குற்றங் கள் இதுவரை முறையாக விசாரிக்கப்பட்டு குற்றவாளிகள் தண்டிக்கப்படவில்லை. ஆனால், தற்போது மனித உரிமைகள் பற்றி ஏகாதிபத்தியவாதிகள் தீவிரமாகப் பேசு கின்றனர். அவர்களது உள்நோக்கம், இலங் கையை தங்களது ஆசிய மேலாதிக்கத்தின் தளமாக பயன்படுத்துவதுதான். எனவே இலங்கை இனப்பிரச்சனைக்கு அரசியல் தீர்வு காண்பது சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த கடமையாகும்.

என். குணசேகரன்
சிபிஎம் மாநிலக்குழு உறுப்பினர்

Monday, March 28, 2011

நடுத்தெருவில் நிற்கிறார்கள் நடுத்தர மக்கள்

தி.மு.க., ஆட்சியில் உயிரற்ற கம்ப்யூட்டர், காகிதங்களுக்கு மதிப்பு உயர்ந்து கொண்டே செல்கிறது; மனிதனுக்கு மதிப்பு குறைந்து கொண்டே வருகிறது!''

"காசு வாங்கினேன், பையில போட்டேன். போன இடம் தெரியல... காதலி பார்ப்பா காரணம் கேட்பா ஏது சொல்றதுன்னு புரியல... விதவிதமா துணிகள் இருக்கு விலையைக் கேட்டா மயக்கம் வருது... எதை எதையோ வாங்கணும்னு மனசுல, அதை எண்ணாம இருக்கவும் வழியில்ல' - என்ற, பட்டுக்கோட்டை கல்யணசுந்தரத்தின் பாடல் வரிகளைப் போல தான், இன்றைய தமிழக நடுத்தர மக்களின் வாழ்க்கை உள்ளது.நுகர்வு கலாசாரத்திலிருந்து நீந்திக் கரையேற முயற்சிக்கின்றனர்; அவர்களால் முடியவில்லை. கரையிலும் நில்லாமல், நீரிலும் இல்லாமல், திரிசங்கு சொர்க்கத்தில் நிற்கின்றனர். எதார்த்த வாழ்க்கையில், இருப்புக்கும், தேவைக்குமான இடையில் போராடிக் கொண்டிருக்கும் அவர்களால், கல்விக் கட்டணம், வாகனக் கட்டணம், மின் கட்டணம், மருத்துவச் செலவு ஆகியவற்றை சமாளிக்க முடியாமலும், அதை வெளிக்காட்ட முடியாமலும் தவிக்கின்றனர்.

கடந்த ஐந்தாண்டுகளில், காங்கிரஸ் மற்றும் தி.மு.க.,வின் தவறான பொருளாதாரக் கொள்கையால், மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். பன்னாட்டு நிறுவனங்களிடமும், உலக வங்கியிலும் இலவசத் திட்டங்களைச் செயல்படுத்துவதற்காக, அவர்கள் குறிப்பிடும் இடங்களில் எல்லாம் கையெழுத்திட்டு, நாட்டை கடனாளி ஆக்கி உள்ளனர்.அது போல, வீட்டுக் கடன், வாகனக் கடன், வீட்டு உபயோகக் கடன், பர்சனல் லோன் போன்றவற்றுக்காக, நீட்டிய இடங்களில் எல்லாம் கையெழுத்துப் போட்ட நடுத்தர மக்களும் கடனாளியாக நிற்கின்றனர்.செம்மொழி மாநாட்டை நடத்தியவர்களுக்குத் தெரியும், தமிழில் உயர்திணை, அஃறிணை என இரண்டு திணைகள் இருப்பது. காங்கிரஸ், தி.மு.க., ஆகியவற்றின் ஆட்சியில் உயிரற்ற கம்ப்யூட்டர் மற்றும் காகிதங்களுக்கு மதிப்பு உயர்ந்து கொண்டே செல்கிறது; மனிதனுக்கு மதிப்பு குறைந்து கொண்டே போகிறது.குறிப்பாக, பெண்களின் நிலை மோசமடைந்துள்ளது. செலவுகளை ஈடு செய்ய முடியாமல், பல குடும்பத்தில், பெண்கள், வீட்டிலும் வேலை செய்து, வெளியில் வேலை செய்து சம்பாதிக்க வேண்டிய நிர்பந்தமும் வந்துவிட்டது.

எம்.ஜி.ஆர்., சிவாஜி போன்றவர்கள், விவசாயிகளைப் போல படங்களில் வேடமேந்தி நடித்துள்ளனர். தற்போதுள்ள கதாநாயகர்கள் எவரும், விவசாயிகள் போல வேடமேற்று நடிப்பது கூட இல்லை. காரணம், விவசாயிகளுக்கு எந்த மரியாதையும் இல்லாமல் போய்விட்டது. ஐந்தாண்டுகளில் விவசாயம் செய்யவே விளை நிலங்கள் இல்லை. ரியல் எஸ்டேட்களுக்கும், பொருளாதார மண்டலங்களுக்கும் விளை நிலங்கள் கையகப்படுத்தப்பட்டுவிடுகின்றன. விதைகளை அடுத்த போகத்துக்கு விவசாயிகள் சேமித்து வைப்பர். இப்போது, பன்னாட்டு நிறுவனங்களிலிருந்து மலட்டு விதைகளை வாங்கும் சூழல் நிலவுகிறது."கிரைண்டர் தருகிறேன், மிக்சி தருகிறேன்' என்கின்றனர். விற்கும் விலைவாசியில், அவற்றில் அரைக்க உணவுப் பொருகள்களை வாங்க முடியாமல், நடுத்தர மக்கள் நிற்கின்றனர்.

இளைஞர்கள் வேலைவாய்ப்பு இல்லாமல் உள்ளனர். சிறுதொழில் தொடங்க, வங்கிகள் கடன் கொடுப்பதில்லை. முதலாளிகளுக்கு, வட்டித் தள்ளுபடியுடன் கடன்களை வாரி வழங்குகின்றனர்.

நன்மாறன்எம்.எல்.ஏ., மார்க்சிஸ்ட் கட்சி:""

Monday, February 7, 2011

நடிகர் விஜய்:மக்கள் ஓட்டுப்போட்டது மக்கள் பிரச்சனையை தீர்க்கவா? என்னை எதிர்க்கவா


காவலன் படம் வெளியாவதில் ஆளும்கட்சி மற்றும் திரையுலகில் செல்வாக்கு செலுத்தும் ஒரு குடும்பத்தினர் ஆகியோர் ஏற்படுத்திய தடைகளால் கொதித்துப் போயுள்ள நடிகர் விஜய் தனது குமுறலை பத்திரிகைகள் மூலம் வெளிப்படுத்தத் துவங்கியுள்ளார்.

நடிகர் விஜய் தொடர்ந்து நடித்து வந்த படங்களிலிருந்து மாறுபட்ட படமாக காவலன் வெளிவந்தது. அதனாலேயே அந்தப்படம் வெற்றி பெற்றது. படம் வெளியிடுவதற்கு ஏராளமான தடைகள் இருந்து வந்தன. அந்தத் தடைகளைத் தாண்டி வெளிவந்தபிறகும்கூட சில திரையரங்குகளில் ஆளும்கட்சியினர் தகராறு செய்திருக்கிறார்கள். இதை நடிகர் விஜய்யே தெரிவிக்கிறார்.

“சென்னை குரோம்பேட்டை வெற்றி தியேட்டரில் என்னுடைய காவலன் ரிலீஸ் ஆனது. அங்கு ஆளுங்கட்சிக்காரங்க வந்து நின்னு, விஜய் படத்தை ரிலீஸ் பண்ணாதே.. பேனரைக்கட்டாதே.. வெளில போன்னு மிரட்டி அதிகாரம் பண்ணி இருக்காங்க. ரசிகர்களிடம் பொறுமையா இருங்கன்னு சமாதானப்படுத்தினேன். அந்தப்பகுதில தண்ணீர் கஷ்டம் இருக்கு. மின்சாரத்தட்டுப்பாடு இருக்கு. சாக்கடை வசதி இல்லை. இதையெல்லாம் தீர்க்கத்தானே மக்கள் ஓட்டுப்போட்டாங்க... விஜய்யிடம் சண்டை போடுறதுக்கு இல்லையே...” என்று கொதிக்கிறார் விஜய்.

இதேபோன்று ஈரோட்டில் மக்கள் இயக்க ரசிகர்கள் கூட்டத்தைக் குலைக்க காவல்துறையே முயன்றதையும் அம்பலப்படுத்துகிறார் விஜய். அவருக்குக் கூடிய கூட்டத்தைக் கண்டவுடன் காவல்துறையினருக்கு வந்த தொலைபேசி அழைப்பால், விஜய்யை மேடையேற வேண்டாம் என்று தடுக்க வைத்தது. கேட்டால், உங்களுக்கு ஆபத்து வந்துவிடலாம் என்று கூறிவிட்டார்கள். இத்தனைக்கும் காவல்துறையிடம் அனுமதி வாங்கியே அந்தக்கூட்டத்தை நடத்தியிருக்கிறார்கள். இந்த பிரச்சனை பற்றி, “என்னைப் பார்க்க கூட்டம் கூடுவதை யாரோ விரும்பலைன்னு தெளிவாத் தெரிஞ்சுது” என்கிறார் விஜய்.

“காவலன் படம் வெளியாக விரும்பாதவர்கள், தங்கள் தொலைக்காட்சிகளில் மட்டும் தீபாவளி, பொங்கல்னு என்னோட படத்தைப் போட்டு வியாபாரம் பார்ப்பது மட்டும் நியாயமா” என்று விஜய் கேள்வி எழுப்புகிறார். பொங்கலன்று சன் டி.வி (போக்கிரி மற்றும் சுறா) விஜய் படத்தைப் போட்டு காசு பார்த்தது என்பது குறிப்பிடத்தக்கது. திரைப்படங்கள் குறித்த அவரது அணுகுமுறையிலும் மாற்றம் தெரிகிறது. “எனது ரசிகர்களுக்கு நான் ஒரு உத்தரவாதம் தர்றேன். டிஷ்யூம்.. டிஷ்யூம் படங்களை இனிமேல் நான் தொடர்ந்து தர மாட்டேன். நல்ல கதையம்சம் இருக்கும் படங்களில் ஒரு கேரக்டராக இருப்பதும் பெருமையான விஷயம்தான்” என்கிறார் உறுதியோடு.

Friday, December 31, 2010

”ஹலோ ... உதயநிதி ! - என் பணத்தை திருப்பிக் குடு” ....

இராவணன் பார்த்துவிட்டு வந்து மணிரத்தினம் இப்படி ஒரு படம் பண்ணத் தேவையில்லை. இதை செய்ய நிறைய பேர் இருக்கிறார்கள் என்று எப்படித் தோன்றியதோ, எந்திரன் பார்த்துவிட்டு சிலநாட்களில் "DVD" யில் மைனா பார்க்கும் போது அந்த நூற்றைம்பது கோடியையும் பிரிச்சுக் கொடுங்கப்பா இப்படி ஐந்து படமாவது வரட்டும் என்று எப்படி வாய்விட்டு சொல்லத் தோன்றியதோ அப்படியே இந்தப் படம் பார்த்து விட்டு வெளி வரும்போது கமல் ஒரு நாடகம் போட இவ்வளவு செலவளித்திருக்கத் தேவையில்லை என்று தோன்றியது.

விடிய விடிய ராமன் கதை, விடிஞ்சதன் பின் ராமன் சீதைக்கு என்ன முறை என்று கேட்க அவருக்கு அவா சித்தப்பா என்று யாரோ சொன்னானாம் என்று என் தமிழ் டீச்சர் அடிக்கடி சொல்லுவா. அவ எப்ப அப்படி சொல்லுவா என்றா, மண்டோதரி போர்க்களத்தில புலம்பின பாடலுக்கு முதல் நாள் பொழிப்பு சொல்லித் தந்திட்டு அடுத்தா நாள் அதை கேட்கும் போது, நாங்கள் முகட்டைப் பார்த்து கொண்டு, இரட்டைப் பின்னல்களில் இருக்கும் ரிப்பன்களை மாறி மாறி அவிழ்த்துக் கட்டும் போது சொல்லுவா. அவ நினைக்கிற மாதிரி நாங்களொன்றும் சபையில "நெடு மரங்கள்" மாதிரி நிற்கிறதில்லை. எங்கட மூளைக்குள்ள தனியா ஒரு உலகம் சுத்திக் கொண்டிருக்கும் என்று சொன்னால் நீங்கள் மட்டும் இல்லை, டீச்சேரே நம்பமாட்டா. அதால நாங்கள் சொல்றதும் இல்லை. உண்மையான காரணம், பொழிப்பை சொல்லக் கேட்கும் போது மண்டோதரி பாவம், கண் கண்ட கணவனே போய்ச் சேர்ந்திட்டான், இனி அவட புலம்பல நாங்களும் பாடி ஏன் அவவுக்கு மனக்கஷ்டத்தை கொடுப்பான் என்ற நல்ல எண்ணத்தில நாம பாடமாக்காமல் போக, டீச்சர் அதைப் புரிஞ்சு கொள்ளாமல் நிற்க வைச்சு கேட்கும் போது நள வெண்பாவில் தூது போன அன்னத்தை என் நண்பிக்கு ஒரு நாளாவது வாடகைக்குப் பிடிச்சுக் கொடுத்து எப்படி அவள்ட காதலை சேர்த்து வைக்கிறது என்ற யோசனையில் இருப்பம். ஐடியா கண்டுபிடிச்சா போதுமா? இல்லை தானே, கொழும்பில் தாறுமாறா ஓடுற பேருந்துகள், ஆட்டோகள் தாண்டி அதை எப்படி பாதுகாப்பா அன்ன நடை நடக்க வைச்சு, ஆண்கள் மட்டும் படிக்கிற, பெண்கள் மட்டும் படிக்கிற, பாடசாலைகள் அருகருகே சந்திக்கும் சந்தியில் அந்தக் கூட்டத்திலேயே அவனை மட்டும் பிடிச்சு தூதை பாஸ் பண்றது. பிறகு அவனின் தூது இவளுக்கு வந்து சேர்ந்தது என்று எப்படி உறுதிப்படுத்திறது என்ற ரீதில இருக்கும். சப்பா, கண்ணைக் கட்டுதில்ல. அப்படித்தான், எனக்கும் இருக்கு மன்மதன் அன்பு படம் பார்த்து வந்ததில் இருந்து.

என்ன பெயரே ஒரு மாதிரியா இருக்கு என்ற இழுத்த அம்மா கூட, பிள்ளை பாவம் அந்தப் படத்தில வாற பாட்டைத் திருப்பித் திருப்பிக் கேட்குது. ஏற்கனவே பார்த்திட்டு வந்தவையும் நல்லா சிரிச்சம் என்று சொல்லுகினம், சரி போட்டு வருவம் என்று சொன்னதை நம்பி...நம்பி... கூட வந்தா. கனடாவில திரையரங்குகளுக்கு பஞ்சம் வந்துச்சோ இல்லையோ, தமிழ்ப் படம் அதுவும் தமிழர்கள் அதிகம் வசிக்கும் Scarborough , Toronto வில் படங்கள் போட்டால் குறித்த திரையரங்கு நிரம்பி வழியும். இடப்பற்றாக்குறை, மற்றும் விடுமுறை காலம் என்பதால் இருக்கும் என்றாலும், இது எந்திரன், தீராத விளையாட்டும் பிள்ளை, அங்காடித் தெரு, சிங்கம் போன்ற சில படங்களுக்கு நடக்கவில்லை. ஏனெனில் அவை திரையிடப்பட்ட திரையரங்குகள் வேறு. அவை பிரமாண்டமானவை. ஏற்கனவே படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பை இரு பாடல்கள் ஏற்றி விட்டிருந்தமையாலும், பார்த்தவர்கள் அநியாயத்துக்குப் புகழ்ந்ததாலும் ஏற்கனவே டிக்கெட் முன்பதிவு செய்து போனது மிகவும் நல்லதாகப் போய்விட்டது. என் கண்முன்னே டிக்கெட் இல்லை என்றும், முதல் வரிசைகள் மட்டுமே காலியாக இருக்கின்றன என்பதாலும் ஏமாற்றத்துடன் திரும்பிப் போனவர்களும், அடுத்த காட்சிக்கு முன்பதிவு செய்தவர்களும், இல்லை அடுத்த கிழமை வருவோம் என்று போனவர்களும் ஐம்பது நூறு பேர் இருப்பார்கள். இந்த அளவுகோல் இதுவரையில் இல்லை என்று பேசிக்கொண்டார்கள். அந்த நேரக் காட்சிக்கு வரிசையில் காத்திருந்தவர்கள் அளவுக்கு முதல் காட்சி முடித்து வெளிவந்தார்கள். நாம் படம் பார்த்துவிட்டு வரும்போது, அதே எண்ணிக்கையில் அடுத்த காட்சிக்காகக் காத்திருந்தார்கள் என்பதுவும் குறிப்பிடத்தக்கது. சரி, விசயத்துக்கு வருவோம்.

உள்ளே போய், சீட் இலக்கம் தேடி வசதியா உட்கார்ந்தால் திரையில ஒரு கப்பல். அம்மாவும் சும்மா இருக்காம, பார் என்ன வடிவாயிருக்கு, ஒருக்கா இப்படி ஒரு கப்பலில ஏறிப்பார்க்கனும் என்றா. கப்பல் சீன் வேற போய்க்கொண்டிருக்கே, முடியப்போகுதே, ஒழுங்காப் பார்த்துவைச்சு உழைச்சு அம்மாவை இப்படி ஒரு கப்பலில கூட்டிக் கொண்டு போகணும் என்ற நினைப்பில கப்பலையே பார்த்தா கப்பலே தான் கதையே. சே, கப்பலைப் பார்க்கவா வந்தம் என்று feel பண்ணிக் கொண்டிருந்தால் தொடங்குது கதை. கதை என்ன கதை என்று சொல்றதை விட, அதில கதை என்ற ஒன்று இருக்கா என்று கேட்டா புண்ணியமாப் போகும். நானும் எவ்வளவுதான் சமாளிக்கிறது. நடிகையாகிய திரிஷாவை கண்மூடித்தனமாகக் காதல் செய்கிறார் தொழிலதிபராகிய மாதவன். ஆனால் அவர் நடிகை என்பதால் ஏற்படும் சந்தேகம் வலுத்து சண்டையாகி திரிஷா ஓடும் மாதவனின் ஹமரி வாகனத்திலையும் தொடர்ந்து, கொடைக்கானலில் ஒரு வளைவில், சின்ன கார் ஒன்றை அடிச்சு, காரில் இருந்தவர்களுக்கு என்ன நடந்தது என்றே தெரியாமல் ஓடிவந்து இறங்கி நின்று "பிரிவோம், காதல் இருந்தால் காத்திரு" என்று திரிஷா சொல்வதில் தொடங்குகிறது கதை. ஓய்வாக இருக்கவும், மாதவனுடனான காதலை மறுபரிசீலனை செய்யவும் திரிஷா வந்து சேரும் இடம் சங்கீதாவிடம். சமீபத்தில் விவாகரத்து செய்து கொண்ட சங்கீதா தன் மகளுடனும், மகனுடனும் திரிஷாவுடன் இணைந்து கப்பலில் பயணிக்கத் தொடங்குகிறார். இதில் கமல் என்ன செய்கிறார் என்றால், திரிஷாவை வேவு பார்க்க மாதவனால் அனுப்பப்படுகிறார். வந்த சில நாட்களிலேயே திரிஷாவைப் பற்றி நற்செய்தியறிக்கையை கமல் வாசித்துவிட, ஏற்கனவே ஒப்புக்கொண்ட சம்பளப்பணத்தை வழங்க மாதவன் மறுத்துவிடுகிறார். புற்று நோயால் அவதிப்படும் நண்பரின் மருத்துவ செலவுகளுக்காக இந்தப் பணியில் நிலைத்து நிற்கவேண்டிய நிலையில், திரிஷாவுக்கு பொய்யாக காதலன் ஒருவனை உருவாக்கி கதையைக் கொண்டு செல்கிறார் கமல். இதை நம்பிய மாதவனும், திரிஷா ஏற்படுத்திய விபத்திலேயே தன் காதல் மனைவி இறந்தாள் என்கிற உண்மை தெரிய வரும் கமலும், இறுதியில் உண்மை தெரிந்து கமலின் நண்பருக்காக் கமலுக்கு உதவக் கிளம்பிய சங்கீதாவும் எப்படியெல்லாம் கதையை இழுத்து சென்றார்கள் என்பதும், கடைசியில் யார் யாரோடு சேர்ந்தார்கள் என்பதுவுமே கதை. இறுதியில் சுபம் தான். என்ன ஜோடி மட்டும் மாறுகிறது, அவ்வளவுதான்.

படத்தில் மூன்று பாடல்கள் என்பது நினைவில் நிற்கிறது. ஒன்று ஆரம்பத்தில் திரிஷாவும் சூர்யாவும் ஆடும் பாடல். மற்றது "நீல வானம்" என்று ஒன்று, அடுத்ததாக "தகிடுதத்தம் செய் தகிடுதத்தம்" என்ற பாடல். கமலின் கவிதையான "கண்ணோடு கண்ணைக் கலந்தால்" என்று ஆரம்பிப்பதையும் பின் வரும் "கலவி செய்கையில் காதில் பேசினால்" என்பதையுமே படத்தின் பிளஸ்களில் ஒன்றாக சொல்லலாம். "கலவி செய்கையில்" என்றாரம்பிப்பதாலேயோ இல்லை அது இந்து மக்களின் நம்பிக்கைக்கு வேட்டு வைப்பதாக முடிவதாலேயோ என்னவோ இந்தியாவில் அந்தக் காட்சி திரையிடப்படுவதற்கு தடை பிறப்பிக்கப்பட்டதாய்க் கேள்வி. ஒரு பூங்காவில் கமலும் திரிஷாவும் நடந்து கொண்டே சொல்லிக் கொள்வதை போல அமைக்கப்பட்ட காட்சியில் எந்தவித "அநாகரிகங்களும்" நிகழ்ந்துவிடவில்லை என்பது என் எண்ணம். உண்மையில் கவிதை கொண்ட கருப்பொருளோ, அது கொண்ட வார்த்தைகளோ விமர்சனத்துக்குட்படுத்தப்பட வேண்டுமா எனபதே கேள்விக்குரியது. இதே கமலின் வசூல்ராஜா படத்தில் வரும் "சிரிச்சு சிரிச்சு வந்தா சீனா தான டேய்" என்ற பாடலில் வரும் வார்த்தைகளுக்கோ, இரட்டை அர்த்தங்களுக்கோ சற்றும் சமனில்லை இந்தக் கவிதை. அந்தப் பாடலையும், அதே வகையறாப் பாடல்களையும் பொது மேடைகளில், கூட்டம் போட்டு, நாலு நீதிபதிகள் வைத்து, குழந்தைகள் பாட அனுமதிக்கையில் இந்தக் கவிதை என்ன பாதிப்பை அதே குழந்தைகளிடம் கொண்டு சேர்க்கும் என்பதும் புரியவில்லை. ஆனால் என் முன்னே அமர்ந்திருந்த தம்பதிகள் இருவரும் தமக்கு நடுவே அமர்ந்திருந்த பெண் குழந்தையின் தலைக்கு மேலாய் தங்களுக்குள் பார்வைப் பரிமாற்றம் நிகழ்த்தியதைப் பார்க்க முடிந்தது.

ஆனால் எனக்கு ஒன்று மட்டும் புரியவேயில்லை. ஆரம்பக் காட்சியிலும், இறுதிக்காட்சியிலும் வரும் ஈழத் தமிழன் ஒருவரின் வசன அமைப்பு. பரீசில ஈழத்தமிழன் டாக்ஸி ஒட்டிறதில எந்த சந்தேகமும் இல்லை. அவர்ட கார்ல திரிஷா ஏறுவதிலும் எந்தப் பிரச்சினையும் இல்லை. அதை விட அவர் திரிஷாவின் பரம விசிறியாக இருப்பதிலும் எனக்கு எந்தக் குழப்பங்களும் இல்லை. ஒரு காட்சியில் ஈழத்தமிழர் தான் திரிஷாவின் "செருப்பாகக்" கூட நடிக்கத் தயாராக இருக்கிறதாக சொல்வார். இறுதிக் காட்சியில் "செருப்பாகக் கூட என்று தான் சொன்னேன், செருப்புடன் இல்லை" என்று சொல்வார். இடையில் அவரது மனைவி கடவுளிடம் தன் கணவருக்கு திரிஷாவுடன் நடிக்க வாய்ப்புக் கிடைக்கவேண்டும் என்று பிரார்த்திப்பதாகவும் ஒரு காட்சி. "இந்தக் காட்சிகளில் திரிஷாவுக்குப் பதில் அனுஷ்கா வந்திருந்தா இப்படி சொல்றதில சரி" என்று ஒரு ஈழத்தமிழ் அனுஷ்கா ரசிகன் சொன்னாலும் சொல்லலாம். குறித்த நடிகரின் படத்தை எதிர்க்க வெளிக்கிட்டு அவர்களுக்கு விளம்பரம் தேடிக்கொடுக்கும் வாய்ப்பை வழங்குபவர்கள் நாங்கள். அதைவிட, வெளியில் ஆயிரம் பேசிவிட்டு இரவோடு இரவா, முதல் காட்சியில் படத்தைக் களவாகப் பார்த்துவிட்டும் வருகிற சந்தர்ப்பவாதிகளும் இருக்கிறார்கள்.

ஆனால் கமலுக்கு ஈழத் தமிழர்களை தன் படத்தில் நடிக்கவைக்கும் போது சரி, தானே ஈழத் தமிழனாய் நடித்த (தெனாலி) படத்திலும் சரி, ஏன் கொஞ்சமாவது இயல்பாய் அவர்களைக் காட்ட முடிகிறதில்லை என்ற பாமரனுக்குக் கூடத் தோன்றும் சராசரிக் கேள்வி எழுவதைத் தடுக்க முடியவில்லை. தெனாலி படத்தைப் பார்த்து வயிறு குலுங்க சிரித்த போதும், பயந்தாங்கொள்ளியாய், ஈழத் தமிழின் சாயலில் தமிழில் ஏதோ ஒரு மொழியில் நடித்த அந்த கதாபாத்திரத்தையும், அந்தக் கதாபாத்திரம் அப்படி பயம் மிகுந்தவனாய் இருப்பதற்கு காரணமாகச் சொல்லப்படும் போரால் ஏற்பட்ட மனப் பாதிப்பு (அசட்டுத் தனமான காரணங்கள், பழிவாங்கல்கள் திரைப்படங்களில் நடக்கும் போது இதைக் கொஞ்சமாவது ஏற்கலாம்) என்பதையும் ஏற்க மறுத்து மனதுள் நெருடி வழிந்த விசனம் பின்னாட்களில் மறக்கடிக்கப்பட்டிருந்தது. இருந்தாலும் தெனாலியில் கமல் காட்டிய ஈழத் தமிழனுக்கும், இப்போது காட்டி இருக்கும் தமிழனுக்கும் அதிக வித்தியாங்கள் இல்லை. என்ன, இதில் அந்தக் கதா பாத்திரங்களில் ஈழத் தமிழர்கள் நடித்திருக்கிறார்கள், அவ்வளவே. எனது விசனம் எல்லாம், கமல் ஈழத்தமிழர்களை அதிசிறப்பாகக் காட்டத் தேவையில்லை. ஏன் காட்டவே தேவையில்லை. மன்மதன் அம்பு குறித்து வாசித்த பதிவுகளில் ஒன்று இப்படி சொல்லியது, "ஈழத்தமிழர்கள் ஏற்கனவே நொந்து போயிருக்கிறார்கள், அதில் கமல் இப்படி ஒரு காட்சியை வைத்து அவர்களை இன்னமும் காயப்படுத்தியிருக்கிறார்". போர் காயப்படுத்தியதைப் போலவோ, இல்லைப் பிரிவுகள் காயப்படுத்தியது போலவோ ஈழத் தமிழர்களை எதுவும் காயப்படுத்திவிடாது. இந்தியத் திரைகளில் ஓடும் படங்களில் இதுவரை வந்த ஒரு படம் கூட சொல்லாத அளவுக்கு வலிகளும், கொடூர அனுபவங்களும், சம்பவங்களும் எங்களுள்ளே புதைந்து கிடக்கின்றன. அவற்றில் ஒரு சம்பவத்தை திரைப்படமாக, திரைக்கதையின் கனத்துடன் தர மூன்று மணித்தியாலம் என்ன, மூன்று நிமிடங்கள் போதும். இதில் கமல் ஒன்றும் செய்து விடத்தேவையில்லை. ஒரு நடிகனாய், இயக்குனராய், கதாசிரியராய் ஆக ஒரு கலைஞனாய் கமலைப் பார்க்கும் போது அவருக்கு திரையுலகம் வழங்கும் இடத்தைத் தன் திறமையால் எட்டிப் பிடித்தவர். ரஜினி போல கை அசைவுகளில் கார் திறக்கும் காட்சிகளோ, சுருட்டை அந்தரத்தில் பறக்கவிட்டு பற்றவைக்கும் சாகசங்களோ வைத்து "படம்" காட்டி இந்த இடத்தை எட்டாமல், தன் வித்தியாச முயற்சிகளாலும் திரைக்கதை அமைப்பிலும், இயல்பாய் நடிப்பதாலும் (இப்படி பல காரணங்கள்) அடைந்தவர். அந்த வகையில் அவர் மீது ஈழத் தமிழர்கள் வைத்திருக்கும் மரியாதை இப்படியெல்லாம் சாணி பூசப்பட்டு கேவலப்படுத்தப்படுகிறது என்பது வருத்தத்துக்குரியதே.


பொதுவாக சினிமாப்படங்கள் குறித்து எந்தவித கருத்துக்களையும், பதிவுகளையும் எழுதுவதில் எனக்கு ஆர்வம் இருந்ததில்லை. "அங்காடித் தெரு" படம் பார்த்துவிட்டு கண்ணீர் தாளை நனைக்க எழுதிய குறிப்புத்தான் நினைவில் நிற்கிறது. அந்தப் படம் ஒவ்வொரு விருதுகளையும் பெறுவதைப் பார்க்கும் போது கலைஞர்களின் திறமைகளுக்கு மரியாதையை எழுத்தில் செய்வதிலும் ஒரு சந்தோசம் இருக்கவே செய்கிறது கூடவே ஒரு திருப்தியும். ஏன் இந்தப் படத்துக்கு மட்டும் இப்படி ஒரு பதிவு என்றால், இந்தப் படம் குறித்த எதிர்பார்ப்பு கமல் படமென்பதாலா என்றால், ஆமாம் என்பதும் பதிலாக அமையும். ஏனென்றால் இன்னொரு "மகாநதியை" ரஜினியிடமோ விஜயிடமோ ஏன் கமலிடமே எதிர்பார்க்க முடியாது. ஆனால் இப்படியான சில முயற்சிகளை கமலிடம் எதிர்பார்ப்பதில் நான் எந்தத் தப்பும் செய்துவிடவில்லை. சமீபத்தில் வந்த, வந்துகொண்டிருக்கின்ற சிறு பட்ஜெட் படங்கள் அந்த இயக்குனர்கள் மீது ஏற்படுத்திப் போகும் எதிர்பார்ப்புக்கள் குறிப்பிடத்தக்கவை. இப்படி இருக்க திரைத்துறையில் எதிர்பார்ப்புக்களை எகிறவைக்கும் கமலிடமிருந்து இப்படி ஒன்று என்பதை கொஞ்சம் கசப்பாக இருந்தாலும் நம்ப வேண்டி இருக்கிறது.

இராவணன் பார்த்துவிட்டு வந்து மணிரத்தினம் இப்படி ஒரு படம் பண்ணத் தேவையில்லை. இதை செய்ய நிறைய பேர் இருக்கிறார்கள் என்று எப்படித் தோன்றியதோ, எந்திரன் பார்த்துவிட்டு சிலநாட்களில் "DVD" யில் மைனா பார்க்கும் போது அந்த நூற்றைம்பது கோடியையும் பிரிச்சுக் கொடுங்கப்பா இப்படி ஐந்து படமாவது வரட்டும் என்று எப்படி வாய்விட்டு சொல்லத் தோன்றியதோ அப்படியே இந்தப் படம் பார்த்து விட்டு வெளி வரும்போது கமல் ஒரு நாடகம் போட இவ்வளவு செலவளித்திருக்கத் தேவையில்லை என்று தோன்றியது. பம்மல் கே சம்பந்தம், பஞ்ச தந்திரம் வரிசையில் இன்னொரு மன்மதன் அன்பு. படம் பார்க்கும் போது பாடசாலை நினைவு வந்தது. உயர்தரத்தில் விஞ்ஞான தினத்தில் ஒரு நாடகம் போட்டோம். அதில் இப்போதிருக்கும் தொலைக்காட்ச்சி, தொலைபேசி, அணுகுண்டு போன்றவற்றைக் கண்டுபிடித்த இயற்கை எய்திய விஞ்ஞானிகள் சிவாஜியுடன் சேர்ந்து பூலோகத்துக்கு வருகிறார்கள் தங்கள் கண்டுபிடிப்புக்கள் எப்படியெல்லாம் உபயோகிக்கப்படுகிறது என்று தெரிந்துகொள்ள. வந்த இடத்தில் தங்கள் கண்டுபிடிப்புக்கள் நன்மைகளுக்கு மேலாகவே தீமைகள் செய்கின்றன என்ற மனவருத்தத்தில் மீண்டும் பரலோகத்துக்கே திருப்பி போவார்கள். இதில் சிவாஜியை நடுவராக, வழி காட்டுபவராக படைத்திருந்தோம். காட்சி இறுதியில் சிவாஜியிடம் ஒரு போலீஸ்காரர் "சீக்கிரம் வாங்கோ, பத்மினி வந்திருக்கிறா(பத்மினி அந்தக் காலப்பகுதியில் மறைந்திருந்தார்), உங்களை நலம்தானா கேட்கிறா" என்பது போன்ற உரையாடலை நிகழ்த்துவதாக யோசித்துவிட்டு, பாடசாலையில் நடிகர்களைப்பற்றிய உரையாடலே தப்பு, இதில் பத்மினி வேறா என்று அதை வேறாக மாற்றி அமைத்தோம். இந்த மேடை நாடகத்திற்கும் உங்கள் படத்துக்கும் ஒரு வித்தியாசத்தையும் நான் பார்க்கவில்லை கமல். ஒரு பெரிய கப்பல் செட்டும், பத்து நடிகர்களும் இருந்திருந்தால் அரங்கம் நிரம்ப நிரம்ப ஒரு நாளில் பத்து ஷோ காட்டியிருக்கலாம். என்ன நாங்களாக இருந்தால் ஈழத்தமிழரின் காட்சியை நீக்கியிருப்போம் இல்லை அதை மறுபரிசீலனை செய்து மாற்றியிருப்போம். நீங்கள் அந்தக் கவிதைக் காட்சியில் உங்கள் தயாரிப்பென்றால் அந்தக் காட்சி இடம்பெறும் என்று உங்களை சமாதானம் செய்து கொள்ளவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறீர்கள். என்ன இருந்தாலும் டீல் டீல் தானே!
By the way, Can I have my money back? 
- மாயூ மனோ

Saturday, December 25, 2010

பதராகிப்போன “நெல்லு”



அந்த ஜனங்களை தொட்டால் தீட்டு... பார்த்தால் பாவம்... ஆண்டைகளின் தெருக்களில் தோளில் துண்டணியக்கூடாது... காலில் செருப்பு போட்டுக்கொண்டு நடக்கக்கூடாது. இதுதான் அவர்களுக்கு விதிக்கப்பட்டது. இதை... இந்த மனு(அ)தர்மத்தை மீறினால்... சவுக்கடியும்
சாணிப்பாலும்தான் பரிசாகக் கிடைக்கும்.

Sunday, December 19, 2010

ஈசன்


எதையோ ஒன்றை
எதிர்பார்த்து
இருக்கைகளுக்குள் மாட்டிக்கொள்வதே
வேலையாய்ப் போய்விட்டது!
தேவை ”நேரக் காப்பீடு”
(கம்பெனிகள் கவனிக்க !)

Tuesday, November 30, 2010

நந்தலாலா காட்டும் இருவேறு தாய்கள் ...




காலங்காலமாக நமது சமூகம் பெண்களுக்கென்று சில நியாய தர்மங்களை வகுத்து வைத்திருக்கிறது. அது நியாயமானதுதானா,  தர்மம்தானா என்பதெல்லாம் விவாதத்திற்குட்படுத்தப்பட வேண்டியவை. அந்த விவாதக்குரல் ரொம்பவும் பலகீனமாக ஒருபக்கம் ஒலித்துக்கொண்டேயிருந்தாலும்,  அந்த நியாய தர்மங்களை வலுப்படுத்தும் குரல் பலமாகவும்ம் நுட்பமாகவும்,  தீவிரமாகவும் பல்வேறு கலைவடிவங்கள் மூலமாக திரும்பத் திரும்ப வலியுறுத்தப்பட்டுக்கொண்டே இருக்கிறது.

Labels

Coca Cola (1) Peak Oil (1) Permaculture (1) Power of Community (1) Renewable energy (1) Solar energy (1) SOPA (1) sustainable agriculture (1) அ.குமரேசன் (6) அங்காடிதெரு (1) அணு ஆற்றல் (2) அணுமின் (1) அண்ணா (4) அண்ணா நூலகம் (1) அதிர்ச்சி (1) அத்வானி (2) அந்நிய முதலீடு (2) அபிநயா (1) அப்துல் கலாம் (1) அப்பணசாமி (2) அமெரிக்கா (20) அம்பானி (1) அம்பேத்கர் (9) அரசியல் (177) அரசியல்.நிகழ்வுகள் (6) அரசு (14) அரசு மருத்துவமனை (1) அரசு விடுதி மாணவர்கள் (1) அரவான் (1) அருந்ததியர் (1) அர்ஜெண்டினா (1) அலசல் (1) அவலம் (19) அழகு (1) அறிமுகம் (1) அனுபவம் (28) அன்னா ஹசாரே (1) அஜயன் பாலா (1) ஆ.ராசா (1) ஆணையம் (2) ஆதவன் தீட்சண்யா (3) ஆப்கானிஸ்தான் (1) ஆப்பிரிக்கா (2) ஆர்.மீனா (1) ஆர்எஸ்எஸ் (2) ஆவணப்படம் (3) ஆனந்தன் (2) இ.எம்.ஜோசப் (1) இ.பா.சிந்தன் (22) இட ஓதுக்கீடு (3) இடஒதுக்கீடு (1) இடதுசாரிகள் (4) இணையம் (2) இதழ்கள் (6) இந்தியா (69) இந்துத்துவா (8) இந்துஜா (1) இமு (2) இமு டிச11 (5) இமு நவமபர் 2011 (6) இயக்கம் (7) இயக்குனர் ஷங்கர் (1) இரா.சிந்தன் (5) இரா.செழியன் (2) இரா.நடராஜன் (3) இராம.கோபாலன் (1) இல.சண்முகசுந்தரம் (2) இலக்கியம் (38) இலங்கை (6) இலங்கைத் தமிழர் (4) இலவசக் கல்வி (1) இலவசங்கள் (1) இளவரசன் கொலை (1) இளைஞர் முழக்கம் (11) இஷ்ரத் (2) இஸ்ரேல் ஆக்கிரமிப்பு (1) இஸ்லாம் (3) ஈராக் (1) ஈரான் (2) உ.வாசுகி (1) உச்ச நீதிமன்றம் (1) உணவு நெருக்கடி (2) உதயசங்கர் (1) உத்தப்புரம் (1) உயர்கல்வி (2) உரையாடல்கள் (2) உலக சினிமா (4) உலகமயம் (5) உலகம் (46) உளவியல் (1) உள்ளாட்சி (1) உள்ளாட்சித் தேர்தல் (1) ஊடகங்கள் (14) ஊடகம் (8) ஊழல் (30) எடியூரப்பா (1) எம்.எப்.ஹூசேன் (1) எம்.சிவக்குமார் (2) எரிசக்தி (1) எல்.கே.ஜி (1) என்.ஜி.ஓ (1) என்கவுண்டர் (1) எஸ். பாலா (1) எஸ்.கண்ணன் (1) எஸ்.கருணா (3) எஸ்.பி.ராஜேந்திரன் (3) எஸ்.வி.வேணுகோபாலன் (2) ஏகாதிபத்தியம் (13) ஏமன் (1) ஒபாமா (4) ஓம்பிரகாஷ் வால்மீகி (1) ஓளிப்பதிவு (1) ஃபாக்ஸ்கான் (1) கச்சத் தீவு (1) கட்டுரை (51) கட்டுரைகள் (2) கணிணி (2) கணினி தொழில் நுட்பம் (1) கமல்ஹாசன் (1) கம்யூனிசம் (12) கருணாநிதி (11) கருத்து சுதந்திரம் (1) கருத்துரிமை (3) கலைஞர் (6) கல்வி (14) கவிதை (21) கவிதைகள் (1) கறுப்புப்பணம் (3) கனிமொழி (2) காங்கிரஸ் (10) காதல் (2) கால்பந்து (1) காவல்துறை (4) காஷ்மீர் (1) கி.பார்த்திபராஜா (1) கிங்பிஷர் (1) கியூபா (4) கிரீஸ் (1) குடும்பம் (1) குட்டி ரேவதி (1) குப்பன் சுப்பன் (1) குலாத்தி (1) குழந்தைகள் (9) குழந்தைகள் கடத்தல் (1) குஜராத் கலவரம் (1) குஜராத் படுகொலைகள் (1) கூகிள் அந்தரங்கம் (1) கூடங்குளம் (2) கே.சாமுவேல்ராஜ் (1) கே.பாலமுருகன் (1) கேள்விகள் (1) கைப்பற்றுவோம் போராட்டம் (1) கோவில் (1) ச.தமிழ்ச்செல்வன் (1) ச.மாடசாமி (1) சக்திஜோதி (1) சங்கமம் (1) சசிகலா (1) சச்சின் (1) சட்டசபை (2) சட்டம் (4) சத்யஜித் ரே (1) சந்திரகாந்தன் (1) சமச்சீர் கல்வி (4) சமவூதியம் (1) சமூக நீதி (2) சமூக வலைத்தளம் (1) சமூகப் பாதுகாப்பு (2) சமூகம் (177) சம்பு (1) சரத் பவார் (1) சர்வதேச பெண்கள் தினம் (1) சல்மான் ருஷ்டி (1) சா.கந்தசாமி (2) சா.செயக்குமார் (1) சாகித்திய அகாதமி விருது (1) சாக்லேட் (1) சாதீயம் (4) சாரா விஜி (2) சாலிம் அலி (1) சி.பி.எம் (9) சிக்கிம் (1) சிந்தனை (5) சிபி (1) சிராஜுதீன் (1) சில்லரை வர்த்தகம் (4) சிறப்பு பொருளாதார மண்டலங்கள் (1) சிறுகதை (12) சினிமா (52) சினிமா செய்திகள் (4) சினிமாச் செய்திகள் (4) சீத்தாராம் யெச்சூரி (2) சு.பொ.அகத்தியலிங்கம் (2) சு.வெங்கடேசன் (1) சுகாதாரம் (1) சுதிர் ரா (1) சுயமரியாதைத் திருமணம் (1) சுவாரசியம் (1) சுற்றுப்புறச் சூழல் (3) சூர்யா (1) செம்மலர் (4) செம்மலர் அக் 2011 (4) செய்திகள் (112) சென்னை (1) சோவியத் (1) சோஷலிசம் (1) டெல்லி (2) டேம் 999 (1) த.தமிழரசி (1) தகவல் உரிமை (1) தகவல் திருட்டு (2) தண்ணீர் (3) தமிழக மீனவர்கள் (1) தமிழகம் (66) தமிழர் (1) தமிழ்ச் சினிமா (1) தமிழ்நதி (1) தமுஎகச (4) தலித் (21) தற்கொலை (1) தனியார்மயம் (4) தனுஷ் (1) தி.க (2) திமுக (1) திரிணாமுல் (1) திருப்பூர் (2) திருமணம் (2) திரைக்குப் பின்னால் (2) திரைத்துறை (1) திரைப்பட விழா (1) திரைப்படம் (4) தினகரன் (1) தினமணி (3) தீக்கதிர் (9) தீண்டாமை (22) தீண்டாமையின் அடையாளங்கள் (1) தீபாவளி (1) தேசியச் செய்திகள் (4) தேர்தல் (4) தொண்டு நிறுவனங்கள் (1) தொலைக்காட்சி (2) தொழிலாளர் (6) ந.பெரியசாமி (1) நகர்ப்புற விவசாயம் (1) நகைச்சுவை (1) நக்கீரன் (1) நதிம் சயித் (1) நந்தலாலா (1) நந்தன் (1) நரேந்திர மோடி (6) நலத்திட்டங்கள் (2) நவம்பர் புரட்சி (1) நாடகம் (1) நாடாளுமன்றத் தேர்தல் 2014 (2) நாணய மதிப்பு (1) நாறும்பூநாதன் (1) நிகழ்வுகள் (154) நிலப்பிரபுத்துவம் (1) நிலமோசடி (1) நீதித்துறை (2) நீலவேந்தன் (2) நுகர்வுக் கலாச்சாரம் (2) நூல் அறிமுகம் (12) நூல் வெளியீடுகள் (1) நெல்சன் மண்டேலா (1) நேட்டோ (2) நையாண்டி (26) நையாண்டி் (14) ப.சிதம்பரம் (3) பசுபதி (1) படுகொலை (3) படைப்புகள் (2) பட்ஜெட் (1) பணவீக்கம் (2) பதிவர் வட்டம் (3) பதிவர்வட்டம் (1) பதிவுலகம் (1) பரிந்துரைகள் (5) பழங்குடி (1) பள்ளிக்கூடம் (1) பறவைகள் (1) பன்னாட்டுக் கம்பெனிகள் (3) பா.ஜ.க (3) பாகிஸ்தான் (2) பாடல் (5) பாதல் சர்க்கார் (1) பாதுகாப்பு (1) பாரதி (2) பாலபாரதி (1) பாலஸ்தீனம் (1) பாலியல் வன்முறை (6) பாலு மகேந்திரா (1) பால் சமத்துவம் (1) பாஜக (1) பி.சுகந்தி (1) பி.ராமமூர்த்தி (1) பிடல் காஸ்ட்ரோ (3) பிரணாப் முகர்ஜி (1) பிரபாத் பட்நாயக் (3) பிரளயன் (2) பிரிட்டன் (1) பிர்தவ்ஸ் ராஜகுமாரன் (1) பிளின் (1) பு.பெ.நவமபர் 2011 (1) புகைப்படங்கள் (1) புதிய பரிதி (2) புது விசை (12) புதுமை (1) புத்தக அறிமுகம் (2) புத்தகக் கண்காட்சிகள் (2) புத்தகம் (18) புத்தகம் பேசுது (17) புத்தகம் பேசுது நவம்பர் 2011 (8) புத்தகாலயம் (2) புத்தாண்டு (1) புபே (2) புபே டிச11 (8) புரட்சி (2) புவி (1) புவி டிச11 (5) புவி நவ 2011 (7) புனைவு (1) புஷ் (1) பெட்ரோல் (7) பெண் (11) பெண் விடுதலை (1) பெண்குழந்தை (1) பெண்ணியம் (9) பெண்ணெழுத்து (1) பெரியார் (2) பெருமுதலாளிகள் (7) பேட்டி (2) பேரா.சிவசுப்பிரமணியன் (2) பேஸ்புக் (1) பொருளாதார நெருக்கடி (2) பொருளாதாரம் (24) போக்குவரத்து (1) போராட்டம் (15) போலீஸ் தாக்குதல் (3) ப்ரிசம் (4) ப்ரிசம் - தகவல் திருட்டு (7) ப்ரியா தம்பி (1) மக்களுக்கான மருத்துவம் (1) மக்கள் நலப்பணியாளர்கள் (2) மக்கானா (1) மத அடிப்படை வாதம் (1) மதவெறி (3) மதுசூதனன் (1) மம்தா (3) மம்முட்டி (1) மரபணு (1) மலாலாய் சோயா (1) மவோயிஸ்டுகள் (1) மன்மதன் அம்பு (1) மன்மோகன்சிங் (10) மா ற்று (1) மாட்டுக்கறி (1) மாதர் சங்கம் (1) மாதவராஜ் (2) மாவோ (1) மாற்ற (1) மாற்று (223) மின்கட்டணம் (1) மின்சாரம் (1) மீள்பார்வை (2) முதலாளி (1) முதலாளித்துவம் (11) முத்தமாக மாறேன் (1) முத்துக்கண்ணன் (1) முல்லைப் பெரியாறு (7) முறைகேடுகள் (5) மெகாசீரியல் (1) மே.வங்க அரசு (1) மே.வங்கம் (1) மேதினம் (1) மேற்கு வங்கம் (1) மொக்கை (1) மொழி (2) மொழிபெயர்ப்பு (1) மோசடி (1) மோடி (3) மோனிகா (1) யுத்தம் (2) ரத யாத்திரை (1) ரமேஷ் பாபு (2) ராகுல் காந்தி (2) ராடியா (2) ராஜ பக்‌ஷே (1) ரிலையன்ஸ் (1) ருமேனியா (1) லட்சுமணப்பெருமாள் (2) லெனின் (2) லோக்பால் (5) வசந்த பாலன் (1) வண்ணக்கதிர் (1) வரலாறு (19) வலைப்பூக்கள் (1) வழக்கு விசாரணை (1) வாசிப்பு (5) வாச்சாத்தி (1) வால் ஸ்டிரிட் (3) வால்மார்ட் (1) வால்ஸ்டிரிட் போராட்டம் (2) வாழ்க்கை (4) வானியல் (2) விக்கிபீடியா (1) விக்கிலீகஸ் (1) விக்கிலீக்ஸ் (7) விஞ்ஞானம் (2) விமர்சனம் (10) விலையேற்றம் (2) விலைவாசி (11) விலைவாசி உயர்வு (2) விவாதங்கள் (1) விவாதம் (9) விளம்பரம் (1) விளையாட்டு (4) வினவு (1) விஜய் (2) விஜய் மல்லையா (1) வீட்டுவசதி வாரியம் (1) வீரமணி (2) வெண்மணி (2) வெள்ளம் (2) வெனிசுவெல்லா (1) வேலையின்மை (2) வோடாபோன் (1) ஜப்பான் நெருக்கடி (2) ஜாக்கிசான் (1) ஜாதி (1) ஜாபர் பனாகி (1) ஜூலியன் அசாங்க (1) ஜெயலலிதா (9) ஜோதிடம் (1) ஸ்டீவ் ஜாப்ஸ் (1) ஸ்பீல்பர்க் (2) ஸ்பெக்ட்ரம் (6)