Showing posts with label இரா.நடராஜன். Show all posts
Showing posts with label இரா.நடராஜன். Show all posts

Saturday, December 10, 2011

இந்திய அறிவியல் = ராமன் விளைவு?


ஒரு விதத்தில் இந்திய அறிவியல் என்பதே ராமன் விளைவாக இருக்குமோ என சொல்லுமளவு சி.வி. ராமனின் ஆளுமையும் ஈகோவும் புகுந்து விளையாடி இருப்பதை சமீபத்திய இரண்டு இந்திய அறிவியல் நூல்கள் நமக்குத் தம்மையும் அறியாமல் முன்வைக்கின்றன. இந்திய அறிவியல் நூல்களை வாசிக்க நமக்கு ஏகத்திற்கு பொறுமை வேண்டும். அது பற்றி பிறகு பார்ப்போம். இந்தியாவில் அறிவியலின் வரலாறு (A conscise history of science of India), யுனிவர் சிட்டி பிரஸ் வெளியீடு வெகுஜன அறிவியல் வெளியீடு (Popular science) விஞ்ஞானி பி.வி.சுப்பராயப்பா, டி.எம்.போஸ் மற்றும் எஸ்.என். சென் ஆகியோர் இணைந்து எழுதி இருக்கிறார்கள் என அட்டையில் இருந்தாலும் உள்ளே பெரும்பாலும் அது பி.வி. சுப்பராயப்பாவின் எழுத்து வடிவிலேயே புனையப்பட்டுள்ளது.

அடிப்படையான இந்திய அறிவியலின் சரித்திரம் அறிய இந்த நூலைப் பரிந்துரைப்பேன். பிரிட்டிஷ் ஆட்சி இந்திய விஞ்ஞானிகளை ஒடுக்கிடச் செய்த பல சதிகள் தகுடிதித்தங்களை புத்தகம் (மறைமுகமாக) சுட்டுகிறது. ஏற்கெனவே இந்திய அறிவியல் குறித்த ஜகதித் சிங்கின் யெமினென்ட் இந்தியன் சைன்டிஸ்ட்ஸ் (Eminent of indian scientists) பார்த்தசாரதியின் கிளிம்சஸ் ஆஃப் இண்டியாஸ் ஸ்டாடிஸ்டிக்கல் ஹெரிட்டேஜ் (Glimps of Indian Statistical heritage) ஆகிய புத்தகங்களையும் ஜி.வெங்கடராமன் எழுதிய இந்திய அறிவியல் குறித்த ஆறு புத்தக வரிசை (யுனிவர்சிட்டி பிரஸ் வெளியீடு)யையும் நான் அவ்வப்போது கிடைத்த சந்தர்ப்பங்களில் வாசித்திருக்கிறேன். அதிலும் ... நாலு பெட்டிச் செய்திகளுடன் வெங்கட்ராமன் எழுதிச் சென்ற வழி தனிவழி.

இந்திய அறிவியலைப் பற்றி பேசுபவர்கள், நமது பாரம்பரியமாக ஆகிப்போன ஆயுர்வேதம் முதல் சித்தர் மருத்துவம், திப்புசுல்தானின் நேனோ வாள் என்பதிலிருந்து தொடங்குகிறார்கள். சிந்து சமவெளி ராஜராஜசோழன் வள்ளுவரில் மருத்துவம் இதெல்லாம் பி.எச்.டி.யில் இன்று வெளுத்து வாங்கும் தலைப்புகள் என்றாலும் (அவை வேண்டாம் என்று சொல்லவில்லை) நவீன அறிவியலின் இந்திய எழுச்சியைத் தொடங்கி வைத்தவர் மஹேந்திரலால் சர்க்கார்.

1889ல் அறிவியல் திறன் வளர்ச்சிக்கான இந்திய மன்றம் எனும் அர்த்தத்தில் இன்டியன் அசோசியேஷன் ஃபார் கல்டிவேட்டிங் சயின்ஸ் (Indian Association for cultivating Science) எனும் அமைப்பை கல்கத்தாவில் ஏற்படுத்தினார். எம்.டி. (முதுகலை மருத்துவம்) படித்தவர். கல்கத்தாவின் மாகாண கவுன்சிலில் மக்கள் பிரதிநிதியாய் இருந்தவர். சிறந்த தேசபக்தர். அமைப்பை அவர் எவ்வளவோ முயன்றும் ஆங்கிலேய அரசு பதிவுசெய்ய விடவில்லை. பதிவு பெறாத அறிவியல் அமைப்புகளால் எவ்வளவு முயன்றாலும் சர்வதேச அறிவியல் மன்றங்களான லண்டன் ராயல் கல்வியகம் போன்றவற்றோடு ஒன்றிணைந்து செயல்பட முடியாது.

இந்தியாவிலிருந்து அறிவியல் ஆய்வுகள் செய்ய வசதியான வீட்டுப்பிள்ளைகள் கேம்பிரிட்ஜ், ஆக்ஸ்போர்டு என கப்பல் ஏறிய அந்தநாட்களில் நமது நாட்டின் முதல் ஆய்வுக் கூடத்தை மஹேந்திரலால் சர்க்கார் மிகவும் கடினப்பட்டு 1891ல் அறிவியல் மன்ற அலுவலகத்தில் கட்டமைத்தார். வெள்ளைக்கார அரசாங்கம் அந்த இடத்தை கிட்டத்தட்ட மாதம் இருமுறை ரெய்டு விட்டபடி இருந்த அந்த கடினமான காலங்களில் அறிவியல் விழிப்புணர்வுக் கூட்டங்கள் அங்கே நடத்தப்பட்டன. இளைஞர்கள் ஒரு நாள் கட்டாயம் இந்த ஆய்வுக் கூடத்தில் இந்திய அறிவியலின் மைல்கற்களை நடுவார்கள் எனும் ஆழ்ந்த நம்பிக்கையை மட்டும் தவற விடாமல் சர்க்கார் விரைவில் காலமானார். சர்க்கார் கட்டிய அறிவியல் ஆய்வகத்திற்கு தாராள நிதி உதவி அளித்தவர் விழியநகர மகாராஜா என்று குறிப்பிடுகிறார் பி.வி.சுப்பராயப்பா. இந்த விஷயம் ஆங்கிலேயர்களின் உளவுத்துறை லெட்ஜர்களில் உள்ளது.

1907ல் அறிவியல் மன்றத்தின் துயரமான மழை ஞாயிறு ஒன்றின் மதியம் ஆஷூ பாபு என்பவரும் சர்க்கார் மகன் அம்ரித்லால் சர்க்காரும் இருந்த ஒன்றிரண்டு புத்தகங்களை வாசித்தபடி வாசல் கதவு தட்டப்படுவதைக் கேட்டனர். என் பெயர் ராமன்.. நான் உங்க ஜில்லாவின் அக்கவுண்ட் ஜெனரல் என்று சொல்லியபடி நின்றார் அந்த இளைஞர். ஆரம்பித்தது இந்திய அறிவியலின் உண்மையான அத்தியாயம். கிட்டத்தட்ட கலெக்டர் பதவி வகித்த ராமன் தனது அறிவியல் கல்வி ஆர்வத்தை புதைத்துவிட்டு தன் தந்தையின் நச்சரிப்புத் தாங்காமல் எஃப்.சி. எஸ். தேர்வு எழுத இந்தியாவிலேயே முதலிடம் பெற்று அப்போதுதான் பணி நியமனம் பெற்றிருந்தார். அப்பாவுக்காக அரசுப் பணி, தனக்காக அறிவியல் என பிடிவாதமாக ராமன் செயல்படத் தொடங்கினார். ஆரம்பத்தில் ஜில்லாவின் உயர் மட்ட அதிகாரியான அவர் மீது அரசுக்கு சந்தேகம் வரவில்லை. ஆனால் 1908ல் லண்டன் ராயல் கல்வியகத்தின் பிரதான அறிவியல் சஞ்சிகையில் ராமனும், ஆஷூபாபுவும் சேர்ந்து எழுதிய அறிவியல் ஆய்வுக் கட்டுரை ஒன்று வெளிவந்து அவரை காட்டிக் கொடுத்துவிட்டது. பிரிட்டிஷ் அரசு முதலில் ராமனை ரங்கூனுக்கும் பிறகு நாக்பூருக்கும் பந்தாடியது. 1917வரை அவர் பலமுறை பல ஊர்களுக்கு தூக்கி எறியப்பட்டார். இந்திய அறிவியலின் உலகளாவிய முகவரியை சிதைக்க வெள்ளையர்கள் மேலும் பலவித சூழ்ச்சிகளில் ஈடுபட்டதையும் பார்க்க முடிகிறது. ஜெகதீஷ் சந்திரபோஸின் வானலைகள் குறித்த கண்டுபிடிப்பை மார்கோணி ‘சுட்டதும்‘ சத்யேந்திரநாத்போஸ் டாக்கா பல்கலைகழகத்தில் மற்ற (வெள்ளை) பேராசிரியர்களைவிட 70 சதவீத குறைவான சம்பளத்தில் மனஉளைச்சலுக்கு ஆளாக்கப்பட்டதும் பதிவு பெறாத அவலங்கள். இவை எதேச்சையாக நடந்த சம்பவங்கள் அல்ல.

முடிவாக ஜில்லா கணக்காயர் வேலையை விட்ட ராமன் கல்கத்தா அறிவியல் கல்லூரியில் அஸ்தோஷ் முகர்ஜி மூலம் விரிவுரையாளர் ஆனார். சம்பளம் கணக்காயர் வேலையைவிட பாதி மடங்கு குறைவு என்றாலும் அதை அவர் பெற்றார். எப்படியாவது இந்தியர்களின் பங்களிப்பை அறிவியலில் பதிவு செய்யும் மஹேந்திரலால் சர்க்காரின் கனவு ராமனின் அறிவியல் மன்ற ஆய்வுக்கூட வேலைகளைத் தொடரவைத்தது என்றே சொல்ல வேண்டும்.

  • நோபல் பரிசு கிடைத்ததை அறிவிக்கும் நோபல் கமிட்டியின் தந்தி ராமனுக்குப் போய் சேராமல் இரண்டு நாட்களுக்கு வைஸ்ராய் நிறுத்தி வைத்திருக்கிறார். தனது அயல்நாட்டு சகாக்கள் மூலம் ராமன் தனக்குப் பரிசு கிடைத்ததை அறிகிறார்.

  • நோபல் பரிசை (தாகூர் போலவே) நேரில் பெற வேண்டாம் என முதலில் வெள்ளை அரசு ஆலோசனை வழங்குகிறது. பிறகு நோபல் ஏற்புரை வழங்க ராமனுக்குத் தடை விதிக்கிறது.

ஆனால் தடையை மீறி பரிசைப் பெற்றுக் கொள்ளும்போது ராமன் பேச அனுமதி கேட்டு, பரிசை இந்தியச் சிறையில் வாடும் ஆய¤ரக்கணக்கான சுதந்திரப் போர் வீரர்களுக்கு சமர்ப்பிக்கிறேன் என முழங்கியதை வாசிக்கும்போது நமது ரத்த நாளங்கள் சூடேறி கண்கள் பூத்துப்போகின்றன. ராமன் நோபல் பெறுவதை படம் பிடித்து அதை யாருமே சேமிக்கவில்லை.

சமீபத்தில் வெளிவந்துள்ள மற்றொரு குறிப்பிடத்தக்க அறிவியல் நூலான கரியமாணிக்கம் ஸ்ரீநிவாச கிருஷ்ணன் ஹிஸ் லைப்ஃஅண்டு ஒர்க், (kariamanikkam srinivasa krishanan in his life and work), பெங்களூர் இந்திய அறிவியல் கழகத்தின் வானியல் பேராசிரியர்கள் டி.சி.வி. மாலிக்கும், எஸ்.சாட்டர்ஜியும் சேர்ந்து எழுதிய நூல். விருதுநகரில் வார்தாவில் பிறந்த கே.எஸ். கிருஷ்ணன், ராமனோடு இணைந்து அறி­வியலில் பெரிய அளவு பங்காற்றி மிகச்சிறிய அளவே பாராட்டுப் பெற்ற துரோக வரலாற்றின் பதிவு. கே.எஸ். கிருஷ்ணன் ராமன் விளைவைக் கண்டு பிடித்த இருவரில் ஒருவர் என்றாலும் ராமன் விளைவு என்றே அது பெயர் பெற்றதும் ராமனுக்கே நோபல் கிடைத்ததும் அதை அங்கீகரித்தபடி கே.எஸ்.கே. தனது அடுத்த அறிவியல் பங்களிப்புகளுக்குத் தாவியதையும் அதன் பின்னணிகளையும் இந்த புத்தகம் சொல்லிச் சென்றாலும் ராமனுக்கு அவமதிப்பு செய்து விடக்கூடாதே என்று ரொம்ப அடக்கி வாசித்திருக்கிறார். கே.எஸ். கிருஷ்ணனைப் பற்றி எழுதப்பட்டுள்ள ஒரே புத்தகம் இதுதான். கே.எஸ்.கே. ஒரு விஞ்ஞானி என்பதற்கும் மேல் கல்கத்தா. பெங்களூரூ என வாழ்ந்தும் தமிழ் இலக்கியத்தின் பால் ஆழ்ந்த ஈடுபாடும் பற்றும் கொண்டு திருக்குறளை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்ததை வாசிக்கும்போது ஆச்சரியமாய் இருக்கிறது.

இரு புத்தகங்களுமே இந்திய அறிவியல் பற்றிய பொதுவான என் பல சந்தேகங்களைத் தீர்த்து வைப்பவையாக உள்ளன.

  • 1934ல் (இயற்பியலை விடுத்து) பொறியியல்துறையில் முதல் பி.எச்.டி. முடித்த இந்தியரான ஹோமிஜகாங்கீர் பாபா, ஜெர்மனியில் காஸ்மிக்அலை கண்டுபிடிப்பின் மூலம் பிரபலமடைந்தார். பிறகு மேசான் துகள்களையும் ஜெர்மனியிலிருந்தபடியே கண்டுபிடித்தார். உலகப் பிரசித்தி பெற்றார். பின் இந்தியாவிற்கு ஏன் வந்தார் என எனக்கு விளங்காமல் இருந்தது. அது ‘ராமன் விளைவு‘! விடுமுறையில் மும்பை வந்த பாபாவை 1938ல் ராமன் சந்தித்து, தனது பெங்களூர் கல்வியகத்திற்கு ‘உலக யுத்தத்தை காரணம் காட்டி’ இணைத்தார்.

  • அறிவியல் உலகமே ஐரோப்பாவைக் குறிவைத்து நகர்ந்தபோது இந்தியாவை விட்டுச்செல்ல மறுத்து பல்வேறு இந்திய இளைஞர்களை இந்திய மண்ணிலேயே ஆய்வுகள் நடத்த ராமன் நிர்பந்தித்ததும் தொடர்ந்தது. பிரிட்டிஷ் அரசு ஹர்கோவிந்த் கொரானா, சுப்பிரமணிய சந்திரசேகர் என்பவரை இங்கிலாந்திற்கு இந்திய அரசு உதவித் தொகை (Govt of india fellowship) என்ற பெயரில் அனுப்பி¤யது. ஹர்கோவிந்த கொரானாவைப் போக வேண்டாமென்று ராமன் நேரில் சந்தித்துப் பேசி இருக்கிறார். ராமன் விளைவு எடுபடவில்லை.

  • அடுத்தது விக்ரம் சாராபாய். இங்கிலாந்திற்கு வெள்ளை அரசின் பெல்லோஷிப் பெற்று அங்கேயே செட்டிலானவர். எப்படி இங்கே வந்தார் என பலமுறை யோசித்திருக்கிறேன். 1939ல் ராமனே நேரில் போய் செயிண்ட் ஜான்ஸ் கல்லூரியிலிருந்து விக்ரம் சாராபாயைக் கையோடு இந்தியாவுக்கு அழைத்தே வந்து விட்டார்.

சென்னையில் ஒரு புள்ளியியல் நிறுவனமும், அகமதாபாத்தில் ஒரு வானியல் நிறுவனமும், திருவனந்தபுரத்தில் விண்ணியல் ஆராய்ச்சியும் மும்பையில் அணு ஆய்வுக்கழகமும் வருவதற்கான ஆரம்ப வேலைகளை அதற்கு பல்வேறு..... பங்களிப்புகள் இந்த இருநூல்களிலுமே பதிவாகின்றன. இந்திய தொழிற் நுட்ப கல்வியங்கள் (ஐஐடி) வருவதற்கு நேருவோடு நேரடியாக கே.எஸ்.கிருஷ்ணன் மோதியதை வாசிக்கும்போது வெளியே தெரியாத எவ்வளவோ பேரின் பங்களிப்புகள் எப்படி இருட்டடிப்பு செய்யப்பட்டு விட்டன என ஆத்திரப்படாமல் இருக்க முடியவில்லை. ஹரீஷ் சந்திரா எம்.கே. வாய்னுபாபு, ஜி.என்.ராமச்சந்திரன் என முற்றிலும் வெளியுலகம் புறக்கணித்த அறிவியலாளர்களையும் நாம் அறிகிறோம்.

  • ஆனால் ராமன் கல்கத்தாவை விட்டு ஏன் பெங்களுருக்கு வந்தார்? அதன் பின்னணியில் ராமனின் ஈகோ, தான் மற்றவரிடம் ஆலோசிக்காமல் பிடிவாதமாக சிலவற்றை செயல்படுத்துதல் போன்ற பின்னடைவுகளைப் பார்க்கிறோம். 1933ல் அவர் கல்கத்தாவிலிருந்து கிட்டத்தட்ட விரட்டப்பட்டார் என்பதே உண்மை. அமிர்தலால் சர்க்கார் இறந்தபின் அறிவியல் மன்ற கவுரவ செயலாளராக பொறுப்பேற்ற ராமனை, ஒரு உறுப்பினர் தேர்தலில் தோற்கடித்து, கல்கத்தா பல்கலைக்கழக இயக்குநர் தேர்விலும் முற்றிலும் தனிமைப்படுத்தி பதவி இறக்கம் செய்தவர் இந்திய இயற்பியலின் இன்னொரு ஜாம்பவானான மெக்னாட்சாகா! இளைஞர்களோடு ராமன் இப்படித் தன் காலத்தில் அடிக்கடி மோதியும் இருக்கிறார்.

ஆனால் ஜெர்மனியின் விஞ்ஞானி மாக்ஸ் பார்னை எப்படியாவது (அமெரிக்கா போக விடாமல்) இந்தியாவில் ஆய்வுப் பேராசிரியர் ஆக்கி அறிவியல் செயல்பாட்டின் உலகமையமாய் இந்தியாவை ஆக்கிட ராமன் முயற்சித்தது தான் அவருக்கு ஏராளமான அதிருப்தியாளர்களை உருவாக்கிவிட்டது. ஒரு கட்டத்தில் அவர் ஹிட்லருக்கு உளவு பார்ப்பதாகக் கூறி கைது செய்ய அரசும், மற்ற நாட்டவரை இங்கே வேலைக்கு வைப்பதா என சொந்த அறிவியல் நண¢பர்களுமே அவருக்கு எதிராகத் திரும்புகிறார்கள். எது எப்படியோ தனது நோபல் பரிசுத் தொகையின் ஒரு பகுதியை சுதந்திரப் போராட்ட நிதியாய் வழங்கிய ராமன், தான் கல்கத்தாவிலிருந்து பெங்களூருக்கு சி.வி.ராமன்அறிவியல் கல்வியகம் அமைத்துக்கொண்டு கவுரவமாய் போய் இணைந்ததையும் பார்க்கிறோம். இந்திய அறிவியல் என்பதும் பெரும் போராட்டத்திற்கிடையே கட்டமைந்து வளர்ந்த சரித்திரத்தை தன்னகத்தே கொண்டுள்ளன. இந்த புத்தகங்கள் நமக்கு உணர்த்தி நிற்கின்றன.

இந்த இருநூல்களையும் வாசிக்கும் நமது எதிர்கால சந்ததியர் இந்தியா எனும் ஒரு தேசத்தில் 2000வரை (ஏன் இப்பவும்) ஆண்கள் மட்டுமே அறிவியலாளர்களாக வாழ்ந்தார்கள். பெண்களுக்கும் அறிவியலுக்கும் சம்பந்தமே இல்லை என்றுதான் நினைப்பார்கள். அந்த அளவிற்கு இந்திய அறிவியல் ஆணாதிக்கத்தின் மொத்த செயல்பாடாக உள்ளது என்பது மிக கசப்பான உண்மை.

தமிழக மக்கள் அறிவியலாளர் ஜி.டி. நாயுடுவின் மகள் திருமணத்தின்போது தமிழகம் வந்த சி.வி.ராமன் தமிழில் அறிவியல் பேருரை ஒன்று நிகழ்த்தியதையும் அந்தக் கூட்டத்தில் கே.எஸ்.கிருஷ்ணனும் பங்கெடுத்ததையும் தோழர் சிங்கார வேலரைப்பற்றி தனது பேச்சில் கிருஷ்ணன் குறிப்பிட்டதையும்கூட புத்தகம் பதிவு செய்தாலும், இக்கட்டுரை அளவிற்குகூட அவை சுவையாக வார்க்கப்படவில்லை என்பதைக் குறிப்பிட வேண்டியுள்ளது.

இந்திய அறிவியல் நூல்களை வாசிக்கும்போது அய்யோ போதும்.. வைத்துவிடலாமா எனும் எண்ணம் மேலோங்கும் அளவு நடை சுவாரசியமே இல்லாதபடி உள்ளது. நாம் விட்டுத் தப்பிவந்த பள்ளி கல்லூரி பாட புத்தகம் படிப்பது மாதிரியே பத்துமார்க் ஆறுமார்க் கேள்வி பதில் போலவே பத்திகள். இவற்றை எழுதுகிறவர்கள் இந்திய அரசுத்துறையிலேயே பணிபுரிகிறவர்கள் என்பதால் விமர்சனப்பூர்வமாய் எதுவுமே எழுதுவதில்லை. எஃப்.எம். ரேடியோ மூலம் எல்லாரும் எல்லாவற்றையும் மனம் விட்டுப் பேசி எஞ்சாய்(?) பண்ணும் ஒரு காலத்தில் அந்தக் கால இந்திய வானொலியின் அறிவியல் அறிவோம் மாதிரியே ஏழுநாள் துக்க- வாத்திய இசையாய் இவை தகவல்களால் அழுது வடிகின்றன.

இன்றைய இந்திய அறிவியலின் முகம் இது. உப்பு புளி மிளகாய் எதுவுமே போடாத தாளிக்காத மோர்க் குழம்பு ரக- எழுத்தாய் அவர்களது பி.எச்.டி. ஆய்வு போலவே அவை ஏன் இருக்க வேண்டும் என்பது பற்றி வாய்ப்புக் கிடைத்தால் தனி புத்தகம் எழுதி பேராசிரியர் பெருமக்களுக்கு மெயிலில் அனுப்ப உத்தேசிக்கிறேன். ஏனெனில் அவர்கள் மெயில் தவிர வேறு எதுவுமே வாசிப்பது இல்லை என, திகாருக்கு தனது முகவரியை மாற்றிக்கொண்டு போகாமல் மிச்சமிருக்கும் மத்திய மந்திரிகளில் ஒருவரான திருவாளர் கபீல் சிபெல் சமீபத்தில் கூறியுள்ளார்.

- இரா. நடராசன்

Saturday, November 19, 2011

அதற்காக வருத்தமில்லை திரு. ஸ்டீவ் ஜாப்ஸ்!


அன்பார்ந்த திரு. ஸ்டீவ் ஜாப்ஸ்...

கடந்த மாதம் உங்கள் ஆப்பிள் நிறுவனத் தலைமை பதவியை நீங்கள் ராஜினாமா செய்தபோதே உங்களை குறித்த - ஜெப்ரியஸ் மற்றும் வில்லியம் சைமன் இணைந்து எழுதிய ஐ.கான் - ஸ்டீவ் ஜாப்ஸ் நூலை வாசித்திருந்தேன். மன்னியுங்கள் திரு ஸ்டீவ்ஜாப்ஸ்! அது உங்கள் அனுமதி பெறாத வாழ்க்கைச் சரிதை என்பது தெரியும். அதை வெளியிட்டதற்காக ஜான் வில்லி அண்ட்சன்ஸ் புத்தகப் பதிப்பாளர்களின் ஏனைய நூல்களையும் உலகெங்கும் உங்கள் ஆப்பிள் வர்த்தகக் கடைகளிலிருந்து எடுத்து ‘விற்பனைத் தடை’ விதித்து நீங்கள் ஆத்திரத்தோடு வீசி எறிந்தீர்கள்... கிட்டத்தட்ட அந்த சம்பவம் நடந்து கொண்டிருக்கும் போதுதான் அந்த நூலை நான் வாசித்துக்கொண்டிருந்தேன்.

ஆனால் உங்கள் முழு ஆசீர்வாதத்தோடு டைம்ஸ் இதழ் பிரதிநிதி சி.என்.என்.. மூத்த பத்திரிகையாளர் வால்டர் ஐசக்சன் (water isaacson) எழுதி நீங்கள் இறந்தபின் வெளிவந்து வசூலில் சாதனை படைத்த ஸ்டீவ்ஜாப்ஸ் தி எக்ஸ்குளூசிவ் பயோக்கிரஃபி நூலைவிட ஐ.கான் புத்தகம் உங்களை குறித்து பல நேர்மையான சிறப்புச் செய்திகளை கொண்டுள்ளது என்பதை (காலதாமதமாக வேணும்) உங்கள் கவனத்திற்கு கொண்டு வருகிறேன். குறிப்பாக பிராஸ்கரட் சர்வதேச புத்தக கண்காட்சியில் ஐ-கான் புத்தகம், எக்ஸ்குளூசிவ் பயோகிரஃபியை விட கூடுதல் கவனம்பெற்று உலக அளவில் அதிக வாசகர்களால் விரும்பப்படும் நூலாக அறிவிக்கப்பட்டுள்ளது. உங்கள் மரணத்திற்கு பிறகு என்பதால் உங்களுக்குத் தெரியாமலும் இருக்கலாம்.

உங்களையும் உங்களது கணினி வர்த்தக உலகையும் புரிந்துகொள்ள யாராவது விரும்பினால் அவர்களுக்கு (உங்களால் அங்கீகரிக்கப்படாத) தாமஸ் எல்.பைர்ட் மானின் தி வேல்டு இஸ் பிளாட் (the world is flat), லியாண்டர் கானே எழுதிய இன்சைட் ஸ்டீவ்ஸ் பிரெயின் (Inside steves Brain), கார்மி காலோ எழுதிய தி பிரசன்டேஷன் சீக்ரட்ஸ் ஆஃப் ஸ்டீவ் ஜாப்ஸ் The presentation Secrets of Steve Jobs) என சில புத்தகங்களை முன்மொழியும் அளவிற்கு வாசித்து வைத்திருந்தேன்.

குறிப்பாக தி வேல்டு இஸ் ஃபிளாட் புத்தகம்! உங்களோடு சேர்ந்து ஸ்டீவ் வாஸ்னெக், மைக் மார்க்குலா ஆகியோர் கணினியை வர்த்தகப் பொருளாக்கி எப்படியெல்லாம் உலகம் ஒரு கிராமமாக (குளோபல் வில்லேஜ்) சுருங்கிட புதியபுதிய கண்டுபிடிப்புகளைக் கொண்டு வந்தார்கள் என்பதை விவரிக்கிறது. உங்களைப் போலவே, கணினி உலகின் நூலாசிரியர்களும் நம்புவது ‘மார்க்சியம் காலாவதியாகி விட்டது’ அதே வித செய்திகள் இந்த புத்தகத்திலும் இட்டுக்கட்டப் பட்டிருப்பினும், உங்களது பங்களிப்பு குறித்த நேர்மையான பதிவு இதில் உள்ளது. நேனோ தொழில் நுட்பம் சார்ந்து ரிச்சர்ட் ஃபைன்மெனும் சர்க்யூட் போர்டு சார்ந்து சோடியும் நிகழ்த்திய முக்கிய திருப்புமுனைகள் சார்ந்ததே உங்களது வர்த்தகம் என்பதை நிறுவியுள்ளது. எனவே இந்த புத்தகம் உங்களுக்குப் பிடிக்காலும் போகலாம். குறிப்பாக உலகெங்கும் ஆப்டிகல் ஃபைபர் மின் இழைகளின் தொடர்பு கடல்கடந்தும் நாடுகளை வளைத்திருக்காவிட்டால்... ஆப்பிளும்... கூகுலும்... மைக்ரோ சாஃப்டும் உங்கள் சன்னல்களைத் திறந்திருக்க முடியாது என்பதைப் பதிவதோடு வால்-மார்ட் வணிகத்திற்கான ஆப்பிளின் பிரத்யேகப் பங்களிப்பையும் தனி அத்தியாயமாய் இந்த நூல் விவரிப்பதை தங்கள் கவனத்திற்கு (உங்களுக்கு நேரமிருந்திருக்காது) கொண்டுவர விரும்புகிறேன்.

ஐ-கான் நூலில், ஜெராக்ஸ் (நகல்) மிஷினை உங்கள் மவுஸ் மற்றும் அச்சீட்டோடு (பிரிண்டர்) இணைத்து நீங்கள் ஆப்பிள் லிஸாவையும், ஒராண்டிற்கு பிறகு மாசின்டோஷ் (உலகின் முதல் ஸ்கானர்) இயந்திரத்தையும் அடைந்ததைப் பதிவு செய்துள்ள நூலாசிரியர்கள். உங்களை இருபதாம் நூற்றாண்டு எடிசனாகவும், 21ம் நூற்றாண்டு ஃபோர்டாகவும் வர்ணிக்கிறார்கள். நீங்கள் கண்டடைந்த அதே ஆப்பிள் நிறுவனத்திலிருந்து நீங்களே 1985ல் ஜான் ஸ்கூலி (உங்களால் நியமிக்கப்பட்ட அதிகாரி) யால் வெளியேற்றப்பட்டதையும் அதே ஆண்டில் Next நிறுவனத்தை ஏற்படுத்தி முதன்முதலில் அவுட் சோர்சிங் (அயல் வேலைவாய்ப்பு) என்பதை உலகில் ஏற்படுத்தியதையும் கூட உங்கள் ஆதரவுப் பார்வை யாலேயே பதிவு செய்கிறார்கள்.

சிரியாவிலிருந்து அமெரிக்காவுக்கு இடம்பெயர்ந்த அப்துல்ஃபாட்டா ஜான்டாலி தனது கல்லூரியில் காதல் கொண்ட ஜோன் ஷீபில் கெட்ட கனவாக உங்களை (திருமணத்திற்கு முன்) பெற்றெடுக்க.. உலகக் குழந்தை மார்க்கெட்டில் பால் ஜாப்ஸிற்கு (தத்தாக) விற்கப்பட்டதால் உங்கள் பிறப்பே ஒரு வர்த்தகமாய் ஆனதை ஐ-கான் பதிவு செய்ததால் அந்த புத்தகம் உங்களுக்குப் பிடிக்க வில்லையா... ஆனால் உங்கள் வாழ்வின் வெற்றித்தருணங்களை ஐ-கான் புத்தகம் பதிவு செய்யத் தவறவில்லையே திரு. ஸ்டீவ் ஜாப்ஸ்... குறிப்பாக அந்த 1970களின் வலிமிகுந்த உங்கள் வாழ்க்கை.. கல்லூரியில் முதலாண்டு படித்ததுமே வறுமை, வெறுமை உங்களை விரட்டி கல்லூரியில் முதலாண்டு ‘டிராப்-அவுட்’ ஆக்கியதிலிருந்து நண்பர் வாஸ்னிக்கோடு பலவகையான வேலைகள் செய்து, நண்பர்கள் அறைகளின் கட்டாந் தரையில் படுத்துறங்கிய நாட்களை.. அப்புறம் இந்தியாவிற்கு போதி மரத்தடியைத் தேடிவந்து மொட்டைபோட்டு புத்த மதத்தைத் தழுவியது. ஏன் பல மைல்கள் நடந்தே போர்ட்லாந்து ஹரே கிருஷ்ணா கோவிலுக்குச் சென்று வாரம் ஒரு முறை முழு அன்னதான சாப்பாடு சாப்பிட்டு வந்த - கடினமான மதிய ஞாயிறுகள்... ஆனால் வளர்ப்புத் தந்தை பால் ஜாப்ஸ் குறித்தும், உங்களது நாலாம் வகுப்பின் (வீட்டுப்பாடம் முடித்து வந்தால் காசு முதற்கொண்டு தந்த) ஒரே நல்ல ஆசிரியை குறித்தும் கூட ஜெப்ரி-யங்கும் வில்லியம் சைமனும் தங்களது ஐ-கான் புத்தகத்தில் விரிவாக எழுதி இருக்கிறார்கள்.

திரு. ஸ்டீவ் ஜாப்ஸ், ஐ-பாட், ஐ-பேட் (I-Pad) மற்றும் ஐஃபோன் இவற்றை ஆப்பிளுக்கு 1997ல் திரும்பிய பிறகு நீங்கள் அறிமுகம் செய்ததை அழகாகவும் மிகவும் சுவையாகவும் எடுத்துரைத்தாலும் ‘தி வேர்ல்டு இஸ் பிளாட்’ புத்தகத்தை நீங்கள் நிராகரிப்பதற்கு முக்கியக் காரணம் ஒன்று உண்டு. அது உங்களது Next நிறுவனத்தின் தோல்வியையும், மைக்ரோ சாஃப்ட் போலவே நீங்களும் குட்டிக்குட்டி முதலீட்டாளர் பங்குகளை (வால்ட் டிஸ்னி உட்பட) எப்படி விலை கொடுத்து மொத்தமாக வாங்கி முதுகில் குத்தினீர்கள் என்பதையும் சேர்த்தே அந்தப் புத்தகம் உலகிற்கு வெளிச்சம் போட்டு விடுகிறது.

அவுட் சோர்ஸிங் என்று பெயரிட்டு அமெரிக்காவிற்கு வெளியே மூன்றாம் உலக நாடுகளின் மத்தியதர வரக்கத்து இல்லத்தரசிகள் (?) வரை உழைப்பை சுரண்டும் உங்கள் கணினி உலகின் உன்னத திட்டம்தான் கார்ல்மார்க்ஸ் பற்றி உங்களைத் திருவாய்மலரச் செய்திருக்க வேண்டும் திரு. ஸ்டீவ் ஜாப்ஸ். நீங்கள் மட்டுமல்ல தி வேர்ல்டு இஸ் ஃபிளாட் (the world is flat) நூலாசிரியர் தாமஸ் எல். பிரைட்மான் உட்பட ஏன் எல்லாரும் சொல்லி வைத்தாற்போல மார்க்ஸியத்தை காழ்ப்புணர்சியோடு கண்டிப்பதை உங்கள் (ஜீன்ஸ், கருப்பு (காலர் இல்லாத) முழுக்கை-டி-சர்ட் போலவே) பேஷன் ஆக்குகிறீர்கள்?

• மார்க்ஸியம் - நாட்டில் எல்லாரையும் சமஅளவு ஏழைகளாக்கும் தத்துவம்
• கார்ல் மார்க்ஸை விட சமூகத்திற்கு எடிசன் அதிக பங்களிப்பு நிகழ்த்தி இருக்கிறார் (எனவே நான் எடிசன் ஆகவே விரும்பினேன்)

உங்களுடைய ஐ-பாட், ஐ-ஃபோன் போல மேற் கண்ட வாசகங்களும் உங்கள் அரிய கண்டுபிடிப்பு திரு.ஸ்டீவ் ஜாப்ஸ். திவேர்டு இஸ் ஃபிளாட் நூலில் அவுட் சோர்ஸ் குறித்தும், இந்தியாவைத் தவிர்த்து சீனாவில் ‘ஆப்பிள்’ நிறுவன உதிரியாகத் தொழில் கேந்திரங்கள் அமைத்தது குறித்துமான உங்கள் கருத்துக்கள் இரண்டு பதிவாகி உள்ளன. மார்க்ஸியத்தைப் பற்றி விவரிக்கவும் வாதிடவும் இது தருணமல்ல என்றாலும், அந்த இரண்டு கருத்துக்களின் பின்னணி போதும், உங்கள் ‘மார்க்ஸிய’ கிலிக்கான காரணத்தை அறிய...

• அவுட்சோர்ஸிங் பற்றி 1994 ஆப்பிள் நிறுவன பங்குதாரர் கூட்டத்தில் கூறுகிறீர்கள் :

“நாம் அச்சப்படத் தேவையில்லை. அவுட்சோர்ஸிங் மூலம் பல நாடுகளில் பகலும் இரவும் நமது வேலை நடக்கிறது. அவர்கள் ஒருவரை ஒருவர் அறிவது கூட இல்லை... நமக்கு தொழிற்சங்க பிரச்சனையே கிடையாது.”

• சீனத்தில் (இந்தியாவிலன்றி) ஏன் தொழிற்கேந்திரம் அமைத்துள்ளோம் என்பதற்கு டைம்ஸ் இதழுக்கு ‘ஐ-டியூன்ஸ்’ அறிமுகம் செய்து 2005ல் பேட்டியளிக்கிறீர்கள்.

“தொழிற்சங்க அரசாங்கமே (The Govt of trade Union) சீனாவில் இருப்பதால் அது எங்களுக்குத் தொழிலாளர் ஊதிய-வேலை நேரப் பிரச்சனை வராமல் தடுத்துவிடும்...”

‘ஐரோப்பாவைப் பிடித்து ஆட்டும் பூதம்’ உங்களையும் விட்டு வைக்கவில்லை அல்லவா! உங்கள் நிறுவனங்களில் பணிபுரியும் லட்சக்கணக்கானவர்கள் தினமும் வேலைக்குள் நுழைய அவர்களது இ-மெயில் திறந்து ‘அந்த’ பிங்க் நிற வேலை கல்தா தபால் இருக்கிறதா இல்லையா என பார்த்த பிறகே வேலையைத் தொடர முடியும் என்பது இன்றைக்கும் உண்மை தானே. அதனையும் சேர்த்தே ஐ-கான் புத்தகம் வெளிச்சமிட்டதால் அதன் மீது ஆத்திரம் கொண்டீர்களா திரு. ஸ்டீவ் ஜாப்ஸ்?

ஆனால் உங்கள் மரணம் மிகவும் துரதிர்ஷ்டமானது. உலகின் மூன்றாவது செல்வந்தராக உயர்ந்த நீங்கள் கூட கணையப் புற்றுநோய் கடுமையாய்த் தாக்கிய ஆண்டுகளில் உங்களோடு இருக்க, அதே பெற்றோர்க்கு பிறந்த பின்நாட்களில் நீங்கள் கண்டுபிடித்த உங்கள் சகோதரி மோன சிம்ப்சன் அனுமதிக்கப்பட்டதே பெரிய அதிசயம் என்கிறார்கள். பிரபல நாவலாசிரியையான அவர் உங்களை வைத்து ‘எ ரெகுலர் கை’ (A regular guy) நாவல் எழுதினாரே... அதையும் அங்கீகரிக்க ஏன் தவறினீர்கள் திரு. ஸ்டீவ் ஜாப்ஸ்...

அந்த நாவலின் கதாநாயகன் (உங்களைப் போலவே இருக்கும் டாம் ஓவன்ஸ்).. தன் இரண்டு பெண் தோழியர்களை நண்பனிடம் காட்டி (உங்களைப் போலவே) யார் அழகு என கேட்டறிந்து ஒருத்தியை மணப்பதாலா.. அல்லது, (உங்களைப் போல) தனது முதல் மகளை ஈவு இரக்கமின்றி (தன்னைப்போல வளரட்டும் என்று) அனாதை விடுதிக்குத் துரத்துவானே அதனாலா. கோடி கோடியாய் குவித்ததை - எய்ட்ஸ் போன்ற நோய்தடுப்பிற்கு பில்கேட்ஸ் செலவு செய்வதைக் கண்டு (உங்களைப் போலவே) பைத்தியக்காரன் எனப் பரிகசித்து... ஒரு டாலர்கூட தரமுடியாது என முறைப்பானே... அதனாலா..!

என்றாலும் திரு. ஸ்டீவ் ஜாப்ஸ், உலகில் இன்று கணினி முதல் ஐ-ஃபோன் வரை யாவையும் வர வழிகாட்டியுள்ள உங்களால் உலகம் (வேற்றுமைஇன்றி) மேடுபள்ளமின்றி ஃபிளாட் (Flat) ஆகிவிட்டதாக தாமஸ் எல்.பிரைட்மான் தனது வேர்ல்டு இஸ் பிளாட் புத்தகத்தில் குறிப்பிடுகிறார். உலக மூலதனத்தை தன்னகப்படுத்தி ஒரே அச்சில் வார்த்து முதலாளியம் வர்க்கங்களுக்கு இடையில் ஏழை - செல்வந்தர் வேற்றுமையை அதீதமாய் பெருக்கி ஊழித்தாண்டவம் ஆடும் இன்றைய சூழலில் உங்கள் இணையதள ஏ.சி. மூலைகளை விட்டு வெளியே வந்து பார்த்திருந்தால் உலகம் - தட்டையான சீரான - ஒன்றல்ல என்பதை உணர்ந்திருப்பீர்கள்.

உங்கள் வருகைக்காக கட்டப்பட்ட ஆறுசாலை மேம்பாலங்களுக்கும் ஐ.டி. காரிடார் சாலை மேடுகளுக்கும் அடியில் பார்த்திருந்தால் தெரிந்திருக்கும் அழித்தொழிக்கப்பட்ட குடிசைப் பகுதிகளும் வயிறு உப்பியபடியே குழந்தைகள் கழியும் எங்கள் வறுமையும்...

ஆனாலும் திரு. ஸ்டீவ் ஜாப்ஸ் எங்களிடமும் ஐ.பாடும், ஐ.போனும் உண்டு. எதுவுமே நிஜமல்ல (அதைவிட நன்றாக வேலை செய்யும்) நகல்கள்...!

சாலைக் கடைகளில் கொட்டிக்கிடக்கும் மலிவான எங்கள் வாழ்க்கை உங்களைப் பற்றிய மேற்கண்ட புத்தகங்களைக்கூட சாலை பிளாட்பாரத்தில் மலிவு விலை - பழைய புத்தக சந்தையில் தான் வாங்கி என்போன்றவர்களால் வாசிக்க முடிகிறது...! உங்கள் வார்த்தையிலேயே சொல்வதானால்  India is a country of Pyracy!! அதற்காக வருத்தமில்லை திரு. ஸ்டீவ் ஜாப்ஸ்.

-இரா.நடராஜன்

Thursday, November 17, 2011

வெறும் விளையாட்டல்ல...


இரண்டாம் உலக யுத்தம் உச்சத்தில் இருந்த சமயம், யுத்தத்திற்கு எதிராக லண்டன் வீதிகளில் பெரிய ஆர்ப்பாட்டத்திற்கும் ஊர்வலத்திற்கும் ஏற்பாடு செய்திருந்த நகைச்சுவை நடிகர் சார்லி சாப்ளின் குழந்தைகளை பழையபடி விளையாட விடுங்கள்.. சண்டையை நிறுத்துங்கள் என்று அந்தக் கூட்டத்தில் முழங்கினார். இன்று நமது சமூகம் சண்டையை நிறுத்தியதோ இல்லையோ விளையாட்டிற்கு பெரிய தடை விதித்துள்ளது. பள்ளியில் வதங்கி பாடங்கள் மற்றும் அன்றாட சுமை எனும் எந்திரத்தில் சிக்கி, அறைக்கப்பட்டு நொந்து வீடு திரும்பும் ஒரு குழந்தையின் வாழ்க்கையைப் பாருங்கள்.

    காலை எழுந்தவுடன் படிப்பு - பின்பு
    கனிபோல பிழியும் ஒரு பள்ளி
    மாலை முழுதும் டியூசன் - அப்புறம்    
    வீட்டுபாடமடிப்  பாப்பா

என்று நடக்கும் இந்த மத்தியதர வர்க்கத்தின் பணம் சேர்க்கும் எதிர்காலம் பற்றிய பீதியுடன் கூடிய ஹிட்லர் முகாமின் வெறிக்கு ஒரு அளவில்லையா. பசங்க மாதிரி படத்தை பார்க்கும் இந்தக் கால சுட்டிக்குழந்தைகளுக்கு படத்தின் பல வித விளையாட்டுகள் புரியவில்லை என்பதை அறிந்தபோது பெரிய அதிர்ச்சி அடைந்தேன். கிட்டிப்புல் ஆட்டம், குதிரை தாண்டுவது, கோலி, சில்லு, பம்பரம் என எதையுமே வீதிகளில் காணக்கிடைப்பது இல்லை. பாண்டியாடும் பெண்குழந்தைகள் பாட்டு, வீணை கிளாசுக்கும், மரம்ஏறி ஐஸ்பாய் ஆடும் பையன்கள் கராத்தே வகுப்பு களுக்கும் துரத்தப்பட்டு விட்டார்கள். என்ன இருக்கு.. விளையாடி என்னத்த  மெடலா வாங்கப்போற.. அதுக்கு உருப்படியா எதாவது செய்யலாம் இல்லயா என்று ஒரு குழந்தை சும்மா இருக்கும் போதுகூட சர்டிபிக்கேட், கிரேடு, மெடல் வாங்குவதே எல்லாம் என்பதுபோல திணிக்கிறார்களே.. அதற்கும் சர்க்கஸில் சாட்டையால் விலங்குகளை பயிற்றுவிக்கும் சித்திரவதைக்கும் ஏதாவது வித்தியாசம் உண்டா.
   
நாங்கள் எங்கள் போக்கில் வளர அனுமதிக்கப்பட்டதை தான் குழந்தை வளர்ப்பு என்பேன் என்கிறார். இரவீந்திரநாத் தாகூர். நாங்களாகவே எதில்வேண்டு மானாலும் எப்படி வேண்டு மானாலும் பொம்மைகள் செய்து விளையாடினோம். மண்ணு, ஓலை, கம்பு, வைக்கோல், தேங்காமட்டை, பனைவண்டி, ஆனால் எங்களில் ஒருவன் நகரத்தில் விலை கொடுத்து வாங்கிய பொம்மையோடு, ஒரு நாள் விளையாட வந்தபோதிலிருந்து எங்கள் விளையாட்டில் வர்த்தகம் புகுந்து விட்டது என்று தாகூர் எழுதுகிறார். அது எவ்வளவு பெரிய உண்மை. டெடிகரடி, பார்பி பொம்மை, ஹார்லிக்ஸ் வாங்கினால் ஹீமேன் இலவசம், பூஸ்டுக்கு ரஸ்லிங்மேனி புகழ் பாக்ஸி டாட்டு,  அவர்களது இரத்தத்தை உறிஞ்சி கொழுக்கும் சர்வதேச வீடியோ கேம்ஸ் நிறுவனங்கள் பெரிய சந்தையாக  பங்கு மார்க்கெட், உலகமயமாதல் எனும் பெரும் புயலில் நமது வீதிக்குழந்தையின் சிரிப்பொலியும் கும்மாளமும் கூட சத்தமின்றி நம்மிடமிருந்து சுரண்டப்பட்டு விட்டது என்பதை கவனங்கொள்ள நமக்கு அவகாசம் இல்லை.
   
கார்டூன், பே சானல், இணையம் என எங்கும் அவர்களை குறிவைத்து கொட்டப்படும் டிராகுலா  முதல் ஸ்பைடர் மேன், மென்இன் பிளாக் என தொடரும் அமெரிக்க வன்முறை வெறியாட்டத்தின் மென் பொருள் விஷம் கோக்கோலா போலவே மத்தியதர வர்க்கத்தின்  ஸ்டேடஸ் ஆகி குழந்தைகளின் சுதந்திர உணர்வுகளுக்குள் பண்பாட்டு ஆக்கிரமிப்பு செய்து குச்சிகிராப், காது கடுக்கன், பென்டன் வாட்சு என கவுரவ விலங்குகளை பூட்டியுள்ளது. பற்றாததற்கு இஞ்ஜீனீயர், டாக்டர், ஐ.ஏ.எஸ் என பெற்றோர் கனவு கட்டாய பாடமாகி கோச்சிங் கிளாஸ் பொழுதுகளில் கழியும் அவர்களது மவுனம் ஒரு ஓலமாய் இச்சமூகம் முழுதும் காதை கிழித்தபடி ஒலித்துக் கொண்டே இருக்கிறது கல்வியாளர் ஜான்ஹோல்ட் சொல்வதைப்போல எங்கவீட்டு நாய்க்கு குட்டிக்கரணம் போடத் தெரியும் என்பதுபோல வீட்டிற்கு வரும் (வராத) உறவினர்களுக்கு தன் மகன் இப்படி அப்படி என கவுர பீத்தல்களுக்காக ஒரு செல்லப் பிராணிபோல் வளரும் குழந்தைகளே இன்றைய யதார்த்தம். எல்லா குழந்தைகளையும் அதிசய குழந்தைகளாய்  குழந்தை உலகில் முதல் முறையாக விளம்பரப்படுத்த ஒருவெறி தொடர்ந்து சமூகத்தில் இயங்குவதன் விளைவு முழுக் குறளையும் ஒப்பிக்கும் நாலுவயது பிஞ்சுகள், 200  தலைநகரம் 200ம் 63 கலைகள், 6000 ஊர் பேர் சொல்லுகின்றன நடக்காதமழலைகள். கின்னஸ் சாதனை பள்ளி, லிம்கா ரெக்கார்டு பல்துலக்கும் நர்சரி என குழந்தைகள் உலகில் அவர்கள் பேச்சு முதல் காலை கடன் வரை அனைத்தையும் வர்த்தகமாக்கும் வெறியைவிட கொடிய வன்முறைவேறு எதுவாக இருக்க முடியும்.
   
நான்மாடா உழைக்கிறேன்... நீ விளையாட போவியா என ஓடி விளையாட விடாத தந்தையர்களும், நமக்கும் அந்த சித்தகத்திக்கும் ஒத்துகாதுனு தெரிஞ்சும் அவனோட பையன்கூட விளையாடுவாயா.. அங்கே விளையாடரதா இருந்தா என்னைய உயிரோட பார்க்கமுடியாது எனும் ரேஞ்சுக்கு கவுவர சச்சரவு வளர்த்து கூடி விளையாட விடாத அம்மாக்களுமே இன்று அதிகம்.
   
டயர் ஓட்டம், மாஞ்சா பட்டம், கபடியாட்டம், ஸ்கிப்பிங், சோழி, பல்லாங்குழி, தாயகட்டம், நொண்டியாட்டம், பேப்பந்து, பத்துகல்லு, சோடா சக்கரம், திருடன் போலீஸ், இவற்றுக்கு கணினி வழி வீடியோ கேம்ஸ், செல்போன் கேம்ஸ், மின் சர்க்யூட்டில் ஓடும் பிரிக் கேம் போன்றவை ஒருபோதும் மாற்றாக ஆகமுடியாது. கொலை கொலையா முந்திரிக்காயிலிருந்து ஒளிஞ்சாடுவது வரை யாவும் வெறும் விளையாட்டுகள் அல்ல. தோழமை, விட்டுக்கொடுத்து போவது, ஒருவருக்கு ஒருவர், பாராட்டி திறமையை அடையாளம் காண்பது, எல்லாவற்றிற்கும் மேலாக ரசிப்புத்தன்மை, சகிப்புத்தன்மை தோல்விகளை பக்குவமாய் எடுத்துக்கொள்ளும் இயல்பு, சுயநம்பிக்கை ஆகியன உள்ளிட்ட பள்ளிக்கூடத்தால் (வெறும் டிஜிட்டல் உலகத்தாலும்) கற்றுத்தர முடியாத பல அடிப்படைகளை வாழ்வில் சேர்க்கும் அற்புதங்கள். சிறுபேச்சுக்கும் வன்முறை, வீட்டில் கோவித்து ஓடுதல், தேர்வு தோல்விக்கு தற்கொலை, பிஞ்சில் பழுக்கும் காதல் யாவுமே இன்றைய சிறார்களின் அடையாளமாகிப் போனதற்கு விளையாட்டுகள் அவர்களிடமிருந்து பறிக்கப்பட்டதே காரணம் என்பதில் சந்தேகமே இல்லை.
   
உறவு முறைகளை பேணுவவதில் கூட இன்றைய குழந்தை நியாயத்தை அடிப்படையாக கருதாமல், லாபத்தை அடிப்படை அளவு கோலாய் கருதுவதுதான் உள்ளதிலேயே அதிகபட்ச சமூக அவலம் என்கிறார் அமெர்த்தியாசென். இயல்பு மழுங்கி விளையாட்டுகளிடமிருந்து தனிமைப் பட்டஇன்றைய குழந்தைகள், இருட்டை பார்த்து மட்டுமல்ல, பகல் வெளிச்சத்திலேயே வெளியேவர அஞ்சுகின்றனர். ஓபிசிட்டி எனும் அதீத எடை நோய் தாக்கியதன் பிஞ்சுகளையும் உடன் அழைத்துக்கொண்டு காலை நடைபயிற்சிக்கு கிளம்பும் இளசுகளை அதிகம் கொண்ட இன்றைய தமிழ் சமூகம் விளையாட்டை விளையாட்டாக கருதினால் இப்படி வினையில்தான் போய் முடியும்.....

-இரா.நடராஜன்

Labels

Coca Cola (1) Peak Oil (1) Permaculture (1) Power of Community (1) Renewable energy (1) Solar energy (1) SOPA (1) sustainable agriculture (1) அ.குமரேசன் (6) அங்காடிதெரு (1) அணு ஆற்றல் (2) அணுமின் (1) அண்ணா (4) அண்ணா நூலகம் (1) அதிர்ச்சி (1) அத்வானி (2) அந்நிய முதலீடு (2) அபிநயா (1) அப்துல் கலாம் (1) அப்பணசாமி (2) அமெரிக்கா (20) அம்பானி (1) அம்பேத்கர் (9) அரசியல் (177) அரசியல்.நிகழ்வுகள் (6) அரசு (14) அரசு மருத்துவமனை (1) அரசு விடுதி மாணவர்கள் (1) அரவான் (1) அருந்ததியர் (1) அர்ஜெண்டினா (1) அலசல் (1) அவலம் (19) அழகு (1) அறிமுகம் (1) அனுபவம் (28) அன்னா ஹசாரே (1) அஜயன் பாலா (1) ஆ.ராசா (1) ஆணையம் (2) ஆதவன் தீட்சண்யா (3) ஆப்கானிஸ்தான் (1) ஆப்பிரிக்கா (2) ஆர்.மீனா (1) ஆர்எஸ்எஸ் (2) ஆவணப்படம் (3) ஆனந்தன் (2) இ.எம்.ஜோசப் (1) இ.பா.சிந்தன் (22) இட ஓதுக்கீடு (3) இடஒதுக்கீடு (1) இடதுசாரிகள் (4) இணையம் (2) இதழ்கள் (6) இந்தியா (69) இந்துத்துவா (8) இந்துஜா (1) இமு (2) இமு டிச11 (5) இமு நவமபர் 2011 (6) இயக்கம் (7) இயக்குனர் ஷங்கர் (1) இரா.சிந்தன் (5) இரா.செழியன் (2) இரா.நடராஜன் (3) இராம.கோபாலன் (1) இல.சண்முகசுந்தரம் (2) இலக்கியம் (38) இலங்கை (6) இலங்கைத் தமிழர் (4) இலவசக் கல்வி (1) இலவசங்கள் (1) இளவரசன் கொலை (1) இளைஞர் முழக்கம் (11) இஷ்ரத் (2) இஸ்ரேல் ஆக்கிரமிப்பு (1) இஸ்லாம் (3) ஈராக் (1) ஈரான் (2) உ.வாசுகி (1) உச்ச நீதிமன்றம் (1) உணவு நெருக்கடி (2) உதயசங்கர் (1) உத்தப்புரம் (1) உயர்கல்வி (2) உரையாடல்கள் (2) உலக சினிமா (4) உலகமயம் (5) உலகம் (46) உளவியல் (1) உள்ளாட்சி (1) உள்ளாட்சித் தேர்தல் (1) ஊடகங்கள் (14) ஊடகம் (8) ஊழல் (30) எடியூரப்பா (1) எம்.எப்.ஹூசேன் (1) எம்.சிவக்குமார் (2) எரிசக்தி (1) எல்.கே.ஜி (1) என்.ஜி.ஓ (1) என்கவுண்டர் (1) எஸ். பாலா (1) எஸ்.கண்ணன் (1) எஸ்.கருணா (3) எஸ்.பி.ராஜேந்திரன் (3) எஸ்.வி.வேணுகோபாலன் (2) ஏகாதிபத்தியம் (13) ஏமன் (1) ஒபாமா (4) ஓம்பிரகாஷ் வால்மீகி (1) ஓளிப்பதிவு (1) ஃபாக்ஸ்கான் (1) கச்சத் தீவு (1) கட்டுரை (51) கட்டுரைகள் (2) கணிணி (2) கணினி தொழில் நுட்பம் (1) கமல்ஹாசன் (1) கம்யூனிசம் (12) கருணாநிதி (11) கருத்து சுதந்திரம் (1) கருத்துரிமை (3) கலைஞர் (6) கல்வி (14) கவிதை (21) கவிதைகள் (1) கறுப்புப்பணம் (3) கனிமொழி (2) காங்கிரஸ் (10) காதல் (2) கால்பந்து (1) காவல்துறை (4) காஷ்மீர் (1) கி.பார்த்திபராஜா (1) கிங்பிஷர் (1) கியூபா (4) கிரீஸ் (1) குடும்பம் (1) குட்டி ரேவதி (1) குப்பன் சுப்பன் (1) குலாத்தி (1) குழந்தைகள் (9) குழந்தைகள் கடத்தல் (1) குஜராத் கலவரம் (1) குஜராத் படுகொலைகள் (1) கூகிள் அந்தரங்கம் (1) கூடங்குளம் (2) கே.சாமுவேல்ராஜ் (1) கே.பாலமுருகன் (1) கேள்விகள் (1) கைப்பற்றுவோம் போராட்டம் (1) கோவில் (1) ச.தமிழ்ச்செல்வன் (1) ச.மாடசாமி (1) சக்திஜோதி (1) சங்கமம் (1) சசிகலா (1) சச்சின் (1) சட்டசபை (2) சட்டம் (4) சத்யஜித் ரே (1) சந்திரகாந்தன் (1) சமச்சீர் கல்வி (4) சமவூதியம் (1) சமூக நீதி (2) சமூக வலைத்தளம் (1) சமூகப் பாதுகாப்பு (2) சமூகம் (177) சம்பு (1) சரத் பவார் (1) சர்வதேச பெண்கள் தினம் (1) சல்மான் ருஷ்டி (1) சா.கந்தசாமி (2) சா.செயக்குமார் (1) சாகித்திய அகாதமி விருது (1) சாக்லேட் (1) சாதீயம் (4) சாரா விஜி (2) சாலிம் அலி (1) சி.பி.எம் (9) சிக்கிம் (1) சிந்தனை (5) சிபி (1) சிராஜுதீன் (1) சில்லரை வர்த்தகம் (4) சிறப்பு பொருளாதார மண்டலங்கள் (1) சிறுகதை (12) சினிமா (52) சினிமா செய்திகள் (4) சினிமாச் செய்திகள் (4) சீத்தாராம் யெச்சூரி (2) சு.பொ.அகத்தியலிங்கம் (2) சு.வெங்கடேசன் (1) சுகாதாரம் (1) சுதிர் ரா (1) சுயமரியாதைத் திருமணம் (1) சுவாரசியம் (1) சுற்றுப்புறச் சூழல் (3) சூர்யா (1) செம்மலர் (4) செம்மலர் அக் 2011 (4) செய்திகள் (112) சென்னை (1) சோவியத் (1) சோஷலிசம் (1) டெல்லி (2) டேம் 999 (1) த.தமிழரசி (1) தகவல் உரிமை (1) தகவல் திருட்டு (2) தண்ணீர் (3) தமிழக மீனவர்கள் (1) தமிழகம் (66) தமிழர் (1) தமிழ்ச் சினிமா (1) தமிழ்நதி (1) தமுஎகச (4) தலித் (21) தற்கொலை (1) தனியார்மயம் (4) தனுஷ் (1) தி.க (2) திமுக (1) திரிணாமுல் (1) திருப்பூர் (2) திருமணம் (2) திரைக்குப் பின்னால் (2) திரைத்துறை (1) திரைப்பட விழா (1) திரைப்படம் (4) தினகரன் (1) தினமணி (3) தீக்கதிர் (9) தீண்டாமை (22) தீண்டாமையின் அடையாளங்கள் (1) தீபாவளி (1) தேசியச் செய்திகள் (4) தேர்தல் (4) தொண்டு நிறுவனங்கள் (1) தொலைக்காட்சி (2) தொழிலாளர் (6) ந.பெரியசாமி (1) நகர்ப்புற விவசாயம் (1) நகைச்சுவை (1) நக்கீரன் (1) நதிம் சயித் (1) நந்தலாலா (1) நந்தன் (1) நரேந்திர மோடி (6) நலத்திட்டங்கள் (2) நவம்பர் புரட்சி (1) நாடகம் (1) நாடாளுமன்றத் தேர்தல் 2014 (2) நாணய மதிப்பு (1) நாறும்பூநாதன் (1) நிகழ்வுகள் (154) நிலப்பிரபுத்துவம் (1) நிலமோசடி (1) நீதித்துறை (2) நீலவேந்தன் (2) நுகர்வுக் கலாச்சாரம் (2) நூல் அறிமுகம் (12) நூல் வெளியீடுகள் (1) நெல்சன் மண்டேலா (1) நேட்டோ (2) நையாண்டி (26) நையாண்டி் (14) ப.சிதம்பரம் (3) பசுபதி (1) படுகொலை (3) படைப்புகள் (2) பட்ஜெட் (1) பணவீக்கம் (2) பதிவர் வட்டம் (3) பதிவர்வட்டம் (1) பதிவுலகம் (1) பரிந்துரைகள் (5) பழங்குடி (1) பள்ளிக்கூடம் (1) பறவைகள் (1) பன்னாட்டுக் கம்பெனிகள் (3) பா.ஜ.க (3) பாகிஸ்தான் (2) பாடல் (5) பாதல் சர்க்கார் (1) பாதுகாப்பு (1) பாரதி (2) பாலபாரதி (1) பாலஸ்தீனம் (1) பாலியல் வன்முறை (6) பாலு மகேந்திரா (1) பால் சமத்துவம் (1) பாஜக (1) பி.சுகந்தி (1) பி.ராமமூர்த்தி (1) பிடல் காஸ்ட்ரோ (3) பிரணாப் முகர்ஜி (1) பிரபாத் பட்நாயக் (3) பிரளயன் (2) பிரிட்டன் (1) பிர்தவ்ஸ் ராஜகுமாரன் (1) பிளின் (1) பு.பெ.நவமபர் 2011 (1) புகைப்படங்கள் (1) புதிய பரிதி (2) புது விசை (12) புதுமை (1) புத்தக அறிமுகம் (2) புத்தகக் கண்காட்சிகள் (2) புத்தகம் (18) புத்தகம் பேசுது (17) புத்தகம் பேசுது நவம்பர் 2011 (8) புத்தகாலயம் (2) புத்தாண்டு (1) புபே (2) புபே டிச11 (8) புரட்சி (2) புவி (1) புவி டிச11 (5) புவி நவ 2011 (7) புனைவு (1) புஷ் (1) பெட்ரோல் (7) பெண் (11) பெண் விடுதலை (1) பெண்குழந்தை (1) பெண்ணியம் (9) பெண்ணெழுத்து (1) பெரியார் (2) பெருமுதலாளிகள் (7) பேட்டி (2) பேரா.சிவசுப்பிரமணியன் (2) பேஸ்புக் (1) பொருளாதார நெருக்கடி (2) பொருளாதாரம் (24) போக்குவரத்து (1) போராட்டம் (15) போலீஸ் தாக்குதல் (3) ப்ரிசம் (4) ப்ரிசம் - தகவல் திருட்டு (7) ப்ரியா தம்பி (1) மக்களுக்கான மருத்துவம் (1) மக்கள் நலப்பணியாளர்கள் (2) மக்கானா (1) மத அடிப்படை வாதம் (1) மதவெறி (3) மதுசூதனன் (1) மம்தா (3) மம்முட்டி (1) மரபணு (1) மலாலாய் சோயா (1) மவோயிஸ்டுகள் (1) மன்மதன் அம்பு (1) மன்மோகன்சிங் (10) மா ற்று (1) மாட்டுக்கறி (1) மாதர் சங்கம் (1) மாதவராஜ் (2) மாவோ (1) மாற்ற (1) மாற்று (223) மின்கட்டணம் (1) மின்சாரம் (1) மீள்பார்வை (2) முதலாளி (1) முதலாளித்துவம் (11) முத்தமாக மாறேன் (1) முத்துக்கண்ணன் (1) முல்லைப் பெரியாறு (7) முறைகேடுகள் (5) மெகாசீரியல் (1) மே.வங்க அரசு (1) மே.வங்கம் (1) மேதினம் (1) மேற்கு வங்கம் (1) மொக்கை (1) மொழி (2) மொழிபெயர்ப்பு (1) மோசடி (1) மோடி (3) மோனிகா (1) யுத்தம் (2) ரத யாத்திரை (1) ரமேஷ் பாபு (2) ராகுல் காந்தி (2) ராடியா (2) ராஜ பக்‌ஷே (1) ரிலையன்ஸ் (1) ருமேனியா (1) லட்சுமணப்பெருமாள் (2) லெனின் (2) லோக்பால் (5) வசந்த பாலன் (1) வண்ணக்கதிர் (1) வரலாறு (19) வலைப்பூக்கள் (1) வழக்கு விசாரணை (1) வாசிப்பு (5) வாச்சாத்தி (1) வால் ஸ்டிரிட் (3) வால்மார்ட் (1) வால்ஸ்டிரிட் போராட்டம் (2) வாழ்க்கை (4) வானியல் (2) விக்கிபீடியா (1) விக்கிலீகஸ் (1) விக்கிலீக்ஸ் (7) விஞ்ஞானம் (2) விமர்சனம் (10) விலையேற்றம் (2) விலைவாசி (11) விலைவாசி உயர்வு (2) விவாதங்கள் (1) விவாதம் (9) விளம்பரம் (1) விளையாட்டு (4) வினவு (1) விஜய் (2) விஜய் மல்லையா (1) வீட்டுவசதி வாரியம் (1) வீரமணி (2) வெண்மணி (2) வெள்ளம் (2) வெனிசுவெல்லா (1) வேலையின்மை (2) வோடாபோன் (1) ஜப்பான் நெருக்கடி (2) ஜாக்கிசான் (1) ஜாதி (1) ஜாபர் பனாகி (1) ஜூலியன் அசாங்க (1) ஜெயலலிதா (9) ஜோதிடம் (1) ஸ்டீவ் ஜாப்ஸ் (1) ஸ்பீல்பர்க் (2) ஸ்பெக்ட்ரம் (6)