Showing posts with label நூல் அறிமுகம். Show all posts
Showing posts with label நூல் அறிமுகம். Show all posts

Wednesday, December 21, 2011

எல்லோருக்கும் உண்டு புனைபெயர்






கடைவாயிலிருந்து
ஒழுகும் எச்சில்
அமிர்தத் தாரையென
படிந்து கிடக்கிறது
முதுகுப் புறத்தில்!

கசங்கிய சேலைக்கு
நறுமணம் தெளிக்கிறது
கதக்கிய பாலின் வாசம்!

பனித்துளிகளை
தொடுகிற பரவசத்துடன்
மென்மையாக
ஒற்றி எடுக்கப்படுகிற மலம்
மஞ்சள் தங்கமென
மின்னுகிறது விரல் நுனிகளில்!

சிதறிய சிறுநீர் திவலைகளை
அபிடேக நீரென
சிலிர்த்து
ஏற்றுக் கொள்கிறது தேகம்!

தத்துப் பிள்ளையிடம்
தன்னை முழுமையாய்
ஒப்படைத்தவளை
காணுந்தோறும்
யார் வீட்டுப் பிள்ளையோயென
கூசியபடி தொடும் நான்
கூனிக் குறுகி
சூன்யமாகிறேன்

- கோவை.மீ.உமா மகேஸ்வரி


நூல் அறிமுகம்:
எல்லோருக்கும் உண்டு புனைபெயர்
கோவை.மீ.உமாமகேஸ்வரி
வெளிச்சம் வெளியீடு
சோயம்புத்தூர்
பக் 64/ ரூ.40/ செல்: 9894777291

Monday, December 12, 2011

பேனா தொலைந்தது, எழுத்து தொலையவில்லை!


கலை தன்னைத் தேர்ந்து கொண்டவர்களை சூதின் புதிர்வழிகளுக்குள் சிக்க வைக்கிறது. விந்தையான வாழ்வின் கணந்தோறும் கலைஞன் தன்னை இழந்து கொண்டேயிருக்கிறான். ரத்தப்பலி கேட்கும் இந்த வாதனையை மிகுந்த மகிழ்ச்சியோடே ஏற்றுக்கொள்கிற கலைஞனுக்கு தன் கலையைத் தவிர மற்ற எல்லாமே இரண்டாம் பட்சம்தான். உன்னதமான வாழ்வுக்காக அல்ல உன்னதமான கலைக்காகவே கலைஞன் தன் வாழ்நாள் முழுவதும் போராடுகிறான். இந்தப் போராட்டத்தில் பட்டினி கிடக்க நேரிட்டாலும் கஞ்சன் கைப்பணம் போல திரும்பத் திரும்ப தன் கலையை உச்சிமுகர்ந்து நெஞ்சோடணைத்துக் கொள்கிறான். ஆனால் வாழ்க்கை சவால் விட்டுக்கொண்டே செல்கிறது. கைக்கும் வாய்க்குமான போராட்டத்தில் தன் கலையின் அத்துகளைக் கரையான்கள் அரித்துவிடாமல் பாதுகாத்து வருவதே மிகப்பெரிய சாதனை.

கடந்த இருபது வருடங்களாகத் தான் எழுதிய கதைகளைத் தொகுத்து வெளியிட்டிருக்கும் மு. அப்பணசாமி எண்பதுகளில் கோவில்பட்டியிலிருந்து வேர் விட்டுக் கிளம்பிய இலக்கிய ஆளுமைகளில் ஓருவர். சுதந்திரப் பத்திரிகையாளராக, நாடகாசிரியராக, மொழி பெயர்ப்பாளராக, வாய்மொழி வரலாற்று ஆசிரியராக, எல்லோராலும் அறியப்பட்டவர். ஆறாம் திணை என்ற முதல் இணைய நாளிதழின் ஆசிரியராகவும் பணியாற்றியவர். அவருடைய பேனா தொலைந்து போனது என்ற சிறுகதைத் தொகுப்பில் அன்றாட வாழ்வின் அன்றாட நிகழ்வுகளினூடாக ஆழ்ந்த அர்த்தத்தைத் தேடிப் பயணப்படுகிற கதைகளாகக் கோர்க்கப்பட்டிருக்கின்றன.

சலிப்பூட்டும் அன்றாட வாழ்வின் கசங்கல்களிலிருந்து கலைஞனே தன் கலைமொழியின் மூலம் புதிய வெளிச்சத்தைக் காட்டுகிறான். பெரும்பாலான கதைகளில் பெண் என்ற படிமம் தன் பன்முக தரிசனம் அளிக்கிறவளாக உருவாகியிருக்கிறாள். வாழ்வின் கொடூரங்களுக்கு தன்னைப் பலி கொடுத்தவளாக வருகிறாள். “தாயீயாக’’ அழிந்தபோதில் அக்காவாகக் ‘கிணற்றில்‘ அம்மாவாகப் ‘பஞ்சினிருளில்‘ கருவில் வளர்ந்த சிசுவில் கண்ணம்மாவாக விரல்களின் ஸ்ருதியில் என்று அழுத்தமான சித்திரங்களாக மனதில் பதிகிற பெண்கள் நம்மைக் கலங்க வைக்கின்றனர். அதேபோல பொறுப்பில்லாத விட்டேத்தியான, வன்முறை நிறைந்த ஏலாத அப்பாக்களும் வருகிறார்கள். தொகுப்பில் விரவிக்கிடக்கிற கதைகளின் வழியே அம்மா அப்பாவின் ஆகிருதிகள் வளர்ந்து வருவதை உணர முடிகிறது.

எல்லா எழுத்தாளர்களுக்குமே பழைய நினைவுகளைப் போற்றுதல் என்பது இயல்பான ஒரு குணாதிசயம். அப்பணசாமியும் பேனா தொலைந்து போனது, அனாந்தரம், நான் ஊருக்குத் திரும்பிக் கொண்டிருக்கிறேன் அங்கு யாரும் இல்லை போன்ற கதைகளின் வழியே தன் பால்யகால ஊர் நண்பர்களைப் பற்றி எழுதிப் பார்த்திருக்கிறார். மனிதமன விகாரத்தைச் சொல்லும் கதைகளாக இது கதையல்ல, அகம் பிரம்மாச்மி, பாஷாண கிரந்தம், போன்றவை திகழ்கின்றன.

தமிழில் மிகவும் அருகிப் போய்விட்ட உருவகக் கதையை நரிக்குரல் சிம்மம் வழியே எழுதிப் பார்த்திருக்கிறார் அப்பணசாமி. வேலையின்மையின் வெம்மையை, வீட்டின் நெருக்குதல்களை, புளிச்சக்கைகளுக்கு நடுவே, வெண்தாள் சுவடிகள் கதைகளிலும், அழுத்தமாகப் பதிவு செய்திருக்கிறார். அதிலும் புளிச்சக்கைகளுக்கு நடுவே என்ற கதையின் வெறுமை நம்மை மூச்சடைக்க வைக்கிறது.

முதலில் இருக்கக்கூடிய மூன்று கதைகளும் மிகச் சமீபத்தில் எழுதப்பட்ட கதைகள் என்பது மொழி நடையிலும் உத்தியிலும் வெளிப்படுகிறது. மற்ற கதைகளின் மொழி அபூர்வமான கவித்துவமும் நுட்பமும் கூடிய மொழியாக அமைந்துள்ளது.

‘ஆட்டு மந்தைபோல் கடல் காற்று உடலை உராய்ந்து உராய்ந்து நீவி விட்டது’ - அனாந்தரம்

‘குட்டியான செட்டைகள் கொண்ட குருவியின் மனம் அலையும் தூரத்துக்கும், நீண்ட செட்டைகள் கொண்ட கிறீச்சிட்டான் பறவையின் மனம் அலையும் தூரத்துக்கும் தன் மனதைப் படரவிட்டு, சுண்டி இழுத்தாள். - தாயீ

தனது ஆழம் காணமுடியாது வறண்டு கிடந்த மனதைப்போல் கானல் சுரந்து புதைந்த பள்ளம் போல வெட்ட வெளியில் ஒரு கிணறு’ - கிணறு

கான்கிரீட் கண்கள் நிறைந்த கபாலங்களாகக் கட்டடங்கள்’ - முரண் சிதைவு

நம்பிக்கைக்கும் அவநம்பிக்கைக்கும் இடையில் ஊசலாடி ஊசலாடி அவநம்பிக்கையின் இருள்பள்ளத்திலேயே விழுகிறவர்களாக அப்பணசாமியின் கதாபாத்திரங்கள். இன்றைய வாழ்வின் நெருக்கடியும் அவலமும் அதுதானே. ஒவ்வொரு கதையிலும் மொழிநடை, உத்தி, பாணி என்று வெவ்வேறு விதமாக பரிசோதனை முயற்சிகளைச் செய்து பார்த்திருக்கிறார் அப்பணசாமி. இருளின் விதவித வர்ணஜாலங்களைப் பிரதிபலிக்கிற தனித்துவமிக்க கதைகளை எழுதியுள்ளார். வளமான தமிழ்ச் சிறுகதை உலகிற்கு பேனா தொலைந்து போனது தொகுப்பின் மூலம் தன் அழுத்தமான வரவைப் பதிவு செய்திருக்கிறார்.

காலத்தின் நீள்பரப்பில், வாழ்க்கைப் போராட்டத்தில் கசப்பை விழுங்கி விழுங்கி கைத்துப்போன மன உலகில், தன்னை அவநம்பிக்கைவாதியென்று பிரகடனப்படுத்த வேண்டிய அளவுக்கு தள்ளியிருக்கிற சமூகச் சூழலில், அப்பணசாமி என்ற கலைஞன் தன் கலையின் மூலம் தன்னை நிருபித்துக் கொண்டிருக்கிறார். அதற்குப் பெரும் சாட்சியாக இந்தத் தொகுப்பு பேனா தொலைந்து போனது விளங்குகிறது. அப்பணசாமியின் கைப்பான புன்னகையின் மீது கலை தன் ஒளியை வீசுகிறதே...

- உதயசங்கர்

பேனா தொலைந்து போனது
அப்பணசாமி
பக்:112 | ரூ.60
பாரதி புத்தகாலயம்

Friday, December 9, 2011

பாகிஸ்தான் போகும் ரயில்


பொதுவாகவே நான் ஆங்கில நாவல்கள் படிக்கும் பழக்கம் உள்ளவன் அல்ல. நூற்றுக் கணக்கான மொழிபெயர்ப்பு நூல்களைப் படித்துள்ளேன், ஆயினும் என் ஆர்வம் ஏனோ ஆங்கில நாவல்கள் பக்கம் குறிப்பிடத்தக்க விதத்தில் திரும்பியது இல்லை. குஷ்வந்த் சிங் ஜோக்குகளைப் படித்திருக்கிறேன். ரசித்தும் இருக்கிறேன். இருப்பினும் அவர் எழுத்துகளில் மது, மாது சங்கதிகளே தூக்கலாக இருக்கும். என்னுள் படிந்த சித்திரம் இதுவே.

மேலும் அவர் காங்கிரஸ் கட்சி என்கிற எண்ணம் வலுவாக என்னிடம் வினையாற்றியது. அவர் சஞ்சய் காந்தியோடு நெருங்கி இருந்ததும் என் பார்வையில் குறுக்கீடாக இருந்தது. பின்னர் அவரது அரசியல் நிலைப்பாட்டில் மாற்றம்வரினும், அவரை காங்கிரஸ் சார்பு மாநிலங்களவை உறுப்பினராகவே பார்த்தேன். அவர் இல்லஸ்ட்ரேட் வீக்லி போன்ற ஏடுகளின் ஆசிரியராகச் செயல்பட்டபோது அவற்றை படித்திருக்கிறேன்.அவர் எழுத்தாற்றல் மிகச்சிறப்பாக இருப்பதையும் உணர்ந்திருக்கிறேன். இந்த நாவல் குறித்து பல நண்பர்கள் கூறியபோது படிக்க எண்ணினும் வாய்ப்பு அமையவில்லை. நானும் அது பற்றி பெரிதாக முயற்சித்ததில்லை. கிழக்குப் பதிப்பகத்தின் வெளியீடாக, இப்போது தமிழில் வெளிவந்ததும் படித்தேன். குஷ்வந்த் சிங் என்னுள் விஸ்வரூபமெடுத்தார். அடடா இந்த நாவலை இதுவரை படிக்காமல் இருந்து விட்டோமே என்கிற குற்ற உணர்ச்சியே ஏற்பட்டது.

அறுபது ஆண்டுகளுக்கு முன்னால் எழுதப்பட்டது இந்நாவல். இன்று படிக்கும் போதும் நாட்டின் பல பகுதிகளில் நடக்கும் சம்பவங்களோடு பொருந்திப் போவது தற்செயலானது அல்ல. ஆம், மதவெறி நெருப்பு தானாகப் பற்றுவதல்ல; பற்றவைக்கப்படுவதே என்பதை இந்நாவல் உரக்கப்பேசுவதால் - நெஞ்சில் பதிய வைப்பதால் இன்றும் உயிர்த்துடிப்புடன் இந்த நாவல் மனதைக் கவ்வுகிறது. இந்திய விடுதலையின் போது இந்தியா- பாகிஸ்தான் என இரு கூறாக்கப்பட்ட சூழலில் இந்நாவல் பிறந்துள்ளது. பாகிஸ்தான் எல்லையோர இந்தியக் கிராமமான மானோ மாஜராதான் கதைக்களம். சீக்கியர்கள் பெரும்பான்மையாக உள்ள கிராமம். இந்துக்கள், முஸ்லிம்கள் என அனைத்து மதத்தவரும் அருகருகே வாழும் அமைதியான கிராமம். எழுதப்படிக்கத் தெரிந்தவர்கள் மிகச்சொற்பம்.நாட்டு நடப்புகள் குறித்து அதிகம் தெரிந்திராத மக்கள். உழைப்பையும் அன்பையும் தவிர வேறெதையும் அறியாதவர்கள். அந்த கிராமத்து வாழ்க்கையை அச்சு அசலாக குஷ்வந்த் சிங் நம் மனக்கண் முன் கொண்டுவந்து நிறுத்திவிடுகிறார்.

அந்த கிராமத்தில் ராம்லால் சேட் வீட்டைப் பக்கத்து ஊர் சமூகவிரோதிகள் கொள்ளையடிப்பதும்... அந்த சமயம் அரசால் பத்தாம் நம்பர் ரவுடி என புதிய முத்திரை குத்தப்பட்ட ஜக்கா சிங் ஒரு ஏழை நெசவுக்கார முஸ்லிம் பெண் நூரனிடம் காதலால் கட்டுண்டு கிடப்பதுமாய் நாவல் மொட்டவிழ்கிறது. காதல் காட்சிகளை குஷ்வந்த் சிங் அவரது பாணியில் தீட்டியுள்ளார். கொள்ளைக்காரர்களால் ராம்லால் சேட் கொல்லப்பட்டதும் நாவல் சூடுபிடிக்கிறது. அதிகார வர்க்கமும் காவல் துறையும் மிக எளிதாக அந்தப்பழியை ஜக்கா சிங் மீது சுமத்துவது முதலில் அதிகார வர்க்க நடைமுறையைக் கேலிசெய்வதாக அமையினும், போகப்போக அதற்குள் மிகப்பெரிய மதக்கலவர சதி புதைந்திருப்பதை மிக நுட்பமான காட்சி சித்தரிப்புகளூடே குஸ்வந்த் சிங் நூல் நெடுகச் சொல்லிச் செல்கிறார்.அவை ஒவ்வொன்றும் இன்றைய குஜராத்தின் சில பக்கங்களையாவது நினைவூட்டாமலிருக்காது.

கொம்புசீவிவிடப்பட்ட மதவெறியால் பாகிஸ்தானில் கோரமாய்க் கொல்லப்பட்ட சீக்கியப் பிணங்கள் கூட்ஸ்களில் நிரப்பப்பட்டு அந்த ரயில் கிராமத்துக்கு வந்தது. மத வேறுபாடின்றி அக்கிராம மக்கள் பதைத்தார்கள். கண்ணீர் உகுத்தார்கள். ஆயினும் அவர்களுக்குள் அது பகைமை நெருப்பை பற்ற வித்திடவில்லை. அதிகார வர்க்கம் சும்மா இருக்குமா? முன்பு நடந்த கொலைக்காக ஜக்கா சிங்கையும், சம்பந்தமின்றி ஊருக்குப் புதிதாய் வந்த படித்த இளைஞனை (அவன் கம்யூனிஸ்ட் என குஸ்வந்த் சிங் பெயர் சுட்ட மாட்டார் வர்ணனை அப்படி தோற்றமளிக்கச் செய்யும்) கைது செய்கிறது.லாக் அப்பில் பூட்டுகிறது அதிகார வர்க்கம். ஆனால், உண்மையான குற்றவாளியான மல்லியைக் கைது செய்தபின் அவனை விடுதலை செய்து மதவெறிக் கோரநர்த்தனத்துக்கு முன்னிற்கச் செய்கிறது. அதிகார வர்க்கத்தின் மூர்க்கம்,வஞ்சகம்,பேராசை, காமக்களியாட்டம் எல்லாம் நேரடிக்காட்சிபோல் நாவலில் நகர்கிறது.

மீண்டும் பிண ரயில், அகதிகள் வருகை மெல்ல மெல்ல மனோ மஜரா கிராமத்தில் மதவெறி குரோத வைரஸ் செலுத்தப்படுகிறது.ஆயினும் மக்கள் மதமாச்சரியங்களை மீறி வாழவே பிரியப்படுகிறார்கள். முயற்சிக்கிறார்கள். அவர்களால் என்ன செய்ய முடியும்?விதியின் போக்கைத் தீர்மானிப்பது சூழலும் ஆளும் வர்க்கமுமாய் அல்லவா இருக்கிறது? இன்றும் அதுதானே நிலைமை. அந்த கிராமத்தை விட்டு முஸ்லிம்கள் வெளியேறவேண்டியதாகிறது. நூரன் குடும்பம் உட்பட முஸ்லிம்கள் மிகுந்த மனச்சோர்வோடுதான் வழியனுப்பப்படுகிறார்கள்.ஆனாலும் அதிகார வர்க்கத்தின் நோக்கம் வேறாகவே இருக்கிறது. மாஜிஸ்திரேட் ஹூகம் சந்த், சப் இன்ஸ்பெக்டர் இருவரின் நடவடிக்கைகளை விலாவாரியாகப் பதிவு செய்து அதிகார வர்க்கத்தையே தோலுரித்துக் காட்டிவிட்டார்.

குரோத நெருப்பு வலிய மூட்டப்படுகிறது. நெருப்பு சூடேற சூடேற இளைஞர்கள் பலர் மனதில் விஷம் ஏறுகிறது. மனிதம் தொலைய மிருகம் பழிவாங்கப் புறப்படுகிறது. அகதிகளாய் பாகிஸ்தானுக்கு அனுப்பப்பட உள்ள முஸ்லிம்களைப் பிணமாக்கி பிண ரயிலை அனுப்பி பழிவாங்கக் கச்சிதமாய்த் திட்டம் தீட்டப்படுகிறது. இது ஒருபுறம். மறுபுறம், அந்த நேரம் ஹூகம்சந்த் மனதை விலைமாதாய் இன்பம் தர அழைத்துவரப்பட்ட இளம்பெண் ஹஜீனா மீதான மையல் ஆட்டிப்படைக்கிறது. தன் மகள் வயதொத்த அந்த முஸ்லிம் பெண்ணின் மீது பரிவும் பற்றும் அவருக்குள்ளும் கல்லுக்குள் ஈரமாய் தலைநீட்டுகிறது.விழித்துக் கொண்ட மனிதம் அவரை யோசிக்க வைக்கிறது.

இப்போது அவர் மூளையில் உதிப்பது சதியல்ல.. ஒரு புத்திசாலித்தனக் கணக்கு. ஜக்கா சிங்கின் காதலும் வெள்ளந்தியான மனிதநேயமும் முரட்டுவீரமும் உசுப்பிவிடப்பட்டால்-அத்துடன் அந்த படித்த இளைஞனும் சேர்ந்தால்... கதை மாறலாம் அல்லவா? அவர்கள் விடுதலை செய்யப்படுகிறார்கள்.படித்த இளைஞன் ஆத்திரப்படுகிறான். குழம்புகிறான். கையைப்பிசைந்து மதுவில் மூழ்குகிறான். ஆனால் ஜக்கா சிங் ஒற்றை ஆளாய் கடவுளைக் கும்பிட்டுக் கிளம்புகிறான். அவனது நம்பிக்கைக்கு பெரிய தத்துவ அடிப்படை எல்லாம் கிடையாது. அன்பு... மனிதர் மீதான காதல்.நல்லது செய்யும் பெரிய மனது. அவ்வளவுதான்.அவனின் முயற்சி வெற்றிபெறுகிறது.சதிக்கும்பலின் திட்டம் இவனொருவனால் தவிடு பொடியானது.ஆனால் அதற்கு ஜக்கா சிங் தன் உயிரையே விலையாக அல்லவா தந்தான். நமக்கும் நிம்மதிப் பெருமூச்சு...

இந்த நாவல் மத நடைமுறைகளை-தத்துவ ஊனங்களைப் போகிறபோக்கில் நன்றாகப் பகடி செய்கிறது. ஒரு ஆபத்தான கதைக்கரு, கதைக்களம் கிட்டத்தட்ட வாள் முனைமேல் நடப்பது போன்றது.அதில் குஸ்வந்த் சிங் வெற்றி பெற்றது எப்படி? 96 வயதைக் கடந்து எப்படியும் சதம் அடிப்பேன் என வாழ்ந்து கொண்டிருக்கும் அவர் தமது கடைசி நூல் வெளியீட்டு விழாவில் பங்கேற்றார். அதையொட்டி அவர் அளித பேட்டியொன்றில் தான் கடவுள் மத நம்பிக்கையற்று இருப்பதற்காகப் பெருமைப்பட்டார்.இறுதிமூச்சுவரை அப்படியே வாழ்வேன் என்றார்.மதச்சார்பின்மையை உயர்த்திப் பிடித்தார். இந்த உறுதிதான் 1956ல் எழுதிய இந்த நாவலை இன்றும் பேசவைக்கிறது.

குஸ்வந்த்சிங் எழுத்து நடை வீரியமிக்கது.காட்சிசித்தரிப்பாயினும், மன உணர்வுகளை வெளிப்படுத்துவதாயினும், சமூக விமர்சனமாயினும், ஆசிரியர் குரலாயினும் அதனை இயல்பாகப் பதிவு செய்கிற வல்லமை அவருக்கு கைவரப்பெற்றிருக்கிறது. அந்த வீச்சும் வேகமும் ஆற்றொழுக்கு நடையும் சற்றும் குறையாமல் தமிழில் தந்திருக்கிற ராமன் ராஜா நம் பாராட்டுக்குரியவர். மதவெறி இன்றைக்கும் நம் சமூகத்தில் முக்கிய அஜெண்டாவாக உள்ளது. குஜராத் அதன் சோதனைக் களமாக உள்ளது. இந்நிலையில் மதவெறிக்கு எதிராக உரக்கப்பேச இந்த நாவலும் ஆயுதமாகும்.


-சு.பொ.அகத்தியலிங்கம்

Thursday, December 8, 2011

பெண்ணெழுத்து: களமும் அரசியலும்

வரலாற்றுப் போக்கில் பெண் அடிமைப்படுத்தப்பட்ட காலத்திலிருந்து சமூக நிறுவனங்கள் அவளை மிகத் தந்திரமாகக் கட்டுக்குள் வைத்தே வந்திருக்கின்றன. அவ்வப்போது எழுந்த பெண்களின் குரல்கள், ஆணாதிக்கத்தின் காட்டுக்கூச்சலில் அமிழ்த்திச் சாகடிக்கப்பட்டிருக்கின்றன. அக்கூச்சல் பகடிகளாகவோ அல்லது அதிகார வன்குரலாகவோ இருக்கலாம். ஆனால் அவற்றில் பெண் குரல் அடக்கி ஒடுக்கப்பட்டுக் குழி தோண்டிப் புதைக்கப்பட்டுள்ளது. காலவெள்ளத்தில் சில புதைமேடுகள் மட்டுமே சிதைவுற்று வெளித்தெரிகின்றன. அவற்றைக் கொண்டே பெண்ணுரிமைக் குரல்களின் வரலாற்றைத் தொகுக்க வேண்டியதாக உள்ளது.

இந்தியச் சாதி அமைப்பில் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்திய மாமேதை அம்பேத்கரின் நூற்றாண்டு நிகழ்வுக்குப் பிறகு, அதாவது தொன்னூறுகளுக்குப் பிறகு எழுந்த தலித்திய எழுச்சியின் உடனிகழ்ச்சியாகப் பெண்ணிய எழுச்சியும் உருவானது. தொன்னூறுகளில் சிற்சில பெண் கவிஞர்கள் எழுத்துக் களத்துக்கு வர, தொடர்ந்த சில ஆண்டுகளிலேயே ஏராளமான பெண்கள் எழுத்துத் துறைக்கு வந்தனர்.

தமிழின் எழுத்து அசைவியக்கத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும் பெண்களின் எழுத்துக்களில் கவிதை முதன்மையாக உள்ளது. அக்கவிதைப் போக்கினையும் கவிஞர்களையும் மதிப்பீடு செய்யும் அரும்பணியைச் செய்துள்ளார் ‘பெண்ணெழுத்து’ நூலாசிரியர் ச.விசயலட்சுமி. செம்மலர் இதழில் தொடராக வந்த கட்டுரைகள் தொகுக்கப்பட்டு செம்மைபடுத்தப்பட்டு நூலுருவாக்கம் பெற்றிருக்கின்றது.

பெண்ணெழுத்துக்களில் கவிதை சிறப்பிடம் பெறுவதையும் மற்ற இலக்கிய வடிவங்களில் ஈடுபடுவதைக் காட்டிலும் கவிதை எப்படிப் பெண்களுக்கு உகந்த வடிவமாக இருக்கிறது என்பதையும் ச.விசயலட்சுமி நூலின் முதல் கட்டுரையில் எடுத்துக்காட்டுகிறார். சமூக அடிப்படையிலும் பாலின அடிப்படையிலும் ‘இரட்டைச் சுமையைச் சுமக்கும் பெண்களுக்கு நகாசு வேலைகள் அதிகம் செய்யத் தேவையற்ற, இயல்பாக ஈர்ப்பை உருவாக்குகிற கவிதை வடிவமே இலகுவாக உள்ளது’ என்கிறார்.

பெண்களின் படைப்புகள் எவ்வாறு இதுவரை எழுதப்படாத பெண்களின் வாழ்க்கையை, நோக்கை, போக்கை முன்வைக்கிறதோ, அவ்வாறே பெண் கவிஞர்களை அறிமுகப்படுத்தும் இந்நூலும் புதிய வகையிலான விமர்சனச் செல்நெறியைக் கைக்கொண்டிருக்கிறது. பெண்கவிஞர்கள் குறித்த பெண் நோக்குநிலை விமர்சனம் என்ற அடிப்படையில் இந்நூல் தனித்துவம் மிக்கதாகிறது.

தனித்துவம் மிக்க பதிமூன்று பெண்கவிஞர்களையும் அவர்தம் படைப்பின் தன்மையையும் போக்கினையும் அறிமுகப்படுத்தும் விசயலட்சுமி, இறுதிப் பகுதியில் விடுபட்டுப்போன பிற தமிழின் பெண் கவிஞர்களைத் தொகுத்துச் சொல்லி, நூலினை நிறைவுள்ளதாக்கியுள்ளார்.

இரண்டாயிரம் ஆண்டுக்கால தமிழ்க் கவிதை மரபில் பெண்களுக்கான இடம் குறித்துப் பருந்துப் பார்வையில் விமர்சித்துச் செல்லும் விசயலட்சுமி, காத்திரமான தனது அவதானிப்புகளை அழுத்தமாகப் பதிந்து செல்கிறார். பிரதியினைக் குறித்த வாசிப்பு மட்டுமின்றி, பிரதியின் மீள் வாசிப்பும், மீள்வாசிப்பின் மீதான வாசிப்பும் அவசியமாகிறது என்கிறார். புதுக்கவிதையில் ஈடுபடத் தொடங்கிய பெண்கள் தொடக்கத்தில் பொதுத் தன்மையிலேயே எழுதியமையையும் பின்னர் அவற்றின் தன்மையில் ஏற்பட்ட மாற்றங்களையும் அடையாளப்படுத்துகிறார். ‘மெல்ல மெல்ல நிலம் கீறி விதை முளைத்து வெளிவருவது போலத் தங்கள் சுயத்தை முன்னிலைப் படுத்தும் கவிதைகளை’ அவர்கள் எழுதியதாகக் குறிப்பிடுகிறார்.

மாலதி மைத்ரியின் கவிதைகளை மதிப்பிடும் விசயலட்சுமி, அவரது கவிதைகளில் பெண் உடல் எல்லையற்றதாகி மிதப்பதுடன் இயற்கையின் கூறாகவும் விளங்குகிறது என்கிறார். பெண் உடல்மீது சமூகம் கட்டமைத்த நிர்பந்தங்களை உடைத்துப் பார்ப்பது, தாய்மை உணர்வைக் கொண்டாடுவது, உடல் உடைமையாகவும் வணிகமாகவும் முன்வைக்கப்படுவதை எதிர்ப்பது என்ற தளங்களில் மாலதி மைத்ரியின் கவிதைகள் இயங்குவதை அடையாளப்படுத்துகிறார்.

பெண்ணின் மனச்சாட்சியாக வெளிப்படுபவை சுகந்தி சுப்பிரமணியனின் கவிதைகள் என்று மதிப்பிடும் விசயலட்சுமி, அவரது கவிதைகளில் மனப்போராட்டம், அதை வென்றெடுக்கும் முயற்சி, தோல்வி இவைபற்றிய விவரிப்புகள் பரந்து கிடப்பதை எடுத்துக்காட்டிப் பேசுகிறார். பெண் கவிஞர்களின் கவிதைகளில் பெண்ணுக்கான உலகைத் திறந்துகாட்டிய முன்னோடிகளுள் மிக முக்கியமானவராக சுகந்தி சுப்பிரமணியத்தை மதிப்பிடுகிறார். பெண்களின் அடுக்களை சார்ந்த உழைப்பை, குடும்பத்திற்குள் சுருங்கிப் போகிற திணறலை, சுதந்திரத்தின் வெளியை எட்டமுயற்சித்தலை இவரது கவிதைகள் வெளிக்காட்டுவதாகக் குறிப்பிட்டெழுதுகிறார்.

மண் சார்ந்த கவிஞராகக் கவிதைக் களத்திற்குள் வந்தவர் தமிழச்சி தங்கபாண்டியன். ‘எஞ்சோட்டுப் பெண்’ என்ற தனது முதல் கவிதைத் தொகுதியில் புறவயமான விஷயங்களுக்கு முக்கியத்துவம் தந்த தமிழச்சி, பிந்தைய தொகுப்புகளில் புறத்தாக்கங்களை அகமனத்தின் அனுபவங்களாக மாற்றி, உட்கிடையான எண்ணவோட்டத்தினை அதற்கேற்ற வலுவான மொழியோடும் பொருத்தமான உத்தியோடும் பேசுவதாகச் சொல்கிறார் விசயலட்சுமி. வனப்பேச்சி என்னும் பருண்மையான படிமம் தமிழச்சியின் கவிதைகளில் பெறுமிடத்தையும் சிறப்பையும் நுட்பமாக எடுத்துக் காட்டியுள்ளார்.

சாதாரண மனிதர்கள் சந்திக்கும் சவால்களைத் தனது கவிதைக் களமாகக் கொண்ட பாலபாரதி, சமையலறையின் சூக்குமத் தன்மையினை மிக ஆழமாக அடையாளப்படுத்திய கவிஞர் என்று அறிமுகப்படுத்தப்படுகிறார். பாலபாரதியின் அரசியற் புரிதலும் செயல்பாடுகளும் கவிதைகளில் ஊடாடி, கவிதையைப் போராடும் கவிதையாக ஆக்கியிருப்பதை அழுத்தமாகப் பதிவு செய்கிறார்.

அன்பும் அன்பு சார்ந்த தன்மைகளையும் அனைத்து நிலைகளிலும் வற்புறுத்தும் ரத்திகாவின் கவிதைச் செல்நெறியினை விளக்கிச் செல்கிறார் விசயலட்சுமி. மூன்று தொகுப்புகளை வெளியிட்டுள்ள பாரதி கிருஷ்ணனின் காதல் கவிதைகளிலும் அரசியல் துணைக்கு அழைக்கப்பட்டுள்ளமையை அடையாளங்காட்டுகிறார். தாய்மையைக் கொண்டாடுதலையும் குழந்தைகளின் மீதான கவன ஈர்ப்பின் அவசியத்தையும் வலியுறுத்தும் கலை இலக்கியாவின் கவிதைகளை மேற்கோள் காட்டி விளக்கியுள்ளார். மொழியின் மூலம் அழகியலை வயப்படுத்தியிருக்கும் கனிமொழியின் கவிதைகள் மனதின் திமிறல்களைப் பதிவு செய்துள்ளமையை அழகுற விளக்கிச் செல்கிறார்.

வேட்கையின் நிறம் என்ற தொகுப்பின் மூலம் கவனம் பெற்ற உமாசக்தியின் கவிதைகளில் காதல்மீது ஏற்றப்படும் புனித்தத்தின் முகம் கிழிக்கப்படுவதைக் குதூகலத்துடன் விவரித்துச் செல்கிறார். பெண்கள் காலங்காலமாக அனுபவித்து வரும் புறக்கணிப்புகள், ஏமாற்றங்கள், தன்னிரக்கம், தாய்மை ஆகிய பொருண்மைகளில் உமாசக்தியின் கவிதைகள் மையங்கொண்டிருப்பதை எடுத்துக்காட்டுகிறார்.

ஈழத் தமிழர்கள் மீது திணிக்கப்பட்ட அலைந்துழல்வு காரணமாக ஏதிலியாய் கனடாவுக்கும் தமிழ்நாட்டுக்குமிடையே அல்லாடும் தமிழ்நதியின் மொழி பலத்தைச் சிறப்புற எடுத்துக்காட்டிப் பாராட்டும் விசயலட்சுமி, கவிஞரின் உலகலாவிய ஆதிக்கத்துக்கெதிரான குரலையும் மதிப்பிட்டுப் பாராட்டுகிறார். போர்ச்சூழலில் பாதிக்கப்படும் பெண்களையும் குழந்தைகளையும் அவரது கவிதைகள் பதிவு செய்திருப்பதை எடுத்துக்காட்டி நெகிழ்கிறார். இலங்கையைச் சேர்ந்த ஃபஹீமா ஜஹான் என்ற இஸ்லாமியச் சமூகத்தைச் சார்ந்த தமிழ்ப் பெண் கவிஞரையும் அவர்தம் கவிதையையும் போர்ச்சூழல் பதிவுகளையும் எடுத்துக்காட்டி விவாதிக்கிறார்.

பதினாறு கவிதைகளைக் கொண்ட சிறு தொகுப்பினை வெளியிட்ட சுபமுகியின் அக்கறைகள் பல்வேறு தளங்களில் இயங்குவதையும் இளைஞர்களின் உலகில் அக்கவிதைகள் கவனம் கொள்ளுவதையும் சிறப்புற எடுத்துக்காட்டுகிறார். குடும்பம் உறவு சார்ந்த விஷயங்களையும் அவை சார்ந்த உளவியல் நெருக்கடிகளையும் பதிவு செய்துள்ள கீதாஞ்சலி பிரியதர்ஷினியின் கவிதைகளை எடுத்துக்காட்டுகிறார்.

பெண்ணுடலை அரசியலாக்கும் முயற்சியில் அழுத்தமான தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும் சுகிர்தராணியின் மூன்று கவிதைத் தொகுப்புகளையும் அடிப்படையாகக் கொண்டு நுட்பமாக ஆராய்ந்து மதிப்பிட்டிருக்கிறார் விசயலட்சுமி. சாதியம், மதம் ஆகியவை பெண்ணின் உடல்மீது செலுத்தும் ஆதிக்கம், வன்முறை ஆகியவற்றை உடலை ஆயுதமாக்கி எதிர்கொள்ளுவதன் அவசியத்தை வலியுறுத்திப் பேசியுள்ளார்.

இறுதிக் கட்டுரையில் லீனா மணிமேகலை, தி.பரமேசுவரி, இளம்பிறை, அ.வெண்ணிலா, ஏ.இராஜலட்சுமி, எஸ்.தேன்மொழி, உமா மகேஸ்வரி, குட்டி ரேவதி, கு.உமாதேவி, அரங்க மல்லிகா, புதிய மாதவி என விடுபட்ட கவிஞர்களின் கவிதைகளையும் மதிப்பிட்டுள்ளார்.

பெண் கவிஞர்கள் பெண்ணியச் சிக்கல்கள் மட்டுமின்றி உலகலாவிய பல்வேறு பிரச்சினைகள் குறித்துத் தங்களது அக்கறைகளைப் படைப்பாக்கியிருப்பதனையும் விசயலட்சுமி எடுத்துக்காட்டியுள்ளார். பெண்களின் கவிதைகள் சுய இரக்கம் கொள்ளும் நிலையை மிக எளிதாகத் தாண்டி விட்டமையையும் அடையாளப்படுத்துகிறார். பெண்ணியக் கோட்பாடுகளிலும் தங்களுக்கென்றொரு பாதையினைப் பற்றியவர்களாக அவர்களிருப்பதனை வலியுறுத்திக் கூறுகிறார். பெண் கவிஞர்கள் உடல்சார்ந்த விஷயங்களை மட்டுமே எழுதுவதாகவும் அதனால் பண்பாட்டுச் சூழல் சீர்கெட்டுப் போவதாகவும் சாமியாடும் விமரிசனக் கோமாளிகளுக்குப் பதில் தருவதாக அமைந்துள்ளது இந்நூல். உடலரசியல் ஆணாதிக்கத்தை வெட்டிச்சாய்க்கும் ஆயுதம் என்று உரத்துப் பேசுகிறது இந்நூல்.

பெண்ணெழுத்தின் போக்குகள் குறித்த ஆழமான, நுட்பமான பார்வையினைக் கொண்டவராக ச.விசயலட்சுமியினை இந்நூல் அடையாளப்படுத்துகிறது. தமிழின் விமரிசன பீடங்கள் கவனம் குவிக்காத பல கவிதைகளை இவர் அடையாளங்கண்டு விவரித்துப் பேசுகிறார். விரிவாக அறிமுகப்படுத்துவதற்கு இவர் தேர்ந்தெடுத்த கவிஞர்களும் தனித்துவமானவர்கள். பிரபலமானவர்கள் என்ற வசதியான தெரிவினை விசயலட்சுமி மேற்கொள்ளவில்லை; மாறாக, ஒரு கவிதை நூல் வெளியிட்டவர்களைக் குறித்தும் மிகவும் விரிவாக ஆராய்ந்துள்ளார். பெண்ணெழுத்தின் பன்முகத் தன்மையை அடையாளப்படுத்த முயற்சி செய்துள்ளார். அம்முயற்சியில் குறிப்பிட்டுப் பாராட்டத்தக்க வகையில் வெற்றியும் பெற்றிருக்கிறார் எனல் வேண்டும்.

பெண்ணெழுத்தின் சிறப்புக்களை அதன் விரிந்த தளத்திலிருந்து அறிமுகப்படுத்தும் அதேநேரத்தில், போதாமைகள் குறித்தும் திசை விலகல்கள் குறித்தும் கவனப்படுத்தியுள்ளார். இப்போக்கு இந்நூலைப் பெண்ணெழுத்து குறித்த அறிமுகமாக மட்டுமிற்றிக் காத்திரமான விமரிசன நூலாகவும் ஆக்கியுள்ளது. சுகிர்தராணியின் ‘கைம்மாறு’ கவிதையை எடுத்துக்காட்டும் விசயலட்சுமி, ‘அரசியலைத் தொடும் கவிதை, அதிலிருந்து முற்றாக விலகிவிடுகிறது. உடலரசியலைப் பேசிய கவிதைகள் மீண்டும் துவங்கிய புள்ளியில் சேர்வதைத் தவிர்க்க வேண்டும். கவிதைகள் உடலரசியலின் முக்கியப் புள்ளிகளைத் தொட்டிருக்கிற நிலையில் உடலரசியலின் பரிமாணங்களைத் தொடர்ந்து பேச வேண்டிய அவசியத்தைக் கொள்ள வேண்டும்’ என்றும் விமரிசித்துள்ளார்.

பெண் கவிஞர்களையும் அவர்தம் படைப்புகளையும் இந்நூலில் தொகுத்துப் பார்க்கும்போது, இருபதாண்டுத் தமிழ்க்கவிதைப்போக்கில் பெண்ணெழுத்தின் அழுத்தமான தாக்கத்தை அடையாளம் கண்டுகொள்ள முடிகிறது. பெண்ணெழுத்துக்கள் குறித்த விரிந்த புரிதலுக்கான வித்தாக இந்நூல் விளங்குகிறது. ஆண்கள் ஆதிக்கம் செலுத்திய இரண்டாயிரம் ஆண்டுக்காலக் கவிதைப்பரப்பில், தற்காலக் கவிதையில் பெண்களின் இடத்தை, கெஞ்சுதலின்றி தர்க்கப்பூர்வமாக வற்புறுத்திப் பெற்றுத் தந்துள்ளார் ச.விசயலட்சுமி. அதற்காக அவரை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

-கி.பார்த்திபராஜா

பெண்ணெழுத்து: களமும் அரசியலும்
ச. விசயலட்சுமி
பக்:128 | ரூ.70
பாரதி புத்தகாலயம்

கருப்பாயி என்கிற நூர்ஜஹான்

திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை நகரத்தின் அருகில் மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்தில் அமைந்துள்ள ஒரு சிறு கிராமம் மீனாட்சிபுரம். இக்கிராமத்தில் வாழ்ந்துவந்த தேவந்திரகுல வேளாளர் சமூகத்தைச் சேர்ந்த 180 குடும்பங்கள் 19.2.1981 அன்றும் 27 குடும்பங்கள் 23.5.1981 அன்றும் இஸ்லாம் மதத்தைத் தழுவின. ஏறத்தாழ 1500 பேர் ஒரு குழுமமாக மதம்மாறிய இந்நிகழ்ச்சி அகில இந்தியாவையும் இக்கிராமத்தின் பக்கம் ஈர்த்தது.
இந்துமடாதிபதிகளும், இந்து சமய அடிப்படைவாத இயக்கம் சார்ந்தோரும், அரசியல்வாதிகளும் இக்கிராமத்தை நோக்கி வரத் தொடங்கினர். இது ஒரு படையெடுப்பு போல் அமைந்தது.

பெட்ரோடாலர் (அரபு நாடுகளின் பணம்) இம்மதமாற்றத்தின் பின்புலமாக இருந்ததாகப் பேசப்பட்டது. மத்திய உள்துறையின் அமைச்சர் ‘மக்வானா’ இக்கிராமத்திற்கு வந்து ஆராய்ந்து இக்கருத்தை மறுத்ததுடன், தமிழகக் காவல்துறையின் அத்துமீறலே இதற்குத் தூண்டுகோலாக அமைந்தது என்பதைக் கண்டறிந்தார்.

பாராளுமன்றத்திலும் தாம் கண்டறிந்த உண்மையை முன்மொழிந்தார். இதன்பின்னர் சாதிய உணர்வுடன் செயல்பட்ட காவல்துறை அதிகாரிகள் சிலர் இடமாறுதல் செய்யப்பட்டனர், என்றாலும் மதம் மாறியவர்கள் தம் நிலையில் உறுதியாக நின்றனர். இந்நாவலாசிரியரின் கூற்றுப்படி வைத்து அழகு பார்க்க முடியாத மீசைக்குப் பதிலாகத் தாடி தலையில் கட்ட முடியாத துண்டுக்குப் பதிலாகக் குல்லா, மாராப்பே போட முடியாத தாழ்த்தப்பட்ட இனத்து பெண்டிரெல்லாம் தலைமுடி முக்காடிட்டுக் கொண்டார்கள். கருப்பசாமி காதர் பாயானார். கருப்பாயி நூர்ஜகானானாள். (பக்கம் 9)

பணக்கார இஸ்லாமியர்கள் வழங்கிய கொடையால் பெரிய அளவிலான பள்ளிவாசல் இங்கு கட்டப்பட்டது. பொது நீர்நிலைகளில் தண்ணீர் எடுத்துவந்த பெண்களின் சுதந்திரத்தை மட்டுப்படுத்தும் வழிமுறையாக வீடுகளில் அடிகுழாய் போடப்பட்டது. ‘மார்க்ககல்வி’ பயில இளைஞர்கள் சிலர் வாணியம்பாடிக்கு அனுப்பப்பட்டனர். பேருந்துப் பயணத்தில் தாம் அமர்ந்திருக்கும் இருக்கையை, தம்மைவிட வயதில் சிறியவனாக இருக்கும் ஆதிக்க சாதியினருக்குக் கொடுத்துவிட்டு நின்றுகொண்டு பயணம் செய்யும் அவலம் மறைந்தது. மொத்தத்தில் பண்பாட்டு ஒடுக்குமுறையிலிருந்து விடுபட மதமாற்றம் துணைபுரிந்தது.

பொருளியல் நோக்கில் அல்லாமல், ஓர் எதிர்க்குரலாக அமைந்த இம்மதமாற்றம் குறித்து நாவலில் இடம்பெறும் காதர் மானத்துக்கும், ரோசத்திற்கும் மாறினோம். சோத்துலே உப்புப் போட்டு திங்கிறதை உறுதிப்படுத்தவே இந்த மாற்றம் (பக்கம் 20) என்கிறார்.

மீனாட்சிபுரம் தேவேந்திரகுல வேளாளர்கள் முஸ்லிம்களாக மாறியதன் வாயிலாக தம் பாதுகாப்புக்கும், சுயமரியாதைக்கும் உத்தரவாதம் செய்து கொண்டனர். இம்மதமாற்றம் நிகழ்ந்து ஏறத்தாழ முப்பது ஆண்டுகள் கழிந்த நிலையில் தமிழ்ச்சமூகம் இந்நிகழ்ச்சியைப் பெரும்பாலும் மறந்துவிட்டது. தற்போது ‘கருப்பாயி என்கிற நூர்ஜஹான்’ என்ற இந்நாவலின் வாயிலாக எதிர்கொள்ளும் வாழ்வியல் சிக்கலை நாவலாசிரியர் அன்வர் பாலசிங்கம் வெளிக்கொணர்ந்துள்ளார்.

மீனாட்சிபுரத்திற்கு அருகில் உள்ள ‘கலங்காதகண்டி’ ஊரைச் சார்ந்த அன்வர் பாலசிங்கம் தேவேந்திரகுல வேளாளர் சமூகத்தைச் சேர்ந்தவர். இஸ்லாமியராக மதம்மாறிய இவர் அதே ஊரில் தம்மைப்போன்றே புதிய மதம்மாறிய தம் சமூகத்தைச் சேர்ந்த பெண்ணை மணம் முடித்துக் கொண்டவர். மீனாட்சிபுரம் பள்ளிவாசலுக்குத் தொழுகைக்கு வருபவர். மீனாட்சிபுரம் முஸ்லிம் ஜமாத்தின் உறுப்பினர்.

நாவலின் கதை

காமாட்சிபுரத்தில் (மீனாட்சிபுரத்தில்) முதல் முதலாக மதம்மாறிய தேவேந்திரகுல வேளாளர் குடும்பங்களில் ஒன்று கருப்பசாமி என்பவரின் குடும்பம். மதமாற்றத்தை அடுத்து தம்பெயரை காதர் என்றும், தன் மகள் கருப்பாயியின் பெயரை நூர்ஜஹான் என்றும் மாற்றிக் கொண்டவர். தம் மகளை உயர்கல்வி படிக்க வைத்த இவரால் உரிய வயதில் அவளுக்குத் திருமணம் செய்துவைக்க முடியவில்லை. காரணம், இவர் ‘நவ்முஸ்லீம்’ (புதிய இஸ்லாமியர்), அதுவும் தீண்டத்தகாதவர் என்று ஒதுக்கி வைக்கப்பட்ட சமூகத்திலிருந்து மதம்மாறியவர் என்பதுதான்.

தனக்கு மணம் முடிக்க மணமகனைத் தேடி அலையும் தந்தையின் துயரத்தைப் பொறுக்க இயலாது நாற்பது வயதைக் கடந்த அவரது மகள் நூர்ஜஹான் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொள்கிறாள். மகளின் பிரிவைத் தாங்க இயலாத காதரும் அவரது மனைவியும் நஞ்சுகுடித்து இறந்து போகிறார்கள். காதரின் கொழந்தியாள் ‘பன்னீர்’ மதம் மாறாதவள். ஆனாலும் காதரின் மகள் நூர்ஜஹான் மீது அன்பைப் பொழிபவள். நூர்ஜஹானின் பிரிவைத் தாங்க இயலாது கிணற்றில் விழுந்து அவளும் தற்கொலை செய்து கொள்கிறாள்.

அடுத்தடுத்து நிகழும் இந்த நான்கு தற்கொலைகள், நாவலை வாசிப்பவனின் உள்ளத்தில் சோக உணர்வைத் தோற்றுவிக்கின்றன. நூர்ஜஹானின் தற்கொலை, அவளது பெற்றோர் மற்றும் சித்தி பன்னீரின் தற்கொலை, அவர்களது சவ அடக்கம் என அனைத்து நிகழ்வுகளும் ஒரே நாளில் நடந்து முடிந்துவிடுகின்றன. இந்த ஒரு நாள்தான் நாவல் நிகழும் காலமாகும். ஆனால் உரையாடல்கள் வாயிலாக முப்பதாண்டுகால நிகழ்வுகளையும், மதம் மாறியோர் எதிர்கொள்ளும் ஓர் முக்கியப் பிரச்சனையையும் இந்நாவல் பேசுகிறது.

நாவலின் மையச் செய்தி

மதமாற்றம் என்பது ஒரு சமூகத்தின் எதிர்க் குரலாக அமைந்தாலும், காலப்போக்கில் சில புதிய பிரச்சனைகளுக்கு அது வழிவகுக்கும் என்பதை இந்நாவல் வெளிப்படுத்தி நிற்கின்றது. இவ்வகையில் இந்நாவலின் மையப்பிரச்சனையாக நவ்முஸ்லிம்களது பெண்பிள்ளைகளின் திருமணம் அமைகின்றது.

தமது சாதி அடையாளத்தையும் துறந்து இஸ்லாத்தை தழுவியவர்களை அன்புடன் வரவேற்ற பரம்பரை இஸ்லாமியர்கள், திருமண உறவு என்று வரும்பொழுது தம் அடையாளத்தைத் துறக்க விரும்பவில்லை. எல்லாவற்றிற்கும் மேலாக நவ்இஸ்லாமியர்களின் பூர்வீக சாதி அடையாளத்தை மறக்கவும் இல்லை. நவ்இஸ்லாமியர்களின் உரையாடல்கள் வாயிலாக இவ்வுண்மையை நாவலாசிரியர் ஆங்காங்கே பதிவு செய்து உள்ளார்.

நவ்முஸ்லிமான ‘முஸ்தபாவாத்தியார்’ எம்.ஏ., பி.எட்., படித்தவர். தம் திருமணப் பத்திரிக்கையில் தம் தந்தையின் பெயருக்கு பின்னும், தன் பெயருக்குப் பின்னும் ‘இராவுத்தர்’ என்று போட்டு அச்சிட்டுவிட்டார். அவர் திருமணம் செய்த பெண், பரம்பரை முஸ்லிம் குடும்பத்தைச் சேர்ந்தவர். திருமணப் பத்திரிக்கையை பார்த்த பெண் வீட்டார் ‘நவ்முஸ்லிமெல்லாம் ராவுத்தராயிட்டா அப்புறம் ராவுத்தர் என்னாவதுன்னு’ (பக்கம் 56) கேட்டு அசிங்கப்படுத்தினர்.

மீனாட்சிபுரத்து நவ்முஸ்லிமான ‘உசேன்’ என்பவர், வெளியூர் பள்ளிவாசல் ஒன்றில் ‘அசரத்’ ஆகப்பணிபுரிகிறார். இஸ்லாமியராக மதம்மாற விரும்பிய தலித் இளைஞர் ஒருவரைச் சந்திக்க விரும்பினார். அப்போது அசரத்து, நாம அங்கயெல்லாம் போகக்கூடாது. அந்தப் பையன் எஸ்ஸி யாக்கும். அதனால் அவன் இங்க வரட்டும். நம்ம அங்க போனமுன்னா சரிவராது என்கிறான் பரம்பரை முஸ்லிம் இளைஞன் ஒருவன் (பக்கம் 58). இதற்கு விடையாக அசரத் கூறியதும், அதை அவன் ஏற்க மறுத்துக் கூறிய பதிலும் நாவலில் இவ்வாறு இடம் பெறுகின்றது.

ஏத்தா... இப்படிப் பேசக்கூடாது. இந்த உலகத்தையே அல்லாஹ்தான் படைச்சான்னு சொல்லிகிட்டு அதுலயும் மனுசங்கள்ல நாம எஸ்ஸி, பீஸின்னு பிரிக்கலாமான்னு கேட்டேன். அதுக்கு அவன் சொல்லுறான். நீங்க என்ன வேணா சொல்லுங்க அசரத்து, அவங்க அவங்கதான்... நாம நாமதாங்கிறான் (பக்கம் 58).

தான் உரையாடிக் கொண்டிருக்கும் அசரத், மீனாட்சிபுரத்தில் மதம்மாறிய தேவேந்திரகுல வேளாளர் சமுதாயத்திலிருந்து வந்த ‘நவ்முஸ்லிம்’ என்பது அந்த இளைஞனுக்குத் தெரியவில்லை. பரம்பரை இஸ்லாமியர் ஒருவர் நடத்திவந்த தேநீர் விடுதியில் நவ்முஸ்லிம்களின் நிலையை
‘‘கம்பிளி தைக்கா முக்குக்கு போனாத்தான் தெரியுது நான் பள்ளனா... பாயான்னு. அங்க சந்தை முக்கில கடை வச்சிருக்கிற முல்லாபாய்ட்ட போயி டீ தாங்க பாய்ன்னு கேட்டமுன்னா... நமக்குனு ஒரு டீ வரும். அவருக்கு தெரிஞ்ச வித்தியாசமெல்லாம் பேரு மட்டும்தான்’’ என்று குறிப்பிடுவது அதிர்ச்சியான செய்தி. அரபு நாடுகளிலிருந்து கோடிகோடியாக மீனாட்சிபுரத்தில் பணம் கொட்டியதாக வெளியூர்க்காரர்கள் நம்ப, அதற்கு மாறான நிலையே அங்கு நிலவியுள்ளது. நவ்முஸ்லிம்களின் பெயரைச் சொல்லி நிதி திரட்டப்பட்டதையும், அதில் கையாடல் செய்த அவ்வட்டாரத்தின் பரம்பரை முஸ்லிம் பிரமுகர்கள், அரசியல்வாதிகள் ஆகியோர்குறித்த சில செய்திகளும் நாவலில் அழுத்தமாகப் பதிவாகியுள்ளன. (பக்கம் 24-25, 43-46, 59-61).

இவையெல்லாம் போகிறபோக்கில் என்பது போன்ற பதிவுகள். நாவலின் மையச் செய்தியாக இடம் பெறுவது, நவ்முஸ்லீம்கள் வீட்டு இளம் பெண்களுக்கு மணமகன் கிடைக்காது திருமணம் தடைப்பட்டு நிற்பதுதான். நாவலின் தொடக்கத்தில் இடம் பெறும் நூர்ஜஹானின் மரணக்கடிதம் இந்த அவலத்தை மிக உருக்கமாக எடுத்துரைக்கிறது. நாவலின் வளர்ச்சிப்போக்கில் இச்சிக்கல் பல்வேறு கதைமாந்தர்களின் கூற்றாக எடுத்துரைக்கப்படுகின்றது.

நூர்ஜஹானின் கடிதத்தில் உருக்கமாக இடம்பெறும் இந்த அவலம், மதம் மாறாத அவள் சித்தி பன்னீரின் கூற்றில் கோபமாக கொப்பளிக்கிறது. பள்ளிவாசலில் கூடியிருந்த ஜமாத்தார்களைப் பார்த்து ‘பெத்துவச்ச புள்ளய காலக் காலத்துல கெட்டிக் குடுக்கத் துப்பில்லாம ஒங்களுக்கெல்லாம் தாடி, தொப்பி ஒரு கேடா, வெக்கமாயில்ல’ (பக்கம் 19) என்று பன்னீர், தொடங்கிவைத்ததை, அல்லாபிச்சை மேலும் தொடர்கிறார். அவரது கோபத்தின் இலக்காக ஜமாத்தின் தலைவர் அமைகிறார்.

‘‘யோவ் தலைவரே... உமக்குப் பொட்டப்புள்ள இல்ல. அதான் பொட்டப்புள்ள பெத்த எங்க கவலை ஓமக்கு இல்லாமப் போயிருச்சு. தாடிய நீட்டி விட்டிக்கிட்டு ஊர் ஊராய்ப் போயி பள்ளிக்கு நிதி சேர்க்கிறோமுன்னுட்டு நல்லா வயிறு முட்ட தின்னுட்டு வரத்தெரியுது. சமஞ்சு நிற்கிற பொம்பளபுள்ள விஷயமா எந்த ஜமாத்துலயாவது பேசியிருக்கீராவே.. துப்புந்துவருங் கெட்டு இந்த பதவில நீர் இருக்கிறதுக்கு நாண்டுகிட்டு நின்னு சாவலாம் வே... ஒண்ணா ரெண்டா அம்பது பிள்ளைகளுக்கு மேலே சமஞ்சு உக்காந்து வருசம் இருபது ஆகுதுவே (பக்கம் 19).


நாவல் விடுக்கும் செய்தி

கீரனூர் ஜாகிர்ராஜாவின் நாவல்களில் அடித்தள இஸ்லாமியர்களின் வாழ்வு இடம் பெற்று ஒரு வேறுபாடான இஸ்லாமியர் சமூகம் அறிமுகப்படுத்தப்படுவது போல், இந்நாவலும் வேறுபாடான ஓர் இஸ்லாமிய சமூகத்தை அறிமுகம் செய்கிறது. முன்னுரையில் ஆசிரியர் குறிப்பிடுவதுபோல் இது ஓர் விவாதத்திற்குரிய நாவல்.

1981-இல் மீனாட்சிபுரத்தில் நிகழ்ந்த மதமாற்றத்திற்கான சமூகக் காரணிகளையும், மதமாற்ற நிகழ்வுகளையும் நன்றாக உணர்ந்திருக்கும் வாய்ப்பைப் பெற்றவர் நாவலாசிரியர். ஆனால் ‘இவையெல்லாம் கடந்த கால வரலாற்றின் நிகழ்வுகள்’ ஆகிவிட்டன. மதமாறியவர்களின் வாழ்வியல் சிக்கல்கள், நிகழ்காலம் சார்ந்தவை. இதையே நாவலின் கருவாக இவர் எடுத்துக் கொண்டுள்ளார்.

இதனால் கடந்த கால நிகழ்வுகளை முழுமையாகப் பதிவு செய்வதை அவர் தவிர்த்துள்ளார். தாமும் ஒரு நவ்முஸ்லிம் என்பதன் அடிப்படையில் தன் சமூகத்தின் நிகழ்கால அவலத்தை இந்நாவலில் நன்றாகவே பதிவு செய்துள்ளார்.

பொதுவாக, குழும மதமாற்றங்கள் ஒரு கலகச் செயலாக அல்லது எதிர்க்குரலாக நிகழும். அத்துடன் மதம் மாறியவர்களுக்குத் தற்காலிகமாகவேணும் ஒரு பாதுகாப்புவளையமாக அமையும் தன்மையது. மீனாட்சிபுரம் மதம் மாற்றமும் இத்தகையதுதான். ஆனால் ஒரு கட்டத்தில் இதன் தேவை முடிந்துபோய், புதிய சிக்கல்கள் உருவாகின்றன. மீனாட்சிபுரம் தேவேந்திரக்குல வேளாளர்கள் மேற்க்கொண்ட, இஸ்லாமிய மதமாற்றம், சில சமூகக் கொடுமைகளிலிருந்து விடுபட துணை நின்றுள்ளது என்பது உண்மை. ஆனால், ஒரு கட்டத்தில் தேக்கநிலை அடைந்து இறுதியில் தடைகள் ஆகிவிட்டது என்பதே நாவல் விடுக்கும் செய்தி.

-ஆ.சிவசுப்பிரமணியன்

கருப்பாயி என்கிற நூர்ஜஹான் | அன்வர் பாலசிங்கம் பக்: 102 | ரூ.100 | கலங்கைப் பதிப்பகம். திருநெல்வேலி | 9445801247



Sunday, November 13, 2011

நினைவு நதியின் மேல் வீசப்பட்ட கல்

mammutty book

மூன்றாம் பிறை, வாசித்துவிட்டு அடுத்த வேலைக்குச் செல்ல வைக்கிற புத்தகம் அல்ல. யாரிடமாவது அதைப் பற்றிப் பேசாமல் இருப்பதில்லை என்று ஆக்கி வைத்துவிட்ட அந்தப் பிரதியைப் பற்றி என்ன சொல்ல.... அல்லது சொல்லாது எப்படி இருக்க?


மலையாள நடிகர் மம்முட்டி (பிரபல என்ற வழக்கமான அடைமொழியை அந்த நூலின் வாசிப்பு தவிர்க்க வைத்திருப்பது அவரது நூலின் ஆளுமை!) அவர்களது சுயசரிதைப் பிரதியான காழ்ச்சப்பாடு நூலின் மொழிபெயர்ப்பு தான் மூன்றாம் பிறை. வம்சி புக்ஸ் வெளியீடு.

மம்முட்டியின் எளிமை எப்போதும் பேசப்படும் ஒன்று. அதை அவரது நூலும் பேசுவதுதான் ரசமானது. அடிக்கொருதரம் தான் யார் என்று தன்னை அகக் கண்ணாடியில் பார்த்துக் கொள்ளும் அவரது எழுத்தின் மொழிபெயர்ப்பே இத்தனை கவிதையாய் ஒலிக்குமானால், மலையாளத்தில் அது எப்படி வசீகரிக்கும் என்று அறிந்துகொள்ள நெஞ்சு சிறகடிக்கிறது.


வளர்ந்த பிறகும் ஒரு மனிதர் குழந்தை போன்ற உள்ளத்தோடு விஷயங்களை அணுக இயலுமானால் அது வாழ்க்கை அவருக்குக் காட்டும் கருணை என்றே கொள்ள வேண்டும். தவறுகளுக்கு நாணும் தன்மையும், அவற்றைக் கூச்சமின்றி சபையில் எடுத்து வைத்துத் தலைக் குனிவோடு அதிலிருந்து விடுதலை பெற்று வெளியேறும் துணிவும் வாய்ப்பது இயற்கையின் வரமாகவே இருக்க வேண்டும். அடுத்தவரது அதிகார அத்துமீறலை, போலித்தனத்தை, கூசாது பொய்யுரைப் பதை சலனமற்ற ஓடை ஒன்றின் தெள்ளிய நீரைப் போல் தனது கருத்தை அதில் தோய்த்தெடுக்காது பிரதிபலிக்கிற மம்முட்டியின் பக்குவம் இரந்து கோள் தக்கதுடைத்து. 'தன்னை நேசிப்பவரை நாய் நேசிக்கும், பகைவனுக்கருள்வாய் நன்னெஞ்சே' என்ற மகாகவி கலந்து வாழ்கிற பக்கங்கள் இருக்கின்றன இந்தப் புத்தகத்தில்.
தாம் என்னவாக இல்லையோ அதையும் சொல்லி, அப்படி இருக்கலாமே என்று அடுத்தவரோடு சேர்ந்து நின்று உறுதியெடுக்கும் இடங்கள் இந்தப் புத்தகத்தில் மகத்துவம் பெறும் பக்கங்கள்.

கல்லூரி நாட்களில் தமது பெயர் குறித்த அவஸ்தையின் பழைய நினைவு கூரலில் தொடங்கும் அவரது பயணம், விதவிதமான மனிதர்களின் நுழைவையும், அவர்களது வாழ்வில் இவரது நுழைவையும் கலந்து பேசிக்கொண்டு செல்கிறது. நன்றி பாராட்டும் போது மறக்காத பெயர்கள், நன்றி கொன்றவர்களைச் சொல்லும் இடத்து நாகரிகத்தோடு அடையாளமின்றி அடுத்த வரிக்குச் சென்றுவிடுவது கவனத்திற்குரியதாகிறது.


இளம் வக்கீலாக இயங்கிக் கொண்டிருக்கும் இவரை, இவரது முக வசீகரத்தைப் பார்த்து இவருக்குள் ஏற்கெனவே இருக்கும் நடிப்பு தாகத்தை மேலும் தீவிரமாக்குவது மாதிரி, “நீங்கள் ஏன் சார் சினிமாவிற்குச் செல்லக் கூடாது” என்று கேட்கிறான் வழக்கு பற்றி கேட்க வந்த இளம் வாலிபன் ஒருவன். பின் இவரது திரைப் பிரவேசம் நடந்து, ஒரு படப்பிடிப்பு நேரத்தில் சூழ்கிற கூட்டத்தைக் காவல்துறை புகுந்து அடித்து விரட்டும் போது அந்தக் கூட்டத்தில் ரத்தம் தோய்ந்த முகத்தோடு இவரைப் பார்த்துத் தொலைவிலிருந்து வாழ்த்திவிட்டுப் போகும் அதே வாலிபனைப் பார்த்து மம்முட்டி அதிர்வதும், தனது முதல் ரசிகன் அவனே என்று பதிவு செய்வதும் வித்தியாசமான ஓர் அனுபவம்.

வேறு ஒரு சூழலில், மிகவும் பரிச்சயமானவள் போல வந்து பழகிவிட்டுப் போகும் முதியவளும், அவர் ஏற்று நடித்த பாத்திரத்தின் உண்மை உருவமான ஆக்ஷன் பாபுவும் (‘யதார்த்த வாழ்வில் வில்லன் யார், ஹீரோ யார்?’) தமக்கு எல்லாமாக இருந்து திரிந்து பிரிந்து பரிதாப மரணத்தை எய்துகிற உயிர் நண்பன் ரதிஷும்.....போலவே, நீதிமன்றத்தின் வெளியே பிரித்து வைக்கப்பட்டிருந்து, பரஸ்பரக் காதல் மனசு - அடைக்கும் தாழ் இன்றிப் புன்கணீர் பூசல் தருவதாய் ஒன்றிணைத்து விட காதல் இருவர் கருத்தொருமித்து வெளியேறும் மூத்த தம்பதியினரும், மம்முட்டியின் வாழ்வில் வந்து போகிற பிறரும் என்றென்றும் வாசிப்போர் அருகிலேயே குடியிருப்பார்கள் என்றே படுகிறது. அத்தனை அழுத்தமான தாக்கத்தை ஏற்படுத்தும் நிகழ்வுகளின் ஆர்ப்பாட்டமற்ற பதிவு வியப்பூட்டுகிறது.
தம்மை இன்னும் அடையாளம் தெரியாத மனிதர்கள் புழங்கும் அதே பூமியில்தான் மிகப் புகழுடன் தான் இருப்பதான உலா வருகிறோம் என்று ஓர் இடத்தில் அவர் சொல்வது, அவரது பிரகடனம் போலவே ஒலித்தாலும், ஒரு ஞானியின் தெறிப்பு அதில் காணப்படுகிறது. சம காலத்தில் நம்மை விட்டு நழுவிக் கொண்டிருக்கும் மெல்லுணர்வுகள், மனிதப் பண்புகள், பரஸ்பரம் மன்னிக்கும் பேராண்மை.... எல்லாவற்றையும் பற்றிப் பேச வாழ்க்கை அவருக்கு சிறப்பான அனுபவத்தையும், அதைவிட அவற்றை
எடுத்துரைக்கும் தேர்ச்சியான மொழியையும் அருளியிருக்கிறது.
“என் காதல் ஒரு கள்ள நாணயம்”, “லஞ்சத்தின் வேர்”, “சொர்க்கவாசல் திறக்கும் இரவு”, “கடவுள் கண் மூடிக் கொள்ளும் தருணம்”, “துயரத்தின் பாடல்”....என இருபத்து மூன்று உட்பகுதிகளின் தலைப்புகளே, பேசுகிற மனிதரது உளவியலின் பக்கங்களை எடுத்து வைக்கின்றன: காதலைப் பற்றி, கடவுளைப் பற்றி, நோன்பைப் பற்றி, கம்ப்யூட்டரைப் பற்றி, ஆபத்துக் காலத்தில் எதிர்பாராது வந்து உதவும் தன்மைகளைப் பற்றி...தமது சொந்த வாழ்வில் எதிர்கொண்ட நிகழ்வுகளின் பின் புலத்திலிருந்து படரும் சிந்தனைகளை அப்பட்டமாக எடுத்துவைக்கிறார் மம்முட்டி.


ஒரு புன்னகை, கொஞ்சம் உள்ளத்தின் ஆழத்திலிருந்து நேர்மையாகப் புறப்படும் கண்ணீர், வசீகர சிரிப்பு, ஒரு குழந்தையின் கெஞ்சல், ஒரு ஞானியின் வாக்கியம், ஒரு திருந்திய மனத்தின் கேவல், ஒரு தடுமாறிய புத்தியின் அவசர வழி மீட்பு, ஒரு மன்னனின் கம்பீரம், ஒரு கொடையாளியின் தன்னடக்கம், ஒரு காதலனின் மன்னிப்பு கோரல், ஒரு நிம்மதிப் பெருமூச்சு, ஒரு பிரார்த்தனை, ஒரு சூளுரை.... இவை ஒவ்வொன்றும், இவை எல்லாமும் ஒளிரும் வித்தியாசமான அனுபவப் பகிர்வு இந்த நூல்.

 
மம்முட்டி அருகே உட்கார்ந்தபடி தமது வேட்டியின் நுனி காற்றில் பறக்கத் தமது புருவம் உயர்த்திய பார்வையோடும், நினைவு நதியின் மீது அதைக் கலைத்துவிடாத கவனத்தோடு அன்பின் சிறு கல்லை வீசியபடியும் அப்படியே என்னிடம் சொல்லிக் கொண்டிருந்த சுய சரிதையாகவே ஒலித்தது எனக்குள் இந்த வாசிப்பு.


கே. வி. ஷைலஜாவின் மொழிபெயர்ப்பைப் பற்றி இப்படி ஒரு வாக்கியத்தில் சொல்லலாம்: மம்முட்டி இதைத் தமிழில் தாமே சொல்லிவிட்டுப் பின்னர் தான் தமது சொந்த மொழியில் அவராக எழுதியிருப்பார் என்று கொள்ளலாம் போலிருக்கிறது. மிகச் சில இடங்களில் தமிழுக்கு மாற்ற வேண்டாமே என்று அப்படியே மலையாள (வடமொழியைச் சார்ந்த) சொற்களையே விட்டுவிட்ட இடங்களிலும் கூட (நித்ய யௌவனம்!) வாசிப்பிற்கு இடையூறு செய்யாத, குற்றம் சொல்ல முடியாத மொழி பெயர்ப்பு...


மிகக் குறைவான எழுத்துப் பிழைகளையும் மீறி, பரந்த நட்பு வட்டத்தோடு பகிர்ந்து கொள்ளத் துடிக்கும் வாசிப்பு இன்பத்தை வழங்கும் அருமையான நூலாக்கம். நூலின் இலக்கிய, மனிதநேய உள்ளடக்கத்திற்கு வரவேற்பு கூறும் ரசனை மிகுந்த முகப்பு.

-எஸ்.வி.வேணுகோபாலன்

மூன்றாம் பிறை வாழ்வனுபவங்கள்
-மம்முட்டி
வம்சி புக்ஸ், 19 டி எம் சாரோன்,
திருவண்ணாமலை | பக்: 128 | ரூ.80

மரத்தை வெட்டியதும் இந்தப் பறவைகளெல்லாம் எங்கே போகும்?

maram book

வீடு என்னும் தேவை, அளவு ரீதியாகவும் பண்பு ரீதியாகவும் பரவிக்கொண்டே போய் நகரமயமாக்கல் என்ற விசுவரூபம் எடுத்து, மனிதர்களைப் பேய்போல கவ்விப் பிடித்து, அவர்கள் புறவாழ்விலும் எத்தனை எத்தனை மாற்றங்களை ஏற்படுத்திக் கொண்டிருக் கிறது என்பதை அழகாக நாவலாக்கி உள்ளார், எஸ்.அர்ஷியா.

அந்நாவலுக்கு ஓர் அழகான தலைப்பும் வைத்துள்ளார் அவர். பொய்கைக்கரைப்பட்டி. பட்டிகள் எல்லாம் தங்கள் தனித்துவத்தை இழந்து பெருநகரங்களின் அங்கங்களாகிப் போய்க் கொண்டிருக்கிற மாற்றத்தைப் பற்றி அத்தலைப்பே சிந்திக்க வைக்கிறது.


பொய்கைக்கரைப்பட்டி, எத்தகைய ஊர்?

“பதினேழு கிலோ மீட்டர் தொலைவிலிருக்கும் மதுரை நகரில் வெயில் வாட்டியெடுக்கும், ஆனால் மலையைச் சுற்றியிருக்கும் இடங்களில், லேசாகவும் கனமாகவும் மழை பொழிந்திருக்கும். தொடர்ச்சியாகப் பொழியும் லேசான மழையில், மண் குளிர்ந்து பயிர்கள் கம்பீரமாக நிற்கும். கனமழையின் போது, சுற்றியுள்ள மலைகளின் மீதிருந்து அடித்து வரப்படும் மணலும் மூலிகையும் அந்தப் பகுதிக்கு உரமாகி வளம் கூடிவிடும். செம்மண்ணும் மணலும் கலந்த செவல் பூமியது. வேறெங்கும் இதுபோன்ற அமைப்பு இல்லை. எதை நட்டாலும் நாலு நாளில் முளைவிடும். வேர் பிடித்துத் தலை தூக்கும். குச்சியால் ஆழக் குத்தினாலே போதும். பூமியில் ஈரம் கசியும். நாலடி தோண்டினால், வாளியில் தண்ணீர் மொள்ளலாம்”.


இந்த நிலமும் இந்த நிலத்தின் மைந்தர்களும் எப்படியெல்லாம் சிதைந்து போகிறார்கள் என்பதே, நாவலின் மைய இழை!


‘மரத்தை வெட்டியதும், இந்தப் பறவைகளெல்லாம் எங்கே போகும்?' என்று கேட்டுக்கொள்ளும் சமுத்திரக் கனியின் தொழிலே, வீட்டுமனைகளாக விவசாய நிலங்களை மாற்றித்தரும் புரோக்கர் என்பதுதான், வாழ்வின் கோரம். புரோக்கர் என்று சொன்னால் சமுத்திரக்கனி பதறிப்போவார். அவர் அழகர் மலையானுக்கே அவித்துக் கொட்டும் பரம்பரையில் உதித்தவராயிற்றே, பதற மாட்டாரா? உழவுத் தொழில் செய்து அப்பன் சேர்த்து வைத்ததில் வாழக் கொடுத்து வைத்து, அவர் கஜேந்திரக்குமாரின் ‘ஞான ஸ்தானத்தில்’ மீடியேட்டர் ஆகிறார். ‘மரத்தை வெட்டியதும் பறவைகள் எங்கே போகும்?’ என்று தன்னையே கேட்டவர், போட்டி மீடியேட்டர்களால் தலைவேறு முண்டம் வேறாக வெட்டிப் போடப்படுகிறார். இந்த முதல் அத்தியாயமே நாவலுக்கு அற்புதமான தொடக்கமாகக் கச்சிதமாகப் பொருந்திப் போகிறது.
ஆன்மிகத்துக்கும் லௌகீகத்துக்கும் இடையே ஊடாடி, இறுதியில் லௌகீகத்தின் பக்கம் சாய்கிற கஜேந்திரக் குமார் ஆட்டைப்போல அலற வேண்டிய சந்தர்ப்பங்கள் அவர் வாழ்விலும் நேர்கின்றன.

இராமநாதபுரத்திலிருந்து கிளம்பிவந்து ஒண்டக்கூட இடமில்லாமல் இரண்டு இரவுகளைக் கீழ் மதுரை ரயில் நிலைய சிமெண்ட் பெஞ்சில் கழித்த, சாப்பிடக்கூட காசில்லாமல் பசியோடு மதுரைத் தெருக்களில் அலைந்து திரிந்த கடந்த காலத்தை நினைத்துப் பார்த்து, தூக்கம் வராமல் எழுந்து தனது கனவுத்திட்டமான ‘லெவின்ஸ்கி கார்டனுக்கு’ வந்து, அங்கு காலாற நடந்து சுகம் கண்டு, தனது கண்ணுக்கு எட்டாத தூரம்வரை அவரது எல்லை நீண்டிருப் பதாகப்பட்டு, ‘மனசுக்குள் சந்தோஷமாக இருந்தாலும் அது நிறைவுதராமல் இன்னும் இன்னும்’ என்று தாகம் கொள்கின்ற கஜேந்திரக் குமார், ஆட்டைப் போல அஞ்சி நடுங்கி அலற நேர்கிறபோது, அந்தச் செவலையம்மாளை நினைத்தாரோ என்னவோ, அர்ஷியா எதுவும் சொல்வதில்லை. கமுக்கமாய்க் கண் சிமிட்டுகிறார்.


யாரோ ஒரு முகம் தெரியாத அண்ணனின் அதிகாரக் கரங்கள், கஜேந்திரக் குமாரின் மௌன அழுகையைப் பொருட்படுத்தாமல் அவரது உடம்பிலிருந்து எவ்வளவு இயலுமோ, அவ்வளவு மாமிசங்களைக் கொத்துக் கொத்தாக அள்ளிக் கொள்கின்றன. தனிமையாய் இருந்து அந்த மௌன சோகத்தைத் தீர்த்துக் கொள்ளச் சென்ற இடத்தில் மும்பையைச் சேர்ந்த தாதா கும்பலின் உள்ளூர் அடியாட்கள், துப்பாக்கி முனையில் குத்திக் குடைந்து கஜேந்திரக் குமார் என்கிற ஆட்டிடமிருந்து மாமிசங்களை அறுத்துக் கொண்டு போகின்றனர்.

‘ஆடு அலறுதேன்னு கறி திங்காம இருக்கோமா?’ என்ற நியாயம், கஜேந்திரக் குமாருக்கு மட்டும்தானா? ஆட்சி பீட அண்ணனுக்கும் உண்டல்லவா? திரைப்படங்களில் மட்டுமே பார்த்து வந்த துப்பாக்கி முனைக் கொள்ளையர்களுக்கும் உண்டல்லவா?

இந்த நான்கு காட்சிகளையும் இணைத்துப் பார்க்கின்றபோது, மானுட இயல்பு, மானுட வாழ்வின் பொருள் குறித்தெல்லாம், நாவலின் தளத்தில் நின்று பல விசாரணைகள் கிளை வெடிக்கின்றன. அவற்றுள் ஒரு கிளை விசாரணை மட்டும் கஜேந்திரக் குமாரின் நினைவாக, ஒரு சுடுகாட்டில் சிலரிடையே நிகழும் வாதமாக அர்ஷியா படைத்துக்காட்டி உள்ளார். நாவலின் கதைப்போக்குக்கு அது அவசியமற்றதுபோல புறத் தோற்றத்தில் தோன்றினாலும் ஆழ அந்தரத்தில் ஓர் இணைப்பு அல்லது ஓர் அவசியம் இருக்கவே செய்கிறது. இந்நாவலில் பல இடங்களில் இந்தப்போக்கு காணப்படவே செய்கிறது. படிக்கிறபோது ஒரு வேண்டாத துறுத்தலாக இடைஞ் சல் செய்வன எல்லாமே, புத்தகத்தை மூடிவைத்துவிட்டுச் சிந்திக்கின்றபோது, அவசியமான ஒன்றாகவே தோன்றும்படி செய்யும் ரசவாதம், அர்ஷியாவின் கைவண்ணம். அர்ஷியா வெறும் கதை சொல்லி மட்டும்தானா என்ன?
எல்லோரையும் பலிகொண்டு விடுகிற கஜேந்திரக் குமாருக்கும் அவரது மீடியேட்டர்கள் சமுத்திரக் கனி, மலைக்கள்ளன், ஆகியோருக்கும் சவால்விட்டு நிற்பவர் மலைநாட்டான். ‘‘மோசம் செய்துவரும் மழை, வாட்டியெடுக்கும் வெயில், ஏமாற்றிவிடும் விதைகள், விலையேறிப்போன உரம், இடையில் விலை வைக்கும் தரகர்கள் எல்லாமாகச் சேர்ந்தும்’’ கலகலக்க வைக்க முடியாத விவசாயி மலைநாட்டான். ‘சம்சாரின்னா அவர மாதிரி இருக்கணும்' என்று பாராட்டுப் பெற்றவர், அவர். அவர் விவசாயம் பார்க்கும் ஏழு ஏக்கர் மண்ணைச் சேர்த்துவிட்டால், கஜேந்திரக் குமாரின் திட்டம் பூர்த்தியாகிவிடும். அதற்காக அவரை அணுகியவர்களிடம் மலைநாட்டான் சொல்கிற பதிலிலிருந்து தெரிகிறது: நிலம் அவருக்கு வெறும் மண் மட்டுமல்ல; அதற்கும் மேல். அங்கிருப்பவை வெறும் தாவர உயி£¢களல்ல; அவற்றிற்கும் மேல். அது அவர் வாழ்வின் அர்த்தம். அவர் ஏதோ பயிர்களை உண்டாக்கிப் பாதுகாத்து, அறுத்து விற்கும் மனிதனில்லை. அதற்கும் மேல்; ஒரு படைப்பாளி!


அவர் சொல்கிறார் : ‘இது எங்க தாத்தா விட்டதை, எங்கப்பாரு மீட்டு எங்கைல குடுத்துட்டுப் போயிருக்காரு. எங்கப் பாட்டி அங்கம்மாவோட ஆவி, இங்கதான் இருக்குது. எங்கம்மாவையும் இங்கதான் பொதைச்சுருக்கோம். இதோ இது, எம்பொண்டாட்டியோட சமாதி. சொல்லப்போனா இது எங்க குடும்பக் கோவில். யாராச்சும் கோவிலை விப்பாங்களா? அப்படியேன்னாலும் இப்ப இதை விக்கணுங்குற அவசியமில்லையே!'


அப்படியொரு அவசியத்தை உண்டாக்க வல்லவராயிற்றே கஜேந்திரக் குமார். பாதாளம் மட்டும் பாயவல்ல பணம் எதிர்த்திசையில் இமய உச்சிவரை பாயாதா, என்ன? சாட்சாத் ஸ்ரீதேவியின் அருட் கடாட்சத்திற்காக அரசு அலுவலகங்களில், ஆட்சிக் கட்டில்களில் கோப்புகள் மீதேறி தவமியற்றுபவர்கள் கஜேந்திரக்குமாரின் கவலையைத் தங்கள் கவலையாகக் கொள்ள மாட்டார்களா? அவர் கவலையை மாற்றுவதே தங்கள் காரியம் என்று கருதிக் களத்தில் இறங்க மாட்டார்களா?


தண்ணீர் வரும் வழி அடைக்கப்படுகிறது. மலைநாட்டான் தோட்டத்துக்கு வரும்வழி மட்டுமா? அழகர் மலையின் சுந்தர்ராஜப் பெருமாள், ஆண்டுக்கு இரண்டு முறை பக்தர்களுக்கு அருள்பாலித்து உலாப் போகும் தெப்பக்குளத்திற்குத் தண்ணீர்வரும் வழியும் அடைபட்டுவிட்டது. ‘‘தண்ணீரில்லாத தெப்பக்குளத்தின் கரைகளில், பிறர் சுமக்க, தோள்களில் உலா போவதற்கு அவர் வெட்கப்பட்டுக் கொண்ட மாதிரியும் தெரியவில்லை. ஓடையை அடைத்து இடத்தை அபகரித்துக் கொண்டவர்களுடன் அவரும் கூட்டணி வைத்துவிட்டாற்போல. அமைதியாக மலையில் உறங்குகிறார்’’, கடவுளின் கதியே இதுவென்றால்...? மலைநாட்டான், மனிதன்!


நாவல் இப்படி முடிகிறது : ‘‘தண்ணீர் வரும் வழி அடைக்கப்பட்ட பின், மழையும் விழாமல், போரில் தண்ணீரும் வராமல், உயர்ந்துவரும் கட்டிடத்துக்குப் பக்கத்திலிருந்த வாழைத் தோட்டம் கருகிப் போயிருந்தது. அதைப் பார்த்துக்கொண்டே வந்த மலைநாட்டானிடம் செண்பகம் சொன்னாள்: ‘பேசாம நாமளும் இதை வித்துட்டுப் போயிறலாம்ப்பா. தண்ணியுமில்லாம, மழையுமில்லாம எத்தனை நாளைக்குத்தான் இப்டியே பாத்துக்கிட்டுருக்க முடியும்? கடவுளும் நம்மளக் கை விட்டுட்டாரு. வேற வழியில்லப்பா!’’


காதில் விழுந்ததை அமைதியாகக் கேட்டுக்கொண்ட மலைநாட்டான், மகள் முகத்தை நிதானமாகப் பார்க்கிறார்.

சந்திர காந்தன்

காலம் வெளியீடு, மதுரை- 625 002.
பக்: 152 | ரூ.100

மா சே துங் ஒரு மனிதர், கடவுளல்லர்

1934 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம், மாசே துங் தலைமையில் செம்படையினர் அணிவகுத்த நெடும்பயணம் 370 நாட்கள் தொடர்ந்தது. சீன வானில் தோன்றிய சிவப்புக் கீற்று, பெரும் பரிதியாய் ஒளிர்விடத் துவங்கிய மாபெரும் வீர சரித்திரம் அந்தப் பயணம். நெடும்பயணத்தின் 77வது ஆண்டு துவங்கும் இந்தத் தருணத்தில், புரட்சியாளர் மாவோவை, பிரம்மைகளற்று உள்வாங்க வேண்டிய அவசியம் உணரப்பட்டிருக்கிறது.

மாவோ குறித்து எத்தனை புத்தகங்கள் வாசித்திருந் தாலும், இந்த புத்தகத்தை தவறவிட்டுவிடாதீர்கள். ஏனெனில், ஒரு எளிய மனிதன், மாவோ என்ற ஆளுமையை எந்தக் கண் கொண்டு பார்த்தான் என்பதை இதன் மூலம் நீங்கள் அறிந்துகொள்ளப் போகிறீர்கள்.

சீனப் புரட்சிக் காலத்தில் மாவோவிற்கு ஒரு மெய்க்காப்பாளர் குழுவை கட்சி ஏற்படுத்துகிறது. அந்தக் குழுவிற்கு தளபதியாக இருந்தவர் லீயின் கியாயோ. அவரது தகவல்களைத் தொகுத்து குவான் யான்சி என்ற எழுத்தாளர் எழுதிய “மா சேதுங்: ஒரு மனிதர், கடவுளல்லர்!” என்ற புத்தகத்தை பாரதி புத்தகாலயம் வெளியிட்டுள்ளது.

லீயின் கியாயோ, மாவோவின் மெய்க்காப்பாளராகத் தேர்வானதே மிக அலாதியான அனுபவம். மெய்க்காப்பாளர் பணியை மறுத்திடும் லீயின், நான் போர் முனைக்குச் செல்லவே விரும்புகிறேன், “வழிபடுவதை விட கிளர்ந்தெழுவது மேலானது” என்கிறார். இதன் பின்னர் மாவோவும் அவரும் ஒரு ஆறு மாதத்திற்கு ஒப்பந்தம் செய்துகொள்கிறார்கள்.மெய்க்காப்பாளர் எப்படிப்பட்டவர் என்பதை நாம் பின்வருமாறு அறியலாம். ஒருமுறை விமானங்கள் குண்டுகள் பொழிய வட்டமிட்டு, பின்னர் சென்றுவிட்டதை வர்ணிக்கும் அந்த மெய்க்காப்பாளர் போகிற போக்கில் இப்படிச் சொல்கிறார், “எனது பிரார்த்தனைக்கு செவிசாய்த்த மார்க்ஸிடம் நன்றியுணர்வு பொங்க நான் மகிழ்ச்சியில் கிட்டத்தட்டகுதித்திருப்பேன்.” என்கிறார். மார்க்ஸிடம் பிரார்த்தனை மேற்கொண்ட அவரது நடவடிக்கை எத்தனை எளிய மனிதர் என்பதை நமக்கு காட்டுகிறது.அத்தகைய எளியவரின் பதிவுகள், சாதாரண மக்களின் கண்களில் மாவோவின் சித்திரத்தை விவரிக்கிறது. புரட்சியின் உச்சகட்டத்திலும், நவ சீனம் நிறுவப்பட்ட பின்னரும் மாவோவிற்கு உதவியாளராக, அவரின் குடும்பத்தில் ஒருவராக வசித்த அவரின் பதிவுகள் மாவோ குறித்த சித்திரத்தை மிக எளிதாக்குகின்றன.

இப்புத்தகத்தை வாசிக்கும் எவரும் ஒரு நாளிற்கு 24 மணி நேரம்தான் என்ற உண்மையை ஒப்புக் கொள்ளமாட்டார்கள். முழு நேரப் புரட்சியாளர்களாக, ஒரு கம்யூனிஸ்டாக தன்னை வடித்துக்கொள்ள விரும்பும் எவருக்குமே மாவோ ஒரு நட்சத்திரமாக அமைந்திருக்கிறார். “உங்களுடைய பணி, உங்களிடமிருந்து இன்னும் கூடுதல் தியாகங்களைக் கோருகிறது....” (ஊழல் என்னும்) சர்க்கரை தடவிய தோட்டா உன்னைத் துளைத்துவிடாமல் பார்த்துக்கொள்... எளிமையாக இரு; நீ ஊழலில் ஈடுபடாமலிருந்தாலும், ஏதாவது வீணடித்திருக்கிறாயா?, விரயமும் தீங்கானது; அதுதான் ஊழலை நோக்கிய முதல் அடி; சிக்கனமாக இரு, அதைப் பழக்கமாக ஆக்கிக்கொள்” இதுதான் புரட்சியாளர்களுக்கு அவர் முன் வைக்கும் கோரிக்கை. இந்த அறிவுரையை மாவோவும் பின்பற்றினார். அவர் அணிந்த உடைகள் பெரும்பாலும் ஒட்டுப்போட்டவை என்ற செய்தியை லீயின் கியாயோ பதிவு செய்கையில் நம் புருவங்கள் மேலே உயர்கின்றன. போர்க்களமாக இருந்தாலும், தனிப்பட்ட வாழ்க்கையாக இருந்தாலும் முன்னணியில் நிற்கும் மாவோ தன் நடவடிக்கைகளில் அச்சத்தை வெளிப்படுத்தவேயில்லை. மாறாக எந்த சவாலையும் முன்னணியில் நின்று எதிர்த்தார்.

அதற்கு காரணமிருந்தது. ஒரு தலைவரின் சொற்கள் அல்ல, நடவடிக்கைகளே மக்களைக் கவ்விப் பிடிக்கின்றன என்ற உண்மையை அவர் உணர்ந்துவிட்டிருந்தார். மாவோவின் மகள் லீ நே தனது பள்ளிப் படிப்பின்போது, எல்லா மாணாக்கரையும் போலவே நடத்தப்பட்டார். அவரது பசிக்கு போதுமான உணவு என்றைக்கும் கிடைத்திட்டதில்லை. எல்லா மக்களுக்கும் என்ன கிடைக்கிறதோ அதுவே அவர்களுக்கும் கிடைக்க வேண்டும் என்பதில் தெளிவாக இருந்தார். மாவோவின் குழந்தைகள் குறிப்பாக லீ நே குறித்த சில பக்கங்கள் நம்மை நெகிழச் செய்யும். மாவோவின் மகளுக்காக சிலர் கண்ணீர் விடலாம். “வாழ்க்கையின் கடுமையைக் கண்டு அஞ்சுகிறவர்களுக்கானதல்ல இந்த உலகம்.” என்ற வாக்கியத்துடன் அந்தத் தருணத்தைக் கடந்துசெல்கிறார் மாவோ.

அதே நேரத்தில், மாவோ கண்ணீர் விட்டழுத நிமிடங்கள் வேறு. நவ சீனம் நிர்மாணிக்கப்பட்ட பின்னர் நாட்டின் உண்மை நிலை குறித்து அறிந்திட மாவோவால் முடியவில்லை. அவர் மீதான மதிப்பே, அவரை மக்களிடம் நெருங்க விடாமல் செய்தது. அந்த நேரத்தில் தனது உதவியாளரை அனுப்பி கிராம மக்களின் அன்றாட உணவைச் சேகரித்த அவர், அந்த காய்ந்த பெரிய தவிட்டு ரொட்டிகளைச் சாப்பிட முடிவு செய்தார். “நம் நாட்டின் விவசாயிகள் இதைத்தான் உண்கிறார்கள்” என்று அவர் சொல்லியபோது சொந்தக் காரணங்களுக்காக சற்றும் கலங்கிடாத அவரது நெஞ்சம், குழுங்கியது, கண்கள் கசிந்தன.

“மாவோ அழுதார், தனது லட்சியங்களுக்கும் கொடூரமான உண்மைக்கும் இடையில் இருந்த இடைவெளியைப் பற்றிய எண்ணங்கள் ஓடியிருக்க வேண்டும்.” என்று சொல்கிறார் மெய்க்காப்பாளர்.

ஒரு கடுமையான 15 ஆண்டுகாலப் பதிவுகளை உள்ளடக்கிய இந்தப் புத்தகம், மாவோவின் புத்தகக் காதலைப் பற்றி தனி அத்தியாயமே கொண்டிருக்கிறது.

“நாம் கொண்டுசெல்ல முடியாத இந்தப் புத்தகங்களை ஒழுங்காக அடுக்கி வையுங்கள். மார்க்சிய லெனினியத்தைப் பற்றிய இந்தப் புத்தகங்கள் ஹூவின் துருப்புகளுக்கு நன்மையளிக்கக் கூடும்” தோழர்களுக்கு மட்டுமல்லாது, பகைவர்களுக்கும் மார்க்சிய லெனியத்தின் வழிகாட்டுதல் கிடைக்கச் செய்திட விரும்பியவர் மாவோ.


எல்லா சமயங்களிலும் அவர் புத்தகங்களை இவ்வாறு விட்டுச் சென்றதில்லை. மாறாக அவர், தான் செல்லுமிடத்திற்கெல்லாம், சிறந்த புத்தகங்களோடே பயணத்தை மேற்கொண்டார்.

அதைப்போல, நாமும் கையில் வைத்துக் கொண்டு பயணிக்க வேண்டிய மிகச் சிறந்த புத்தகம் இது. மிகச் சுவாரசியமான நடையைக் கண்டிருக்கிறார் மொழிபெயர்ப்பாளர் மிலிட்டரி பொன்னுசாமி. ஒரு தலைவரை மதிப்பீடு செய்வதை யுத்தகாலச் சவால்கள் சுலபமாக்கிவிடுகின்றன என்றார் ரிச்சர்டு நிக்சன். இந்தப் புத்தகம் அத்தகைய சவால்கள் நிறைந்த தருணங்களை நம்மிடம் பதிவு செய்கிறது.

-இரா.சிந்தன்

மா சே துங் ஒரு மனிதர், கடவுளல்லர்
குவான் யான்சி | தமிழில்: மிலிட்டரி பொன்னுசாமி 
பக்: 288 | ரூ.140 | பாரதி புத்தகாலயம் 


Friday, January 14, 2011

இடதுசாரிகளுக்குள் கருத்துப்பரிமாற்றம் - ஏன்? எவ்வாறு?




சமூக மாற்ற இலட்சியம் கொண்ட ஒவ்வொருவரும் உள்ளவாங்க வேண்டிய சிந்தனைகளை இந்நூல் அலசுகிறது. தற்போது ‘21-ம் நூற்றாண்டில் சோசலிசம்’ என்று பேசுபவர்கள், மூன்று வகையினர்.

(1) சோவியத் பின்னைடைவை மனதில் கொண்டு லெனினியம் வரையறுத்துள்ள அரசு, கட்சி பற்றிய நிர்ணயிப்புக்களையும் கோட்பாடுகளையும் உதறித்தள்ளிவிட்டு, முதலாளித்துவத்திற்கு மாற்றான ஒரு சமூகத்தை அமைக்க விரும்புவோர். இது, ‘சீர்திருத்தப்பட்ட முதலாளித்துவம்’ அல்லது ‘‘மனிதநேய முதலாளித்துவத்தை’’ ஆதரிப்பதில் சென்று சரணாகதி அடைகிறது.

(2) உலகில் உள்ள அரசுகளின் தன்மையில் ஏற்பட்ட மாற்றங்கள், வேகமான மூலதன திரட்சி, சோசலிசத்தை நடைமுறைப்படுத்துவதில் ஏற்பட்ட சிக்கல்கள், தவறுகள் ஆகியன அனைத்தையும் அலட்சியப்படுத்திவிட்டு புதியவற்றை மட்டையடியாக மறுத்திடும் சோசலிசவாதிகள். இது, சோசலிச இயக்கங்கள் மக்களிடம் தனிமைப்பட்டு பலவீனப்படும் நிலையை உருவாக்குகிறது.

(3) முதலாளித்துவ அரசு அதிகாரத்தில் ஏற்பட்டுள்ள புதிய பலத்தை உணர்ந்து, தெரு, தேசம், உலகம் ஆகிய அனைத்து மட்டங்களிலும் உயிர்த்துடிப்பு மிக்க மக்கள் இயக்கங்களை பன்முக உத்திகள் மூலம் உருவாக்குவது; இதற்கு வழிகாட்டுகிற, மார்க்சிய-லெனினியத்தில் தேர்ந்த, ஒரு புரட்சிகர கட்சியை வளர்ப்பது; காலம் காலமாக குறுகிய தளத்தில் மட்டும் செயல்படுகிற நிலையை மாற்றி விரிவாக்கம் காண்பதற்கான படைப்பாற்றல் மிக்க முன்முயற்சிகளை இடைவிடாது மேற்கொள்வது; இத்தகையோர், மார்க்சிய லெனினிய கோட்பாடுகளை கைவிடமாட்டார்கள். மார்க்சியத்தை தொடர்ந்து மறுவாசிப்புக்கு உள்ளாக்குவார்கள்.

(1), (2) வகையினர், கம்யூனிச இலட்சியங்களை முன்னெடுத்துச்செல்ல பயன்படமாட்டார்கள். (3) வகையினரே, இன்றைய காலத்தின் தேவை. இந்த வகையிலான சமூக மாற்றப் போராளிகளின் தலைமுறை ஒன்றை உருவாக்க இந்நூலும், நூலாசிரியரின் இதர நூல்களும் பயன்படும். புதிய சிந்தனை வேண்டும் என்றால் என்ன? அனைத்தையும் இயக்கத்தில் காண்பதுதான். மாற்றம் நிகழும் நிகழ்ச்சிப்போக்கை அறிந்து, நடைமுறையை தீர்மானிப்பதுதான். ஏங்கெல்ஸே புதிய சிந்தனைக்கு ஆதரவு நல்கியிருக்கிறார்.

ஒரு கட்டத்தில், ‘‘சோசலிச சமுதாயம் என்று அழைக்கப்டும் சமூகமும் மாறாதது அல்ல. இதர சமூக அமைப்புக்கள் போன்றே அதுவும் இயக்கத்தில் உள்ளது; மாற்றத்திற்கு உட்பட்டது’’ என்று எழுதினார். தனது இறுதி நாட்களில் மார்க்சியத்தை வறட்டுத்தனமாகப் பயன்படுத்தும் போக்கு குறித்து ஏங்கெல்ஸ் கவலை கொண்டிருந்தார்.

அன்றைய சோவியத் யூனியனில் நிகழ்ந்த நவம்பர் புரட்சிக்குப் பிறகு உலகில் ஏராளமான மாறுதல்கள் நிகழ்ந்துள்ளன. “இன்று மூலதனம் உலகின் தொலைதூரப் பகுதிகளுக்கெல்லாம் செல்கிறது; ...ஏக காலத்தில் உலகளாவிய அளவில்... செயல்படும ஆற்றலுடையதாக இருக்கின்றது...நிதி உலகில்... பல்லாயிரக்கணக்கான கோடி டாலர்கள் சில நொடிகளில் இடம் மாறும்’’ என்றவாறு புதிய நிலைமைகளை ஆசிரியர் விளக்குகிறார்.

இந்திய சூழலில் மக்கள் வாழ்வாதார அடித்தளமும் ஆட்டம் கண்டு வருகின்றது. ‘‘இன்று உலகமயமாக்கப் பட்டுக் கொண்டிருப்பது முதலாளித்துவச் சுரண்டல் அன்றி வேறில்லை என்பதை மறந்துவிடக்கூடாது’’ என்று குறிப்பிட்டு சுரண்டலும் தீவிரமான வடிவமெடுத் திருப்பதை விளக்குகிறார் ஆசிரியர்.

இந்நிலையில் உலக இடதுசாரி இயக்கங்கள் எத்தகு அμகுமுறையைக் கடைபிடிக்க வேண்டும்? இதில்தான் பல வித கருத்தோட்டங்கள் அறிவுத்தளத்தில் மோதி வருகின்றன.

சர்வதேசம், தேசம், உள்ளூர்மட்டம் :

ஒவ்வொரு நாட்டின் தலைமைபீடமாகச் செயல்படுவது அரசு இயந்திரம். சமீப ஆண்டுகளில், புதிய தாரளமயச் சூழலில் அரசுகளின் தன்மையில் பெருத்த மாறுதல்கள் ஏற்பட்டுள்ளன. அவற்றை உள்வாங்குவது முதன்மையான கடமை.

அரசு அதிகாரம் எவ்வாறு மாறி வருகிறது என்பது முக்கியமான பிரச்சனை. உலகமயமாக்கல் சூழலில், உலகப்பன்னாட்டு மூலதனத்தின் அசுர வளர்ச்சி ஏற்பட்டு வருகின்றது. இதன் காரணமாக ஒவ்வொரு நாட்டின் தேசிய அரசு அதிகாரம் மங்கி விடுகின்றதா? தேசிய அரசுகள் பலவீனமடைந்து விட்டதா? உலக மூலதன சக்திகளின் அதிகாரம் மட்டுமே இன்று நிலைப்பெற்று விட்டதா? அப்படியானால் முதலாளித் துவத்தை வீழ்த்தும் போராட்டம், தேச எல்லைகளைத் தாண்டி, உலகந்தழுவிய இயக்கங்களால்தான் நடத்திட முடியுமா? தேசத்திற்குள் நடத்தப்படும் மக்கள் இயக்கங் களின் தாக்கம் என்ன?

இவற்றை விவாதிப்போர், இரு முகாம்களாக பிரிந்து விடுகின்றனர். ‘தேச எல்லைக்குட்பட்ட இயக்கங்கள் காலாவதியாகிவிட்டன. இனி சர்வதேச மட்டத்திலான இயக்கங்களே தேவை’ என்று கூறி, அதற்கு சான்றாக, சியாட்டில் போன்ற இடங்களில் நடைபெற்ற உலகமயமாக்கல் எதிர்ப்பு இயக்கங்களை பிரித்துக்காட்டு கின்றனர். மற்றொரு பிரிவினர், சர்வதேச அளவிலான முயற்சிகளை அலட்சியப்படுத்திவிட்டு, தேச அளவிலான இயக்கங்களுக்கே முன்னுரிமை என கருதுகின்றனர்.

நூலாசிரியர் இப்பிரச்சனையில் பொருத்தமான ஒரு முடிவுக்கு வருகின்றார். தேசிய அரசுகளின் முக்கியத்துவமும் அவற்றின் அதிகாரச் செல்வாக்கும் நீடிக்கின்றன. அதே நேரத்தில் இன்றைய உலகச்சூழலில் அவை அதிகாரத்தைப் பிரயோகிப்பதில் பல மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன.

ஏழு நாடுகள் உள்ளடங்கிய குழு புதிய தாராளமயத்தை உலகம் முழுவதும் திணிப்பதில் அதிகாரமட்டத்திலுள்ள அவர்களது செல்வாக்கு வெளிப்படுகிறது. இதையட்டி பல ஏழை நாடுகள் இதனை எதிர்க்க முடியாமல் பலவீனமடைந்துள்ளதைக் காண முடிகிறது. அதே நேரத்தில் தேசந்தழுவிய மக்கள் போராட்டமும், அத்துடன் இணைந்த சர்வதேச அளவிலான போராட்டங்களும் இந்த ஏகாதிபத்திய உலகமயமாக்கலை தடுத்து நிறுத்த முனைகின்றன. எனவே, தேசமா? சர்வதேசமா? என்பதற்கு பதில் இரண்டு தளத்தில் இணைந்து நடக்கும் போராட்டங்களே இன்றைய காலத்தின் தேவை. நூல் முழுவதும் இந்த அμகுமுறை யோடு பிரச்சனைகளை அலசியுள்ளார் ஆசிரியர்.

தேசம், சர்வதேசம் என்பது மட்டுமல்லாது, இவற்றோடு இணைய வேண்டிய மற்றொரு முக்கியமான தளம் ஒன்று உள்ளது. அதுதான், உள்ளூர் மட்டம் சார்ந்து மக்களைத் திரட்டும் முயற்சிகள். நூலில் இத்தகு முயற்சிகள் வெகுவாக முக்கியத்துவம் கொடுத்து பேசப்படுகின்றன.

எடுக்கப்பட்ட ஒவ்வொரு சமூகக்குழுவும் தங்களது பிரச்சனைக்களுக்காகப் போராடுகின்றனர். ஒவ்வொரு குழுவிற்கும் அரசின் மீதான அதிருப்திகள் எழுகின்றன. குடியிருப்பு, தொழிற்சாலை, கல்விக்கூடங்கள் என அவரவர் சார்ந்த தளங்களில் வாழ்வாதார உரிமைகளுக் கான போராட்டங்கள் எழுகின்றன. ஒரு புரட்சிகர கட்சியின் கிளை அமைப்பு இத்தகு பல்வேறு குழுக்களை ஒருங்கிணைக்கும் சங்கமம் ஆக செயல்பட வேண்டும். இந்த கருத்தாக்கம் இலத்தீன் அமெரிக்கா மட்டுமல்லாது உலகம் முழுவதுமுள்ள இடதுசாரிகளுக்கும் பொருந்தும். போராடுகிற சமூக குழுக்களிடம் மார்க்சிய தத்துவக் கல்வி அளிக்கும் வாய்ப்புக்களை பயன்படுத்துவது அவசியம் என ஆசிரியர் வலியுறுத்துகிறார். அன்றாட உரையாடல்களும், ஜனநாயக உணர்வோடு அமையும் விவாதங்களும் தேவை என ஆசிரியர் கூறுகிறார்.

தகுந்த வாய்ப்பு கிட்டும் போது உள்ளாட்சி மன்றங்களில் தேர்ந்தெடுக்கப்படும் வாய்ப்பையும் பயன்படுத்த வேண்டும் பல நாடுகளின் உள்ளாட்சி அரசுகளின் அனுபவங்களை விளக்கி, இந்த முயற்சியில் விளையும் தவறுகளையும் சுட்டிக்காட்டுகிறார். இந்தியாவிலும் இடதுசாரி கட்சிகள் உள்ளாட்சி மன்றங்களில் செயல்பட்டு வரும் நிலையில், ஆசிரியரின் கருத்துக்கள் ஆழமாக உள்வாங்க வேண்டியன. உள்ளாட்சி மன்றச் செயல்பாட்டின் மூலம் மக்களை இடதுசாரி அரசியல் சிந்தனைக்கு பககுவப்படுத்தும் கலையில் தேர்ச்சி பெற வேண்டியுள்ளது. இதையட்டிய சிந்தனையைத் தூண்ட இந்நூல் பயன்படும்.

தேர்தல்களும் இடதுசாரி மேலாண்மையும் :

இதே போன்றே, தேர்தல்களில் இடதுசாரிகள் பங்கேற்கும் நடைமுறை பற்றியும் ஆசிரியர் அலசுகிறார். தேர்தல் பிரச்சாரமும் தேர்தல் செயல்பாடுகளும் ‘‘அடிப்படையில் (மக்களுக்கு) கற்பிக்கும், அறிவூட்டும் கண்ணோட்டத்துடன்’’ செயல்பட வேண்டு மென்பதையும், ‘‘மக்களின் உணர்வையும் மக்கள் இயக்கத்தையும் பலப்படுத்துவதற்கு’’ தேர்தல் பணிகளை பயன்படுத்தவும் வலியுறுத்துகிறார். இவ்வாறு செய்தால், ‘‘தேர்தல் முடிவுகள் திருப்தி அளிக்காது போனாலும், பிரச்சாரத்திற்கு செலவழிக்கப்பட்ட நேரமும், முயற்சியும் வீணாகிப்போகாது’’ என்கிறார் அவர்.

பெரும்பான்மையான மக்கள் முதலாளித்துவக் கட்சிகளின் செலவாக்கில் உள்ளபோது, அவர்களை வர்க்க உணர்வு பெற்றவர்களாக முற்போக்கு சிந்தனைக்குக் கொண்டு வருவது எப்படி? அவர்கள் இருக்கும் அமைப்புக்களோடு இடதுசாரி அமைப்புகள் எப்படி உறவு கொள்ள வேண்டும்? இது போன்ற பிரச்சனைகள் இலததீன் அமெரிக்காவில் மட்டுமல்லாது, இந்தியாவிலும் இடதுசாரிகள் எதிர் கொள்ளும் முக்கியப் பிரச்சனைகள்.

கருத்தியல் தளத்தில் மேலாண்மை பெற இடதுசாரிகள் முயற்சிக்க வேண்டும் என்பதையும், கருத்தியல் தளம் அல்லாத வழிகளில் மேலாதிக்கம் செலுத்த விழையும்போது ஏற்படும் மோசமான விளைவுகளையும் அவர் விளக்குகிறார். இதர கட்சிகள், அமைப்புக்களோடு பிரச்சனைகள் அடிப்படையில் கூட்டு சேரும்போது, தங்களது சித்தாந்தங்களை இதர புதிய மக்களிடம் கொண்டு செல்லும் வாய்ப்புக்கள் அறியப்பட்டு, அவற்றை இடதுசாரிகள் பயன்படுத்த வேண்டும்.

சீர்திருத்த நடவடிக்கைகள் குறித்து இடதுசாரிகளின் அμகுமுறை எப்படி இருக்க வேண்டுமென்று ஆசிரியர் மார்த்தா விளக்குகிறரர். ‘சீர்திருத்தத்தை புறக்கணிக்கக் கூடாது; அதே நேரத்தில் புரட்சியையும் புறக்கணிக்கக்கூடாது’ என்ற ரோசா லக்சம்பர்க் சிந்தனை சார்ந்து மார்த்தாவின் விளக்கம் சரியாகவே அமைந்துள்ளது.

ஆனால், சீர்திருத்தம் பேசியவர்கள் முதலாளித்துவத்திடம் சரணாகதி அடைவது, இடதுசாரிகள் கோரிய சீர்திருத்த நடவடிக்கைகள் ஆளும் முதலாளித்துவ வர்க்கங்கள் தங்களது செல்வாக்கை தக்க வைத்துக்கொள்ள உதவுகிற நிகழ்வுகளாக மாறுவது போன்றவை பற்றி ஆழமாக விவாதிக்கப் படவில்லை.

இவை கடந்த காலத்தில் நிகழ்ந்ததால் ‘சோசலிசம்’ என்ற கருத்தையே தவிர்த்து, ‘‘கம்யூனிசம்’’ ‘‘கம்யூனிஸ்ட் நோக்கு’’ (நீஷீனீனீuஸீவீst லீஹ்ஜீஷீtலீமீsவீs) என்ற கருத்தாக்கப் பதங்களை ஆலென் பதேயூ, ஸ்லாவாஜ் சிசேக் போன்ற மார்க்சிய சிந்தனையாளர்கள் பயன்படுத்துகின்றனர். சிசேக், ஒருபடி மேலேசென்று, இவ்வளவு நெருக்கடிக்குப் பிறகும் முதலாளித்துவத்தை பாதுகாப்பது சோசலிசம்தான் என்று வாதிடுகிறார். எனவே, ‘சீர்திருத்தம்’ ‘மக்கள் நல அரசு’ ‘நலத்திட்டங்கள்’ என்பவை குறித்த அμகுமுறையில் எச்சரிக்கை தேவைப்படுகிறது.

ஆசிரியர் மார்த்தா கையாளும் சில பிரச்சனைகள் இங்கு குறிப்பிடப்பட்டுள்ளன. ஆனால், நூலில் அவர் விளக்கும் கருத்துக்கள் விரிந்த பரப்பு கொண்டவை. இவற்றை வாசிப்பது அவசியம். அத்துடன், விவாதிப்பதும் அவசியமே. ஆனால் இத்துடன் நின்றுவிட்டால், எவ்வித பலனும் ஏற்படாது. நடைமுறையில் இவற்றை உரசிப்பார்க்க வேண்டும். மக்களைத் திரட்டும் பணியே, சிறந்த ஆசான்.

இடதுசாரிகளுக்குள் கருத்துப் பரிமாற்றம் நிகழ்வது, புதிய பார்வைகளுக்கும் புதிய நடைமுறைகளுக்கும் வழிவகுக்கும். ஆனால் அது மார்க்சியமும், லெனினியமும் வரையறுத்த தடத்தில் இருந்தால்தான், பலன் கிட்டும். அத்தகு கருத்துப் பரிமாற்றம் நிகழ்த்திட வழிகாட்டும் சிறந்த கையேடு இது. இந்தக் கருத்துப்பரிமாற்றத்திற்கான வரையறை, முக்கிய கருப்பொருள்கள் அனைத்தும் கொண்டதாக இந்நூல் விளங்குகிறது.

சில ஆண்டுகளுக்கு முன்பு ஆங்கிலத்தில் இந்நூலைப் படித்த போது, புதிய சிந்தனையை உள்வாங்கிய மலர்ச்சி ஏற்பட்டது. அதே வகையான உணர்வு, அசோகன் முத்துசாமியின் மொழிபெயர்ப்பை வாசிக்கும்போதும் ஏற்படுகிறது. அனைத்து இடதுசாரி போராளிகளும் தங்களது பாதையை செப்பனிட இந்நூல் துணைபுரியும்

இடதுசாரிகளும் புதிய உலகமும்

மார்த்தா ஹர்னேக்கர்

தமிழில்: அசோகன் முத்துசாமி

பக்:200 | ரூ.110

Tuesday, January 4, 2011

பர்மியப் போராளிகள்: உலுக்கும் கேள்விகள்


ஜார்ஜ் பெர்னாண்டஸ் பாதுகாப்புத்துறை அமைச்சராக இருந்த பொழுது வட கிழக்கு மாநிலங்களில் ஆயுதம் கடத்துவோருடன் அவருக்கு தொடர்பு உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. சில மாதங்கள் இச்செய்தி பரபரப் பாக பேசப்பட்டது. அப்புறம் வழக்கம் போல் இதனை இந்திய சமூகம் மறந்துவிட்டது.

உண்மையில் அவர்கள் ஆயுதக்கடத்தல் காரர்கள் இல்லை. பர்மாவின் ராணுவ சர்வாதிகாரத்திற்கு எதிராக போராடும் போராளிகள். அவர்களை நம்ப வைத்து வஞ்சித்த வர் இந்தியாவின் உயர் ராணுவ அதிகாரி லெப்டினன்ட் கர்னல் கிரேவால் என்பதை எத்தனை பேர் அறிவர்?

கண்ணால் காண்பதும் பொய்; காதால் கேட்பதும் பொய்; பத்திரிகைகளில் வந்த செய்திகளும் பொய்; தீர விசாரித்து அறிவதே மெய். ஆம். இந்த விவகாரம் நமக்கு உணர்த்துவது இதைத்தான்.

இன்னும் இந்தியச் சிறைகளில் வாடும் அந்த 36 பர்மியப் போராளிகள் கதையைத் துருவிப் பார்த்தால், திகி லூட்டும் திருப்பங்கள் நிறைந்த துப்பறியும் புனை கதை களை விஞ்சும் மர்ம முடிச்சுகள் நிரம்பக்கிடக்கின்றன.

வஞ்சகம் என்பதின் முழுப் பொருளாய் அந்த ராணுவ அதிகாரி இருந்தார் என்பது மட்டுமல்ல; இந்திய ராணுவத்தில் பணியாற்றிக்கொண்டே பர்மிய ராணுவ ஆட்சிக்கு உளவு பார்த்தார், சேவகம் செய்தார் என்பதை படிக்கிறபோது அதிர்ச்சியும் பல ஆழமான கேள்விகளும் நம்முள் எழும்.

நந்திதா ஹச்சர் எழுதிய ‘வஞ்சக உளவாளிகள்’ என்ற நூல் ‘பர்மா போராளிகளை ஏமாற்றிய இந்திய ராணுவம்’ என்கிற துணைத் தலைப்போடு நம்மிடம் நூலின் உள்ளடக்கத்தை பகிரங்கப்படுத்திவிடுகிறது. ஆயினும் ஒவ்வொரு பக்கமும் மர்மக் கதைபோல் நம்மை இழுத்துச் செல்கிறது.

இந்நூல் அந்த 36 பர்மியப் போராளிகள் விடு தலைக்கான போராட்டங்களை விவரிக்கிற முயற்சிதான். அதுதான் இந்நூலின் அடிப்படை நீரோட்டம். ஆயினும் பர்மாவின் வரலாறும் அங்கு ஜனநாயகத்துக்காக தொடரும் கிளர்ச்சிகளும் இந்நூல் நெடுக விரவிக் கிடக்கிறது. இந்தியாவின் வெளிநாட்டுக் கொள்கையில் ஏற்பட்ட தடுமாற்றமும், மாற்றமும் பர்மாவின் ஜன நாயகப் போராட்டங்களை சிக்கலாக்கிவிட்டதையும் அத் தோடு பிணைந்த பல்வேறு அரசியல் சிக்கல்கள் முடிச்சு களையும் இந்நூல் பேசுகிறது.

ஆக பர்மா போராளிகள் சிறைப்பட்ட கதை - பர்ம ஜன நாயகப் போராட்ட கதை - இந்திய வெளியுறவு கொள்கை குழப்பக்கதை என மூன்றும் கலந்ததே இந்நூல் எனில் மிகை அல்ல.

“அண்டை நாட்டில் சர்வாதிகாரம் கோலோச்சுகிற போது நம் நாட்டில் ஜனநாயகம் இருக்க முடியுமா? ஜன நாயகத்தை மீட்க பர்மிய மக்கள் நடத்தி வரும் போராட் டத்துக்கு ஆதரவு அளிப்பது நம் தார்மீகக் கடமை என்று தனிப்பட்ட முறையில் நம்புகிறேன்” என்று கேப்டன் லட்சுமி முன்னுரையில் கூறியிருப்பது பொருள்மிக்கது. இவர் இடதுசாரி கட்சிகள் சார்பில் இந்தியக் குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிட்டு தோற்றவர். ஆனால் வெற்றி பெற்ற அப்துல் கலாம், பர்மா இராணுவ ஆட்சியோடு கைகுலுக்கினார் என்பதும் சம்பந்தம் இல்லாத செய்தி கள் அல்லவே.

பர்மாவில் ஏன் இன்னும் ராணுவ ஆட்சி நீடிக்கிறது? பர்மாவில் தொடரும் அரசியல் கிளர்ச்சிகள் மிருகத் தனமாக நசுக்கப்படும்போதும் உலக நாடுகள் மவுனம் காப்பது ஏன்? ஆங் சான் சூகி இன்னும் வீட்டுச் சிறையில் இருப்பது ஏன்? விருதுகள் வழங்கி அவரைக் கவுரவித்த இந்திய அரசு தற்போது ராணுவ சர்வாதிகாரியுடன் கூடிக் குலவுவது ஏன்? வங்கதேச விடு தலைக்கு ஆதரவுக்கரம் நீட்டிய இந்திய அரசு பர்மாவில் கைகட்டி வேடிக்கை பார்ப்பது ஏன்? அமெரிக்க ஏகாதிபத்தியம் எப்படி ராணுவ ஆட்சியை ஆதரிக்கிறது? சீனா அங்கு சர்வாதிகார ஆட்சிக்கு துணை போவது ஏன்? அப்பப்பா புற்றீசல்போல் புறப் படும் கேள்விகள் பலவற்றுக்கு இந் நூல் விடை தேட முயன்று இருக்கிறது. அது இந்நூலின் மையப் பொருளல்ல, எனினும் இணைத்து பேசியிருப்பது தவிர்க்க இயலாத தேவையின் கட்டாயமே!

பர்மாவின் பெயர் மியான்மர் எனவும், ரங்கூன் நகர் யாங்கோன் எனவும் மாற்றப்பட்டது கூட ஒரு உள்நோக்கம் கொண்டது. பர்மா எனும் தேசம் உருவாக காத்தூலே என்ற தேசம் பலியிடப்பட்டதி லிருந்தே சோகம் தொடங்குகிறது. பர்மாவின் வரலாறு பல்வேறு இனக்குழுக்களின் சுயஅடையாளத்தை அழித்து உருவானதா? அல்லது ஐக் கியத்தில் உருவானதா? இதை புரிந்துகொள்ள இந்நூல் உதவும்.

“ரங்கூனிலோ, தில்லியிலோ, வாஷிங்டனிலோ உட்கார்ந்து கொண்டு வரலாற்றைப் படிப்பது வேறு; கோஹிமா, ஹர்லேம் அல்லது மனேர்ப்ளா போன்ற ஊர்களில் இருந்துகொண்டு வரலாற்றைப் புரிந்து கொள்வது வேறு. நான் கரோனியர்களுக்காகவும், ஆரக்கானியர்களுக் காகவும் வாதாடுகிறேன். ஆகவே அவர்கள் எவ்வாறு அனுபவித்தார்களோ அவ்வாறே அரசியலையும் வர லாற்றையும் நான் புரிந்து கொண்டாக வேண்டும்” என நூலாசிரியர் உறுதியாகக் கூறுகிறார். இவர் விடுதலைக் காக குரல் கொடுக்கும் இந்த 36 பேரும் ஆரக்கானியர்களும் கரேனியர்களும் என்பதைச் சொல்லவும் வேண்டுமோ?

பர்மாவுக்கும் நமது வடகிழக்கு மாநிலங்களுக்கும் உள்ள தொடர்பு எல்லை வழி பூகோளத் தொடர்பு மட்டுமா? அல்லது அதற்கும் மேலா?

நூலாசிரியர் தன் அனுபவத்தை கீழ்க்கண்டவாறு ஓரிடத்தில் பதிவு செய்கிறார், “வடகிழக்கு மாநிலங்க ளைச் சேர்ந்த மாணவர்கள் மற்றவர்களோடு ஒரே விடுதியில் இருந்தாலும் வெவ்வேறு உலகங்களில்தான் வாழ்ந்து கொண்டிருந்தார்கள் என்பதை நான் பார்த்தேன்”.

இது மிகவும் நுட்பமான பதிவு. இந்தியாவின் மாநிலங்களாக தொடர்ந்தாலும் வடகிழக்கு மாநில மக்களா யினும் காஷ்மீர் மக்களாயினும் நம்மோடு வாழாமல் அவர்களுக்கான ஓர் உலகில் வாழ்வது ஏன்? யாரோ தூண்டிவிடுவதால் மட்டும்தானா? அப்படி நாம் நம் பினால் முட்டாள்களின் சொர்க்கத்தில் வாழ்கிறோம் என்றே பொருள். தேசிய இனப்பிரச்சனைகள் பர்மா வாயினும், இந்தியாவாயினும் புதிய வடிவம் கொள்வது குறித்து ஆய்வு செய்ய வேண்டிய கட்டாயம் உள்ளது.

எண்ணை வளமும் வர்த்தக நலனும் ஒரு நாட்டின் வெளிநாட்டுக்கொள்கையில் ஆதிக்கம் செலுத்தும் போது மக்களின் சுயவிருப்பங்கள் காலில் போட்டு மிதிக்கப்படுவதுதானே நிகழும். இதன் கோரப்பலியே 36 பர்மாக் கைதிகள் சிறைபட்டதும்; அவர்களின் தலை வர்கள் இந்திய தீவொன்றில் சுட்டுக் கொல்லப்பட்டதும்; ஒரு ராணுவ அதிகாரியால் மோசமாக வஞ்சிக்கப்பட்ட தும்; அந்த அதிகாரி தப்பிச் சென்று தண்டனையின்றி சுகபோகத்தில் திளைப்பதும். இந்நூலில் நன்கு பதிவாகியுள்ளது.

ஜனநாயகத்துக்காக பர்மாவில் நடக்கும்போரில் துறவிகள் பங்கேற்றது ஆச்சரியமான விஷயம். ஆனால் நிலைமை அவ்வளவு முற்றிபோயுள்ளது. அங்கே ராணுவ சர்வாதிகாரத்திற்கு எதிரான போராட்டத்தில் ஆயுதங்கள் மட்டுமல்ல. ஜட்டிகளும் ஆயுதமானது வேடிக்கையானது. மக்களின் உணர்வை வெளிப்படுத் தும் அளவுகோலாகும்.

பெண்களின் உள்ளாடைகளை வைத்திருக்கும் ஆண்கள் தங்கள் வலிமையை இழந்துவிடுவார்கள் என் பது பர்மாவின் பழமையான மூடநம்பிக்கை. ராணுவ சர்வாதிகாரிகளும் இதற்கு விதிவிலக்கல்ல. இதனைப் பயன்படுத்திக் கொண்டு பெண்கள் தங்கள் உள்ளாடைகளை ராணுவ சர்வாதிகாரிகளுக்கு தபாலில் அனுப்பும் “அமைதிக்கான ஜட்டிகள்” இயக்கம் நூலில் இடம் பெற்றுள்ள கொசுறுச் செய்தி. எனினும் கொதி நிலையை காட்டும் செய்தி.

பர்மாவின் நண்பனாக காட்சி அளித்த `அங்கிள்’ என அழைக்கப்பட்ட ஜார்ஜ் பெர்னாண்டஸ் ஏன் திடீ ரென மாறினார்? தேசபக்தி மிக்கவர் எனக் கருதப்படு கிற விஷ்ணுபகத் தளபதி பொறுப்பிலிருந்து ஏன் நீக்கப் பட்டார்? நேர்மையான தளபதி என பெயரெடுத்த விஷ்ணு பகத் மோசமான ஊழல் ராணுவ அதிகாரி என்ற கூறப் பட்ட விவகாரத்தில் வாய் மூடி இருந்தது ஏன்? அடே யப்பா..... தோண்டத் தோண்ட கேள்விகள். ‘மனித உரிமை’ பற்றிய பேச்சு கானல் நீர் தானோ?

வெறும் துரோகம், வஞ்சகம், ஏமாற்று, அவமானம், இவைகளின் வரலாறாக மட்டுமல்ல; தோள்கொடுக்க முன்வரும் இடதுசாரிகள், துணை நிற்கும் மனித நேயர்கள் பற்றிய செய்திகளும் நாமறிய வேண்டிய முக்கிய அம்சங்களே.

“தாவர உணவுக்காரரான அந்த ஹரியானா விவசாயிக்கு தன் வீட்டில் குடியிருக்கும் மாட்டுக்கறி உண்ணும் ஆப்கானியரோடு எந்தச் சிக்கலும் இல்லை. அந்த இஸ்லாமியர் பர்மாவிலிருந்து வந்த பன்றிக்கறி சாப்பிடுபவரை அன்புடன் வரவேற்கிறார் (உணவளிக் கிறார்). அதை கவனித்த நான் சமூகப் பணியாளர்க ளிடம் ‘இதையெல்லாம் அரசாங்கத்துக்குச் சொல்லி விட வேண்டாம். அவர்களுக்குத் தெரியவந்தால் அந்த விவசாயியின் வீட்டுக்குள்ளேயே ஒரு மதக்கலவரத் தைத் தூண்ட ஏற்பாடு செய்துவிடுவார்கள்! என்றேன்:!” இவ் வாறு நூலாசிரியர். ஓரிடத்தில் குறிப்பிட்டுள்ளார். இந்த சின்ன சம்பவம் பல பெரிய செய்திகளை கூறவில்லையா?

இந்த நூலைப் படிக்கிறபோது பல ஐயங்கள் எழும். இந்திய ராணுவக் கொள்கையும், வெளிநாட்டுக் கொள் கையும் ஆபத்தான திசையில் வேகமாக சென்று கொண்டிருக்கின்றன. இது நமது இயல்புக்கு முரணா னது. புதிய உலகச் சூழலில் தாராளமயத்தின் விளைவு இது.

பர்மா - இந்திய மக்கள் உறவு தொப்புள்கொடி உறவு போன்றது. ஆனால் இந்தியா துரோகம் செய்கிறது. அப்படியெனில் இங்கே தெற்கே இலங்கைத் தமிழர் நம் தொப்புள்கொடி உறவுக்கு இந்திய அரசும் இந்திய ராணுவமும் நியாயம் வழங்கி இருக்கும் என்று நம்ப முடியுமா? என்னுள் நெடுநாள் ஆழமாக பதிந்த சந்தேகம் இந்நூல் மூலம் மேலும் வலுப்பட்டது.

ஜான்பெர்கின்ஸ் எழுதிய “ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்கு மூலம்” என்ற நூலைப் போல இந்த நூலும் நடப்பு அரசியலை புரிந்து கொள்ள விழிகளைத் திறக்கும் சாவியாகும் என்பதில் ஐயமில்லை.

இது மொழிபெயர்ப்பு நூல் என்பதை அட்டையில் தமிழில் அ. குமரேசன் என்று போட்டுள்ளதால் மட்டு மே அறிய முடியும். நூலைப்படிக்கிற யாரும் மொழி பெயர்ப்பென்று கூற முடியாது. அப்படியொரு நீரோட்ட நடை. அ. குமரேசனுக்கு பாராட்டுகள்!

வஞ்சக உளவாளி

-பர்மா போராளிகளை ஏமாற்றிய

இந்திய ராணுவம், நந்திதா ஹச்சர்.

தமிழில்: அ. குமரேசன், கிழக்குப் பதிப்பகம்

33/15 எல்டாம்ஸ் சாலை,

ஆழ்வார்பேட்டை, சென்னை-600 018.

பக். 228, விலை ரூ. 170

Tuesday, December 14, 2010

கவனமுடன் படிக்க வேண்டிய நூல்...


இஸ்லாமியத்தை ஆன்மிக அடிப்படையில் அறிந்து கொள்ள திருக்குரான், நபி வழி தொகுப்பான அதீஸ் ஆகியவை உதவுகின்றன. இவை ஆண்சார்ந்த நலன்களின் அடிப்படையிலேயே அர்த்தப்படுத்தப்பட்டுள்ளன. புனித நூல்களில் பெண்ணிய கோட்பாட்டை விளக்க மறைக்கப்பட்ட பகுதிகளை மறுவாசிப்பு செய்ய ஹெச்.ஜி.ரசூல் எழுதிய “இஸ்லாமியப் பெண்ணியம்” என்கிற இந்த நூல் பயன்படும்.

Sunday, December 12, 2010

அடிப்படைகளின் மீது ஒரு விசாரணை!

                                
 வரலாறு எப்போதும் மனிதர்களின் விருப்பமாகவே இருந்துள்ளது. தங்களது முன்னோர்கள் வாழ்ந்த முறையை கற்றுணர விருப்பமற்ற மனிதனை கானுதல் அறிது. கடந்த கலங்களின் நாகரீகங்களை, வாழ்வியல் முறையை அறிந்துக்கொள்வதிலும் தங்களை அத்துடன் அடையாளப் படுத்திக்கொள்வதிலும் மனித சமூகம் ஒருவித பெருமிதம் கொள்கிறது.

Labels

Coca Cola (1) Peak Oil (1) Permaculture (1) Power of Community (1) Renewable energy (1) Solar energy (1) SOPA (1) sustainable agriculture (1) அ.குமரேசன் (6) அங்காடிதெரு (1) அணு ஆற்றல் (2) அணுமின் (1) அண்ணா (4) அண்ணா நூலகம் (1) அதிர்ச்சி (1) அத்வானி (2) அந்நிய முதலீடு (2) அபிநயா (1) அப்துல் கலாம் (1) அப்பணசாமி (2) அமெரிக்கா (20) அம்பானி (1) அம்பேத்கர் (9) அரசியல் (177) அரசியல்.நிகழ்வுகள் (6) அரசு (14) அரசு மருத்துவமனை (1) அரசு விடுதி மாணவர்கள் (1) அரவான் (1) அருந்ததியர் (1) அர்ஜெண்டினா (1) அலசல் (1) அவலம் (19) அழகு (1) அறிமுகம் (1) அனுபவம் (28) அன்னா ஹசாரே (1) அஜயன் பாலா (1) ஆ.ராசா (1) ஆணையம் (2) ஆதவன் தீட்சண்யா (3) ஆப்கானிஸ்தான் (1) ஆப்பிரிக்கா (2) ஆர்.மீனா (1) ஆர்எஸ்எஸ் (2) ஆவணப்படம் (3) ஆனந்தன் (2) இ.எம்.ஜோசப் (1) இ.பா.சிந்தன் (22) இட ஓதுக்கீடு (3) இடஒதுக்கீடு (1) இடதுசாரிகள் (4) இணையம் (2) இதழ்கள் (6) இந்தியா (69) இந்துத்துவா (8) இந்துஜா (1) இமு (2) இமு டிச11 (5) இமு நவமபர் 2011 (6) இயக்கம் (7) இயக்குனர் ஷங்கர் (1) இரா.சிந்தன் (5) இரா.செழியன் (2) இரா.நடராஜன் (3) இராம.கோபாலன் (1) இல.சண்முகசுந்தரம் (2) இலக்கியம் (38) இலங்கை (6) இலங்கைத் தமிழர் (4) இலவசக் கல்வி (1) இலவசங்கள் (1) இளவரசன் கொலை (1) இளைஞர் முழக்கம் (11) இஷ்ரத் (2) இஸ்ரேல் ஆக்கிரமிப்பு (1) இஸ்லாம் (3) ஈராக் (1) ஈரான் (2) உ.வாசுகி (1) உச்ச நீதிமன்றம் (1) உணவு நெருக்கடி (2) உதயசங்கர் (1) உத்தப்புரம் (1) உயர்கல்வி (2) உரையாடல்கள் (2) உலக சினிமா (4) உலகமயம் (5) உலகம் (46) உளவியல் (1) உள்ளாட்சி (1) உள்ளாட்சித் தேர்தல் (1) ஊடகங்கள் (14) ஊடகம் (8) ஊழல் (30) எடியூரப்பா (1) எம்.எப்.ஹூசேன் (1) எம்.சிவக்குமார் (2) எரிசக்தி (1) எல்.கே.ஜி (1) என்.ஜி.ஓ (1) என்கவுண்டர் (1) எஸ். பாலா (1) எஸ்.கண்ணன் (1) எஸ்.கருணா (3) எஸ்.பி.ராஜேந்திரன் (3) எஸ்.வி.வேணுகோபாலன் (2) ஏகாதிபத்தியம் (13) ஏமன் (1) ஒபாமா (4) ஓம்பிரகாஷ் வால்மீகி (1) ஓளிப்பதிவு (1) ஃபாக்ஸ்கான் (1) கச்சத் தீவு (1) கட்டுரை (51) கட்டுரைகள் (2) கணிணி (2) கணினி தொழில் நுட்பம் (1) கமல்ஹாசன் (1) கம்யூனிசம் (12) கருணாநிதி (11) கருத்து சுதந்திரம் (1) கருத்துரிமை (3) கலைஞர் (6) கல்வி (14) கவிதை (21) கவிதைகள் (1) கறுப்புப்பணம் (3) கனிமொழி (2) காங்கிரஸ் (10) காதல் (2) கால்பந்து (1) காவல்துறை (4) காஷ்மீர் (1) கி.பார்த்திபராஜா (1) கிங்பிஷர் (1) கியூபா (4) கிரீஸ் (1) குடும்பம் (1) குட்டி ரேவதி (1) குப்பன் சுப்பன் (1) குலாத்தி (1) குழந்தைகள் (9) குழந்தைகள் கடத்தல் (1) குஜராத் கலவரம் (1) குஜராத் படுகொலைகள் (1) கூகிள் அந்தரங்கம் (1) கூடங்குளம் (2) கே.சாமுவேல்ராஜ் (1) கே.பாலமுருகன் (1) கேள்விகள் (1) கைப்பற்றுவோம் போராட்டம் (1) கோவில் (1) ச.தமிழ்ச்செல்வன் (1) ச.மாடசாமி (1) சக்திஜோதி (1) சங்கமம் (1) சசிகலா (1) சச்சின் (1) சட்டசபை (2) சட்டம் (4) சத்யஜித் ரே (1) சந்திரகாந்தன் (1) சமச்சீர் கல்வி (4) சமவூதியம் (1) சமூக நீதி (2) சமூக வலைத்தளம் (1) சமூகப் பாதுகாப்பு (2) சமூகம் (177) சம்பு (1) சரத் பவார் (1) சர்வதேச பெண்கள் தினம் (1) சல்மான் ருஷ்டி (1) சா.கந்தசாமி (2) சா.செயக்குமார் (1) சாகித்திய அகாதமி விருது (1) சாக்லேட் (1) சாதீயம் (4) சாரா விஜி (2) சாலிம் அலி (1) சி.பி.எம் (9) சிக்கிம் (1) சிந்தனை (5) சிபி (1) சிராஜுதீன் (1) சில்லரை வர்த்தகம் (4) சிறப்பு பொருளாதார மண்டலங்கள் (1) சிறுகதை (12) சினிமா (52) சினிமா செய்திகள் (4) சினிமாச் செய்திகள் (4) சீத்தாராம் யெச்சூரி (2) சு.பொ.அகத்தியலிங்கம் (2) சு.வெங்கடேசன் (1) சுகாதாரம் (1) சுதிர் ரா (1) சுயமரியாதைத் திருமணம் (1) சுவாரசியம் (1) சுற்றுப்புறச் சூழல் (3) சூர்யா (1) செம்மலர் (4) செம்மலர் அக் 2011 (4) செய்திகள் (112) சென்னை (1) சோவியத் (1) சோஷலிசம் (1) டெல்லி (2) டேம் 999 (1) த.தமிழரசி (1) தகவல் உரிமை (1) தகவல் திருட்டு (2) தண்ணீர் (3) தமிழக மீனவர்கள் (1) தமிழகம் (66) தமிழர் (1) தமிழ்ச் சினிமா (1) தமிழ்நதி (1) தமுஎகச (4) தலித் (21) தற்கொலை (1) தனியார்மயம் (4) தனுஷ் (1) தி.க (2) திமுக (1) திரிணாமுல் (1) திருப்பூர் (2) திருமணம் (2) திரைக்குப் பின்னால் (2) திரைத்துறை (1) திரைப்பட விழா (1) திரைப்படம் (4) தினகரன் (1) தினமணி (3) தீக்கதிர் (9) தீண்டாமை (22) தீண்டாமையின் அடையாளங்கள் (1) தீபாவளி (1) தேசியச் செய்திகள் (4) தேர்தல் (4) தொண்டு நிறுவனங்கள் (1) தொலைக்காட்சி (2) தொழிலாளர் (6) ந.பெரியசாமி (1) நகர்ப்புற விவசாயம் (1) நகைச்சுவை (1) நக்கீரன் (1) நதிம் சயித் (1) நந்தலாலா (1) நந்தன் (1) நரேந்திர மோடி (6) நலத்திட்டங்கள் (2) நவம்பர் புரட்சி (1) நாடகம் (1) நாடாளுமன்றத் தேர்தல் 2014 (2) நாணய மதிப்பு (1) நாறும்பூநாதன் (1) நிகழ்வுகள் (154) நிலப்பிரபுத்துவம் (1) நிலமோசடி (1) நீதித்துறை (2) நீலவேந்தன் (2) நுகர்வுக் கலாச்சாரம் (2) நூல் அறிமுகம் (12) நூல் வெளியீடுகள் (1) நெல்சன் மண்டேலா (1) நேட்டோ (2) நையாண்டி (26) நையாண்டி் (14) ப.சிதம்பரம் (3) பசுபதி (1) படுகொலை (3) படைப்புகள் (2) பட்ஜெட் (1) பணவீக்கம் (2) பதிவர் வட்டம் (3) பதிவர்வட்டம் (1) பதிவுலகம் (1) பரிந்துரைகள் (5) பழங்குடி (1) பள்ளிக்கூடம் (1) பறவைகள் (1) பன்னாட்டுக் கம்பெனிகள் (3) பா.ஜ.க (3) பாகிஸ்தான் (2) பாடல் (5) பாதல் சர்க்கார் (1) பாதுகாப்பு (1) பாரதி (2) பாலபாரதி (1) பாலஸ்தீனம் (1) பாலியல் வன்முறை (6) பாலு மகேந்திரா (1) பால் சமத்துவம் (1) பாஜக (1) பி.சுகந்தி (1) பி.ராமமூர்த்தி (1) பிடல் காஸ்ட்ரோ (3) பிரணாப் முகர்ஜி (1) பிரபாத் பட்நாயக் (3) பிரளயன் (2) பிரிட்டன் (1) பிர்தவ்ஸ் ராஜகுமாரன் (1) பிளின் (1) பு.பெ.நவமபர் 2011 (1) புகைப்படங்கள் (1) புதிய பரிதி (2) புது விசை (12) புதுமை (1) புத்தக அறிமுகம் (2) புத்தகக் கண்காட்சிகள் (2) புத்தகம் (18) புத்தகம் பேசுது (17) புத்தகம் பேசுது நவம்பர் 2011 (8) புத்தகாலயம் (2) புத்தாண்டு (1) புபே (2) புபே டிச11 (8) புரட்சி (2) புவி (1) புவி டிச11 (5) புவி நவ 2011 (7) புனைவு (1) புஷ் (1) பெட்ரோல் (7) பெண் (11) பெண் விடுதலை (1) பெண்குழந்தை (1) பெண்ணியம் (9) பெண்ணெழுத்து (1) பெரியார் (2) பெருமுதலாளிகள் (7) பேட்டி (2) பேரா.சிவசுப்பிரமணியன் (2) பேஸ்புக் (1) பொருளாதார நெருக்கடி (2) பொருளாதாரம் (24) போக்குவரத்து (1) போராட்டம் (15) போலீஸ் தாக்குதல் (3) ப்ரிசம் (4) ப்ரிசம் - தகவல் திருட்டு (7) ப்ரியா தம்பி (1) மக்களுக்கான மருத்துவம் (1) மக்கள் நலப்பணியாளர்கள் (2) மக்கானா (1) மத அடிப்படை வாதம் (1) மதவெறி (3) மதுசூதனன் (1) மம்தா (3) மம்முட்டி (1) மரபணு (1) மலாலாய் சோயா (1) மவோயிஸ்டுகள் (1) மன்மதன் அம்பு (1) மன்மோகன்சிங் (10) மா ற்று (1) மாட்டுக்கறி (1) மாதர் சங்கம் (1) மாதவராஜ் (2) மாவோ (1) மாற்ற (1) மாற்று (223) மின்கட்டணம் (1) மின்சாரம் (1) மீள்பார்வை (2) முதலாளி (1) முதலாளித்துவம் (11) முத்தமாக மாறேன் (1) முத்துக்கண்ணன் (1) முல்லைப் பெரியாறு (7) முறைகேடுகள் (5) மெகாசீரியல் (1) மே.வங்க அரசு (1) மே.வங்கம் (1) மேதினம் (1) மேற்கு வங்கம் (1) மொக்கை (1) மொழி (2) மொழிபெயர்ப்பு (1) மோசடி (1) மோடி (3) மோனிகா (1) யுத்தம் (2) ரத யாத்திரை (1) ரமேஷ் பாபு (2) ராகுல் காந்தி (2) ராடியா (2) ராஜ பக்‌ஷே (1) ரிலையன்ஸ் (1) ருமேனியா (1) லட்சுமணப்பெருமாள் (2) லெனின் (2) லோக்பால் (5) வசந்த பாலன் (1) வண்ணக்கதிர் (1) வரலாறு (19) வலைப்பூக்கள் (1) வழக்கு விசாரணை (1) வாசிப்பு (5) வாச்சாத்தி (1) வால் ஸ்டிரிட் (3) வால்மார்ட் (1) வால்ஸ்டிரிட் போராட்டம் (2) வாழ்க்கை (4) வானியல் (2) விக்கிபீடியா (1) விக்கிலீகஸ் (1) விக்கிலீக்ஸ் (7) விஞ்ஞானம் (2) விமர்சனம் (10) விலையேற்றம் (2) விலைவாசி (11) விலைவாசி உயர்வு (2) விவாதங்கள் (1) விவாதம் (9) விளம்பரம் (1) விளையாட்டு (4) வினவு (1) விஜய் (2) விஜய் மல்லையா (1) வீட்டுவசதி வாரியம் (1) வீரமணி (2) வெண்மணி (2) வெள்ளம் (2) வெனிசுவெல்லா (1) வேலையின்மை (2) வோடாபோன் (1) ஜப்பான் நெருக்கடி (2) ஜாக்கிசான் (1) ஜாதி (1) ஜாபர் பனாகி (1) ஜூலியன் அசாங்க (1) ஜெயலலிதா (9) ஜோதிடம் (1) ஸ்டீவ் ஜாப்ஸ் (1) ஸ்பீல்பர்க் (2) ஸ்பெக்ட்ரம் (6)