Showing posts with label பொருளாதாரம். Show all posts
Showing posts with label பொருளாதாரம். Show all posts

Friday, June 28, 2013

ரூபாய் மதிப்பு வீழ்ச்சி 2 - (இந்திய ரூபாய்- அமெரிக்க டாலர் தொடர்பு)

இந்தியா விடுதலை அடையும்வரை, அதன் வெளிநாட்டுத் தேவைகளைப் பெற இங்கிலாந்து நாட்டின் "பவுண்ட்' மதிப்பீட்டின் பேரில் பெரும்பாலாக உடன்பாடுகள் செய்யப்பட்டன.

இந்திய விடுதலைக்குப் பிறகு, உலக மார்க்கெட்டில் அமெரிக்க டாலர் வலிவான இடத்தைப் பெற்றுவிட்டது. அமெரிக்க டாலருடன் இந்திய ரூபாயைத் தொடர்புபடுத்தவேண்டிய கட்டம் ஆரம்பமானது. 1947 ஆகஸ்டு 15 அன்று ஒரு டாலருக்கு ஒரு இந்திய ரூபாய் என்று கணிக்கப்பட்டது.

அதற்குப் பிறகு 1951 முதல் ஐந்தாண்டுத் திட்டங்களை நிறைவேற்ற வெளிநாட்டு மூலதனம் பெரிதும் தேவைப்பட்டது. மேலும் 1962 அக்டோபர் மாதத்தில் சீனப் படைகளின் ஆக்கிரமிப்பு வந்தது, அடுத்து 1965-இல் மேற்கு எல்லைப்புறத்தில் பாகிஸ்தான் படையெடுப்பு தலைதூக்கியது. இந்தியப் பாதுகாப்புக்கான ராணுவத் தளவாடங்களைப் பெருமளவில் பெறவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. வெளிநாட்டுக் கடன்களைப் பெறவேண்டிய நிலைமையும் ஏற்பட்டது.

1966-இல் தாஷ்கண்டில் லால்பகதூர் சாஸ்திரி இறந்ததும், காங்கிரஸ் தலைவர் காமராஜரின் பெருமுயற்சியால் இந்திரா காந்தி பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். உலகப் பொருளாதாரத்தைக் கட்டுப்படுத்தும் உலக வங்கியும், சர்வதேசச் செலாவணி நிதியமும் (ஐ.எம்.எப்) இந்திய ரூபாயின் மதிப்பீட்டைத் திருத்தியாக வேண்டும் என்று இந்திய அரசாங்கத்தை வற்புறுத்தின. உலகப் பொருளாதார நிலைமைகளைப் பற்றி பிரதமர் இந்திரா காந்திக்கு குறுகிய கால அளவில் மிகவும் தெரிந்திருக்கும் வாய்ப்பு இல்லை. இந்திய அரசாங்கத்தின் பொருளாதார நிபுணர்களுக்கும் வேறு வழி தெரியவில்லை.

1966 ஜூன் 6, இந்திய ரூபாய் மதிப்பை 35.5 சதவிதத்துக்குக் குறைத்துவிடுவது என்று இந்திரா காந்தியின் அரசு முடிவு செய்தது. வானொலி மூலம் அறிவிப்பதற்கு சற்று முன்னதாக காங்கிரஸ் தலைவர் காமராஜருக்கு இந்த முடிவை இந்திரா காந்தி தெரிவித்தார். ஒரு தடவையில் மூன்றில் ஒரு பங்குக்குமேல் ரூபாய் மதிப்பைக் குறைப்பதில் காமராஜருக்கு கடும் கவலையும் கோபமும் உண்டானதாம். எதையும் லட்சியம் செய்யாமல் இந்திரா காந்தி தமது முடிவை வெளியிட்டுவிட்டார்.

இது பற்றி காமராஜர் தனது நெருங்கிய நண்பரிடம், இந்திரா காந்தியைப் பிரதமராக ஆக்கியதில் தாம் பெரிய தவறைச் செய்துவிட்டதாகக் கூறினார். மேலும் அவர் சொன்னது ""அவர் மிகப் பெரிய மனிதரின் மகள்; சிறிய மனிதனான நான் மிகப்பெரிய தவறைச் செய்துவிட்டேன்''.
இந்திரா காந்தி ஆட்சிக்காலத்தில் (1966 ஜனவரி-1977 மார்ச்) ஆரம்பித்து, கட்டுப்பாடற்ற முறையில், ஏற்றுமதியைவிட இறக்குமதி அதிகமாகி, ரூபாயின் மதிப்பு சரிந்துகொண்டே போனது.

ஒரு டாலருக்கு இந்திய ரூபாய் மதிப்பீடு 1970-ல் ரூ.7.47, 1975-ரூ8.4, 1985-ரூ.12.36, 1990-ரூ.17.5 என்றானது.

1991 ஜூன் மாதத்தில் உலகளாவிய சந்தைப் பொருளாதாரக் கொள்கையை நிதியமைச்சர் மன்மோகன் சிங் அறிவித்தார். பன்னாட்டுச் செலாவணி அமைப்பின் (ஐ.எம்.எப்.) வற்புறுத்தலின் மீது, ஒரு டாலருக்கு ரூ.24.58 என இந்திய அரசாங்கத்தினால் இந்திய ரூபாய் மதிப்பீடு குறைக்கப்பட்டது.
அதன் பிறகு ரூபாய் மதிப்பீடு மார்க்கெட் நிலவரப்படி படிப்படியாகக் குறைந்துகொண்டே வந்துள்ளது.

பின்வரும் விவரங்களில் குறிப்பிட்ட ஆண்டுகளில் ஒரு டாலருக்கு எவ்வளவு ரூபாய்கள் என்ற விவரங்கள் தரப்பட்டுள்ளன. 1996 (32.43), 2001 (45.00), 2006 (ரூ 45.17), 2011 (ரூ. 46.61) 2012 (ரூ. 53-34)
ஆயினும் திடீரென்று 2012-இல் டாலருக்கு 53 ரூபாய் என இருந்த நிலைமை மாறி இந்த ஆண்டு வேகமாக 2013 ஜூன் 27 (இந்தக் கட்டுரையை எழுதும் நேரத்தில்) ரூ60.62 என ரூபாயின் மதிப்புக் குறைந்துவிட்டது.
ரூபாய் மதிப்புக் குறைகிறது என்றால் வெளிநாட்டிலிருந்து நமது நாட்டுக்குத் தேவையான பண்டங்களுக்கு அதிகமான அளவு டாலர் பணத்தில் நாம் தரவேண்டும்.

இது ஏழை, நடுத்தர வகுப்பு மக்களைத்தான் அதிகமாகப் பாதிக்கும். வெளிநாட்டிலிருந்துதான் பெரும் பகுதியான பெட்ரோல்-டீசல் உற்பத்திக்கான கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யவேண்டி இருக்கிறது.
டீசல் விலை அதிகமாகிறது என்றால் அதனால் சரக்குக் கட்டணம் உயரும். பயணிகளின் போக்குவரத்துக் கட்டணமும் உயர்த்தப்படும். காய்கறிகள், பால் முதல் பிற பண்டங்களின் விலையும் கணிசமாக உயரும்.

முன்பு பெட்ரோல் - டீசல் விலைகளை அரசாங்கம் முடிவு செய்து நாடாளுமன்றத்தில் தெரிவித்து வந்தது. அப்பொழுது மக்கள் பிரதிநிதிகள் காட்டும் எதிர்ப்பினால் அரசாங்கம் சற்றுப் பின்வாங்கும்.
தற்காலத்தில, அந்தந்த பெட்ரோலியக் கம்பெனியே விலைவாசிகளை உயர்த்திக் கொள்ளும் அதிகாரத்தை மத்திய அரசாங்கம் தந்துவிட்டது. பொதுமக்களிடமிருந்து வாங்கிய வரிப்பணத்தை வைத்து அல்லது அரசாங்கத்தினால் வாங்கப்படும் கடன்களை வைத்துதான் பொதுத்துறையில் பெட்ரோலியக் கம்பெனிகள் வந்தன. இவைகளுடன் போட்டி போட்டு, தனியார் நிறுவனமான ரிலையன்ஸ் கம்பெனி ஆதரவில் ஒரு பெட்ரோல் - டீசல் தயாரித்து விற்பனை செய்யும் வியாபார அமைப்பு வேகமாக வளர்ந்து வருகிறது.

மக்களின் பிரதிநிதிகளாக அரசாங்கமும் அரசாங்கத்தால் உண்டாக்கப்படும் நிறுவனங்களும் செயல்படாமல், கோடீஸ்வரர்களின் பிரதிநிதிகளாக ஆகிவிட்டன.

தமிழில் பொருள் பொதிந்த சொல் "நாணயம்'. அந்த சொல்லுக்குப் பொருள் "நேர்மை', "முத்திரையிட்ட காசு'. மாடுகளுக்குப் போடப்படும் "மூக்குக்கயிறு'.
அரசாங்கம் வெளியிடும் காசாக இருந்தாலும் காகிதப் பணமாக இருந்தாலும், அதில் "நேர்மை' இருக்க வேண்டும். நேர்மைக்குக் கட்டுப்படாத அரசாங்கத்தை மக்கள் பார்த்து "மூக்குக் கயிறு' போட்டு அடக்க வேண்டும்.

கட்டுரையாளர்:
இரா.செழியன், நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர்.
(நன்றி: தினமணி 27.06.2013)

ரூபாய் மதிப்பு வீழ்ச்சி - 1 (பணம் என்பதன் உட்பொருள்)


ஆதிகாலத்தில் மனிதன் மரங்களில் - குகைகளில் தங்கி, காடுமேடுகளில் சுற்றி காய்கனிகளைப் பறித்து, பிராணிகளை வேட்டையாடி வாழ்ந்து வந்தான். அதற்குப்பின், நெருப்பை உண்டாக்கவும் பயன்படுத்தவும் ஆரம்பித்து, ஆறு - ஏரிகள் அருகில் குடிசைகளை -குடும்பங்களை அமைக்கவும் விவசாயத்தின் மூலம் உணவுப் பண்டங்களை உற்பத்தி செய்யவும் ஆரம்பித்தான்.

பண்டமாற்று முறை:

தனக்கும் தனது குடும்பத்தினருக்கும் உள்ள தேவைகளை தனிப்பட்ட ஒரு மனிதனால் முழுமையாக பூர்த்திசெய்ய முடியாது. அதனால் தான் உற்பத்தி செய்யும் பண்டத்துக்கு ஈடாக தனக்குத் தேவையான மற்றொரு பொருளை உண்டாக்குபவனிடம் சென்று தனது பொருளைக் கொடுத்து, தனது தேவைக்கான பொருளை அவனிடமிருந்து பெறும் "பண்டம் மாற்றும் முறை' உருவானது.

பண்டமாற்று முறையில், கொடுப்பது வாங்குவது இரண்டும் ஒரே தடவையில் நடைபெற்று முடிந்துவிடும். ஒரு படி நெல்லுக்குப் பதில் மூன்று முட்டைகள், பத்து கோழிகளுக்கு ஈடாக ஒரு ஆடு, பதினைந்து மாடுகளுக்குப் பதில் ஒரு குதிரை என நேரடியாக இருவருக்குள் பண்டமாற்றுமுறை நடைபெற்றது.
உப்பை மட்டும் தயாரிக்கிற ஒருவன் அதை எடுத்துக்கொண்டு ஊர் ஊராகச் சுற்றி வரவேண்டும்; வாழைத் தோட்டத்தில் பாடுபட்டு, விளையும் வாழைப் பழங்களை உடனடியாகப் பண்டமாற்று முறையில் மாற்றவில்லை என்றால், பழங்கள் விரைவில் கெட்டுவிடக் கூடும்.

நேரடியான பண்டமாற்று முறையில் உள்ள சங்கடங்களைச் சமாளிக்க, உப்பு, தேயிலை, ஆடு-மாடுகள், புகையிலை, பாதாம் பருப்பு போன்று "பொதுவாக' எல்லோருக்கும் தேவைப்படும் பொருள்களில் ஒன்றை மாற்றி இன்னொன்றைப் பெற்றுக்கொள்ளக்கூடிய முறை பழக்கத்தில் வந்தது.
அடுத்து இடையில், ஒவ்வொருவருக்கும் தேவைப்படும் பொருள்களை எல்லாம் நேர்மையான முறையில் மதிப்பீடு செய்து அதற்கான மைய அடையாளத்தை வைத்துக்கொண்டு, உற்பத்தியான பொருள்களை அவற்றுக்கான மதிப்பீட்டு அடையாளங்களைத் தந்து - தேவையானவற்றை வாங்கி - மற்றவர்களுக்குத் தரும் முறையில், உற்பத்தி செய்பவனுக்கும் வாங்குபவனுக்கும் இடையில் பொதுவான மதிப்பீடும் ஒரு ஏற்பாடாக வந்தது. பொதுவான இந்த மதிப்பீட்டு அடையாளம்தான் "பணம்' என்பது.
முதலில் "பொன்' கட்டிகளை உருவாக்கி, அதன் கனத்தை வைத்து எல்லாவற்றயும் வாங்க - விற்க முடியும் என்ற முறை வந்தது. பிறகு வட்ட வடிவில் காசுகள் தங்கம், வெள்ளி ஆகியவற்றில் வெளிவந்தன. அவற்றை நேர்மையாக நடத்த அந்தக் காசுகளில் அரசாங்க முத்திரை பதிக்கப்பட்டது. நாளடைவில் மன்னரின் உருவத்தைப் பதித்து பொற்காசு, வெள்ளிக்காசுகள் போடப்பட்டன.

உலோகங்களில் காசுகள் வருவது 7,000 ஆண்டுகளுக்கு முன்பு - அதாவது கி.மு. 5000 காலத்தில் பழக்கத்துக்கு வந்துவிட்டது. குறைவான மதிப்பீடுகளுக்காக வெண்கலம், இரும்பு ஆகியவற்றிலும் காசுகள் வந்தன. பொன்-வெள்ளி ஆகியவற்றால் ஆன காசுகளுக்கு இருந்த வரவேற்பு மற்ற உலோகங்களின் காசுகளுக்கு இயல்பாகக் கிடைக்காது.

இந்திய ரூபாய் வரலாறு
ஆப்கானிஸ்தானத்தைச் சேர்ந்த ஷெர்ஷா சூரி, மொகலாய மன்னர் பாபர் படையில் பங்கு பெற்று, அவருக்குப் பிறகு வங்காளத்தில் தளபதியாகப் பணிபுரிந்தார்; பாபருக்குப் பிறகு ஹமாயூன் காலத்தில் வங்காளம், பிகார் பகுதிகளை வென்று தில்லியில் 1540-45 வரை ஐந்தாண்டுக் காலம் ஆட்சியில் இருந்தார். அவருடைய ஆட்சியில் "ருப்யா' என்ற வெள்ளிக் காசு வெளியிடப்பட்டது. அந்தப் பெயரில் தொடர்ந்து ரூபாய் நாணயங்கள் வெளிவந்தன, ஆங்கிலேயர் காலத்திலும் அவர்களின் சக்ரவர்த்தி - சக்ரவர்த்தினி உருவங்கள் பொறிக்கப்பட்ட ரூபாய், காசுகள் வெளிவந்தன.

காகிதப் பணம்
பொன்-வெள்ளி உள்பட பல உலோகங்களை வைத்து காசுகள் இருந்த காலத்தில், நாட்டில் பெருமளவில் வணிகம் பெருகியதால் வணிகர்களிடம் குவிகிற பணம் தூக்க முடியாதபடி கனமானது. அதிலும் சீன நாட்டில் நீண்ட தூரங்களுக்குப் பயணம் செய்யும் வியாபாரிகளுக்கு உதவியாக அவர்களுடைய சாமான்களை - பணத்தைப் பாதுகாத்துத் தரும் நிறுவனங்கள், வணிகர்களின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்தி காகித அறிவிப்புகளைத் தந்தார்கள். அந்த அறிவிப்புகள் கி.பி. 740 முதல் "காகிதப் பணமாக' மாறியது. தனிப்பட்டவர்கள் தரும் காகித அறிவிப்பை மாற்றி, அரசாங்கமே காகிதப் பணத்தை வெளியிட ஆரம்பித்தது.

மேலை நாடுகளில், இங்கிலாந்தில் 1725, பிரான்சில் 1794-1803, அமெரிக்காவில் 1861-66, காலங்களில் காகிதப் பணம் முதலில் வங்கிகள் மூலமாக - பிறகு சட்டபூர்வமாக அரசாங்க வங்கியின் பொறுப்பாக ஆனது. அதனால் காகிதப் பணம் ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு வகையில் வளர்ச்சியடைந்தது.
இந்தியாவில் ஆங்கிலேயர் ஆட்சி துவங்கியதும் 1867-ஆம் ஆண்டில் 10 ரூபாய் நோட்டு, 1900-இல் 100 ருபாய் நோட்டு வெளிவந்தன. ஆனால், 1947 விடுதலை பெறும்வரை இந்தியாவில் 565 தனிப்பட்ட மன்னர்களின் அரசுகள் இருந்தன. அவைகளில் ஒவ்வொரு அரசிலும் தனிப்பட்ட காசுகள் வழக்கத்தில் இருந்தன.
பொன்-வெள்ளிக் காசுகள் இருந்த காலத்தில் அதிலுள்ள பொன், வெள்ளி ஆகியவற்றின் மதிப்பில் மக்களுக்கு நம்பிக்கை இருந்தது. ஆனால், 100 ரூபாய் நோட்டு என்றால் அதிலுள்ள காகிதத்தின் மதிப்பு ஒரு காசுகூட இருக்காது. எனினும் அதைத் தயாரிக்கும் அரசாங்கம் தரும் உறுதிப்பாட்டில் மக்களுக்கு நம்பிக்கை இருக்க வேண்டும்.

100 ரூபாய் நோட்டை எடுத்துப் பாருங்கள். ரூபாய் நோட்டுகளை மத்திய அரசாங்கம் தரும் உறுதிப்பாட்டுடன் ரிசர்வ் வங்கியால் தயாரிக்கப்படுகிறது. அதில் "இந்த நோட்டைக் கொண்டு வருபவருக்கு நூறு ரூபாய் தரப்படும் என உறுதி கூறுகிறேன்' என்று ரிசர்வ் வங்கி கவர்னர் கையெழுத்திட்ட உரை ஆங்கிலத்தில் இருக்கும். நோட்டின் ஒரு பக்கத்தில் 15 இந்திய மொழிகளில் "நூறு ரூபாய்' என எழுதப்பட்டிருக்கும். ஆக, காகிதப் பணம் என்பது அரசாங்கம் தரும் உறுதிப்பாட்டின்மீதுதான் - மக்கள் வைக்கும் நம்பிக்கைகையில்தான் - நிலைபெற்றிருக்கிறது.

தொடரும் ...

Thursday, December 29, 2011

இந்தியாவிற்கு எது சரியான பாதை?


இந்தியாவில் நவீன பொருளாதார சீர்திருத்தங்கள் தொடங்கப்பட்டு 20 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. ஆனால், இந்தியா இன்று எந்தத் திசையில் செல்வது என்பது தெரியாமல் குறுக்குச் சாலையில் நின்று கொண்டிருக்கிறது. தனது அண்மைய வெளி நாட்டுப் பயணத்தின் போது, பிரதமர் மன்மோகன் சிங் “ 21-ம் நூற்றாண்டு ஆசியாவிற்குச் சொந்தமானதாகும். இதில் ஈடேற்றம் காண்பதில் இந்தியா முன்னிலை வகிக்கும்.” என்று கூறியுள்ளார். வரும் ஆண்டுகள் அவ்வாறு அற்புதமான ஆண்டுகளாக மலரப் போகின்றனவா, அல்லது இருக்கும் வாய்ப்புக்களையும் நழுவ விடப்போகிறோமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண் டும். பொருளாதார வல்லமை படைத்த நாடாக மலர அனைத்து சக்தியும் இந்தியாவிற்கு இருக்கிறது என்பதில் ஐயமில்லை. சீர்திருத் தங்கள் வேண்டுமா இல்லையா என்பதல்ல கேள்வி. மாறாக நமது வல்லமையைக் கண்டறிய எம்மாதிரியான சீர்திருத்தங்கள் தேவை என்பதே நம் முன்னிருக்கும் முக்கிய கேள்வி.

கார்ப்பரேட் நிகழ்ச்சி நிரல்!

கார்ப்பரேட் முதன்மை அதிகாரிகளின் குழு  ஒன்று இந்தியச் சீர்திருத்தங்களுக்கான நிகழ்ச்சிநிரல் ஒன்றினை தயாரித்திருக்கிறது. தனித்தனி அம்சங்களை அலசியிருக்கும் அவர்கள், அது குறித்த முழுமையான பார்வையில் கோட்டை விட்டிருக்கின்றனர். 10 அம்சங்களில் முதல் 5 அம் சங்கள் பொருளாதார சீர்திருத்தங்கள் குறித்தவை. மீதி 5 அம்சங்கள், ஒரு விரிவான அர்த்தத்தில், ஆட்சிமுறை குறித்த சீர்திருத்தங்களாகும். இந்தியாவிற்கு பெருமளவில் அந்நிய மூலதனம் தேவை என்பதோடு, உள்நாட்டி லும் மூலதனம் மலிவாகவும், உடனடியாகவும் கிடைக்கும் அளவிற்கு நிலைமைகள் உருவாக்கப்பட வேண்டும் என்ற அடிப்படையில் அவை அமைந்திருக்கின்றன. அதாவது, இவற்றின் விளைவாக முதலீடுகளும், வளர்ச்சியும் பெருமளவில் மேம்படும் என்ற அனுமானத்தின் அடிப்படையில் அவை முன் மொழியப்பட்டிருக்கின்றன.

வீழ்ச்சியடையும் உற்பத்தி!

இன்றைய உலகச் சூழ்நிலையின் பின்னணியில் இதை ஆராய்வது அவசியம். கடந்த இரண்டு ஆண்டுகளில் தொழில் உற்பத்தி மிகப்பெரும் வீழ்ச்சியினைச் சந்தித்திருக் கிறது. மூன்று மாதங்களுக்கு முன்பு 6.1 சத வீதமாக இருந்த தொழில் உற்பத்திக் குறியீடு  தொடர்ந்து குறைந்து, செப்டம்பர் மாதத்தில் 1.9 சதவீதத் தினைத் தொட்டிருக்கிறது. எப்போதும் அதி நம்பிக்கையூட்டும் (லண்டனிலிருந்து வெளி வரும்) “எக்கனாமிஸ்ட்” பத்திரிகை போன்றவைகள் கூட, உலக அளவில் எதிர்பார்க்கப்படும் இரட்டைத் தாழ்வு பொருளாதார மந்தம்  குறித்து கவலை தெரிவித்திருக்கின்றன.

வாங்கும் சக்தியை உயர்த்தாமல்...…


யூரோ நெருக்கடியும், நிதி நெருக்கடியிலிருந்து மீள்வதற்கான மீட்புத் திட்டமாக கார்ப்பரேட் திவால்களை அரசாங்கத் திவால்களாக மாற்றுவதற்குத் தேவைப்படும் அபரி மிதமான தொகைகளுக்கான ஆலோசனையும், உலகப் பொருளாதாரத்தினை சுழற்றி யடித்து வருகின்றன. உலக வர்த்தகம் சுருங்கி வரும் பின்னணியில், இந்தியாவின் ஏற்றுமதி வளர்ச்சியும் 81.7 சதவீதத்திலிருந்து, ஜூலை மாதத்தில் 10.8 சதவீதமாக வீழ்ச்சி அடைந்திருக்கிறது. இந்தப் பின்னணியில், உள் நாட்டுக் கிராக்கியினை உயர்த்துவதன் மூலமே வளர்ச்சியினை எட்டமுடியும்என்பதுதான் இயல்பான முடிவாக இருக்க முடியும்.

இத்தகைய சூழலில், மக்களின் வாங்கும் சக்தியினை கணிசமாக உயர்த்தாமல், மூலதனம் கிடைப்பதை மட்டுமே உறுதிப்படுத்துவதன் மூலம் வளர்ச்சியினை எட்டிவிட முடியாது.

பட்டினிக் குறியீடு!
ஒரு புறம், ஃபோர்பஸ்சின் கணக்கின்படி, இந்தியாவின் 61 டாலர் பில்லியனர்கள் (சுமார் 5,000 கோடி சொத்து மதிப்புள்ளவர்கள்) இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் மூன்றில் ஒரு பங்கினை கட்டுப் படுத்துபவர்களாக இருக்கின்றனர். மறு புறத் தில், அர்ஜூன் சென் குப்தா கமிட்டியின் அறிக்கையின் படி, 80 சதவீத இந்தியர்கள், நாள் ஒன்றிற்கு ரூ.20க்குள் தங்கள் வாழ்க்கையினை நடத்திக் கொண்டிருக்கின்றனர். நம் நாட்டில், 31 கோடிப் பேர் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கும் வறுமைக் கோட் டிற்குக் கீழ் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர் என, அண்மையில் ஐ.நா. வெளியிட்டிருக்கும் மனித மேம்பாட்டு அறிக்கை கூறுகிறது. 1973-74 லிருந்து, வறுமைக் கோட்டிற்குக் கீழ் வாழ்வோர் எண்ணிக்கை 1.9 கோடி மட்டுமே குறைந்திருக்கிறது. இது ஒருபுறமிருக்க, மக்கள் உண்ணும் உணவின் கலொரி அளவும், பருப்பு வகைகளும் (புரதச் சத்து) 1983 லிருந்து 2005 க்குள் கிராமப்புறத்தில் 8 சதவீதமும், நகர்ப்புறத்தில் 3.3 சதவீதமும் குறைந்திருக்கிறது. பட்டினிக் குறியீட்டு எண்10க்குக் குறைந்த மாநிலம் நம் நாட்டில் எதுவும் இல் லை என்பதே பட்டினியின் அளவு எத்தகைய அபாய கட்டத்தினை அடைந்திருக்கிறது என்பதை உணர்த்துவதாகும்.

வறுமையின் கோர முகம்!

மூன்று வயதிற்குக் குறைந்த குழந்தை களின் எண்ணிக்கையில் சரிபாதி சத்துணவின்றி வாடுகின்றன. இது தெற்கு சஹாரா நாடுகளின் நிலைமையை விட மோசமானதாகும். குழந்தைகளில் சரி பாதியினருக்கு நோய்த் தடுப்பு ஊசி மருந்துகள் கிடைப்பதில்லை. முற்றிலும் தடுக்கப்படக்கூடிய நோய்களிலிருந்து அவர்களுக்குப் பாதுகாப்பில்லை. நமது நாட்டில் (அரசு மற்றும் தனியார்) மொத்த மருத்துவச் செலவு, உள்நாட்டு மொத்த உற்பத்தி  மதிப்பில் பார்த்தால், மொத்தமாக ஆப்பிரிக்கா முழுவதற்கும் ஆகும் செ லவு சதவீதத்தினை விட குறைவானதேயா கும். நாடு விடுதலை அடைந்து 60 ஆண்டு கள் ஆகிய பின்னரும் இன்னும் 50 சதவீத மக் களுக்கு கழிப்பறை வசதி இல்லை என்பது வெட்கக்கேடானது.

பொருளாதார வல்லமை சாத்தியமே!

பொருளாதார வல்லமை கொண்ட பெரிய நாடாக நாம் வளர வேண்டுமானால், தேச அளவில் ஒட்டுமொத்த கிராக்கி உயரும் வகையில் மக்களின் வாங்கும் சக்தியினை பெருமளவு அதிகரிக்க வேண்டும்.

வெளிநாட்டு மூலதனத்தினை வைத்துக் கொண்டு என்ன செய்வது? நமது உற்பத்தி ஆதாரங்களையும், வேலை வாய்ப்புக்களையும் பெருக்குவதற்கும், தொழில் நுட்பங்களை மேம்படுத்துவதற்கும் முதலீடுகள் வருமானால் அவற்றினை வரவேற்கலாம். அது அல்லாமல், இன்றைய உலக நிதி நெருக்கடிச் சுழலில் தேவையில்லாமல் சிக்கிக் கொள்ளும் அளவிற்கு, சீர்திருத்தங்கள் செய்ய வேண்டிய தேவை என்ன வந்தது? நமக்குத் தேவைப் படும் மூலதனத்தினை திரட்டும் சக்தி நமக்கு இல்லை என்று சொல்வதும் உண்மையல்ல; அது ஒரு புனைவேயாகும்.

“ஊக்குவிப்பும்”, “சுமையும்”!

நமது பட்ஜெட்டில் கூறப்பட்டிருக்கும் பின்வரும் விஷயங்களைப் பாருங்கள். விதிக் கப்பட்ட வரிகளை செல்வந்தர்களிடமிருந்து வசூலிக்காமல் விட்ட தொகை 2008-09ல் ரூ. 4,14,099 கோடி. 2009-10ல் இது ரூ.5,02,299 கோடியாக உயர்ந்தது. 2010-11ல் இது ரூ. 5,11,630 கோடியாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில், வரி செலுத்தும் கார்ப்பரேட் நிறுவனங்கள் மற்றும் உயர் செல் வந்தர்களிடம் மட்டும் வசூலிக்கப்படாமல் விடப்பட்ட தொகை, ரூ.1,04,471கோடி (2008-09), ரூ.1,20,483கோடி(2009-10). இது 2010-11ல் ரூ.1,38,921 கோடியாக உயரும் என எதிர் பார்க்கப் படுகிறது. இந்த மூன்றுஆண்டுகளில் மட்டும் நியாயமாக அரசுக் கருவூலத்திற்கு வந்திருக்க வேண்டிய ரூ.14,28,028 கோடி யினை அரசு வசூலிக்காமல் விட்டுவிட்டது. இதில், ரூ.3,63,875கோடி கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும், உயர் செல்வந்தர்களுக்கும் மட்டுமே அளிக்கப்பட்ட சலுகை என்பதை மறந்துவிடக் கூடாது. செல்வந்தர்களுக்குக் கொடுப்பதை ‘ஊக்குவிப்பு’ எனவும், ஏழை களுக்குக் கொடுப்பதை ‘சுமைகள்’ எனவும் வர்ணிக்கும் தற்போதைய போக்கினை மாற்று வதே இன்றைய சீர்திருத்தத்திற்கான முக்கிய தேவை. நமது மக்கள் சக்தியினை பயன்படுத்தும் வகையில் இளைஞர்கள் மீது முத லீடு செய்ய வேண்டும். இன்று எதிர்பார்க்கப் படும் நிதிப் பற்றாக்குறை ரூ. 4,65,000 கோடி மட்டுமே. ஆனால், விதிக்கப்பட்ட வரியினை முழுவதும் வசூலித்திருந்தால், நிதிப்பற்றாக் குறை எங்கிருந்து வரும்? சமூக-பொருளாதார கட்டமைப்பில் முதலீடு செய்வதற்கு பணத்தட்டுப்பாடு என்ற பேச்சுக்கே இட மில்லை அல்லவா?

தீவிர விவாதம் தேவை!

இது தவிர, சலுகை சார் முதலாளித்துவ ஊழல் மூலம் கொள்ளை போகும் பெருந்தொகைகளையும் சேர்த்தால், அரசுக் கருகூலத்திற்கு மொத்தம் வரவேண் டிய பணம் எவ்வளவு எனப் புரிந்துவிடும். நம் நாடு இதைத் தாங்காது என பிரதமரே கவலை தெரிவித்திருக்கிறார். இவற்றையெல்லாம் நாடாளுமன்றத்தின் குளிர்காலத் தொடர் தீவிரமாக விவாதித்து முடிவுகள் எடுத்தால் நல்லது.

பொருளாதார வல்லமை கொண்ட நாடாக நாம் உயர வேண்டுமென்றால், இன்றைய தேவைகளுக்குப் பொருத்தமான சரியான சீர்திருத்தப் பாதையினை தேர்ந்தெடுத்தல் அவசியம்.


-சீத்தாராம் யெச்சூரி எம்.பி

Thursday, December 15, 2011

இந்தியாவிற்கு வந்திருக்கும் ஆபத்தும், நிதியமைச்சரின் கையாலாகாத்தனமும்!


கடந்த பல ஆண்டுகளாக பிரதமர் மன்மோகன்சிங், நிதியமைச்சர் பொறுப்பு வகித்த ப.சிதம்பரம், தற்போதைய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி, திட்டக்கமிஷன் துணைத் தலைவர் மாண்டேக் சிங் அலுவாலியா போன்றவர்கள் வாயைத் திறந்தாலே 9 சதவீத வளர்ச்சி, 10 சதவீத வளர்ச்சி என்று கதைத்து வந்தார்கள். ஆனால்  இப்போது அவர்கள் எல்லோருமே கையைப் பிசைந்துகொண்டு இருக்கின்றனர்.

சில நாட்களுக்கு முன்பு நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் தாக்கல்செய்த இடைக்கால பொருளாதார வளர்ச்சி பற்றிய அறிக்கையும், அதைத்தொடர்ந்து தொழில்துறையில் பெருமளவிற்கு மந்த நிலை ஏற்பட்டுள்ளது என்ற தகவல்களும் நாட்டின் பொருளாதார நிலை குறித்த அபாயச்சங்கை ஊதிக்கொண்டு இருந்தன. இப்போது  “உலக அளவில் பொரு ளாதார நிலைமை நாளுக்கு நாள் மோசமடைந்துவரும் சூழலில், இந்தியப் பொருளாதாரமும் கடுமையான மந்த நிலையை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இதைத்தடுத்து நிறுத்தும் வாய்ப்பு மிகக்குறைவாகவே உள்ளது”  என்று மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி கைவிரித்துள்ளார். ‘நிலைமை மோசமடைவதை எதிர்கொள்ள எந்த வழியும் இல்லை’ என்று அவர் பகிரங்கமாகக் கூறினார்.

தில்லி பொருளாதார சிறப்புக்கருத்தரங்கு புதன் கிழமை நடைபெற்றது. இந் நிகழ்வை துவக்கிவைத்து உரையாற்றிய மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி, உலகம் முழுவதிலுமுள்ள மிகப்பெரும் வளர்ச்சியடைந்த பொருளாதாரங்களைக் கொண்டிருக்கும் நாடுகள், குறிப்பாக ஐரோப்பிய நாடுகள் 2008ம் ஆண்டின் பிற்பகுதியில் ஏற்பட்ட பொருளாதாரச் சரிவிலிருந்து மீண்டு எழ முடியாமல் தத்தளித்துக் கொண்டிருக்கின்றன என ஒப்புக்கொண்டார். கடுமையான முறையில் நிதி மற்றும் பணக்கொள்கைகளை அமல்படுத்தியபோதிலும், இந்த நாடுகளில் பொருளாதார மீட்சி இன்னும் ஏற்படவில்லை எனக்குறிப்பிட்ட அவர், உலக அளவில் நிலவும் இத்தகைய கடுமையான நெருக்கடி, இந்தியாவிலும் கொள்கைகளை உருவாக்குபவர்களுக்கு கடும் பிரச்சனையாக மாறியிருக்கிறது என்றார். நிலைமைகள் இதே விதத்தில் செல்லுமானால், அடுத்து வரும் காலகட்டத்தில் எழுகிற நெருக்கடியை எதிர் கொள்ளும் வாய்ப்புகள் நம்மிடம் மிகக்குறைவாகவே உள்ளன என்றும் பிரணாப் முகர்ஜி கூறினார்.

இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி விகிதம் 2011-12ம் நிதியாண் டின் இரண்டாவது காலாண்டில் 6.9 சதவீதமாக வீழ்ச்சியடைந்துள்ளது. இது கடந்தாண்டு இதே காலகட்டத்தில் 8.4 சதவீத மாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், அமெரிக்காவில் மையம் கொண்ட பொருளாதார நெருக்கடியின் பிடியில் இந்தியாவும் சிக்கியுள்ளது என்பதையும் உணர்த்துகின்றன. இந்த நிலையில் ஏற்கெனவே 9 சதவீதம் அளவிற்கு இவர்களால் சொல்லப் பட்ட பொருளாதார வளர்ச்சி விகிதம், தற்போதைய நிதியாண்டில் 7.5 சத வீதம் அளவிற்கே இருக்கும் என்று வெகுவாகக் குறைத்து மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

2008ம் ஆண்டில் உலக அளவில் பொருளாதார நெருக்கடி தாக்கிய போது, இதர நாடுகள் தங்களது பொருளாதாரத்தை மேம்படுத்த மீட்பு நிதி என்ற பெயரில் பெருமுதலாளிகளுக்கு கோடி கோடியாக அள்ளிக்கொடுத்ததைப் போலவே, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசும் ரூ.1.86 லட்சம் கோடி அளவிற்கு மீட்பு நிதியை அள்ளிக்கொடுத்தது. இது மொத்த உள்நாட்டு உற்பத் தியில் 3 சதவீதம் ஆகும். இந்த நிதியின் மூலம் கடந்த மூன்றாண்டு காலமாக உள் நாட்டு தொழில்துறை ஓரளவிற்கு தாக்குப்பிடித்தது.

மேலும் நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி, “ யூரோ நாணய மண்டலத்தில் ஏற்பட்டுள்ள, தீர்வு எதுவும் கண்ணுக்கு எட்டாத தொலைவில் இருக்கிற நெருக்கடியின் விளைவாக, இந்தியாவிற்குள் அந்நிய முதலீடு வருவது குறைந்துள்ளது என்றும், இதனால் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு கடந்த சில மாதங்களாக வீழ்ச்சியடைந்து வருகிறது” என்றும் கூறினார். அமெரிக்க டாலர் ஒன்றுக்கு ரூ.53.75 என்ற அளவில் இந்திய ரூபாயின் மதிப்பு மிகக்கடுமையாக சரிந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பணவீக்கம் குறித்து குறிப்பிட்ட பிரணாப் முகர்ஜி, இந்தபிரச்சனை கடந்த சில ஆண்டுகளாக அரசுக்கு மிகப்பெரும் தலைவலியாக இருக்கிறது என்று கூறினார்.

ஆபத்து தெரிகிறது. வருமுன்னர் தற்காத்திருக்க வேண்டும். சரி, வந்தபிறகாவது எதிர்கொள்ள கொள்ள யோசனைகள் வேண்டாமா?  அதை விடுத்து, இப்படி இயலாமைகளைச் சொல்வதும், புலம்புவதும்தான் இந்த நாட்டின் நிதியமைச்சரால் இப்போது முடியும் போலிருக்கிறது. மேலும் ருபாயின் மதிப்பு வீழ்வதையும், விலைவாசி தாறுமாறாய் உயர்வதையும் வேடிக்கைப் பார்ப்பதைத் தவிர வேறு வழியில்லையென்றால் எதற்கு அவருக்கு நிதியமைச்சர் என்கிற பொறுப்பு?

நிலைமையை எதிர்கொள்ள, உள்நாட்டில் மிகப்பெருவாரியான எண்ணிக்கையில் இருக்கும் ஏழை, எளிய மக்களின் வாங்கும் சக்தியை அதிகரிக்கும் விதத்தில் பொருளாதார நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட இடதுசாரிக்கட்சிகளும் பொருளாதார வல்லுநர்களும் தெரிவித்த ஆலோசனைகளை புறந்தள்ளிய மன்மோகன்சிங் அரசு, இதற்கு மாறாக, பொருளாதார நெருக்கடியை மேலும் தீவிரப்படுத்தும் விதத்தில் நவீன தாராளமயக் கொள்கைகளை இன்னும் தீவிரமாக அமல்படுத்தியது. இது இந்தியாவின் பொருளாதாரத்தை கடுமையான மந்த நிலையை நோக்கி கொண்டு சென்றுள்ளது. முதலாளித்துவப் பொருளாதாரத்தின் சீரழிவுகளை உலகம் சந்தித்துக் கொண்டு இருக்கிறது.

Wednesday, December 14, 2011

ஐரோப்பிய பொருளாதார நெருக்கடி!

ஐரோப்பிய பொருளாதார நெருக்கடி குறித்த ஒரு பொதுவான பார்வை என்னவாக இருக்கிறது?

சந்தைக்கு ஐரோப்பிய அரசாங்கங்களின் நம்பகத்தன்மை குறித்து ஒரு நம்பிக்கையின்மை ஏற்பட்டுவிட்டது என்பதே இதற்கு  பதில். கடந்த காலத்தில் இந்த அரசாங்கங்கள் தொடர்ந்து ஒரு நெறிமுறை இல்லாமல் நடந்து கொண்டதன் விளைவாக மிகப்பெரிய அளவில் கடன் குவிந்துவிட்டது. இதன் காரணமாக சந்தைக்கு நம்பிக்கையின்மை ஏற்பட்டுவிட்டது. ‘சந்தை’ என்பதன் கண்ணோட்டத்தில் இந்த நெருக்கடியின் தீர்வு இந்த அரசாங்கங்கள் தங்களுடைய செலவினங்களை சுருக்கிக் கொள்வதைப் பொறுத்தும், மிகக்கடுமையான சிக்கன நடவடிக்கைகளை எடுப்பதைப் பொறுத்தும்தான் அமையும் என்பதாகும். அதாவது செருப்புக்குத் தகுந்தாற்போல் காலை வெட்டிக்கொள் என்பது போன்ற உத்தரவுகள் சந்தையால் பிறப்பிக்கப்படும். அவை ஒழுங்காக கடைப்பிடிக்கப்படுகின்றனவா என்று மதிப்பீடு செய்யப்படும் என்பதால் இந்த உத்தரவுகள் அரசாங்கங்களால் மீறப்படுவதில்லை. இந்தக் கருத்தானது பொதுவான முதலாளித்துவக் கொள்கையின் குணாம்சத்தை எடுத்துக்காட்டுவதாக உள்ளது.

‘சந்தை’யும் கிரீசும்

‘சந்தை’ என்பது மனிதர்களால் உருவாக்கப்பட்ட அமைப்பு. ஆனால், அது ஏதோ மனிதர்களையே சார்ந்திராத, சுயமாக அறிவு நுட்பமும், விவேகமும் கொண்டுள்ள அமைப்பு போன்று கருதப்படுகிறது. அதையும் தாண்டி, மனிதர்களின் முட்டாள்தனங்களையே அதுதான் சரி செய்வது போலவும், எனவே அது மரியாதைக்கும் கீழ்ப்படிதலுக்கும் உரிய அமைப்பு என்பது போன்றும் இன்று கருதப்படுகிறது.

கிரீஸ் நாட்டின் பிரதமராக இருந்த பபான் ட்ரியோ, கிரீஸ் அரசாங்கம் இழந்துவிட்ட ‘சந்தை’யின் நம்பகத்தன்மையை திரும்பப் பெற வேண்டும் என்பதற்காக, ஐரோப்பிய யூனியன் திட்டமிட்டுக் கொடுத்த மிகக் கடுமையான சிக்கன நடவடிக்கைகளை பொது வாக்கெடுப்பிற்கான பொது மகஜர் வடிவமாக்கினார். இந்த சிக்கன நடவடிக்கைகளின் மூலம் கிரீஸ் நாடு தனது பொதுக் கடனிலிருந்து வெளியே வந்துவிடலாம் என்பது அவரது கணிப்பு. அதே நேரம் இந்த நடவடிக்கைகள் பொது மக்களின் மீது மிக மோசமான தாக்கத்தினை ஏற்படுத்தும் என்பதால் அவர்களது கருத்துக்களை அறிய வேண்டுமென்று பொது வாக்கெடுப்பிற்கு விட நினைத்தார். உடனே, முதலாளித்துவ வட்டாரத்தின் ஒவ்வொரு பகுதியிலிருந்தும் மிகப் பெரிய கூக்குரல் எழுந்தது. நமது நாட்டு செய்தித்தாள்கள் கூட பபான்ட்ரியோவின் இந்த முடிவிற்கு எதிராகத் தலையங்கம் எழுதின. அவர்கள் எல்லோ ரும் இப்படி ஒரு புதுமையான, விசித்திரமான, முட்டாள்தனமான நடவடிக்கையைப் பார்த்து பயந்துவிட்டனர். எனவே, என்ன நடந்தது என்று சொல்ல வேண்டிய அவசியமே இல்லாமல், மக்களிடையே பொது வாக்கெடுப்பிற்கு விடும் தன்னுடைய திட்டத்தினை பபான்ட்ரியோ கை விட்டு விட்டார்.

கிரீஸ் நாட்டு அனுபவத்தின் பின்னணியில் உண்மையில் சர்வதேச நிதி மூலதன நல விரும்பிகள் சொல்ல விரும்புவது என்னவென்றால், அரசாங்கங்கள் பழைய முறையில் பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்து செலவுகள் செய்வது என்பதைத் தொடரக்கூடாது என்பது தான். அதாவது பழைய “சேம நல அரசு” என்பதன் மிச்ச சொச்சங்களாக கொஞ்சம் நஞ்சம் இருக்கும் அரசாங்கச் செலவினங்களைக் கூட தொடரக் கூடாது என்பதுதான்.

அரசாங்கங்கள் தங்களுக்கான மீட்புத் திட்டங்களை வெட்டிச் சுருக்கக்கூடாது; ஆனால், தொழிலாளர்கள் மற்றும் சாதாரண மக்களுக்காக செய்யப்படும் செலவினங்களை குறி வைத்து கடுமையாக வெட்டிக் குறைப்பதன் மூலமே பொருளாதார சுழற்சிக்கான நட வடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என் றும் நிதி மூலதனம் விரும்புகிறது. இன்னும் சரியாகச் சொல்வதென்றால், ஒரு காலத்தில் ஐரோப்பிய சேம நல அரசு என்று புகழ் பெற்ற அரசாங்கங்களின் மிச்ச சொச்சங்கள் ஏதேனும் இருந்தால் அவற்றை ஒழித்துவிட வேண்டும் என்பதுதான்.

இறுதிக் கட்டத் தாக்குதல்

இதையே வேறு விதமாகக் கூறுவதென்றால், ஐரோப்பிய பொருளாதார நெருக்கடி என்பது வேறு ஒன்றுமில்லை; சட்டத்தை மீறி பலவந்தமாக ஐரோப்பிய ஜனநாயகத்தின் மீதும் இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய காலகட்டத்தில் நிறுவப்பட்ட ஐரோப்பிய சேம நல அரசுகள் மீதுமான நிதி மூலதனத்தின் அத்து மீறிய தாக்குதலே. இந்த சேம நல அரசு என்பது எப்படி இருந்தது என் றால், ஒரு முதலாளித்துவ அரசாக இருந்த போதிலும் அதனுடைய வர்க்கக் கொள்கைகளுக்கு அப்பாற்பட்டு முதலாளித்துவ வர்க்கம் மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்களின் நலன்களுக்கு மட்டுமல்லாமல் ஒரு குறிப்பிட்ட அளவிற்கு தொழிலாளி வர்க்கத்தின் நலன்களிலும் அக்கறையும் பொறுப்பும் உடையதாக இருந்தது. இத்தகைய சேமநல அரசின் மீதான தாக்குதல், எப்போது நிதி மூலதனம் உச்சத்திற்கு வந்ததோ அப்போது எழுந்தது. குறிப்பாக, தேசிய அரசுகள் நிறைந்த இந்த உலகத்தில், நிதி மூலதனம் என்பது உலகமயமான போது இந்த தாக்குதல் ஆரம்பமானது. நாம் இப்போது பார்ப்பது இறுதிக் கட்ட தாக்குதல். ஒட்டு மொத்தமாக ஒரு பெரிய கட்டிடத்தையே உலுக்குகிற, நொறுக்கித் தள்ளுகிற இறுதியான முயற்சி. ஒரு குறிப்பிட்ட அளவிற்கு சாதாரண உழைக்கும் மக்களின் மீது அக்கறை கொண்ட, வர்க்கங்களைத் தாண்டி வெளிப்படையாக நிற்கக் கூடிய சமூக ஜனநாயக அடையாளம் பதித்த பழைய முதலாளித்துவ அரசிற்குப் பதிலாக, நிதி மூலதனத்தின் உண்மையான அதிகாரத்திற்குட்பட்ட ஒரு அரசினை நிலைநிறுத்துவதற்கான இறுதிக் கட்ட முயற்சி இது.

ஐரோப்பிய சமூகத்தின் ஜனநாயகத் தன்மையின் பாரம்பரியத்திலிருந்து பின்னோக்கிச் செல்வது என்பதன் பொருள், ஐரோப்பாவின் ஐனநாயகத்திற்கு ஒட்டு மொத்தமாக மூடுவிழா நடத்துவது என்பதுதான். கிரீசுக்கான சிக்கன நடவடிக்கைத் திட்டத்தை பொது வாக்கெடுப்பிற்கு விட வேண்டுமென்ற அந்நாட்டுப் பிரதமரின் முன்மொழிவின் மீது எழுந்த பரபரப்பிற்கான காரணம், இந்த சிக்கன நடவடிக்கைத் திட்டமே ஜனநாயகத்திலிருந்து பின்னோக்கிச் செல்வதை சுட்டிக் காட்டுகிறது என்பதால்தான். சாதாரண மக்களின் முதுகின் மீது சுமையை ஏற்றுவதன் மூலம் அவர்களுடைய வாழ்க்கையை பாதிக்கும் கடுமையான நிகழ்வுகள் இனிமேல் தீர்மானிக்கப்பட இருக்கின்றன என்பதால்தான்.

‘நெருக்கடி’ என்பதன் உட்பொருள்


இந்தப் பின்னணியில் “நெருக்கடி” என்பதற்கான மிகச் சரியான வரையறையைப் புரிந்து கொள்ள வேண்டும். “நெருக்கடி” என்ற வார்த்தை தேசிய அரசாங்கங்களால் நிதி மூலதனத்திடமிருந்து பெற்ற கடன்களை திருப்பிக் கொடுக்க முடியவில்லை என்பதை, அல்லது அந்த கடன்களை திருப்பிக் கொடுப்பதை இந்த அரசாங்கங்கள் தள்ளிப்போடுகின்றன என்பதைக் குறிக்கவே பயன்படுத்தப்படுகிறது. மேலும், இந்த அரசாங்கங்கள் கூடுதலாக கடன் கேட்ட போது நிதி மூலதனம் அதைக் கொடுக்கத் தயாராக இல்லாமல் இருந்ததன் காரணமாக இந்த அரசாங்கங்களுக்கு எழுந்த பிரச்சனையைக் குறிக்க பயன்படுத்தப்படுகிறது. எனவே ‘நெருக்கடி’யைத் தீர்க்கும் நோக்கமாகவே கடுமையான சிக்கன நட வடிக்கைகள் பார்க்கப்படுகின்றன. ஆனால், தொழிலாளர்களைப் பொறுத்தவரை மிகக் கடுமையான சிக்கன நடவடிக்கைகள் என்பது நெருக்கடியின் தீவிரத்தை- ஆழத்தைக் குறிக்கிறது.

கிரீஸ் நாட்டை பொருளாதார நெருக்கடியில் இருந்து விடுவிப்பதற்காக என்று சொல்லிக் கொண்டு ஐரோப்பிய யூனியன் நாடுகளால் உருவாக்கப்பட்ட சிக்கன நடவடிக்கைத் திட்டமானது, கிரேக்க மக்கள் எவ்வளவு காலத்திற்கு இந்த நடவடிக்கைகளை தாங்கிக் கொள்ள வேண்டும் என்பது குறித்தோ, அல்லது இந்த சிக்கன நடவடிக்கைகளுக்கு கிரேக்க மக்கள் எப்படி ஈடு கொடுக்கப் போகிறார்கள் என்பது குறித்தோ ஒரு வார்த்தை கூடப் பேசவில்லை. சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால், கிரீஸ் நாட்டு அரசாங்கத்திற்கு நிதி மூலதனம் கொடுத்திருந்த கடன்கள் திருப்பிக் கொடுக்க முடியாமல் போய்விடக்கூடாது என்பதால் அதற்கான நிதிப் பாதுகாப்பினை உத்தரவாதப் படுத்திக்கொள்வது மட்டுமே ‘நெருக்கடி’ என்ற பிரகடனத்தின் திடமான நோக்கமாக இருந்தது. ஆனால், சாதாரண மக்களின் வாழ்நிலையில் எந்த முன்னேற்றத்தையும் தருவதாக, அவர்களுடைய விதியை மாற்றுவதாக எந்த நடவடிக்கைகளும் இந்தத் திட்டத்தில் இல்லை. எனவே, ‘நெருக்கடி’ என்பதற்கு நாம் கொள்ளும் அர்த்தத்தையே மாற்றிக் கொள்ள வேண்டியுள்ளது. உலகமயமாக்கல் சகாப்தத்தில், சமுதாயத்தின் நலன்களும் நிதிமூலதனத்தின் நலன்களும் ஒன்றாக - ஒரே பொருள் கொண்டதாக பார்க்கப்படுகிறது. ஆனால், அந்த சமுதாயத்தினை நிர்மாணிக்கும் எளிய மக்களின் நலன்களும் சமுதாய நலன்களும் ஒன்றாகப் பார்க்கப்படு வதில்லை.

பொருளாதார வல்லுநர் பால் க்ரூக்மேன் உட்பட பல பொருளாதார நிபுணர்கள் ஐரோப்பிய நாடுகளின் கடன் நெருக்கடி குறித்து வாதிடும்போது, எந்த நாடுகளெல்லாம் வெளிநாடுகளிடம் இருந்து கடன் பெற நிர்ப்பந்திக்கப்பட்டனவோ அந்த நாடுகளில் மட்டுமே கடன் நெருக்கடி எழுந்துள்ளது என்று வாதிடுகின்றனர். அதாவது அவர்களைப் பொறுத்த வரையில், தங்களுடைய மத்திய வங்கிகள் உட்பட சொந்தப் பொருளாதாரத்தில் இருந்து கடன் வாங்க முடியாத நாடுகள்தான் கடன் நெருக்கடிக்கு ஆட்பட்டுள்ளன என்று வாதிடுகின்றனர்.

ஒரு நாட்டின் அரசாங்கம் அந்த நாட்டின் மத்திய வங்கியில் இருந்து கடன் வாங்கிக் கொள்ள சுதந்திரம் உடையதா, இல்லையா என்பது விஷயமல்ல. உலகப் பொருளாதாரச் சரிவின் பின்னணியில் ஒரு நாட்டின் அரசாங்கம் என்ன செய்கிறது என்பதுதான் விவாதத்திற்கான விஷயம். உலக அளவில் ஒட்டு மொத்தமாக பொருட்களுக்கான கிராக்கி (demand) என்பதில் கூர்மையான வீழ்ச்சி ஏற்படும்போது, உலகம் முழுவதும் உள்ள பொருளாதாரங்களின் மீது அதனுடைய தாக்கம் பெரியதாகவோ அல்லது சிறிய தாகவோ கட்டாயம் இருக்கும். நடப்பில் உள்ள பங்கு பரிவர்த்தனை விகிதத்தின் அடிப்படையில் செயல்படும் நாடுகளில் தொழில் உற்பத்தியை விட டாலர் சம்பள விகிதம் அதிகமாக இருக்குமென்றால் (உதாரணமாக அமெரிக்கா மற்றும் தெற்கு ஐரோப்பிய நாடுகள்) அந்த நாடுகளில் இந்த சரிவின் தாக்கம் பெரிய அளவில் இருக்கும். அதே நேரம் தொழில் உற்பத்தியை விட டாலர் சம்பள விகிதம் குறைவாக இருக்குமென்றால் (உதாரணம் சீனா) இந்த சரிவின் தாக்கம் குறைவானதாக அல்லது ஒதுக்கிவிடக் கூடியதாக இருக்கும்.

மிகக் கடுமையாக பாதிக்கப்பட்ட நாடுகள், இந்த சரிவின் தாக்கத்திலிருந்து சாத்தியமான மூன்று வழி முறைகளில் பாதுகாத்துக் கொள்ள முடியும்.

முதலாவது வழி முறை

பிற நாடுகளை விட தன் நாட்டு பணத்தின் மதிப்பைக் குறைப்பதன் மூலம் அந்த நாட்டில் சம்பள விகிதம் உயராமல் பார்த்துக் கொள்ளும் முறை. அதாவது அந்த நாட்டின் தொழிலாளர்கள் தங்களுடைய உண்மைச் சம்பளத்தில் ஒரு வெட்டினை ஏற்றுக்கொள்வதன் மூலம் தங்களை போட்டிக்குத் தயாராக வளர்த்துக் கொள்ளும் முறையின் மூலம் (பிற நாடுகள் தங்களுடைய பண மதிப்பை பதிலுக்குக் குறைக்காமல் இருக்கும் வரை இது சாத்தியமாகும்) மலிவான சம்பள விகிதத்தை தக்க வைப்பது. மற்றும் தனது நாட்டின் நிகர ஏற்றுமதியை அதிகப்படுத்துவதன் மூலம் உற்பத்தியையும் வேலை வாய்ப்பையும் பெருக்குவது. இதைத் தான் beggar my neighbour policy என்கிறோம். அதாவது, வேறு ஒரு நாட்டினை தாழ்வடையச் செய்வதன் மூலம் இந்த நாடு தன்னுடைய நலனை பாதுகாத்துக் கொள்ளும் முறை. இருந்தபோதும், இது கையாள வேண்டிய மிகச் சரியான வழி முறை அல்ல.

இரண்டாவது வழி முறை

அரசாங்கத்தின் வருவாய் குறைந்த பிறகும் கூட, மிகப் பெரிய நிதிப்பற்றாக்குறை மூலமாவது அரசாங்கச் செலவினங்களை குறைக்காமல் தக்க வைப்பது, இந்த முறையைத்தான் பெரும்பாலான ஐரோப்பிய பொருளாதாரங்கள் செய்ய முயல்கின்றன. இது மாதிரியான நேரத்தில் அரசாங்கங்கள் வெளியிலிருந்து கடன் வாங்காமல் இருந்தாலும், கடன் வாங்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது. உலகப் பொருளாதாரத்தில் சரிவு ஏற்பட்டதன் காரணமாக இந்த நாடுகளின் ஏற்றுமதிகள் குறைந்தாலும், மிகப் பெரிய நிதிப்பற்றாக்குறையின் மூலமாவது இந்த நாடுகளின் இறக்குமதிகள் தக்க வைக்கப்படும் என்பது தான் இதன் பொருள். எப்படி பார்த்தாலும், பிற நாடுகள் எது மாதிரியான பிரச்சனைகளை சந்தித்தனவோ அதே பிரச்சனைகளை இந்த நாடுகளும் சந்திக்க வேண்டியது வருகிறது.

மூன்றாவது வழி முறை

மூன்றாவது வழி முறை என்னவென்றால், உள்நாட்டில் மக்களிடையே தேவையை அதிகரிப்பதன் மூலம் பொருளாதார சரிவிலிருந்து தனது பொருளாதாரத்தை பாதுகாத்துக் கொள்வது. அதாவது இரண்டாவது வழி முறையில் கூறியது போல் மிகப் பெரிய நிதிப்பற்றாக்குறையின் மூலமாவது உள்நாட்டில் தேவையை அதிகரிப்பது. ஆனால், அதே நேரத்தில் மூலதனம் மற்றும் வர்த்தக பரிவர்த்தனைகளின் மீது ஒரு கட்டுப்பாட்டினை வைப்பதன் மூலம் ‘உலகமயமாக்கலில்’ இருந்து தொடர்பினை துண்டித்துக் கொள்வது முக்கியமானது ஆகும். அதே போல அந்த நாடானது ஒரு வேளை ஐரோப்பிய யூனியன் போன்ற ஒரு ஐக்கிய அமைப்பின் உறுப்பு நாடாக இருக்குமானால், அந்த ஐக்கிய அமைப்பிலிருந்தும் தனது தொடர்பினை துண்டித்துக் கொள்வதும் அவசியமாகிறது.

ஒரு வேளை ஒரே நேரத்தில் உலக அளவில் ஒட்டு மொத்தமாக உலகத் தேவையை அதிகரிப்பதற்கான ஏற்பாடுகளும் செயல் பாடுகளும் செய்யப்படுமானால், நிச்சயமாக அது ஒரு தனித்துவமான அம்சமாக இருக்கும். ஆனால், அது போன்ற செயல்பாடுகள் எதுவும் தற்போது இல்லை. அப்படிப்பட்ட செயல்பாடுகள் எதுவும் இல்லாத பட்சத்தில், உலக நிதி மற்றும் வர்த்தகப் பரிவர்த்தனைகளுக்குத் திறந்துவிடப்பட்ட ஒரு பொருளாதாரத்தை, உலகமயமாக்கல் கொள்கையை அமலாக்குவதற்கென்றே உள்ள புதிய பொருளாதாரக் கொள்கைகளின் ஆட்சிக்காலத் தில், சரிவிலிருந்து பாதுகாத்துக் கொள்ளலாம் என்று நம்புவது வெறும் மாயையே!

- பேராசிரியர் பிரபாத் பட்நாயக்
தமிழில்:ஆர்.எஸ்.செண்பகம்

Sunday, December 11, 2011

சேமிப்புக்குப் பரிசு சயனைடு குப்பியா?

தேர்பவனியின் போது தேர்ச்சக்கரங்களுக்கு அருகில், சிலர் கட்டைகளுடன் சேர்ந்தே வருவதைக் கவனிக்க முடியும். தேரின் வேகத்தைக் கட்டுப்படுத்துவதற்காகத்தான் அந்த ஏற்பாடு. இல்லையென் றால் தேர் கட்டுப்பாட்டை இழந்து, வீதியில் இருப்போருக்கும், மேலே இருப்பவர்களுக்கும் பெரும் சேதாரத்தை விளைவிக்கும். அது போலத்தான் மக்களை முழுமையாக நேசிக்காத ஆட்சியாளர்கள், தங்களை சேமநல அரசு என்று சொல்லிக் கொண்டாலும், அந்த அரசைக் கட்டுப்படுத்தும் ஏற்பாடுகள் மிக அவசியம். தற்போதைய மத்திய அரசை ஆளும் ஐ.மு. கூட்டணி அரசினைக் கட்டுப்படுத்தும் ஏற்பாடுகள் போதுமானதாக இல்லை. அதன் விளைவு தான் இரக்கமற்ற முறையில், பெட்ரோல் மற்றும் உணவுப் பொருள் விலை உயர்வுகள், தொடர்ந்து அரங்கேறுகிறது. வருங்கால வைப்பு நிதியைப் பராமரிக்கும் பொறுப்பைத் தனியாரிடம் ஒப்படைக்கவும், அந்நிய மூலதனத்தை இத் துறையில் அனுமதிக்கும் மசோதாவை முன்மொழியப் போவதாக தற்போதைய அறிவிப்பும் இருக்கிறது.

முன்னாள் நிதியமைச்சர்கள் யஷ்வந்த் சின்ஹா, ப. சிதம்பரம் ஆகியோர் முயற்சித்து செய்ய முடியாது போன விஷயத்தை, பிரணாப் முகர்ஜி செய்து முடிக்க எத்தனிக்கிறார். இந்தியாவைப் பொறுத்தவரை 1952 ல் இருந்து வருங்கால வைப்பு நிதி திட்டம் அமலாகி வருகிறது. உலகின் பல நாடுகளில் நூற்றாண்டு காலமாக அமலாகி வந்தாலும், இந்தியாவில் 60 ஆண்டுகால பாரம்பரியம்தான் இந்த துறைக்கு இருக்கிறது. வளர்ந்த பல நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியாவில் குறை வான சதத்திலான மக்கள் பிரிவினரே ஓய் வூதியம் பெறும் வாய்ப்புக் கொண்டோராக உள்ளனர்.

சுமார் 5 கோடி தொழிலாளர் மற்றும் நடுத் தர வர்க்கத்தினரின் சேமிப்புத் தொகையாக வருங்கால வைப்பு நிதி இருக்கிறது. பல கோடிக்கணக்கில் உள்ள அணிதிரட்டப்படாத தொழிலாளருக்கு சொந்தமான நிதியும் வைப்பு நிதி கணக்கில் உள்ளது. இதன் மூலம் பல லட்சம் கோடி ரூபாய் தொகை தொழிலாளர்களின் பணமாக பாதுகாக்கப்பட்டு வருகிறது. இத்தொகை வளர்ந்த நாடுகளில் உள்ள மக்கள் தொகையுடன் ஒப்பிட்டால், மிகப்பெரியதாகும். தாரளமயமாக்கல், தனியார் மயமாக்கல் மற்றும் உலகமயமாக்கல் கொள் கைகளின் தாக்கத் தினால், மேற்படி தொழி லாளர் மற்றும் நடுத்தர மக்களின் பணத்தின் மீது அந்நிய முதலீட்டாளர்கள் கண் வைத்து ஆக்கிரமிக்க காத்திருக்கின்றனர். இது உலக வங்கி மற்றும் பல கமிட்டிகளின் செயல்பாடு கள், அறிவிப்புகள் மூலம் அறியமுடியும்.

பொது மக்களின் சராசரி ஆயுட்காலம் அதி கரிக்கிற போது, வருங்கால வைப்பு நிதி மூலமான ஓய்வூதியம் வழங்குவதன் காலமும் நீடிக்க வேண்டிய கட்டாயம் இருந்தது. இது குறித்து ஆய்வுசெய்யத் துவங்கிய உலக வங்கி, ஓய்வூதியத்தைக் குறைப்பதற்கான ஆலோசனையை வடிவமைத்தது. அதில் மூன்று முக்கியமான அம்சங்கள் இடம் பெற்றிருந்தது.

ஒன்று, ஏழ்மையைப் போக்குவதற்கான வரி வருவாயில் இருந்து அரசு நிர்வகிக்கும் கட்டாய ஓய்வூதியத் திட்டம். இரண்டு, ஓய்வு காலத்திற்கான சம்பள சேமிப்புகளைத் தனியார் நிர்வாகத்திற்கு உட்படுத்தும் கட்டாய ஓய்வூதியத் திட்டம். மூன்று, வயது முதிர்ந்த காலத்தில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடு களைப் பெறுவதற்கான ஆவல் கொண்டவர் களுக்கான சுய விருப்ப கூடுதல் ஓய்வூதியத் திட்டம். முதல் பரிந்துரையைக் கண்டுகொள் ளாத மத்திய அரசு, தனியார் மற்றும் அந்நிய முதலீட்டிற்கான ஏற்பாடு ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறது. சமீபத்தில் நடந்த இரண்டு நிகழ்வுகள், வருங்கால வைப்பு நிதியை அரசே பராமரிக்க வேண்டும் என்பதை வலியுறுத்துகிறது. ஒன்று, அமெரிக்கா உள்ளிட்ட பல வளர்ந்த நாடுகளில் மிகப் பெரும் சரிவை ஏற்படுத்திய பங்குச் சந்தை வணிகம். இதன் மூலம் உலகமே மிகப் பெரும் பொருளாதார மந்த நிலையை சந்தித்து, அதிலிருந்து மீள இயலாது நீடித்து நிற்கும் நிலை.

இரண்டு, கிங்ஃபிஷர் விமான சேவை நிறுவனம். இந்திய பொதுத்துறையைச் சார்ந்த 13 வங்கிகளில் 5630 கோடி ரூபாயையும், தனியார் துறையைச் சார்ந்த 4 வங்கிகளில் 582 கோடி ரூபாயும் கிங்ஃபிஷர் நிறுவனம் கடன் பெற்றுள்ளது. திவால் கணக்கு காட்டியுள்ள நிலையில் இது வராக் கடனாக பராமரிக்கப்படலாம். தூத்துக்குடியில் உள்ள ஸ்பிக் நிறுவனத்திற்கும், இதர பல நிறுவனங்களுக்கும் இதுபோல் கடன் இருக்கிறது. ஏற்கனவே இந்தியாவில் உள்ள பொதுத்துறை நிறுவனங்களுக்கு வர வேண்டிய கடனை, வராக்கடன் பட்டியலில் வைத்து, சுமார் ஒன்றரை லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு இருப்பதாக நாடாளுமன்றத்தில் நிதி அமைச்சர்கள் பலமுறை அறிக்கை வாசித்திருக்கிறார்கள்.

ஆனாலும் கூட இந்திய வங்கிகள் 2008 உலக பொருளாதார நெருக்கடி காரணமாக, எந்த சேதாரத்தையும் சந்திக்கவில்லை. இதற்கு காரணமாக பிரதமரும், அன்றைய நிதி அமைச்சரும், திட்டக் கமிஷன் துணைத் தலைவரும், சோனியா காந்தியும் குறிப்பிட் டது, ”இந்திய வங்கித் துறை பொதுத்துறை வசம் இருப்பதே” என்பதாகும். அமெரிக்க வங்கிகளே திவால் என்கிற கடலில் தத்தளிக்கிற போது, தடுமாற்றமே இல்லாமல் சென்றது இந்திய பொதுத்துறை வங்கிகள் என்ற பெருமை, நமது நாட்டிற்கு இருக்கிறது. கடந்த காலத்தில் வங்கித்துறையில், அந்நிய முதலீட்டிற்கு முயற்சி செய்ததும், அதை இடதுசாரிகள் தடுத்ததும் மறுக்க முடியாத உண்மை.

அமெரிக்க வங்கிகள் பொருளாதார மந்தத் திற்கு வழிவகுக்க பிரதான காரணம், அந்த நாட்டில் வங்கிகள் பங்குச்சந்தையில் மட்டும் தீவிரம் காட்டியதாகும். வருங்கால வைப்பு நிதியை, அடமான கடன் பத்திரங்களில் முத லீடு செய்து, பங்குச்சந்தை வர்த்தகத்தில் பயன்படுத்தியதே ஆகும். விளைவு, அந்த நாட்டின் நடுத்தர வர்க்கத்தினர் பொருளாதார இழப்பிற்கு ஆளாகினர். அவர்களின் முதிய வயதில் கிடைக்க வேண்டிய ஓய்வூதியத் திற்கு பெரும் தடங்கல் வந்து சேர்ந்தது. எனவே தான் அவர்கள் வால்ஸ்ட்ரீட் ஆக்கிர மிப்புப் போராட்டத்தை இரண்டு மாத காலமாக நடத்தி வருகின்றனர்.

இதன் பாதிப்பு ஐரோப்பாக் கண்டத்திலும் தீவிரம் பெறுவதற்கும் இதுவே அடிப்படைக் காரணமாகும். இப்போராட்டத்தில் இன் னொரு பகுதியினரும் இணைந்திருப்பது கவனிக்கத்தக்கது. மருத்துவக் காப்பீட்டுத் திட்டங்களில் சேர்ந்தவர்கள்தான் அந்தப் பகுதியினர். அமெரிக்க காப்பீட்டு குழுமம் என்ற நிறுவனம் உள்ளிட்ட, காப்பீட்டு நிறு வனங்களிலும் காப்பீட்டுத் தொகை செலுத்தி யவர்கள் ஆவர். காப்பீடு இருந்தும் மருத்வச்சிகிச்சைக்கு பலமாதங்கள் காத்திருக்க வேண்டிய அவலம் உருவானதே அவர்களும் போராட்டத்தில் இணைவதற்குக் காரணம். காப்பீட்டுப் பத்திரங்களைக் கூட பங்கு வர்த் தகத்தில் ஈடுபடுத்தியவர்கள்தான், உலக நிதி சந்தையில் கோலோச்சும் தனியார்கள்.

இவ்வளவிற்குப் பிறகும், இந்திய அரசு, ஓய்வூதியத் திட்டத்தில் அந்நிய மூலதனத்தை அனுமதிக்கும் மசோதாவை முன்வைக்கப் போவதாக அறிவித்திருப்பது, ஆபத்தை விலை கொடுத்து வாங்குவதற்கு ஒப்பானது. கொடிய நோய்களில் இருந்தும், இயற்கை இடர்பாடுகளில் இருந்தும் தப்பிய இந்திய முதியோர்களுக்கு சயனைடு குப்பியைப் பரிசாகத் தருவது போன்றது. இதற்கான துணிச்சல் மத்திய அரசுக்கு வரக்காரணம், ஆட்சிக் கூட்டணியில் இருப்போர் பலவீனமானவர்களாக இருப்பது என்றால் தவறல்ல.

திமுக தலைவர்கள் 2ஜி வழக்குகளில் தடுமாறுகின்றனர். சி.பி.ஐ சோதனைகளில் இருந்து தப்புவதற்காக ஆதரிக்கும் மனப்பான்மையைக் கொண்டிருக்கும் உத்தரப்பிரதேச மாநிலக் கட்சிகள். அமைச்சரவையில் இடம் இருந்தால் போதும் என்ற நிலையில் இருக்கும் தேசிய மாநாட்டுக் கட்சி மற்றும் தேசியவாத காங்கிரஸ். மிரட்டுவதற்கு வசதியானதாக காங்கிரஸ் இருப்பதைப் பயன்படுத்தும் திரிணாமுல் காங்கிரஸ். பொருளாதாரக் கொள்கைகளில் இவர்களுக்குள் எந்த வேறுபாடும் இருந்ததில்லை. எனவே ஐ.மு. கூட்டணி-2 என்கிற அரசை எந்த பொருளாதாரக் கொள்கைகளின் மீதும் கட்டமைக்க வேண்டிய தேவை ஏற்படவில்லை. குறைந்த பட்ச பொதுத் திட்டம் கூட தேவைப்பட்டிருக்கவில்லை.

எனவே மேற்படிக் கட்சிகள் ஓய்வூதியத் துறையில் அந்நிய முதலீடு என்ற மசோதாவை எதிர்ப்பார்கள் என்று, இந்திய நடுத்தர வர்க்கமும், தொழிலாளர்களும் எதிர்பார்ப்பதற்கான முகாந்திரம் எதுவும் இல்லை. 2004 ல் இருந்து 2009 வரை இருந்த ஐ.மு.கூட்டணி -1 அரசு ஓய்வூதியதாரர்கள் மீது அல்லது மக்கள் மீது தாக்குதல் தொடுக்கும் கடுமையான பொருளாதாரக் கொள்கைகளை எளிதாக பின்பற்ற இயலவில்லை. காரணம், இடது சாரிகள் 63 பேர் வெளியில் இருந்து ஆதரவு என்பதன் மூலம் செய்த கண்காணிப்பாகும்.. பிரதமர் மன்மோகன்சிங் தான் நினைக்கிற பொருளாதாரக் கொள்கைகளை இடதுசாரிகளிடம் விவாதிக்காமல் முன்வைக்க முடியாத நிலை இருந்தது. ஒருகட்டத்தில், நான் அடிமையைப் போல் நடத்தப்பட்டேன் என்று புலம்புகிற அளவிற்கு மன்மோகன்சிங் தள்ளப்பட்டார். எந்த இடத்திலும் இடதுசாரிகள் தங்களின் குடும்ப உறுப்பினர் அல்லது கட்சிக்காரரின் தேவைக்காக பிரதமரை நிர்ப்பந்திக்கவில்லை. அப்படி பிரதமரும் குற்றம்சாட்ட முடியாது.

எனவே இன்றைய இந்திய பொருளாதாரக் கொள்கைகளை மக்களுக்கு சாதகமாக மாற்றாவிட்டாலும், தாக்குதல் தொடுக்காமல் இருக்க வேண்டுமானால் ஆட்சியாளர்களைக் கட்டுப்படுத்துகிற சக்திகள் நாடாளுமன்றத்தில் வலுப்பெற வேண்டும். இல்லையெனில் நம் கழுத்துகளில் கட்டப்படும் சய னைடு குப்பிகள் எண்ணிக்கை அதிகரிக்கும்.

- எஸ்.கண்ணன்

Tuesday, November 29, 2011

ரூபாய் மதிப்பு : வீழ்ச்சியும், விளைவுகளும்


இந்திய ரூபாயின் அந்நியச் செலாவணி மதிப்பு குறிப்பாக அமெரிக்க டாலருக்கு எதிராக பெருமளவு குறைந்திருக்கிறது. நவம்பர் 22ல் ரூபாயின் மதிப்பு ஒரு டாலருக்கு ரூ.52.32. மார்ச் 2009க்குப் பின்னர் இதுவே மிகப் பெரும் சரிவு. இந்த ஆண்டில் இதுவரை 17 சதவீதம் வரை வீழ்ச்சி அடைந்துள்ளது. ஆசிய நாடுகளில் இந்தியாவிற்கே மிகக் கடுமையான பாதிப்பு. ஆனால் மறுபுறத்தில், நம்மை விட பொருளாதாரம் அதிகம் பாதிப்பிற்குள்ளாகியிருக்கும் அமெரிக்காவின் டாலர் உயர்வது கூடுதல் வேடிக்கை. ஏன் இந்த முரண்பட்ட நிலைமை என்பதும் இன்று விளக்கப்பட வேண்டியதொன்றாகும். இவற்றிற்கெல்லாம் விடை தேடுவதற்கு முன்னர் அந்நியச் செலாவணி மதிப்பு எவ்வாறு தீர்மானிக்கப்படுகிறது என்பது குறித்து அறிந்து கொள்வது அவசியம்.

செலாவணி மதிப்பு

ஒவ்வொரு நாட்டின் நாணயமும் தத்தம் நாட்டில் ஒரு குறிப்பிட்ட அளவிலான பண்டங்களை அல்லது சேவைகளை (A unit of Goods and services) வாங்குவதற்கான சக்தி படைத்தவை. இந்தியாவில் ஒரு குறிப்பிட்ட அந்தஸ்திலான உணவுக்கு ரூ.100 கொடுக்க வேண்டுமென்று வைத்துக்கொள் வோம். அதே போன்ற அந்தஸ்துள்ள உணவிற்கு அமெரிக்காவில் 10 டாலர் (ரூபாய் மதிப்பில் ரூ.500) கொடுக்க வேண்டியதிருக்கலாம். அதே போன்று இந்தியாவுடன் ஒப்பிடும் போது அமெரிக்காவில் விமானப் பயணத்திற்கு குறைவாகவும், இரயில் பயணத்திற்கு கூடுதலாகவும் கட்டணங்கள் இருக்கின்றன. விலைகளில் இப்படி பல முரண்பட்ட நிலைமைகள் இருந்தாலும் நடைமுறையில் இரு நாடுகளின் நாணயங்களுக்கு இடை யில் ஒரு சராசரி சமநிலையினைக் கணக்கிடுவது என்பது சாத்தியமே. அதுவும் இன்றைய கணினி யுகத்தில் இதுவெல்லாம் ஒன்றும் பெரிதல்ல. அதாவது, நாணயங்களின் வாங்கும் சக்தியின் அடிப்படையில் நாணய மாற்று மதிப்புக்களை உருவாக்கிக் கொள்ள முடியும். ஆனால், அத்தகைய நியாயத்தினை சர்வதேச முதலாளித்துவம் ஏற்றுக் கொள்வதில்லை. மாறாக, எந்த நாட்டுப் பண்டங்களுக்கு அல்லது நாணயத்திற்கு மற்றொரு நாட்டில் கிராக்கி இருக்கிறதோ அதைப் பொறுத்து பரஸ்பரம் இரு நாடுகளின் நாணயங்களின் மதிப்பு தீர்மானிக்கப்படுகிறது. எனவேதான், டாலர் நம் நாட்டிற்குள் நுழையும் போது ரூபாய்க்கான கிராக்கி உயர்ந்து, அதன் விளைவாக நமது ரூபாயின் மதிப்பு உயர்கிறது; மறுபுறத்தில் ரூபாய்க்கு எதிராக டாலரின் மதிப்பு குறைகிறது. அதே போன்று டாலர் நாட்டினை விட்டு வெளியேறும்போது டாலருக்கான கிராக்கி உயர்ந்து, அதன் விளைவாக டாலருக்கு எதிராக ரூபாயின் மதிப்பு குறைகிறது.

டாலர் மதிப்பு

பொருளாதார மந்தத்தில் அதிகமாகச் சிக்கியுள்ள அமெரிக்காவின் நாணயமான டாலரின் மதிப்பு இந்தக் காலத்தில் எவ்வாறு உயர்கிறது என்பதைப் பார்ப்போம்.

பொதுவாக டாலர் மதிப்பு, தங்கத்தின் விலை, சர்வதேச எண்ணெய் வர்த்தகம் ஆகிய மூன்றிற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. எண்ணெய் வர்த்தகம் ஆகப் பெருமளவில் டாலர் அடிப்படையில் நடைபெறுவதால் டாலருக்கான சர்வதேசக் கிராக்கியும் அதன் காரணமாக அதன் மதிப்பு உயர்வதும் எண்ணெய் வர்த்தகம் கீழிறங்கும் போது டாலர் மதிப்பு குறைவதும் நாம் தொடர்ந்து கண்டு வரும் காட்சிகள். அதே போன்று டாலர் மதிப்பு குறையும் போதெல்லாம் முதலீட்டாளர்கள் தங்களது சேமிப்புக்களை தங்கத்திற்கு மாற்றிக் கொள்வதையும் நாம் பார்த்திருக்கிறோம். அண்மையில் சீனா, இந்தியா உட்பட சில அரசாங்கங்கள் தங்கத்தை விலை கொடுத்து வாங்கின. தங்கத்திற்கும் அதே போன்று மற்றொரு அரிய உலோகமான வெள்ளிக்கும் ஏற்பட்ட அத்தகைய கூடுதல் கிராக்கி அவற்றின் விலைகளை எவ்வாறு உயர்த்தின என்பதும் இன்றைய காட்சிகளேயாகும். சில மாதங்களுக்கு முன்பு வரை டாலரின் மதிப்பு சற்றுக் குறைவாகவே இருந்து வந்தது. ஆனால் அண்மையில் டாலர் மதிப்பு மீண்டும் உயர்ந்து வருகிறது. இது எப்படி?

பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட ‘பிரிக்ஸ்’(BRICKS) நாடுகளின் வளர்ந்துவரும் சந்தைகளை நோக்கி கடந்த சில ஆண்டுகளாக அமெரிக்கா மற்றும் மேற்கத்திய முதலீடுகள் பெருமளவு படை யெடுத்தன. நம் நாட்டிற்கு வந்த முதலீடு பெரும்பாலும் டாலர் அடிப்படையிலானதே. இன்று அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் உள்ள பெரும் கார்ப்பரேட் நிறுவனங்கள் நெருக்கடியின் பின்னணியில் வலுவிழந்திருக்கின்றன. அந்நிலையில் தங்களது பாலன்ஸ் ஷீட்டுகளை ஓரளவு கவர்ச்சிகரமாகக் காட்ட வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. எனவே வெளிநாடுகளிலிருந்து தங்களது முதலீடுகளை அவை திரும்பப் பெறுகின்றன. இவ்வாண்டு செப்டம்பர் மாதத்தில் மட்டும் இந்தியாவிலிருந்து 2.2 பில்லியன் டாலரை அந்நிய நிதி முதலீட்டாளர்கள் (Foreign Institutional Investors - FII) திரும்பப் பெற்றிருக்கின்றனர்.

இந்த மூலதனம் நாடுகளுக்கு உள்ளே நுழையும் போது எவ்வாறு நமது ரூபாய் நாணயம் உட்பட அந்தந்த நாடுகளின் நாணயங்களின் மதிப்பு உயர்ந்ததோ அதே போன்று இன்று டாலர் வெளியேறும்போது அந்நாடுகளின் நாணயங்களின் மதிப்பு குறைந்து, டாலரின் மதிப்பு உயர்ந்து வருகிறது.

இது தவிர, ஐரோப்பிய நாடுகள் கடுமையான நெருக்கடியிலிருக்கும் பின்னணியில், டாலருக்கு சர்வதேசப் போட்டி நாணயமாகக் கருதப்படும் யூரோ மதிப்பிழந்து வருவது மட்டுமல்லாமல், அதன் எதிர்காலமே கேள்விக்குறியாக மாறியுள்ளது. சட்டபூர்வமாக இல்லாவிட்டாலும், நடைமுறையில் கிடைத்திருக்கும் சர்வதேச நாணய அந்தஸ்து அமெரிக்காவிற்கு இப்படிப் பல வகையில் உதவி வருகிறது. அமெரிக்காவின் கடுமையான பொருளாதார நெருக்கடியின் மத்தியிலும் டாலர் உயர்ந்து வரும் கதை இதுதான். தனது நாட்டின் நெருக்கடியினை பிறநாடு களுக்கு எளிதில் ஏற்றுமதி செய்யும் அமெரிக்க சக்தியின் பின்புலமும் இதுவேயாகும்.

நமது நாட்டில்…

ரூபாயின் நாணய மதிப்பு குறைவதன் காரணமாக நமது நாட்டில் பயன் அடைபவர்கள் எவரும் இருக்க முடியாது. வெளி நாட்டில் இருக்கும் தங்களது பிள்ளைகளோ, உறவினர்களோ பணம் அனுப்பும் பட்சத்தில் அத்தகைய குடும்பங்களுக்கு இது சற்று மகிழ்ச்சி அளிக்கலாம். அவர்களுக்கு சற்றுக் கூடுதலாக ரூபாய் கிடைக்கலாம். ஆனால், அமெரிக்கா மற்றும் மேலை நாடுகளில் வேலை இழப்புகளும், ஊதிய இழப்புகளும் பெருகி வரும் நிலையில் அவர்கள் கவலை அடைவதையும் தவிர்க்க இயலாது.

ஏற்றுமதி : ரூபாய் நாணய மதிப்பு குறையும் போது, இந்தியப் பண்டங்களின் விலை குறையும் என்பதால் அது ஏற்றுமதிச் சந்தையில் போட்டியிடுவதற்கு உதவும் என்ற வகையில் ஏற்றுமதியாளர்கள் மகிழ்ச்சி அடையக் கூடும். ஆனால், அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் நிலவும் பொருளாதார மந்தம் இந்தியப் பண்ட ஏற்றுமதிக்கான கிராக்கியினைக் குறைத்துவிட்டது. எனவே அவர்களும் மகிழ்ச்சியாக இல்லை. இது தவிர, ஒரு டாலருக்கு ரூ.47 என்ற விலையின் அடிப்படை யில் ஏற்கனவே செய்துகொண்ட முன்பேர வர்த்தக ஒப்பந்தம் காரணமாக இன்று ரூ. 52 வரை குறைந்திருக்கும் சாதகத்தினை திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் இழந்திருக்கின் றனர். ரூபாயின் மதிப்பு இவ்வளவு குறையும் என அவர்கள் சற்றும் எதிர்பார்க்கவில்லை. இப்படி ஏமாற்றமடைந்த வேறு சில ஏற்றுமதியாளர்களும் இருப்பார்கள்.

இறக்குமதி : இறக்குமதியின் நிலைமை மிகவும் மோசமடையும் என்பதை விளக்கவே தேவையில்லை. இதனுடைய உடனடி விளைவு, அண்மைய பெட்ரோல், டீசல் விலை ஏற்றத்திலேயே தெரிந்துவிட்டது. ஏற்கெனவே, கச்சா எண்ணெய், சமையல் எண்ணெய், பருப்பு வகைகள் என நமது உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் (GDP) 22சதவீதம் வரை நாம் இறக்குமதி செய்ய வேண்டிய தேவை உள்ளது. உலக பருப்பு வகை உற்பத்தியில் 21 சதவீதத்தை நாம் இறக்குமதி செய்து வருகிறோம். நமது உணவுப் பண்டங்களின் விலைகள் மேலும் உயரப்போகின்றன என்பது மேலும் அதிர்ச்சியளிக்கும் செய்தியாகும்.

கார்ப்பரேட் கடன்கள்
: குறைவான வட்டியில் எங்கு கடன் கிடைக்கும் என சாமானிய மக்கள் உள்நாட்டில் தேடிக்கொண்டிருக்கின்றனர். ஆனால், உள்நாட்டு வங்கிகளில் வட்டி விகிதம் குறித்து பேரம் பேசும் சலுகை பெற்ற பெருமுதலாளிகள், வட்டி குறைந்த வெளிநாடுகளில் கடன் வாங்குவதற்கும் அனுமதி பெற்றிருக்கின்றனர். உள் நாட்டுக் கடனைத் தீர்ப்பதற்குக் கூட அத்தகைய வெளிநாட்டுக் கடனை அவர்கள் பெற்றிருக்கின்றனர். இன்று ரூபாய் மதிப்பு குறைந்ததன் காரணமாக ரூ.25,000 கோடி (சுமார் 5 பில்லியன் டாலர்) அதிகமாக கட்ட வேண்டியுள்ளது. குறைந்த வட்டியில் கிடைத்த அனுகூலங்கள் அனைத்தையும், குறைந்து போன ரூபாய் மதிப்பு அடித்துக் கொண்டு போய்விட்டது.

நடப்புக் கணக்கு : இவ்வாண்டு ஜனவரி-மார்ச் முதல் காலாண்டில் 5.4 பில்லியன் டாலராக இருந்த நடப்புக் கணக்குப் பற்றாக்குறை (ஏற்றுமதி- இறக்குமதி இடை வெளி, + நாடுகளுக்கிடையில் வரவு - செலவு இடைவெளி ) ஜூன்-மார்ச் காலாண்டில் 14.1 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.

இப்படி ஒட்டுமொத்தத்தில் நாம் பிற நாடுகளுக்குக் கொடுக்க வேண்டிய பணத்தின் அளவு ரூபாய் மதிப்பில் பன்மடங்கு அதிகரிக்க உள்ளது. இது ஏற்கனவே பணவீக்கத்தால் பாதிக்கப்பட்டிருக்கும் நமது பொருளாதாரத்தினை மேலும் பலவீனப்படுத்தும்.

ரூபாயின் மதிப்பு இவ்வாறு குறைந்து வரும் வேளையில், மேலும் குறையும் என்ற எதிர்பார்ப்பில், ஏற்றுமதியாளர்கள் வெளிநாடுகளில் இருக்கும் தங்களது பணத்தினை பெறுவதைத் தாமதப்படுத்துவார்கள். அதே போன்று இறக்குமதியாளர்கள் மேலும் குறைந்துவிடும் என்ற அச்சத்தில் உடனடியாக தங்களது இறக்குமதித் தேவைக்கான டாலர்களை வாங்கிக் குவிப்பார்கள். இது நிலைமையினை மேலும் சிக்கலாக்கும்.

என்ன செய்வது


இத்தகைய சூழ்நிலையில் ரிசர்வ் வங்கி தலையிட முடியாது எனக் கூறிவிட்டது. வெளிநாடுகளில் இருக்கும் இருப்பு அனைத்தையும் நம் நாட்டிற்குக் கொண்டு வருமாறு சம்பந்தப்பட்ட அனைவரையும் கேட்டுக் கொண்டுள்ளது. அரசாங்கம் மற்றும் ரிசர்வ் வங்கியின் செக்யூரிட்டிகளில் அந்நிய முதலீட்டின் உச்ச வரம்பினை தலா 5 பில்லியன் டாலர் உயர்த்தியுள்ளது. இதைத் தாண்டி எதையும் செய்வதற்கு ரிசர்வ் வங்கி தயாராக இல்லை.

மத்திய அரசின் நிலை இன்னும் வேடிக்கையானது. நாட்டை விட்டு வெளியேறும் மூலதனத்தை தடுப்பதற்காக அத்தகைய பணத்தின் மீதான வரிவிதிப்பு உள்ளிட்ட எதையும் செய்ய மாட்டோம் என மத்திய நிதி அமைச்சகம் தெளிவுபடுத்தியிருக்கிறது. மாறாக, மேலும் அந்நியக் கடன்கள் உள்ளே வருவதற்கான முயற்சிகளே அரசுத் தரப்பில் இருக்கும் என உறுதியளிக்கப்பட்டிருக்கிறது.

நாட்டிற்குள் டாலர் அதிகம் நுழையும் போது, ஏற்றுமதிச் சந்தையினைப் பாதிக்கும் வகையில் ரூபாய் மதிப்பு ஏறாமல் ரிசர்வ் வங்கி பார்த்துக் கொள்வதுண்டு. டாலரை விலை கொடுத்து வாங்கி, டாலருக்கு ஒரு செயற்கையான கிராக்கியினை உருவாக்கி, ரிசர்வ் வங்கி நிலைமையினைச் சமாளிக்கும். ஆனால், டாலர் வெளியேறும் போது ரூபாய் மதிப்பினை உயர்த்துவதற்கு ரிசர்வ வங்கியால் அப்படி எதுவும் செய்ய முடியாது. டாலர் மதிப்பினை உயர்த்துவதும், ரூபாய் மதிப்பினைக் குறைப்பதும் உள்நாட்டுச் சந்தை சம்பந்தப்பட்டது. எனவே அதை ரிசர்வ் வங்கி செய்துவிட முடிகிறது. ஆனால் சர்வதேசச் சந்தையில் ரூபாய் மதிப்பினை உயர்த்தும் அளவிற்கு அதாவது டாலரின் மதிப்பினைக் குறைக்கும் அளவிற்கு நம்மால் ஏதும் செய்துவிட முடியாது. நமது வெளி நாட்டுக் கடன் 317 பில்லியன் டாலர். நமது செலாவணிக் கையிருப்போ 314 பில்லியன் டாலர் மட்டுமே. இதை வைத்துக் கொண்டு என்ன பெரிதாக செய்து விட முடியும்? மூலதனப் போக்குவரத்தினை நாட்டின் உண்மையான தேவைகளின் அடிப்படையில் கட்டுப்படுத்தவில்லை என்றால் இத்தகைய துயரங்கள் தொடர்வதை தவிர்க்கவே இயலாது.

மூலதனப் போக்குவரத்தினை பெருமளவு தளர்த்திவிட்டாலும் இன்னும் கூட சில கட்டுப்பாடுகள் அரசின் கைகளில் உள்ளன. ஆனால் இதையும் கூட கைவிடுவது என்ற ரீதியில் ஐ.மு.கூட்டணி அரசு செயல்பட்டு வருவது துரதிருஷ்டமே. அமெரிக்காவில் நூற்றுக்கு மேற்பட்ட வங்கிகள் மூடப்பட்டு விட்டன. இன்றைக்கும் 865 வங்கிகள் பிரச் சனைக்குரிய நெருக்கடியில் இருப்பதாக அமெரிக்க ஃபெடரல் டிபாசிட் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் கூறியுள்ளது. இதையெல்லாம் இந்திய அரசு கண்டு கொண்டதாகவே தெரியவில்லை. நிதி நிறுவனங்களை அந்நியருக்குத் திறந்துவிட்டு, இந்திய மக்களின் சேமிப்பினை அவர்களுக்குத் தாரை வார்க்கும் வகையில், இன்சூரன்ஸ், வங்கி, பென்ஷன் நிதியம் குறித்த மசோதாக்கள் இன்று நாடாளுமன்றத்தில் காத்திருக்கின்றன.

“செய்தக்க அல்ல செயக் கெடும்
செய்தக்க செய்யாமையானும் கெடும்” - (குறள்)

இன்று ஐ.மு.கூட்டணி- 2 அரசு, செய்ய வேண்டியதைச் செய்யாமலும், செய்யக் கூடாததைச் செய்து கொண்டும் இருக்கிறது. அனுபவத்திலிருந்து பாடம் கற்க வேண்டும். கற்காவிட்டால், மக்கள் அவர்களுக்குத் தக்க பாடம் கற்பிப்பார்கள்.

-இ.எம். ஜோசப்

Tuesday, November 22, 2011

வரலாறு காணாத பணமதிப்பின் வீழ்ச்சியும் அதன் வரலாறும்


சர்வதேசச்  சந்தையில்  டாலர் மதிப்புக்கு ருபாயின் மதிப்பு 52.73 ஆகியிருக்கிறது.  எப்போதும் இல்லாத அளவுக்கு இந்திய ருபாயின் மதிப்பு குறைந்திருக்கிறது என புள்ளி விபரங்கள் அதிர்ச்சியோடு சொல்கின்றன. நிலைமைகளை  ரிசர்வ் வங்கி கூர்மையாக கவனித்து வருவதாகவும், உடனடியாக தலையிடுவதா வேண்டாமா என ஆய்வு செய்து வருவதாகவும் பொருளாதார வல்லுனர்கள் தெரிவிக்கிறார்கள். நிதியமைச்சர் கையைப்  பிசைந்துகொண்டே, “யூரோ மண்டலத்தில் நிலவும் பொருளாதார நெருக்கடியின் விளைவே இதுவென்று” சொல்கிறார்.   கூடவே இன்னொன்றும் சொல்கிறார். “வெளிநாட்டு முதலீடுகளை இழுக்கும் வல்லமையை நாம் இழந்து கொண்டு இருக்கிறோம் என்பதன் அறிகுறி” என்றும் சொல்கிறார். இந்தப் பார்வைதான் பணமதிப்பின் வீழ்ச்சியை விட அதி பயங்கரமானது.

இப்படி முதலீடுகளை இழுப்பதற்காக, முதலாளித்துவம் நடத்திய விபரீதங்களைத்தான் இன்று உலகம் முழுவதும் சந்தித்துக்கொண்டு இருக்கிறது.  உலகின் ஒவ்வொரு நாட்டையும் ஆட்டைப்படைக்கிற வல்லமை கொண்டதாக சர்வதேச நிதிமூலதனமே விஸ்வரூபமெடுத்தது. இன்று அதற்கு நேர்ந்திருக்கும் சிக்கலில் முதலாளித்துவம் திசை தெரியாமல், தீர்வு தெரியாமல் தவிக்கிறது. மக்களுக்கான அரசாங்கமாக இல்லாமல், கார்ப்பரேட்களின் ஏவலாளிகளாகிப் போன அதிகார பீடங்கள் இப்போதும் தங்கள் தவறுகளை உணர்ந்ததாய் தெரியவில்லை.  நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜியின் வார்த்தைகள் அதைத்தான் சொல்கின்றன.

அந்நிய முதலீடு, தாராள மயம் என்று வாயைப் பிளந்து, மக்களுக்கான அடிப்படைத் தேவைகளை கவனிக்க மறுத்தவர்களுக்கு இன்னும் உண்மைகள் உறைக்கவில்லை. மக்களின் வாங்கும் சக்தி குறைந்துபோகும் சமூகத்தில் உற்பத்திக்கும், முதலீடுகளுக்கும் என்ன மதிப்பு இருக்கப் போகிறது. இந்த வெற்றிடத்தை அறியாமல் பொருளாதாரப் புலிகள் உறுமிக்கொண்டு இருக்கின்றன. இவற்றுக்கு மத்தியில் அழுத்தமாகவும், தெளிவாகவும் உண்மைகளை எடுத்துரைக்கிறார்,  சி.பி.எம் கட்சியின் எம்.பி சீதாராம் யெச்சூரி.  உலகத்தின் நெருக்கடிகளையும், இந்தியாவின் தேவைகளையும் விளக்கும் அவரது கருத்துக்களில் இந்த நெருக்கடிக்கான வரலாறும்  இருக்கிறது, தீர்வும் இருக்கிறது.


 நோய்க்கு வித்திடும் மருந்துகள்!
-சீத்தாராம் யெச்சூரி எம்.பி.,

2008 நிதி நெருக்கடியைச் சமாளிக்க முதலாளித்துவம் தேர்ந்தெடுத்த வழிமுறைகள், மேலும் ஆழமான நெருக்கடிக்கு இட்டுச் செல்லும்; அத்தகைய மீட்சி முழுமை பெறும் முன்னரே புதிய நெருக்கடியில் சிக்கி இரட்டைத் தாழ்வு மந்தத்தில் போய் முடியும் என நான் ஏற்கெனவே குறிப்பிட்டிருந்தேன். நான் கணித்தது போலவே நடந்துவிட்டது என்பது குறித்து நான் ஒன்றும் மகிழ்ச்சி அடையவில்லை. கார்ப்பரேட் கடன்களை அரசாங்கக் கடன்களாக மாற்றுகிற இந்த உத்திகளுக்கு உலகெங்கிலும் லட்சக்கணக்கான மக்கள் பலியாகியுள்ளனர். மீட்புத் திட்டம் என்ற பெயரில் எந்தக் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு கொள்ளை கொள்ளையாய் அள்ளிக்கொடுக்கப்பட்டதோ, அந்தக் கம்பெனிகள் உருவாக்கிய நெருக்கடிதான் அர சுக்கடன்கள் பெருமளவு பெருகியதற்கு அடிப்படைக் காரணம் என்பதை மறந்துவிடக்கூடாது.

இன்று அந்த நிறுவனங்களின் நிதிநிலை அறிக்கை அழகாக ஜோடிக்கப்படுகிறது; அந்நிறுவனங்களின் மேலதிகாரிகள் கணிசமான போனஸ் பெறுகிறார்கள். ஆனால், மறுபுறத்தில் அரசாங்கங்கள், கடன்சுமைகளைக் களைவது என்ற பெயரால் கடுமையான சிக்கனப் போக்கை கடைப்பிடித்து வருகின்றன. இதனால், உலகெங்கிலுமுள்ள கோடிக்கணக்கான மக்களின் வாழ்நிலை சின்னாபின்னமாகியுள்ளது. நிலைமை இவ்வாறிருக்கையில், வால் ஸ்டிரீட்க்கு எதிரான இயக்கங்கள் தொடருவதில் ஆச்சரியப்படுவதற்கு எதுவும் இல்லை.

கிரீஸ் 

இந்த நெருக்கடியின் பின்னணி யில் அரசியல் எதிர்விளைவுகளும் தோன்றி வருகின்றன. கிரேக்க பிரதமர் ஜார்ஜ் பாப் பென்ட்ரோ சென்ற வாரம் ராஜினாமா செய்துள்ளார். ஐரோப்பிய யூனியனுடன் கிரீஸ் தொடர்ந்து இருக்க வேண்டுமா, அதன் தொடர்ச்சியாக யூரோவிலிருந்து விலக வேண்டுமா என்பது குறித்து மக்களின் கருத்தறிய பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று அச்சுறுத்திய பின்னரே அவர் ராஜினாமா செய்தார். வாக்கெடுப்பு நடைபெற்றிருந் தால் ஐரோப்பிய யூனியன் முழுமையும் நெருக்கடிக்கு உள்ளாகியிருக்கும்; ஜெர்மனி, பிரான்ஸ் ஆகிய பிற ஐரோப்பிய பொருளாதாரங்களை, ஏன், உலகப் பொருளாதாரத்தையும் கூட ஒரு பொருளாதார மந்தச் சுழற்சிக்குள் தள்ளியிருக்கும். கிரீஸ் நாட்டில் அரசியல் ஸ்திரத்தன்மையை உறுதி செய்வது, கொந்தளிப்பான உலக நிதிச் சந்தையை சாந்தப்படுத்துவது என்ற நோக்கில் ‘தேச ஒற்றுமை’ என்ற பெயரில், அவசர கதியில் ஒரு அரசாங்கம் அமைக்கப்பட்டிருக்கிறது.

இருப்பினும் இம்முயற்சி, வளர்ந்து வரும் வேலையின்மை, சமூகத்துறைக்கான செலவினங்களில் வெட்டு, உழைக்கும் நேரம் அதிகரிப்பு, குறைந்த கூலி மற்றும் ஓய்வூதியம் ஆகியவற்றிற்கு எதிராக கிளர்ந்தெழுந்துள்ள கிரேக்க மக்களிடம் எவ்வித பிரதிபலிப் பினையும் ஏற்படுத்தவில்லை. இதுவரை கண்டிராத எண்ணிக்கையில் தேசம் தழுவிய வேலை நிறுத்தங்களை கிரீஸ் நாடு சந்தித்து வருகிறது.

இத்தாலி

இத்தாலியின் அரசியலில் 17 ஆண்டுகளாக ஆதிக்கம் செலுத்திய பிரதம மந்திரி சில்வியோ பெர்லுஸ்கோனி இப்போது பதவி விலகியுள்ளார். இத்தாலியின் கடன், அந்நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 120 சதவீதமாக உயர்ந்துள்ளது. அரசுப் பத்திரங்களின் வட்டி 7 சதவீதத்தை தொட்டு விட்டது. இத்தகைய வட்டி விகித அளவில்தான், முதலில் அயர்லாந்து, பின்னர் கிரீஸ், போர்ச்சுக்கல் ஆகிய நாடுகள் மீட்புக்கான கோரிக்கை வைக்கும் நிர்ப்பந்தத்திற்கு உள்ளாயின. இப்போது பொறுப்பேற்றிருக்கும் புதிய அரசாங்கம், கடுமையான சிக்கன நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்ட யுள்ளது. முதலில் உடனடியாக 60 பில்லியன் யூரோக்களை சேமிக்கும் அளவிற்கு நடவடிக்கை தேவைப்படுகிறது. இவற்றில் ஊதிய முடக்கம், ஓய்வுபெறும் வயதை உயர்த் துவது, மதிப்புக்கூடுதல் வரி உயர்வு ஆகியன அடங்கும். இவை அனைத்தும் மக்கள் மீது மேலும் துயரங்களைக் குவிப்பவையேயாகும்.

ஸ்பெயின்

ஸ்பெயின் நாட்டின் நிலைமையும் இதுவே. இவ்வருடம் அந்நாட்டின் பொருளாதார வளர்ச்சி சதவீதம் என்பது பூஜ்யம். நம்ப முடியவில்லை. எனினும் அதுவே உண்மை. வேலையின்மை விகிதம் 22 சதவீதத்தைக் கடந்துள்ளது. பெருமளவுக்கு அதிகமான கடன் சுமை சேர்ந்துள்ளது.

அமெரிக்கா

அமெரிக்கப் பொருளாதாரம் தொடர்ந்து நெருக்கடியின் பிடியிலேயே தொடர்கிறது. நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு, கார்ப்பரேட் நிறுவனங்களின் திவால்களை அரசாங்கத்தின் திவாலாக மாற்றிய முந்தைய நடவடிக்கைகளே தற்போதைய நெருக்கடிக்கு வித்திட்டன. அதைப்போலவே, இன்றைய நெருக்கடியிலிருந்து மீள்வதற்காக, தாங்க இயலாத பெரும் பெரும் சுமைகளை மக்கள் மீது சுமத்தும் தற்போதைய உத்தி மற்றுமொரு ஆழமான நெருக்கடிக்கு வித்திட்டு வருகிறது. இதனால் உருவாகவிருக்கும் நெருக்கடி 1929ம் உலகினை உலுக்கிய பெரு வீழ்ச்சியின் உக்கிரத்தை விட, பல பரிமாணங்களில் மிக மோசமாக இருக்கும்.

இத்தகைய கடினமான சிக்கன நடவடிக்கைகள் பெருவாரியான உலக மக்களின் வாங்கும் சக்தியைக் குறைப்பதோடு, பெருகி வரும் வேலையின்மையையும் அதிகரிக்கும். இதன் விளைவாக உற்பத்தியில் வீழ்ச்சியும் மொத்த கிராக்கியில் ஏற்படும் சரிவினால் வணிகமும் வர்த்தகமும் பெருமளவில் பாதிக்கப்பட்டு, உலகப் பொருளாதாரத்தில் அதிர்வலை விளைவுகளை ஏற்படுத்தும்.

இந்தியா?


இந்த அதிர்வினால் இந்தியா பாதிப்படையாது என்கிற நம்பிக்கை கானல் நீரே என்பது நிரூபணமாகி வருகிறது. அண்மையில், கேன்ஸ் நகரில் நடைபெற்ற ஜி-20 உச்சி மாநாட்டில் நமது பிரதமர், இந்தியப் பொருளா தாரம் குறித்து பெருமளவு நம்பிக்கை தெரிவித்திருக்கிறார். ஆனால், அனைத்துப் பொருளாதாரக் குறியீடுகளும் இந்தியப் பொருளாதாரம் மந்தமாகி வருவதை மட்டுமல்ல, அது ஏற்கெனவே மந்தத்தின் பிடியில் இருப்பதையே காட்டுகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளில் உற்பத்தி மிகவும் கீழ் நிலைக்கு இறங்கியுள்ளது. தொழில் உற்பத்திக் குறியீடு 6.1 சதவீதத் திலிருந்து தொடர்ந்து மூன்றாவது மாதமாகக் குறைந்து, செப்டம்பரில் 1.9 சதவீதமாக இறங்கியது. சென்ற ஆண்டில் 8.2சதவீதமாக இருந்த தொழில் வளர்ச்சி இவ்வருடத்தின் முதல் அரையாண்டில் 5 சதவீதமாகக் குறைந்துள்ளது. இதன் விளைவாக, வேலை வாய்ப்புக்களில் வீழ்ச்சியும் ஊதியத்தில் முடக்கமும் ஏற்பட்டு, உள்நாட்டு கிராக்கியின் வளர்ச்சியினை எதிர்மறை நிலைக்கு எடுத்துச் செல்லும் அபாயமும் உள்ளது.

இவற்றிற்கெல்லாம் மேலாக ஏற்றுமதி வளர்ச்சி ஜூலை மாதத்தில் 81.79சதவீதத் தை தொட்ட பின் தொடர்ந்து சரிவை சந்தித்துக் கொண்டு வருகிறது. தற்போது 10.8சதவீத மாகக் குறைந்துள்ளது. இறக்குமதி நிலையற்று இருக்கிற போதிலும், வர்த்தகப் பற்றாக் குறை 92 பில்லியன் டாலர்களாக உயர்ந்திருக்கிறது. நடப்பு நிதியாண்டில் இது 150 பில்லி யன் டாலர்களை எட்டிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் விவசாயத்திற்குப் பிறகு மிகப்பெரிய வேலை அளிக்கும் துறையாக உள்ள நெசவு மற்றும் ஆடை தயாரிக்கும் துறைகளில் உலக வர்த்தகத்தில் ஏற்பட்ட சரிவினால் வேலையின்மை பெருகி வருகிறது.

இவையனைத்தும் பெருவாரியான இந்திய மக்களின் எதிர்காலத்தைக் கேள்விக் குறியாக்கி வருகிறது. அத்தியாவசியப் பண்டங்களின் அதிவேக விலை உயர்வால் தற்போதுள்ள வாழ்வாதார நிலை தொடர்ந்து தாக்கப்பட்டு வருகிறது. பணவீக்கத்தினை கட் டுப்படுத்தி விடுவோம் என அரசு ஜம்பமாகக் கூறிவந்த போதிலும் உணவுப்பணவீக்கம் 12 சதவீதமாக உயர்ந்திருக்கிறது. காய்கறிகளின் விலை 26 சதவீதம், பருப்பு வகைகள் 14 சத வீதம், பழங்கள் 12 சதவீதம், முட்டை, மீன், இறைச்சி 13 சதவீதம், பால் 12 சதவீதம் என உச்சத்தில் நிற்கின்றன.

தேவை சமூக முதலீடுகளே!

இத்தகைய சூழலில், சர்வதேச நிதி மூல தனம் மேலும் பெருமளவு இந்தியாவிற்குள் வரும் வகையில் நிதித்துறையை தாராளமயமாக்க வேண்டும் என்ற இந்தியப் பெருமுதலாளிகளின் கோரிக்கை, இந்திய மக்களின் நலன்களை குழிதோண்டிப் புதைக்கும் முயற்சியே ஆகும். சாமானிய மக்களின் நலன்களை காக்க வேண்டு மென்றால் ஐ.மு.கூட்டணி -2 அரசு கார்ப்பரேட்களுக்கும், பெரும் செல்வந்தர்களுக்கும் அள்ளிக்கொடுக்கும் வரிச்சலுகைகளை தடுத்து நிறுத்த வேண்டும். (கடந்த இரு ஆண்டு பட்ஜெட்டுகளில் மட்டும் அவர் களுக்கு ரூ.5.2 லட்சம் கோடி வரிச்சலுகை வழங்கப்பட்டிருக்கிறது). இதன் காரணமாக முதலீடுகளும் உயரவில்லை; அதன் பயனாக வளர்ச்சியும் ஏற்பட்டுவிடவில்லை. இன்னும் சொல்லப்போனால், மக்களின் வாங்கும் சக்தி உயரவில்லையெனில், எந்த ஒரு முதலீடும் தொடர்ந்து நிலைத்திருக்க முடியாது. வரிகள் முழுமையாக வசூலிக்கப்பட்டு, சமூக - பொருளாதாரக் கட்டமைப்பில் முதலீடு செய்வதன் மூலமே வேலைவாய்ப்புக்களை உருவாக்கவும் உள்நாட்டு கிராக்கியைப் பெரிதாக்கவும் இயலும்.



தமிழில் : ஜெ.விஜயா, மதுரை
நன்றி : ஹிந்துஸ்தான் டைம்ஸ் (15.11.2011)

Tuesday, November 15, 2011

திவால் நிலையில் கிங் ஃபிஷர்! மக்கள் பணத்தைப் பாழடித்த விஜய் மல்லையா!

பெரு முதலாளிகளில் ஆடம்பரம் மற்றும் வீண் செலவுகளுக்கு அடையாளம் காட்ட வேண்டுமென்றால் எளிதில் நினைவுக்கு வருபவர் மதுபான விற்பனையில் ஈடுபட்டிருக்கும் விஜய் மல்லையாதான். அவரது இந்த நடவடிக்கைகள் அனைத்தும் மக்களைக் கவருபவையாக ஊடகங்களால் சித்தரிக்கப்பட்டன. வெறும் காலண்டர் தயாரிக்க ஏராளமான மாடல்களை அழைத்துக் கொண்டு, தனி விமானத்தில் உலகமெங்கும் சுற்றுப்பயணம் மேற்கொண்டார் மல்லையா. அந்த செலவெல்லாம் புதுமையான உத்தியாகக் காட்டப்பட்ட மக்கள் மூளைச் சலவைக்கு உள்ளாகினர். கிங் ஃபிஷர் விமான நிறுவனம் வந்தபோது தனியார் துறைக்கு எடுத்துக்காட்டாக அதை சித்தரித்து வந்தனர். 

இவையனைத்தும் வெகு விரைவிலேயே அம்பலமாகிவிட்டன. 2003 ஆம் ஆண்டில் துவக்கப்பட்ட கிங் ஃபிஷர் நிறுவனம், ஒரு ஆண்டில்கூட லாபத்தில் இயங்கவில்லை. அந்நிறுவனத்தின் ஒட்டுமொத்த இழப்பு எட்டாயிரம் கோடி ரூபாயைத் தாண்டி நிற்கிறது. அவரது சொத்துக்கள் என்று பார்த்தால் ஆடம்பரக் கார்கள், பந்தயக்குதிரைகள், பழங்கால வாட்கள், ஐ.பி.எல். கிரிக்கெட் மற்றும் ஃபார்முலா-1 அணி என்றுதான் பட்டியல் இருக்கிறது. மக்களின் பணத்தை ஆடம்பரமாக வாரிக் கொட்டியிருக்கிறார். தாங்க முடியாத கடன் என்றவுடன்தான் இது அம்பலமாகியிருக்கிறது. அனைத்துக் கடன்களையும் தீர்க்க அரசு உதவ வேண்டும் என்று கோரியிருக்கிறார். இந்தக் கோரிக்கையை ஏற்கக்கூடாது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. மக்கள் பணத்தில் இந்தப் பணி நடக்கக்கூடாது என்று கட்சியின் பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத் கருத்து தெரிவித்துள்ளார். 

விஜய் மல்லையா தலைமையிலான குழுமத்தில் ஆறு நிறுவனங்கள் உள்ளன. இவற்றின் பங்குகள் விலையும் கடுமையாகச் சரிந்துள்ளது. அதைத் தூக்கி நிறுத்தவே, நோய் வாய்ப்பட்டிருக்கும் விமானப் போக்குவரத்துத்துறைக்கு உதவுவோம் என்று பிரதமர் மன்மோகன்சிங் கருத்து தெரிவித்தார். அதேவேளையில்தான், பெட்ரோல் விலை மீண்டும் உயரும் என்று அபாயச்சங்கு ஊதியுள்ளார். கிங் ஃபிஷர் நிறுவனத்திற்கு உதவக்கூடாது என்று பஜாஜ் குழுமத்தின் தலைவர் ராகுல் பஜாஜ் கருத்து கூறியுள்ளார். இவருடைய குழுமம் வங்கிகளிடமிருந்து வாங்கிய கடன்கள் திருப்பித் தரப்படாதது பற்றி இவர் இன்னும் வாய் திறக்கவில்லை என்பது தனிக்கதையாகும்.

நடப்பு நிதியாண்டுத் துவக்கத்தில்தான் தனது கடன் சுமையை நிதி நிறுவனங்கள் மீது கிங் ஃபிஷர் ஓரளவு இறக்கி வைத்தது. அதை பங்குகளாக பாரத ஸ்டேட் வங்கி மற்றும் ஐசிஐசிஐ வங்கிகள் வாங்கிக் கொண்டன. அப்போது சந்தையில் நிலவிய பங்கு விலையில் 60 விழுக்காடு கொடுத்து அந்தப் பங்குகள் இந்த வங்கிகளுக்குக் கிடைத்தன. இந்த வகையில் சுமார் 1,400 கோடி ரூபாய் மதிப்பிலான கடனை மக்கள் பணத்தில் தீர்த்துக் கொண்டார் விஜய் மல்லையா. இதன்பிறகும் இருக்கும் நிறுவனத்தின் இழப்புதான் சுமார் எட்டாயிரம் கோடி ரூபாய். 1,400 கோடி ரூபாய் கொடுத்து கிங் ஃபிஷரைக் காப்பாற்ற பாரத ஸ்டேட் வங்கி மற்றும் ஐசிஐசிஐ ஆகியவை எடுத்த முயற்சிகள் அந்த வங்கிகளுக்கு பாதகமாகவே முடிந்துள்ளன. கடுமையான நெருக்கடி காரணமாக கிங் ஃபிஷர் நிறுவனத்தின் பங்கின் விலை வெறும் ரூ.19 ரூபாய் அளவுக்கு சரிந்துவிட்டது. ஏகப்பட்ட கோடிகளை இரண்டு வங்கிகளும் இழந்து நிற்கின்றன. 

தனியார் துறை வெற்றியின் அடையாளமாகக் காட்டப்பட்ட கிங் ஃபிஷர் நிறுவனம், முதலாளித்துவ கொள்கைகள் எத்தகைய தாக்கங்களை ஏற்படுத்தும் என்பதற்கான அடையாளமாக மாறியுள்ளது.

விஜய் மல்லையாவின் சொத்து 
2011 ஆம் ஆண்டுக்கணக்குப்படி அவருடைய சொத்து மதிப்பு 22 ஆயிரத்து 850 கோடி ரூபாய்.
610 கோடி ரூபாய் செலவில் ஃபார்முலா-1 அணி.
ஐ.பி.எல். அணியான ராயல் சேலஞ்சர்சை 464 கோடி ரூபாய்க்கு வாங்கினார்.
16 ஆடம்பரக் கார்கள்
200 பந்தயக் குதிரைகள்
ஏராளமான பழங்கால வாட்கள் மற்றும் நினைவுச்சின்னங்களை ஏலத்தில் எடுத்துள்ளார். 

கிங் ஃபிஷர் கடன் வாங்கியுள்ள வங்கிகள் 

பொதுத்துறை 

பாரத ஸ்டேட் வங்கி(எஸ்.பி.ஐ) - 1,410 கோடி ரூபாய்
ஐ.டி.பி.ஐ - 719 கோடி ரூபாய்
பஞ்சாப் நேஷனல் வங்கி - 702 கோடி ரூபாய்
பேங்க் ஆப் இந்தியா - 552 கோடி ரூபாய்
பேங்க் ஆப் பரோடா - 532 கோடி ரூபாய்
யுனைடெட் வங்கி - 395 கோடி ரூபாய்
சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா - 360 கோடி ரூபாய்
கார்ப்பரேசன் வங்கி - 305 கோடி ரூபாய்
யூகோ வங்கி - 287 கோடி ரூபாய்
ஸ்டேட் வங்கி ஆப் மைசூர் - 139 கோடி ரூபாய்
இந்தியன் ஓவர்சீஸ் வங்கி - 122 கோடி ரூபாய்
ஓரியண்டல் பேங்க் ஆப் காமர்ஸ் - 56 கோடி ரூபாய்
பஞ்சாப் அண்டு சிந்த் வங்கி - 51 கோடி ரூபாய் 

தனியார் துறை 

ஐசிஐசிஐ வங்கி - 430 கோடி ரூபாய்
பெடரல் வங்கி - 100 கோடி ரூபாய்
ஆக்சிஸ் வங்கி - 46 கோடி ரூபாய்
இண்டஸ் இந்த் வங்கி - 6 கோடி ரூபாய்

- நன்றி : தீக்கதிர் 

Sunday, November 13, 2011

வால்ஸ்ட்ரீட் : வெடித்துச் சிதறும் எரிமலை

கனன்று கொண்டிருக்கும் எரிமலை ஓர்நாள் வெடித்துச்சிதறும்!
அதுதான் தற்போது அமெரிக்காவில் நடந்து கொண்டிருக்கிறது.

"வால் ஸ்ட்ரீட்டைக் கைப்பற்றுவோம்" என்ற முழக்கத்தோடு நியூயார்க்கில் துவங்கியுள்ள எழுச்சிப் போராட்டம், லண்டன், பாரிஸ், ரோம், பிரஸ்ஸல் என உலகெங்கிலும் சுமார் 1000 நகரங்களுக்குப் பரவியிருக்கிறது.
   

எகிப்திலும், அரபு நாடுகளிலும் நடந்துவரும் போராட்டத்தை பரபரப்பாகக் காட்டிய ஊடகங்கள், உலகையே ஆட்டிப்படைக்க எண்ணும் அமெரிக்காவில் நடக்கும் போராட்டத்தையோ அப்போராட்டத்தின் வீச்சையோ முழுமையாக உலகிற்கு தெரிவிக்கவில்லை.

உலகப்பொருளாதாரத்தை, உலக நாடுகளைத்  தன் காலடியின் கீழ் கொண்டுவர எத்தனிக்கும் அமெரிக்க ஆளும் வர்க்கத்தின் மிகப்பெரும் வர்த்தகங்கள் - பேரங்கள் - பங்குச் சந்தை ஊக வணிகங்கள் எல்லாம் நடக்கிற இடம்தான் வால்ஸ்ட்ரீட் எனும் தெரு, நியூயார்க் மாநகரத்தின் மையப்பகுதியில் இருக்கிறது. இந்தத் தெருவில் இருந்து இயங்கும் பகாசூரப் பன்னாட்டுப் பெரும் நிறுவனங்கள்தான் இன்றைக்கு உலக வர்த்தகத்தை உலகச்சந்தையை,  உலகம் முழுவதும் உள்ள மக்கள் எதைச் சாப்பிட வேண்டும், எப்போது சாப்பிட வேண்டும், என்ன விலை கொடுத்து வாங்கிச் சாப்பிட வேண்டும் என்பதைத் தீர்மானிக்கின்றன.
  

இந்த நிறுவனங்களின் நலனை - இந்நிறுவனப் பெரு முதலாளிகளின் நலனைக் காப்பதற்காகத்தான்  உலகையே ஒட்டச் சுரண்டும் தாராளமயப் பொருளாதாரக் கொள்கைகளை அமெரிக்க அதிகார வர்க்கம் உருவாக்கியது. உலக வர்த்தக மையம், சர்வதேச நிதி நிறுவனம், உலக வங்கி ஆகிய அமைப்புகளின் உதவியோடு உலக நாடுகளில் எல்லாம் தாராளமயம், தனியார்மயம், உலகமயம் என்ற நாசகரக் கொள்கைகளை அமலாக்குமாறு நிர்ப்பந்தித்தது.
   

நமது இந்தியா உட்பட ஏராளமான நாடுகள் 1980களில் துவங்கி, கடந்த 30 ஆண்டுகாலமாக இந்தக் கொள்கைகளைத் தீவிரமாக செயல்படுத்தி வருகின்றன.
   

இதன் நேரடி விளைவாக விவசாயம் பேரழிவைச் சந்தித்தது. சிறுதொழில்கள், அழிந்தே போயின. லட்சக்கணக்கான மக்கள் வேலைகளை இழந்தனர். கையில் இருந்த துண்டு துக்காணி நிலங்களையும் இழந்து, வெறுங்கையோடு கிராமங்களில் இருந்து நகரங்களை நோக்கி வேலைதேடி, வாழ்வைத் தேடி இடம்பெயர்ந்தனர். நகரங்களிலும் பணிப்பாதுகாப்போ, சமூகப் பாதுகாப்போ இன்றி அத்துக்கூலிகளாக, தினக்கூலிகளாக கிடைத்த வேலையைச் செய்து, வெந்ததைத் தின்று விதியை நொந்து வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். நமது நகரங்களில் மட்டுமல்ல... உலகம் முழுவதிலும் இதே நிலைமைதான்; சீனா, கியூபா போன்ற சில நாடுகளைத் தவிர, ஒட்டுமொத்த உலகமும் இப்படித் துயரத்தை அனுபவிப்பது யாருக்காக?
   

வால்ஸ்ட்ரீட் எனும் அந்தத் தெருவில் மையம் கொண்டிருக்கும் உலகப் பெரும் முதலாளிகளின் கொள்ளை லாபத்திற்காக! இப்படி லாபவெறிகொண்டு, தறிகெட்டு கண்மண் தெரியாமல் ஓடிய இந்த முதலாளிகளது மூலதனம், எதிர்பார்த்தபடியே திடீரென அதலபாதாளத்தில் விழுந்துவிட்டது. இப்படி விழுந்ததற்கு சில முக்கியக் காரணங்கள் உண்டு. அவற்றில் முக்கியமானது, வேலையில்லாப் பட்டாளம்.
   

ஒரு ஊரில் கலவரம் நடந்தால் அதை அடித்து நொறுக்கி ஒடுக்குவதற்கு ரிசர்வ் போலீஸ் படையை வைத்திருப்பதைப் போல, ஏற்கெனவே வேலையில் இருப்பவர்கள் கூடுதலாக கூலி கேட்டாலோ - போராடினாலோ, "நீ வேலைநிறுத்தம் செய்தாலும் கவலையில்லை; அந்த வேலையைச் செய்ய இதோ இத்தனைபேர் காத்திருக்கிறார்கள்" என்று மிரட்டுவதற்காகவே மிகப்பெரும் பட்டாளத்தை - வேலைவாய்ப்பு இல்லாத இளைஞர் பட்டாளத்தை நிலையாக வைத்திருக்கிறது மேற்கண்ட முதலாளிகளுக்கு ஆதரவான அரசின் கட்டமைப்பு.
   

மறுபுறத்தில், பெரும் எண்ணிக்கையிலான படித்த மற்றும் திறமையான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்குகிற தொழில் மற்றும் விவசாய உற்பத்தியைவிட, பங்குச் சந்தைகளை மையமாகக் கொண்டு செயல்படுகிற ஊகவணிகம் மூலமாக முன்னெப்போதும் இல்லாத லாபத்தை ஈட்ட முடியும் என்று பெரும் முதலாளிகள் எண்ணியதால், பொருள் உற்பத்தியை அதிகரிக்காமல் ஊகத்தின் அடிப்படையில் உலக வியாபாரம் மாறியது.
   

பொருள் உற்பத்தி அதிகரிக்காததால், சந்தையில் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதனால் விலை தானாகவே உயர்ந்தது. குறைந்த பொருளுக்கு நிறைய லாபம் கிடைத்ததால், அந்தப் பொருளுக்கும் ஊக பேரத்தின் மூலம் மேலும் விலையை உயர்த்தி, மேலும் லாபம் ஈட்டத் துவங்கினார்கள் முதலாளிகள். வேலைவாய்ப்பற்ற பெரும் பட்டாளமும், குறைந்த கூலியே கிடைக்கப்பெறுகிற இதர மக்களும் பெரும் விலைகொடுத்து பொருட்களை வாங்கமுடியவில்லை; தேவையான அளவு நுகர முடியவில்லை. இதனால், பொருட்கள் தேங்கின. பொருள் தேங்கியதால் உற்பத்தி தானாகவே குறைகிறது. உற்பத்தி குறைவதால், பல தொழிற்சாலைகளை மூட வேண்டிய நிலை. தொழிற்சாலைகளை மூடியதால் மேலும் வேலையிழப்பு. இதனால், வங்கிகளில் வாங்கியிருந்த வீட்டுக்கடன்கள் போன்றவற்றை அடைக்க முடியவில்லை. கடன் வாங்கியவர்கள் எல்லாம் திரும்ப அடைக்க முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டதால் வங்கிகளே திவாலாகின.
  

வங்கிகள் ஒன்றோடொன்று தொடர்புடையவை என்பதாலும், தாராளமயக் கொள்கையால் உலகம் முழுவதும் பல கிளைகள் பரப்பியிருப்பதாலும், ஒரு வங்கியில் ஏற்பட்ட சிக்கல், பல வங்கிகளைத் தாக்கியது. அடுத்தடுத்து வங்கிகள் திவாலாகின. வேகமாக சுழன்று கொண்டிருந்த பொருளாதாரச் சக்கரம், வேகம் குறைந்தது. நெருக்கடியில் சிக்கியது.
   

2008ம் ஆண்டில் அமெரிக்காவில் மையம் கொண்ட இந்த பொருளாதார நெருக்கடி, படிப்படியாக பிற நாடுகளுக்குப் பரவியது. கிரீஸ் போன்ற பல ஐரோப்பிய நாடுகளும் நெருக்கடியில் சிக்கின.
   

நெருக்கடியில் சிக்கிய பொருளாதாரத்தை மீட்டு, மீண்டும் ஓடச் செய்ய வேண்டுமானால் உடனடியாக ஒரே வழிதான் இருக்கிறது.    வேலையில்லாமல், கூலி இல்லாமல் பெருவாரியான மக்கள் உற்பத்திப் பொருட்களை வாங்காததால்தான், வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாததால்தானே இந்த நெருக்கடி ஏற்பட்டது. முள்ளை முள்ளால்தான் எடுக்க வேண்டும். வேலைவாய்ப்பை பெருமளவில் ஏற்படுத்த வேண்டும். இதற்கு அரசு நேரடியாக தலையிட்டு  தொழில் நிறுவனங்களை இயக்க வேண்டும். உழைப்பைச் செலுத்தி தாங்கள் பெறுகிற கூலியை பெருமளவிலான மக்கள் வீட்டில் வைத்திருக்கப்போவது இல்லை. தங்களுக்குத்தேவையான பொருட்களை வாங்குவார்கள். பொருட்களின் விலையையும் அரசு தலையிட்டு, மானியம் கொடுத்து குறைக்க வேண்டும். இப்படிச்செய்தால் அதிகமான மக்கள் தங்கள் கையில் கிடைத்த கூலியை செலவிட்டு, பொருட்கள் வாங்குவார்கள். பொருளுக்கு கிராக்கி அதிகரிக்கும். கிராக்கி அதிகரித்தால் உற்பத்தி  தானாக கூடும். உற்பத்தி கூடினால் மூடிய தொழிற்சாலைகள் திறக்கும். புதிய வேலைவாய்ப்பும் பெருகும். பொருளாதாரம் மீண்டும் வேகம் பிடிக்கும்.
   

ஆனால் அமெரிக்க அரசோ, நெருக்கடியில் தீவிரமாக சிக்கியிருக்கும் பல நாடுகளின் அரசுகளோ இதைச் செய்யவில்லை. மாறாக இந்த நெருக்கடியால் எங்களுக்கு லாபம் குறைந்துவிட்டது என்று பிதற்றிய பெரும் முதலாளிகளுக்கு அரசுப்பணத்தை  கோடிகோடியாக அள்ளிக்கொடுத்தது. மீட்பு நடவடிக்கை என்ற பெயரில் இதைச் செய்த அரசுகள் பின்னர் சிக்கன நடவடிக்கை என்ற பெயரில், இருக்கிற கொஞ்ச நஞ்ச வேலைவாய்ப்புகளையும் வெட்டியுள்ளன. கூலியை கடுமையாக குறைத்துள்ளன. ஓய்வூதியத்தில் கைவைத்துள்ளன.
   

ஒரே ஒரு  சதவீத பெரும் முதலாளிகளின் லாப நலனுக்காக 99 சதவீத மக்களின் வயிற்றில் அடித்துள்ளன.    இது பொருளாதாரத்தை சுழல வைப்பதற்குப் பதிலாக நிலைமையை மேலும் மோசமாக்கியுள்ளது. அமெரிக்கக் குடிமக்கள் 6ல் ஒருவர் மிகக் கடுமையான வறுமையின் பிடிக்குள் தள்ளப்பட்டுள்ளார்கள். கொடிய வறுமையில் உழலும் குடும்பங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. வரலாறு காணாத வகையில், வேலையின்மை 9.1 சதவீதமாக அதிகரித்துள்ளது. 140 லட்சம் அமெரிக்க இளைஞர்கள் வேலையின்றி வீதியில் தள்ளப்பட்டிருக்கிறார்கள். அமெரிக்காவில் வாழும் கருப்பின மக்களிடையே வேலையின்மை 16.7 சதவீதம் என்ற அளவிற்கு கடுமையாக அதிகரித்துள்ளது. வருமான விகிதம் வீழ்ந்ததால் வறுமையின் விகிதம் 15.1 சதவீதமாக கடுமையாக அதிகரித்துள்ளது.

மொத்தம் 460 லட்சத்திற்கும் அதிகமான மக்கள், வறுமையின் கோரப்பிடியில் சிக்கியுள்ளனர். அமெரிக்காவின் வரலாற்றில் இப்படி நிகழ்ந்ததே இல்லை. பெருவாரியான அமெரிக்க மக்கள் இப்படித் துன்புற்று உழன்று கொண்டிருக்கும் போது ஒபாமா அரசு, இவர்களை கவனிக்காமல் லாபம் போய்விட்டது எனப்புலம்பிய பெரும் முதலாளிகளுக்கு மேலும் மேலும் மீட்பு நிதியை அள்ளிக்கொடுத்தது.
   

இதன் விளைவாக 2011ஆம் நிதியாண்டின் முதல் அரையாண்டுக் காலத்தில் மட்டும்  மெரில் லிஞ்ச் நிறுவனம் 3.7 பில்லியன் டாலர் லாபம் ஈட்டியுள்ளது. கோல்டு மேன் சேக்ஸ் நிறுவனம் தனது உயரதிகாரிகளுக்கு போனசாக 5.23 பில்லியன் டாலர் பணத்தை வாரி வழங்கியுள்ளது. இந்த நிறுவனம் 11.89 பில்லியன் டாலர் கூடுதல் வருவாயை ஈட்டியுள்ளது. இதே போல ஜெ.பி.மார்கன் சேஸ், சிட்டி குரூப் உள்ளிட்ட பல நிறுவனங்கள் கொள்ளை லாபம் அடைந்துள்ளன.

இந்த நிறுவனங்கள் அனைத்தும் வால்ஸ்ட்ரீட்டில் இருந்தே இயங்குகின்றன. இந் நிறுவனங்களுக்கு பேங்க் ஆப் அமெரிக்கா நிர்வாகம், தனது வங்கியில் தங்களது கொஞ்ச நஞ்ச பணத்தை சேமித்து வைத்துள்ள ஏழை-எளிய, நடுத்தர அமெரிக்கர்களின் இருப்புப் பணத்தை தூக்கிக் கொடுத்தது என்பதை கவனிக்க வேண்டும்.
   

இப்படியாக அமெரிக்க ஆளும் வர்க்கத்தின் ஒவ்வொரு நடவடிக்கையும், ஒரு சதவீத முதலாளிகளை பாதுகாப்பது, அவர்களுக்காக 99 சதவீத மக்களை கசக்கிப்பிழிவது என்பதாகத் தொடர்வதால் அந்த  நடவடிக்கையை பொறுக்கமுடியாமல் கொதித்தெழுந்துள்ளது அமெரிக்கத் தொழிலாளர் வர்க்கம்.
   

சில நூறு பேர் கொண்ட அமைப்புகள் இப்போராட்டத்தை நடத்துவதாக அமெரிக்க ஆதரவு ஊடகங்கள் கூறுகின்றன ஆனால் உண்மையில் அமெரிக்காவின் 100 மாநகரங்களில் பற்றிப் பரவியுள்ள இப்போராட்டத்தில் லட்சக்கணக்கான அமெரிக்கர்கள் களமிறங்கியுள்ளனர்.
   

வால்ஸ்ட்ரீட்டை கைப்பற்றுவோம் என்ற முழக்கம் உலகம் முழுவதிலும் எதிரொலித்துள்ளது. கடந்த செப்டம்பர் 17ம் தேதி துவங்கி தற்போது வரை ஒரு மாத காலத்திற்குள் 82 நாடுகளில் 1,500 போராட்டங்கள் இதே முழக்கத்துடன் நடந்துள்ளது. அனைத்திலும் மிகப்பெரும் எண்ணிக்கையில் திரண்டு முதலாளித்துவத்திற்கு எதிராக முழக்கமிட்டவர்கள் இளைஞர்கள், இளைஞர்கள், இளைஞர்களே...                                       

-எஸ்.பி.ராஜேந்திரன்

Tuesday, November 8, 2011

உலகமயச் சுரண்டலுக்கு எதிராக உலகம் தழுவிய போராட்டம்

முன்னை இட்ட தீ முப்புரத்திலே
பின்னை இட்ட தீ தென்னிலங்கையில்
அன்னை இட்ட தீ அடிவயிற்றிலே
யானும் இட்ட தீ மூள்க மூள்கவே...
-பட்டினத்தார்

அக்கினிக் குஞ்சொன்று போலத் தான் பிடித்தது இந்த நெருப்பு...செப்டம்பர் 17 அன்று.  அமெரிக்காவின் சந்தைப் பொருளாதார மையமான வால் ஸ்ட்ரீட் அருகே இருக்கும் ஜுக்கொவிட் பூங்கா உள்ளே அன்று இரவு நூறு பேர் இன்றிலிருந்து 'இராத் தங்கல்' இங்கே தான் என்று பாய் தலையணைகளோடு வந்து நின்றுவிட்ட அந்த நாளில் ஆயிரம் பேர் கலந்து கொண்ட ஆவேச ஆர்ப்பாட்டங்களோடு தொடங்கியது இந்த "வால் ஸ்ட்ரீட்டை முற்றுகையிடுவோம்" போராட்டம். அக்டோபர் 15 உலகைக் குலுக்கி இருந்தது அதன் வீச்சு!  82 நாடுகள், அவற்றின் 951 நகரங்களில் லட்சக் கணக்கில் திரண்ட மக்களின் எழுச்சிகரமான அணிவகுப்பு- அவரவர் நாட்டுப் பிரச்சனைகளின் கோபத் தீயோடு சேர்ந்து கொழுந்து விட்டெரிந்து கொண்டிருந்தது செப்டம்பர் 17 ஜுக்கொவிட் பூங்கா மரத்திடைப் பொந்தினில்  வைத்திருந்த அக்கினிக் குஞ்சு..

''உனக்குப் பசி எடுக்கிறதா, எவனாவது ஒரு வங்கி அதிபரைப் பிடித்துத் தின்னு..''என்று அலறியது ஆர்ப்பாட்டத்தில் ஒரு பெண் ஏந்தியிருந்த தட்டி. டோக்கியோ நகரில் ஒரு சின்னஞ்சிறுவன் வைத்திருந்த அட்டையில், என்னைக் கரை சேர்ப்பது எப்போது... என்று எழுதியிருந்தது உலகச் செய்தியானது. (பெயில் அவுட் என்ற சொல், நஷ்டத்தில் சிக்கி இருக்கும் நிறுவனத்தை அரசு தலையிட்டுக் காப்பற்றுவதைக் குறிக்கிறது, நிறுவனங்களின் அதிபர்களைக் காப்பாற்றி விட்டு அதன் முதலீட்டாளர்களை நடுத்தெருவில் நிறுத்துகின்றன அரசுகள், எனக்கான பெயில் அவுட் எங்கே என்று தான் இந்தச் சிறுவன் கேட்டது).. உலகமயமாகி இருக்கும் சுரண்டலுக்கு எதிரான கோபாவேசம் உலகமயமாகிக் கொண்டிருக்கும் ஒரு மகத்தான வெளிப்பாடாக வெடித்துக் கொண்டிருந்தது அக்டோபர் 15.

பெருமுதலாளிகளைக் குறிக்கிறது கார்பொரேட் என்கிற சொல். கார்பொரேட்களின் பேராசைக்கும், பட்ஜெட்களில் சாதாரண குடிமக்களைக் குறிவைக்கும் தாக்குதல்களுக்கும் எதிராக என்பது போல வடிவமைக்கப்பட்டிருந்தது இந்த வால் ஸ்ட்ரீட்டை முற்றுகையிடுவோம் போராட்டத்தின் ஆதார முழக்கம். கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாகக் கனன்று கொண்டிருந்த உலகப் பொருளாதார பிரச்சனைகளின் பெருத்த அடி, 2008 இறுதிப் பகுதியில் மேற்கத்திய நாடுகளில் விழத் தொடங்கியது. லண்டனில் மிகப் பெரிய வங்கி (நார்தர்ன் ராக்) ஒன்று கவிழ்ந்தபோது அதோடு நின்றுவிடும் சரிவு என நினைத்த கதை எல்லாம் கவிழ்ந்து, அமெரிக்காவில் தொடங்கி அய்ரோப்பிய நாடுகள் வரை நிதி நிறுவனங்கள் பலவும் ஒரு நாளைக்கு இத்தனை என்று கணக்கு சொல்லி வைத்தாற் போல் சரிந்து கொண்டே இருந்தன..ஜார்ஜ் புஷ் காலத்திலிருந்து, ஒபாமா காலம் வரை அமெரிக்காவிலும், இதர நாடுகளிலும் இந்த நெருக்கடியை எதிர்கொள்ள எப்படி திட்டங்கள் தீட்டப்பட்டன என்பதுதான் இப்போது நடந்து கொண்டிருக்கும் போராட்டத்தின் அடிப்படை ஆவேசம்..

முதலாளித்துவ பொருளாதாரம் தனது சரிவிலிருந்து தன்னைத் தானே மீட்டெடுத்துக் கொள்ளும் திறன் படைத்தது என்று பெருமை பேசிக்கொண்டிருந்த அறிவுஜீவிகள் பலரையும் ஆட்டம் காணச் செய்திருக்கிறது அண்மைக்கால நிகழ்வுகள். மீட்சிக்கான பாதை நெருக்கடியை இன்னும் கூர் தீட்டிக் கொண்டிருப்பது என்பதை அவர்களால் ஒப்புக் கொள்ளவும் முடியவில்லை. தப்பித்துச் செல்லவும் வழியில்லை. பொருளாதாரம் எத்தனை வீழ்ச்சி அடைந்தாலும், பெருந்தனக்காரர்களுக்கு வரியை ஏற்றிவிடக் கூடாது, செலவினங்களைக் கட்டுப்படுத்தி - அதாவது, குடிமக்களுக்கான கல்வி, வேலை வாய்ப்பு, மருத்துவ வசதி, சுகாதாரம், ஓய்வூதியம், வேலையற்ற காலத்துக்கான நிவாரணம், காப்பீடு போன்றவை எல்லாம் ஒழித்துக் கட்டி, பற்றாக்குறையைத் தட்டி நிமிர்த்திவிட வேண்டும் என்று துடிக்கின்றன அரசுகள். நிறுவனங்களின் அதிபர்கள் தமது தொப்பைகளை மேலும் வளர்த்துத் தடவித் தடவி ஆனந்தம் அடைந்து கொண்டிருக்க, தங்கள் வாழ்வாதாரங்கள் அனைத்தும் பறி கொடுத்துவிட்டு வீதிகளில் நிற்கும் சாதாரண குடிமக்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பார்கள் என்று நினைத்துக் கொண்டிருந்த அத்தகைய  அரசுகளின் கனவுகளில் மண்ணை அள்ளிப் போட்டுப் புறப்பட்டிருக்கிறது இந்தப் போராட்ட அலை.

இதன் உருவகம் தான், நாங்கள் 99% என்ற புதிய கோஷ உருவாக்கம்.  ஒரு சதவீத பெரும் பணக்கார வர்க்கத்திற்காக பெரும்பானமையான எங்கள் நலனைக் காவு கொடுக்காதே என்ற கண்டன முழக்கம் அது. மேற்கு ஆசியாவில் புறப்பட்ட போராட்டங்களில் எப்படி முன்னேறிய கணினி தொழில் நுட்பம் பயன்பட்டதோ, அட அவ்வளவு ஏன், அதிபர் தேர்தலுக்கு ஒபாமா என்ன தொழில் நுட்பங்களைப் பயன்படுத்திப் பரவலான மக்களைச் சென்றடைந்தாரோ, அதே சாதனங்களின் வழியாகக் கொப்புளிக்கும் கோபாவேசத்தை உலகு முழுக்க பெருந் தீயாகப் பரப்பி வருகின்றனர் இந்தப் போராளிகள். இதன் நரம்பு மண்டலம் எது, தலைமைப் பொறுப்பு யார் கையில் இருக்கிறது, இது தெளிவான திட்டமிடலின் வழி பயணம் செய்யுமா, குழப்பங்களில் சிதறி விடுமா என்ற கேள்விகள் இருந்தாலும், நிராகரிக்க முடியாத கொதி நிலையை நோக்கி நகர்கிறது.

ஃபிரான்ஸ் நாட்டில் அதிபர் சர்க்கோசி அரசுக்கு எதிராகப் பல ஆண்டுகளாக வெடித்துக் கொண்டிருக்கும் கலகங்கள் இன்னும் தீவிர உருக் கொள்கின்றன. லண்டன் மாநகரம் தொடர் போர்க் களமாக மாறிக் கொண்டிருக்கிறது.  ரோம் வெடித்துக் கொண்டு எழுகிறது.  கிரீஸ் கொழுந்து விட்டு எரிகிறது. வேலை நிறுத்தங்கள், காவல் துறையோடு தள்ளு முல்லுகள், மனிதச் சங்கிலிகள், முற்றுகைகள், ஆர்ப்பாட்டப் பேரணிகள்....என உயர்த்திய பதாகைகளின் வழி ஷேக்ஸ்பியரின் மேக்பெத் நாடகத்தில் அரசனுக்கு எதிராக பிர்னாம் காடுகள் எழுந்து வரும் காட்சியைப் போல் திரள்கின்றனர் மக்கள். கண்டங்கள் எல்லாம் முதலாளித்துவத்தைக் கண்ட துண்டமாக வெட்டிப் போடு என்று குரல் கொடுக்கும் நாள் நெருங்கி விட்டதோ என்ற ஆசையைத் துளிர்க்கச் செய்து கொண்டிருக்கிறது நடப்புகள்.  விஷயம் அத்தனை சுலபம் இல்லை என்றாலும்..

அமெரிக்காவின் நர்சுகள் எழுகிறார்கள், நாங்களும் இந்தப் போராட்டத்தில் என்று. ஐரோப்பாவின் மாணவர்கள், வங்கி ஊழியர்கள், பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றுவோர், முதியோர்கள் என யார் தான் இல்லை இந்தப் போராட்டத்தில்!  ஜூன் மாதம் ஒன்பதாம் தேதி, நுகர்வுக் கலாச்சாரத்திற்கு எதிரான அட்பஸ்டர்ஸ்  என்ற பத்திரிகை தான், வால் ஸ்ட்ரீட்டை முற்றுகையிடுவோம் என்ற பெயரைப் பதிவு செய்தது என்கிறார்கள். அது பிறகு பல்கிப் பெருகிப் பெரு வெள்ளமாக அக்டோபர் 15 உலக நாடுகளில் பாய்ந்துவிட்டிருக்கிறது. அடுத்தடுத்த கட்டங்களை நோக்கி மேலும் உக்கிரமாகக் கூடும் என்றும் தெரிகிறது.

அதன் பிரதிபலிப்புகளை அமெரிக்க அதிபர் ஒபாமா பேச்சிலும், நமது பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்டு உலக நாடுகளின் அதிபர்கள் கருத்தோட்டங்களிலும் காண முடிகிறது. அதிர்ந்து தான் போயிருக்கின்றனர் மாற்றுக் கொள்கை கிடையாது என்று இத்தனைக் காலமும் சாதித்துக் கொண்டிருந்தவர்கள். ஆனாலும் கொள்கைகளில் இவர்கள் என்ன மாற்றம் கொண்டு வருவார்கள் என்பது தான் முக்கியம். அதை இலேசில் கொண்டு வர முடியாது என்பதும் தெரியும்.

'பச்சைக் குழந்தை பால் இன்றி பாதையில்  விழுவது அகிம்சையா, பசிக்கு இரத்தம் குடிக்கும் பேய்களைப் போருக்கு இழுத்தால் வன்முறையா' என்று போகிறது, பரிணாமன் எழுதிய கிளர்ச்சியைத் தூண்டும் தோழர்களே பாடல் வரிகள். அதன் அடுத்த மேன்மையான இடம், 'நிழலையே திருடும் நீசர்கள் முன்னே நேசக் கரங்கள் நீளாது, இவர் நிழலே விழாத திருநாள் வரும் வரை சமரசம் போரில் கிடையாது' என்று உச்சியைத் தொடும். அப்படியான சமரசமற்ற போர் தொடுக்கப்படும் என்று விழைகிறது முற்போக்கு உலகம்.

நடந்து கொண்டிருக்கும் இந்த எழுச்சிப் போரின் ஒரு முக்கிய முனையாக இருக்க வேண்டிய இந்தியாவில் இதன் உடனடி பிரதிபலிப்பு இல்லாதது வியப்பையும், கொஞ்சம் வருத்தத்தையும் ஏற்படுத்தினாலும் தொழிற்சங்கங்களும், இடதுசாரி கட்சிகளும் - குறிப்பாக மார்க்சிஸ்ட் கட்சியும் அக்டோபர் 15 எழுச்சியை வரவேற்றிருப்பது ஆறுதல் அளிக்கிறது. உலகெங்கும் போராட்டம் நடந்தாலும் சந்தைப் பொருளாதாரம் தவறு என்று ஆகிவிடாது என்று அண்மையில் மணிசங்கர் ஐயரின் தகப்பனார் சங்கர அய்யர் நினைவு சொற்பொழிவு நிகழ்ச்சியில் திட்டக் கமிஷன் துணைத் தலைவர் மாண்டேக் சிங் அலுவாலியா முழங்கி இருக்கிறார். நாள் ஒன்றிற்கு இருபத்தைந்து ரூபாய் ஈட்டினால் வறுமை ஒழிந்துவிடும் என்று சிந்திக்கும் அதி தீவிர அறிவியல் மூளை ஆயிற்றே, அது தான் இன்னும் அடங்காத கொழுப்பு.   ஆனாலும், ஊழல், பெருந்தொழில் நிறுவனங்களின் பகாசுரக் கொள்ளை, அதிகரிக்கும் விலைவாசி, பெருகும் பட்டினிச் சாவுகள், நொறுங்கும் வேளாண்மை, வேதனை அளிக்கும் வேலை இழப்புகள்....இவற்றின் பளுவால் துடித்துக் கொண்டிருக்கும் சாதாரண மக்களின் பாடுகள் அவர்களையும் ஒன்று திரட்டும். கலகம் வெடிக்கும். அதை வடிவமைக்கிற, வழிகாட்டுகிற, தலைமை ஏற்கிற கடமை அழைக்கிறது, முற்போக்கு இடது சாரி ஜனநாயக சக்திகளை.

வால் ஸ்ட்ரீட் முற்றுகை அமெரிக்காவில் என்றால், தலால் ஸ்ட்ரீட் முற்றுகை இந்தியாவில் என்று எழுதுகிறார் பிசினஸ் லைன் கட்டுரையாளர் ஒருவர். அது உண்மையாகட்டும்.

-எஸ் வி வேணுகோபாலன் 

Labels

Coca Cola (1) Peak Oil (1) Permaculture (1) Power of Community (1) Renewable energy (1) Solar energy (1) SOPA (1) sustainable agriculture (1) அ.குமரேசன் (6) அங்காடிதெரு (1) அணு ஆற்றல் (2) அணுமின் (1) அண்ணா (4) அண்ணா நூலகம் (1) அதிர்ச்சி (1) அத்வானி (2) அந்நிய முதலீடு (2) அபிநயா (1) அப்துல் கலாம் (1) அப்பணசாமி (2) அமெரிக்கா (20) அம்பானி (1) அம்பேத்கர் (9) அரசியல் (177) அரசியல்.நிகழ்வுகள் (6) அரசு (14) அரசு மருத்துவமனை (1) அரசு விடுதி மாணவர்கள் (1) அரவான் (1) அருந்ததியர் (1) அர்ஜெண்டினா (1) அலசல் (1) அவலம் (19) அழகு (1) அறிமுகம் (1) அனுபவம் (28) அன்னா ஹசாரே (1) அஜயன் பாலா (1) ஆ.ராசா (1) ஆணையம் (2) ஆதவன் தீட்சண்யா (3) ஆப்கானிஸ்தான் (1) ஆப்பிரிக்கா (2) ஆர்.மீனா (1) ஆர்எஸ்எஸ் (2) ஆவணப்படம் (3) ஆனந்தன் (2) இ.எம்.ஜோசப் (1) இ.பா.சிந்தன் (22) இட ஓதுக்கீடு (3) இடஒதுக்கீடு (1) இடதுசாரிகள் (4) இணையம் (2) இதழ்கள் (6) இந்தியா (69) இந்துத்துவா (8) இந்துஜா (1) இமு (2) இமு டிச11 (5) இமு நவமபர் 2011 (6) இயக்கம் (7) இயக்குனர் ஷங்கர் (1) இரா.சிந்தன் (5) இரா.செழியன் (2) இரா.நடராஜன் (3) இராம.கோபாலன் (1) இல.சண்முகசுந்தரம் (2) இலக்கியம் (38) இலங்கை (6) இலங்கைத் தமிழர் (4) இலவசக் கல்வி (1) இலவசங்கள் (1) இளவரசன் கொலை (1) இளைஞர் முழக்கம் (11) இஷ்ரத் (2) இஸ்ரேல் ஆக்கிரமிப்பு (1) இஸ்லாம் (3) ஈராக் (1) ஈரான் (2) உ.வாசுகி (1) உச்ச நீதிமன்றம் (1) உணவு நெருக்கடி (2) உதயசங்கர் (1) உத்தப்புரம் (1) உயர்கல்வி (2) உரையாடல்கள் (2) உலக சினிமா (4) உலகமயம் (5) உலகம் (46) உளவியல் (1) உள்ளாட்சி (1) உள்ளாட்சித் தேர்தல் (1) ஊடகங்கள் (14) ஊடகம் (8) ஊழல் (30) எடியூரப்பா (1) எம்.எப்.ஹூசேன் (1) எம்.சிவக்குமார் (2) எரிசக்தி (1) எல்.கே.ஜி (1) என்.ஜி.ஓ (1) என்கவுண்டர் (1) எஸ். பாலா (1) எஸ்.கண்ணன் (1) எஸ்.கருணா (3) எஸ்.பி.ராஜேந்திரன் (3) எஸ்.வி.வேணுகோபாலன் (2) ஏகாதிபத்தியம் (13) ஏமன் (1) ஒபாமா (4) ஓம்பிரகாஷ் வால்மீகி (1) ஓளிப்பதிவு (1) ஃபாக்ஸ்கான் (1) கச்சத் தீவு (1) கட்டுரை (51) கட்டுரைகள் (2) கணிணி (2) கணினி தொழில் நுட்பம் (1) கமல்ஹாசன் (1) கம்யூனிசம் (12) கருணாநிதி (11) கருத்து சுதந்திரம் (1) கருத்துரிமை (3) கலைஞர் (6) கல்வி (14) கவிதை (21) கவிதைகள் (1) கறுப்புப்பணம் (3) கனிமொழி (2) காங்கிரஸ் (10) காதல் (2) கால்பந்து (1) காவல்துறை (4) காஷ்மீர் (1) கி.பார்த்திபராஜா (1) கிங்பிஷர் (1) கியூபா (4) கிரீஸ் (1) குடும்பம் (1) குட்டி ரேவதி (1) குப்பன் சுப்பன் (1) குலாத்தி (1) குழந்தைகள் (9) குழந்தைகள் கடத்தல் (1) குஜராத் கலவரம் (1) குஜராத் படுகொலைகள் (1) கூகிள் அந்தரங்கம் (1) கூடங்குளம் (2) கே.சாமுவேல்ராஜ் (1) கே.பாலமுருகன் (1) கேள்விகள் (1) கைப்பற்றுவோம் போராட்டம் (1) கோவில் (1) ச.தமிழ்ச்செல்வன் (1) ச.மாடசாமி (1) சக்திஜோதி (1) சங்கமம் (1) சசிகலா (1) சச்சின் (1) சட்டசபை (2) சட்டம் (4) சத்யஜித் ரே (1) சந்திரகாந்தன் (1) சமச்சீர் கல்வி (4) சமவூதியம் (1) சமூக நீதி (2) சமூக வலைத்தளம் (1) சமூகப் பாதுகாப்பு (2) சமூகம் (177) சம்பு (1) சரத் பவார் (1) சர்வதேச பெண்கள் தினம் (1) சல்மான் ருஷ்டி (1) சா.கந்தசாமி (2) சா.செயக்குமார் (1) சாகித்திய அகாதமி விருது (1) சாக்லேட் (1) சாதீயம் (4) சாரா விஜி (2) சாலிம் அலி (1) சி.பி.எம் (9) சிக்கிம் (1) சிந்தனை (5) சிபி (1) சிராஜுதீன் (1) சில்லரை வர்த்தகம் (4) சிறப்பு பொருளாதார மண்டலங்கள் (1) சிறுகதை (12) சினிமா (52) சினிமா செய்திகள் (4) சினிமாச் செய்திகள் (4) சீத்தாராம் யெச்சூரி (2) சு.பொ.அகத்தியலிங்கம் (2) சு.வெங்கடேசன் (1) சுகாதாரம் (1) சுதிர் ரா (1) சுயமரியாதைத் திருமணம் (1) சுவாரசியம் (1) சுற்றுப்புறச் சூழல் (3) சூர்யா (1) செம்மலர் (4) செம்மலர் அக் 2011 (4) செய்திகள் (112) சென்னை (1) சோவியத் (1) சோஷலிசம் (1) டெல்லி (2) டேம் 999 (1) த.தமிழரசி (1) தகவல் உரிமை (1) தகவல் திருட்டு (2) தண்ணீர் (3) தமிழக மீனவர்கள் (1) தமிழகம் (66) தமிழர் (1) தமிழ்ச் சினிமா (1) தமிழ்நதி (1) தமுஎகச (4) தலித் (21) தற்கொலை (1) தனியார்மயம் (4) தனுஷ் (1) தி.க (2) திமுக (1) திரிணாமுல் (1) திருப்பூர் (2) திருமணம் (2) திரைக்குப் பின்னால் (2) திரைத்துறை (1) திரைப்பட விழா (1) திரைப்படம் (4) தினகரன் (1) தினமணி (3) தீக்கதிர் (9) தீண்டாமை (22) தீண்டாமையின் அடையாளங்கள் (1) தீபாவளி (1) தேசியச் செய்திகள் (4) தேர்தல் (4) தொண்டு நிறுவனங்கள் (1) தொலைக்காட்சி (2) தொழிலாளர் (6) ந.பெரியசாமி (1) நகர்ப்புற விவசாயம் (1) நகைச்சுவை (1) நக்கீரன் (1) நதிம் சயித் (1) நந்தலாலா (1) நந்தன் (1) நரேந்திர மோடி (6) நலத்திட்டங்கள் (2) நவம்பர் புரட்சி (1) நாடகம் (1) நாடாளுமன்றத் தேர்தல் 2014 (2) நாணய மதிப்பு (1) நாறும்பூநாதன் (1) நிகழ்வுகள் (154) நிலப்பிரபுத்துவம் (1) நிலமோசடி (1) நீதித்துறை (2) நீலவேந்தன் (2) நுகர்வுக் கலாச்சாரம் (2) நூல் அறிமுகம் (12) நூல் வெளியீடுகள் (1) நெல்சன் மண்டேலா (1) நேட்டோ (2) நையாண்டி (26) நையாண்டி் (14) ப.சிதம்பரம் (3) பசுபதி (1) படுகொலை (3) படைப்புகள் (2) பட்ஜெட் (1) பணவீக்கம் (2) பதிவர் வட்டம் (3) பதிவர்வட்டம் (1) பதிவுலகம் (1) பரிந்துரைகள் (5) பழங்குடி (1) பள்ளிக்கூடம் (1) பறவைகள் (1) பன்னாட்டுக் கம்பெனிகள் (3) பா.ஜ.க (3) பாகிஸ்தான் (2) பாடல் (5) பாதல் சர்க்கார் (1) பாதுகாப்பு (1) பாரதி (2) பாலபாரதி (1) பாலஸ்தீனம் (1) பாலியல் வன்முறை (6) பாலு மகேந்திரா (1) பால் சமத்துவம் (1) பாஜக (1) பி.சுகந்தி (1) பி.ராமமூர்த்தி (1) பிடல் காஸ்ட்ரோ (3) பிரணாப் முகர்ஜி (1) பிரபாத் பட்நாயக் (3) பிரளயன் (2) பிரிட்டன் (1) பிர்தவ்ஸ் ராஜகுமாரன் (1) பிளின் (1) பு.பெ.நவமபர் 2011 (1) புகைப்படங்கள் (1) புதிய பரிதி (2) புது விசை (12) புதுமை (1) புத்தக அறிமுகம் (2) புத்தகக் கண்காட்சிகள் (2) புத்தகம் (18) புத்தகம் பேசுது (17) புத்தகம் பேசுது நவம்பர் 2011 (8) புத்தகாலயம் (2) புத்தாண்டு (1) புபே (2) புபே டிச11 (8) புரட்சி (2) புவி (1) புவி டிச11 (5) புவி நவ 2011 (7) புனைவு (1) புஷ் (1) பெட்ரோல் (7) பெண் (11) பெண் விடுதலை (1) பெண்குழந்தை (1) பெண்ணியம் (9) பெண்ணெழுத்து (1) பெரியார் (2) பெருமுதலாளிகள் (7) பேட்டி (2) பேரா.சிவசுப்பிரமணியன் (2) பேஸ்புக் (1) பொருளாதார நெருக்கடி (2) பொருளாதாரம் (24) போக்குவரத்து (1) போராட்டம் (15) போலீஸ் தாக்குதல் (3) ப்ரிசம் (4) ப்ரிசம் - தகவல் திருட்டு (7) ப்ரியா தம்பி (1) மக்களுக்கான மருத்துவம் (1) மக்கள் நலப்பணியாளர்கள் (2) மக்கானா (1) மத அடிப்படை வாதம் (1) மதவெறி (3) மதுசூதனன் (1) மம்தா (3) மம்முட்டி (1) மரபணு (1) மலாலாய் சோயா (1) மவோயிஸ்டுகள் (1) மன்மதன் அம்பு (1) மன்மோகன்சிங் (10) மா ற்று (1) மாட்டுக்கறி (1) மாதர் சங்கம் (1) மாதவராஜ் (2) மாவோ (1) மாற்ற (1) மாற்று (223) மின்கட்டணம் (1) மின்சாரம் (1) மீள்பார்வை (2) முதலாளி (1) முதலாளித்துவம் (11) முத்தமாக மாறேன் (1) முத்துக்கண்ணன் (1) முல்லைப் பெரியாறு (7) முறைகேடுகள் (5) மெகாசீரியல் (1) மே.வங்க அரசு (1) மே.வங்கம் (1) மேதினம் (1) மேற்கு வங்கம் (1) மொக்கை (1) மொழி (2) மொழிபெயர்ப்பு (1) மோசடி (1) மோடி (3) மோனிகா (1) யுத்தம் (2) ரத யாத்திரை (1) ரமேஷ் பாபு (2) ராகுல் காந்தி (2) ராடியா (2) ராஜ பக்‌ஷே (1) ரிலையன்ஸ் (1) ருமேனியா (1) லட்சுமணப்பெருமாள் (2) லெனின் (2) லோக்பால் (5) வசந்த பாலன் (1) வண்ணக்கதிர் (1) வரலாறு (19) வலைப்பூக்கள் (1) வழக்கு விசாரணை (1) வாசிப்பு (5) வாச்சாத்தி (1) வால் ஸ்டிரிட் (3) வால்மார்ட் (1) வால்ஸ்டிரிட் போராட்டம் (2) வாழ்க்கை (4) வானியல் (2) விக்கிபீடியா (1) விக்கிலீகஸ் (1) விக்கிலீக்ஸ் (7) விஞ்ஞானம் (2) விமர்சனம் (10) விலையேற்றம் (2) விலைவாசி (11) விலைவாசி உயர்வு (2) விவாதங்கள் (1) விவாதம் (9) விளம்பரம் (1) விளையாட்டு (4) வினவு (1) விஜய் (2) விஜய் மல்லையா (1) வீட்டுவசதி வாரியம் (1) வீரமணி (2) வெண்மணி (2) வெள்ளம் (2) வெனிசுவெல்லா (1) வேலையின்மை (2) வோடாபோன் (1) ஜப்பான் நெருக்கடி (2) ஜாக்கிசான் (1) ஜாதி (1) ஜாபர் பனாகி (1) ஜூலியன் அசாங்க (1) ஜெயலலிதா (9) ஜோதிடம் (1) ஸ்டீவ் ஜாப்ஸ் (1) ஸ்பீல்பர்க் (2) ஸ்பெக்ட்ரம் (6)