இந்தியா விடுதலை அடையும்வரை, அதன் வெளிநாட்டுத் தேவைகளைப் பெற இங்கிலாந்து நாட்டின் "பவுண்ட்' மதிப்பீட்டின் பேரில் பெரும்பாலாக உடன்பாடுகள் செய்யப்பட்டன.
இந்திய விடுதலைக்குப் பிறகு, உலக மார்க்கெட்டில் அமெரிக்க டாலர் வலிவான இடத்தைப் பெற்றுவிட்டது. அமெரிக்க டாலருடன் இந்திய ரூபாயைத் தொடர்புபடுத்தவேண்டிய கட்டம் ஆரம்பமானது. 1947 ஆகஸ்டு 15 அன்று ஒரு டாலருக்கு ஒரு இந்திய ரூபாய் என்று கணிக்கப்பட்டது.
அதற்குப் பிறகு 1951 முதல் ஐந்தாண்டுத் திட்டங்களை நிறைவேற்ற வெளிநாட்டு மூலதனம் பெரிதும் தேவைப்பட்டது. மேலும் 1962 அக்டோபர் மாதத்தில் சீனப் படைகளின் ஆக்கிரமிப்பு வந்தது, அடுத்து 1965-இல் மேற்கு எல்லைப்புறத்தில் பாகிஸ்தான் படையெடுப்பு தலைதூக்கியது. இந்தியப் பாதுகாப்புக்கான ராணுவத் தளவாடங்களைப் பெருமளவில் பெறவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. வெளிநாட்டுக் கடன்களைப் பெறவேண்டிய நிலைமையும் ஏற்பட்டது.
1966-இல் தாஷ்கண்டில் லால்பகதூர் சாஸ்திரி இறந்ததும், காங்கிரஸ் தலைவர் காமராஜரின் பெருமுயற்சியால் இந்திரா காந்தி பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். உலகப் பொருளாதாரத்தைக் கட்டுப்படுத்தும் உலக வங்கியும், சர்வதேசச் செலாவணி நிதியமும் (ஐ.எம்.எப்) இந்திய ரூபாயின் மதிப்பீட்டைத் திருத்தியாக வேண்டும் என்று இந்திய அரசாங்கத்தை வற்புறுத்தின. உலகப் பொருளாதார நிலைமைகளைப் பற்றி பிரதமர் இந்திரா காந்திக்கு குறுகிய கால அளவில் மிகவும் தெரிந்திருக்கும் வாய்ப்பு இல்லை. இந்திய அரசாங்கத்தின் பொருளாதார நிபுணர்களுக்கும் வேறு வழி தெரியவில்லை.
1966 ஜூன் 6, இந்திய ரூபாய் மதிப்பை 35.5 சதவிதத்துக்குக் குறைத்துவிடுவது என்று இந்திரா காந்தியின் அரசு முடிவு செய்தது. வானொலி மூலம் அறிவிப்பதற்கு சற்று முன்னதாக காங்கிரஸ் தலைவர் காமராஜருக்கு இந்த முடிவை இந்திரா காந்தி தெரிவித்தார். ஒரு தடவையில் மூன்றில் ஒரு பங்குக்குமேல் ரூபாய் மதிப்பைக் குறைப்பதில் காமராஜருக்கு கடும் கவலையும் கோபமும் உண்டானதாம். எதையும் லட்சியம் செய்யாமல் இந்திரா காந்தி தமது முடிவை வெளியிட்டுவிட்டார்.
இது பற்றி காமராஜர் தனது நெருங்கிய நண்பரிடம், இந்திரா காந்தியைப் பிரதமராக ஆக்கியதில் தாம் பெரிய தவறைச் செய்துவிட்டதாகக் கூறினார். மேலும் அவர் சொன்னது ""அவர் மிகப் பெரிய மனிதரின் மகள்; சிறிய மனிதனான நான் மிகப்பெரிய தவறைச் செய்துவிட்டேன்''.
இந்திரா காந்தி ஆட்சிக்காலத்தில் (1966 ஜனவரி-1977 மார்ச்) ஆரம்பித்து, கட்டுப்பாடற்ற முறையில், ஏற்றுமதியைவிட இறக்குமதி அதிகமாகி, ரூபாயின் மதிப்பு சரிந்துகொண்டே போனது.
ஒரு டாலருக்கு இந்திய ரூபாய் மதிப்பீடு 1970-ல் ரூ.7.47, 1975-ரூ8.4, 1985-ரூ.12.36, 1990-ரூ.17.5 என்றானது.
1991 ஜூன் மாதத்தில் உலகளாவிய சந்தைப் பொருளாதாரக் கொள்கையை நிதியமைச்சர் மன்மோகன் சிங் அறிவித்தார். பன்னாட்டுச் செலாவணி அமைப்பின் (ஐ.எம்.எப்.) வற்புறுத்தலின் மீது, ஒரு டாலருக்கு ரூ.24.58 என இந்திய அரசாங்கத்தினால் இந்திய ரூபாய் மதிப்பீடு குறைக்கப்பட்டது.
அதன் பிறகு ரூபாய் மதிப்பீடு மார்க்கெட் நிலவரப்படி படிப்படியாகக் குறைந்துகொண்டே வந்துள்ளது.
பின்வரும் விவரங்களில் குறிப்பிட்ட ஆண்டுகளில் ஒரு டாலருக்கு எவ்வளவு ரூபாய்கள் என்ற விவரங்கள் தரப்பட்டுள்ளன. 1996 (32.43), 2001 (45.00), 2006 (ரூ 45.17), 2011 (ரூ. 46.61) 2012 (ரூ. 53-34)
ஆயினும் திடீரென்று 2012-இல் டாலருக்கு 53 ரூபாய் என இருந்த நிலைமை மாறி இந்த ஆண்டு வேகமாக 2013 ஜூன் 27 (இந்தக் கட்டுரையை எழுதும் நேரத்தில்) ரூ60.62 என ரூபாயின் மதிப்புக் குறைந்துவிட்டது.
ரூபாய் மதிப்புக் குறைகிறது என்றால் வெளிநாட்டிலிருந்து நமது நாட்டுக்குத் தேவையான பண்டங்களுக்கு அதிகமான அளவு டாலர் பணத்தில் நாம் தரவேண்டும்.
இது ஏழை, நடுத்தர வகுப்பு மக்களைத்தான் அதிகமாகப் பாதிக்கும். வெளிநாட்டிலிருந்துதான் பெரும் பகுதியான பெட்ரோல்-டீசல் உற்பத்திக்கான கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யவேண்டி இருக்கிறது.
டீசல் விலை அதிகமாகிறது என்றால் அதனால் சரக்குக் கட்டணம் உயரும். பயணிகளின் போக்குவரத்துக் கட்டணமும் உயர்த்தப்படும். காய்கறிகள், பால் முதல் பிற பண்டங்களின் விலையும் கணிசமாக உயரும்.
முன்பு பெட்ரோல் - டீசல் விலைகளை அரசாங்கம் முடிவு செய்து நாடாளுமன்றத்தில் தெரிவித்து வந்தது. அப்பொழுது மக்கள் பிரதிநிதிகள் காட்டும் எதிர்ப்பினால் அரசாங்கம் சற்றுப் பின்வாங்கும்.
தற்காலத்தில, அந்தந்த பெட்ரோலியக் கம்பெனியே விலைவாசிகளை உயர்த்திக் கொள்ளும் அதிகாரத்தை மத்திய அரசாங்கம் தந்துவிட்டது. பொதுமக்களிடமிருந்து வாங்கிய வரிப்பணத்தை வைத்து அல்லது அரசாங்கத்தினால் வாங்கப்படும் கடன்களை வைத்துதான் பொதுத்துறையில் பெட்ரோலியக் கம்பெனிகள் வந்தன. இவைகளுடன் போட்டி போட்டு, தனியார் நிறுவனமான ரிலையன்ஸ் கம்பெனி ஆதரவில் ஒரு பெட்ரோல் - டீசல் தயாரித்து விற்பனை செய்யும் வியாபார அமைப்பு வேகமாக வளர்ந்து வருகிறது.
மக்களின் பிரதிநிதிகளாக அரசாங்கமும் அரசாங்கத்தால் உண்டாக்கப்படும் நிறுவனங்களும் செயல்படாமல், கோடீஸ்வரர்களின் பிரதிநிதிகளாக ஆகிவிட்டன.
தமிழில் பொருள் பொதிந்த சொல் "நாணயம்'. அந்த சொல்லுக்குப் பொருள் "நேர்மை', "முத்திரையிட்ட காசு'. மாடுகளுக்குப் போடப்படும் "மூக்குக்கயிறு'.
அரசாங்கம் வெளியிடும் காசாக இருந்தாலும் காகிதப் பணமாக இருந்தாலும், அதில் "நேர்மை' இருக்க வேண்டும். நேர்மைக்குக் கட்டுப்படாத அரசாங்கத்தை மக்கள் பார்த்து "மூக்குக் கயிறு' போட்டு அடக்க வேண்டும்.
கட்டுரையாளர்:
இரா.செழியன், நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர்.
(நன்றி: தினமணி 27.06.2013)
விவாதத்திற்குறிய கட்டுரை - கட்டுரையாளர் சொல்லாமல் விட்ட பல கருத்துகளையும் விவாதிக்க வேண்டும்.
ReplyDeleteமுதல் பகுதி தெளிவாக இருக்கிறது. ஆனால் இரண்டாவது பகுதியில் இக்கட்டுரையாளர், இந்திரா காலத்திலிருந்து தீவிரமாக அமலாக்கப்பட்ட உலகமயம், தாராளமயக் கொள்கைகளை குறித்து இக்கட்டுரையில் குறிப்பிட தவறுகிறார்.
ReplyDeleteஅதுவே, ஏதோ இது இந்திராவின் தவறால் நடந்தது போன்ற தோற்றத்தை ஏற்படுத்துகிறது.