இதுபோன்ற செய்திகளை நாம் அடிக்கடி பார்க்கிறோம். ”5 வயது நிரம்பிய சிறுவனை பணக்கைதியாக கடத்திச் சென்று
கழுத்தை நெரித்துக் கொன்றுள்ளனர் 2 டீன் ஏஜ் சிறுவர்கள்” ஷூப்ராவல்என்ற 5வயது சிறுவனின்
பெற்றோர்கள் விஞ்ஞானிகளாக பணிபுரிபவர்கள். அந்த சிறுவனைக் கடத்தியவர்கள் - ஹோட்டல் நிர்வாகம் படிக்கும் 19வயது நிரம்பிய பர்மிந்தர் சிங், பத்தாம் வகுப்பு படிக்கும் 15வயதான மாணவர்கள், ஷீப்ராவலை அவனைப் பணயக்கைதியாக
வைத்து, அவனுடைய பெற்றோர்களிடம் ஒரு லட்சரூபாயை வாங்கி அதன்
மூலம் மோட்டார் பைக் வாங்குவது அவர்களின் திட்டம்.
சாக்லேட் வாங்கித் தருவதாகக் கூறி, கடத்திச் சென்ற போது, அவர்களை தன் தந்தையிடம் காட்டிக் கொடுப்பதாக சொல்லியிருக்கிறான்
அந்தச் சிறுவன். அதைக்கேட்டு பயந்த இருவரும், அவ்விளம்பிஞ்சினை ஈவு இரக்கமின்றி கொன்று இருக்கிறார்கள். ஆடம்பர கேளிக்கைக்காக, நுகர்வுக்காக ஒரு குழந்தையைக் கொல்வதற்கும் தயங்காத
இந்த வன்முறை மனோபாவத்தை என்னவென்று சொல்வது….?
இந்த சம்பவம் 2006ம் ஆண்டு சென்னை விருகம்பாக்கத்தில் 13 வயதே நிரம்பிய அரவிந்த் என்ற சிறுவன் அவனது தெரு நண்பர்களாலேயே கொலை செய்யப்பட்ட சம்பவத்தை நினைவு படுத்துகிறது. அது புத்தாண்டுக் கொண்டாட்டத்திற்கான பணத்தேவைக்காக நடத்தப்பட்ட கொலை.
இதே போல் புனேயில் கடந்த ஏப்ரல் மாதம் 15 வயதான ஷீபம்ஷிர்கே என்ற மாணவனை அவனது சகநண்பர்களே பணத்திற்காக கொலை செய்துள்ளனர். ஷீபமின் தந்தை அவர்கள் கேட்ட பணத்தைக் கொடுத்த பிறகும், ஷீபம் வீடு திரும்பாததால், அவனது தந்தை போலீசில் புகார் பதிவு செய்ய கொலையாளிகள் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். தொலைக்காட்சித் தொடர்களைப் பார்த்து இந்தத் திட்டத்தைப் போட்டதாகவும், சீக்கிரமாக பணம் சம்பாதித்து ஆடம்பரமாக வாழவேண்டும் என்ற நோக்கத்தில் இதை செய்ததாகவும் அந்த மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.
இப்படிப் பரபரப்பிற்காகப் பத்திரிக்கைகளில்
வெளிச்சமிடப்படும் சம்பவங்கள் பல இருந்தாலும், இவை எங்கோ ஒரு
வீட்டில் நடப்பதாகவும், நம் வீட்டில் பிரச்சனையில்லை என்றும்
பல பெற்றோர்கள் சுயதிருப்தி கொள்ளலாம். வன்முறையின் கடும் தருணங்கள்
இங்கு தான் வெடிக்கவேண்டுமென்று திட்டமிட்டுக் கொள்வதில்லை. அவை
எங்கும், எப்போதும்
நடக்கலாம். அதற்குத் தோதாக விடலைப் பருவ
மாணவ வாழ்க்கையும் தயாராகி வருகிறது.
தற்போதைய தலைமுறை ஆண், பெண்களிடம் புதிதுபுதிதாய் எல்லாவற்றையும்
நுகரவேண்டும் என்ற எண்ணம் பெருகியுள்ளது. ஒரு கார் வாங்கி வருடக் கணக்கில் பயன்படுத்திய நிலை போய் வருடத்திற்கு ஒரு முறை கார் மாற்ற வேண்டும் என்ற எண்ணம் திட்டமிட்டு பெருக்கப்படுகிறது. செல்போனைக் அடிக்கடி லேட்டஸ்ட்டாக மாற்றிக் கொள்வது ‘நாகரிகமாகியுள்ளது’.
கட்டற்ற நுகர்வு கலாச்சாரம் பரவிவரும் சமூகத்தின் நிலைமைதான் இது. பார்ப்பதை எல்லாம் வாங்க வேண்டும்,
சுகபோகமாக வாழ வேண்டும், கேளிக்கையில் மூழ்கவேண்டும்
என்றசிந்தனையே நடுத்தர, மேட்டுக்குடியினரின் மத்தியில் இடைவிடாமல்
விதைக்கப்படுகிறது. பணம், சொத்து,
வெளிநாட்டுப்பயணம், வீட்டில் நுகர்வுப்பொருட்களைக் குவிப்பது இவையே வாழ்க்கையின் இலக்குகள் என்று
பெற்றோர் செயல்படும்
போது குழந்தைகளும் அதே கண்ணோட்டத்தில் வளர்கின்றனர் குழந்தைகள்.
விளம்பரங்கள்,
விளையாட்டுக்கள், திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்வுகள் வழியாக சுகபோக வாழ்வை போதிக்கும் அந்தக் கதைகளில் பொறுப்புணர்வு, சகமனிதர்கள் மீதான அக்கறை, மற்றவர்களை மதிக்கும் குணம், உதவும் மனப்பான்மை போன்ற விழுமியங்களுக்கு இடமில்லை.
‘எப்போதும் புதியவைகளைத் தேடித்துய்ப்பது, எந்த
வழியிலாவது நுகர்ந்துவிடுவது’ என்பதுதான் முதலாளித்துவ நுகர்வுவெறியின் அடிப்படைவிதி.
மூன்று இன்ச் அகலத் தொடுதிரை வசதி கொண்ட செல்பேசிகள் அளிக்கும்,
காட்சி இன்பத்தைவிட அதிகமான இன்பத்தை புதிதாக சந்தையில் இறங்கியிருக்கும்
நான்குஇன்ச் அகலத் தொடுதிரை செல்போன்கள் வழங்கவல்லது என்றால், அதை அடைய எந்த எல்லைக்கும் செல்ல இளைஞர்கள் துணிகிறார்கள்.
இவர்களுடைய நட்பு வட்டாரத்தில் - அது ஒரு சாகசமாகவும், நாயகத் தனமாகவும் கருதப்படுகிறது. பொருள் நுகர்வின் மேல் உண்டாகும் மோகத்திற்கும்,
அந்த மோகத்தைத் தணித்துக் கொள்ள குற்றச்செயல்களில் ஈடுபடுவதற்கும் இடையேயான
எல்லைக்கோடு என்பது மிகவும் மெலிதான ஒன்று.
ஈவ்டீசிங்கில்
வரம்பு மீறாத வரை குற்றமில்லை என்று சொல்வது போல் இந்த நுகர்வு கலாச்சாரத்திற்கும் அப்படி
சில வரம்புகளை கற்பித்துக் கொள்கிறார்கள்… ஆனால் இரண்டையும் பிரிக்கும்
கோடு என்பது தற்போது மங்கி வருகிறது. ’’பாதை எதுவாயினும்,
இலக்கு என்னவாயிருக்கிறது என்பதே முக்கியம்’’ என்றாகி
விட்ட இந்நிலையில் மேற்கொண்டிருக்கும் பாதையில் தடுமாறி ஏதேச்சையாக மாட்டிக் கொண்டவர்கள்
குற்றவாளிகளாகிறார்கள். மாட்டாதவர்களின் கெட்டிக்காரத்தனம் போற்றப்படுகிறது.
இந்த நுகர்வு கலாச்சாரத்தைப் புகுத்துவதில் விளம்பரங்கள் பெரும்பங்காற்றுகின்றன. இயற்கையின் இயக்கத்தையும்,
சமூகத்தின் போராட்டத்தையும் அறிய வேண்டிய இளம்பருவம், இத்தகைய செயற்கையான, சுயநலம் மிகுந்த, ஆடம்பரமான உலகில் வாழ்வதற்காக வெம்பி வாடுகின்றது.
சந்தையில் அறிமுகமாகும் புதிய பொருள் எது?
எதற்கு எது இலவசம்? எதற்குத் தள்ளுபடி?
எந்தக் கடையில் என்ன கிடைக்கும் முதலான நுகர்வு கலாச்சார பொது அறிவில்
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விஞ்சி நிற்கிறார்கள். ஆனால் சமூகத்தின் பிரச்சனைகளோ கிடப்பில் போடப்பட்டவையாகவே உள்ளன.
விளம்பரங்கள் வழியாக மனதில் பதியும்
புதிய பொருளை வாங்க வேண்டுமென்று சிறார்கள் அடம் பிடிக்கிறார்கள், சண்டை போடுகிறார்கள். வகுப்புத் தோழர்களிடம் அற்ப விசயங்களுக்காக
எழும் பொறுமையின்மைக்கான அரிச்சுவடி இதிலிருந்து ஆரம்பிக்கிறது. அவ்வகையில் சகிப்புத்தன்மையற்ற மனநிலையையும் நுகர்வுக்கலாச்சாரம் கற்றுத்தருகிறது.
நச்சரிப்புதாங்காமல் பெற்றொரும் கேட்டதை வாங்கிக் கொடுக்கிறார்கள்.
பிடிவாதம் பிடித்தால், நினைத்ததை வாங்கலாம் என்பதை
சொந்த அனுபவத்தில் உணர்ந்து கொள்கிறார்கள் குழந்தைகள் . இந்த
பிடிவாதம் தான் பல நேரங்களில் வன்முறையின் துவக்கப்புள்ளியாக உள்ளது.
ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில், இளைஞன் ஒருவன் தனக்கு ‘பாக்கெட் மணியாக தினமும் 5 ஆயிரம் ரூபாய்’ வேண்டுமெனக் கேட்கிறான். இது அவனுக்கு உறுத்தலாக இல்லை. தனது கல்லூரி நண்பர்களுடன் வெளியே செல்லும் போது பெரிய பெரிய மால்களுக்குச்
சென்று அங்கிருந்து புகைப்படம்எடுத்து, அதனை முகநூலில் வெளியிட்டு
“லைக்” பெறவேண்டும். இதற்கெல்லாம் பெற்றோர் ஒரு வாரத்திற்குத் தரும் ஆயிரம் ரூபாய் போதவில்லை என
தனது தரப்பு நியாயத்தை அந்த இளைஞன் விவரித்த போது இந்தியாவின் வருங்காலம் குறித்த அச்சம் எழுகிறது.
வன்முறையால் அழிவது ஒருபுறமென்றால், தாழ்வு மனப்பான்மையால் தளர்ந்து போகும் இளைஞர் பட்டாளம் இன்னொரு புறம். இரண்டும் இல்லாமல் புயலில் சேதாரமாக நாணல் போலவும், தண்ணீருக்குள் இருந்தாலும் தண்ணீரை ஒட்டவிடாத தாமரை இலை போலும், இருப்பதை வைத்து இனிமையுடன் வாழ்க்கையை ஓட்டுபவர்கள் சிலர்தான்.
பிரச்சனை எங்கோ நடக்கிறது நாம் நம்
வீட்டு ஜன்னலையும், கதவையும் மூடிக் கொண்டு விட்டால் சமூகத்தின்
தாக்கத்திலிருந்து துண்டித்துக் கொள்ளலாம் என்று எண்ணாமல் சமூக உணர்வுடன் கூடிய பொறுப்புணர்வுடன்
செயல்பட்டால் மட்டுமே இந்த நுகர்வுக்கலாச்சாரக் கேடுகளை வீழ்த்த முடியும்.
- ப்ரதீபா
நாங்க (naanganaanga.blogspot.in)
குறிப்பாக நடிகர் சிம்பு நடித்த வானம் திரை படத்திற்கு பிறகு இளைஞர்கள் செயின் பறிப்பை விளையாட்டு தனமாக செய்து வருகிறார்கள். குறிப்பாக புதுச்சேரி சிறைச்சாலையில் உள்ள 80%மான குற்றவாளிகள் சிறுவர்கள்.
ReplyDeleteகுறிப்பாக நடிகர் சிம்பு நடித்த வானம் திரை படத்திற்கு பிறகு இளைஞர்கள் செயின் பறிப்பை விளையாட்டு தனமாக செய்து வருகிறார்கள். குறிப்பாக புதுச்சேரி சிறைச்சாலையில் உள்ள 80%மான குற்றவாளிகள் சிறுவர்கள்.
ReplyDelete?? வானம் படத்தில் செயின் பறிப்பது ஊக்குவிக்கப்படவில்லை. மாறாக அந்தப் படத்தில் மிகச் சரியாகவே, நுகர்வு வெறியை அடையாளம் காட்டியிருந்தார்கள். எனக்கு அப்படித்தான் படுகிறது ஆனந்த்.
ReplyDeleteThis good write up dealing with consumerism. Why it is happened. What is the policy behind it. Who are the targeted group. How the sales are increased. What is the prodution cost of the particular product were not dealt if it is discussed youth may get exposure. Of course violent thought is created by the society
ReplyDelete