காதல்,
என்றைக்கும் இளமை ததும்பும் உணர்வுதான். தமிழர் பண்பாட்டுக்கும்,
காதலுக்கும் உள்ள தொடர்யை உணர்த்தும் இலக்கியங்கள் தமிழில் ஏராளம். சமூக,
அரசியல் நிலைகளுக்கு தக்க சாதிய நச்சுப் புகுத்தப்பட்ட இலக்கியங்கள்
குறித்தும் நாம் முன் ஒரு கட்டுரையில் விவாதித்தோம். (சமகால அரசியலை முன்வைத்த மீள்பார்வை)
நாட்டுப்புற வழக்கில் குறுதொகைப்
பாடல்களை பெயற்கும் முயற்சியை ‘புதிய பரிதி’ செய்துள்ளார். தமிழின் இலக்கியங்கள் மீது ஒரு ஈர்ப்பை உண்டாக்க இந்த
பாடல்களின் மேலோட்டமான அர்த்தங்களையாவது புரியவைக்க வேண்டும் என்கிற
நோக்கத்தில் செய்த முயற்சி இது. சுருக்கமாகச் சொல்லப் போனால்
பஞ்சவர்ணக்கிளியை ப்ளாக் அன்ட் ஒயிட் படத்தில் பார்ப்பது
போன்றது, கவிதைகளை ரசித்து, குறுந்தொகை வாசிப்பில் ஈடுபட முயற்சிக்கவும்.
1) குறுந்தொகை 28, ஔவையார், பாலை திணை, தலைவி தோழியிடம் சொன்னது
மூட்டுவேன் கொல் தாக்குவேன் கொல்
ஓரேன் யானும் ஓர் பெற்றி மேலிட்டு
ஆஅ ஒல்லெனக் கூவுவேன் கொல்
அலமரல் அசை வளி அலைப்ப என்
உயவு நோய் அறியாது துஞ்சும் ஊர்க்கே.
என் பாடல்
எத்துவனா குத்துவனா -இல்ல
காச்சு மூச்சுனு கத்துவனா
என்ன செய்ய தெரியலையே - அவன்
என்ன விட்டுப் போனபின்னே
ஏம் மனக்காச்சல் புரியாம
இந்தக் காத்து அது பாட்டுக்கு அடிக்கிது
இந்த ஊரும் அது பாட்டுக்கு ஒறங்குது..
2) குறுந்தொகை 43, ஔவையார், பாலை திணை – தலைவி தோழியிடம் சொன்னது
செல்வார் அல்ல என்று யான் இகழ்ந்தனனே
ஒல் வாள் அல்லள் என்று அவர் இகழ்ந்தனரே
ஆயிடை இரு பேர் ஆண்மை செய்த பூசல்
நல்ல அராக் கதுவியாங்கு என்
அல்லல் நெஞ்சம் அலமலக்குறுமே.
விட்டுப் போவான்னு நான் நினைக்க இல்ல
விட்டிடுவேன்னு அவனும் நினைக்க இல்ல
எங்க ஆசைக ரெண்டும் முட்டிக்கிற
பாம்பு கடிச்சது போல
பதறுதே பாவி நெஞ்சு.
3) குறுந்தொகை 41, அணிலாடு முன்றிலார், பாலை திணை – தலைவி தோழியிடம் சொன்னது
காதலர் உழையர் ஆகப் பெரிது உவந்து
சாறு கொள் ஊரில் புகல்வேன் மன்ற
அத்த நண்ணிய அம் குடிச் சீறூர்
மக்கள் போகிய அணில் ஆடு முன்றில்
புலம்பில் போலப் புல்லென்று
அலப்பென் தோழி அவர் அகன்ற ஞான்றே
என் பாடல்
மாமன் பக்கமா இருக்கையில
நான் திருவிழா ஊரா ஆனேனடி
மாமன் செத்த தள்ளி போனாக்கா
நான் ஒத்தவீட்டுத் திண்ணையா ஆகுறேன்டி
ஆளில்லாம அணில் அங்க ஆடுதடி
4) குறுந்தொகை 44, வெள்ளிவீதியார், பாலை திணை - செவிலித் தாய் சொன்னது
காலே பரிதப் பினவே கண்ணே
நோக்கி நோக்கி வாள் இழந்தனவே
அகலிரு விசும்பின் மீனினும்
பலரே மன்றவிவ் வுலகத்துப் பிறரே.
என் பாடல்
ஒங்களத் தேடி
நடந்து நடந்து காலு தேஞ்சு போச்சு
நீங்கயில்லாத மொகங்களாப்
பாத்துப் பாத்துக் கண்ணும் இருண்டு போச்சு
அம்மம்மா...ஆகாச வெள்ளிய விட
அதிக சனம் உள்ளதம்மா, இந்த பூமியில
5) குறுந்தொகை 75, படுமரத்து மோசிகீரனார், மருதம் திணை – தலைவி பாணனிடம் சொன்னது - ஊடலின் பொழுது பாணர்கள் தலைவனுக்கும் தலைவிக்கும் இடையே தூது செல்வார்கள்
நீ கண்டனையோ கண்டார்க் கேட்டனையோ
ஒன்று தெளிய நசையினம் மொழிமோ
வெண்கோட்டு யானை சோணை படியும்
பொன்மலி பாடலி பெறீஇயர்
யார்வாய்க் கேட்டனை காதலர் வரவே.
என் பாடல்
நீயே பாத்தியா-இல்ல
பாத்தவுக சொல்லிக் கேட்டியா
வெள்ளானை விளையாடும்
வெள்ளியா ஆறோடும்
ஊருனக்கு கெடைக்கும். யப்பா.... சொல்லு
மச்சான் வாரகன்னு யார் சொல்லக் கேட்ட?
6) குறுந்தொகை 107, மதுரைக் கண்ணனார், மருதத் திணை – தலைவி சொன்னது
குவி இணர்த் தோன்றி ஒண் பூ அன்ன
தொகு செந் நெற்றிக் கணங் கொள் சேவல்
நள் இருள் யாமத்தில் எலி பார்க்கும்
பிள்ளை வெருகிற்கு அல்கு இரை ஆகிக்
கடு நவைப் படீஇயரோ நீயே நெடு நீர்
யாணர் ஊரன் தன்னொடு வதிந்த
ஏம இன் துயில் எடுப்பி யோயே.
என் பாடல்
மாடி வீட்டு மச்சான் கூட
மெய் மறந்து தூங்கயில
செவப்புக் கொண்டச் சேவலே
கூவி எழுப்பிவிட்டியே..
எலி திண்ணும் காட்டுப் பூன
எச்சில் ஒழுக ஒன்னத் திண்ண
நீயுந் துடிச்சு செத்தால் தான் என்ன!!
7) குறுந்தொகை 58, வெள்ளி வீதியார், குறிஞ்சி திணை – தலைவன் தோழனிடம் சொன்னது
இடிக்கும் கேளிர் நுங்குறை ஆக
நிறுக்கல் ஆற்றினோ நன்று மற்றில்ல
ஞாயிறு காயும் வெவ்வறை மருங்கில்
கையில் ஊமன் கண்ணில் காக்கும்
வெண்ணெய் உணங்கல் போலப்
பரந்தன்று இந்நோய் நோன்று கொளற்கு அரிதே.
என் பாடல்
காதலிக்க வேணாமுன்னு
சொல்லும் கூட்டுக்காரா...
வெயிலில் உருகும்
வெண்ணையப் போயி- ஊம
முடவன் தடுக்க முடியுமா?
மேல ஏறும் இந்த நோய-என்னால
ஒதறித் தள்ள முடியுமா?
8) குறுந்தொகை 130, வெள்ளி வீதியார், பாலை திணை – தலைவி தோழியிடம் சொன்னது
நிலந்தொட்டுப் புகார் வானம் ஏறார்
விலங்கு இரு முந்நீர் காலில் செல்லார்
நாட்டின் நாட்டின் ஊரின் ஊரின்
குடிமுறை குடிமுறை தேரின்
கெடுநரும் உளரோ நம் காதலோரே.
என் பாடல்
மாமன் பூமிக்குள்ளயும் புகுந்திடல
வானத்தைத் தாண்டியும் குதிச்சிடல
கடலுக்குள்ள போயும் கலந்திடல
ஒவ்வொரு நாடா
ஒவ்வொரு வீடா
ஒவ்வொரு ஊரா
தேடிப் பார்த்தா அவன் கிட்டிடுவான்
ஆசையில என்னைக் கட்டிடுவான்.
9)குறுந்தொகை 138, கொல்லன் அழிசி, மருதத் திணை – தோழி சொன்னது - தலைவன் கேட்குமாறு, தலைவி சொல்லுவதைப் போன்று, தோழி சொன்னது
கொன்னூர் துஞ்சினும் யாந் துஞ்சலமே
எம் இல் அயலது ஏழில் உம்பர்
மயிலடி இலைய மா குரல் நொச்சி
அணிமிகு மென் கொம்பு ஊழ்த்த
மணிமருள் பூவின் பாடு நனி கேட்டே.
என் பாடல்:
ஊர் முழுக்கத் தூங்கிருச்சு
ஒரு பொட்டுத் தூக்கமில்ல
எங்கூட்டுப் பக்கத்துல
எழுந்து நிக்கும் கரட்டினில
கொத்தான மரத்திலிருந்து
ஒத்தொத்த எலையா உதிருதுங்க
அதக் கேட்டு என் நெஞ்சும் அதிருதுங்க..
10) குறுந்தொகை 196, மிளைக் கந்தனார், மருதத் திணை – தோழி தலைவனிடம் சொன்னது (தலைவியும் தலைவனும் ஊடல் கொண்டப் பொழுது சொன்னது)
வேம்பின் பைங்காய் என் தோழி தரினே
தேம்பூங் கட்டி என்றனிர்! இனியே
பாரி பறம்பில் பனிச்சுனைத் தெண்ணீர்
தைஇத் திங்கள் தண்ணிய தரினும்
வெய்ய உவர்க்கும் என்றனிர்
ஐய அற்றால் அன்பின் பாலே.
என் பாடல்:
அக்காளின் கைப்பட்ட
வேப்பங்காய வெல்லக்கட்டினு
சப்புக்கொட்டின ஐய்யாரே..
சண்ட ஒன்னு போட்டுபிட்டு
பச்சத் தண்ணிக் கொடுத்தாக் கூட
பொத்துப் போச்சு வாயின்னு
இத்த பேச்சு பேசுரீறே ஐய்யாரே..
- புதிய பரிதி
whoa...nejama indha muyachi varaverkkathakkadhu...
ReplyDelete//தமிழின் இலக்கியங்கள் மீது ஒரு ஈர்ப்பை உண்டாக்க இந்த பாடல்களின் மேலோட்டமான அர்த்தங்களையாவது புரியவைக்க வேண்டும் என்கிற நோக்கத்தில் செய்த முயற்சி இது// this conversion act will definitely generate interest in the old tamil writings...trying to decode the kurundhogai paadagal now...parithi rocks...
and
//நீயே பாத்தியா-இல்ல
பாத்தவுக சொல்லிக் கேட்டியா.
வெள்ளானை விளையாடும்
வெள்ளியா ஆறோடும்
ஊருனக்கு கெடைக்கும். யப்பா.... சொல்லு
மச்சான் வாரகன்னு யார் சொல்லக் கேட்ட?//.
my fav...sweet n killing expectation!
அருமை குறுந்தொகை க்கு அர்த்தம?...இல்லை கவிதைக்கு குறுந்தொகையா? நல்ல முயற்ச்சி வாழ்த்துக்கள்
ReplyDelete