Showing posts with label செம்மலர் அக் 2011. Show all posts
Showing posts with label செம்மலர் அக் 2011. Show all posts

Sunday, November 13, 2011

ஊடக சுதந்திரமும் ஊடகத்திலிருந்து சுதந்திரமும்

நாட்டிற்கு உள்ளேயும் நாடு கடந்தும் ஊடகங்களின் நிலை குறித்த ஒரு புரிதல் நமக்குத் தேவைப்படுகிறது. இந்தியாவில் ஊடகச் சுதந்திரம், நாட்டின் சுதந்திரப்போராட்ட வெற்றியோடு இணைந்தே நிலைநாட்டப்பட்டது. விடுதலைப் போராட்டத்தில் முன்னணியில் நின்ற தலைவர்களில் பெரும்பாலோர் வழக்கறிஞர்களாகவோ, பத்திரிகையாளர்களாகவோ, இரண்டுமேயாகவோ இருந்தவர்கள்தான். காந்தி தனித்திறமை வாய்ந்த ஒரு பத்திரிகையாளர். அவர் ஒரே நேரத்தில் ‘இண்டியன் ஒப்பீனியன்,’ ‘ஹரிஜன்,’ ‘நவஜீவன்’ என பல பத்திரிகைகளுக்கு அவர் ஆசிரியராகப் பணியாற்றியவர் அவர். அவரது ‘சத்தியாக்கிரகம்’ என்ற கோட்பாடு அவருக்குத் திடுதிப்பென ஒரு நாள் உதித்துவிடவில்லை. பத்திரிகையாளராகத் தொடர்ந்து எழுதிவந்த பின்னணியில், படிப்படியாகவே அந்தக் கோட்பாடு உருவானது என்று அவரே குறிப்பிட்டிருக்கிறார். பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிரான போராட்டத்தில் ஒரு வலிமை வாய்ந்த ஆயுதமாகச் சுழன்ற அந்தக் கோட்பாடு நாட்டின் சுதந்திரத்தை ஈட்டித்தந்தது.

இவ்வாறு அரும்பாடுபட்டு வென்றெடுத்த ஊடகச் சுதந்திரம் சுதந்திர இந்தியாவில் பல சோதனைகளையும் அச்சுறுத்தல்களையும் சந்தித்து வந்திருக்கிறது. பத்திரிகைச் சுதந்திரத்தின் மீது தொடுக்கப்பட்ட முதல் பெரும் தாக்குதல் என்றால் அவசரநிலை ஆட்சியைத்தான் சொல்ல வேண்டும். மத்திய அரசு, மாநிலம் இரண்டிலுமே ஆட்சி நிர்வாகமும், சட்டமியற்றும் மன்றமும் பத்திரிகைச் சுதந்திரத்தைக் கட்டுப்படுத்தும் விதிகளைக் கொண்டுவர முயன்றதுண்டு. அப்போதெல்லாம் இந்திய மக்கள்தான் ஊடகங்களும் பத்திரிகையாளர்களும் நடத்திய போராட்டத்தில் தோளோடு தோள் நின்று ஊடகச் சுதந்திரத்தைப் பாதுகாத்தார்கள். ஆம், இந்தியாவில் ஊடகச் சுதந்திரம் கடுமையான போராட்டங்களின் பலனாகவே வென்றெடுக்கப்பட்டது.

யாரிடமிருந்து சுதந்திரம்?

இன்று நடப்பதென்ன? ஊடகச் சுதந்திரத்திற்காகப் போராடுவதா அல்லது ஊடகங்களிடமிருந்து சுதந்திரம் பெறுவதற்காகப் போராடுவதா என்ற கேள்வியை எழுப்ப வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது. ஊடகங்களின் ஒட்டுமொத்தப் பங்களிப்பு என்பது இன்று தலைகீழாக மாறியிருப்பதைப் பார்க்கிறோம். ஜனநாயகத்தின் காவலர்களாக, மாற்றத்தின் தூதுவர்களாக இருக்க வேண்டிய ஊடகங்கள் இன்று சுரண்டலின் காவலர்களாக, லாப வேட்டையின் தூதுவர்களாக மாறிப்போயிருப்பதைப் பார்க்கிறோம். நிதி மூலதனச் சூழலில் ஊடகங்கள் அப்பட்டமாக, லாபத்தை அதிகரிக்கும் வர்த்தக எந்திரங்களாக மாறிவிட்டன.

ஊடகங்களின் பணி, குறிப்பாகச் செய்தி ஊடகங்களின் பணி தலைகீழாக மாறிவிட்டதைப் பார்க்கிறோம். ஜனநாயகத்தின் காவலர்களாக, மாற்றத்தின் தூதுவர்களாக இருக்க வேண்டிய ஊடகங்கள் இன்று வெறும் விற்பனைச் சரக்கு உற்பத்திக் கூடங்களாக மாறிவிட்டதைப் பார்க்கிறோம். நிதி மூலதன காலகட்டத்தில் ஊடகங்கள், அதிகபட்ச லாபம் மட்டுமே குறியாகக் கொண்ட வர்த்தக நிறுவனங்களாக மாறிவிட்டதைப் பார்க்கிறோம். கார்ல் மார்க்ஸ் கூறியதைப் போல, உழைப்பு என்பது அந்நியப்படுத்தப்படுகிற, வளர்ச்சிப்போக்குகளில் உழைப்பாளிகளுக்குப் பங்கில்லாமல் போகிற விற்பனைச் சரக்காக ஊடகம் மாற்றப்பட்டிருக்கிறது. இந்தப் பின்னணியில்தான் ஒரு பெரிய கேள்வி எழுகிறது: ஊடகங்களிடமிருந்து சுதந்திரம் பெறுவதற்காகப் போராடுவதா வேண்டாமா?

இந்த நிலை ஏற்பட்டதன் பின்னணியில் திட்டவட்டமான சூழல்களும் நிகழ்ச்சிப் போக்குகளும் உள்ளன. தொழிற்புரட்சிக் காலகட்டத்தைக் கண்ட உலகம், தகவல்தொழில்நுட்பப் புரட்சிக் காலகட்டத்திற்குள் நுழைந்திருக்கிறது. தொழிற்புரட்சியின் ஒரு முக்கிய வடிவமாக அமெரிக்காவின் டெட்ராயிட் நகரில் அமைந்த ஃபோர்டு கார் தொழிற்சாலையில் கொண்டுவரப்பட்ட தயாரிப்பு நடைமுறையைக் கூறுவார்கள். தொழிற்சாலையின் ‘அசெம்பிளி லைன்’ எனப்படும் எந்திர வரிசைப் பிரிவுகளில், காரின் பாகங்கள் ஒவ்வொன்றாகப் பொருத்தப்பட்டு இறுதியில் முழு கார் வெளியே வரும். இதை அன்று சோவியத் யூனியனில் ஆட்சிப்பொறுப்புக்கு வந்த ஸ்டாலின், சோசலிச தொழில் வளர்ச்சிக்கேற்ப ‘திட்டமிட்ட உற்பத்தி முறை’ என்ற வடிவில் பின்பற்ற நடவடிக்கை எடுத்தார். இந்தியாவிலும் இந்த உற்பத்திமுறை கொண்டுவரப்பட்டது. முதலாளித்துவ சரக்கு உற்பத்தியைப் பொறுத்தவரையில், ‘அசெம்பிளி லைன்’ எந்திர வரிசையில் இந்த இந்த வேலைகளுக்கு இந்த இந்தத் தொழிலாளர்கள் என்று பிரிக்கப்பட்டுவிடுகிறார்கள்; தொழிலாளிகள் உயிரும் உணர்வுமற்ற கருவிகளாக  மாற்றப்படுகிறார்கள். தொழிலாளி இப்படி எந்திரத்தோடு எந்திரமாய், இறுதியில் என்ன பொருள் உருவாகிறது என்பதைக் கூட அறியாதவராய், மறையாணிகளை முடுக்கிக்கொண்டிருப்பதே  வாழ்க்கையாய் வார்க்கப்படுவதை, உலகம் போற்றும் நகைச்சுவை நடிகர் சார்லி சாப்ளின் தமது புகழ்பெற்ற ‘மாடர்ன் டைம்ஸ்’ திரைப்படத்தில் தமக்கே உரிய நையாண்டியோடு சித்தரித்திருப்பார்.

தொழிற்புரட்சிக் காலகட்டத்தில், முதலாளித்துவ அமைப்பின் மிகச்சிறந்த அடையாளமாகக் கருதப்பட்டவரான ஹென்ரி ஃபோர்டு, “எந்த ஒரு வாடிக்கையாளரும் தான் வாங்குகிற கார் கறுப்பு வண்ணத்தில் இருக்கிற வரையில் அதை தான் விரும்புகிற எந்த ஒரு வண்ணத்திற்கும் மாற்றிக்கொள்ள முடியும்,” என்று கூறியதாகச் சொல்லப்படுவதுண்டு. ஏனென்றால் அப்போது அவருடைய தொழிற்சாலையில் உருவான கார்கள் எல்லாமே கறுப்பு வண்ணத்தில் மட்டுமே இருந்தன.

தொழிற்புரட்சிக் காலகட்டத்திலிருந்து தகவல் தொழில்நுட்பப் புரட்சிக் காலகட்டத்திற்கு வந்திருக்கிறோம். ஹென்ரி ஃபோர்டு அறிமுகப்படுத்திய ஒரே வகையான கார் உற்பத்தி முறையின் இடத்தை, இன்று உலகந்தழுவிய அளவில் ரூபர்ட் முர்டோச் நிறுவியுள்ள ஊடக பேராளுமை பிடித்திருப்பதைக் காண்கிறோம். இந்தியாவானாலும் சரி, உலகின் வேறு எந்த நாடானாலும் சரி, ஊடகம் ஒரே வகையான சரக்கை உற்பத்தி செய்யும் எந்திரமாக்கப்பட்டிருக்கிறது. செய்திகள், தகவல்கள் அனைத்தும் பொறுப்புணர்வற்ற பொழுபோக்குச் சரக்குகளாக்கப்படுகின்றன. அந்தச் சரக்கு உற்பத்தியின் நோக்கம், மாற்றங்களை ஏற்படுத்துவதல்ல, லாபத்தை அதிகரிப்பது மட்டுமே. நிதி மூலதன காலகட்டத்தில் ஏற்பட்டிருக்கிற ஒரே மாற்றம், அன்றைக்கு “ஃபோர்டியம்” என்பதாக இருந்தது இன்றைக்கு “முர்டோக்சியம்” என மாறியிருப்பது மட்டும்தான்.

இது ஊடகம் குறித்த மதிப்பீட்டிலேயே பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இந்தியா போன்ற நாடுகளில் அரசு அதிகாரத்தின் மூன்று தூண்களாக ஆட்சிமன்றம், நாடாளுமன்றம், நீதிமன்றம் ஆகிய மூன்று கட்டமைப்புகளும் இருக்க, ஊடகம் நான்காவது தூணாகக் கருதப்படுகிறது. இவற்றில் முதல் மூன்று தூண்களும் நேரடியாகவோ, மறைமுகமாகவோ ஏதாவது ஒரு வகையில் மக்களுக்கு பதிலளிக்கக் கடமைப்பட்டவை. ஆட்சியாளர்கள் நாடாளுமன்றத்திற்கு பதிலளித்தாக வேண்டும். நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடுத்த தேர்தலில் மக்களைச் சந்தித்தாக வேண்டியர்கள். மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் நாடாளுமன்றம் உச்சநீதிமன்ற நீதிபதியைக் குற்றவாளியாக அறிவிக்க முடியும். அண்மையில் கூட, கொல்கத்தா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்தவரை நாடாளுமன்ற மாநிலங்களவை குற்றவாளியாக அறிவித்தது; அவர் பதவி விலகியதால் மக்களவையின் விசாரணைக்குத் தேவையில்லாமல் போனது.

நான்காவது தூணின் மவுனம்

இந்த மூன்றையும் கேள்வி கேட்கக்கூடிய நான்காவது தூணாகிய சுதந்திர ஊடகம், எந்தவகையிலும் மக்களுக்கு பதிலளிக்கக் கடமைப்பட்டிருக்கவில்லை என்பதுதான் வேடிக்கை!  சட்டப்பூர்வமாக ஊடகம் பதிலளிக்கக்கடமைப்பட்டிருக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஏனென்றால் அது சட்டப்பூர்வமானதாக இருக்குமானால், அதிகாரத்தின் மற்ற மூன்று கட்டமைப்புகள்தான் ஊடகத்தை விசாரணை செய்யும். ஆட்சியாளர்களுக்கு ஊடகம் கட்டுப்படுமானால் அங்கே ஊடகச்சுதந்திரம் பறிபோய்விடுகிறது எனக்கூறுவோம். நாடாளுமன்றம் கட்டுப்படுத்துமானால் அது ஊடகத்திற்கு எதிரான அச்சுறுத்தல் என்போம். நீதிமன்றம் கட்டுப்படுத்துமானால் அது நீதித்துறையின் தலையீடு என்று விமர்சிக்கப்படும்.

ஆனால், ஊடகம் தன் மீது நம்பிக்கை வைத்துள்ள மக்களுக்கு பதிலளிக்கக் கடமைப்பட்டதாக இருக்க வேண்டாமா? அந்தப் பொறுப்பை ஊடகங்கள் தாங்களாகவே உருவாக்கிக்கொள்ள வேண்டாமா?

அந்த ஜனநாயகக் கடமையை மிகப் பெரும்பாலான ஊடகங்கள் தட்டிக்கழிக்கின்றன என்பதே என் குற்றச்சாட்டு. மக்கள் உரிமைகளின் காவலராய் இருப்பதற்கு மாறாக, முதலாளித்துவ சமுதாய அமைப்பில் ஆளும் வர்க்கத்தின் - சமுதாயத்தில் மிகச் சிறியதொரு பகுதியினரின் - நலன்களைப் பாதுகாக்கிற வேலையைத்தான் இந்த ஊடகங்கள் செய்கின்றன. நாட்டு மக்கள் மேலும் மேலும் ஜனநாயக உரிமைகள் உறுதிப்படுத்தப்பட்டவர்களாக இருப்பதை விட, அவர்களை வெறும் வணிகச் சரக்கு நுகர்வோராக மாற்றுவதற்குத்தான் ஊடகங்கள் உதவுகின்றன. வணிக ஏடுகளுக்கு நாம் வாசகர்களல்ல, தொலைக்காட்சிகளுக்கு நாம் பார்வையாளர்கள் அல்ல, வானொலிகளுக்கு நாம் நேயர்களல்ல. மாறாக, நாம் வெறும் வாடிக்கையாளர்கள்தான், நுகர்வோர்தான். அப்படித்தான் ஊடகங்கள் நம்மை நடத்துகின்றன. இப்படிப்பட்ட ஊடகங்களை ஜனநாயகக் காவலர்களாக உயர்த்திப் பிடிக்கத்தான் வேண்டுமா?

வரையறுக்காத சட்டம்

ஊடகங்களின் சட்டப்பூர்வ உரிமைகள் என்பவை விளக்கத்தின் அடிப்படையில் அமைந்தவையேயன்றி, சட்டப்படி வரையறுக்கப்பட்டவை அல்ல. இந்திய அரசமைப்பு சாசனத்தில் எங்கேயும் ஊடகங்களின் உரிமைகள் இவை என திட்டவட்டமாக சொல்லப்படவில்லை. அமெரிக்காவில் அப்படிப்பட்ட சட்டம் இருக்கிறது. அமெரிக்க அரசமைப்பு சாசனத்தில் நாடாளுமன்றம் ஒருபோதும் ஊடகங்களின் சுதந்திரத்தைக் கட்டுப்படுத்தும் சட்டம் எதையும் நிறைவேற்றாது என்று உறுதியளிக்கப்பட்டிருக்கிறது.

இந்திய அரசமைப்பு சாசனத்தில் அவ்வாறு நேரடியாக இல்லை. அதன் அடிப்படை உரிமைகள் பிரிவில், 19 - 1 ஏ, ஜி ஆகிய உட்பிரிவுகளில் கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம் என கூறப்பட்டுள்ளது. அந்த ஒரு வரியை வைத்துக்கொண்டு பல்வேறு வழக்குகளில் நீதிமன்றங்கள் அளித்த தீர்ப்புகளின் அடிப்படையில்தான் ஊடகச் சுதந்திரம் விளக்கப்படுகிறது. இந்திய குடிமக்கள் எந்த ஒரு தொழிலிலும் ஈடுபடுவதற்கு, குறிப்பிட்ட கட்டுப்பாடுகளோடு சுதந்திரம் அளிக்கும் பிரிவுகளில் ஒன்றாகவே கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரமும் இருக்கிறது.

அரசமைப்பு சாசனத்தில் குறிப்பாக வரையறுக்கப்படாத ஒரு சுதந்திரத்தை ஊடகங்கள் அனுபவித்துக் கொண்டிருப்பது எப்படி?  நாம் வழங்கிய  - இந்திய மக்கள் வழங்கிய - சுதந்திரம் அது. ஊடகங்களுக்கு அப்படி ஒரு அறம் சார்ந்த உயர்ந்த இடத்தை வழங்கியவர்கள் நாம்தான். சுதந்திரமான ஊடகம்தான் ஜனநாயகத்தைப் பாதுகாக்கும், சுதந்திரமான ஊடகம்தான் ஜனநாயகத்தை மேம்படுத்தும், சுதந்திரமான ஊடகம்தான் ஜனநாயகத்தின் ரத்தமும் உயிர்த்துடிப்புமாக இருக்க முடியும் என்ற நம்பிக்கையில் நாம் அந்த உயர்ந்த இடத்தை ஊடகங்களுக்கு வழங்கியிருக்கிறோம்.

ஆனால் ஊடகங்கள் வெறும் லாப வேட்டை வர்த்தக நிறுவனங்களாக, விற்பனைச் சரக்கு உற்பத்திக் கூடங்களாக மாறியிருக்கிறபோது, இப்படிப்பட்ட உயர்ந்த இடத்தை வழங்கியது சரிதானா என்று நாம் கேட்டாக வேண்டியிருக்கிறது.

ஹசாரே சித்திரம்

ஊடகங்கள் எவ்வாறு வர்க்க நலன்களோடு செயல்படுகின்றன என்பதைப் பார்ப்போம். எடுத்துக்காட்டாக, அன்னா ஹசாரே நடத்திய ஊழல் எதிர்ப்பு இயக்கத்தையும், அதை இந்த ஊடகங்கள் எப்படி பெரிதுபடுத்தின என்பதையும் ஆய்வு செய்வோம். தலைநகர் தில்லியின் ராம்லீலா மைதானத்தில் அவருக்கு ஆதரவாக ஆயிரக்கணக்கானோர் கூடினார்கள் என்பது உண்மைதான். ஆனால் ஊடகங்கள், குறிப்பாக ஆங்கில் ஊடகங்கள், இன்னும் குறிப்பாக ஆங்கில தொலைக்காட்சிகள் அந்தச் செய்தியை எப்படி வெளியிட்டன? ஏதோ அந்த மைதானத்தில் நாள்தோறும் லட்சக்கணக்கான மக்கள் கூடியிருந்தது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தின.

தில்லி தெருக்களில் பல மக்கள் இயக்கங்கள் லட்சக்கணக்கானோரைத் திரட்டியிருக்கின்றன. அண்மையில் கூட தொழிற்சங்க இயக்கங்கள் நடத்திய பேரணியில் கிட்டத்தட்ட ஐந்து லட்சம்  தொழிலாளர்கள் பங்கேற்றார்கள். ஆனால் அன்னா ஹசாரே இயக்கத்திற்குக் கொடுத்த முக்கியத்துவம் போல இந்த நிகழ்வுகளை ஊடகங்கள் வெளிப்படுத்தியது உண்டா? ஏன்?

ஏனென்றால் இது அதிகாரத்தோடு சம்பந்தப்பட்ட ஒரு ஏற்பாடுதான். அன்னா ஹசாரே இயக்கத்தை ஊடகங்கள் குடிமைச் சமூகத்தின் இயக்கமாக சித்தரித்தன. குடிமைச் சமூகம் என்பது அதிகார அமைப்புக்கு அப்பாற்பட்டதல்ல, அதற்கு எதிரானதுமல்ல. அண்டோனியோ கிராம்ஷி கூறுவது போல அதிகாரக் கட்டமைப்பின் ஒரு அங்கம்தான் குடிமைச் சமூகம்.  ஒரே அமைப்பின் இரண்டு அங்கங்களில் ஏற்பட்ட பதற்றத்தைத்தான் நாம் கண்டோம். ஒரே குடும்பத்தில் நடக்கிற சண்டையைப் போன்றதுதான் அரசுக்கும் குடிமைச் சமூகத்துக்கும் இடையே நடக்கிற மோதல். இரண்டுக்கும் ஒரே வர்க்க நலன்தான். இரண்டுக்கும் ஒரே குறுகிய சுயநல நோக்கம்தான்.

ராம்லீலா மைதானத்தில் அன்னா ஹசாரேவுக்கு ஆதரவாக திரண்டிருந்தவர்கள் யார்? அவரைப் பொறுத்தவரையில் ஒரு காந்தியவாதிதான், அவரது போராட்டத்துக்கு உள்நோக்கம் கற்பிக்க நான் விரும்பவில்லை. ஆனால் அவர் குறுகிய நோக்கமுள்ள சக்திகளால் கடத்தப்பட்டதாகவே நான் பார்க்கிறேன்.  அவருக்கு ஆதரவாகக் கூடியவர்கள் எப்படிப்பட்டவர்கள்? அவருக்கு நெருக்கமாக நின்றவர்கள் சாமியார்கள். பாபா ராம்தேவ்கள், ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீக்கள். ஒரு சுவாமியாக பார்க்கப்படாத சுவாமி அக்னிவேஷ் அங்கே இருந்தார். மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து வந்த வேறு பல சாமியார்களும் மடாதிபதிகளும் அங்கே இருந்தார்கள். தங்களுக்கென்று சொந்தமாகத் தீவுகளையே வைத்திருப்பவர்கள், தங்களுடைய கணக்குவழக்குகளை ஒருபோதும் தணிக்கைக்கு உட்படுத்தாதவர்கள் இவர்கள்.

அடுத்து அங்கே தெரிந்த முகங்கள் திரைப்பட நட்சத்திரங்களுக்குச் சொந்தமானவை. கறுப்புப் பணம் தொடங்குவதே அவர்களிடத்தில் இருந்துதான். கறுப்புப் பணம் என்றாலே பொதுமக்கள் மனதில் திரைப்பட நட்சத்திரங்கள்தான் நினைவுக்கு வருவார்கள். திரைப்படத் துறையே கறுப்புப் பணத்தில்தான் இயங்குகிறது என்பது மக்களுக்குத் தெரியும்.

இப்படிப்பட்ட சாமியார்களும் நட்சத்திரங்களும்தான் ஊழலை எதிர்ப்பதாக, கறுப்புப் பணத்தை எதிர்ப்பதாக சொல்லிக்கொண்டு அங்கே கூடியிருந்தார்கள். அது உண்மையென நம்மை  நம்பவைப்பதற்கு இந்த ஊடகங்கள் முயன்றன. எந்த அளவுக்கு மிகைப்படுத்தப்பட்ட, பொய்மையான செய்திகளை அவை வெளியிட்டன என்பதைப் பார்த்தோம்.

இவை பெரிய ஊடகங்களா?

ஐந்து பெரிய ஆங்கில தொலைக்காட்சி நிறுவனங்கள் அந்த செய்திகளை வெளியிட்ட விதத்தைப் பார்த்தால், நாட்டில் மிகப் பெரும்பாலான மக்களால் பார்க்கப்படும் தொலைக்காட்சிகள் இவைதான் என்ற எண்ணம்தான் ஏற்படும். உண்மையில் இந்த ஐந்து பெரிய ஆங்கில செய்தி ஒளிபரப்பு நிறுவனங்களுக்கும் உள்ள மொத்த பார்வையாளர்கள் எவ்வளவு தெரியுமா? வெறும் 12 விழுக்காடுதான். இவற்றில் எந்தவொரு நிறுவனத்திற்குமே ஒற்றை இலக்க விழுக்காட்டிற்கு மேற்பட்ட பார்வையாளர்கள் கிடையாது. மூன்று விழுக்காடு முதல் அதிக அளவாக ஐந்து விழுக்காடு வரைதான் சி.என்.என்., ஐ.பி.என்., டைம்ஸ் நவ், என்.டீ டி.வி, என எந்த ஆங்கில தொலைக்காட்சியை எடுத்துக்கொண்டாலும் இதற்குமேல் அவர்களுக்குப் பார்வையாளர்கள் கிடையாது. ஆனால் “ தேசத்திற்கு நாங்கள்தான் இந்த செய்தியைக் கொண்டுவருகிறோம்” என்பதாக அவர்கள் திரும்பத் திரும்ப சொல்லிக்கொண்டார்கள்.

இதுதான் இந்த வர்த்தக ஊடகங்களுடைய, நிதிமூலதனத்தினுடைய அராஜகம். இப்படிப்பட்ட ஊடகங்களின் சுதந்திரத்திற்காக இனி மக்கள் தெருவில் இறங்கிப் போராடுவார்களா? தங்களுடைய லாப அறுவடையை அதிகப்படுத்திக் கொள்வதற்காக இந்த ஊடகங்கள் இவ்வாறு செயல்படுவதை ஆதரித்து மக்கள் எதற்காக போராட வேண்டும்?

பெருகும் வதந்தி

தொலைக்காட்சி நிறுவனங்களின் இந்தப் பாதையை அச்சு ஊடகங்களாகிய பத்திரிகைகளும் பின்பற்றுகின்றன. இந்திய பத்திரிகைகளுக்கு நுhறாண்டுகளுக்கு மேற்பட்ட வரலாறு உண்டு. ஆனால் தொலைக்காட்சி நிறுவனங்களின் வர்த்தக வெற்றியைக் கண்டு தங்களின் வழிமுறைகளை மாற்றிக் கொள்கின்றன. ஆகவேதான் பத்திரிகைகளில் வதந்திகளை அதிகமாகவும், செய்திகள் குறைவாகவும் வருகின்றன. எந்த நட்சத்திரம் எந்த நட்சத்திரத்தோடு போகிறார், மேலிடத்தில் நடப்பதென்ன, மது விருந்துக் கூடங்களில் என்ன நடக்கிறது, என்ற வகையிலான வதந்திகள் அதிக இடத்தைப் பிடிக்கின்றன. நாட்டு மக்களின் வாழ்க்கையை பாதிக்கிற பொருளாதாரக் கொள்கைள், மேம்பாட்டுத் திட்டம் என்ற பெயரால் மேற்கொள்ளப்படும் முயற்சிகளின் விளைவுகள் போன்றவை குறித்து பத்திரிகைகள் விவாதிப்பதில்லை. எப்போதாவது, பட்டினிச் சாவு போன்ற பரபரப்பான நிகழ்வுகள் வருகிற போது மட்டுமே இதைப் பற்றி ஓரளவு எழுதப்படும். ஒரு பெரிய இயற்கைச் சீற்றம், தீ விபத்து, ரயில் விபத்து என நிகழ்கிற போது இந்தப் பிரச்சினைகள் குறித்தும் எழுதப்படும்.

ஆனால் வறுமையின் கதையை, பட்டினியின் வரலாற்றை, சாதியக் கொடுமைகளை, வர்க்க ஒடுக்குமுறைகளை, பாலினப் பாகுபாடுகளை, குழந்தை உழைப்பு அவலங்களை, விவசாயிகளிக் வீழ்ச்சியை, நிலமற்ற உழவர்களின் ஆதரவற்ற நிலையை, அன்றாடக் கூலிக்காக நடக்கும் போராட்டங்களை இந்த தொலைக்காட்சி ஊடகங்களும் பிரதிபலிப்பதில்லை, பத்திரிகை ஊடகங்களும் வெளிப்படுத்துவதில்லை.

காலப் பெட்டகம்

இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது அறிவுக்குப் பொருத்தமற்ற ஒரு செயலில் இறங்கினார். பல்வேறு செய்திகள், தகவல்கள், இலக்கியப் பதிவுகள், வரலாற்றுக் குறிப்புகள் கொண்ட காலப்பெட்டகம் ஒன்றை மண்ணில் புதைத்தார். பல ஆண்டுகள் கழித்து, சுனாமி போன்ற இயற்கைச் சீற்றங்களால் சமுதாயம் அழியக்கூடுமானால், அதன்பின் வரக்கூடிய தலைமுறையினர் அந்தக் காலப்பெட்டகத்தை திறந்து பார்த்தால் நாடு எப்படி இருந்தது என்பதைத் தெரிந்துகொள்ள முடியும் என்பதே அந்த நடவடிக்கையின் நோக்கமாகச் சொல்லப்பட்டது. இந்திய விடுதலைக்கும், முன்னேற்றத்திற்கும் நேரு குடும்பம் மிகப்பெரிய பங்களிப்பைச் செய்தது என்று வருங்காலத் தலைமுறைக்கு சொல்கிற நோக்கம் அதற்குள் இருந்தது.

அதே போன்றதொரு காலப்பெட்டகம் இப்போது புதைக்கப்படுவதாக, இன்றைய தொலைக்காட்சிகள், பத்திரிகைகள் உள்ளிட்ட ஊடகங்களின் செய்திகளும் சித்தரிப்புகளும் அதற்குள் வைக்கப்படுவதாக வைத்துக்கொள்வோம். ஐம்பது, நுhறு ஆண்டுகளுக்குப் பிறகு வரக்கூடியவர்கள் அந்தப் பெட்டகத்தைத் திறந்து பார்த்தால் என்ன நினைப்பார்கள்? 21 ஆம் நுhற்றாண்டின் தொடக்க கட்டத்தில் இந்தியாவில் பெரிய பெரிய நகரங்கள் மட்டுமே, உயரமான கட்டடங்கள் மட்டுமே இருந்ததாகத்தானே நினைப்பார்கள்? கிராமப்புற இந்தியா என ஒன்று இருந்ததாகவே தெரியாமல் போகும். கார்கள், இருசக்கர வாகனங்கள், சாப்பிட்ட உணவு செரிப்பதற்கான மருந்துகள்... என இந்திய மக்கள் வாழ்ந்ததாகத்தான் நினைப்பார்கள். இவையெல்லாம் நடுத்தரவர்க்க மக்களின் வாழ்க்கை. 70 முதல் 75 விழுக்காடு வரையிலான மக்கள் இந்த வட்டத்திற்கு வெளியேதான் வாழ்கிறார்கள் என்பது  காலப்பெட்டகத்தை பார்க்கிற எதிர்காலத் தலைமுறையினருக்கு இது தெரியாமலே போகும். இது அவர்களுடைய குற்றமா, இன்றைய ஊடகங்களின் குற்றமா?

இப்படிப்பட்ட ஊடகங்களின் சுதந்திரத்திற்காக நாம் போராட வேண்டுமா, அல்லது இப்படிப்பட்ட ஊடகங்களிடம் இருந்து சுதந்திரம் பெறுவதற்காகப் போராட வேண்டுமா?

அரசியல் முதலாளித்துவம்

இது ஒருபுறம் இருக்க, உலக அளவிலும் இந்தியாவிற்கு உள்ளேயும இன்னொரு அபாயகரமான நிகழ்ச்சிப்போக்கு நடந்துகொண்டிருக்கிறது. அதுதான் அரசியல் முதலாளித்துவம்.

இத்தாலியில் நடந்தது என்ன? அந்த நாட்டின் பிரதமர் குரோனி...... தனது சொந்த ஊடக நிறுவனங்களின் பலத்தின் பின்னணியில்தான் ஆட்சிக்கு வந்தார். அங்கே அவர் ஒரு பெரிய ஊடகப் பேரரசையே நடத்திக்கொண்டிருக்கிறார்.

பிரான்ஸ் நாட்டின் அதிபர் சர்க்கோஸி, நேரடியாக ஊடகங்களை நடத்தவில்லை என்றாலும், ஊடக முதலாளிகளில் 85 விழுக்காட்டினர் வரையில் நெருக்கமான தொடர்பு உள்ளவர். அண்டை நாடான தாய்லாந்தில் தக்ஷின் சினாவாத்ரா தனது சொந்த ஊடக நிறுவனங்களின் பலத்தில் ஆட்சிக்கு வந்தவர்தான். இப்போது அவருடைய சகோதரி மீண்டும் ஆட்சிக்கு வந்திருக்கிறார்.

இவ்வாறு ஊடகங்களின் உடைமையாளர்களாக இருந்து அல்லது ஊடகங்களைப் பயன்படுத்தி ஆட்சிக்கு வருவது என்பது பல நாடுகளில் நடந்து வருகிறது. ஆட்சி அதிகாரத்தை ராணுவம் கைப்பற்றும் நாடுகளில், முதலில் கைப்பற்றப்படுவது எது என்றால் ஊடக நிறுவனங்கள் தான். வானொலி நிலையங்களையும் தொலைக்காட்சி நிறுவனங்களையும் கைப்பற்றிய பிறகுதான் நாடாளுமன்றத்தையோ, அதிபர் மாளிகையையோ ராணுவம் கைப்பற்றுகிறது. ஊடகத்தின் பலம் என்ன என்பது அவர்களுக்குத் தெரியும். முதலாளித்துவ சமுதாய அமைப்பில் அரசியல்வாதிகள் ஊடகங்களை உடைமையாக்கிக் கொள்கிறபோது எப்படிப்பட்ட பன்பாட்டுத் தாக்கங்களை அது ஏற்படுத்தும் என்று விளக்க வேண்டியதில்லை.

குழப்பும் தொலைக்காட்சிகள்

இந்தியாவிலும் - தமிழகத்திலும் - இதே போன்று நிகழ்வதைப் பார்க்கிறோம். தமிழகத்தின் இரண்டு பெரிய அரசியல் கட்சிகளான திமுக, அஇஅதிமுக இரண்டுமே தொலைக்காட்சி நிறுவனங்களை நடத்துகின்றன. இந்த இரு நிறுவனங்களும் எவ்வாறு செயல்படுகின்றன என்பதைப் பார்க்க வேடிக்கையாக இருக்கிறது. சில நேரங்களில் இந்த இரண்டு தொலைக்காட்சிகளும் பார்வையாளர்களோடு பேசுவதைவிட தங்களுக்கிடையேயே பேசிக்கொள்வது போலத்தான் இருக்கிறது. வெளியே இருந்து வருகிற ஒருவர் இந்த இரு தொலைக்காட்சிகளின் நிகழ்ச்சிகளை மாறி மாறிப் பார்ப்பார் என்றால் தமிழகத்தில் என்னதான் நடக்கிறது என்ற குழப்பம்தான் அவருக்கு மிஞ்சும்.

திமுக ஆட்சியில் இருக்கும்போது எல்லாமே நன்றாக நடந்து கொண்டிருப்பது போல் கலைஞர் தொலைக்காட்சியும், சன் குழுமத்தின் தொலைக்காட்சியும் சித்தரிக்கும். மழை வெள்ளம் ஏற்பட்டால் அரசு எப்படி அக்கறையோடும் விரைவாகவும் செயல்பட்டு மக்களை பாதுகாக்கிறது என்று இந்தத் தொலைக்காட்சிகள் சொல்லிக்கொண்டேயிருக்கும். ஜெயா தொலைக்காட்சி அரசாங்கத்தின் அலட்சியத்தால் எங்கும் சீரழிவுகளே நிகழ்வதாகக் கூறும். அதிமுக ஆட்சிக்கு வருகிறபோது இது அப்படியே இடம் மாறிவிடும். 

ஊடக உலகத்தைப் பொறுத்தவரையில் அரசியல் முதலாளித்துவம் என்பது ஒரு பெரிய பிரச்சனையாக உருவாகியிருக்கிறது. ஒவ்வொரு ஊடகமும் என்ன சொல்கிறது என்பதை நம்ப வேண்டியவர்களாகத்தான் நாம் இருக்கிறோமேயன்றி, எது உண்மை என்பது நமக்குத் தெரியப்போவதில்லை. ஏனெனில் வர்த்தக நோக்கமும் அரசியல் நோக்கமும்தான் அந்தச் செய்திகளைத் தீர்மானிக்கின்றன.

வர்த்தக நோக்கம் என்பது மிக வலிமையானதாக இருக்கிறது. பெரும்பாலான ஊடகங்கள் வர்த்தக ரீதியாக விளம்பர வருவாயைச் சார்ந்தே இயங்குகின்றன. ஆங்கில ஊடகங்களைப் பொறுத்தவரையில் அவற்றின் வருவாயில் 80 முதல் 85 விழுக்காடு வரை வர்த்தக விளம்பரங்களில் இருந்துதான் கிடைக்கிறது. பத்திரிகைகளுக்கு நீங்கள் தருகிற விலையில் இருந்தோ, தொலைக்காட்சிகளுக்கு செலுத்தும் சந்தாத் தொகையிலிருந்தோ கிடைப்பது 15 விழுக்காடுதான்.

யாருக்கு முக்கியத்துவம்?

ஆகவே ஊடக நிறுவனத்தைப் பொறுத்தவரையில் - அல்லது ஊடக முதலாளியைப் பொறுத்தவரையில் - யார் முக்கியமானவர்? சந்தா கொடுக்கிற வாசகரா அல்லது விளம்பரதாரரா என்பதைப் புரிந்துகொள்வது கடினமல்ல. உங்களுடைய தேவைகள், உங்களுடைய பிரச்சனைகள், உங்களுடைய கோரிக்கைள் இவற்றிற்கு முக்கியத்துவம் கொடுப்பார்களா அல்லது விளம்பரதாரர்களின் தேவைகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பார்களா?

விளம்பரங்களைத் தருகிற உள்நாட்டு, வெளிநாட்டு பெரும் வர்த்தக நிறுவனங்கள், இந்திய மக்களின் வறுமை செய்தியாவதை விரும்புவதில்லை. வறிய நிலையில் மக்கள் வாடுகிறார்கள் என்ற செய்தியை வெளியிடாதீர்கள், எல்லாம் சுமூகமாக, சிறப்பாக நிகழ்ந்து கொண்டிருக்கிறது என்ற தோற்றத்தையே ஏற்படுத்துங்கள் என்றுதான் அவர்கள் வற்புறுத்துவார்கள். எல்லாம் நன்றாக நடந்து கொண்டிருக்கிறது என்ற கருத்தாக்கத்தை உருவாக்குவதே ஊடகங்களின் பணியாகிவிட்டது. இவ்வாறாக முன்பு ஊடகங்கள் எந்த நோக்கங்களுக்காக குரல் கொடுத்தனவோ அந்த நோக்கங்களில் இருந்து திசைமாற்றப்பட்டுவிட்டது. இதற்கு ஒரு முக்கியமான காரணம் அரசியல் முதலாளித்துவம்.

அரசியல் இயக்கங்கள் ஊடகங்களை நடத்தக் கூடாது என்பதல்ல எனது வாதம். ஆனால், வர்த்தகம், அரசியல் பின்னிப் பிணைந்த நோக்கத்தோடு, ஊடகத் துறையில் ஆதிக்கம் செலுத்துகிற சக்திகளாக அந்த நிறுவனங்கள் உருவெடுக்கிற போது செய்திகள் எப்படியெல்லாம்  திரிக்கப்படுகின்றன என்பதை சுட்டிக்காட்டுவதே என் நோக்கம். வர்த்தக நோக்கம், அரசியல் முதலாளித்துவம் ஆகிய இரண்டு தீங்குகளுக்கும் இடையே நாம் மாட்டிக்கொள்கிறோம். அந்த நிகழ்ச்சிப்போக்கில் உண்மைத் தகவல்களிலிருந்து நாம் வெகுதொலைவுக்குக் கடத்தப்பட்டுவிடுகிறோம்.

தகவல் உரிமை

உண்மைத் தகவல்களைப் பெறுவது மக்களின் உரிமை. அவ்வகையில் நமது நாட்டில் நீண்டநெடும் போராட்டத்திற்கு பிறகு கொண்டுவரப்பட்டு தகவல் அறியும் உரிமைச் சட்டம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. அந்த சட்டத்தைப் பயன்படுத்தி அரசுத் துறைகளிடம் இருந்து, பொதுவாக எளிதில் கிடைக்காத பல தகவல்களைப் பெற முடிகிறது என்பது உண்மை. சிலர் இதைப் பயன்படுத்தி சில நல்ல திட்டங்களைக் கூட முடக்க முயல்கிறார்கள் என்பதும் நடக்கிறது. ஆயினும் இந்த சட்டத்தின் முக்கியத்துவத்தை நாம் குறைத்து மதிப்பிடுவதற்கில்லை.

அதே நேரத்தில், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தைப் போலவே மக்களுக்கு இன்று மிகவும் தேவைப்படுவது என்னவென்றால் ஊடகங்களிடமிருந்து உண்மைத் தகவலை பெறுவதற்கான உரிமைதான். ஊடகங்கள் உண்மைத் தகவல்களைத் தரத் தவறுகின்றன என்றால், அவற்றை ஜனநாயகத்திற்காகவும் உரிமைகளுக்காகவும் சமூக மாற்றத்திற்காகவும் செயல்படுகிற ஊடகங்கள் என்று இனியும் நாம் சொல்லிக்கொண்டிருக்க முடியாயாது.

விலகியது ஏன்?

ஊடகங்கள் தங்களது லட்சியப் பாதையிலிருந்து விலகியது ஏன்? காலையில் எந்தவொரு தொலைக்காட்சியைப் பார்த்தாலும், எந்தவொரு பெரிய பத்திரிகையைப் புரட்டினாலும் ஒரே மாதிரியான செய்திகளே ஆக்கிரமிப்பது எப்படி? அதுவும் ஒரே ஒழுங்குவரிசையில் தரப்படுவது எப்படி? இது ஒன்றும் தற்செயலானது அல்ல. அதற்காக ஊடக நிறுவனங்கள் ஒன்றுக்கொன்று கலந்தாலோசித்து ஒரே மாதிரியான செய்திகளைக் கொடுக்கின்றன என்றெல்லாம் நான் சொல்லவில்லை. விவிலியத்தில் மோசஸ் கடவுளின் பத்துக் கட்டளைகளோடு வந்தது போல, இன்றைக்கு இதுதான் தலைப்புச் செய்தி, இதுதான் அடுத்த செய்தி என்றெல்லாம் யாரும் தீர்மானித்துச் சொல்வதில்லை. ஆனால் ஊடகங்களுக்கிடேயே ஒருவகையான ஒருங்கிணைப்பு இருக்கிறது. நீ எந்தச் செய்திக்கு முக்கியத்துவம் கொடுக்கிறாயோ அதற்கு நானும் முக்கியத்துவம் கொடுக்கிறேன் என்பதுபோன்ற ஏற்பாடு இருக்கிறது. பத்திரிகையாளர் மன்றம் போன்ற இடங்களில் இயல்பாக அந்தக் கலந்துரையாடல் நடக்கும்.  அதைச் செய்யவில்லை என்றால், ஒரு செய்தியை ஒரு நிறுவனம் வெளியிடத் தவறினால் அந்தச் செய்தியை இன்னொரு நிறுவனம் வெளியிட்டுவிடும்.

தொலைக்காட்சியோ, பத்திரிகையோ அதன் ஆசிரியர் குழு கூட்டங்களில், தலைமையாசிரியர், விட்டுப்போன முக்கியமான செய்தியைக் குறிப்பிடும்போது “நாம் இந்தக் கதையை தவற விட்டுவிட்டோம்” என்று சொல்வதைக் கேட்கலாம். அவர்களுக்கு செய்திகள் வெறும் கதைகள்தான் - அதாவது ஸ்டோரிகள்தான். அப்படி அவர்கள் சொல்லிக்காட்டுகிற “தவறிப்போன” செய்தி என்பது, உலகத்தில் அல்லது உள்நாட்டில் எங்கெங்கோ நடந்திருக்கக் கூடிய முக்கியமான நிகழ்வுகளை அல்ல. எங்கும் எப்போதும் ஏதாவது நிகழ்ந்துகொண்டேதான் இருக்கிறது. அவை அனைத்தையும் செய்தியாக்கிவிட முடியாது என்பது அவர்களுக்குத் தெரியும். “நாம் தவற விட்டுவிட்டோம்” என்று அவர்கள் சொல்வது, வேறொரு ஊடகத்தில் இடம்பெற்ற செய்தியைத்தான்.

ஒரு ஊடகத்தில் வருகிற செய்தியை இன்னொரு ஊடகம் விட்டுவிடக் கூடாது என்ற நிலைபாட்டில் இருந்துதான் ஒரே மாதிரியான செய்திகள் வெளியாகின்றன. இந்த நிகழ்ச்சிப்போக்கில் பார்வையாளர்களாகிய நாம்தான் ஏமாளிகளாக ஒரே செய்தியை வெவ்வேறு அலைவரிசைகளில்  பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

தனியார் வருகையால் மாற்றம் உண்டா?

ஒரு காலகட்டம் வரையில் இங்கு அரசுக்கு சொந்தமான தூர்தர்ஷன் மட்டுமே இருந்தது. அதில் அரசாங்கத்திற்குச் சாதகமான, ஆட்சியாளர்களுக்குச் சாதகமான செய்திகள் மட்டுமே ஒளிபரப்பாகின என்ற குற்றச்சாட்டு எழுந்தது. அப்படி ஊடகத்தில் அரசின் ஏகபோக ஆதிக்கம் என்பதை ஏற்க முடியாதுதான். ஆனால், இப்போது சுமார் 300 தனியார் தொலைக்காட்சி நிறுவனங்கள் வந்துவிட்டன. அவையெல்லாம் ஒன்றுக்கொன்று மாறுபட்ட செய்திகளைத்தான் தருகின்றனவா? ஒன்றுக்கொன்று மாறுபட்ட நிகழ்ச்சிகளைத்தான் வெளியிடுகின்றனவா? அனைத்து தனியார் ஊடகங்களும் சேர்ந்து, ஒரு ஒப்பந்தக்கூட்டு போல அமைத்துக்கொண்டு செயல்படுவதுபோல இருக்கிறது. அதனால்தான் ஒரே மாதிரியான செய்திகள், ஒரே ஒழுங்குமுறையில் வருகின்றன. நாம் அந்தச் செய்திகளையெல்லாம் ஏற்றுக்கொள்வதாக கூறப்படுகிறது. அவையெல்லாம் உண்மையான செய்திகள்தான் என்று நம்பவேண்டிய நிலைக்கு நாம் தள்ளப்படுகிறோம் என்பதுதான் உண்மை.

ஊடகங்களின் இந்தப் போக்கு இன்றைய நிதிமூலதனச் சூழலில் மேலும் மேலும் முற்றுகிறது. ஏனென்றால் ஊடகங்களும் வர்த்தகமயமாக்கப்பட்டு, நல்ல லாபம் ஈட்டியாக வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதுதான் நிலைமை என்பதை நாம் புரிந்துகொள்வதும் முக்கியம்; அதே வேளையில் இந்த நிலைமையை மாற்றுவதற்கு என்ன செய்யப்போகிறோம் என்பதும் முக்கியம். நிலைமையை ஆராய்கிற கட்டம் முடிந்துவிட்டது, அதை மாற்றுவதற்கான கட்டம் வந்துவிட்டது என்றார் கார்ல் மார்க்ஸ்.

மார்க்சியம் ஊடகச்சுதந்திரத்தை மறுக்கிறதா?

பொதுவாக மார்க்சியம் என்றாலே அது ஊடகச் சுதந்திரத்திற்கு எதிரானது என்ற ஒரு தவறான சித்தரிப்பு பரப்பப்பட்டிருக்கிறது. உண்மை என்னவென்றால், ஊடகச் சுதந்திரத்திற்காக வாதாடியவர், போராடியவர் மார்க்ஸ். முதலில் அவரே ஒரு ஊடகவியலாளர்தான் - பத்திரிகையாளர்தான். தனது வருவாய்க்காக அவர் செய்த ஒரே தொழில் பத்திரிகையாளராகப் பணியாற்றியதுதான். அவர் ‘ரைனிஷ்சஸ் ஸெய்டுங்’ என்ற ஜெர்மன் மொழிப் பத்திரிகையின் ஆசிரியராகப் பணியாற்றினார். அது பிரஷ்ய அரசின் சர்வாதிகாரம் கோலோச்சிய காலம். கடுமையான தணிக்கை விதிகள் செயல்படுத்தப்பட்ட காலம். அதை எதிர்த்துக் கடுமையாகப் போராடினார் மார்க்ஸ். அதனாலேயே நாட்டை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் அவருக்கு ஏற்பட்டது. பிரான்ஸ் நாட்டிற்குச் சென்ற அவர் அங்கேயும் ஒரு பத்திரிகையில் சிறிதுகாலம் பணியாற்றினார். லண்டனில் 1848ல் ‘கம்யூனிஸ்ட் அறிக்கை’ ஆவணத்தை வெளியிட்ட பிறகு, திரும்பி வந்து ‘நியூ ரைனிஷ்சஸ் ஸெய்டுங்’ என்ற பத்திரிகையை அவரே தொடங்கி அதிலே எழுதிவந்தார். குடும்பத்துடன் இங்கிலாந்தில் குடியேறிய அவருக்கு, அவரது உற்ற நண்பரும் மார்க்சிய மூலவர்களில் ஒருவருமான ஃபிரடெரிக் எங்கெல்ஸ் உதவினார் என்ற அளவில்தான் நாம் தெரிந்துவைத்திருக்கிறோம். ஆனால் மார்க்ஸ் அப்போதும், அமெரிக்காவிலிருந்து வெளியான ‘நியூயார்க் டெய்லி ட்ரிபியூன்’ என்ற பத்திரிகைக்கு ஐரோப்பிய தலைமைச் செய்தியாளராகப் பணியாற்றினார். அப்போது ஸ்பெயின் உள்நாட்டுப்போர் பற்றி, லண்டன் தொழிலாளர் பற்றி, இந்தியாவைப் பற்றி, சீனாவைப் பற்றி... என ஏராளமான கட்டுரைகளையும் அரசியல் விமர்சனங்களையும் எழுதினார். அப்போது அவர் எழுதிய கட்டுரைகள் அனைத்தும் ‘ரெவல்யூசன் அன் கவுன்ட்டர் ரெவல்யூசன்’ (புரட்சியும் எதிர்ப்புரட்சியும்) என்ற புத்தகமாகத் தொகுக்கப்பட்டுள்ளன.

கார்ல் மார்க்ஸ் ஊடகக்காரராகப் பணியாற்றினார் என்ற தகவலை விடவும், ஊடகவியல் குறித்து அவர் என்ன சொன்னார் என்பது முக்கியம் என்று நினைக்கிறேன். பத்திரிகைத் தணிக்கை பற்றிய ஒரு விவாதத்தின்போது அவர், “தணிக்கை ஒருபோதும் ஒரு நன்னெறியாகாது, அது சட்டப்பூர்வமானதாக இருந்தாலும் கூட. அடிமைத்தனம் சட்டப்பூர்வமானதாக இருந்தாலும் அது எப்படி ஒரு நன்னெறியாகாதோ அதைப் போலத்தான் தணிக்கையும்,” (அப்போது பல நாடுகளில் அடிமைமுறை சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டிருந்தது) என்று சுதந்திர எழுத்துக்காகக் குரல் கொடுத்தார் மார்க்ஸ்.

உழைப்புச் சுரண்டல் பற்றியும், அதில் தொழிலாளி ஆன்மா இல்லாத சடப்பொருளாக அந்நியமாக்கப்படுவது பற்றியும், நிறைய எழுதிய அவர், “இதழியலாராகப் பணிபுரிகிறபோது இவ்வாறு அந்நியமாக்கப்படுவது நிகழ்வதில்லை. ஏனென்றால் இதழியல் ஒரு விற்பனைச் சரக்கு அல்ல; அது மாற்றத்துக்கான ஒரு பங்களிப்பைச் செய்கிறது,” என்று கூறினார். ஊடகங்களின் சுதந்திரமான செயல்பாட்டை வலியுறுத்திய அவர், சுதந்திரமான இதழியலில் கிடைக்கிற சரக்கு மோசமானதாக இருந்தாலும் அது நல்லதுதான், ஆனால் தணிக்கை செய்து கிடைப்பது நல்ல சரக்கானாலும் அது மோசமானது என்றார். அதே வேளையில், மக்களுக்கான இதழியல் என்பதையே மார்க்ஸ் உயர்த்திப் பிடித்தார்.

ஊடகச் சுதந்திரத்தை அவர் இந்த அளவுக்கு வலியுறுத்தியபோதிலும் மார்க்சியம் அந்தச் சுதந்திரத்திற்கு எதிரானது என்ற தவறான கருத்து பரவியது எப்படி? சோவியத் புரட்சி வெற்றி பெற்று, போல்ஷ்விக்குகள் ஆட்சி ஏற்பட்ட பிறகு, 1920ம் ஆண்டுகளில், மக்களின் அரசு அமைக்கப்பட்டுவிட்டதால் இனி அரசுக்கு எதிரான செய்திகள் வெளியாக வேண்டிய தேவை இல்லை என்ற கருத்து உருவானது. அதனால் ஊடகச்சுதந்திரம் என்ற கண்ணோட்டம் அங்கே ஓரங்கட்டப்பட்டது. வரலாற்றின் ஒரு சந்திப்பு முனையில் ஏற்பட்ட ஒரு சூழல் அது. அதைப் பயன்படுத்திக்கொண்டு முதலாளித்துவ ஊடகங்கள் மார்க்சியத்தைப் பற்றிய தவறான சித்திரத்தைப் பரப்பிவிட்டன. சோவியத் யூனியன் அனுபவத்திலிருந்து உலகம் வெகுதொலைவு வந்துவிட்ட இன்றைய சூழலில் ஊடகம் குறித்த அப்படிப்பட்ட கண்ணோட்டம் தேவையில்லை என்று மார்க்சிய ஆசான்களான ரோஸா லக்ஸம்பர்க், அன்டோனியோ கிராம்ஷி உள்ளிட்டவர்கள் தெளிவுபடுத்தியிருக்கிறார்கள்.

இந்திய ஊடகங்கள்

இந்தியாவில் ஊடக அரசியல் குறித்து விவாதிக்கிறபோது நாம் இங்குள்ள முதலாளித்துவ ஊடகங்களைத்தான் எடுத்துக்கொள்கிறோம். இவர்களுடைய வர்க்க நலனும் வர்த்தக நலனும் சார்ந்த வெளியீடுகளையும் சித்தரிப்புகளையும் திசைதிருப்பல்களையும் எதிர்கொள்ள, மார்க்ஸ் விரும்பியதைப் போல் மக்கள் ஊடகத்தை வளர்ப்பதே வழி. முதலாளித்துவ சக்திகளின் பிடியிலிருந்து ஊடகங்களை மீட்க வேண்டிய தேவை இருக்கிறது. ஊடகங்கள் மீண்டும் மக்களை பிரதிபலிப்பவையாக, மக்களின் குரலை எதிரொலிப்பவையாக மாற்ற வேண்டிய தேவை இருக்கிறது. பாட்டாளிவர்க்கத்தின் தலைமையில் சுதந்திரமான ஊடகம் என்ற மார்க்சியக் கருத்தாக்கத்தை வலுவாக முன்வைக்கிறார் கிராம்ஷி.

முதலாளித்துவத்தின் பண்பாட்டு ஆளுமை இன்று மக்களின் கலை, இலக்கியம் அனைத்திலும் தாக்கம் செலுத்துகிறது. அது பற்றிப் பேசுவதாலும், கவலைப்படுவதாலும், விமர்சிப்பதாலும், விவாதிப்பதாலும் மட்டும் முதலாளித்துவத்தின் பண்பாட்டு ஆளுமையை எதிர்கொண்டுவிட முடியாது. ஒரு எதிர் ஆளுமையை - பாட்டாளி வர்க்கத்தின் பண்பாட்டு ஆளுமையை நிலைநாட்டுவதன் மூலமாக மட்டுமே முதலாளித்துவ ஆளுமையை எதிர்த்திட முடியும். இந்தியாவின் பெரும் ஊடகங்களும் மக்களிடமிருந்து விலகி, மக்களின் உண்மை வாழ்க்கையிலிருந்து தொடர்பு அறுந்து போயிருக்கிற  நிலையில், ஊடகங்களின் வரலாற்று லட்சியங்களை மீண்டும் நிலைநாட்டியாக வேண்டியிருக்கிறது. முதலாளித்துவக் கட்டமைப்பிலேயே கூட அந்த லட்சியங்களை மறுபடியும் உயர்த்தியாக வேண்டியிருக்கிறது. ரோஸா லக்ஸம்பர்க் போன்றோர் முன்வைப்பது போல், ஊடகங்களின் உரிமைகளுக்காகப் போராடுவதும் மார்க்சிய மரபில் முக்கியத்துவம் வாய்ந்ததாகிறது.

ஆகவே, புதிய கண்ணோட்டத்தில் ஊடகச் சுதந்திரம் பற்றிய விவாதங்களை முற்போக்கு சக்திகள் நடத்தியாக வேண்டும். அந்த விவாதங்கள் நாடுதழுவிய அளவில் நடந்தாக வேண்டும். ஒரு நல்வாய்ப்பாக நாம் இன்று ஒரு கணினி சார் தொழில்நுட்ப காலகட்டத்தில் இருக்கிறோம். முதலாளித்துவ ஊடகக் கோட்டைவாசிகள் நம்மை அனுமதித்துவிட மாட்டார்கள். முதலாளித்துவ ஊடகங்களை நாம் நெருங்கிவிட முடியாது. மக்கள் கிளர்ச்சி, உள்நாட்டுப் போர் போன்ற சூழல்கள் ஏற்படுகிற இடங்களில் வேண்டுமானால் முதலாளித்துவ ஊடகங்களைக் கைப்பற்றுவதும் நடக்கும்.

டிஜிட்டல் புரட்சி

ஆனால், தொழில்நுட்ப வளர்ச்சியை நாம் முற்றிலுமாகப் பயன்படுத்திக்கொள்ள முடியும். கைப்பேசி குறுந்தகவல்களில் பரவுகிற செய்திகள் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்பதையும், “டிஜிட்டல் புரட்சி” நுட்பங்களைப் பயன்படுத்தித் தகவல்களைப் பரப்புவதில் முன்போல வசதி படைத்தவர்கள், வசதியற்றவர்கள் என்ற பாகுபாடு இல்லை என்பதையும் அண்மைக்கால அனுபவங்கள் காட்டுகின்றன. கணினியைக் கையாள்வது கூட அதற்கான வாய்ப்புகளைப் பொறுத்ததாக இருக்கிறது, ஆனால் கைப்பேசியை இன்று பெரும்பாலானவர்கள் கையாள முடிகிறது. ஊடகவியலின் பொருளே கூட பெருமளவுக்கு மாறியிருக்கிறது. ஊடகமொழி கூட வெகுவாக மாறியிருக்கிறது. தீக்கதிர் உள்ளிட்ட முற்போக்கான ஊடகங்கள் அந்தத் தொழில்நுட்ப வாய்ப்புகளைக் கைக்கொண்டு, வெகு வேகமாக முன்னேறிச் செல்ல முடியும். இந்தத் தொழில்நுட்பம் மலிவானது, ஜனநாயகப்பூர்வமானது, எல்லோருக்குக் கட்டுப்படியாகக்கூடியது, அனைவரும் பங்கேற்கக்கூடியது. இணைய வழி சமூகத் தொடர்புத் தளங்களில் பல தரப்பினரும் ஈடுபட முடிகிறது.

இந்த டிஜிட்டல் நுட்பங்களை உள்வாங்கிக்கொண்டு வசப்படுத்துவதன் மூலம், சுதந்திர ஊடகத்தின் மாண்புகளை மீட்டெடுக்க முடியும். எங்கெல்ஸ் கூறுவது போல், முதலாளித்துவ ஊடகங்களின் பிடியிலிருந்து விடுபட்ட, மக்களின் சுதந்திர ஊடகத்தை உயர்ந்தெழச் செய்யமுடியும். முதலாளித்துவ ஊடகங்கள் நாட்டு மக்களைப் பற்றிக் கவலைப்படும் என்ற மாயைகள் தேவையில்லை. அவர்களுக்கு அவர்களது வர்த்தகமும் லாபமும்தான் இலக்கு. மேல்தட்டு, நடுத்தர வர்க்கத்தினரின் கவலைகளையும் குரலையும்தான் அவர்கள் எதிரொலிப்பார்கள் - அன்னா ஹசாரே செய்திகளில் நாம் இதைத்தான் பார்த்தோம். மக்களின் உண்மையான வலியை, பசியை, வேதனையை, துயரத்தை, கண்ணீரை மக்களின் ஊடகம் மட்டுமே வெளிப்படுத்தும். மக்களின் ஊடகம் விளம்பர வருவாயை நம்பியிராமல், வாசகர்களின் ஆதரவைச் சார்ந்தே தழைத்திருக்க முடியும்.

உலகம் தொழில்புரட்சிக் காலத்திலிருந்து தகவல் தொழில்நுட்பப்புரட்சிக் காலத்திற்கு மாறியிருக்கிறபோது, முற்போக்கு சக்திகளுக்கும் மாற்று வழிகள் தேவைப்படுகின்றன. மிகப்பெரும் பண்பாட்டு ஆளுமையை நிலைநாட்டுவதற்கு தொழில்நுட்பப் புரட்சியைக் கைவசப்படுத்தியாக வேண்டும் என்று கருதுகிறேன். மார்க்கியப் பார்வையில் இன்று பண்பாட்டு ஆளுமை என்பது பொருளாதார ஆளுமையைப் போலவே முக்கியத்துவம் பெற்றிருக்கிறது.

ஊடகம் உண்மையைச் சொல்லவில்லை என்றால், மக்களின் உண்மை வாழ்க்கையைச் சொல்லவில்லை என்றால் அது வெறும் பொழுதுபோக்காக, நுகர்பொருளாகவே முடிந்துவிடும். ஊடகத்தின் உண்மையான மாண்பையும் மரபையும் மீட்கிற கனவு மக்கள் ஊடக இயக்கத்தினால் மட்டுமே மெய்ப்படும்.

(விருதுநகரில் செப்.16 முதல் 18 வரை நடைபெற்ற தமுஎகச 12வது மாநில மாநாட்டுக் கருத்தரங்கில் ஆசியா ஊடகவியல் கல்லூரி இயக்குநர் சசிகுமார் ஊடக அரசியலைப் புரிந்துகொள்வது குறித்து நிகழ்த்திய உரை இது. தமிழில்: அ.குமரேசன்)

கருத்தால் ஒன்று கூடிய கலை இலக்கியப் பட்டாளம்

மதுரையில் இருந்து தொடர் வண்டி மூலம் விருதுநகர் சென்று கொண்டிருந்த போது தமுஎகசவை உருவாக்க அரும்பாடுபட்ட ப.ரத்தினம் எங்களோடு பயணித்துக் கொண்டிருந்தார். ஜன்னல் ஓரத்தில் அமர்ந்து கொண்டு சிறுகுழந்தையைப் போல, ஓடிக்கொண்டிருக்கும் மரங்களுக்கும், ஓடிக்கொண்டிருக்கும் பெட்டியை நோக்கி கையசைத்துக் கொண்டிருக்கும் குழந்தைகளுக்கும் கையசைவைக் கொடுத்துக் கொண்டிருந்த அவர் ரயிலடியில் இறங்கிய போது குதூலகத்துடன் சொன்னார் : "தோழர்! ஜன்னல் ஓரத்தில் ரயில்பிரயாணம் செய்ய வேண்டும் என்ற நெடுநாள் ஆசை இன்றுதான் நிறைவேறியுள்ளது”.

உலக இலக்கியங்கள் பலவற்றைத் தமிழுக்கு வழங்கிய மிகச்சிறந்த மொழிப்பெயர்ப்பு ஆளுமையின் உள்மனம் குழந்தையின் உலகத்தில் இருந்தது என்ற சந்தோசத்தை தமுஎகச மாநில மாநாடு நடைபெறும் அந்த மண்டபம் செல்லும் வரை உணர முடிந்தது.

தமிழகத்தில் எந்த அமைப்புகள் இலக்கியப் போட்டிகள் நடத்தினாலும் அதில் கட்டாயம் பரிசு பெறும் படைப்பாளிகளைத் தன்னகத்தில் கொண்டு - தவிர்க்க முடியாத சக்தியாய் இலக்கியக் கொடைகளை வழங்கி வரும் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் 12 வது மாநில மாநாடு செப்டம்பர் 15,16,17,18 ஆகிய தேதிகளில் நடைபெற்றது.

இளைய படைப்பாளிகள் முதல் இச்சங்கத்தை உருவாக்கிய காலத்தில் இருந்து தனது இலக்கியப்பணியைத் துவங்கியவர்கள் வரை குழுமியிருந்த கரிசல்காட்டு மண்ணான விருதுநகரில் தமிழுக்காக உயிர்நீத்த தியாகி சங்கரலிங்கனார் திடலில் எம்.எப்.உசேன் நினைவரங்கத்தில் செப்டம்பர் 15 ம் தேதி கண்காட்சிகள் திறப்பு நடைபெற்றது.

சங்கரன்கோவில் நீ.மணியன், செந்தில்வேல், வள்ளி ஆகியோரின் ஓவியங்களும், ஆண்டனியின் புகைப்படக்கண்காட்சியும், தீக்கதிர் கார்டூனிஸ்ட் வீராவின் கார்ட்டூன் கண்காட்சி, தமுஎகச படைப்பாளிகள் குறித்த கண்காட்சி திறப்புவிழா ஓவியக்கவிஞர் ஸ்ரீரசா தலைமையில் நடைபெற்றது. திரைப்பட எடிட்டர் பீ.லெனின், ஓவியர் தி.வரதராசன் ஆகியோர் கண்காட்சிகளைத் திறந்து வைத்தனர். பண்பாட்டின் அடையாளங்களை உணர்த்தும் வகையிலான படங்கள் ஓவியங்களாக, புகைப்படங்களாக கண்காட்சியை அலங்கரித்தன.

தமுஎகச மாநில மாநாட்டிற்காக மகாகவி பாரதியின் நினைவாக எடுத்து வரப்பட்ட ஜோதியை எஸ்.ஏ.பெருமாள், தியாகி சங்கரலிங்கனார் நினைவு ஜோதியை ப.ரத்தினம், பன்மொழிப்புலவர் மு.கு.ஜெகந்நாத ராஜா புத்தகத் தேரிலிருந்து எடுத்துவரப்பட்ட அவரது படத்தை கு.சின்னப்பபாரதி ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.

எந்த ஊர் சென்றாலும் குடையை மறக்காமல் வெற்றுடம்போடு “புரட்சி வாழ்த்துக்கள்” என முழங்கிய மூ.சி.கருப்பையா பாரதி,

சென்னைப்பட்டினத்தின் கடற்கரையோர மக்கள், மீனவ மக்கள் தொடர்பான வாழ்க்கையையும் அவர்களது அன்றாட வாழ்க்கை நிகழ்வுகளையும் அவர்களது சொந்த மண்ணின் பண்பாட்டு மொழியிலேயே தமது கதைகளில் எழுதி ஆச்சரியப்பட வைத்த

பா.ராமச்சந்திரன், நாடகக்கலைஞர் கே.பி.பாலச்சந்தர், புதுவையில் முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தை வளர்த்தெடுக்கப் பாடுபட்ட இரா.நாகசுந்தரம் ஆகியோரின் படங்களுக்குத் தலைவர்களும், மாநாட்டுப் பிரதிநிதிகளும் மலரஞ்சலி செலுத்தினர். மனதை விட்டு நீங்காத அவர்களின் நினைவுகளை எழுத்தாளர் உதயசங்கர் பகிர்ந்து கொண்டார்.

ஓவியக்கவிஞன் வெண்புறாவின் தூரிகையில் அழகுற அமைக்கப்பட்டிருந்த மேடையில் கம்பீரமாய் மிளிர்ந்த காலநிதி கார்த்திகேசு சிவத்தம்பி படத்துடன் கூடிய அரங்கத்தில் இசையுடன் துவங்கியது மாநில மாநாடு. கரிசல் திருவுடையான், கருணாநிதி, வைகறை கோவிந்தன், உமா ஆகியோரின் இனிய பாடல்களைத் தொடர்ந்து தமுஎகச மாநிலத்தலைவர் பேரா.அருணன் தலைமை வகித்து உரையாற்றினார்.

விருதை மண்ணில் மாநாட்டை மிகச்சிறப்பான முறையில் நடத்திட அயராது உழைத்த மாநாட்டின் வரவேற்புக்குழுச் செயலாளர் தேனி வசந்தன், தியாகி சங்கரலிங்கனாரின் தியாகத்தினை நினைவு கூர்ந்து தனது முன்னிலை உரையை வழங்கினார். ஏழை, எளிய மக்கள் கல்விக்காக தொடர்ந்து கரம் கொடுக்கும் மெரிட் எஸ்.சுப்புராஜ், மாநாட்டின் வரவேற்புக்குழுத் தலைவராய் இருந்து மாநாட்டை நடத்தியதுடன், வந்திருந்த அனைவரையும் தேர்ந்தெடுத்த வார்த்தைகளால் வரவேற்றார்.

“சூடிய பூ சூடற்க” சிறுகதைத் தொகுதிக்காக சாகித்யா அகடாமி விருது பெற்ற எழுத்தாளர் நாஞ்சில் நாடன் மாநாட்டைத் துவக்கி வைத்தார். செம்மலரில் எனது கதைகளைத் தேர்வு செய்து பிரசுரித்த கே.முத்தையாவை நான் என்றும் மறக்க முடியாது. என் எழுத்தை செம்மைப்படுத்தியவர்களில் அவரும் ஒருவர் எனக்குறிப்பிட்ட நாஞ்சில் நாடன், தமுஎகச தொடர்ந்து தன்னைப் பாராட்டி வருவதைக் குறிப்பட்டார். இம்மாநில மாநாட்டைத் துவக்கி வைக்க தன்னை அழைத்ததற்கு வாழ்நாள் முழுவதும் கடமைப்படுத்துள்ளதாகக் குறிப்பிட்ட நாஞ்சில் நாடன்,தற்போது பொறியியல் படிப்பிற்கு ஆண்டுக்கு 72 ஆயிரம் ரூபாய் கல்விக்கட்டணம் கட்ட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டது குறித்து எந்த படைப்பாளியும் மௌனம் சாதிக்க முடியாது. எழுத்து என்பது நான்கு புறமும் சுடும் நெருப்பு. சாமானிய மனிதனையும், ஜீவராசியையும் நேசிக்காத எதுவும் கலையல்ல. கலை என்பது ஒரு போதும் தீங்கிழைக்காது. சமூகப் பொறுப்பற்ற எந்த எழுத்தும் எழுத்தல்ல என்று தனது துவக்கவுரையில் அவர் குறிப்பட்டார். முதல்நாள் மாநாட்டில் பங்கேற்று துவக்கி வைத்த நாஞ்சில் நாடன் மாநாடு நடைபெற்ற மூன்று நாளும் அரங்கில் பார்வையாளராக இருந்து பங்கேற்றார். அவரைப் போன்றே மூன்று நாட்களும் மாநாட்டில் பங்கேற்றவர்களில் தமிழகத்தின் மூத்த படைப்பாளி தி.க.சிவசங்கரனும் ஒருவர்.

மாநாட்டின் மிக முக்கிய உரையாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய கட்டுப்பாட்டுக்குழுத் தலைவர் என்.சங்கரய்யாவின் பேச்சு அமைந்திருந்தது. “இலக்கியம் என்றால் ஒரு இலக்கு இருக்க வேண்டும். இலக்கு இல்லாமல் இலக்கியம் இல்லை. எழுத மட்டுமின்றி நடவடிக்கைகளிலும் நீங்கள் இறங்க வேண்டும். ஜீவா மூலம் கலை இலக்கியப் பெருமன்றம் உருவாக நாம் தான் காரணமாக இருந்தோம். தமுஎகச உருவாகவும் நாம் தான் காரணம். இடதுசாரி இயக்கத்தை வலுப்படுத்த இந்த இரண்டு கலை இலக்கிய அமைப்புகளும் பண்பாட்டுத்தளத்தில் கூட்டு நடவடிக்கையில் ஈடுபடுவது செய்வது அவசியமாகும் என்று குறிப்பிட்ட என்.சங்கரய்யா, பாரதி, பாரதிதாசன், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் ஆகியோர் பிறந்த நாளன்று எட்டயபுரம், புதுச்சேரி, பட்டுக்கோட்டை ஆகிய ஊர்களில் தமுஎகச சார்பில் ஆண்டு தோறும் விழா நடத்த வேண்டும் எனக்கேட்டுக் கொள்கிறேன் என்றார். அதில் பல தரப்பட்ட அறிஞர்களைப் பங்கேற்கச் செய்ய வேண்டும். மாணவ, மாணவிளுக்கான பேச்சுப்போட்டி.பாடல் நிகழ்ச்சி நடத்திட வேண்டும்” என்ற ஆலோசனையையும் முன்வைத்தார்.

கேரள புரோகமன கலாசாகித்ய சம்மேளன மாநிலச் செயலாளர் வி.என்.முரளி மாநாட்டில் பங்கேற்று வாழ்த்திப் பேசினார். "இந்தியாவில் நாம் என்ன செய்தோம் என சிலர் கேள்வி கேட்கின்றனர். முதன் முதலில் கலையும், இலக்கியமும் மக்களுக்கே என முழங்கியது நாமே. சமூகம் வர்க்கங்களாகத்தான் உள்ளது. எனவே, வர்க்கப் போராட்டம் நடக்கத்தான் செய்யும். என்றைக்கு சுரண்டல் ஒழிக்கப்படுகிறதோ அன்று தான் போராட்டம் நிற்கும். ஒரு காலத்தில் இலக்கியம் என்பது அதிகாரம் செலுத்துபவர்களிடமே இருந்தது. ஆனால், இப்போது நமது அமைப்பால் அடித்தட்டில் உள்ள மக்களின் மனதாய் எழுத்து பேசுகிறது. நாம் ஏழை எளிய மக்களிடம் கலையை கொண்டு செல்ல வேண்டியுள்ளது” என்று குறிப்பிட்டார். ஆந்திராவின் எழுத்தாளர் சங்க பொதுச்செயலாளர் கே.அனந்தச்சாரி பேசுகையில், “தமிழகத்தின் பல படைப்புகள் ஏராளமான மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. கு.சின்னப்பபாரதியின் கதைகளுக்கு ஆந்திராவில் நல்ல வரவேற்பு உள்ளது. இலக்கியப்பரப்பிற்கு தமிழகத்தில் தமுஎகச ஆற்றி வரும் பங்களிப்பைப் பாராட்டுகிறேன்” என்று அவர் குறிப்பிட்டார்.

தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்ற மாநிலப் பொதுச்செயலாளர் இரா.காமராசு மாநாட்டில் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார். “புதுக்கவிதை வந்த போது எழுத்து குழுவினர் மௌனக்குரலாய் சமூகத்தில் இருந்து அந்நியப்பட்டு பாலியலையும், விரக்தியையும் எழுதிக்கொண்டிருந்த போது மனிதம் பாடிய வானம்பாடிகள் முற்போக்கு எழுத்தாளர்கள். தமிழ்நாட்டில் ஒரு மாற்று நடவடிக்கையைக் கொண்டு வந்ததில் தமுஎகசவின் கலை இலக்கிய இரவிற்கு முக்கிய பங்கிருக்கிறது” என எடுத்துரைத்தார். புதுச்சேரி மாநில உள்ளாட்சித்துறை அமைச்சர் என்.ஜி.பன்னீர்செல்வம் தமுஎகச மாநாட்டினை வாழ்த்தி வாழ்த்துச் செய்தி அனுப்பியிருந்தார்.

தலைவர்களின் வாழ்த்துரைகளுக்குப் பிறகு பிரதிநிதிகள் மாநாடு துவங்கியது. பேரா.அருணன், எஸ்.ஏ.பெருமாள், ச.செந்தில்நாதன், என்.நன்மாறன், நந்தலாலா, மதுக்கூர் ராமலிங்கம், நா.முத்துநிலவன் ஆகியோர் தலைமை வகித்தனர். கலை இலக்கிய ஆய்வு அறிக்கையை மாநிலப்பொதுச்செயலாளர் ச.தமிழ்ச்செல்வன், அமைப்பு அறிக்கையை துணைப்பொதுச்செயலாளர் கே.வேலாயுதம், வரவு செலவு அறிக்கையை மாநிலப் பொருளாளர் இரா.தெ.முத்து ஆகியோர் முன்வைத்தனர். அதன்மீது பிரதிநிதிகள் விவாதம் நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து மேலாண்மை பொன்னுச்சாமி தலைமையில் 40 புத்தகங்கள் மற்றும் குறும்பட, ஆவணப்படங்கள் வெளியிடப்பட்டன. நூல்களை அறிமுகப்படுத்தி ஆதவன் தீட்சண்யா, ஜீவி ஆகியோர் பேசினர். புத்தகம் மற்றும் ஆவண, குறும்படங்களை உதயநிலா, லிவிங் ஸ்மைல் வித்யா ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.

உலகப் புகழ் பெற்ற படங்கள் மாநாட்டு அரங்கில் திரையிடப்பட்டன. நாம் எப்படி திரைப்படங்களை அணுகுவது என்பதுடன் திரைப்படம் எடுப்பது குறித்த நுணுக்கங்களையும் இயக்குநர் எம்.சிவகுமார் எடுத்துரைத்தார்." திரை இயக்கம் என்று நாம் நினைத்து திட்டமிட்டது உலக சினிமாவை,உன்னத சினிமாவை தமிழ்நாட்டின் உள்ளூர்களுக்குக் கொண்டு செல்ல வேண்டும் என்பது தான். அதற்காக நாம் மண்டலவாரியாக சிறப்பு முகாம்களை நடத்தி, திரை இயக்கத்தை எப்படிக் கொண்டு செல்ல வேண்டும் என்று திட்டமிட்டு ஐந்து மண்டலங்களில் நடத்தியுள்ளோம். தமிழ்நாட்டின் எல்லா ஊர்களிலும் திரை இயக்கம் ஒரு பதிவு செய்யப்பட்ட கழகமாக செயல்பட வேண்டும். இந்த கழகங்கள் இந்த ஊர் மக்களுக்கு முக்கியமான இந்திய உலக திரைப்படங்களை தொடர்ச்சியாகத் திரையிட வேண்டும். திரைப்படங்களை தமிழில் புரிந்து கொள்ள, தமிழில் அறிமுகமும், தேவைப்பட்டால் நேரடி வர்ணனையும் விவாதமும் நடத்தப்பட வேண்டும். இப்பணிகளை செய்ய நம் தோழர்களுக்குப் பயிற்சி அளிக்க வேண்டும்” என்று குறிப்பிட்டார். எஸ்.கருணா தலைமை வகித்தார். இந்நிகழ்வில் எடிட்டர் பீ.லெனின் 3 லட்ச ரூபாய் மதிப்புள்ள புரஜெக்டர் கருவியையும், உலகத்திரைப்பட குறுந்தகடுகளையும் சங்கத்தின் மாநிலப்பொதுச்செயலாளர் ச.தமிழ்ச்செல்வனிடம் வழங்கினார். கடந்த மாநாட்டில் ஒரு புரொஜெக்டரை அவர் தமுஎகசவிற்கு வழங்கினார் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

மாநாட்டின் நிறைவு நாளான செப்டம்பர் 18 ம் தேதி தந்தை பெரியாரின் 133 வது பிறந்த நாள் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழியேற்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து ச.செந்தில்நாதன் தலைமையில் சிறப்புக்கருத்தரங்கு நடைபெற்றது.

“வர்க்க உணர்வை மழுங்கடிக்கும் வேலையை ஊடகம் செய்து வருகின்றன. திரைப்படங்களில் மதவாத அரசியல் பரப்பப்படுகிறது. ராமனை முன்னிறுத்தி இந்த முயற்சிகள் தொடர்ந்து நடைபெறுகிறது. தமிழகத்தில் கம்பன் கழகங்களை இதற்குப் பயன்படுத்துக்கின்றனர். கம்பனுக்கு முகமூடி அணிவித்து ராமனையும், அவனைச் சார்ந்தவர்களையும் இக்கழகம் தூக்கிப் பிடிக்கிறது” என்று குறிப்பிட்டார்.

ஆசிய ஊடக வளர்ச்சி நிறுவனத்தின் இயக்குநர் சசிக்குமாரின் பேச்சு இந்தியா முழுவதும் ஊடகம் பரப்பிய உண்ணாவிரத நாடகத்தை நன்றாக படம் பிடித்துக் காட்டியது. “ இன்றைய நிதிமூலதனக் காலத்தில் கார்ப்பரேட் நிறுவனங்களின் லாபத்தைப் பெருக்கித் தரும் கருவியாக ஊடகங்கள் மாறி நிற்கின்றன. இந்த சூழலில் ஊடக சுதந்திரம் பற்றி புரிந்து கொள்ள வேண்டும். இன்றைய திரிபு நிலை வந்ததற்கு என்ன காரணம்? காலந்தோறும் ஊடங்களில் பல மாற்றங்கள் ஏற்பட்டு வந்தன. தொழிற்புரட்சி காலத்தில் முக்கிய சக்தியாக இருந்த ஊடகம் இன்றைய தகவல் தொழில் நுட்பப் புரட்சிக்காலத்தில் தீவிர மாற்றமடைந்துள்ளது எனக்குறிப்பிட்டார். ஒரு மிகச்சிறிய வர்க்கத்தின் நலனைப் பாதுகாக்கக் கூடிய கருவியாக ஊடகங்கள் இன்று செயல்படுகின்றன. பத்திரிகை ’வாசகர்கள்’ தொலைக்காட்சி. ரேடியோ நேயர்கள் என்பதெல்லாம் இப்போது நுகர்வாளர் என்ற ஒற்றைச் சொல்லில் சுருக்கப்பட்டு விட்டனர். ஊடகம் ஒரு சரக்காக மாற்றப்பட்டு விட்டது- இது பற்றி சிந்திக்க வேண்டும் என்றும் சசிக்குமார் சுட்டிக்காட்டினார். அவரது ஆங்கில உரையை அ.குமரேசன் மொழிபெயர்த்து வழங்கினார்.

“மௌனமாய் பெருகும் மதவாத அரசியல்” என்ற தலைப்பில் மதுக்கூர் ராமலிங்கம் பேசினார். “தமிழகத்தில் பிள்ளையார் சதுர்த்தி உள்ளிட்ட தினங்களில் நடத்தப்படும் ஊர்வலங்களில் துவங்கும் மதவெறி கோஷங்கள் மோதலுக்கு பந்தல் கால் ஊன்றி விடுகின்றன. ராணுவ அணிவகுப்பு போல பிள்ளையார் சிலைகள் கரைப்பதற்கு எடுத்துச்செல்லப்படுவதைப் பார்க்கும் போது,

சாதுவாக காட்சி தரும் பிள்ளையாரை இப்படி மததுவேசத்திற்கு பயன்படுத்துகிறார்களே என பலர் வருத்தப்படுகிறார்கள். காதல் தினத்தன்று இந்து முன்னணி அமைப்பினர் தாலிக்கயிறுகளுடன் அலைகின்றனர். தேனி மாவட்டத்தில் காதல் ஜோடியை வழிமறித்த அவர்கள்,அப்பெண்ணின் செல்போனைப் பறித்து அவரது தாயிடம் பேசியுள்ளனர். அப்பெண் வீட்டிற்குச் செல்லும் முன் அவரது தாயார் தற்கொலை செய்து கொண்டுள்ளார். கலாச்சார காவலர்கள் போல வேடம் அணியும் இந்துத்துவா அமைப்பினர் பண்டிகைகளையும், திருவிழா நாட்களையும் தங்களுக்குச் சாதகமாக்கிக் கொண்டு தங்களுடைய அஜெண்டாக்களை தயார் செய்கிறனர்” என மதுக்கூர் ராமலிங்கம் கூறினார்.

“தமிழ் அரசியலின் தடம் பற்றி” என்ற தலைப்பில் சு.வெங்கடேசன் எழுச்சிமிகுந்த உரையாற்றினார். தமிழ் அரசியலை யாழ்ப்பாணத்தில் ஆறுமுக நாவலர் துவக்கி வைத்தார்.சாதி, சமயத்தை முன்னிறுத்திய அவரது வலது மரபிற்கு எதிராக இடது மரபில் தோன்றிய வள்ளலார் பசி,கருணை, ஜீவகாருண்யத்தை கருத்தாய் முன்வைத்தார். இலங்கையில் கோயிலுக்குள் யார், யார் போக வேண்டும் என ஆறுமுக நாவலர் வரையறுத்தார். அவர் கட்டமைத்த அரசியலின் நீட்சி இன்றும் தொடருகிறது. எந்த இனவாதமும் ஜனநாயகத்தை அனுமதிப்பதில்லை என்பதற்கு அவர் துவக்கி வைத்த மரபு இன்னும் அடையாளமாய் இருக்கிறது என சு.வெங்கடேசன் குறிப்பிட்டார்.

இந்தியாவில் பெருகி வரும் மதவாத அபாயத்திற்கு எதிராக கருத்துப் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள வரலாற்றுப் பேராசிரியர் கே.என்.பணிக்கர் மாநாட்டில் ஆற்றிய உரை குறிப்பிடத்தகுந்ததாக அமைந்தது. அவருடைய உரையில் நவீனமயம் என்ற பெயரில் நடக்கும் அழிவைச் சுட்டிக்காட்டினார்.” நான்கு வழிச் சாலைகளுக்காக எண்ணற்ற கிராமங்கள் மறைந்து போய்விட்டன. 70 சதவிகிதத்துக்கும் மேற்பட்ட மக்கள் நாளொன்றுக்கு 20 ரூபாய் கூட செலவிட முடியாத நிலையில் இதை நவீனமயம் என்று சொல்ல முடியுமா? ஆனால் இதை நாம் விமர்சிக்கத் தயங்கக்கூடாது. முதலாளித்துவத் தத்துவார்த்தத் தாக்குதல் மிக வலிமையானதாக இருக்கிறது. இந்த சூழலில் நாம் பயன்படுத்தும் முற்போக்கு என்ற வார்த்தை தற்போது முன்வைக்கப்படும் வளர்ச்சி என்பதை குறைத்து மதிப்பிடுவதாக இருக்கிறது. இதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இன்றைய வளர்ச்சி என்பது ஆங்காங்கே தீவுகளாக தனித்தனியானதாக ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது. மிகப்பெரும்பான்மையான கிராமங்கள், சிறு நகரங்கள் தனித்து விடப்பட்டதாக இந்த வளர்ச்சி இருக்கிறது. இவற்றை உள்ளடக்காத வளர்ச்சி எப்படி உண்மையான வளர்ச்சியாக இருக்க முடியும்? இதைப் பற்றி நாம் மக்களிடம் பேச வேண்டும். சந்தை என்பது பண்பாட்டின் மீது ஆதிக்கம் செலுத்தும் முக்கிய அம்சமாக மாறிவிட்டது. எனவே இது போன்ற விசயங்களைப் பற்றியெல்லாம் படைப்பாளிகள் படைப்புகளை உருவாக்க வேண்டும்” என வலியுறுத்தினார்.

கவிஞர் ஜீவி தலைமையில் நவகவி, நா.வே.அருள், வையம்பட்டி முத்துச்சாமி, இரா.தனிக்கொடி. வெண்புறா, லட்சுமிகாந்தன், ப.கவிதாகுமார், ச.விஜயலட்சுமி, ரத்திகா, கிருஷ்ணவேணி, வில்லியனூர் பழனி, உமாமகேஸ்வரி ஆகியோர் கவிதை வாசித்தனர்.

மாநாட்டின் நிறைவாக புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். தமுஎகசவின் கௌரவத்தலைவராக அருணன், மாநிலத்தலைவராக ச.தமிழ்ச்செல்வன், மாநிலப் பொதுச்செயலாளராக சு.வெங்கடேசன், பொருளாளராக சு.ராமச்சந்திரன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். மேலும், துணைத்தலைவர்களாக எஸ்.ஏ.பெருமாள், என்.நன்மாறன், ச.செந்தில்நாதன், மேலாண்மை பொன்னுச்சாமி, நந்தலாலா, மதுக்கூர் ராமலிங்கம், ஆர்.நீலா ஆகியோரும் துணைப் பொதுச்செயலாளர்களாக கே.வேலாயுதம், இரா.தெ.முத்து, ஆதவன் தீட்சண்யா, சைதை ஜெ, கருணா, ஜீவி ஆகியோரும், துணைச்செயலாளர்களாக டி.தங்கவேல், பிரகதீஸ்வரன், ஸ்ரீரசா, ஈஸ்வரன், அ.குமரேசன், போடி மாலன் ஆகியோரும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அத்துடன் 18 மாநில செயற்குழு உறுப்பினர்களும், 10 சிறப்பு அழைப்பாளர்களும் என 113 பேர் கொண்ட புதிய மாநிலக்குழு தேர்வு செய்யப்பட்டது.

தமிழகம் மற்றும் புதுவையில் இருந்து இம்மாநாட்டில் 467 பிரதிநிதிகள் பங்கேற்றனர். அரசு ஊழியர்கள் 151 பேர், வழக்கறிஞர்கள் 10 பேர், பொறியாளர், மருத்துவர் தலா 4 பேர், தனியார்,கைத்தறி உள்ளிட்ட உழைக்கும் வர்க்கத்தைச் சேர்ந்த 398 பேர் பங்கேற்றனர். சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்ட 88 பேர் இம்மாநாட்டில் பங்கேற்றனர் என்ற செய்தி அரங்கை அதிர வைத்தது. சடங்கு மறுப்பு திருமணத்தை 57 பேரும், இலக்கியப் போட்டிகளில் பரிசு பெற்றவர்கள் 57 பேரும் இம்மாநாட்டில் பங்கேற்றனர் என்ற செய்தி சுயவிபரக்குறிப்பு மூலம் அறிவிக்கப்பட்டது.

சென்னை மாகாணத்திற்கு தமிழ்நாடு எனப்பெயரிடுக எனச்சொல்லி உண்ணாவிரமிருந்து உயிர்நீதித்த தியாகி சங்கரலிங்கனாருக்கு விருதுநகர் தேசபந்து மைதானத்தில் சிலை நிறுவ வேண்டும். அவர் பெயரில் ஆய்வு மையம் ஒன்றை விருதுநகரில் அமைத்திட வேண்டும். மகாகவி பாரதி,பாரதிதாசன், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் ஆகியோரின் அடியொற்றி தமிழ்க்கலை இலக்கிய உலகில் தனது கவிதைகளால் படைப்புகளைப் பங்களிப்புச் செய்தவர் கவிஞர் தமிழ்ஒளி. புதுச்சேரி முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் பெருமுயற்சியால் புதுச்சேரி அரசு விழவாக தமிழ் ஒளியின் பிறந்த நாளை கடைப்பிடிக்கிறது. தமிழக அரசும் அவருடைய பிறந்தநாளை அரசு விழவாகக் கொண்டாட வேண்டும் என மாநாடு கேட்டுக்கொள்கிறது. அவருடைய படைப்புகளை அரசுடமையாக்க வேண்டும். இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் 7 தலித்துகள் காவல்துறையின் துப்பாக்கிச்சூட்டில் கொல்லப்பட்டுள்ளனர். இதற்குப் பொறுப்பான காவல்துறை அதிகாரிகளை இடைநீக்கம் செய்து விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். இறந்தவர்களின் குடும்பத்திற்கு ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும்.

உலக வரைப்படத்தில் கண்ணீர் துளிப்போல காட்சியளிக்கும் இலங்கைத் தமிழ் மக்களின் துன்ப துயரம் இன்னமும் நீடிப்பது ஆழ்ந்த வேதனை அளிக்கிறது. முள்ளிவாய்க்காலில் நடந்த இறுதிக்கட்ட உள்நாட்டுப் போரில் 40 ஆயிரம் அப்பாவி தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக ஐ.நா.சபை நியமித்த ஆய்வுக்குழுவே கூறியுள்ளது. இலங்கை ராணுவத்தால் நடத்தப்பட்ட இந்தப்படுகொலைகளை மனித உரிமை மீறல்களை தமுஎகச 12 வது மாநில மாநாடு வன்மையாகக் கண்டிக்கிறது. இந்தப்படுகொலைகள்,மனித உரிமை மீறல்கள் குறித்து சுயேச்சையான சர்வதேச தரத்திலான விசாரணை நடத்தப்பட வேண்டும். குற்றமிழைத்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும். முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள தமிழ்மக்களை அவர்களது சொந்த வாழ்விடங்களில் உடனடியாக மீள்குடியமர்த்த வேண்டும்.தமிழர்களின் பகுதியிலிருந்து ராணுவம் விலக்கிக் கொள்ள வேண்டும். ஒன்றுபட்ட இலங்கைக்குள் வடக்கு,கிழக்கு மாகாணங்களை இணைத்து அதற்கு அதிகபட்ச சுயாட்சி அதிகாரம் அளிக்க அந்த நாட்டு அரசு முன்வரவேண்டும். அண்டை நாடு என்ற முறையிலும். சார்க் கூட்டமைப்பில் முக்கியமான நாடு என்ற வகையிலும் இலங்கை அரசை ராஜ்யரீதியாக இந்தியா நிர்ப்பந்திக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மாநாட்டின் நிறைவு நாளான செப்டம்பர் 18 ல் மாநாட்டு வளாகத்திலிருந்து கலைப் பேரணி துவங்கியது. பேரணியை கலைமாமணி பாவலர் ஓம் முத்துமாரி தப்பிசையை முழங்கி துவக்கி வைத்தார். மாநிலத் தலைவர் ச.தமிழ்ச்செல்வன் சிவப்புத் துண்டை வானில் சுழற்றி பேரணியை உற்சாகப்படுத்தி உடன் வந்தார்.

பேரணியில் திண்டுக்கல் சக்தி போர்ப் பறையின் தப்பாட்டம். மதுரை சுடர் கலைக் குழு, திருப்பூர் லெஜிம், திருவில்விப்புத்தூர் புயல் தப்பாட்டம் உள்ளிட்ட கலைக் குழுக்கள் பங்கேற்றன. முடிவில் தேபந்து மைதானத்தில் கலை இலக்கிய இரவு நடைபெற்றது. அபிராமி உணவுக் குழுமத்தின் சுப்பாராமன் தலைமையேற்றார். வரவேற்புக்குழு செயலாளர் தேனிவசந்தன் வரவேற்புரையாற்றினார். விருதுநகர் மக்களவை உறுப்பினர் மாணிக்தாகூர், மாவட்ட ஆட்சியர் மு.பாலாஜி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

கலைஇரவை துவக்கி வைத்து மாநில துணைத் தலைவர் என்.நன்மாறன் பேசினார். மேடையில் திண்டுக்கல் சக்தி போர்ப்பறை, புயல் தப்பாட்டம், பாப்பம்பட்டிஜமா, புதுகை பூபாளம் ஆகியோரின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. நந்தலாலா, பாரதி கிருஷ்ணகுமார்,கு.ஞானசம்பந்தன் ஆகியோர் கருத்துரை வழங்கினர்.

திரைப்பட இயக்குனர்கள் எஸ்.பி.ஜனநாதன், சசி, சுசீந்திரன், வசனகர்த்தா பாஸ்கர் சக்தி ஆகியோரிடம் மாநிலத் தலைவர் ச.தமிழ்ச்செல்வன் சினிமாத்துறைக்கும், எழுத்துத்துறைக்கும் உள்ள வித்தியாசம் பற்றிய கேள்விகளை எழுப்பினார். அதற்கு அவர்கள் உற்சாகமாக பதிலளித்தனர்.பொதுமக்கள் மத்தியில் நடைபெற்ற இந்த சுவாரஸ்மான நிகழ்ச்சியில் பல்வேறு கேள்விகளை தமிழ்செல்வன் எழுப்ப அதற்கு இயக்குநர்கள் பதிலளித்தனர் .

கின்னஸ் சாதனை புரிந்த கலை இயக்குநர் மார்த்தாண்டம் ராஜசேகருக்குப் பாராட்டு விழா நடத்தப்பட்டது. புதியகோணம் என்ற சினிமா வலைத்தள இதழும் கலைஇரவில் வெளியிடப்பட்டது. கரிசல் கிருஷ்ணசாமி, திருவுடையான், கருணாநிதி, ஈரோடு ராஜேஸ்வரி, வைகறை கோவிந்தன் உள்ளிட்ட பலர் பாடல்கள் பாடினர். நிகழ்ச்சிகளை கவிஞர்கள் மதுக்கூர் ராமலிங்கம், ஜீவி, எழுத்தாளர் ம.மணிமாறன் ஆகியோர் தொகுத்து வழங்கினார். முடிவில் ஜே.ஜே.சீனிவாசன் நன்றி கூற மாநில மாநாடு இனிதே நிறைவு பெற்றது.

- ப.கவிதா குமார்

தடயம்

Black pig

சிறுகதை – எஸ்.லட்சுமணப்பெருமாள்

நாலுபேரும் மடியை அவுத்து வெத்திலை பாக்கு போட ஆரம்பிச்சாங்க. கிட்டத்தட்ட அந்தப்படிக்கே செய்து முடிக்கிறதுன்னு தீர்மானமாகிப்போச்சி. ஊருக்குள்ள வலுவான சம்சாரிகள் இங்கே உட்கார்ந்திருக்கிற நாலே நாலுபேர்தான். இதுகளுக்குள்ளே ஒரு ஒத்துமை. ஒரு கட்டு திட்டுன்னு வச்சி ஒரு அமைவோட இருந்தா கிழக்குத் தெருக்காரங்க ஆட்டமும் வச்சிருக்கிற சங்கமும் எம்மாத்திரம்?

மூணு தேறம் வயித்துக்கு திங்கவும் உடுத்திக்கிட குண்டித்துணிக்கும் நம்மகிட்டெ கையேந்துற பயல்கள் இப்பொ என்ன வெறப்பா திரியுறான். தலையில லேஞ்சி கட்டுறதென்ன கால்ல கிறீச்சி மிதியடி போட்டு லாத்துறதென்ன பயமத்துப் போச்சுங்கிறேன்.

காட்டுல வேல விட்டும் விடுமுன்னே டவுனுக்கு பொதுக்கூட்டம் போகணும்ங்கிறான். பேரணிங்கிறான் ஆர்ப்பாட்டம்ங்கிறான் டேஙப்பா ஆட்டம் கொஞ்சமா? அட இந்த பொட்டெ சிரிக்கி பிள்ளெக! நண்டுஞ்சிண்டுகளை கூட்டிவந்து ஒப்புக்கு கணக்குகாட்டி கும்புட்டு கூத்தாடி கூலி வாங்கிட்டுப் போனவ, இப்பொ பிள்ளைகளை பள்ளிக்கூடம் காலேஜ்ன்னு அனுப்பிட்டு இவளும் இன்னக்கி நான் லீவுங்கிறாள். என்னன்னு கேட்டா நாளைக்கு மேதினம் தோசைக்கு நனையப்போட்டு ஆட்டி வைக்கணும்ங்கிறா.

அவங்க வீட்டுக் கூரையில அவங்களுக்குள்ள ஒருத்தனையொருத்தன் பிடிக்காம தீவச்சுக்கிட்டு நம்மள கை நீட்டுறான். அவங்க சங்கம் வச்சது பிடிக்காம நாமதான் தீவச்சோமாம். தெக்குள்ள பயக கூரை எரியும்போது வடக்குட்டுப் பயகளோட செருப்பும் துண்டும் பொடிமட்டை மொதக்கொண்டு அங்கே கிடந்த தடயம் இருந்திருக்கு. இந்தப் பக்கம் அந்தப் பயல்களோட நடமாட்ட தடயங்கள் கிடந்திருக்கு. பாத்திருக்காங்க. என்னடான்னா நாமதான்னு சாதிக்கிறாங்களே படவா!

விசுக்குன்னு போலீஸ் கோர்ட்டுன்னு படியேறிர்ராங்க. இதுக்கெல்லாம் கை கொடுக்கிறது அவங்க பன்னிகள் வளத்து துட்டு துக்காணின்னு பண்ட் சேக்கிறதுதான். பன்னிகளுக்குத்தான் அதுக இரைபாடுகளுக்கு நாம மெனக்கிட வேண்டியதில்லை. அதுகளா 'மந்தை' க் காட்டுல மேய்ஞ்சி சாக்கடை சலதாரையில புரண்டு உருண்டு வதவதன்னு குட்டிகளைப் போட்டு பயகளுக்கு வருமானத்தை கொடுத்து உதவுது.

அவங்களை ஒடுக்கணும்ன்னா நாமளும் பண்ட் சேக்கணும். பன்னி வளப்புல இறங்கீற வேண்டியதான். அருவமில்லாம அது பாட்டுக்க திரியட்டும். தொறட்டு இல்லே. கொண்டு வந்து விடுறதோட சரி. நாம நம்ம பாடு சோலிகளைப் பாக்கலாம்.

தொரைச்சாமி நாக்கெரு தெக்காட்டுக்கும், கரையா நாக்கெரு கீகாட்டுக்கும், வடக்குட்டும் மேற்கிட்டும் வரதாழ்வாரும் போத்தி நாயுண்டும், சரியாவுள சாதிப் பன்னி எங்கே வாங்கலாம்ன்னு அலைஞ்சி விசாரிச்சிட்டு வந்தாங்க. பன்னிகள்லயே வத்தலக்குண்டு பன்னிதான் ரொம்ப ஒசத்தியாம். இனப்பெருக்கம் அந்த மாதிரி எங்கேயும் கிடையாதுங்கிறாங்க. ஒரு ஈத்து வகைய்யா ஈண்டதுன்னா ஒரு குடும்பத்துக்கான மொத்த நல்லது பொல்லதுகளும் நடத்தி முடிச்சிரலாமாம்.

தாம்சமே கூடாதுன்னு நாலு பேரும் ஒரே நா ராத்திரியில வத்தலக்குண்டுக்கு நடந்தே வந்து சேந்தாங்க. அங்கேயும் சுத்தோ சுத்துன்னு சுத்தி கடைசியில் வியாபாரி பன்னி மாடசாமித் தேவர் வீட்டை கண்டுபிடிச்சி நல்ல சினைப்பன்னி ஒண்ணு விலையப்பத்தி கவலையில்ல உடனடியா வேணும்ன்னு மன்றாடி கேட்டு நின்னாங்க.

தேவரு நாலு பேரையும் மேலேயும் கீழேயும் பாத்தாரு. போட்டிருக்கிற கதர் சட்டைக்கும் வாங்க வந்த வியாபாரத்துக்கும் சம்பந்தமில்லாமயிருந்தது. அதுவும் ஊரு விருதுபட்டிக்கு தெற்கேயிருந்து வர்றதா வேற சொல்றாங்கன்னு ரொம்ப நேரம் யோசிச்சார்.

பிறகு கெத்து விடாம "ஹ்ர்ம்ம்... சரி! பெரும்பாலும் நான் வெளியூருக்கு உருப்படிகளை கொடுக்கிறதில்லே. ஊரைவிட்டு சீதேவி போயிரும்ன்னு நெனப்பேன். எங்க ஊர் பன்னிகன்னா அவ்வள பேர் போனது. மணப்பாறை மாடு, ஊத்துக்குளி வெண்ணெ, தாமிரபரணி தண்ணி, வத்தலக்குண்டு பன்னி. நல்லது. நம்பி வந்துட்டீங்க இப்பொ போயிட்டு சாயுங் காலமா வாங்க. எம்பேரு சொல்றாப்புல ஒரு உருப்படி கொடுத்து விடுறேன்னு அனுப்பிச்சு வச்சார்.

அவங்க அந்தப்பக்கம் நகரவும் தேவர் வேட்டியை வரிஞ்சு கட்டுனார். இன்னக்கி தூங்கி முழிச்ச நேரம் நல்ல நேரம். நம்ம குல தெய்வந்தான் இவங்களை அனுப்பிச்சி வச்சிருக்குன்னு திசை பாத்து தரை மண்ணள்ளி நெத்தியில பூசுனார். தேவர் வீட்டுல ரொம்பத் தவங்குன நாள்ப்பட்ட பன்னி ஒண்ணு சாகமாட்டாம கிடந்தது. பல ஈத்து ஈண்ட கிழட்டுப் பன்னி.. ஈத்து முறிஞ்சு எதுக்கும் ஆகாம அறுத்துப் போட்டாலும் கறியை வாங்க நாதி கிடையாது. அவ்வள வங்கிழடு. அதுக்கு போக காலம் பிறந்திருச்சி.

இருக்கிற கழி தண்ணியெல்லாம் சட்டி சட்டியா அதுக்கு முன்னாடி குடிக்க வச்சார். ஒவ்வொரு பலகாரக் கடையிலயும் அள்ளிவந்த மிச்ச சூத்தக்காயி, எச்ச இலைன்னு கொண்டுவந்து தினசரி சலவன் பன்னிகளுக்குத் தான் வெப்பாரு. இன்னக்கி கிழடுக்கு முன்னாடி வந்து கொட்டுனாரு. அவ்வளவு பதவலையும் தின்னு குடிச்ச பன்னி நல்லா யானைக்குட்டி உயரத்துல எழுந்திருச்சி நின்னது. வயிறு பொம்முன்னு பொடச்சி எட்டு எடுத்து வெக்கெ மாட்டாம கிறங்கி கிறங்கி நடந்தது.

தேவரு ஓடிப்போய் சம்சாரிகளை கூட்டி வந்து காண்பிச்சார். நாலு பேருக்கும் ரொம்ப திருப்தியாயிருந்தது. ஒருத்தருக்கொருத்தர் நாடிய நாடிய வெட்டி குசுகுசுன்னு பேசுனாங்க. எப்படிக் குறைச்சுப் பாத்தாலும் வயித்துல பத்துக்குட்டிக்கு குறையாம இருக்கும்ன்னார் கரையா நாக்கெரு. அதென்ன அப்படிச் சொல்லிப்புட்டெ ஒரு டஜணுக்கு கூடத்தான் சொல்லலாமேயொழிய குறைச்சி மதிக்க முடியாதுன்னார் தொரைச்சாமி நாக்கெரு. அட நீ ஒண்ணு இப்படித்தான் வெள்ளாமை செஞ்சி வரவு-செலவு பாத்திருப்பே ஒன்றரை டசன் குட்டி ஓடுற ஓட்டத்துல இருக்குமப்பான்னு போத்தி நாக்கெரு சொல்ல, ஒரே குதூகலமாகிப் போனாங்க.

நேரமாக ஆக அத்தாவுத்தியா நிக்கிற பன்னியை விட தேவருக்குத்தான் வயிறு ரொம்ப கலங்குனது. குலை பட்டினியாக் கிடந்தது திட்டமில்லாமத் தின்னு சட்டி சட்டியா கழி தண்ணியக் குடிச்சிருக்கு. செமிக்காம செய்யாம வயித்தால பிடுங்கீருச்சுன்னா! குட்டு வெளிப்பட்டிருமே.

"மொதலாளி வாங்குறாப்புலயிருந்தா ரூபாய கொடுத்திட்டு உருப்படிய தூக்குங்க. இல்லேன்னா கொஞ்ச நேரத்துல வேற வியாபாரிக வர்றாங்க அவங்க நூறு ஐநூறு கூட கொடுத்தா மாறிருவேன் ஆமா"

அவ்வளவுதான் இவங்க தடபுடலா ருபாயை எண்ணிக் கொடுத்ததும் பன்னியை கிளப்புனாங்க. தேவரு பதட்டமா ஓடிப்போயி "முதலாளி அயிட்டம் நிறை மாத்தச் சூலி. இப்பொ ஈனுமோ பிறகு ஈனுமோ! பிடிச்சு தூக்கிட்டு போறதுதான் சரி. ஒரு லட்சம் பெறுமான மொதுலு பாத்துக்குங்க.

அதுவுஞ்சரிதான்னு பின்னாடி ரெண்டு பேரும் முன்னாடி ரெண்டு பேரும் தூக்கி தோள்ல வச்சு கிளம்பிட்டாங்க.

கனம்ன்னா கனம் செமக்கனமாயிருந்தது. சும்மாதானா ஒரு பன்னியை கொண்டு போயி பண்ணையா பெருக்கி லட்சக்கணக்குல சம்பாத்யம் பண்ணி எதிரியை சந்திக்கிறது!

ஒரு மைல் தொலைவுதான் சுமந்து வந்திருக்காங்க. பின்னாடி சுமந்த ரெண்டுபேர் மேலயும் பன்னி சத சதன்னு பேல ஆரம்பிச்சது. முதுகிலிருந்து குதிகால் வரைக்கும் நனைச்சு விட்டிருச்சி நனைச்சி. வீச்சம்ன்னா வீச்சம் இன்ன மட்டுமின்னுல்லே. சுமை தான் கடுமையா மே மூச்சு கீ மூச்சு வாங்குதுன்னா உடுப்புக தொப்பு தொப்பாப் போச்சி. நாத்தம் வேற குடலைப் புரட்டுது. சே. பெரிய ஜீன்றமாப் போச்சே!

இந்த ரெண்டு பேரும் முன்னாடி சுமக்கிறவங்களைப் பாத்தாங்க. சுமை தாங்க மாட்டமத்தான் அலப்பறைப்படுறாங்களே யொழிய இந்த மோசமில்லை. ஙொப்பனோலி நாம மட்டும் பைத்தியாரங்களா பின்னாடி சுமந்து சீரழிய அவங்களுந்தானே வரிக் கொடுத்தான்?

"ஏய் இந்தாங்கப்பா நீங்க கொஞ்சம் பின்னாடி பிடிங்க. நாங்க முன்னாடி வந்து கொஞ்சம் மூச்சு வாங்கிக்கிடறோம்ன்னு மாத்திக்கிட்டாங்க. பன்னிக்கு வயிறு காலியாக காலியாக கழிச்சலோட காத்தும பர்ர்ர்... பர்ர்ர்ன்னு வெளியேறுனது. "பய புள்ளைகளை நல்லாக் குளுப்பாட்டுது" முன்னாடி போறவங்களுக்கு பின்னாடி சீப்படுறவங்களை நெனச்சி ஏகச் சந்தோசம்.

விடிய விடியச் சுமந்து தன்னால அலுத்து சலுத்து இருப்பிடத்துல கொண்டு வந்து போட்டாகளோ இல்லையோ காத்துப்பிடுங்குன லாரி டயர் டியூப் மாதிரி பன்னி கொடேர்ன்னு விழுந்து கிடந்தது. உசிரு போக ஆத்த மாட்டாம உர்ர் உர்ர்ன்னது. "மாப்ளெ நாக்கெரே... மாப்ளெ நாக்கெரோய்! குட்டிக ஒன்றரை டசனுக்கு குறையாம ஓடுற ஓட்டத்திலெ இருக்கும்ன்னீரு வரும்போது குட்டிய ஒழுக விட்டுட்டீரோ"

போத்தி நாக்கெரை கரையா நாக்கெரு கேலி பண்ணுனார். இவரு பெரிய யோக்கியர் அரண்மனை கணக்குப் பிள்ளை மாதிரி எடுத்தவுடனே பத்துக்குட்டிக்கு குறையாதுன்னு இவன்தானே கணிச்சான் பக்கத்திலிருக்கிறவர்கிட்டெ முணுமுணுத்தார் கரையா நாக்கெரு. ஒருத்தருக்கொருத்தர் பேசவும் பாக்கவும் சகிக்கலை. நாலு பேரும் கரேர்ன்னு நனைஞ்ச கதர்சட்டை உடுப்புகளோட நாலு மூலைக்கும் மூஞ்சியை திருப்பிக்கிட்டு போனாங்க.

அதுக்குப்பிறகு தான் விவகாரமே ஆரம்பிச்சது.

தேவர் வீட்டுல ஆத்தமாட்டாம கிடந்த பன்னி மந்தையில வந்து விழுகவும் பக்கத்து தோட்டக் கால்ள பயிர் பச்சைக வாசனையில நகண்டு போயி வாய் வக்கெ ஆரம்பிச்சது. போத்தி நாயுண்டுவுக்கு மந்தைத் தோட்டம் எட்டுக்குறுக்கம் விஸ்தீரணத்துல நிலக்கடலை போட்டிருந்தார். ஒரு நா விடிய பம்மல்ல வந்து தோட்டத்தைப் பாக்கும் போது நாயுண்டுகாரு விருள்தட்டிப் போய் நின்னுட்டாரு. கால்வாசிக்கு மேலே கடலைச் செடியை முண்டி முண்டி நாசக்காடு பண்ணி வெறுஞ்செடியாய் சாய்ச்சி வச்சிருந்தது பன்னி.

அன்னையிலிருந்து ராக்காவலுக்கு வர ஆரம்பிச்சார். தின்னு ருசிகண்ட பன்னி நிலையில நிக்கிமா? செடிகளுக்குள்ளே நுழைஞ்சி முண்டி உழப்பிக்கிட்டிருந்தது. பக்கத்துப் பொலி துரைச்சாமி நாக்கெரு தோட்டம் சீனிக்கிழங்கு வெள்ளாமை வச்சிருந்தாரு. ராத்திரியோட ராத்திரியா அப்படியே அணச்சி பத்திக் கொண்டுபோய் கிழங்குத் தோட்டத்துல கொண்டு போய் விட்டுப் போட்டு ஓடியாந்துட்டார் போத்தி.

வந்தா வந்த பக்கந்தான். நடக்கமாட்டாத பன்னி அங்கேயே ஜாகையை போட்டிருச்சி. சீனிக்கிழங்கு தின்ன பன்னி செவியறுத்தாலும் போகாதுங்கிற சொலவடை சும்மா ஆகுமோ?

கிழங்குக் கொடி ஒரு ஏக்கருக்கு மேலே பன்னி முண்டி நாசமாக்கிடந்ததை ஒருநாள் பார்த்த தொரைச்சாமி நாக்கெரு வயிறெரிஞ்சி போயி பன்னியை தேடிப்பிடிச்சு கல்லாலயே எறிஞ்சு ஆளில்லாத நேரம் பார்த்து பக்கத்து கடலை தோட்டத்துக்கு முடுக்குனாரு. மறுநாள் அவரு முறை பன்னி இங்குட்டும் அங்குட்டுமா அலைமோதி திரிஞ்சது.

அடுத்து அக்க பக்கமாத்தான் வரதாழ்வார் தோட்டமும் கரையா நாக்கெரு தோட்டமும். அங்கேயும் சேனைக்கிழங்கு சாகுபடி தரைப்புடலை, தக்காளி, கத்திரிக்காய் வகைகள் பாக்கப் பசேர்ன்னு நல்ல தண்ணியில விளைஞ்சு பசபசன்னு கண்ணுக்கெட்டுன தூரம் கிடந்தது.

மொத ரெண்டு புண்ணியவான்கள்ல யாரோ ஒருத்தர் எதுக்கு நாம அங்க விரட்ட அங்கிருந்து இங்கு விரட்ட கொஞ்சம் எட்டி தள்ளிக் கொண்டு போய் விட்டிரலான்னு ஒருநாள் மத்த ரெண்டு பேர் தோட்டப் பக்கமா பன்னியை கொண்டு சேத்துட்டாங்க. அங்கேயும் அந்த ரெண்டு பேரால இந்தப் பொலிக்கும் அந்தப் பொலிக்குமா தொறட்டுப்பட்ட பன்னி இப்பொ நாலா இடத்தையும் கண்டுக்கிட்டது. இப்பொ நாலு தோட்டத்திலயும் முறைபோட்டு வாய் வெக்கெ ஆரம்பிச்சது. ஆளரவம் தெரிஞ்சால் ஒதுங்கி ஓடைப்பக்கம் ஒளிஞ்சிக்கிடவும் பழகிக்கிட்டது.

இவங்க நாலு பேரும் ஒருத்தரையொருத்தர் பார்த்தாலும் விலகி விலகி போய்க்கிடறது. தோட்டங்கள்ல அழிம்பு கூடிக்கிட்டே போனது. ஒருதரைத்யொருத்தர் கறுவிக்கிட்டே அலையுறாங்க.

ரொம்ப நாளைக்குப்பிறகு இந்த நாலு சம்சாரிகளும் அன்னைக்கி ஒண்ணா கூட வேண்டிய கட்டாயமாகிப் போச்சு. பண்ட் சேர்த்து எதிரிகளை சந்திக்க கொண்டு வந்த பன்னி வேல்க்கம்புனால குத்துப்பட்டு மல்லாக்க செத்துக்கிடந்தது.

போத்தி நாக்கெரு தோட்டத்துல வச்சுதான் குத்திக்கொன்னு ஓடை வரைக்கும் இழுத்திட்டு வந்து போட்ட தடயம் இருந்தது.போத்தி நாக்கெருதான் குத்தவாளின்னு ருசிபிக்க இருந்த நேரம் மத்த மூணு பேரு தோட்டத்திலிருந்தும் இதே தடயம் ஓடை வரைக்கு கத்தி இழுத்திட்டு வந்த தடயங்க அச்சடிச்ச மாதிரி இருந்தது.

நாலு பேரும் ஓடை வரப்பு மேல இருந்த வேப்ப மரத்துக்கு கீழே வந்து உட்கார்ந்தாங்க. ஒருத்தரையொருத்தர் காக்கா மாதிரி கண்ணை சாய்ச்சி சாய்ச்சி பாத்தபண்டமா இருந்தாங்க.

ஒண்ணு போல மடியை அவுத்து வெத்திலை பாக்கு போட ஆரம்பிச்சாங்க. கொஞ்ச நேரத்துக்குப்பிறகு போத்தி நாயுண்டுதான் எச்சிலைத் துப்பிட்டு பேச ஆரம்பிச்சார்.

"வர்ற வியாழக்கிழமை முத்துலாபுரத்துல கழுதைச்சந்தை நடக்குதாம். நல்ல சினைக் கழுதை ஒண்ணு பிடிச்சு பொதுவுல விட்டா என்ன?

குத்துப்பட்டுக்கிடந்த பன்னி நிலை முழிகுத்த ஆன்னு வாயை பிளந்தமட்டுல இவங்களைப் பார்த்துக்கிடந்தது.

பாடமும் கோபமும்

ச.மாடசாமி

2000 -இன் தொடக்கத்தில் இந்தியா முழுவதும் ஒரு விவாதம் நடந்தது. வரலாற்றுப் பாடப் புத்தகம் தொடர்பான விவாதம் அது.

பி.ஜே.பி அரசு, NCERT தயாரித்த - நேர்மையான உண்மையான தகவல்களைப் பகிர்ந்து கொள்ளும் - வரலாற்றுப் பாடப்புத்தகங்கள் மீது கோபமுற்றுத் தூக்கி எறிந்து விட்டு இந்துத்துவத்தை மையப்படுத்திய இந்திய வரலாற்றை எழுதக் கட்டளையிட்டது. ஹரப்பா நாகரிகமும் வேத நாகரிகமும் ஒன்றுதான் என்று புதிய பாடப்புத்தகங்கள் பேசின. ஆரியர்கள் வெளியில் இருந்து வந்தவர்கள் அல்லர்; இந்தியாவின் பூர்வகுடிகள் தான் என்று வரலாறு திருத்தப்பட்டது. இந்தியாவின் முன்னேற்றத்துக்கு இஸ்லாமிய அரசுகளின் பங்களிப்பு, இஸ்லாமியப் பண்பாடு-குறிப்பாக கட்டடக் கலை, சூஃபிசம் ஆகியவை இந்தியப் பண்பாட்டில் செலுத்திய தாக்கம் போன்றவற்றின் மீது பாடப்புத்தக வெளிச்சம் விழாமல் பார்த்துக் கொள்ளப்பட்டது. கபீர்தாஸ் போன்ற ஞானிகள் பாடப் புத்தகங்களில் இருந்து நீக்கப்பட்டனர்.

இந்தியா முழுவதும் கல்வியாளர்கள் பெருங் குரலெடுத்து இதைக் கண்டித்தார்கள். பேசினார்கள்; எழுதினார்கள்.

ஆனால், இந்தப் புதிய பாடப்புத்தகங்களைக் கற்பித்த வகுப்பறைகளில் என்ன நடந்தது? ஆசிரியர் கள் சலனமின்றிக் கற்பித்தார்கள். மாணவர்கள் வழக்கம்போல மனப்பாடம் செய்து தேர்வு எழுதி னார்கள். இது வகுப்பறைப் பண்பாடு!

பாடப்புத்தகம் இந்தியப் பள்ளி வகுப்பறை களில் புகுந்த காலத்தில் இருந்தே (சுமார் 175 ஆண்டு களுக்கு முன்) பாடப்புத்தகங் களின் மீது ஆதிக்கம் செலுத்திக் கைப்பற்ற அரசும், மதமும், வர்த்தகமும் முனைந்து வந் திருக்கின்றன.

1947க்கு முன், ஐரோப்பியப் பண்பாடு ஏன் உயர்வானது? ஐரோப்பியர்கள் எப்படி இந்தி யர்களை விட உயர்வானவர் கள்? என்பதைத்தான் வரலாற்றுப் பாடப்புத்தகங்கள் மையப் படுத்திக் கற்பித்து வந்தன.

சுதந்திரத்திற்குப் பின்னும் ஐரோப்பிய நிழல்தான் நம் பாடப்புத்தகங்களின் மீது படிந்து கிடந்தது.

1961 இல் ஒரு திருப்பம் நிகழ்ந்தது. NCERT என்ற அமைப்பு தொடங்கப் பட்டது. ஆழ்ந்த கல்விப் புலமை கொண்ட ரோமிலா தாபர், ஆர்.எஸ்.சர்மா, சதீஸ் சந்திரா, பிபன் சந்திரா போன்றோர் NCERT அமைப்புக்காக வரலாற்றுப் பாடங்களை எழுதினார்கள். வரலாற்றில் ஐரோப்பியப் பார்வை தகர்ந்தது; அதே நேரம் வரலாற்றை இந்துத்துவ கோணத்தில் வடிவமைக்க வும் இடம் தரவில்லை. கல்வியாளர்களால் கொண்டாடப்பட்ட பாடப்புத்தகங்கள் அவை. அவைதாம் பி.ஜே.பி யின் கண்ணை உறுத்தி மூக்கில் புகை வரவழைத்துக் கொண்டிருந்தன.

பாடப்புத்தக உருவாக்கத்தில் முற்போக்குப் பார்வை உடையோர் இடம் பெறுவது அரிது. இடம் பெற்றாலும், சந்தேகக் கண்ணோடுதான் அரசு அவர்களைக் கண்காணிக்கிறது.

அறிவொளியின் முதல் பாடப்புத்தகத்தில் ‘பசி’ என்றொரு வார்த்தை இடம் பெற்றது. ஆரம்பத்தில் தொடங்கப்பட்ட மாவட்டங்களின் அறிவொளிப் புத்தகங்களில் ‘பசி’ இருந்தது. இதை ஆபத்தான வார்த்தையாகக் கருதி பின்னால் வந்த அறிவொளி மாவட்டங்களின் பாடப்புத்தகத்தில் இருந்து ‘பசி’யை நீக்கி விட்டார்கள்.

உழவுக்கும் தொழிலுக்கும்

வந்தனை செய்வோம் - வீணில்

உண்டு களித்திருப்போரை

நிந்தனை செய்வோம்

- என்ற பாரதி பாடலின் இரண்டாவது வரியை சென்ஸார் செய்து (கோபத்தைத் தூண்டுகிறதாம்!) எடுத்த அனுபவமும் அறிவொளியில் உண்டு.

சலித்துப் போய் நாங்கள் நல்லதங்காள் கதையைப் பாடமாக்கி வாசித்துக் கொண்டிருந்தோம். கதையின் இறுதியில் சில கேள்விகள் இருக்கும்- ‘நல்ல தங்காள் தற்கொலை செய்து கொண்டது சரியா?’ என்பதுபோல. அறிவொளியின் ரகசியக் கண்காணிப்பாளர்கள் இந்தக் கேள்விகளைக் கையில் வைத்துக்கொண்டு, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் உயரதிகாரிகளோடு கவலையோடு குசுகுசுத்து, தாங்க முடியாத மனப்பாரத்தோடு வீட்டுக்குப் பஸ்ஏறிப் போனதையும் பார்த்திருக்கிறோம்.

அறிவொளியில் நடந்த விவாதங்கள் அறிவொளிக்குள்ளேயே அடங்கிப் போய்விட்டன. வெளியில் கேட்கவில்லை.

இன்று வீடுவரை கேட்கிறது-சமச்சீர் கல்விப் பாடப்புத்தகம் குறித்த விவாதம்! பழைய பாடப் புத்தகமா? புதுப் பாடப் புத்தகமா?

சமச்சீர் கல்விப் பாடப்புத்தகங்கள் முழுமை யானவை அல்ல - ஆனால் பழைய பாடப் புத்தகங் களில் இருந்து நிச்சயமாய் முன்னேறியவை என நாம் புரிந்து கொண்டிருக்கிறோம். ‘மாணவரை மையப்படுத்திய பாடப் புத்தகம்’ என்ற கருத்து மெல்ல மெல்ல வலுப்பட்டு வருவதையும் சமச்சீர் பாடப்புத்தகங்களில் சில உணர்த்துகின்றன.

இதன் காரணமாக நாம் சமச்சீர் கல்விப் பாடப் புத்தகங்களை வரவேற்கிறோம்.

பணக்காரன், ஏழை என்ற எந்தப் பாகுபாடும் இன்றி அனைவரும் சமமாக அமர்ந்து, சமமான கல்வி வாய்ப்புகள் பெற்றுக் கற்கக் கூடிய ஒரு லட்சியத்தை நோக்கிய முதல் எட்டு என்பதாலும் சமச்சீர் கல்விப் பாடப் புத்தகங்கள் நம் விருப்பத் துக்குரியவை ஆயின.

கல்விக் கூடங்களுக்குள்ளும், கல்விக் கொள்கை களுக்குள்ளும் ஆபத்தான கைகளை எப்போதும் பார்க்கிறேன். குழந்தைகளை அடிக்கும் கைகளும், முன்னேறி வரும் பாடத்திட்டங்களை மறிக்கும் கைகளும் தாம் அவை. இரண்டுக்கும் அடிப் படையானது -கோபம்! அர்த்தமற்ற, பிற்போக் கான கோபம்!

ஏன் இந்தக் கோபம்? உயர்நீதி மன்றம் சமச்சீர் கல்விப் பாடப்புத்தகங்களுக்கு ஆதரவாகத் தீர்ப்பு வழங்கிய பிறகும் உச்ச நீதிமன்றத்துக்கு உந்தித் தள்ளும் கோபம் ஏன்? 200 கோடி போனாலும் போகட்டும் என்று அச்சடித்த பாடப் புத்தகங்களைக் குப்பையில் கொட்டத் துடிக்கும் ஆத்திரம் ஏன்?

அப்படி அந்தப் பாடங்களில் என்னதான் இருக்கிறது? தமிழக அரசு அமைத்த நிபுணர் குழுவின் அறிக்கையை வாசித்தேன். வேடிக்கை யான அறிக்கை! கணிதப்பாடப் புத்தகங்கள் குறித்து அறிக்கை எதிர்ப்பு எதுவும் தெரிவிக்கவில்லை. 7,8,9,10 - தமிழ்ப் பாடப்புத்தகங்களின் மொழி, உள்ளடக்கம், பயிற்சி, இலக்கணம் குறித்தெல்லாம் அறிக்கை எதுவும் பேசவில்லை. ஆட்சேபகர மானவை என்று இரு பாடங்களை அறிக்கை முன் வைக்கிறது. ஒன்று - முன்னாள் முதல்வர் மு.கருணா நிதி எழுதிய செம்மொழி வாழ்த்துப் பாடலுக்கு விளக்கம் எழுதப்பட்ட கட்டுரை; மற்றொன்று- நாடகக் கலை வரலாறு பற்றிய கட்டுரை. இக் கட்டுரையில் தமிழ் நாடகக்கலை வளர்ச்சியில் பங்காற்றியவர்கள் பெயர்ப்பட்டியலில் மு.கருணா நிதியின் பெயரும் இடம் பெற்றிருக்கிறது. ஒரு பெட்டிச் செய்தியும் ஆட்சேபணைக்குரியதாகக் காட்டப்பட்டுள்ளது. அப்பெட்டிச் செய்தியில் தமிழக முதல்வர் (பெயரில்லை) புலிக்குட்டிக்குப் பெயர் வைத்த தகவல் உள்ளது.

இவ்வளவுதான்! இதற்கு இத்தனை கோபமா? இதனை நம்ப முடிகிறதா?

காலங்காலமாக அறிவியல், சமூக அறிவியல், கணிதம் ஆகிய பாடங்களை ஆங்கிலத்தில் எழுதிப் பின்னர் தமிழாக்கம் செய்துகொள்ளும் நடைமுறை தான் இருந்தது. எஸ்.எஸ்.ராஜகோபாலன் போன்ற கல்வியாளர்களின் தொடர்ந்த வற்புறுத்தலால் தமிழில் பாடப்புத்தகங்கள் எழுதி, ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துக் கொள்ளும் முறை உருவானது. இன்னும் 85 சதவீதம் மாணவர்கள் தமிழ்வழியில் தான் கற்கிறார்கள் என்பதை மறந்து விடக் கூடாது. ஆங்கில மொழி பெயர்ப்பில் காணப்படும் சிறுசிறு குறைகளை - சில மணித்துளிகளில் சரி செய்யக்கூடியவற்றை - சகிக்க முடியாத பெரும் பிழைகளாக நிபுணர் குழு முன்வைக்கிறது. பழைய முறைப்படி பாடங்களை ஆங்கிலத் தில் எழுதிப் பிறகு தமிழாக்கம் செய்து கொள்ள வேண்டும் என்பது குழு வெளிப்படுத்தி யிருக்கும் ஆசை. ‘நகர்ப்புற, மேட்டுக் குடி மாணவர்களுக் காகப் பாடங்களை எழுதுவதுதானே நியாயம்?’ என்பது அறிக்கைக்குள் ஒளிந்திருக்கும் குதர்க்கம்.

சாரமற்ற இந்த அறிக்கையை நிராகரித்து வீதி களிலும், மேடைகளிலும் அர்த்தமுள்ள பேச்சு கேட்கிறது. நம்பிக்கை கொள்ளத்தக்க தொடக்கம்! போக வேண்டிய தூரம் இன்னும் கிடக்கிறது.

சமச்சீர் கல்விப்புத்தகங்களின் முன்னேற்றம் சமமாக இல்லை என்பதும் நாம் கவனிக்க வேண்டிய விசயம்.

மெட்ரிக்குலேசன் பள்ளிகளையும் மிரட்டும் நோக்கில் தயாரிக்கப்பட்ட 10 ஆம் வகுப்பு கணிதப் பாடத்தின் சுமை சற்று அதிகம். அறிவியல் பாடங்களின் வளர்ச்சி குறிப்பிட்டுச் சொல்லும்படி இருக்கிறது. அணுகுமுறைகள் மாறி இருக்கின்றன. சமூக அறிவியலிலும் முன்னேற்றமான அணுகுமுறையைக் காணமுடிகிறது.

எல்லாப் பாட நூல்களிலும் பயிற்சிகளும் மதிப்பிடும் முறைகளும் மாணவரை நோக்கித் திரும்பியிருக்கின்றன.

ஏழு, எட்டாம் வகுப்பு சமச்சீர் கல்வித் தமிழ்ப் பாடங்களை வாசித்த போது உற்சாகமும் கவலையும் கை கோர்த்துத்தான் வந்தன. வடிவ ரீதியாகத் தமிழ்ப்பாடப் புத்தகங்கள் மாணவரைக் கவரும் வகையில் உள்ளன. உள்ளடக்கம், மொழி நடை ஆகியவற்றில் குறிப்பிடத்தக்க மாற்றம் இல்லை.

மாணவர்களின் சிந்தனைத் திறனை வளர்க்க கிருபானந்த வாரியார் சொன்ன பகுத்தறிவுக்கு முரணான அபத்தமான கதை பாடமாக வைக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் விவாதத் திறனை வளர்க்க ஒரு பக்திப்பாடல் தரப்பட்டுள்ளது. பக்திப் பாடலை முன்வைத்து எந்த மாணவன் பேசுவான்? காலங்காலமாக பாடப்புத்தகம் சுமந்த இந்துத்துவப் பாரம் இன்னும் குறையவில்லையே எனக் கவலையுற்றேன்.

இன்னொரு பாரம் - பாடப் புத்தகத் தமிழ்! ஆம்! பாடப் புத்தகத்துக்கென்று ஒரு தமிழ் இருக்கிறது. உதாரணம் வேண்டுமா? ‘சிறந்த நாகரிகம்’ என்று நீங்கள் சொன்னால், அது சாதாத் தமிழ். -‘சீர்த்த நாகரிகம்’ என்றால் பாடப்புத்தகத் தமிழ். அதே போல் ‘கூர்த்த அறிவு’! - ‘பாரதியார் எட்டயபுரத்தில் பிறந்தார்’ என்று சாதாரணமாகப் பாடப் புத்தகத்தில் எழுதிவிடக்கூடாது. -’தோன்றிற் புகழொடு தோன்றுக’ என்ற வள்ளுவர் வாக்கிற்கு இணங்க, பாரினிற் சிறந்த தமிழ்நாட்டில், எட்டயபுரம் என்னும் சிறுநகரில், மகாகவி பாரதிப் பெருமகனார் தோன்றி அருளினார் ’ என்று எழுதினால் பாடப் புத்தகம் ஏற்றுக் கொள்ளும்.

இந்தத் தமிழின் ஆதிக்கம் புதிய சமச்சீர் கல்விப் பாடப் புத்தகங்களிலும் (7,8,9,10) தென்படுவது கவலைக்குரிய கூறு. குழந்தைகளைக் கவனத்தில் கொள்ளாமல் ஆசிரியர் விருப்பப்படி செயற்கை யான ஒரு முயற்சியில் எழுதுவதைத் தரம் என்று ஒரு சிலர் கருதுவதுதான் இதற்குக் காரணம்.

தீர்வு என்ன? ‘மாணவரை மையப்படுத்திய பாடப்புத்தகம் வேண்டும்’ என்ற குரல் தீர்க்க மடைய வேண்டும். வகுப்பறை தொடங்கி சமூக இயக்க மேடைகள் வரை ஒலிக்க வேண்டும்-தொய் வின்றி, தொடர்ச்சியாக!

சமச்சீர் கல்வி வலுவாகக் காலூன்றி இரண்டா வது எட்டு எடுத்து வைக்க இந்தக் குரல் மிக அவசியம்.

Labels

Coca Cola (1) Peak Oil (1) Permaculture (1) Power of Community (1) Renewable energy (1) Solar energy (1) SOPA (1) sustainable agriculture (1) அ.குமரேசன் (6) அங்காடிதெரு (1) அணு ஆற்றல் (2) அணுமின் (1) அண்ணா (4) அண்ணா நூலகம் (1) அதிர்ச்சி (1) அத்வானி (2) அந்நிய முதலீடு (2) அபிநயா (1) அப்துல் கலாம் (1) அப்பணசாமி (2) அமெரிக்கா (20) அம்பானி (1) அம்பேத்கர் (9) அரசியல் (177) அரசியல்.நிகழ்வுகள் (6) அரசு (14) அரசு மருத்துவமனை (1) அரசு விடுதி மாணவர்கள் (1) அரவான் (1) அருந்ததியர் (1) அர்ஜெண்டினா (1) அலசல் (1) அவலம் (19) அழகு (1) அறிமுகம் (1) அனுபவம் (28) அன்னா ஹசாரே (1) அஜயன் பாலா (1) ஆ.ராசா (1) ஆணையம் (2) ஆதவன் தீட்சண்யா (3) ஆப்கானிஸ்தான் (1) ஆப்பிரிக்கா (2) ஆர்.மீனா (1) ஆர்எஸ்எஸ் (2) ஆவணப்படம் (3) ஆனந்தன் (2) இ.எம்.ஜோசப் (1) இ.பா.சிந்தன் (22) இட ஓதுக்கீடு (3) இடஒதுக்கீடு (1) இடதுசாரிகள் (4) இணையம் (2) இதழ்கள் (6) இந்தியா (69) இந்துத்துவா (8) இந்துஜா (1) இமு (2) இமு டிச11 (5) இமு நவமபர் 2011 (6) இயக்கம் (7) இயக்குனர் ஷங்கர் (1) இரா.சிந்தன் (5) இரா.செழியன் (2) இரா.நடராஜன் (3) இராம.கோபாலன் (1) இல.சண்முகசுந்தரம் (2) இலக்கியம் (38) இலங்கை (6) இலங்கைத் தமிழர் (4) இலவசக் கல்வி (1) இலவசங்கள் (1) இளவரசன் கொலை (1) இளைஞர் முழக்கம் (11) இஷ்ரத் (2) இஸ்ரேல் ஆக்கிரமிப்பு (1) இஸ்லாம் (3) ஈராக் (1) ஈரான் (2) உ.வாசுகி (1) உச்ச நீதிமன்றம் (1) உணவு நெருக்கடி (2) உதயசங்கர் (1) உத்தப்புரம் (1) உயர்கல்வி (2) உரையாடல்கள் (2) உலக சினிமா (4) உலகமயம் (5) உலகம் (46) உளவியல் (1) உள்ளாட்சி (1) உள்ளாட்சித் தேர்தல் (1) ஊடகங்கள் (14) ஊடகம் (8) ஊழல் (30) எடியூரப்பா (1) எம்.எப்.ஹூசேன் (1) எம்.சிவக்குமார் (2) எரிசக்தி (1) எல்.கே.ஜி (1) என்.ஜி.ஓ (1) என்கவுண்டர் (1) எஸ். பாலா (1) எஸ்.கண்ணன் (1) எஸ்.கருணா (3) எஸ்.பி.ராஜேந்திரன் (3) எஸ்.வி.வேணுகோபாலன் (2) ஏகாதிபத்தியம் (13) ஏமன் (1) ஒபாமா (4) ஓம்பிரகாஷ் வால்மீகி (1) ஓளிப்பதிவு (1) ஃபாக்ஸ்கான் (1) கச்சத் தீவு (1) கட்டுரை (51) கட்டுரைகள் (2) கணிணி (2) கணினி தொழில் நுட்பம் (1) கமல்ஹாசன் (1) கம்யூனிசம் (12) கருணாநிதி (11) கருத்து சுதந்திரம் (1) கருத்துரிமை (3) கலைஞர் (6) கல்வி (14) கவிதை (21) கவிதைகள் (1) கறுப்புப்பணம் (3) கனிமொழி (2) காங்கிரஸ் (10) காதல் (2) கால்பந்து (1) காவல்துறை (4) காஷ்மீர் (1) கி.பார்த்திபராஜா (1) கிங்பிஷர் (1) கியூபா (4) கிரீஸ் (1) குடும்பம் (1) குட்டி ரேவதி (1) குப்பன் சுப்பன் (1) குலாத்தி (1) குழந்தைகள் (9) குழந்தைகள் கடத்தல் (1) குஜராத் கலவரம் (1) குஜராத் படுகொலைகள் (1) கூகிள் அந்தரங்கம் (1) கூடங்குளம் (2) கே.சாமுவேல்ராஜ் (1) கே.பாலமுருகன் (1) கேள்விகள் (1) கைப்பற்றுவோம் போராட்டம் (1) கோவில் (1) ச.தமிழ்ச்செல்வன் (1) ச.மாடசாமி (1) சக்திஜோதி (1) சங்கமம் (1) சசிகலா (1) சச்சின் (1) சட்டசபை (2) சட்டம் (4) சத்யஜித் ரே (1) சந்திரகாந்தன் (1) சமச்சீர் கல்வி (4) சமவூதியம் (1) சமூக நீதி (2) சமூக வலைத்தளம் (1) சமூகப் பாதுகாப்பு (2) சமூகம் (177) சம்பு (1) சரத் பவார் (1) சர்வதேச பெண்கள் தினம் (1) சல்மான் ருஷ்டி (1) சா.கந்தசாமி (2) சா.செயக்குமார் (1) சாகித்திய அகாதமி விருது (1) சாக்லேட் (1) சாதீயம் (4) சாரா விஜி (2) சாலிம் அலி (1) சி.பி.எம் (9) சிக்கிம் (1) சிந்தனை (5) சிபி (1) சிராஜுதீன் (1) சில்லரை வர்த்தகம் (4) சிறப்பு பொருளாதார மண்டலங்கள் (1) சிறுகதை (12) சினிமா (52) சினிமா செய்திகள் (4) சினிமாச் செய்திகள் (4) சீத்தாராம் யெச்சூரி (2) சு.பொ.அகத்தியலிங்கம் (2) சு.வெங்கடேசன் (1) சுகாதாரம் (1) சுதிர் ரா (1) சுயமரியாதைத் திருமணம் (1) சுவாரசியம் (1) சுற்றுப்புறச் சூழல் (3) சூர்யா (1) செம்மலர் (4) செம்மலர் அக் 2011 (4) செய்திகள் (112) சென்னை (1) சோவியத் (1) சோஷலிசம் (1) டெல்லி (2) டேம் 999 (1) த.தமிழரசி (1) தகவல் உரிமை (1) தகவல் திருட்டு (2) தண்ணீர் (3) தமிழக மீனவர்கள் (1) தமிழகம் (66) தமிழர் (1) தமிழ்ச் சினிமா (1) தமிழ்நதி (1) தமுஎகச (4) தலித் (21) தற்கொலை (1) தனியார்மயம் (4) தனுஷ் (1) தி.க (2) திமுக (1) திரிணாமுல் (1) திருப்பூர் (2) திருமணம் (2) திரைக்குப் பின்னால் (2) திரைத்துறை (1) திரைப்பட விழா (1) திரைப்படம் (4) தினகரன் (1) தினமணி (3) தீக்கதிர் (9) தீண்டாமை (22) தீண்டாமையின் அடையாளங்கள் (1) தீபாவளி (1) தேசியச் செய்திகள் (4) தேர்தல் (4) தொண்டு நிறுவனங்கள் (1) தொலைக்காட்சி (2) தொழிலாளர் (6) ந.பெரியசாமி (1) நகர்ப்புற விவசாயம் (1) நகைச்சுவை (1) நக்கீரன் (1) நதிம் சயித் (1) நந்தலாலா (1) நந்தன் (1) நரேந்திர மோடி (6) நலத்திட்டங்கள் (2) நவம்பர் புரட்சி (1) நாடகம் (1) நாடாளுமன்றத் தேர்தல் 2014 (2) நாணய மதிப்பு (1) நாறும்பூநாதன் (1) நிகழ்வுகள் (154) நிலப்பிரபுத்துவம் (1) நிலமோசடி (1) நீதித்துறை (2) நீலவேந்தன் (2) நுகர்வுக் கலாச்சாரம் (2) நூல் அறிமுகம் (12) நூல் வெளியீடுகள் (1) நெல்சன் மண்டேலா (1) நேட்டோ (2) நையாண்டி (26) நையாண்டி் (14) ப.சிதம்பரம் (3) பசுபதி (1) படுகொலை (3) படைப்புகள் (2) பட்ஜெட் (1) பணவீக்கம் (2) பதிவர் வட்டம் (3) பதிவர்வட்டம் (1) பதிவுலகம் (1) பரிந்துரைகள் (5) பழங்குடி (1) பள்ளிக்கூடம் (1) பறவைகள் (1) பன்னாட்டுக் கம்பெனிகள் (3) பா.ஜ.க (3) பாகிஸ்தான் (2) பாடல் (5) பாதல் சர்க்கார் (1) பாதுகாப்பு (1) பாரதி (2) பாலபாரதி (1) பாலஸ்தீனம் (1) பாலியல் வன்முறை (6) பாலு மகேந்திரா (1) பால் சமத்துவம் (1) பாஜக (1) பி.சுகந்தி (1) பி.ராமமூர்த்தி (1) பிடல் காஸ்ட்ரோ (3) பிரணாப் முகர்ஜி (1) பிரபாத் பட்நாயக் (3) பிரளயன் (2) பிரிட்டன் (1) பிர்தவ்ஸ் ராஜகுமாரன் (1) பிளின் (1) பு.பெ.நவமபர் 2011 (1) புகைப்படங்கள் (1) புதிய பரிதி (2) புது விசை (12) புதுமை (1) புத்தக அறிமுகம் (2) புத்தகக் கண்காட்சிகள் (2) புத்தகம் (18) புத்தகம் பேசுது (17) புத்தகம் பேசுது நவம்பர் 2011 (8) புத்தகாலயம் (2) புத்தாண்டு (1) புபே (2) புபே டிச11 (8) புரட்சி (2) புவி (1) புவி டிச11 (5) புவி நவ 2011 (7) புனைவு (1) புஷ் (1) பெட்ரோல் (7) பெண் (11) பெண் விடுதலை (1) பெண்குழந்தை (1) பெண்ணியம் (9) பெண்ணெழுத்து (1) பெரியார் (2) பெருமுதலாளிகள் (7) பேட்டி (2) பேரா.சிவசுப்பிரமணியன் (2) பேஸ்புக் (1) பொருளாதார நெருக்கடி (2) பொருளாதாரம் (24) போக்குவரத்து (1) போராட்டம் (15) போலீஸ் தாக்குதல் (3) ப்ரிசம் (4) ப்ரிசம் - தகவல் திருட்டு (7) ப்ரியா தம்பி (1) மக்களுக்கான மருத்துவம் (1) மக்கள் நலப்பணியாளர்கள் (2) மக்கானா (1) மத அடிப்படை வாதம் (1) மதவெறி (3) மதுசூதனன் (1) மம்தா (3) மம்முட்டி (1) மரபணு (1) மலாலாய் சோயா (1) மவோயிஸ்டுகள் (1) மன்மதன் அம்பு (1) மன்மோகன்சிங் (10) மா ற்று (1) மாட்டுக்கறி (1) மாதர் சங்கம் (1) மாதவராஜ் (2) மாவோ (1) மாற்ற (1) மாற்று (223) மின்கட்டணம் (1) மின்சாரம் (1) மீள்பார்வை (2) முதலாளி (1) முதலாளித்துவம் (11) முத்தமாக மாறேன் (1) முத்துக்கண்ணன் (1) முல்லைப் பெரியாறு (7) முறைகேடுகள் (5) மெகாசீரியல் (1) மே.வங்க அரசு (1) மே.வங்கம் (1) மேதினம் (1) மேற்கு வங்கம் (1) மொக்கை (1) மொழி (2) மொழிபெயர்ப்பு (1) மோசடி (1) மோடி (3) மோனிகா (1) யுத்தம் (2) ரத யாத்திரை (1) ரமேஷ் பாபு (2) ராகுல் காந்தி (2) ராடியா (2) ராஜ பக்‌ஷே (1) ரிலையன்ஸ் (1) ருமேனியா (1) லட்சுமணப்பெருமாள் (2) லெனின் (2) லோக்பால் (5) வசந்த பாலன் (1) வண்ணக்கதிர் (1) வரலாறு (19) வலைப்பூக்கள் (1) வழக்கு விசாரணை (1) வாசிப்பு (5) வாச்சாத்தி (1) வால் ஸ்டிரிட் (3) வால்மார்ட் (1) வால்ஸ்டிரிட் போராட்டம் (2) வாழ்க்கை (4) வானியல் (2) விக்கிபீடியா (1) விக்கிலீகஸ் (1) விக்கிலீக்ஸ் (7) விஞ்ஞானம் (2) விமர்சனம் (10) விலையேற்றம் (2) விலைவாசி (11) விலைவாசி உயர்வு (2) விவாதங்கள் (1) விவாதம் (9) விளம்பரம் (1) விளையாட்டு (4) வினவு (1) விஜய் (2) விஜய் மல்லையா (1) வீட்டுவசதி வாரியம் (1) வீரமணி (2) வெண்மணி (2) வெள்ளம் (2) வெனிசுவெல்லா (1) வேலையின்மை (2) வோடாபோன் (1) ஜப்பான் நெருக்கடி (2) ஜாக்கிசான் (1) ஜாதி (1) ஜாபர் பனாகி (1) ஜூலியன் அசாங்க (1) ஜெயலலிதா (9) ஜோதிடம் (1) ஸ்டீவ் ஜாப்ஸ் (1) ஸ்பீல்பர்க் (2) ஸ்பெக்ட்ரம் (6)