ஆதிகாலத்தில் மனிதன் மரங்களில் - குகைகளில் தங்கி, காடுமேடுகளில் சுற்றி காய்கனிகளைப் பறித்து, பிராணிகளை வேட்டையாடி வாழ்ந்து வந்தான். அதற்குப்பின், நெருப்பை உண்டாக்கவும் பயன்படுத்தவும் ஆரம்பித்து, ஆறு - ஏரிகள் அருகில் குடிசைகளை -குடும்பங்களை அமைக்கவும் விவசாயத்தின் மூலம் உணவுப் பண்டங்களை உற்பத்தி செய்யவும் ஆரம்பித்தான்.
பண்டமாற்று முறை:
தனக்கும் தனது குடும்பத்தினருக்கும் உள்ள தேவைகளை தனிப்பட்ட ஒரு மனிதனால் முழுமையாக பூர்த்திசெய்ய முடியாது. அதனால் தான் உற்பத்தி செய்யும் பண்டத்துக்கு ஈடாக தனக்குத் தேவையான மற்றொரு பொருளை உண்டாக்குபவனிடம் சென்று தனது பொருளைக் கொடுத்து, தனது தேவைக்கான பொருளை அவனிடமிருந்து பெறும் "பண்டம் மாற்றும் முறை' உருவானது.
பண்டமாற்று முறையில், கொடுப்பது வாங்குவது இரண்டும் ஒரே தடவையில் நடைபெற்று முடிந்துவிடும். ஒரு படி நெல்லுக்குப் பதில் மூன்று முட்டைகள், பத்து கோழிகளுக்கு ஈடாக ஒரு ஆடு, பதினைந்து மாடுகளுக்குப் பதில் ஒரு குதிரை என நேரடியாக இருவருக்குள் பண்டமாற்றுமுறை நடைபெற்றது.
உப்பை மட்டும் தயாரிக்கிற ஒருவன் அதை எடுத்துக்கொண்டு ஊர் ஊராகச் சுற்றி வரவேண்டும்; வாழைத் தோட்டத்தில் பாடுபட்டு, விளையும் வாழைப் பழங்களை உடனடியாகப் பண்டமாற்று முறையில் மாற்றவில்லை என்றால், பழங்கள் விரைவில் கெட்டுவிடக் கூடும்.
நேரடியான பண்டமாற்று முறையில் உள்ள சங்கடங்களைச் சமாளிக்க, உப்பு, தேயிலை, ஆடு-மாடுகள், புகையிலை, பாதாம் பருப்பு போன்று "பொதுவாக' எல்லோருக்கும் தேவைப்படும் பொருள்களில் ஒன்றை மாற்றி இன்னொன்றைப் பெற்றுக்கொள்ளக்கூடிய முறை பழக்கத்தில் வந்தது.
அடுத்து இடையில், ஒவ்வொருவருக்கும் தேவைப்படும் பொருள்களை எல்லாம் நேர்மையான முறையில் மதிப்பீடு செய்து அதற்கான மைய அடையாளத்தை வைத்துக்கொண்டு, உற்பத்தியான பொருள்களை அவற்றுக்கான மதிப்பீட்டு அடையாளங்களைத் தந்து - தேவையானவற்றை வாங்கி - மற்றவர்களுக்குத் தரும் முறையில், உற்பத்தி செய்பவனுக்கும் வாங்குபவனுக்கும் இடையில் பொதுவான மதிப்பீடும் ஒரு ஏற்பாடாக வந்தது. பொதுவான இந்த மதிப்பீட்டு அடையாளம்தான் "பணம்' என்பது.
முதலில் "பொன்' கட்டிகளை உருவாக்கி, அதன் கனத்தை வைத்து எல்லாவற்றயும் வாங்க - விற்க முடியும் என்ற முறை வந்தது. பிறகு வட்ட வடிவில் காசுகள் தங்கம், வெள்ளி ஆகியவற்றில் வெளிவந்தன. அவற்றை நேர்மையாக நடத்த அந்தக் காசுகளில் அரசாங்க முத்திரை பதிக்கப்பட்டது. நாளடைவில் மன்னரின் உருவத்தைப் பதித்து பொற்காசு, வெள்ளிக்காசுகள் போடப்பட்டன.
உலோகங்களில் காசுகள் வருவது 7,000 ஆண்டுகளுக்கு முன்பு - அதாவது கி.மு. 5000 காலத்தில் பழக்கத்துக்கு வந்துவிட்டது. குறைவான மதிப்பீடுகளுக்காக வெண்கலம், இரும்பு ஆகியவற்றிலும் காசுகள் வந்தன. பொன்-வெள்ளி ஆகியவற்றால் ஆன காசுகளுக்கு இருந்த வரவேற்பு மற்ற உலோகங்களின் காசுகளுக்கு இயல்பாகக் கிடைக்காது.
இந்திய ரூபாய் வரலாறு
ஆப்கானிஸ்தானத்தைச் சேர்ந்த ஷெர்ஷா சூரி, மொகலாய மன்னர் பாபர் படையில் பங்கு பெற்று, அவருக்குப் பிறகு வங்காளத்தில் தளபதியாகப் பணிபுரிந்தார்; பாபருக்குப் பிறகு ஹமாயூன் காலத்தில் வங்காளம், பிகார் பகுதிகளை வென்று தில்லியில் 1540-45 வரை ஐந்தாண்டுக் காலம் ஆட்சியில் இருந்தார். அவருடைய ஆட்சியில் "ருப்யா' என்ற வெள்ளிக் காசு வெளியிடப்பட்டது. அந்தப் பெயரில் தொடர்ந்து ரூபாய் நாணயங்கள் வெளிவந்தன, ஆங்கிலேயர் காலத்திலும் அவர்களின் சக்ரவர்த்தி - சக்ரவர்த்தினி உருவங்கள் பொறிக்கப்பட்ட ரூபாய், காசுகள் வெளிவந்தன.
காகிதப் பணம்
பொன்-வெள்ளி உள்பட பல உலோகங்களை வைத்து காசுகள் இருந்த காலத்தில், நாட்டில் பெருமளவில் வணிகம் பெருகியதால் வணிகர்களிடம் குவிகிற பணம் தூக்க முடியாதபடி கனமானது. அதிலும் சீன நாட்டில் நீண்ட தூரங்களுக்குப் பயணம் செய்யும் வியாபாரிகளுக்கு உதவியாக அவர்களுடைய சாமான்களை - பணத்தைப் பாதுகாத்துத் தரும் நிறுவனங்கள், வணிகர்களின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்தி காகித அறிவிப்புகளைத் தந்தார்கள். அந்த அறிவிப்புகள் கி.பி. 740 முதல் "காகிதப் பணமாக' மாறியது. தனிப்பட்டவர்கள் தரும் காகித அறிவிப்பை மாற்றி, அரசாங்கமே காகிதப் பணத்தை வெளியிட ஆரம்பித்தது.
மேலை நாடுகளில், இங்கிலாந்தில் 1725, பிரான்சில் 1794-1803, அமெரிக்காவில் 1861-66, காலங்களில் காகிதப் பணம் முதலில் வங்கிகள் மூலமாக - பிறகு சட்டபூர்வமாக அரசாங்க வங்கியின் பொறுப்பாக ஆனது. அதனால் காகிதப் பணம் ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு வகையில் வளர்ச்சியடைந்தது.
இந்தியாவில் ஆங்கிலேயர் ஆட்சி துவங்கியதும் 1867-ஆம் ஆண்டில் 10 ரூபாய் நோட்டு, 1900-இல் 100 ருபாய் நோட்டு வெளிவந்தன. ஆனால், 1947 விடுதலை பெறும்வரை இந்தியாவில் 565 தனிப்பட்ட மன்னர்களின் அரசுகள் இருந்தன. அவைகளில் ஒவ்வொரு அரசிலும் தனிப்பட்ட காசுகள் வழக்கத்தில் இருந்தன.
பொன்-வெள்ளிக் காசுகள் இருந்த காலத்தில் அதிலுள்ள பொன், வெள்ளி ஆகியவற்றின் மதிப்பில் மக்களுக்கு நம்பிக்கை இருந்தது. ஆனால், 100 ரூபாய் நோட்டு என்றால் அதிலுள்ள காகிதத்தின் மதிப்பு ஒரு காசுகூட இருக்காது. எனினும் அதைத் தயாரிக்கும் அரசாங்கம் தரும் உறுதிப்பாட்டில் மக்களுக்கு நம்பிக்கை இருக்க வேண்டும்.
100 ரூபாய் நோட்டை எடுத்துப் பாருங்கள். ரூபாய் நோட்டுகளை மத்திய அரசாங்கம் தரும் உறுதிப்பாட்டுடன் ரிசர்வ் வங்கியால் தயாரிக்கப்படுகிறது. அதில் "இந்த நோட்டைக் கொண்டு வருபவருக்கு நூறு ரூபாய் தரப்படும் என உறுதி கூறுகிறேன்' என்று ரிசர்வ் வங்கி கவர்னர் கையெழுத்திட்ட உரை ஆங்கிலத்தில் இருக்கும். நோட்டின் ஒரு பக்கத்தில் 15 இந்திய மொழிகளில் "நூறு ரூபாய்' என எழுதப்பட்டிருக்கும். ஆக, காகிதப் பணம் என்பது அரசாங்கம் தரும் உறுதிப்பாட்டின்மீதுதான் - மக்கள் வைக்கும் நம்பிக்கைகையில்தான் - நிலைபெற்றிருக்கிறது.
தொடரும் ...
கட்டுரையாளர், இந்திரா காலத்திலிருந்து தீவிரமாக அமலாக்கப்பட்ட உலகமயம், தாராளமயக் கொள்கைகளை குறித்து இக்கட்டுரையில் குறிப்பிட தவறுகிறார். அதுவே, ஏதோ இது இந்திராவின் தவறால் நடந்தது போன்ற தோற்றத்தை ஏற்படுத்துகிறது.
ReplyDelete