தர்மபுரி நாயக்கன் கொட்டாயைச் சேர்ந்த இளவரசனின் மரணம் குறித்து சில நேர்வுகளை திரும்பிப் பார்ப்போம்.
இளவரசன் மரணம் குறித்து கிடைத்த புகைப்படம் ... |
நேர்வு 1: முதலில் அந்தக் காதலர்கள் இருவரும் திருமணம் செய்துகொண்டார்கள். இந்தக் காதலை மையமாக வைத்து அவமானப்படுத்துதல் காரணமாக
திவ்யாவின் தந்தை நாகராஜ் தற்கொலை செய்து கொண்டார். இந்தத் தற்கொலைக்கு காரணம் சாதி எண்ணமும், சுற்றத்தாரின் விமர்சனமும் தான் ஆனால் இதற்கு காதல் காரணமாக்கப்பட்டது. தற்கொலைக்கு காரணம் சாதிய எண்ணமா? காதலா?
நேர்வு 2: சாதி ஆதிக்கவாதிகள், இதனை வாய்ப்பாக பயன்படுத்திக் கொண்டு, தாழ்த்தப்பட்டவர்கள் வாழும் 3 கிராமங்களை சூரையாடினார்கள். இந்தச் செய்தியை “காதலால் நேர்ந்த கலவரம்” என்றார்கள். உதாரணமாக 14-11-2012 தேதியிட்டஒரு இதழில் 'காதல் தீயில் கருகிய கிராமங்கள்’ என்ற தலைப்பில் செய்திவெளியிட்டது. அது காதல்தீயா? சாதித் தீயா?
நேர்வு 3: திவ்யாவின் தாயார் தேன்மொழி (வயது 44) சென்னை ஐகோர்ட்டில்
ஆள்கொணர்வு மனு ஒன்றை தாக்கல் செய்து இருந்தார். கடந்த
மார்ச் 27–ந் தேதி இந்த வழக்கை நீதிபதிகள் கே.என்.பாஷா, பி.தேவதாஸ்
ஆகியோர் விசாரித்தனர். ‘நான் விரும்பித்தான் இளவர சனுடன்
சென்றேன். என்னை யாரும் துன்புறுத்தவில்லை’ என்று திவ்யா கூறினார். பின் என் தந்தையும் இறந்துவிட்ட நிலையில், என் அம்மாவையும் இழக்க விரும்பவில்லை. நாம் என் அம்மாவுடன் வாழ்கிறேன் என்று திவ்யா குறிப்பிட்டார். அதாவது அம்மாவையும் தற்கொலைக்கு தள்ளிவிடுவார்களோ என்ற அச்சம் அவரிடமிருந்து வெளியானது.
நேர்வு 4: திவ்யா தனது நிலையை வெளிப்படையாகச் சொல்லியதன் மூலம், சாதி ஆதிக்கத்தின் குட்டு உடைந்தது. அதே சமயம், திவ்யா தனது நிலையில் உறுதியாக இருப்பதாக மற்றொரு பேட்டியளித்தார். - பின் தற்போது இளவரசன் உடல் ரயில் பாதையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்த மரணத்தை ‘காதல் தோல்வியால் நேர்ந்தது என்போமா?” அல்லது ‘காதலை நிராகரிக்கும் மிருகச் சமூகம் செய்த கொலை என்போமா?
இது கொலைதான் ...
சட்டத்தின் பார்வையில் இது கொலையா அல்லது தற்கொலையா? என்று விசாரிக்க வேண்டும். ஆனால், சாதி வெறி ஊறிய சமூகத்தை அறிந்தவர்களுக்கு காரணம் தெளிவாகவே புலப்படுகிறது. திவ்யாவின் தந்தையின் மரணமாக இருந்தாலும், தற்போது இளவரசன் மரணமாக இருந்தாலும் - அதற்கு பிற்போக்கு, சாதியச் சிந்தனைகளும், அதனை வலியுறுத்தும் ஆதிக்கத் தனமும்தான் காரணம்.
நேரடியாகவும், மறைமுகமாகவும் - சாதிக்கு வக்காலத்து வாங்கிய எவரும் இதுகுறித்து தன் உள்மனத்தை கேள்விகேட்டுக் கொள்ளுங்கள். பொதுவாக, எல்லாக் காதலர்களிடத்திலும், இந்த சாதிய வாதிகள் ஒரே நடைமுறையைத்தான் கையாள்கிறார்கள். நாடறிந்து நடந்த இந்தக் காதல் கதையில் கூட - சாதியின் பின்னணி குறைவாகத்தான் விவாதிக்கப்பட்டது. மாறாக, காதலால் கொலை, காதல் பிரிவு, காதல் தோல்வி, காதல் தற்கொலை என்றுதான் வியாக்கியானங்கள் முன் வைக்கப்படுகின்றன.
இரண்டு தனி மனிதர்களின் வாழ்க்கையில் - மூக்கை நுழைத்து, தற்கொலையைத் தூண்டி கலவரத்தை உண்டாக்கி, வாழ்க்கையைச் சிதைத்த ‘சாதி ஆதிக்கம்’ - கள்ள மெளனத்தோடு தன் அடுத்த வேலையைப் பார்க்கிறது. பொதுவானவர்கள் காதலிச்சா இப்டித்தான், 100த்துல 90 காதலர்கள் பிரிந்தே வாழ்கிறார்கள் என்று வாயை மென்றுகொண்டிருக்கிறார்கள்.
சாதி ஆதிக்கவாதிகள் திட்டமிட்டு செயல்படுகிறார்கள். அதனை எதிர்த்த மனிதர்களோ மெளனம் காக்கிறார்கள். மெளனம் சம்மதம் என்பது பெண் பார்க்கும் படலத்துக்கு எத்தனை பொறுத்தம் என்பது தெரியாது. ஆனால், இப்படியான மரணங்களை மெளனமாகக் கடப்பது ஆமோதித்து வரவேற்பதுதான். சாதிக்கு எதிரான மெளம் உடைபட வேண்டும். அதுவரை இது இந்திய சாதி ஆதிக்க சமூகம் செய்த மற்றுமொரு கொலைதான்.
சாதியம் தன் கோர முகத்தை இன்னமும் உயிர்ப்புடன் வைத்துள்ளது. இங்கு சிக்கலே, சாதி மறுப்பாளர்களின் மவுனங்களும், கையாலாகாத்தனமுமே. தருமபுரி சம்பவம் நடந்த பின் பாதிக்கப்பட்டவர்களின் இருப்பை உறுதி செய்ய நாம் என்ன செய்தோம்? சாதி வெறியர்கள் மீது மட்டும் பழியைப் போடுவதன் மூலம் நமது குற்றவுணர்வை மறைக்க முனைவது முறையல்ல. இங்கு சாதி மறுப்பு பேசும் நாம், நமது வாழ்வில் சாதிகளை முற்றாக துறந்து தான் விட்டோமா? அல்லது குறைந்தது சாதி மறுத்து மணந்தோரின் பாதுகாப்புக்கும், நல்வாழ்வுக்கும் எத்தகைய உத்தரவாதங்களை எம்மால் அளிக்க முடிந்தது. இங்கு குற்றவாளிகள் தமது வெறித்தனத்தை பரப்பிக் கொண்டே உள்ளனர், அவர்களை நம்மால் ஒழிக்கத் தான் முடிந்ததா? அடுத்து இன்னொரு இளவரசன் இறக்கும் வரை, திவ்யா அபலையாக்கப் படும் வரை, வாய் மூடி மவுனிகளாக கிடப்போம், அல்லது எங்காவது புலம்பித் தீர்த்து விட்டு நாலாம் நாள் அவரவர் சோழியைப் பார்க்கப் போவோம். முடிவு???
ReplyDelete