தற்செயலாக
நேற்று கிஷோர் சாந்தாபாய் காலே ஞாபகம் வந்தது. அவரைப் பற்றிய ஏதேனும்
செய்திகள் இருக்குமா, வேறு புத்தகங்கள் எழுதியிருக்கிறாரா என்று
இணயதளத்தில் தேடிப் பார்த்தபோது அதிர்ச்சியாயிருந்தது. 2007 பிப்ரவரியில்
கிஷோர் சாந்தாபாய் ஒரு சாலை விபத்தில் இறந்து விட்டார் என்ற ஒரு செய்தி
இருந்தது. அதுவும் 37 வயதில். பெரும் ஏமாற்றமாகவும், வெறுமையாகவும்
இருந்தது. அந்த மனிதர் எங்கோ ஒரு மூலையில் இருக்கிறார் என்னும் நினைவு
இப்போது தாக்கப்பட்டுவிட்டது. அவஸ்தையாய் இருக்கிறது.
அவரது குலாத்தி படித்து இரண்டு வருடங்களுக்கு மேலிருக்கும். முகப்பு அட்டையில் லேசாய் வளர்ந்திருந்த முடியுடன் வெறித்துப் பார்க்கும் அந்தச் சிறுவனும், குலாத்தி என்ற பேருக்குக் கீழே தந்தையற்றவன் என்கிற வார்த்தையும் யாரையும் பற்றிக் கொள்ளும். எழுதிய கிஷோர் சாந்தாபாய் காலே என்பவரின் சுயசரிதையே இந்த புத்தகம் என்பது பின்பக்க அட்டையில் தெரிந்தது. அந்த புத்தகம் வாங்கியிருந்த ஏராளமான விருதுகள் பெரிதாக எதையும் எதிர்பார்க்கச் செய்யவில்லை என்பதையும் குறிப்பிட வேண்டும்.
படிக்க ஆரம்பித்த இரவு நேரம் அந்த புத்தகத்திற்குள் அப்படியே இழுத்துவிடக் கூடியதாயிருந்தது.
மங்கலான வெளிச்சத்தில், ஆண்கள் நிழலுருவங்களாய்த் தெரிய ஆரம்பிக்கிறார்கள். மேடையில் குலாத்தி இனத்தைச் சேர்ந்த இளம்பெண் தமாஷா நடனமாடிக்கொண்டு இருக்கிறாள். காசுகள் அவளை நோக்கி பறக்கின்றன. பொறுக்கி எடுத்துக் கொண்டே ஆடுகிறாள். மேடைக்குப் பின்னே அவளது குழந்தை பால் குடிக்கக் கதறிக் கொண்டு இருக்கிறது. ரணங்களை விழுங்கிய சதங்கைகள் அதிர அங்கே அந்தப் பெண் ஆடிக்கொண்டே இருக்கிறாள். 'சபாஷ், 'ஆஹா'வென ஆண்கள் அவளது உடலின் அசைவுகளுக்கு ஜதி சேர்த்துக் கொண்டிருக்கிறார்கள். குழந்தைக்கோ முகமெல்லாம் வெடிக்க, அடிவயிற்றிலிருந்து அதுவே கடைசிக் குரல் என முறுக்கித் தெறிக்கிறது. அது போல குழந்தை ஒன்றே இந்தப் புத்தகத்தின் எழுதியவனாயிருக்க, அந்த உயிரின் அழுகை எழுத்துக்களாய், வாழ்வின் வரிகளாய், வாசிக்கிறவனுக்குள் படருகின்றன. இரவின் உலகத்தில் எழுதியவனின் பயணங்கள் ஒற்றைப் பறவையின் குரலோடு நீள்கின்றன.
ஒரு காலத்தில் கழைக்கூத்தாடிகளாய் இருந்து, பிறகு இப்படி மேடைகளுக்கு ஆடவந்து விடுகின்ற குலாத்திச் சமூகத்தில் பிறந்த ஒருவன் எம்.பி.பி.எஸ் படித்து முடிக்கிறான் என்பதுதான் கதை. நிச்சயமற்ற உலகத்தில் அந்த குலாத்திப் பெண்கள் வாழ்கிற துயரங்கள் தொண்டைக் குழிக்குள் அடைகின்றன. ஆட்டத்தைப் பார்க்க வந்த வசதியான, செல்வாக்கு மிக்க ஆடவன் தனக்குப் பிடித்தவளை காசு கொடுத்து அழைத்துச் சென்று விடுகிறான். கொஞ்ச மாதங்கள் அல்லது, சில வருடங்கள் கூட வைத்திருக்கிறான். அந்த குலாத்திப் பெண் ஆடுவதை நிறுத்தி விட்டு அவனோடு ஐக்யமாகி விடுகிறாள். அவன் எப்படிப்பட்டவனாய் இருந்தாலும் ஊர் ஊராய் அலைய வேண்டியிராத அந்த வாழ்வில் அவளுக்கு ஒரு நிம்மதி இருக்கிறது. அந்த ஆண் அவளை கைவிடுகிறான். அனேகமாக கைக்குழந்தையோடுதான். சாராயம் குடித்து, மாமிச ருசி பழகிப்போன குலாத்தி குடும்பத்தலைவன் அவளை மீண்டும் தமாஷா நடனமாட இரவின் மேடையில் கொண்டு வந்து நிறுத்துகிறான். தாய் ஏமாறுகிறாள். அக்கா ஏமாறுகிறாள். இருந்தாலும் தானும் அப்படியே ஏமாந்து போக சம்மதிக்கிறாள் ஒரு குலாத்திப் பெண்.
வேறு வழி எதுவும் முன் இல்லை. அவளுக்கென்று கனவுகள் இல்லை. உலகம் இல்லை. குழந்தைகள் இருந்தாலும் குழந்தைகள் இல்லை. அதில் வித்தியாசமனவளாய் சாந்தாபாய். டீச்சராக வேண்டும் என கனவு காண்கிறாள். வாழ்க்கை அவளையும் இந்தச் சுழிக்குள் தள்ளி, பதினான்கு வயதில் குழந்தையைத் தந்து, திரும்பவும் மேடையில் கொண்டு வந்து நிறுத்துகிறது. சாகும் வரை உன்னை வைத்து காப்பாற்றுவேன் என நானா என்னும் இன்னொரு ஆண் உறுதிசொல்ல குழந்தையை விட்டு, குடும்பத்தை விட்டு மீண்டும் ஓடிவிடுகிறாள். அந்தக் குழந்தை சகல அவமானத்தோடும் அந்த குலாத்திக் குடும்பத்தின் வேலைக்காரனாய் வளர்கிறது. அவனது தாயோடு பிறந்த சித்திகளும், ஜீஜீ என்னும் வயதான பாட்டியும் அவன் மீது அவ்வப்போது பாராட்டும் அன்பில், அந்த நிழலில் படிக்க வேண்டும் என்னும் வெறி அவனுக்குள் தீயாய் வளர்கிறது.
அவனுக்குள் ஒரு தேவதையாய் இறங்கியிருக்கிற அம்மாவின் நினைப்பு மனித வாழ்வின் எல்லைகளைத் தாண்டி நிற்கிறது. ஏழு வருடங்களுக்குப் பிறகு தன்னை பார்க்க ஒருமுறை வந்த அம்மாவின் பார்வைக்குள்ளேயே தான் இருக்க வேண்டும் என அந்தப் பத்து வயதுச் சிறுவனின் செய்கைகள் ஒவ்வொன்றும் வாசிக்கிறவனை அப்படியே கரைத்து ஒன்றுமில்லாமல் ஆக்கிவிடுகிறது. தன்னை விட்டு விட்டுப் போன அம்மாவைப் பற்றிய மதிப்பீடுகள் அவனது ஒவ்வொரு பருவத்திலும் வளருகிற இயல்பு ஒரு சித்திரமாக விரிகிறது. அம்மாவோடு சேர்ந்து வாழ்கிற காலமும் அவனுக்கு கிடைக்கிறது. நானா என்கிற அந்த ஆண் அவளை வைத்திருக்கிற அவலத்தில் துடித்துப் போகிறான். ஆனாலும் அம்மா அவனை விட்டு வராமல், அவனிடம் அடி, உதை பட்டுக் கொண்டு அங்கேயே வாழ்வது தாங்கமுடியாமல் இருக்கிறது.
சுசிலாச் சித்தி, ரம்பா சித்தி, பேபி சித்தி, ஷோபா சித்தி என மற்ற குலாத்திப் பெண்கள் படுகிற துயரங்களுக்கு அம்மா எடுத்த முடிவு எவ்வளவோ மேல் என்று நினைக்கிறான். குலாத்தி நாவலை அடுத்தநாள் இரவில்தான் படித்து முடிக்க முடிந்தது. தூரத்தில் எங்கோ நாய் சத்தம் கேட்டது. கிஷோர் சாந்தாபாய் வயற்காட்டில் இருக்கும் பாட்டி ஜீஜீக்கு இரவில் ரொட்டி எடுத்துப் போகும்போது நாய்கள் குரைப்பதாகப் படுகிறது. ஜீஜீயும் ஒருகாலத்தில் ஆண்களை வசீகரித்த குலாத்திக்காரிதான். இன்று அவளுக்கு மருத்துவம் பார்க்க வழியில்லாமல் கவனிப்பாரற்று ஒரு அனாதையைப் போல கிடக்கிறாள்.
அவள் மீது பிரியம் வைத்திருக்கும் கிஷோர் இப்போது டாக்டராகி விட்டான். மனது அசைபோட, தூக்கத்தை விழுங்கிவிட்டு இருளின் அடர்த்தியாய் என்னைச் சுற்றி குலாத்தி. இந்தப் புத்தகத்தின் முன்னுரையை கடைசியில்தான் படித்தேன். இப்போது கிஷோர் சாந்தாபாய் காலே டாக்டராகி, ஆதிவாசிகளுக்கும், பழங்குடி மக்களுக்கும் இலவச மருத்துவம் செய்து கொண்டிருக்கிறார் என்றிருந்தது.
இந்தப்புத்தகத்தின் மூலம் கிடைத்த வருவாய், எண்ணற்ற விருதுகளின் பணம் எல்லாவற்றையும் கொண்டு தன் பாட்டி ஜீஜீயின் நினைவாக அறக்கட்டளை நிறுவி இருக்கிறார். அதன்மூலம் அனாதைக் குழந்தைகளுக்கும், குலாத்தி சமூகக் குழந்தைகளுக்கும் கல்விக்கான உதவி செய்து வருகிறார். இருள் நிறைந்த தன் வாழ்விலிருந்து வெளிச்சத்தை திரட்டி அதை சாதாரண மக்களுக்கு கொடுத்துக் கொண்டிருக்கிறார். உண்மை ஆர்ப்பாட்டமில்லாமல் எப்போதும் எளிமையாகவே இருக்கிறது. குலாத்தி ஒரு மனிதனின் கதை மட்டுமல்ல. ஒரு சமூகத்தின், அதுவும் நாம் வாழ்கிற காலத்தின் ஒரு பகுதி.
இணையதளத்தில் அவர் பெயரைக் குறிப்பிட்டுத் தேடினால் மொத்தமே இருபது பக்கங்கள்தான் தேடிக் கொடுக்கப்படுகின்றன. அதில் அவர் இறந்த செய்தியை இரண்டே இரண்டு வலைப்பக்கங்களே வெறும் செய்தியாய் சொல்கின்றன. துயர் மிகுந்த தன் வாழ்வினைப் பற்றி எழுதுகிற போது ஒரு இடத்தில் கிஷோர் சாந்தாபாய் " தினம் தினம் சாகிறவனுக்காக யாரும் அழுவதில்லை" என்கிறார். பெரும் துயரமாய் நம்மை அழுத்துகிறது அந்த வார்த்தைகள்.
- மாதவராஜ்

தந்தையின் பேரை பின்னால் வைத்துக் கொள்ளும் சமூகத்தில் கிஷோர் சாந்தாபாய் காலே என்று தாயின் பேரோடு பள்ளியில் சேருகிறான். சதா நேரமும் வேலை..வேலை. படிப்பதற்காக தாகம் எடுத்து, அதற்கு நேரம் கிடைக்காமல் தவிக்கிற தவிப்பு . பள்ளியில் அவன் பேரை உச்சரிக்கும் போது எழும்புகிற கேலி. லீவு நாட்களில் தமாஷா குழுவோடு அனுப்பப்பட்டு அங்கு வரும் ஆண்களுக்கு இரவு முழுக்க பணிவிடைகள் செய்ய வேண்டிய கொடுமை. எல்லாவற்றோடும் அவன் ஒவ்வொரு வகுப்பாய் தேறி உயர்நிலைப்பள்ளி, கல்லூரி வாழ்க்கை என நகரும் நாட்கள் ஒவ்வொன்றும் நரகத்தின் வாசலிலிருந்துதான் அவனுக்கு பிறக்கிறது. ஒருதடவை கல்லூரிக்கு பணம் கட்ட இரண்டாயிரம் ருபாய் தேவைப்பட, சுசிலா சித்தியும் ஒரு ஆணும் ஒரு லாட்ஜில் ஒரு அறையில் தங்க, பக்கத்து அறையில் தங்கியிருக்க வேண்டிய இரக்கமற்ற தருணங்களில் அவன் வெந்து போக வேண்டியிருக்கிறது.
அவனுக்குள் ஒரு தேவதையாய் இறங்கியிருக்கிற அம்மாவின் நினைப்பு மனித வாழ்வின் எல்லைகளைத் தாண்டி நிற்கிறது. ஏழு வருடங்களுக்குப் பிறகு தன்னை பார்க்க ஒருமுறை வந்த அம்மாவின் பார்வைக்குள்ளேயே தான் இருக்க வேண்டும் என அந்தப் பத்து வயதுச் சிறுவனின் செய்கைகள் ஒவ்வொன்றும் வாசிக்கிறவனை அப்படியே கரைத்து ஒன்றுமில்லாமல் ஆக்கிவிடுகிறது. தன்னை விட்டு விட்டுப் போன அம்மாவைப் பற்றிய மதிப்பீடுகள் அவனது ஒவ்வொரு பருவத்திலும் வளருகிற இயல்பு ஒரு சித்திரமாக விரிகிறது. அம்மாவோடு சேர்ந்து வாழ்கிற காலமும் அவனுக்கு கிடைக்கிறது. நானா என்கிற அந்த ஆண் அவளை வைத்திருக்கிற அவலத்தில் துடித்துப் போகிறான். ஆனாலும் அம்மா அவனை விட்டு வராமல், அவனிடம் அடி, உதை பட்டுக் கொண்டு அங்கேயே வாழ்வது தாங்கமுடியாமல் இருக்கிறது.
சுசிலாச் சித்தி, ரம்பா சித்தி, பேபி சித்தி, ஷோபா சித்தி என மற்ற குலாத்திப் பெண்கள் படுகிற துயரங்களுக்கு அம்மா எடுத்த முடிவு எவ்வளவோ மேல் என்று நினைக்கிறான். குலாத்தி நாவலை அடுத்தநாள் இரவில்தான் படித்து முடிக்க முடிந்தது. தூரத்தில் எங்கோ நாய் சத்தம் கேட்டது. கிஷோர் சாந்தாபாய் வயற்காட்டில் இருக்கும் பாட்டி ஜீஜீக்கு இரவில் ரொட்டி எடுத்துப் போகும்போது நாய்கள் குரைப்பதாகப் படுகிறது. ஜீஜீயும் ஒருகாலத்தில் ஆண்களை வசீகரித்த குலாத்திக்காரிதான். இன்று அவளுக்கு மருத்துவம் பார்க்க வழியில்லாமல் கவனிப்பாரற்று ஒரு அனாதையைப் போல கிடக்கிறாள்.
அவள் மீது பிரியம் வைத்திருக்கும் கிஷோர் இப்போது டாக்டராகி விட்டான். மனது அசைபோட, தூக்கத்தை விழுங்கிவிட்டு இருளின் அடர்த்தியாய் என்னைச் சுற்றி குலாத்தி. இந்தப் புத்தகத்தின் முன்னுரையை கடைசியில்தான் படித்தேன். இப்போது கிஷோர் சாந்தாபாய் காலே டாக்டராகி, ஆதிவாசிகளுக்கும், பழங்குடி மக்களுக்கும் இலவச மருத்துவம் செய்து கொண்டிருக்கிறார் என்றிருந்தது.
இந்தப்புத்தகத்தின் மூலம் கிடைத்த வருவாய், எண்ணற்ற விருதுகளின் பணம் எல்லாவற்றையும் கொண்டு தன் பாட்டி ஜீஜீயின் நினைவாக அறக்கட்டளை நிறுவி இருக்கிறார். அதன்மூலம் அனாதைக் குழந்தைகளுக்கும், குலாத்தி சமூகக் குழந்தைகளுக்கும் கல்விக்கான உதவி செய்து வருகிறார். இருள் நிறைந்த தன் வாழ்விலிருந்து வெளிச்சத்தை திரட்டி அதை சாதாரண மக்களுக்கு கொடுத்துக் கொண்டிருக்கிறார். உண்மை ஆர்ப்பாட்டமில்லாமல் எப்போதும் எளிமையாகவே இருக்கிறது. குலாத்தி ஒரு மனிதனின் கதை மட்டுமல்ல. ஒரு சமூகத்தின், அதுவும் நாம் வாழ்கிற காலத்தின் ஒரு பகுதி.
இணையதளத்தில் அவர் பெயரைக் குறிப்பிட்டுத் தேடினால் மொத்தமே இருபது பக்கங்கள்தான் தேடிக் கொடுக்கப்படுகின்றன. அதில் அவர் இறந்த செய்தியை இரண்டே இரண்டு வலைப்பக்கங்களே வெறும் செய்தியாய் சொல்கின்றன. துயர் மிகுந்த தன் வாழ்வினைப் பற்றி எழுதுகிற போது ஒரு இடத்தில் கிஷோர் சாந்தாபாய் " தினம் தினம் சாகிறவனுக்காக யாரும் அழுவதில்லை" என்கிறார். பெரும் துயரமாய் நம்மை அழுத்துகிறது அந்த வார்த்தைகள்.
- மாதவராஜ்
0 comments:
Post a Comment