சமீபத்தில் சென்னை உயர்நீதி மன்றம்
அளித்த தீர்ப்பு ஒன்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ”திருமணத்திற்கு முன் உடலுறவு கொள்ளும் ஆணும் பெண்ணும் திருமணமானவர்களாக கருதப்படுவார்கள்”
என்று சூடான பத்திரிகை செய்திகள் வெளியாயின. இது
பெண்களுக்கு ஆதரவான தீர்ப்பு என சிலர் கூற, சிலர் தீர்ப்பு குறித்து அதிருப்தி வெளியிட்டனர். சிலர் இது
தனி மனித சுதந்திரத்தை பறிக்கும் என்று கூறினர்.
திருமணம் உடல் ரீதியான உறவு மட்டுமா? |
வழக்கு என்ன? தீர்ப்பு என்ன?
வழக்கையும் தீர்ப்பையும் முழுமையாக வெளியிடாத ஊழகங்களால், விவாதமின்றி பலரும் அவசர அவசரமாக ஒரு முன் தீர்மானத்திற்கு
வந்து விட்டதாக தோன்றுகிறது.
கோவையில் ஒரு பெண் தனது கணவன் தன்னை
1994ல் திருமணம் செய்து கொண்டு இரண்டு குழந்தைகள் பெற்ற பிறகு,
1999ல் “நான் அவனில்லை” என்று கூறுவதாகவும்
தன்னை குழந்தைகளையும் வாழ அவரது மாத வருமானம் ரூ.25000 திலிருந்து ரூ.5000 தர வேண்டும்
எனவும் கூறியிருந்தார்.
மருத்துவமனையில் தனது இரண்டாவது குழந்தையின் பிரசவத்தின் போது அந்த ஆண்யிட்ட கையெழுத்தை சாட்சியாக கொண்டு அந்த குழந்தைகள் அந்த ஆணுக்கு பிறந்தவை தான் என்று நீதிமன்றம் ஒப்புக் கொண்டது. முதலில் அந்தப் பெண் நடத்தை கெட்டவள் என்று குற்றம் சாட்டிய அந்த ஆண், தீர்ப்பை மறுக்கவில்லை. எனினும் திருமணம் நடந்ததற்கான சான்றிதழ் உள்ளிட்ட ஆதாரங்கள் ஏதும் இல்லாததால் அந்தப் பெண் அவரின் மனைவி இல்லை என்று கோவை நீதிமன்றம் தீர்ப்பளித்த்து. இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு நடந்துவந்தது.
மருத்துவமனைக் கோப்புகளில் உள்ள கையெழுத்தே அந்த ஆண் இப்பண்ணின் கணவனாக
வாழ்ந்துள்ளார் என்பதற்கு சாட்சியாக கொள்ளப்பட வேண்டுமென சென்னை உயர் நீதிமன்றம்
கூறியது. மேலும் அவர் குடும்ப அட்டைக்கு குடும்பத்தின் தலைவனாக விண்ணிப்பித்திருப்பதும்
கருத்தில் கொள்ளப்பட்டது. இதிலிருந்து இருவரும் இணைந்து வாழ்ந்திருப்பதும்
அந்த வாழ்க்கையில் இரண்டு குழந்தைகள் பிறந்திருப்பதும் நிரூபணமாவதாக நீதிமன்றம்
தெரிவித்தது.
திருமணம் நடந்ததற்கு தாலி, நெருப்பைச் சுற்றி வருவது, போன்ற மத சடங்குகளை கணக்கில் கொள்வதை விட சம்பந்தப்பட்ட
இருவரும் ஒன்றாக வாழ்ந்ததற்கான சட்ட ரீதியான சாட்சிகளேயே கணக்கில் கொள்ள வேண்டும் என்று
நீதிபதி கூறியுள்ளார். எனவே இந்த வழக்கில்
இந்த ஆண் தான் இப்பெண்ணின் கணவன் என்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
மேலும் தீர்ப்பில்
கூறப்பட்டவை
21 வயது நிரம்பிய ஆணும் 18 வயதான பெண்ணும் உடலுறவுக் கொண்டு அதன் விளைவாக அந்தப் பெண் கர்பமடைந்தால் அந்தப்
பெண் அந்த ஆணின் மனைவியாக சட்ட்த்தின் முன் கருதப்படுவாள். கர்பம்
அடையாவிட்டாலும், அவர்களது உறவை நிரூபிக்க வேறு வலுவான ஆதாரங்கள்
இருந்தால் அந்தப் பெண் சட்டப்பூர்வமான மனைவியாக கருதப்படுவாள்
என்றும் கூறுகிறது.
எனவே அந்த பெண்ணை விடுத்து வேறு ஒரு
பெண்ணை அந்த ஆண் திருமணம் செய்ய வேண்டுமானால், மனைவியாக இருக்கும்
பெண்ணை சட்டப்பூர்வமாக விவாகரத்து செய்த பின்பே அது முடியும் என்றும் தீர்ப்பு கூறுகிறது.
இந்த வழக்கில் இந்த
தீர்ப்பு சரியானதே!
இந்த வழக்கில் கொடுக்கப்பட்டுள்ள தீர்ப்பு
சரியானதே. சேர்ந்த வாழ்ந்த கணவன் புகைப்படம் இல்லை, சான்றிதழ் இல்லை என்பதால் திருமணம் செய்த பெண்ணை ஏமாற்றிவிட முடியாது என்ற
எச்சரிக்கை செய்தியை தெளிவாக கூறுகிறது இத்தீர்ப்பு.
எல்லாம் சரியாகத்தானே இருக்கிறது. இதிலென்ன பிரச்சனை? பத்திரிகை செய்திகள் வேறு மாதிரியாக வர காரணம் என்ன?
மேற்கூறிய விஷயங்களை கூறிய தீர்ப்பு
மேலும் சிலவற்றை கூறியுள்ளது: ஒரு திருமணம் சட்டப்பூர்வமாக செல்லும்
என்பதை தீர்மானிப்பது ஆணும் பெண்ணும் கொள்ளும்
உடலுறவு தான் என்று கூறுகிறது. ஓரினச் சேர்க்கை, ”லிவிங் டுகெதர்” போன்ற உறவு
முறைகள் முளைத்து நிற்கும் காலத்தில் திருமணத்தை வெறும் உடலுறவிற்குள் சுருக்கி விடுவதாக
உள்ளது.
இந்த தீர்ப்பின் சாராம்சத்தை, பெண்களுக்கு எதிராகவும் வியாக்கியானம் செய்ய முடியும். ஒரு பெண்ணை வலுகட்டாயமாக உடலுறவுக் கொண்டு பின்பு அவளை பெண்ணை மிரட்டி சட்டத்தின்
முன் இது வல்லுறவு அல்ல என்று நிரூபிக்கும் சூழலில் -
அது திருமணம் என்று கருதப்படுமா?
வழக்கறிஞர் சிவகுமார், ”திருமணத்திற்கு
முன்பு பல பெண்களுடன் ஒரு ஆண் உடலுறவு கொண்டால், யாரை மனைவி என்று கூறுவது? ஒரு
ஆணுடன் உடலுறவுக் கொண்ட பிறகு அவன் சரியானவன் இல்லை தெரிய வருகிறது. இந்த உறவு
வேண்டாம் என்று முடிவெடுக்கும் வாய்ப்பை மறுக்கவும் இது வழி வகுக்கும்.
இந்த வழக்கில் இந்த தீர்ப்பு சரியானது. ஆனால் இதை பொதுப்படையாக எடுத்து கொள்ள
முடியாது.” என்று கூறுகிறார்.
மேலும் பி.பி.சி. தமிழ் வலைதளச் செய்தியில் நீதிபதி சந்துரு வழக்கை தாண்டி பல விஷயங்கள்
இத்தீர்ப்பில் கூறப்பட்டுள்ளதாக சொல்லியிருக்கிறார். தீர்ப்பை ஒட்டி எழுந்த சர்ச்சைகளை அடுத்து, கர்ணன் அவர்கள் ,இந்த தீர்ப்பு சரி தான் என்று
நியாயப்படுத்த ஊடகத்தில் கூறிய காரணங்கள் ஏற்றுக் கொள்பவையாக
இல்லை.
அவர் ‘இது இந்திய கலாச்சாரத்தையும் பெண்களையும் பாதுகாப்பதாக
கூறுகிறார். எது இந்திய
கலாச்சாரம்? தன்னை ஒருவன் “தொட்டு” விட்டால்
அவனுடேயே வாழ வேண்டும் என்ற நிர்பந்தத்தை ஏற்படுத்தி விடுகிறது சமூகம். ஒருவன் “தொட்ட” பெண்ணை வேறு ஒருவன்
“தொட” முன் வர மாட்டான் என்ற சமுதாயத்தின் போக்கை வலியுறுத்துவதாக அந்த விளக்கம் அமைகிறது. ”கல்லானாலும் கணவன். புல்லானாலும்
புருஷன்” என்று சொல்வதுதான் இவர்கள் கூறும் இந்திய கலாச்சாரமா?
இப்படி பல சர்ச்சைகள் இருந்தாலும் இந்த தீர்ப்பு இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட
பெண்ணை போன்ற பெண்களுக்கு சாதகமாகத்தான் உள்ளது. வழக்கறிஞர்
சிவகுமார் கூறுவது போல திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றப்படும் பெண்களுக்கு
ஆதரவான தீர்ப்பாக இது அமைகிறது. இந்த தீர்ப்பை முன்மாதிரியாகக் கொண்டு ஏமாற்றப்படும்
பெண்களுக்கு சாதமாக சட்டங்கள் இயற்ற முயற்சிகள் எடுக்கலாம்.
0 comments:
Post a Comment