தகவல்
அறியும் உரிமைச் சட்டத்திற்கு அரசியல் கட்சிகளும் கட்டுப்பட வேண்டும் என
ஒரு விவாதம் கிளம்பியிருக்கிறது. இதனை காங்கிரஸ் கட்சி எதிர்க்கிறது,
பாரதிய ஜனதா கட்சி எதிர்க்கிறது. சுதந்திர இந்தியாவின் மிகப்பெரிய
ஊழல்களில் சம்பந்தப்பட்டுள்ள அந்தக் கட்சிகள் எதிர்ப்பதை புரிந்துகொள்ள
முடிகிறது. ஆனால், இடதுசாரிகளும் இந்த நடவடிக்கையை தவறென்று சொல்கிறார்கள்.
தகவலுரிமைச் சட்டம் தேவையே!
'தகவல்
உரிமை’ ஒரு ஜனநாயக தேசத்தின் அடிப்படைத் தேவை. இதன் மூலமாக ஏராளமான
ஊழல்களை, முறைகேடுகள் அம்பலப்பட்டிருக்கின்றன. பெரும் நிறுவனங்களும்,
அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் – கூட்டு சேர்ந்து செயல்படுவது
வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது. இந்த கூட்டணி, தன் தேவைக்காக சட்டங்களை
வளைப்பதும், திட்டங்களை மாற்றுவதையும் தெரிந்துகொள்ள முடிந்திருக்கிறது.
ஊழல் இன்று தேசத்தின் மையமான பிரச்சனையாக எழுந்திருக்கிறது.
சுதந்திர
இந்தியாவில் இடதுசாரி முதல்வர்கள் 8 பேர் இருந்துள்ளார்கள். இந்தியாவில்
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு, அதிக ஆண்டுகள் பதவியில் இருந்த ஜோதிபாசு
உள்ளிட்டு இ.எம்.எஸ்.நம்பூதிரிபாட், இ.கே. நாயனார், வி.எஸ்.அச்சுதானந்தன்,
புத்ததேவ், நிருபன் சக்கரவர்த்தி, தசரத் தேவ், மாணிக்சர்க்கார் என
ஒருவரின் மீதும் ஊழல் குற்றச்சாட்டுகள் இல்லை. இதனால், ஊழலை எதிர்க்கும்
பொதுமக்களுக்கு, இடதுசாரிகள் மீது ஒரு ஈர்ப்பு உண்டு.
இதனால்,
’தகவல் உரிமைச் சட்டத்தில் அரசியல் கட்சிகளும் கொண்டுவரப்பட கூடாது’ என்று
சொல்வது - விமர்சனத்திற்கு உள்ளாகிறது. இந்த நடவடிக்கையை எதிர்க்க
இடதுசாரிகள் சொல்லும் காரணம் ’கட்சி என்பது ஒரு பொது ஸ்தாபனம் அல்ல’,
‘அனைவருக்கும், அனைத்து நடவடிக்கைகளையும் வெளிப்படையாக தெரிவிப்பது,
கட்சிகளின் செயல்பாட்டை, ஜனநாயகத்தை பாதிக்கும்’ என்பதாகும்.
தகவல் உரிமைச் சட்டத்தில், அரசியல் கட்சிகளையும் சேர்க்க வேண்டும் என்ற கருத்து எப்படி வந்தது?
இந்தக்
கருத்து தகவல் ஆணையத்தால் முன்வைக்கப்பட்டு, தகவல் உரிமைப் போராளிகளால்
வழிமொழியப்படுகிறது. இந்தச் சட்டத்தை பயன்படுத்தியதன் மூலமும் , அரசு
நிர்வாகத்தில் உள்ள நேர்மையானவர்களின் உதவியிலும் முறைகேடுகள் பல
வெளிவந்தன. அந்தச் செய்திகள் மக்களிடையே அதிர்வை ஏற்படுத்தியதையடுத்து –
’அரசியல் கட்சிகளின் போராட்டங்களும்’ ‘சிவில் சொசைட்டி’ போராட்டங்களும்
நடந்தன.
ஊழல்
முற்றாக ஒழிக்கப்பட வெறும் தகவல் போராட்டங்கள் மட்டும் போராது, அரசியல்
போராட்டமும், சமூக மாற்றமும் அவசியம் என்பது புரிபடத் தொடங்கிய நேரத்தில் –
ஊடகங்கள் சிவில் சொசைட்டி போராட்டங்களையும், லோக்பால் மசோதாவுக்கான
உண்ணாவிரதத்தையும் முன் நிறுத்தினார்கள். இப்படி, ஊழல் எதிர்ப்பு போராட்டம்
‘அரசியலை எதிர்த்தவர்களின், அரசியலற்ற போராட்டமாக’ குறுக்கப்பட்டது. இதன்
தொடர்ச்சியாக ‘தகவல் உரிமைச் சட்டத்தை’ அனைத்து பிணிகளுக்கும் ஒரே மருந்து
என்ற ரீதியில் முன்வைக்கும் வாதங்கள் உருவாகின.
இது சரியான வாதமா?:
இல்லை. மிகத் தவறான வாதம். அரசியலை எதிர்த்த போராட்டங்கள் அரசியலற்றவர்களால் மட்டும் நடத்தப்பட வேண்டும் என்பது - அதிகாரத்திற்கு அருகில் ஊழல்வாதிகளை நிறுத்திவிட்டு - எதிர்ப்பாளர்களை வெறும் ‘விமர்சகர்களாக’ சுறுக்கிவிடும். ’குளத்துக்குள் இறங்காமலே குளத்தை சுத்தப்படுத்தலாம்’ என்ற வியாக்கியானமாக அமைகிறது.
அரசியல்
என்பது ஒரு போர்க்களம். இங்கே பல்வேறு கருத்துக்களும் மோதுகின்றன.
உதாரணமாக ஊழலை எதிர்த்த கட்சிகள், ஊழல்வாதிகளுக்கு எதிராக மாற்றுக்
கொள்கையை முன்வைத்து போராடுகிறார்கள். தகவல் உரிமையில் ‘அமைப்புகளின் உள்
விவகாரங்களையும் கேட்கலாம்’ என்பதானது ஊழல்வாதிகளுக்கு எதிராகவும்
பயன்படும். ஊழலை எதிர்ப்பவர்களுக்கு எதிராகவும் பயன்படுத்தப்படும். இது
அரசியலை கேலிக்கூத்தாக மாற்றிவிடும்
அரசியல் கட்சிகளை கண்டுகொள்ளாமல் விட வேண்டுமா?
தகவல் உரிமைச் சட்டத்தில் அரசியல் கட்சிகளை உட்படுத்தாத போது - அவர்களை யாருமே கேள்வி கேட்கக் கூடாதா? என்ற கேள்வி வருகிறது.
அரசியல் கட்சிகளை கட்டுப்படுத்த ஏற்கனவே உள்ள அமைப்புகளில், பல குறைகள் உள்ளன. அவற்றை சரியான முறையில் மாற்றியமைப்பதே - அரசியல் கட்சிகளைக் கட்டுப்படுத்த உதவும். உதாரணமாக ‘நபர்களை முன் நிறுத்தும்’ தேர்தல்களால் மக்கள் ஏமாற்றப்படுகிறார்கள். ஆட்சிகள் மாறுகின்றன, கொள்கைகள் மக்கள் விரோதமாய்த் தொடர்கின்றன.
எனவே
நம் நாட்டின் தேர்தல் தேர்தல் ஆணையத்தை இந்த அடிப்படையில் வலுப்படுத்த
வேண்டும். தேர்தல் முறையை “கொள்கை அடிப்படையில் மாற்றுவது”, தேர்தல்
பிரச்சாரத்துக்காக கார்பரேட்டுகளின் கையேந்துவதையும், தனி நபர்களை
சார்ந்திருப்பதையும் மாற்றி - தேர்தல் ஆணையமே குறிப்பிட்ட அளவில்
அனைவருக்குமான பிரச்சாரத்தை மேற்கொள்வது. லோக்பால் சட்டத்தை அமலாக்குவது என
பல கட்ட நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.மக்கள் அரசியலில் இருந்து
அந்நியப்படுத்தப் பட்டிருப்பது மற்றொரு காரணமாகும். ஒவ்வொரு கட்சியின்
உறுப்பினராகவும் உள்ள ‘பொதுமக்கள்’அரசியல் மயப்பட்டால் – கொள்கை விவாதங்கள்
முன்னுக்கு வரும். அப்போது கட்சிகளின் தலைமைகள் கேள்விக்குள்ளாகும்.
சரியான கொள்கைகள் கவனத்தைப் பெறும்.
ஊழலை ஒழிக்க இதுவே போதுமா??
ஊழலை
ஒழிப்பதற்கு இது போதாது. மாறாக ஊழலுக்கு போராட்டக் களத்தை அமைக்க இது
உதவியாக இருக்கும். மிகப்பெரும் பண முதலைகளின் கையிலிருக்கும் அரசியல்
அதிகாரத்தைக் கேள்வி கேட்பது மட்டுமல்ல, மாற்றியமைப்பதும் இன்றைய தேவை. சாமானியர்களின்
நலன்கள் முன்னுக்கு வரச் செய்வது - சாமானியர்களின் பங்களிப்பில்லாத
அரசியலால் நடக்காது. மாற்றத்தை தொடங்கி வைப்பபவர்களாகவும் – நாமே இருக்க
வேண்டும்.
- சிந்தன் ரா