இணைய உலகத்தின் ஜனநாயகத்தை சிதைத்து, ஒவ்வொருவரும் உளவுபார்க்கப்படும் அதிர்ச்சியூட்டும் தகவல்களை அம்பலப்படுத்திய எட்வர்ட் ஸ்னோடனின் பேட்டி, ‘மாற்று’ வாசகர்களுக்காக தரப்படுகிறது.
- நிருபர்கள் : க்ளென் கிரீன் வார்ட் & இவான் மேக்கஸ்கில்
(நன்றி: கார்டியன்)
ரகசியங்களை அம்பலப்படுத்த உங்களை முடிவெடுக்கச் செய்தது எது?
கிட்டத்தட்ட எல்லாவற்றையுமே இடைமறித்து உளவுபார்க்கும் ஒரு கட்டமைப்பை அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு முகமை உருவாக்கியுள்ளது. இந்த திறனைக் கொண்டு மிகப் பெரும்பான்மையான, மனித தகவல் தொடர்புகளை, தானியங்கி முறையில் கிரகித்துக்கொள்ள முடியும்.
உங்களுடைய மின்னஞ்சல்களையோ அல்லது உங்கள் மனைவியின் தொலைபேசியையோ உளவு பார்க்க விரும்பினால், அதனைக் குறுக்கிடும் வசதியை முடுக்கிவிட்டால் போதும். உங்கள் மின்னஞ்சல்கள், சங்கேத வார்த்தைகள், தொலைபேசிப்பதிவுகள், கிரெடிட் கார்டுகள் என அனைத்தையும் பெற முடியும். இத்தகைய செயல்களைப் புரிகின்ற ஒரு சமூகத்தில் நான் வாழ விரும்பவில்லை. நான் செய்கின்ற, சொல்கின்ற ஒவ்வொன்றும் பதிவு செய்து (காண்கானிக்கப்படுகின்ற) உலகில் நான் வாழ விரும்பவில்லை. அது எனக்கு உடன்பாடான விசயமல்ல.
போஸ்டன் தீவிரவாதத் தாக்குதல் போன்றவற்றை குறைக்க, இதுபோன்ற உளவு வேலைகள் அவசியம்தானே?
தீவிரவாதம் ஒரு புதிய அச்சுறுத்தலாக எழுப்பப்படுவது ஏன் என்பதை நாம் முடிவு செய்ய வேண்டும். தீவிரவாதம் எப்போதுமே இருந்து வந்திருக்கிறது. போஸ்டன் குண்டுவெடிப்பு ஒரு குற்றச் செயல்தான். (ஆனால் அதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க) திறமையான, பழமைவாய்ந்த காவல்துறை விசாரணை தேவைப்படுகிறதேயன்றி, உளவுபார்க்கத் தேவையில்லை. காவல்துறை தனது பணியை நன்றாகத்தான் செய்துவருகிறது.
உங்களை நீங்கள் மற்றொரு பிராட் மேனிங்- என நினைத்துக் கொள்கிறீர்களா?
அவர் ஒரு தலைசிறந்த போராளி. மக்களின் நலன் மட்டுமே அவருக்கு தூண்டுகோலாக இருந்திருக்கிறது.
நீங்கள் செய்திருப்பது ஒரு குற்றமா?
அரசின் தரப்பில் குற்றம் உள்ளது. என்னை, குற்றம் சாட்டுவது வெறும் வார்த்தை ஜாலமே. மக்களின் தளத்தை அவர்கள் தங்கள் ஊடுருவலால் சுறுக்கிவிட்டார்கள்.
உங்களுக்கு இனி என்ன நடக்கும் என கருதுகிறீர்கள்?
நல்லது எதுவும் நடக்கப் போவதில்லை.
ஹாங்காங்கில் ஏன் தங்கியுள்ளீர்கள்?
சுதந்திரம் குறைவாக உள்ளதாக பெயர் பெற்றுள்ள பகுதிக்கு ஒரு அமெரிக்கன் சென்று தஞ்சமடைய நேர்ந்திருப்பது சோகமானதுதான். ஹாங்காங் - மக்கள் சீனக் குடியரசின் பகுதியாக இருந்தாலும் கருத்து சுதந்திரத்திற்கு பெயர் பெற்றது. அவர்களுக்கு வலிமையான கருத்துரிமை பாரம்பரியம் உண்டு.
வெளிவந்துள்ள ஆவணங்கள் எதை அம்பலப்படுத்துகின்றன?
அமெரிக்காவின் உளவுப் பரப்பு குறித்து, அமெரிக்க நாடாளுமன்றத்தில் கேள்வி எழும்போதெல்லாம், அமெரிக்க தேசிய பாதுகாப்பு முகமை அதிகாரிகள் பொய்யைத்தான் திரும்பத் திரும்ப கூறி வந்துள்ளனர். இந்த உளவின் பரப்பு குறித்து செனட்டர் வைடன் மற்றும் செனட்டர் உய்டால் ஆகியோர் கேள்வி எழுப்பியபோது, அப்படிப்பட்ட கருவிகள் தங்களிடம் இல்லை என என்.எஸ்.ஏ கூறியுள்ளது.
அந்தச் சாதனங்களையும், எந்தப் பகுதிகளில் அதிக புலனாய்வு நடந்தது என்பது தொடர்பான வரைபடத்தையும் நாங்கள் வைத்துள்ளோம். ரஷ்யர்களை விட, அமெரிக்கர்களிடையேயான தகவல் தொடர்பே அதிகமாக உளவுபார்க்கப்பட்டது.
சீனா நடத்தும் தகவல் திருட்டுக்கு எதிராக ஒபாமா நிர்வாகம் போராடுவதாகக் கூறுவதை எப்படிப் பார்க்கிறீர்கள்?
உலகின் ஒவ்வொரு மூலையிலும், ஒவ்வொருத்தரையும் (அமெரிக்கர்களாகிய) நாங்கள் உளவு பார்க்கிறோம், தகவல் திருடுகிறோம். எங்களுக்கும் பிற நாடுகளுக்கும் வேறுபாடு உள்ளது. கிட்டத்தட்ட எல்லா நாடுகளிலும் நாங்கள் இருக்கிறோம். அந்த நாடுகளிடம் எங்களுக்கு எந்த யுத்தமும் கிடையாது.
அரசாங்கத்தின் உளவு வளையத்திலிருந்து தப்பிக்க முடியுமா?தப்பிக்க முடியுமா? ... எது சாத்தியம் என்பது கூட தெரியாது. அவர்களின் பரப்பு பயங்கரமானது. உங்களின் கருவிகளில் உளவுச் சாதனங்களை புகுத்த முடியும். ஒருமுறை நீங்கள் ஆன்லைனில் வந்தால், உடனே அது விழித்துக் கொள்ளும். எந்த பாதுகாப்பை ஏற்படுத்தினாலும் அதிலிருந்து நீங்கள் தப்பிக்க முடியாது.
இப்படியொரு திட்டம் உங்களுக்குள் இருந்ததை, உங்கள் குடும்பத்தினர் அறிவார்களா?
இல்லை. என்ன நடந்துகொண்டிருக்கிறது என்பது என் குடும்பத்திற்கு தெரியாது. அவர்கள் (அமெரிக்க அரசாங்கம்) என் குடும்பத்தையும், நண்பர்களையும், கூட்டாளிகளையும் என்னோடு தொடர்புடைய ஒவ்வொருவரையும் துரத்துவார்கள் என்பதுதான் என் முதன்மையான அச்சம். இனி வரும் நாட்களை அந்த அச்சத்துடந்தான் நான் கழிக்க வேண்டியிருக்கும். அவர்களோடு தொடர்புகொள்ள முடியாது. என்னை அறிந்தவர்கள் யாராக இருந்தாலும், அவர்களுக்கு எதிராக அதிகார வட்டம் மூர்க்கமாக செயல்படும். ஒவ்வொரு இரவும் இதுதான் என் தூக்கத்தைக் கெடுக்கிறது.
இந்த ஆவணங்களை வெளியிடுவதென எப்போது முடிவு செய்தீர்கள்?
உங்களை உறுத்துகின்ற விசயங்களை நீங்கள் கவனிக்கிறீர்கள். அனைத்தையும் நீங்கள் பார்க்கும்போது, அவற்றின் சில தீயவையாக உங்களுக்கு படுகின்றன. அந்த அநியாயங்களுக்கு எதிரான விழிப்புணர்வு பிறக்கிறது. ஒரு நாள் காலை எழுந்தவுடன் திடீரென இந்த முடிவுக்கு நான் வந்துவிடவில்லை. அது இயற்கையாக நடந்தது.
2008 ஆம் ஆண்டு ஏராளமான மக்கள் ஒபாமாவுக்கு வாக்களித்தார்கள். நான் அவருக்கு வாக்களிக்கவில்லை. 3 ஆவதாக ஒரு கட்சிக்கு வாக்களித்தேன். இருந்தாலும் ஒபாமாவின் வாக்குறுதிகளை நான் நம்பினேன். நான் இந்த தகவல்களை அம்பலப்படுத்த தயாராக இருந்தபோதும் (அவரது தேர்ந்தெடுக்கப்படுவதற்காக காத்திருந்தேன்). அவருக்கு முந்தையவர்கள் பின்பற்றிய கொள்கைகளையே அவரும் தொடர்ந்தார்.
இந்த ஆவணங்களை அம்பலப்படுத்தியதற்கு, மக்களின் எதிர்வினை எப்படி இருக்கிறது?
பாதுகாப்பின் பெயரால், மக்களின் உரிமைகள் நசுக்கப்படுவதற்கு எதிராக பொதுமக்களின் வலுவான எதிர்வினையைக் கண்டு நான் திகைப்பும் மகிழ்ச்சியும் அடைந்தேன். வால்ஸ்டிரீட்டைக் கைப்பற்றும் போராட்டத்தைப் போன்ற இயக்கமல்ல இது ஆனால், “4 வது திருத்தத்தை அமலாக்கு” என்ற முழக்கத்துடன் ஜூலை 4 ஆம் தேதி தெருக்களில் மக்கள் இறங்குவதற்கு அடிப்படைக் காரணம் இருந்தது. அது மக்களின் சினத்திலிருந்து வளர்ந்தது. இணையதளத்தில் இதற்கு பிரம்மாண்ட ஆதரவு எதிர்வினையாக எழுந்தது.
பாதுகாப்பு, வெளிப்படைத்தன்மை ஆகியவற்றுக்கு இடையிலான சமன்பாடு பற்றி பேசிக் கொண்டே, இந்த ஆவணங்கள் வெளியிடப்பட்டதை அதிபர் ஒபாமா கண்டனம் செய்துள்ளது பற்றிய உங்களின் எதிர்வினை என்ன?
தன்னை தற்காத்துக் கொள்வது அவருக்கு கடினமாக இருந்தது என நினைத்துக் கொண்டேன். நியாயப்படுத்த முடியாததை, அவர் நியாயப்படுத்த முயற்சித்துக் கொண்டிருந்தார். அது அவருக்கு தெரியும்.
வாசிங்டன்னில் வசிக்கும் அயல் விவகாரங்கள்துறை ஆய்வாளர் ஸ்டீவ் கிளெமென்ஸ், டல்லஸ் விமான நிலையத்தில், தான் பங்கேற்ற ஒரு உளவுத்துறை கலந்தாய்வுக் கூட்டத்தில் 4 பேர் விவாதித்ததை காதில் கேட்டதாகவும், அவர்கள் ’இந்த தகவல்களை அம்பலப்படுத்தியவர்களை “மாயமாக்கிவிட வேண்டும்” என்று பேசிக்கொண்டதாகவும் கூறப்படுகிறதே?
(இணையத்தில்) இந்தச் செய்தியைப் படித்த ஒருத்தர் “உளவாளிகள் அப்படி பேச மாட்டார்கள்” என்று தெரிவித்துள்ளார். நானொரு உளவாளி. உளவாளிகள் அப்படித்தான் பேசுவார்கள். குற்றங்களை எப்படி கையாள்வது என்பதைப் பற்றி அலுவலகத்தில் எப்போது விவாதித்தாலும், முறையாகச் செயல்படுவதை அவர்கள் விரும்பியதில்லை. தீர்மானகரமான நடவடிக்கையைத்தான் ஆதரித்தார்கள்.
இதுபோன்ற ஆட்கள், நீதிமன்றத்தில் ஒரு நாள் செலவிட அனுமதிப்பதை விட, ஒரு விமானத்திலிருந்து உதைத்துத் தள்ளுவது மேலானது என அவர்கள் கூறுவது வழக்கம். இது ஒரு அதிகார - ஆணவமான - அமைப்பாகும்
உங்களிடம் திட்டம் ஏதாவது உண்டா?
நான் செய்யமுடிகிற ஒரே விஷயம் இங்கே உட்கார்ந்துகொண்டு ஹாங்கான் அரசாங்கம் என்னை வெளியேற்றாது என நம்புவதுதான். என் நியாயங்களை அங்கீகரிக்கிற ஒரு நாட்டில் அடைக்கலம் தேடுவதுதான் எனது முதல் வேலை. அதற்கு மிகவும் ஏற்ற நாடு ஐஸ்லாந்து. இணையதள சுதந்திரம் குறித்த பிரச்சனையை எழுப்பிய மக்களுக்கு அவர்கள் ஆதரவாக இருந்தார்கள். என்னுடைய எதிர்காலம் என்னவாக இருக்கும் என்பது பற்றி எனக்கு எதுவும் தெரியாது. அவர்கள் (அமெரிக்க அரசாங்கம்) ஒரு இன்டர் போல் (சர்வதேச போலீஸ்) அறிவிப்பை வெளியிடக் கூடும். ஆனால், அமெரிக்காவின் எல்லையைத் தாண்டி நான் எந்தக் குற்றமும் செய்யவில்லை என்று நினைக்கிறேன். இது அதன் இயல்பில் அரசியல்படுத்தப்படும் என நினைக்கிறேன்.
ஒருவேளை நீங்கள் கைதுசெய்யப்படலாம்...
சிறையில் அடைக்கப்படும் ஆபத்தை ஏற்றுக்கொள்ளாமல் நான் இதைச் செய்திருக்க முடியாது. உலகின் மிகப்பெரும் ஆற்றல்வாய்ந்த உளவு முகமைகளுக்கு எதிராக வந்துவிட்டு இந்த ஆபத்தை ஏற்காமலிருக்க முடியாது. அவர்கள் உங்களைப் பிடிக்க விரும்பினால், காலப்போக்கில் பிடித்துவிடுவார்கள்.
உங்கள் செய்தி வெளியாகி ஒருவாரமாகிவிட்டது, இப்போது என்ன உணர்வு ஏற்பட்டுள்ளது?
கொடுஞ்செயலுக்கு எதிராக வெளிப்படுத்தப்பட்ட உணர்வு நியாயமானதென்று நான் கருதுகிறேன். எனக்கு என்ன நடந்தாலும், அமெரிக்காவுக்கு ஏற்படும் விளைவு ஆக்கப்பூர்வமாக இருக்கும் என்ற நம்பிக்கையை இது எனக்கு கொடுத்திருக்கிறது. எந்த சொந்த நாட்டை நான் பார்க்க விரும்பினாலும், பார்க்கப்போகிறேன் என்ற நம்பிக்கை எனக்கில்லை.
- தமிழில்: மிலிட்டரி பொன்னுசாமி
0 comments:
Post a Comment