அந்தத் தெருவிலிருந்து அடுத்த தெரு வரைக்கும் நீண்ட பெரிய வீடு. பாட்டி எப்போதும் பின்புறத்தில் சமையலறை வேலையாட்களோடு இருப்பார்கள். அதைத் தாண்டி தொழுவத்தில் மாடுகள் சதாநேரமும் அசை போட்டுக்கொண்டு இருக்கும். தாத்தாவோ வீட்டின் முன்னறையில் ஈஸிச்சேர் போட்டு உட்கார்ந்து வாசலைப் பார்த்தபடி இடித்த வெத்தலையை அசை போட்டுக்கொண்டு இருப்பார். வயது எழுபதுக் கிட்ட இருக்கும். ரைஸ்மில், வயல்கள் என கோலோச்சியவர்.
தினத்தந்தி பேப்பர் அந்த வீட்டில் வந்து விழுவதிலிருந்து அவரது பொழுது ஆரம்பிக்கும். கேப்பைக்கூழைக் குடித்து, வாசல் பக்கம் வந்து, கண்களை இடுக்கியபடி மெல்ல படிப்பார். வெத்தலை ஒழுக, தாமரைச்சிங்கம் சுருட்டு புகைந்து கொண்டு இருக்கும். இரண்டு மணி நேரத்துக்கும் மேல் ஆகும். அப்புறம் பக்கத்தில் உள்ள பெஞ்ச்சில் பேப்பரை வைத்துக் கொண்டு காத்திருப்பார்.
தெருவில் உள்ள வாலிபப் பெண்களுக்கு அந்த வீட்டில் பல காரியங்கள் இருக்கும். மோர் வாங்க, தோட்டத்தில் பூ பறிக்க, சாணம் எடுக்க என தினமும் நான்கைந்து பேர் காலையில் வருவது வாடிக்கை. வந்ததும், “யம்மா, பாட்டியப் பாக்கப் போறியா, வரும் போது அந்த பேப்பர்ல இன்னிக்கு தொடர் கத வந்திருக்கு, கொஞ்சம் படிச்சுக் காமிச்சுட்டு போம்மா..” என கனிவோடு சொல்வார். அந்தப் பெண்களுக்கு விபரம் தெரியும். சிரிப்பும், எரிச்சலும் முகத்தில் சேர்ந்து வரும். “சரி தாத்தா”சொல்லி உள்ளே போவார்கள். வேலை ஆனதும், பின்பக்கக் கதவு வழியே அடுத்தத் தெரு சுற்றி வீட்டுக்குப் போய் விடுவார்கள். ஞாபக மறதியில் முன்பக்கம் வந்தால் மாட்டிக் கொள்வார்கள். பேப்பரை படித்துக் காட்டித்தான் ஆக வேண்டும்.
தினத்தந்தி பேப்பரில் அமுதா கணேசன், குரும்பூர் குப்புசாமி போன்றவர்களின் தொடர்கதை ஒருநாள் விட்டு ஒருநாள் வரும். ஒவ்வொரு அத்தியாயத்திலும் பெண்ணின் அங்கங்களை வர்ணித்தோ, ஆணும் பெண்ணும் கொள்ளும் உறவு குறித்தோ சித்தரிப்புகள் கண்டிப்பாய் இருக்கும். இல்லையென்றால் இருக்கவே இருக்கும் குருவியார் பதில்கள். அவைகளை வாசிக்கச் சொல்லிவிட்டு, சுருட்டை பற்றவைத்து ஈஸிச்சேரில் சாய்ந்து கொள்வார். “ஊம்.. ஊம்” கொட்டிக் கொண்டே இருப்பார். பானை வயிறு அதற்கேற்ப எழுந்து அடங்கி அசைந்து கொண்டிருக்கும். கதையின் அந்தப் பகுதியை அந்தப் பெண்ணின் குரல் நெருங்க, நெருங்க இந்த ”ஊம்”கள் வேகம் கொள்ளும். படிக்கும் பெண்கள் அந்த இடத்தில் தர்மசங்கடத்தோடு மிக வேகமாய் முணுமுணுப்பாய்க் கடக்க முனைவார்கள். சட்டென்று “சத்தமாப் படி” என்பார். பாவம் அவர்கள், திரும்பப் படிக்க வேண்டியதிருக்கும்.
பெண்களும் பலவித உபாயங்களைக் கையாண்டுதான் பார்த்தார்கள். முன்கூட்டியே தினத்தந்தி படித்து வைத்துக்கொண்டு அந்த இடம் வந்ததும் தாண்டிப் போவார்கள்.
“ஏளா, என்ன விட்டுட்டுப் படிக்க” என்று விவஸ்தையில்லாமல் கத்துவார்.
எந்த உணர்வும் இல்லாமல் ஜடம் போல் வேகமாய் வாசிப்பார்கள்.
மெல்லப் படி, மெல்லப் படி” என்று பின்னாலேயே சொல்லிக் கொண்டிருப்பார். ஒரு கட்டத்தில் அதிருப்தியுற்று, மொத்தமாய் திரும்பப் படிக்க வைத்து விடுவார். இந்தக் கைவரிசையை ஒரு பெண்ணிடம் மட்டும் காட்டுவதில்லை. வருகிற போகிற எல்லாப் பெண்களின் குரலிலும் தெரிந்து கொள்ள விரும்புவார்.
“தாத்தா... சக்திக்கனி காலைல படிச்சுட்டாளாமே” என்று சொல்லி பத்ரகாளி தப்பிக்க பார்ப்பாள். விட மாட்டார்.
“அவ சரியாப் படிக்கலம்மா...நீதான் நல்லா படிப்பே” என்று குளிப்பாட்டி உட்காரவைத்து விடுவார்.
தெருவில் உள்ள பெண்கள் எல்லாம் “தந்தித் தாத்தா”வின் தகிடுதத்தம் குறித்துப் பேசி சிரித்துக் கொண்டார்கள். அதற்குப் பிறகுதான் வீட்டின் பின்பக்க வழியாக ஓடுவது நடந்தது. இன்னொன்றும் செய்தார்கள் அப்படியே ஒருத்தி வாசிக்க வேண்டி வந்து விட்டால், அவள் அந்தக் கதை வந்திருக்கும் பக்கப் பேப்பரை மட்டும் அசைவில்லாமல் எடுதுக் கொண்டு வந்து விடுவாள். மற்ற பெண்கள் தப்பிப்பார்கள். ”தந்தி”, ”தந்தி” என்று தாத்தா தட்டோலம் விட்டுக் கிடப்பார் அன்று முழுவதும்.
ஒருநாள் இந்தச் சதியையும் கண்டுபிடித்து அமுதாவை ”இப்படி திருடிட்டுப் போறியே... என்னப் பொம்பளப் பிள்ள நீ” என்று சத்தம் போட்டார்.
விஷயம் புரியாமல் பாட்டியும் முன்பக்கம் வந்து அமுதாவைச் சத்தம் போட்டார்கள். அவ்வளவுதான். அடக்கி வந்ததெல்லாம் வெடித்ததைப் போல “ஆமா.. நீங்க அசிங்கத்தையெல்லாம் படிக்கச் சொல்லி கேட்டுட்டு இருப்பீங்க... நாங்க படிச்சிட்டு இருக்கணுமோ. வயசானாப் போதுமா..” என்று கத்தித் தீர்க்கவும் தாத்தா பேச்சே வராமல் அடங்கிப் போனார். பாட்டியோ “ச்சே...” என்று தாத்தாவைப் பார்த்துச் சொல்லி உள்ளே போய் விட்டார்கள்.
சில நாட்கள் தினத்தந்திகள் பிரிக்கப்படாமலே அந்த வீட்டில் கிடந்தன. பெண்களும் அதைப் பார்த்து கடந்து போய் வந்து கொண்டிருந்தார்கள். தாத்தா அவர்களைப் பார்த்ததும் எதுவும் பேசாமல் கண்களை மூடிக் கொள்வார். ஒரு வாரம் கழித்து அமுதா அவர் அருகில் வந்து, “தாத்தா.. பேப்பர் படிக்கட்டுமா” என்று மெல்ல கேட்டாள். எட்டிப் பார்த்தார். அவள் முகம் வாடி இருந்தது. கண்கள் கருணையோடு பார்த்தன. வேண்டாம் என்பதாய் தலையை இடப்பக்கமும், வலப்பக்கமும் அசைத்தார். “இல்ல.. தாத்தா. படிக்கிறேன்.” அவள் குரல் தழுதழுத்த மாதிரி இருந்த்து. ஈஸிச் சேரில் இருந்து தலையை நிமிர்த்தி அவள் தலையைக் கோதி, எழுந்து நின்று அவள் உச்சந்தலையில் முத்தம் கொடுத்து “நீ நல்லாயிருக்கணும்மா” என்றார். அவர் குரல் தழுதழுத்து இருந்தது.
(பி.கு: தாத்தா அந்த ஊரில் இறந்து போய் முப்பத்தைந்து வருடங்களாகி விட்டன. பேப்பர் படித்த பெண்கள் எங்கெங்கோ கல்யாணம் ஆகிப் போய் பாட்டிகளாகி விட்டனர். எப்போதாவது வரும் அவர்களின் அபூர்வமான ஊர் ஞாபகங்களில் தாத்தாவும் இருக்கத்தான் செய்வார். தினத்தந்தி எல்லா ஊர்களுக்கும் தானே செல்கிறது.)
- மாதவராஜ்
நீண்ட நாட்களுக்குப் பிறகு மாதுவின் நல்ல கதை.லட்சுமணப்பெருமாளின் ஒட்டுவாரொட்டி,அப்புறம் பொன்னீலனின் ஒரு கதை என இந்த வயதான காலத்துக்காமம் பற்றி தமிழில் மிக அரிதான படைப்புகளே வந்துள்ளன.வாழ்த்துக்கள் மாது மற்றும் மாற்று.
ReplyDeleteயதர்த்தமான கதை
ReplyDeleteசொல்லிச் சென்றவிதமும் முடித்தவிதமும் அருமை
வாழ்த்துக்கள்
முதுமையின் தீராத ஆசைகளில் காமமும் ஒன்றென்பது அறிந்த விசயம்தான் எனினும் தீராத ஆசைகளை வார்த்தைகளில் தீர்த்துகொள்வதான ஆற்றாமை முதுமைக்கே உரியதோ! எதார்த்த நடை.... எழிலான கதை.... அற்புதம்.
ReplyDelete