1948 ஆம் ஆண்டில் பாலஸ்தீன் மற்றும் இஸ்ரேல்
என இரண்டு நாட்டிற்கான எல்லைகளை முடிவும் செய்கிற தீர்மானம் ஐ.நா. சபையில்
நிறைவேற்றப்பட்டது. ஆனால் அத்தீர்மானத்தில் உள்ளபடியான
இடங்களை இன்றுவரையில் பாலஸ்தீ னத்திற்கு தர மறுப்பதோடல்லாமல், அதனை ஒரு
நாடாகக் கூட அங்கீகரிக்க மறுக்கிறது இஸ்ரேலும் அதன் தோழமை நாடான
அமெரிக்காவும். 1948 ஆம் ஆண்டு முதல் இன்று வரை எண்ணற்ற போர்கள் மூலமாக பல
லட்சக்கணக்கான பாலஸ்தீன மக்களை அவர்களின் வாழ்விடங்களைவிட்டு
அடித்துவிரட்டியும், பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை ஆக்கிரமித்தும்,
ஆக்கிரமித்த இடங்களில் நிரந்தரக்குடியிருப்புகளை அமைத்தும் தன்னுடைய நாட்டு
எல்லையினை விரிவாக்கிக்கொண்டே போகிறது இஸ்ரேல். இஸ்ரேல் அரசின் சட்டப்படி
பார்த்தால்கூட இவற்றில் பலவும் சட்டவிரோதமானதாக இருக்குமளவிற்கு மிகப்பெரிய
ஆக்கிரமிப்பினை நடத்திவருகிறது.
1988 இல், பாலஸ்தீனத்திற்கு சுயாட்சி உரிமை வழங்கக்கோரி ஐ.நா. சபையில்
கொண்டுவரப்பட்ட தீர்மானத்தினை 106 நாடுகள் ஆதரித்தவேளையில் அமெரிக்கா
மற்றும் இஸ்ரேல் ஆகிய இரண்டு நாடுகள் மட்டுமே எதிர்த்து வாக்களித்தன.
உலகின் 80% மக்கள் வாழ்கிற இந்தியா, சீனா, ரசியா,ஆப்பிரிக்க நாடுகள்,
தென்னமெரிக்க நாடுகள் உள்ளிட்ட 131 நாடுகள் பாலஸ்தீனத்தை ஒரு நாடாக
அங்கீகரித்துவிட்டபோதிலும், அதனை வன்மையாக கண்டிக்கிற ஒரு நாடாக அமெரிக்கா
இன்றளவும் இருந்துவருகிறது. 2012 இல் பாலஸ்தீனத்திற்கு ஐ.நா.
சபையில் உறுப்பினரல்லாத பார்வையாளர் தகுதியினை வழங்குகிற தீர்மானத்தை,
உலகின் 138 நாடுகள் ஆதரித்தபோதும் அமெரிக்கா, இஸ்ரேல், கனடா போன்ற 9
நாடுகள் மட்டும் எதிர்த்து வாக்களித்தன. இவை எல்லாவாற்றுக்கும் ஒரு
படி மேலே சென்று, "ஐ.நா. சபையில் உறுப்பு
நாடாக அறிவிக்கிற தீர்மானத்தை ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில்
யாரேனும் கொண்டுவந்தால், எங்களுடைய 'வீட்டோ' அதிகாரத்தை பயன்படுத்தித்
தோற்கடிப்போம்" என்று சொன்னவர் வேறுயாருமல்ல அமெரிக்க அதிபர் ஒபாமாவேதான்.
அமெரிக்காவும் ஐ.நா.வும் நமக்கு விடிவுகாலத்தினை ஏற்படுத்தித் தந்துவிடும்
என்று நம்புகிற நாடுகளுக்கெல்லாம் பாலஸ்தீனமே நம் கண்முன்னே சாட்சியாக
இருக்கிறது.
இவற்றிற்கெல்லாம் சிறிதும்
சளைக்காத/சலிக்காத பாலஸ்தீன மக்கள் 60 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து
தங்களின் உரிமைகளுக்காக வெவ்வேறு வடிவங்களில் வெவ்வேறு
விதங்களில் போராடிக்கொண்டிருக் கின்றனர். இஸ்ரேலிய அரசும் இஸ்ரேலிய மக்களும் ஒன்றல்ல என்பதையுணர்ந்திருக்கிற பாலஸ்தீன மக்கள், இஸ்ரேலிய மக்களுடைய ஆதரவினையும் பெறுவதில் பெரியளவில் முன்னேற்றமும் கண்டிருக்கிறார்கள். சமீபத்தில், இஸ்ரேலிய மக்களிடையே நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பொன்றினில், 61% இஸ்ரேலிய மக்கள் பாலஸ்தீனர்களின் கோரிக்கைகளை ஆதரிப்பதாக சொல்லியிருக்கிறார்கள். பாலஸ்தீன மக்களுடைய போராட்ட முறைகளில் "பிளின்" என்கிற ஒரு சிறு கிராமத்தின் போராட்ட வடிவத்தையும் அதன் அனுபவங்களையும் முன்னிறுத்தி எழுதப்பட்டிருக்கிற கட்டுரைதான் இது.
வெஸ்ட் பேங்கின் எல்லையோரத்திலிருக்கும் ஆலிவ்மரங்கள்
சூழ்ந்த அழகான கிராமம்தான் பிளின். அமைதியான அக்கிராமத்தின் நடுவே
வேலியிட்டு, கிராமத்தின் பெரும்பகுதியான விவசாய நிலங்களை ஆக்கிரமிப்பு
செய்தது இஸ்ரேல் அரசாங்கம். விவசாயத்தை நம்பியே வாழ்ந்துவருகிற அம்மக்களின்
விளைநிலங்கள் எல்லாம் திடீரென ஒருநாள் வேலியொன்று அமைக்கப்பட்டு
பிரிக்கப்படுகிறது. அவர்களது குடியிருப்புகள் வேலிக்கு இந்தப்புறமும்,
விவசாய நிலங்கள் வேலிக்கு அந்தப்புறமும் இருக்கிறவாறு
வேலியமைக்கப்பட்டது. விளைந்திரு க்கிற ஆலிவ் காய்களை பறிக்கக்கூட
முடியாத நிலை உருவாகிற்று. தங்கள் கிராமத்தையும் வாழ்வாதாரத்தையும்
பரித்துக்கொண்ட அவ்வேலியினை அகற்றக்கோரி, அவ்வப்போது அமைதியான முறையில்
போராட்டம் நடத்தத் துவங்கினர் கிராம மக்கள்.
பிளின் கிராம மக்களில் ஒருவரான இமாத் பர்நாத் என்கிற விவசாயக்
குடும்பத்தைச் சேர்ந்தவருக்கு இச்சூழலில் குழந்தை பிறக்கிறது.
அக்குழந்தைக்கு கிப்ரேல் என்று பெயர் வைக்கிறார். அவருடைய குழந்தையின்
குறும்புகளை படம்பிடிக்க புதிதாக ஒரு கேமரா வாங்குகிறார். அக்கேமராவினை
மக்கள் போராட்டங்களுக்கும் எடுத்துச்செல்கிறார். காரணமோ குறிக்கோளோ
ஏதுமின்றி போராட்டங்களில் நடக்கிற நிகழ்வுகளை வீடியோ
எடுக்கிறார். தொடர்ந்து ஐந்தாண்டுகளுக்கும் மேலாக அவர் எடுத்த
நூற்றுக்கணக்கான மணிநேரங்கள் ஓடக்கூடிய வீடியோக்களில்
முக்கியமான நிகழ்வுகளை தொகுத்து ஒரு திரைப்படமாக மாற்றியிருக்கிறார்கள்
இமாத்தும், இஸ்ரேலிய இயக்குனரான கை தாவிதியும். இருநாட்டு சமூக
ஆர்வலர்களும் இணைந்து இத்திரைப்பட உருவாக்கத்திற்கும் வெளியீட்டிற்கும்
பெருமளவில் தங்களது உழைப்பினை செலுத்தியிருக்கிறார்கள். 2012 ஆம் ஆண்டின் ஆஸ்கர் விருதுப்பட்டியலில் இறுதி ஐந்து ஆவணப்படங்களின் பரிந்துரைப்பட்டியல் வரை இத்திரைப்படம் தேர்வாகியிருந்தது.
முதல் கேமரா:
முதல் கேமரா:
பிளின் கிராம மக்களின்
போராட்டங்கள் அனைத்தும் அறவழிப்போராட்டங்களாக இருந்தபோதும், இஸ்ரேலிய
இராணுவத்தினரை வெறுப்படையச் செய்கிறது. அதனால் அம்மக்களின் போராட்டத்தை
ஒடுக்க மிகக்கடுமையான வழிமுறைகளை எல்லாம் பின்பற்றுகிறார்கள் இஸ்ரேலிய
இராணுவத்தினர். கண்ணீர்ப் புகை குண்டுகளாலும், பலத்த காயங்களை
ஏற்படுத்தக்கூடிய கடினமான இரப்பர் குண்டுகளாலும் போராடும் மக்களை
தாக்கத்துவங்குகின்றனர். ஆனாலும் ஒவ்வொரு முறையும் பல புதிய நூதனமான
முறைகளில் தங்களது போராட்டங்களைத் தொடர்ந்து நடத்தி சர்வதேச ஊடகங்களின்
கவனத்தையும், இஸ்ரேலிய அரசின் கவனத்தையும் ஈர்த்துக்கொண்டிருந்தனர் பிளின்
கிராம மக்கள். அப்போராட்டத்தில் இமாத்தின் நெருங்கிய நண்பர்களான இரண்டு
இளைஞர்கள் முன்னணியில் நின்றனர். போராட்டத்தின் நடுவே
சிறுவர்களுக்கு வேடிக்கை விளையாட்டுகளை சொல்லிக்கொடுத்துக்கொண்டும்,
எதிர்காலம் குறித்த நம்பிக்கையினை அளித்துக்கொண்டும், அச்சிறுவர்களுக்கு
மிகவும் பிடித்தவராகவும் ஒரு முன்மாதிரியாகவும் திகழ்ந்த ஃபில் என்கிற
இளைஞரும், துடிப்புமிக்கவராகவும் கையில் எவ்வித ஆயுதங்களுமின்றி
துப்பாக்கிகளேந்திய இஸ்ரேல் இராணுவத்தினரிடமே தன்பக்கத்து
நியாங்களை அஞ்சாமல் பேசுகிற அதீப் என்கிற இளைஞரும் மக்கள் போராட்டங்களின்
முன்னணியில் இருந்து போராட்டத்தை வழிநடத்தினர்.
இப்படியே போராட்டங்களும் பதிலடிகளுமாக கழிந்தது
அவர்களது வாழ்க்கை. ஆலிவ் மரங்களிலிருந்து ஆலிவ் காய்களை பறிக்கிற பருவம்
வந்தபோது, அதனைப் பறிக்க உரிமை கோரி அமைதிவூர்வலத்தினை நடத்தினர் பிளின்
கிராம மக்கள்.
"கட்டுமானப் பணிகள் நடக்கிற இடத்தைவிட்டு வெளியேறுங்கள். இல்லையேல் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்படுவீர்கள்"
என்று
இஸ்ரேலிய இராணுவத்தினர் துப்பாக்கிகளை காட்டி மிரட்டியதுடன், திடீரென
துப்பாக்கிச்சூட்டினையும் நடத்தினர். துப்பாக்கி முழக்கங்களும் தடியடிகளும்
மக்களை திணறடித்தன. இமாத்தின் உடன்பிறந்த சகோதரரான ரியாத்தை இஸ்ரேல்
இராணுவத்தினர் கடுமையாக தாக்கிக்கொண்டிருந்தனர். போராட்டத்தை வீடியோ
எடுத்துக்கொண்டிருந்த இமாத்திற்கு என்னசெய்வதென்றே தெரியாமல், இஸ்ரேலிய
இராணுவத்தின் தாக்குதலையும் தொடர்ந்து படம்பிடித்தார். அவர்களுடைய
கூட்டத்திலேயே ஒருவருக்கொருவர் அடித்துக்கொண்டிருந்ததை பாரதத் குழம்பிப்
போனார் இமாத். தன்னுடைய கேமராவில் உற்றுநோக்கியபோதுதான் அவர்கள் இஸ்ரேலிய
இராணுவத்தினர் என்பதும், கூட்டத்தில் குழப்பம் விளைவிக்கின்றனர் என்பதும்
புரிந்தது. தொடர்ந்து வீடியோ எடுக்கவேண்டிய அவசியத்தை நன்கு உணர்ந்து
அதனைத் தொடர்ந்தார் இமாத். தன்னுடைய சகோதரர் ரியாத்தை கைது செய்து இஸ்ரேல்
இராணுவத்தினர் அழைத்துச்செல்வதைக்கூட வீடியோ எடுக்க நேர்ந்தது.
இனிவரும் போராட்டங்களை முறையாக திட்டமிட்டு நடத்துவது என்று
முடிவெடுத்தனர் கிராம மக்கள். பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாகக்
குரலெழுப்பும் இஸ்ரேலிய ஆர்வலர்களையும் இணைத்துக்கொண்டு போராட்டத்திற்கான
யூகங்களை வகுத்தனர். இஸ்ரேலிய அரசியல் ஆர்வலர்களுக்கு தங்கள் கிராமத்தின்
பெரும்பகுதியினை இஸ்ரேல் அரசு பறித்துக்கொண்ட உணமையினை ஆதாரத்துடன்
விளக்கிக்கூறினர். இனிநடத்தப்படுகிற போராட்டங்கள் அனைத்தும் திட்டமிட்டப்
போராட்டங்களாக இருக்கவேண்டுமென்று முடிவெடுக்கப்படுகிறது. வாரந்தோறும்
வெள்ளிக்கிழமைகளில் பெண்கள் மற்றும் குழந்தைகள் சகிதமாக
குடும்பங்குடும்பமாக புதிதாக அமைக்கப்பட்டிருக்கிற வேலிக்கு அருகே சென்று
அமைதியான முறையில் போராட்டம்
நடத்த ஊர்மக்கள் அனைவரும் முடிவுசெய்தனர். அதனை ஊர்முழுக்க
ஒலிப்பெருக்கியில் அறிவித்தும்விடுகின்றனர்.
"குண்டுகள் கண்டும் பயமில்லை.... துப்பாக்கிகள் பார்த்தும் பயமில்லை..."
என்று
முழக்கங்கள் எழுப்பிக்கொண்டே வெள்ளிக்கிழமைகளில் பெண்கள்-ஆண்கள்,
சிறுவர்கள்-பெரியவர்கள் என்கிற பேதமின்றி ஊர்மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து
வெளியின் அருகே சென்று அமைதியான முறையில் அறவழிப்போராட்டம் நடத்தினர்.
"நாங்கள் இங்கேதான் பிறந்தோம். இது எங்கள் நிலம்... சாகும்வரை இங்குதான் வாழ்வோம்..."
என்றெல்லாம் அவர்கள் ஒருபுறம்
குரலெழுப்பிக்கொண்டிருக்க , மறுபுறம் வேலியும் ஆக்கிரமிப்புக்கட்டிடங்களும்
வளர்ந்துகொண்டே போயின.
ஒருநாள் பெளின் மக்களுடன் சர்வதேச மனிதவுரிமை ஆர்வலர்களும்
இணைந்து, வேலிக்கம்பிகளை இறுகப்பிடித்துக்கொண்டு போராட்டம் நடத்தியபோது,
எரிவாயு குண்டுகளை வீசினர் இஸ்ரேல் இராணுவத்தினர். அதில் ஒரு குண்டு
தாக்கி, இமாத்தின் கையில் காயமடைந்ததுடன் அவரது கேமராவும் சேதமடைந்தது. 2005 குளிர்க்காலம் முதல் 2005 இலையுதிர்காலம் வரை இமாத்துடன் இருந்த அவரது முதல் கேமரா உடைந்தது.
இரண்டாவது கேமரா:
கேமரா இல்லாமல் இருக்கமுடியாது என்கிற நிலைக்கு வந்துவிட்ட இமாத்திற்கு, அவரது நண்பர் உதவியுடன் இரண்டாவது கேமரா கிடைத்தது. வேலியினை எதிர்த்து பிளின் கிராம மக்கள் நடத்தத்துவங்கிய போராட்டத்தில் முதன்முதலாக கைதுசெய்யப்பட்ட இமாத்தின் சகோதரர் ரியாத்தை, ஒரு மாதத்திற்குப் பிறகு விடுதலை செய்தது இஸ்ரேல் அரசு.
"அவனைச்சுடு... அவனைச்சுடு.."
என்று கொக்கரித்துக்கொண்டே,
அதீப்பை குறிபார்த்து அவனது தொடைகளில் துப்பாக்கி குண்டுகளால் துளைத்தது
இஸ்ரேலிய இராணுவம். ஏனென்று கேட்டவர்கள் கைதுசெய்யப்பட்டனர். அதீப்பின்
தொடையில் பட்ட காயம் சரியாவதற்கு ஓராண்டு ஆனது. கடுங்கோபமிருப்பினும்,
அதனிலிருந்து தங்களது கிராம சிறுவர்களுக்கும் இளைஞர்களுக்கும்
நம்பிக்கைக்கீற்றினை வளர்க்கவே முயற்சித்தனர்.
பாலஸ்தீன நிலங்களை ஆக்கிரமிப்பதற்கு, இஸ்ரேல்
அரசு தொடர்ந்து பல வழிமுறைகளைக் கையாண்டது. அவற்றில் சில வழிமுறைகள்,
இஸ்ரேல் அரசின் சட்டப்படி பார்த்தால்கூட சட்டவிரோதமானதாக இருக்கும்.
மிகப்பெரிய டிரைலர்களையும் கண்டைனர்களையும் புதிய ஆக்கிரமிப்புகளுக்கு
அருகினில் வைத்து, மேலும் இடங்களை ஆக்கிரமிப்பது ஒரு வழிமுறை.
இதனைத்தட்டிக்கேட்ட பிளின் கிராம மக்களை அடித்துவிரட்டுகின்றனர். மறுநாள்,
பிளின் கிராம மக்களும் அதே போன்றதொரு டிரைலரை வேலிக்கு அருகே
வைக்கிறார்கள். ஆனால், அதனையெல்லாம் அப்புறப்படுத்த இஸ்ரேலிய
இராணுவத்திற்கு சில நிமிடங்களே போதுமானதாக இருந்தது. டிரைலரை வைப்பார்கள்;
பின்னர் காங்கிரீட் தளமமைப்பார்கள்; பின்னர் நிலத்திற்கு உரிமை கொண்டாடி,
கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள பெரிய கட்டுமான நிறுவனங்களை வரவழைப்பார்கள்.
பிளின் கிராமத்தைப் பொருத்தவரை, இஸ்ரேலிய அரசிற்கு பெரும் பிரச்சனையாக
இருப்பது ஆண்டாண்டுகாலமாக வளர்ந்திர்ருக்கும் ஆலிவ் மரங்கள்தான். எனவே
இரவோடு இரவாக அவற்றையெல்லாம் கொளுத்திவிட்டனர். எரிந்த ஆளிவ்மரங்களைப்
பார்த்து கண்ணீர் விட்டனர் கிராமமக்கள். மறுநாள் ஊர்மொத்தமும் ஆளுக்கொரு
ஆலிவ் மரக்கன்றுகளை கைகளில் ஏந்தி, எரிக்கப்பட்ட அதே இடங்களில் நடுவதற்குச்
சென்றனர் பிளின் கிராம மக்கள். மரக்கன்றுகளோடு வந்த கிராம மக்களை, எரிவாயு
குண்டுகளாலும் துப்பாக்கிச்சூட்டின்மூலமும் விரட்டியடித்தது இஸ்ரேல்
இராணுவம். இமாத்தின் இரண்டாவது சகோதரர் இயத்தை கைதுசெய்து கொண்டுபோனது
இஸ்ரேலிய இராணுவம்.
வேலிக்கு அருகே பிளின் கிராம மக்கள் அமைத்து
வைத்திருந்த கண்காணிப்பு குடிசையினையும் எரித்து சாம்பலாக்கியிருந்தது
இஸ்ரேல் இராணுவம். மறுநாளே, அதீப் மற்றும் ஃபில் உள்ளிட்ட இளைஞர்கள்
ஒன்றிணைந்து, அங்கே மீண்டுமொரு கண்காணிப்பு குடிசையினை அமைத்தனர். இஸ்ரேல்
அரசின் இத்தனைக் கொடுமைகளைக் கண்டும் துவளாமல், மீண்டும் மீண்டும்
நம்பிக்கையோடு போராடினார்கள் பிளின் கிராம இளைஞர்கள். ஒருநாள்
ஆக்கிரமிப்புக் கட்டிடங்களைக் கட்ட உதவும் கிரேன் எந்திரத்தின் மீதேறி
ஆக்கிரமிப்பினைக் கண்டித்து குரல் கொடுக்கிறான் ஃபில்லின் சகோதரன் தாபா.
அதற்காக இஸ்ரேல் இராணுவத்தினரால் கைது செய்து அழைத்துச் செல்லப்படுகிறான்.
இதனை படமெடுத்துக்கொண்டிருந்த இமாத்தை, "இனி நீ படமெடுத்தால் உன்னுடைய எலும்புகளும் உடைக்கப்படும்" என்ற கடுமையான எச்சரிக்கையோடு அவரது கேமராவை அடித்தும் நொறுக்குகிறார்கள் ஆக்கிரமிப்பாளர்களும் இஸ்ரேலிய இராணுவத்தினரும். 2006 குளிர்க்காலம் முதல், 2007 இலையுதிகாலம் வரை உழைத்த இமாத்தின் இரண்டாவது கேமராவும் உடைக்கப்பட்டது.
மூன்றாவது கேமரா:
இமாத்தின் மகன் கிப்ரேலுக்கு மூன்று வயதாகிவிட்டது. பிளின் கிராமத்தின் நடுவே போடப்பட்ட வேலிக்கும், அம்மக்களின் போராட்டத்திற்கும் தான். பிளின்
மக்களின் போராட்டம் ஒரே நாளில் முடிந்துவிட்ட போராட்டமாக இல்லாமல்,
வெள்ளிக்கிழமைகள் தோறும் ஆக்கிரமிப்பிற்கு எதிரான மக்கள் திருவிழாவாக
மாறியது. கைகளில் ஆயுதங்களின்றி வாத்தியங்களை வாசித்துக்கொண்டு தங்களது
எதிர்ப்பினைத் வெளிப்படுத்திய அம்மக்கள் மீது, எப்போதும் போல துப்பாக்கி
குண்டுகளாலேயே பதிலளித்துக்கொண்டிருந்தது இஸ்ரேல் இராணுவம். இமாத்தின்
மூன்றாவது சகோதரரான ஜாபரை துப்பாக்கியால் சுட்டு, அதன்பின்னர் கைதுசெய்து
தூக்கிச்சென்றனர் இஸ்ரேல் இராணுவத்தினர்.
இவற்றையெல்லாம்
பார்த்துக்கொண்டிருந்தான் இமாத்தின் மூன்று வயது மகன் கிப்ரேல், வீட்டிற்கு வந்ததும் தன்னுடைய தாயிடம் மழலை மொழியில் அனைத்தையும் விளக்கினான்.
கிப்ரேல்: "அம்மா! அப்பறம் அந்த இராணுவத்து ஆளுங்க வந்தாங்களா.. வந்து எல்லாரையும் சுட்டுட்டே இருந்தாங்க.... எல்லா பக்கத்துல இருந்தும் சுட்டாங்கம்மா... நான் பயப்படவே இல்லையே... அப்பாவோட காரை சுத்தி வந்துட்டாங்கம்மா.. "
அம்மா: "நீ ஹீரோடா... எப்பவும் வெங்காயத்தை கையில் வெச்சிக்கோ. கண்ணீர் புகை குண்டுகளை வீசினாங்கன்னா, வெங்காயத்தை மோந்து பாத்தீனா, ஒன்னும் ஆகாது."
பிளின் மக்களின் அறவழிப்போராட்டங்களை எப்படியா வது
நிறுத்தியாகவேண்டும் என்று கடுமையான முயற்சிகளை எடுத்தது இஸ்ரேல்
இராணுவம். கிராமத்திற்குள்ளேயே நுழைந்து துப்பாக்கி முனையில் மக்களை
மிரட்டுவது போன்ற செயல்களில் ஈடுபட்டனர் இராணுவத்தினர். தங்களது கிராமத்தை
விட்டு வெளியேறச்சொல்லி, சிறு கற்களை வீசி தங்களது எதிர்ப்பினைத்
தெரிவித்தனர் மக்கள். ஊருக்குள்ளேயே நுழைந்து இமாத்தின் சகோதரரை கைது
செய்தது இழுத்துக்கொண்டு போனாது இஸ்ரேல் இராணுவம். இராணுவ ஜீப்பின்
மீதேறி அமர்ந்துகொண்டு இமாத்தி ன் தந்தை தன்னுடைய எதிர்ப்பைத்
தெரிவிக்கிறார். ஆனால், அவர்களை எல்லாம் உதறிவிட்டு, கடந்து செல்கிறது
இராணுவ ஜீப். இவையெல்லாம் என்றாவது ஒருநாள் பயன்படும் என்ற எண்ணத்தோடு,
இத்தகைய சூழ்நிலையிலும் தொடர்ந்து வீடியோ எடுக்கிறார் இமாத்.
எப்படியாவது மக்கள் போராட்டத்தை நிறுத்திவிடவேண்டுமென்று இரவுநே ரங்களிலும்
பிளின் கிராமத்திற்குள் நுழைந்து தன்னுடைய அட்டூழியங்களை நிகழ்த்தத்
துவங்கியது இஸ்ரேல் இராணுவம். எல்லோர் வீடுக்கதவுகளையும் மூடச்சொல்லி
ஆணையிடுவது, மீறுவோரை சுடுவது, 10 வயதிற்குட்பட்ட
சிறுவர்களைக்கூட கைதுசெய்வது போன்ற செயல்களில் ஈடுபட்டது இராணுவம். தங்களது
வயதொத்த நண்பர்களை கைது செய்ததை கண்டித்து, பிளின் கிராமத்து சிறுவர்கள்
அனைவரும் ஒன்றிணைந்து கிராமத்திற்குள்ளேயே நுழைந்திருக்கிற இராணுவத்தினர்
அருகே சென்று,
"எங்களுக்கு அமைதி வேண்டும்""எங்களது நிலம் வேண்டும்""எங்கள் கிராமத்தை விட்டு வெளியேறுங்கள்"
என்று முழக்கங்கள் எழுப்புகின்றனர்.
சிறுவர்கள் ஒட்டுமொத்தமாக இராணுவத்தினர் அருகே
பயமின்றி வந்திருப்பதைக் கண்டு, இஸ்ரேல் இராணுவத்தினரும் சற்று அஞ்சித்தான்
போகின்றனர். இருப்பினும், தங்களுடைய துப்பாக்கிகளை தயாராக
எடுத்து வைக்கின்றனர். நிலைமை மோசமாகிவிடுமோ என்றஞ்சி, சிறுவர்களை
எப்போதும் வழிநடத்துகிற ஃபில், அவர்கள் முன்னே வந்து பேசுகிறார்.
"இஸ்ரேலிய இராணுவத்தினரே! நீங்கள் எங்கள் கிராமத்திலிருந்து வெளியேறினால், யாரும் உங்கள் மீது கல்லெறிய மாட்டார்கள். இது ஒரு சிறிய கிராமம். ஏராளமான இஸ்ரேலியர்களும் இங்கே வந்துபோகிறார்கள். இஸ்ரேலியர்களும் எங்களது சகோதரர்கள்தான், நண்பர்கள்தான். நீங்கள் வெளியேறினால், நாங்களும் ஊருக்குள் சென்றுவிடுவோம்."
என்று
பேசிக்கொண்டிருக்கும்போதே துப்பாக்கிச் சூட்டினை துவங்குகிறார்கள் இஸ்ரேல்
இராணுவத்தினர். ஊருக்குள் நுழைந்து, ஒவ்வொரு வீடாக சோதனை செய்து,
ஒட்டுமொத்த சிறுவர்களையும் கைது செய்து இழுத்துக்கொண்டுபோகிறது இராணுவம்.
அன்று நள்ளிரவே இமாத்தின் வீட்டுக்கதவுகளைத் தட்டியது இராணுவம். கேமராவும் கையுமாக வெளியே வந்தார் இமாத்.
"இப்பகுதியினை இராணுவ பாதுகாப்புப் பகுதியாக அறிவிக்கப்பட்டுவிட்டது. யாருக்கும் வீடியோவெல்லாம் எடுக்க அனுமதியில்லை. மீறினால் ஊரை விட்டே வெளியேற்றப்படுவர். அதனால் கேமராவை கீழே போடு"
என்று எச்சரிக்கின்றனர் இராணுவத்தினர்.
"நான் நின்று கொண்டிருப்பது என்னுடைய வீடு. இதற்குள் நான் வீடியோ எடுப்பதை தடுக்க உங்களுக்கு உரிமையில்லை"
என்கிறார் இமாத்.
அவருடைய கேமரா படமெடுக்கமுடியாவண்ணம் வலுக்கட் டாயமாக திருப்பிவிடப்படுகிறது. அத்து டன், இராணுவத்தினர் மீது கல்லெறிந்தார் என்றொரு பொய்க்குற்றச்சாட்டு சுமத்தி இமாத்தை கைது செய்து அழைத்தும் சென்றுவிடுகின்றனர்.
சில நாட்களுக்குப் பின்னர், சட்டப்படி அணுகியதில்,
சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டு போராட்டங்களை வீடியோ
எடுக்கமுடியாமல் ஊருக்குவெளியே ஒரு வீட்டினில் வீட்டுக்காவலில்
வைக்கப்படுகிறார் இமாத். தொடர்சட்டப்போராட்டத்திற்குப் பின்னர், எவ்வித
ஆதாரமுமில்லாமையால், விடுதலை செய்யப்படுகிறார் இமாத். மீண்டும் பிளினுக்கு
வந்து பார்க்கையில், அம்மக்களின் போராட்டத்தில் சிறிதளவும் தொய்வின்றி
தொடர்ந்துகொண்டிருப்பதுகண்டு மகிழ்கிறார். தொடர்ந்து போராட்ட நிகழ்வுகளை
வீடியோ எடுக்கிறார் இமாத். இஸ்ரேலிய அரசு போட்டிருக்கிற வேலிக்கு எதிராக
ஏராளமான ஆதாரங்களை இஸ்ரேலிய மக்களின் துணையோடு சேகரிக்கப்பட்டிருக்கிறது.
ஒரு நாள் போராட்டத்தை படமெடுத்துக்கொண்டிருக்கையில்,
கண்ணிமைக்கும் நேரத்தில் இமாத்திற்கோ அல்லது அவரது கேமராவுக்கோ வைத்தகுறி,
அவரது கேமராவை உடைத்தெறிந்தது. 2007 குளிர்காலம் முதல் 2008 குளிர்காலம்
வரையில் அவருடன் இருந்து, இறுதியில் அவரது உயிரைக் காப்பாற்றிய அவரது மூன்றாவது கேமரா உடைக்கப்பட்டது.
நான்காவது கேமரா:
பிளினில் வெள்ளிக்கிழமை
போராட்டங்கள் தொடர்ந்துகொண்டே இருந்தாலும், வேலியின் நீளம் அக்கம்பக்கத்து
கிராமங்களையும் விட்டுவைக்காமல் வளர்ந்துகொண்டே போனது. இதுவரை பிளினில்
இமாத் படம்பிடித்த வீடியோ காட்சிகளை மற்ற கிராமங்களின் மக்களுக்கும் சிறிய
திரையமைத்து போட்டுக்காண்பித்து, மக்களிடையே ஒரு ஒற்றுமையுணர்வு உருவாக
முயற்சித்தனர். இதன் பலனாக 2008 ஆம் ஆண்டின் துவக்கத்தில் வெஸ்ட் பேங்கில்
அமைந்திருக்கும் பல கிராமங்களிலும் பிளினின் போராட்ட முறை பரவத்துவங்கியது.
அவர்களும் வேலியினை எதிர்த்து போராட்டங்கள் நடத்தினர். இதனால் இப்போராட்ட
முறை ஒட்டுமொத்த பாலஸ்தீன் மக்களிடமும் பரவி தனக்கு
மிகப்பெரிய தலைவலியாக ஆகிவிடுமோ என்கிற அச்சத்தில் இஸ்ரேலிய
அரசும் இஸ்ரேலிய இராணுவமும் பிளினில் தன்னுடைய அணுகுமுறையினை மேலும்
கடுமையாக்கியது. நிளின் என்கிற அருகாமை கிராம மக்களின் போராட்டத்தில்,
ஒருவர் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்படுகிறார். இதனைக் கண்டித்து பிளின்
கிராம மக்களும் அவர்களோடு இணைந்து அமைதிவூர்வலம் நடத்துகின்றனர்.
அவ்வூர்வலத்திலும் துப்பாக்கிச்சூடு நடத்தி, ஒரு
வன்முறைக்களமாக மாற்றியிருந்தது இராணுவம். கண்மூடித்தனமாக எரிவாயு
குண்டுகளை எல்லா கிராமங்களிலும் வீசிக்கொண்டே இருந்தது இராணுவம். அதன்பிறகு
மற்றுமொரு 11 வயது சிறுவனும் அவனது வீட்டினருகிலேயே
சுட்டுக்கொல்லப்பட்டான். அச்சிறுவனது இறுதிச்சடங்கிலேயே 17 வயது இளைஞர்
ஒருவரும் சுட்டுக்கொல்லப்படுகிறார். எங்கு நோக்கிலும் இரத்தக்காயங்களோடு
நடமாடுகிற மக்களின் அமைதிப்போராட்டத்தை வன்முறைப்போராட்டமாக மாறாமல்
தடுப்பது சற்றே கடினமான காரியமாகவே இருந்தது மக்களுக்கு. இத்தனை
கலவரங்களுக்கு மத்தியிலும், பிளினைச் சேர்ந்த ஃபில் தானும் நம்பிக்கையாக
இருந்து, கிராமத்து சிறுவர்களுக்கும் எதிர்காலம் குறித்தநம்பிக்கையினை
விதைத்துக்கொண்டே இருந்தார்.
வேலியை அகற்றக்கோரி இஸ்ரேலிய மனிதவுரிமை ஆர்வலர்களுடன் இணைந்து இஸ்ரேலிய நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கினில், பிளின் மக்களுக்கு ஆதரவான தீர்ப்பு வழங்கப்பட்டது. வேலியை உடனடியாக நீக்கி பிளின் கிராமத்தினை பிரிக்காதவாறு அமைக்கச்சொல்லி ஆணைபிறப்பித்தது இஸ்ரேலிய நீதிமன்றம். இதனைக்கேட்டதும் மகிழ்ச்சியிலும் கொண்டாட்டத்தி லும் திளைத்தனர் பிளின் கிராம
மக்கள். ஆனால் நாட்களும், வாரங்களும், மாதங்களும், ஒரு வருடமே
கூட நகர்ந்தபோதும், வேலிமட்டும் நகர்த்தப்படவுமில்லை, நீக்கப்படவுமில்லை.
வேலியை அகற்றக்கோரி இஸ்ரேலிய மனிதவுரிமை ஆர்வலர்களுடன் இணைந்து இஸ்ரேலிய நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கினில், பிளின் மக்களுக்கு ஆதரவான தீர்ப்பு வழங்கப்பட்டது. வேலியை உடனடியாக நீக்கி பிளின் கிராமத்தினை பிரிக்காதவாறு அமைக்கச்சொல்லி ஆணைபிறப்பித்தது இஸ்ரேலிய நீதிமன்றம். இதனைக்கேட்டதும் மகிழ்ச்சியிலும் கொண்டாட்டத்தி
பல மணிநேர காத்திருப்புக்குப் பின்னர், ஒருநாள்
தன்னுடைய விளைநிலத்தைப் பார்வையிட அனுமதிவாங்கி வேலியின் மறுபுறம்
செல்கிறார் இமாத். தன்னுடைய விளைநிலந்தானா என்று அடையாளம் தெரியாமல்
குழம்பிப்போகிற அளவிற்கு சேதங்களை சந்தித்திருக்கின்றன அவரது நிலங்கள்.
எரிந்து சாம்பலாகிப்போன பல ஆளிவ்மரங்கள், குப்பைமேடுகளாகவே காட்சியளிக்கும்
இடம் போன்றவைதான் அவர் அங்கேகண்ட காட்சி. ஆனாலும், நிலத்தினை உழுது,
மீண்டும் பல ஆலிவ் மரக்கன்றுகளை நட்டனர். வேலையை முடித்துவிட்டு
திரும்பவருகையில், சாலைகூட தெரியாதவண்ணம் இடித்துதரைமட்டமாக
ஆக்கப்பட்டிருக்கிற பாதையில் வருகையில், இமாத்தின் வண்டி நிலைதடுமாறி
ஆக்கிரமிப்புச் சுவரில் இடித்து விபத்தில் சிக்கிக்கொள்கிறது.
இவ்விபத்தினால், 2008 முழுவதும் அவரோடு இருந்த அவரது நான்காவது கேமரா உடைபட்டு செயலிழந்தது.
ஐந்தாவது கேமரா:
பலத்த காயங்களோடு இஸ்ரேலிய மருத்துவமனையொன்றினில் அனுமதிக்கப்படுகிறார்
இமாத். 20 நாட்கள் சுயநினைவின்றியும், அதன்பிறகு பலநாட்கள்
அபாயகட்டத்திலும் இருந்து, அவர் மீண்டு வருகையில் (2008இன் இறுதியில்)
பாலஸ்தீனத்தின் ஒரு பகுதியான காசா மீது கடுமையான தாக்குதலை
நடத்திக்கொண்டிருந்தது இஸ்ரேலிய அரசு. பிளின் கிராமமே காசாவின்
நிலைகுறித்து கவலை கொண்டிருந்த வேளையாகையால், இரண்டு மாதத்திற்குப்
பிறகு உடல்நிலைதேறி இமாத் வீட் டிற்கு திரும்பிவரும்போது பெரியளவில்
மகழ்ச்சியில்லை எவரிடத்திலும். இனி வாழ்நாள் முழுவதும் உடலைவருத்தி
செய்யப்படுகிற எந்த வேலையிலும் ஈடுபடக்கூடாது என்கிற மருத்துவர்களின்
அறிவுரை வேறு இமாத்தை மனதளவிலும் பாத்தித்தது.
பிளினின் போராட்டம் சர்வதேச அளவில் கவனத்தை
ஈர்த்தமையால், பிரபலமான தலைவர்களெல்லாம் பிளினிற்கு அவ்வப்போது வந்து
தங்களது ஆதரவினை நல்கிவந்தனர். இமாத்தும் எப்போதும் போல, பிளின் கிராம
மக்களின் அறவழிப்போராட்டங்களை படம்பிடித்துக்கொண்டிருந்தார்.
நான்காண்டுகளுக்கு மேலாக அம்மக்களது போராட்டம் ஒரு புறம்
நிகழ்ந்துகொண்டிருந்தாலும், மறுபுறம் அவர்களது விவசாய நிலங்களில்
காலம்காலமாக இருந்துவந்த ஆலிவ் மரங்கள் எல்லாம் எரிக்கப்பட்டும்,
வெட்டியெரியப்பட்டும் அங்கே ஆக்கிரமிப்பு கட்டிடங்களைக்
கட்டி எண்ணற்ற இஸ்ரேலிய மக்களை குடியமர்த்திக்கொண்டிருந்தது இஸ்ரேலிய
அரசு. வேலியினை ஓரடி பின்னோக்கி தள்ளமுடிந்தாலும் மிகப்பெரிய வெற்றிதான்
என்கிற அளவிற்கு அம்மக்களது மனநிலை இருந்தது.
தொடர்ந்து
நடைபெற்றுக்கொண்டிருந்த வெள்ளிக்கிழமைப் போராட்டங்களில் ஒரு
நாள், கிராமத்தின் சிறுவர்களுக்கு எப்போதும் நம்பிக்கையளித்துக்கொ ண்டும், அறவழிப்போராட்டத்தின் தூணாகவும் விளங்கிய ஃபில்லை குறிவைத்து சுற்றுக்கொன்றது இஸ்ரேலிய இராணுவம். ஒட்டுமொத்த
கிராமமுமே அதிர்ச்சியில் ஆழ்ந்தது. தங்களுடைய போராட்டத்தினை கைவிடாமல்,
மேலும் மேலும் தீவிரமாக்கினர் மக்கள். காசா, வெஸ்ட் பேங்க் என ஒவ்வொன்றாக
தங்களது நிலத்தினை இழப்பது ஒருபக்கமும், நம்பிக்கை நட்சத்திரங்களான
ஃபில்லைப் போன்றவர்களை இழப்பது மறுபக்கமும் எதிர்காலம் குறித்த மிகப்பெரிய
கேள்விக்குறியினையும் கவலையினையும் முன்னெப்போதையும்விட
அதிகரிக்கச்செய்திருந்தது. இரு ப்பினும் போராட்டத்தை விடாமல்
தொடர்ந்தனர் பிளின் மக்கள். ஒரு நாள், நொடிக்கு 2800 அடி அளவிற்கு வேகமாக
பாயக்கூடிய எம்16 ரக குண்டுகளில் ஒன்று இமாத்தின் ஐந்தாவது கேமராவினை பதம்பார்த்து உடைத்தது.
ஐந்து ஆண்டுகளாக பிளின் மக்கள் நடத்திய தொடர் போராட்டங்களாலும், அதன் விளைவாகக் கிடைத்த சர்வதேச ஆதரவின் பலனாலும், இஸ்ரேலுக்குள்ளேயும் உள்ள மக்களின் உழைப்பினால் கிடைத்த நீதிமன்றத் தீர்ப்பினாலும் அவ்வேலி அகற்றப்பட்டது. கிராமத்தின் விளைநிலங்கள் எல்லாம் மீண்டும் கிடைத்தது. ஆனால் ஆக்கிரமிக்கப்பட்டு வீடுகள் கட்டப்பட்ட இடங்களுக்கு அருகில் மிகப்பெரிய கான்கிரீட் சுவர் அமைக்கப்பட்டது. ஒரு கிராமத்தின் மக்களுக்கு அவர்களது தொடர் போராட்டத்தினால் கிடைத்த இவ்வெற்றி சிரியதாகிலும், மிகப்பெரிய நம்பிக்கையைக் கொடுத்திருக்கிறது. அதே நம்பிக்கையோடு, சற்று தள்ளி கட்டப்பட்டிருக்கிற புதிய தடுப்பு சுவரை எதிர்த்தும் ஆக்கிரமிப்புக் கட்டிடங்களை எதிர்த்தும் தங்களது போராட்டத்தினை துவங்கியிருக்கிறார்கள் பிளின் மக்கள். இமாத்தின் உடைக்கப்பட்ட ஐந்து கேமராக்களும், அவற்றில் படம்பிடிக்கப்பட்ட நாட்கணக்கில் ஓடக்கூடிய வீடியோ காட்சிகளுமே அம்மக்களின் போராட்ட உறுதியினை விளக்குவதற்கான சாட்சிகளாக நம்முன்னே இருக்கின்றன. பிளின் கிராம மக்களும் போராட்டத்தை தொடர்கிறார்கள். இமாத்தும் தன்னுடைய ஆறாவது கேமராவை எடுத்துக்கொண்டு போராட்டங்களை படம்பிடிக்கச் சென்றுகொண்டுதானிருக்கிறார். வேலியை அவர்கள் நீக்கவைத்ததைப்போல, என்றைக்காவது ஒருநாள் ஒட்டுமொத்த பாலஸ்தீன மக்களும் மகிழ்ச்சியுறும் நாளும் வருகிறபோது, இமாத்தின் மற்ற வீடியோ பதிவுகளையும் பார்க்கிற தருணம் வரத்தான்போகிறது. அதுவரை அவர்களுடைய போராட்டங்கள் வெல்லவும், இழந்தவற்றை மீட்டெடுக்கவும், நம்முடைய ஆதரவினை நல்குவோமாக...
-இ.பா.சிந்தன்
0 comments:
Post a Comment