இன்று இட ஒதுக்கீடு குறித்து மிக
விஷமத்தனமான பிரச்சாரங்கள் பொது வெளிகளிலும், ஊடங்களிலும் திட்டமிட்டு
பரப்பப்படுவதன் மூலம் இட ஒதுக்கீடு என்பதே ஏதோ போனால் போகட்டும் என்று போட்ட
பிச்சை போலவும் அந்த இட ஒதுக்கீட்டை ஒழித்து விட்டால் சாதிகளை ஒழித்து விடலாம் என்பது
போலவும் மக்களின் பொது புத்தியில் திணிக்கப்படுகிறது.
அதே போன்று இட ஒதுக்கீட்டில் படித்து பட்டம் பெறும் மாணவர்கள் தகுதி, திறமை குறைந்தவர்கள் என்றும் பரப்பப்படுகிறது.
ஐ.ஐ.டி, ஐ.ஐ.எம் போன்ற கல்வி நிறுவனங்களில் இட ஒதுக்கீட்டை
அமல்படுத்துவதை எதிர்த்து அவர்கள் படிக்க வந்தால் நாங்கள் செருப்பு தைக்கவும்,
பெருக்கவும் செல்ல வேண்டுமா என்று ஆதிக்க சாதி மாணவர்கள் போராட்டத்தில் இறங்கியதை
நாம் அறிவோம். அதிலும் குறிப்பாக பள்ளி கல்லூரிகளில் ஸ்காலர்ஷிப் வாங்கும்
மாணவர்களை கேலி செய்வதால் காயப்பட்டு, ‘எனக்கு இட ஒதுக்கீடு வேண்டாம்’ என்று
சொல்லத் துணிந்தோரும் உண்டு. ஒரு பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியிலே,
மாணவன் ஒருவன் இப்படிச் சொல்லி அதிர்ச்சிக்குள்ளாக்கினான்.
ஏதோ சில குடும்பங்களில், சிலர்
படித்து வேலை பெறுகின்ற பட்சத்தில் – உடனே அந்த குடும்பம் முன்னேறிவிட்டதாக கருதி
- இனி இட ஒதுக்கீட்டை பயன்படுத்தாதே என்று பேசுகிறவர்களும் உண்டு.
படி நிலை சமூகத்தில் ஆயிரமாயிரம்
ஆண்டுகளாக அடிமைப்படுத்தப்பட்டு சமூக அந்தஸ்து மறுக்கப்பட்ட மக்களுக்கான அடிப்படை
உரிமை இட ஒதுக்கீடு. சமமற்ற இந்த சமூக கட்டமைப்பை சமநிலைக்கு கொண்டு வர, தலைமுறை
தலைமுறையாக போராடியதன் விளைவாகவும் – அம்பேத்கர் போன்றோரின் கருத்துப்
போராட்டத்தாலும் விளைந்தது இட ஒதுக்கீட்டு உரிமை.
இட ஒதுக்கீடு அமலாகி இத்தனை
ஆண்டுகளுக்கு பின்னரும் பொதுப்பிரிவில் தேர்வாகும் SC/ST மாணவர்களின்
எண்ணிக்கை மிக குறைவாக உள்ளது. சில நேரங்களில் ஒன்றுமில்லை என்றே சொல்லலாம்.
ஏன் இப்படி? என்று கேட்டால் ஒரு
பொது பிரிவு மாணவன் 90 மதிப்பெண்கள் எடுத்து தேர்ந்தெடுக்கப்பட்டால் 91 மதிப்பெண்
எடுத்த SC/ST & OBC மாணவனையும் பொதுப்பிரிவிலே கொண்டு வர வேண்டும் ஆனால் இட
ஒதுக்கீடு குறித்த விளம்பர அறிவிப்பில் வயது வரம்பு, கட்டணம் போன்ற சலுகைகளைக்
காரணமாக வைத்து அதிக மதிப்பெண் எடுத்தவர்களையும் சலுகை பிரிவிலேயே இணைக்கிறார்கள்.
மேலும், விண்ணப்பிக்கும்போதே இட
ஒதுக்கீட்டு பிரிவில் விண்ணப்பிக்கச் செய்ய கட்டண மற்றும் இதர சலுகைகளை ஒரு
கவர்ச்சி விளம்பரம் போல் கொடுக்கிறது அரசு. இதனால் பொதுப் பிரிவு, ஆதிக்க சாதித்
தெருவைப் போல, தலித்துகள் இல்லாமல் காக்கப்படுகிறது. மிக நுணுக்கமாக கவனித்து
அனைவரின் கவனத்திற்கும் கொண்டு செல்லப்பட வேண்டிய விஷயம் இது.
ஆகவே, அரசு வேலைகளுக்கு
விண்ணப்பிக்கும்போது, தன்னால் அதிக மதிப்பெண்கள் எடுக்க முடியும் என்று
தன்னம்பிக்கை இருக்கின்ற SC/ST & OBC மாணவர்கள் பொதுப்பிரிவில் போட்டியிட
ஊக்குவிக்க வேண்டும். இது பொருளாதாரத்தில் பின் தங்கிய சற்றே குறைந்த மதிப்பெண்கள்
எடுத்திருக்கின்ற தலித்/பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு இட ஒதுக்கீட்டு வாய்ப்பை வழங்கும்.
அப்படி
சலுகைகள் பயன்படுத்தாமல் பொதுப்
பிரிவில் போட்டியிடும் மாணவர்கள், எதிர்பாராது மதிப்பெண் குறைந்தால் இட
ஒதுக்கீட்டில் இடம் கிடைக்கும். ஆகவே சம வாய்ப்புள்ள
தலித்துகள்/பிற்படுத்தப்பட்டோர் பொதுப் பிரிவில் இடம் கிடைக்கும். அது மிக
குறைந்த மதிப்பெண்கள் எடுத்து இட
ஒதுக்கீட்டினால் மட்டுமே இவர்களால் அரசு வேலைக்கு வர இயலுகின்றது என்கிற
தவறான
எண்ணத்தை முறியடிக்கவும் ஒரு வாய்ப்பாக இருக்கும்.
அம்பேத்கரின் மொழியிலேயே
சொல்வதானால் 5 ஐயும் 10 ஐயும் 2 ஆல் பெருக்கினால் சமமான எண் 20-ஐ கொண்டு வர இயலாது
5ஐ 4 ஆலும் 10-ஐ 2ஆலும் பெருக்கினால் மட்டுமே சமம் என்பது சாத்தியம்.
இட ஒதுக்கீடு மட்டுமே தீண்டாமை
ஒழிப்பு மற்றும் சாதி ஒழிப்பிற்கான சர்வரோக நிவாரணி அல்ல. ஆனால் இந்த மண்ணில் ”ஒரு
மனிதன் ஒரு மதிப்பு” என்று உருவாகின்ற சமத்துவ சமூகத்தை வென்றடையும் வரையிலும் இட
ஒதுக்கீடு அவசியமே.
- முத்தழகன் ம
0 comments:
Post a Comment