மின்னாற்றல் தேவை
ஆற்றல் என்பது நவீன மனித வாழ்க்கைக்கு உணவு போல. அதிலும் மின்சாரம் குறித்துக் கேட்கவே வேண்டாம். இருப்பதில் சூழலுக்கு குறைவான மாசு ஏற்படுத்துவது, ஓரிடத்திலிருந்து மற்றோரு இடத்திற்கு விநியோகிக்க ஏற்றது சிக்கனமான பயன்பாட்டிற்கு வழிவகுப்பது எனப் பல சொல்லலாம். எனவேதான் மாமேதை லெனின் அவர்களே அனைத்து மக்களுக்கும் சோவியத்தும் மின்சாரமும் எனப் பறைசாற்றினார். ஆனால் இன்று நிலைமை என்ன? கீழேயுள்ள வரைபடம் மனித வள மேம்பாட்டு புள்ளிக்கும் சராசரி மின்நுகர்வுக்கும் உள்ள உறவைக் காட்டுகின்றது.
இந்த வரைபடம் பங்கா எனும் இயற்பியல் வல்லுனரால் முன்மொழியப்பட்டு பின் ஐ.நா வின் UNDP (ஐக்கிய நாடுகள் சபையின் மேம்பாட்டுத் திட்டம்) போன்ற அமைப்புகளால் சரியென ஏற்றுக் கொள்ளப்பட்டு எடுத்தாளப் படுவதாகும். இதில் புரிந்து கொள்ள இயலாத கம்ப சூத்திரம் ஏதுமில்லை. இன்றைய நாகரிக வாழ்க்கைக்கு ஒரு குறைந்தபட்ச மின்சார நுகர்வு என்பது அவசியம். ஆனால் இந்திய மக்களின் நுகர்வு உலக சராசரி நுகர்வில் பாதிதான். சீனாவின் நுகர்வில் மூன்றில் இரு மடங்குதான். ஐநாவின் UNDP அமைப்பே ஒரு குறைந்த பட்ச நுகர்வைக் கூறுகின்றது அதில் இந்தியாவின் இன்றைய நுகர்வு ஆறில் ஒரு பகுதிதான். இன்றைக்கும் நாட்டில் சுமார் 8 கோடி வீடுகள் மின்னிணைப்பு இல்லாமல் இருக்கின்றன. அதாவது சுமார் 40 கோடி பேர் வீட்டில் மின்னிணைப்பு என்பதே இல்லாமல்தான் உள்ளனர்.
இந்தியாவின் ஆற்றல் அடர்த்தி என்பதும் மிகவும் குறைவாகத்தான் உள்ளது. அதாவது இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) வளர்ச்சியில் ஒரு டாலர் வளர்ச்சிக்கு இந்தியா செலவழிக்கும் ஆற்றல் என்பது பெரும்பாலான நாடுகளைவிட குறைவாகத்தான் உள்ளது. இந்தியா : 0.16 KG Oil Equivalent/Dollar; இது அமெரிக்காவிற்கு 0.22; சீனாவிற்கு 0.23; ஜெர்மனி 0.17; உலக சராசரி 0.21 (1 KG of Oil Equivalent என்பது ஒரு கிலோ அதாவ்து சுமார் 0.8 லிட்டர் எண்ணெய் கொண்டு தயாரிக்கக் கூடிய ஆற்றள் அளவு; இது சுமார் 8 யூனிட் மின்சாரத்திற்கு சமன்.) இதனை இன்னும் குறைப்பது என்பது பெரிய அளவில் சாத்தியமில்லை. எனவே இந்தியாவின் மின் தேவை பல மடங்கு அதிகரிப்பது என்பதைத் தவிர்க்க முடியாது.
இன்றைக்கு இருக்கக் கூடிய சுமார் 8 சதவீத பொருளாதார வளர்ச்சி (GDP growth rate) தொடர்ந்து இருக்க வேண்டு மென்றால் தொடர்ந்து இந்தியா 2031 ஆம் ஆண்டிற்குள் சுமார் 800000 மெகா வாட் அளவிற்கு உற்பத்தி திறன் கொண்ட மின்நிலையங்களைக் கொண்டிருக்க வேண்டும். அதாவது இனி வரும் 20 ஆண்டுகளில் ஆண்டு ஒன்றுக்கு சுமார் 30000 மெகாவாட் அளவிற்கு புதிய மின்நிலையங்களை நிறுவ வேண்டும். இவை மத்திய அரசின் திட்டக் குழுவின் ஆற்றலுக்கான வல்லுனர் குழு கூறும் புள்ளிவிவரங்கள். GDP எனும் புள்ளிவிவர முறைபாடு குறித்து விமர்சனங்கள் இருந்தாலும் இதனைக் காட்டிலும் துல்லியமான வேறு முறை இல்லை.
திரு.கிரித் பாரிக் எனும் மதிக்கத்தக்க ஆளுமையின் தலைமையில் இயங்கிய இந்த வல்லுனர் குழு இந்த அளவிலான மின்னுற்பத்தியை எந்த வழிகளில் நிறைவேற்றுவது என்பது குறித்தும் தனது நீண்ட அறிக்கையில் விளக்கியுள்ளது. அது எந்தவொரு அம்சத்தையும் விட்டுவிடவில்லை. இந்தியாவில் உற்பத்தி, விநியோகம் பகிர்மானம் மற்றும் பயன்பாடு ஆகியவற்றில் உள்ள திறனின்மை எல்லோரும் அறிந்ததுதான். இவற்றை சரி செய்வது அதன் மூலம் எந்த அளவு தேவையைக் குறைக்க முடியும் என்பதையும் கூட இந்த வல்லுனர் குழு அறிக்கை கணக்கில் எடுத்துள்ளது.
எனவே 2031 ஆம் ஆண்டு இந்தியாவின் உற்பத்தி சுமார் 800000 மெகாவாட்டாக இருக்க வேண்டும் என்பது சரிதான். அதே வல்லுனர் குழு இன்று எந்த எந்த வகையில் எந்த அளவு மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகின்றது என்பதையும் விவரித்துள்ளது. அதன்படி சுமார் 79% மின்சாரம் நிலக்கரி அல்லது லிக்னைட் கொண்டுதான் உற்பத்தி செய்யப்படுகின்றது. புனல் மின்நிலையங்கள் சுமார் 14% மின்னுற்பத்தி செய்கின்றன. புதியவகையில் சூரிய ஒளி, காற்றாலை, உயிர்க் கூளம் ஆகியவற்றின் மூலம் மீளுற்பத்தி முறையில் சுமார் 1.1% உற்பத்தி செய்யப்படுகின்றது. இவை போக அணு ஆற்றல் மூலம் சுமார் 6% மின்னுற்பத்தி செய்யப்படுகின்றது எனக் கணக்கிட்டுள்ளது.
இதே நிபுணர் குழு 2031 ஆம் ஆண்டு மின்னுற்பத்தி வேவ்வேறு முறைகளில் எந்த அளவு இருக்கும் என கணக்கிட்டுக் கூறியுள்ளது. அப்போதும் கூட சுமார் 82.2 % நிலக்கரி, லிக்னைட், எரிவாயு போன்ற படிம எரிபொருட்கள் மூலம்தான் உற்பத்தி செய்யப்படும் என்பது அவர்களின் கணிப்பு. சுமார் 8.3 % மின்னுற்பத்தி அணு ஆற்றல் மூலம் நடைபெறும் என்பது இவர்களது எதிர்பார்ப்பு. அதாவது அரசு கட்ட நினைத்துள்ள அணு மின்நிலையங்கள் எல்லாம் திட்டப்படி கட்டி முடிக்கப்பட்டாலும் அணு ஆற்றலின் பங்கு சுமார் 8.3 % என்ற அளவில்தான் இருக்கும். புனல் மின்நிலையங்கள் மற்றும் மீளுறுவாக்க மின்ணிலையங்கள் மீதமுள்ள 9.5%. இதில் மீளுருவாக்க மின்நிலையங்களின் பங்கு வெறும் 0.5 % தான்.
0 comments:
Post a Comment