கூடங்குளம் அணு மின்நிலையம் தமிழ்க் கருத்துப் பரப்பில் பரவலான அலைகளை ஏற்படுத்தியுள்ளது. ஒளி அலைகளைக் காட்டிலும் ஒலி மற்றும் உணர்வலைகள் அதிகம். தமிழக மக்களின் எல்லா மட்டங்களையும் தொடும் ஒரு பிரச்சினை. மேலும் அணு உலைகள் இயல்பிலேயே சிக்கலான அறிவியல் தொழில்நுட்பத்தை தன்னகத்தே கொண்டது. அதனால் விவாதங்கள் பல்வேறு மட்டங்களில் பல்வேறு அளவிலான பொருட் தெளிவுடன் நடப்பது இயற்கையே.
சமீபத்தில் நிகழ்ந்த ஃபுக்குஷிமா விபத்து அணு உலைகளின் பாதுகாப்பு குறித்த நியாயமான கேள்விகளை எழுப்பியுள்ளது; மக்களின் கவனத்தையும் கூர்மையாக்கியுள்ளது. அத்தோடு இதற்கு முன் நிகழ்ந்த ‘மூன்றுமைல்’ தீவு மற்றும் செர்னோபிள் விபத்துகள் குறித்த நினைவுகளையும் மீண்டும் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளது.
மறுபுறம் தமிழகத்தில் தற்போது நிலவும் கடும் மின்வெட்டு அணுமின் திட்டங்கள் குறித்த விவாதங்களில் ஒரு முக்கியமான பங்கை வகிக்கின்றது. இந்த இரண்டும் விவாதிக்கப் பட வேண்டிய அம்சங்கள்தாம். இத்தோடு இணைத்து விவாதிக்கப்பட வேண்டிய வேறு இரு அம்சங்கள் இருக்கின்றன. ஒன்று காங்கிரஸ் மற்றும் பி.ஜே.பி அரசுகள் 1991 ஆம் ஆண்டிலிருந்து மிகவும் அதிக அழுத்தத்தில் பின்பற்றத் துவங்கியுள்ள தாராள மயமாக்கல், தனியார் மயமாக்கல் மற்றும் உலக மயமாக்கல் கோட்பாடுகள். மற்றது மன்மோகன் சிங்கின் அரசு அமெரிக்காவோடு செய்துகொண்ட 123 ஒப்பந்தம். இந்த இரண்டும் பெருமளவுக்குப் பேசப்படவில்லை. இவை அனைத்தையும் இணைத்துப் பார்ப்பதற்கு முயற்சிப்போம்.
இருகண் பார்வை
இது போன்ற ஒரு நவீன அறிவியல் தொடர்பான பிரச்சினையை அணுகும் போது நமக்கு ஒரு இருகண் பார்வை வேண்டும். ஒன்று நமது அணுகல் அறிவியல் பூர்வமானதாக இருக்க வேண்டும். இரண்டாவது பரந்துபட்ட மக்கள் நலன் என்பதை கணக்கில் கொள்ள வேண்டும். இங்கு மக்கள் என குறிக்கும் போது அது சாதாரண உழைப்பாளி மக்களைத்தான்.
அறிவியல் கருத்துகள் நமது முன்தீர்மான நிலைப்பாட்டிற்கு எதிராக இருக்கும் போது ‘தாவாரம் இல்லை; தனக்கொரு வீடில்லை தேவாரம் ஏதுக்கடி? பூதாம்பாய், தேவாரம் எதற்கடி’ என்ற ரீதியில் அறிவியலையே பயனற்றது என்பது போல பேசுவது; வசதி எனும்போது ‘அணை இன்னும் நூறு ஆண்டுகளுக்கு உடையாது என அறிவியல் வல்லுனர்கள் பொறியாளர்கள் சொல்லுவதைக் கேளுங்கள்’ என ஊருக்கு உபதேசிப்பது என்பதாக இருக்கக் கூடாது.
குடைக் கம்பியை வைத்துக் குத்திப் பார்த்து அணை பலமில்லை எனச் சொல்லும்போது அவர் மலையாளி; அதே ‘குடைக்கம்பி குத்தலில்’ அவர் அணு உலை பாதுகாப்பற்றது எனச் சொல்லும்போது மக்கள் தலைவர் எனும் நிலை அறிவியல் பூர்வமானதாக இருக்க முடியாது.
மறு புறத்திலும் இது உண்டு. 50 ஆண்டுகளுக்கு மேலாகியும் 3 சதவீதமா எனும்போது இது நீண்டகால நோக்கிலான திட்டம் என்பது; பாதுகாப்பு குறித்த வினா எழும்போது அடுத்த கோடையின் மின்தட்டுப்பாட்டை தீர்க்கப் போவது போல பேசி உடனடி பஞ்சத்திற்கு பின்னர் அனைத்தையும் மறைக்கப் பார்ப்பது, என்பது போல சொல்லிக் கொண்டே போகலாம்.
இப்பிரச்சனையை விருப்பு வெறுப்பற்று அறிவியல் பூர்வமாக அணுகுதல் அவசியம். அத்தோடு பெருவாரியான உழைக்கும் மக்களுக்கு சாதகமா என்பதையும் நுணுகி நோக்க வேண்டும். மக்கள் நலன் எனும் நல்லெண்ணம் மட்டும் இருந்தால் போதாது. நரகத்திற்கு செல்லும் சாலைகள் எல்லாம் நல்லெண்ணம் எனும் தார் கொண்டு போடப்பட்டதுதான் (All roads to hell are paved with good intention). என ஒரு ஆங்கிலச் சொல்வழக்கு உள்ளது.
மக்கள் பற்றி கிஞ்சித்தும் கவலைப்படாத வலதுசாரி தார் கொண்டு போடப்பட்டு நரகத்திற்கு இட்டுச்செல்லும் சாலைகள் குறித்து அதிகம் சொல்ல வேண்டியதில்லை. இப்போதும் அவைதாம் அதிகம். ஆனால் அதிதீவிர இடதுசாரி தார் கொண்டு போடப்பட்டு நரகத்திற்கு இட்டுச் சென்ற சாலைகளும் உள்ளன என்பதை வரலாறு காட்டுகின்றது. அப்படி இல்லாமல் இருகண் பார்வையுடன் நோக்கும் போது என்ன தெரிகின்றது எனப் பார்ப்போம்.
- தொடரும் ...
0 comments:
Post a Comment