”தலித்துகளை ஏன் புராணங்கள் பதிவு செய்யவில்லை?” என்று இயல்பாக தான் கடந்துவந்த வாழ்க்கையை கேள்வி கேட்டு பதில்களையும் அடுக்குகிறார் ஓம்பிரகாஷ் வால்மீகி. "ஜூதன் ஒரு தலித்தின் வாழ்க்கை" (Joothan A Dalit's Life), அவரின் சுயசரிதை பற்றிய ஒரு சிறு அறிமுகமே இந்தக் கட்டுரை.
ஆடுகளையும், மாடுகளையும், நாய்களையும் தொட்டால் ஒன்றும் நேர்ந்துவிடாது என்று கருதும் ஆதிக்கச் சாதியினர் சக மனிதனாக கருத வேண்டிய தலித்துகளை தொட்டால் தீட்டுப்பட்டுவிடும் என்று மாட்டு மூத்திரத்தைக் கொண்டு அத்தீட்டைப் போக்குகின்ற மூடநம்பிக்கை பார்ப்பனர்களாலும், மனு (அ)தர்மத்தின் படியும் புகுத்தப்பட்டு இன்றளவும் அதை கடைபிடித்துக் கொண்டிருக்கின்றது இக்கொடூர சமூகம். பெரும்பாலான தலித்துகள் தியாகிகள் (Tagas) ஆதிக்கச் சாதியினரின் வயல்களிலும், வீடுகளிலும் ஊதியமின்றி வேலைகள் செய்பவர்களாகவே வாழ்ந்து வந்துள்ளனர். அறுவடைக் காலங்களில் "கூலியில்லாமல் வேலை செய்யக் கூடாது" என்று முடிவு செய்தாலும் அவர்களின் பசி அவர்களின் முடிவை எளிதில் வென்றுவிடுகிறது.
பள்ளியில் தலித்:
தலித்தாக பிறந்த ஒரே காரணத்துக்காக தன் வாழ்வின் ஒவ்வொரு நொடியும் பல இன்னல்களையும், அவமானங்களையும் சந்திக்கும் தலித்துகளுக்கு பள்ளிக்கூடமும் விதிவிலக்கல்ல என்பதை தனது ஆதிக்கச் சாதியை சேர்ந்த தலைமை ஆசிரியர் 5 வயது சிறுவன் ஓம்பிரகாஷ் வால்மீகியை அழைத்து வகுப்பறையையும், பள்ளி அலுவலகத்தையும், விளையாட்டு மைதானத்தையும் பெருக்கச் சொல்லி "இது உன்னுடைய சாதித் தொழில் தானே ... போ... போய் ஒழுங்கா பெருக்கு" என்று தன் ஆதிக்கச் சாதித் திமிரைக் காட்டுகிறார். உயர் சாதி ஆசிரியர்கள் தான் இவ்வாறு என்றால் உயர் சாதி மாணவர்களின் செயல்களைக் கேட்கவே வேண்டாம். இத்தகைய இன்னல்களுக்கிடையே தன் பள்ளிப்படிப்பை தொடரும் சிறுவன் ஓம்ப்ரகாஷ், தான் வசித்த கிராமத்தில் 10 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற முதல் தலித் மாணவனாவான்.
திருமணம்:
தலித்துகளின் திருமணச் சடங்குகளில் கூட பல வன்கொடுமைகளைப் புகுத்தியுள்ளது இக்கொடூர சமூகம். மணமகன், மணமகளின் உறவினர்களுடன் அனைத்து உயர் சாதியினர் வீட்டின் முன்பு சென்று கையேந்த வேண்டிய பழக்கத்தை புகுத்தியுள்ளது ஆதிக்கச் சாதி. ஆனால் ஆதிக்கச் சாதியினரின் திருமணங்களின் போது பெரும்பாலான தலித்துகள் குறிப்பாக தலித் பெண்கள் வீட்டு வேலைகளில் ஈடுபடுத்தப்படுகின்றனர். தலித்துகளுக்கு வழங்கப்படுகின்ற ஆதிக்கச் சாதியினர் உண்ட உணவின் எச்சமான (Joothan) ரொட்டியை வெயிலில் காயவைத்து வைத்துக் கொள்கின்றார்கள். மழைக் காலங்களின் போது இந்த ரொட்டியே தலித்துகளுக்கு உணவாக பயன்படுகிறது. இத்தகைய கொடுமைகளையும், இன்னல்களையும் சந்திக்கும் தலித் சமூகத்தில் பார்பனர்களாலும், ஆதிக்கச் சாதியினராலும் மறுக்கப்படுகின்ற விதவை திருமணத்தை ஆதரிக்கும் முற்ப்போக்கு சிந்தனையையை காணமுடிகிறது.
மழைக் காலம்:
பெரும்பாலானவர்களுக்கு இன்பத்தையும், குதூகலத்தையும் தருகின்ற மழை தலித்துகளுக்காக விட்டுச் செல்வது "வெல்ல நீர் சூழ்ந்த நடுத்தெருவை மட்டுமே". பெரும்பாலும் களிமண் கொண்டு கட்டப்பட்ட வீடுகள் தொடர் மழையால் இடிந்து தங்குவதற்கு வீடின்றி, தங்கள் உடைமைகளை இழந்து, கஞ்சி வைத்துக் குடிப்பதற்கு கூட அடுப்பில்லாமல், விறகில்லாமல் தவிக்கும் மக்களுக்கு ஆதிக்கச் சாதியினர் ஒருவரின் மாட்டுத் தொழுவமே கிடைக்கிறது. இப்பேர்பட்ட நிலையில் பல நாட்களுக்கு கஞ்சியே உணவாகக் கிடைக்கிறது. தலித்துகளுக்கு பசும் பால் இவ்வரிசிக் கஞ்சியே" என ஓம்பிரகாஷ் குறிப்பிடுகிறார்.
ஒருநாள் வகுப்பில் மகாபாரதம் பற்றிய பாடத்தில் துரோனச்சாரியாரின் ஏழ்மையை விளக்கி கொண்டிருந்தார் ஆசிரியர். இதைக் கேட்டுக் கொண்டிருந்த மாணவர்கள் அனைவரும் மிகுந்த சோகத்தில் ஆழ்ந்திருந்தனர்.
"பசியால் வாடும் தன் மகன் அஸ்வதமாவுக்கு பால் கொடுக்க இயலாமல் நீரில் மாவைக் கலந்து பாலுக்கு பதிலாக கொடுத்தார் துரோனச்சாரியார்". இதைக் கேட்டவுடன் சிறுவன் ஓம்பிரகாஷ்" துரோனச்சாரியாரின் ஏழ்மை நிலையை பதிவு செய்த புராணங்களும் வேதங்களும் தலித்துகளாகிய எங்களின் ஏழ்மையை ஏன் பதிவு செய்யவில்லை. தினமும் கஞ்சியைக் குடிக்கும் எங்களைப் போன்றவர்களைப் பற்றி ஏன் வியாச முனிவர் மகாபாரதத்தில் எங்குமே குறிப்பிடவில்லை" என்று தன் ஆசிரியரிடம் கேட்டார்.
இதற்கு பதிலாக ஒம்பிரகாஷின் உடலில் புராணம் எழுதினார் ஆதிக்கச் சாதி ஆசிரியர்.
கடவுள் நம்பிக்கை:
மக்களின் ஒவ்வொரு செயலிலும் கடவுள் நம்பிக்கையை நம் நாட்டில் காண்கிறோம். கடவுள் நம்பிக்கை மட்டுமின்றி பேய் மற்றும் ஆவிகளின் மீதும் நம் மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர். தலித்துகள் இந்து மதத்தவர்கள் தான் என்று கூறினாலும், தலித்துகள் இந்து மத தெய்வங்களை வழிபடுவதில்லை. தலித்துகள் வழிபடும் தெய்வங்கள் இந்து புராணங்களிலோ, வேதங்களிலோ தேடினாலும் கிடைப்பதில்லை என்பதையும் தனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை என்பதையும் குறிப்பிட்டுள்ளார் ஓம்பிரகாஷ். "நான் ஒரு இந்து என்றால்" ஏன் உயர் சாதி இந்து என்னை வெறுக்கிறான்? ஏன் உயர் சாதி இந்து தலித்துகளை கீழ்த்தனமாக நடத்துகிறான்? ஏன் இந்து மதம் தலித்துகளுக்கு மிகவும் கொடூரமானதாகவே இருக்கிறது? என பல கேள்விகளை நம் முன் வைக்கிறார் ஓம்பிரகாஷ் அவர்கள்.
வாழ்க்கைத் திருப்பம்:
வேதியியல் ஆசிரியரின் சாதி வெறியால் ஆய்வுக் கூடத்தில் எந்தவொரு செய்முறைப் பயிற்சியும் செய்ய இயலாமல், தேர்விவில் நல்ல மதிப்பெண் பெற்றிந்த போதிலும் செய்முறைப் தேர்வில் தோல்வியைத் தழுவ நேர்ந்தது. நம்பிக்கையிழந்த ஓம்பிரகாஷ், தன் அண்ணன் ஜஸ்பிர் உதவியுடன் டெஹ்ராடூனில் உள்ள DAV கல்லூரியில் சேர்ந்து தன் படிப்பை தொடர்ந்தார். தான் தங்கியிருந்த இந்திரேஷ் நகரிலுள்ள நூலகத்தில் காந்தியின் புத்தகங்கள் பலவற்றை வாசிக்கத் துவங்கினார். ஒருநாள் நூலகத்தில் புத்தகம் ஒன்றை வாசித்துக் கொண்டிருக்கும் போது ஹேம்ளால் அம்பேத்காரின் வாழ்க்கை வரலாறு புத்தகம் ஒன்றைக் கொடுத்து வாசிக்கக் கூறினான். காந்தி, நேரு, வல்லபாய் படேல், தாகூர், விவேகானந்தர், பகத் சிங், சந்திரசேகர் ஆசாத், சுபாஷ் சந்திர போஸ், சவர்க்கர் மற்றும் பல தலைவர்களைப் பற்றி பள்ளி புத்தகத்திலும், பள்ளி நூலகத்திலுள்ள புத்தகங்களில் வாசித்துள்ளேன். தலித்துகளின் வாழ்க்கை தரம் உயர பாடுபட்ட தலைவரும், இந்திய அரசியலமைப்பை உருவாக்கியவருமான பாபசாகிப் அம்பேத்கர் பற்றியும், அவரின் வாழ்க்கையையும் பெரும்பாலான தலித்துகளிடம் கொண்டு சேர்க்காமல் இச்சமூகமும், கல்விமுறையும் கைகோர்த்து சதி செய்துள்ளது.
காந்தியும் அம்பேத்கரும்:
தேசத் தந்தை என்று அனைவராலும் போற்றப்படுகிற காந்தி தலித் மக்களை "ஹரிஜனங்கள் - கடவுளின் குழந்தைகள்" என்றே அழைத்தார். தலித் மக்களின் வாழ்வு உயர காந்தி பாடுபட்டார் என்று பலர் கூறினாலும், அம்பேத்கர் நம்முன் வைக்கும் வாதம் என்னவென்றால் "உண்மையில் காந்தி தலித்துகள் அனைவரும் இந்துக்கள் தான் என்று கூறி, இந்துக்கள் சிறுபான்மையினராக ஆகிவிடாமல் பார்த்துக் கொண்டார்" அம்பேத்கரை பற்றி தெரிந்து கொண்டபின் தன்னுள் ஒரு புது ரத்தம் பாய்ந்தது என்பதை ஓம்பிரகாஷ் இங்கே தெரிவித்துள்ளார்.
இயந்திர துப்பாக்கித் தொழிற்சாலை:
DAV
கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் போதே ராய்பூர் இயந்திர துப்பாக்கித்
தொழிற்சாலையில் ஓம்பிரகாஷ் மற்றும் அவரின் நண்பர்கள் சிலருக்கு வேலை
கிடைத்ததால் தன் படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டார். தன் மூதாதையர்கள்
பல்லாயிரம் ஆண்டுகள் செய்துவந்த தன் சாதித் தொழிலை எக்காரணம் கொண்டும்
செய்துவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தார் ஓம்பிரகாஷ் அவர்கள். அவரது
தந்தையும் தன் சாதித் தொழிலிருந்து தன் மகன் விலகிவிட்டான் என எண்ணி
மகிழ்ச்சியடைந்தார். ஆனால் தலித்தாக பிறந்த ஒருவன் தான் இறக்கும் வரை
"தீண்டத்தகாதவன்" என்பது அவனைத் தொடர்ந்து வரும் என்பதை அறியாமல் தன் தந்தை
வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்பதை நன்கு உணர்ந்திருந்தார் ஓம்பிரகாஷ்.
இயந்திர துப்பாக்கித் தொழிற்சாலையில் வேலைக்கு சேர்ந்த பிறகு
மார்க்சியவாதிகளுடன் ஏற்ப்பட்ட தொடர்பால் மாக்சியம் பற்றி வாசிக்கவும்,
அவர்களுடன் இணைந்து நாடகங்களில் நடிக்கவும், பல மேடை நாடகங்களை இயக்கவும்
ஆரம்பித்தார்.
சில மணி நேரமே நீடிக்கும் ரயில் பயணங்களில் கூட தலித்துகளை அடையாளம் கண்டவுடன் அவர்களுடன் பேசுவதை நிறுத்திக் கொள்ளும்
கொடூரமான சமூகத்தில், காதலிலும் திருமணத்திலும் அலுவலகங்கிலும் சாதி வெறி
தலைவிரித்தாடுவது பெரிய வியப்பு ஒன்றுமில்லை. சாதியை அடிப்படையாகக் கொண்டு
ஒரு மனிதனுக்கு மரியாதையும், தகுதியும் நிர்ணயிக்கப்படும் சமூக நிலை மாறும்
வரை தொடர்ச்சியான பல போராட்டங்கள் இங்கே அவசியமாகிறது என்பது திண்ணம்.
தொழிலை அடிப்படையாகக் கொண்டே சாதிக் கட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது என்ற
பரவலான கருத்துள்ளது. ஆனால் இச்சமூகம் திருபத் திரும்பச் சொல்லிக்
கொண்டிருப்பது இந்த அநீதியைத் தான் "தலித்தாக பிறந்த ஒருவன் தன்
வாழ்க்கையில் எந்தவொரு உயர்வான நிலைக்குச் சென்றாலும் அவன் இறுதி வரை
தலித்தே; ஒரு நாளும் அதை மாற்ற முடியாது".
சாதி நம்
இந்திய சமுதாயத்தில் ஆயிரமாண்டுகளுக்கும் மேலாக தலித்துகளுக்கு
இழைக்கப்பட்டுள்ள, இன்றளவும் இழைக்கப்படுகிற இன்னல்களை இருட்டடிப்பு
செய்துவிட்டது மட்டுமின்றி தலித்துகளுக்கு சுதந்திரம், சமத்துவம்,
சகோதரத்தும் முதலியவற்றை மறுத்து வருகின்ற அதே நேரத்தில், ஒரு சில
சமூகத்தை முன்வைத்து நம் நாடு "பாரம்பரியம் மிக்க நாடு" என்ற
மார்தட்டிக் கொள்ளும் கருத்தோட்டமும் இங்கே திணிக்கப்பட்டு வருகின்றது.
தலித்துகளுக்கு மறுக்கப்படுகின்ற சுதந்திரம், சமத்துவம், சகோதரத்தும்
முதலியவற்றை முழுமையாகத் தராதவரை" பாரம்பரியமிக்க நாடு" என தற்பெருமை
பேசிக் கொள்வதை ஒரு போதும் ஏற்றுக் கொள்ள முடியாது.
- ரகுராம்
அருமையாக எழுதபப்ட்ட உண்மை உரைகள்---இதுதாண்டா உண்மையின் உரைகல்...!
ReplyDeleteவாழ்க்கைத் திருப்பம்:காந்தியும் அம்பேத்கரும்:இயந்திர துப்பாக்கித் தொழிற்சாலை: கடவுள் நம்பிக்கை என்ற தலைப்புகள் மீண்டும் மீண்டும் வருகின்றது கட்டுரையில். ஒழுங்கமைத்தால் முழுமை பெறும்...
ReplyDeleteமனிதனின் மனமும், மூளையும் கருப்பு நிறத்தவரை தாழ்மையுடன் எண்ணும் நிலை உலகெங்கும் உள்ளது.
ReplyDeleteஅமெரிக்காவில் கருப்பு நிறத்தவர் மிகவும் கேவலமாக நடத்தப் பட்டது தற்கால உண்மை. வெள்ளை நிற முஸ்லிம்கள் ஆப்பிரிக்க முஸ்லிம்களை தாழ்மையாக நினப்பதும் உண்மை.
அதேபோல் புராண காலம் முதல் இன்று வரை தலித்துகள் அவர்கள் நிறத்தாலும், தொழிலாலும் தாழ்மையாக நடத்தப் பட்டு வருவது உண்மையே.
தலித்துக்கள் மட்டுமன்றி, உயர் சாதி மக்களிலும் கருப்பு நிறத்தவர் பல் வேறு விதமாக பாதிக்கப் பட்டு வருவது கண்கூடு.
கருப்பு நிறம் மட்டுமல்ல ... மனிதனை இரண்டாமபட்சமாக கருதும் எந்த ஒரு இழி பார்வையும் ... தீங்கானதே !
ReplyDelete