சமீபத்தில் நம்மை விட்டு அகன்ற இயக்குனர் மணிவண்ணனின் நம்பிக்கை விதைக்கும் பேட்டி. அவரது மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இந்தக் கட்டுரையை வெளியிடுகிறோம்.
நேர்காணல்: சிராஜுதீன்
உங்கள் இளமைக் காலம் பற்றி?
என்னுடைய படிப்பை பற்றிப் பெரியதாக சொல்வதற்கு ஏதுமில்லை. எனது தந்தை ஆர் சுப்பிரமணியம் கோவை மாவட்டத்தில் உள்ள சூளுர் பேரூராட்சி கிளை திமுக செயலாளராக இருந்தார். வீட்டில் எப்போதும் அரசியல் சம்பந்தமான பேச்சுக்கள் நடைபெறுவது சகஜம். அதே மாதிரி எங்களுடைய ஊருக்கு வரக்கூடிய திமுக பேச்சாளர்கள், கட்சியின் முக்கியஸ்தர்களுக்கு எங்கள் வீட்டில்தான் விருந்து உபசரிப்பு நடக்கும்.
அப்படியான சூழலில் கட்சியின் பெரிய தலைவர்களை எல்லாம் சந்திக்கும் வாய்ப்பு சின்ன வயதிலேயே எனக்குக் கிடைத்தது. அதனால் என்னை அறியாமலேயே எனக்குள் அரசியல் ஈடுபாடு ஏற்பட்டது. மற்ற துறைகளைவிட கலை-அரசியல் துறையில் ஈடுபடுவதற்கு இதெல்லாம் ஒரு காரணமாக இருந்திருக்க லாம் என நினைக்கிறேன். மற்றபடி நான் திமுகவில் எந்தப் பொறுப்பும் வகித்ததில்லை. என் அப்பா பொறுப்பில் இருந்ததோடு சரி.
இடதுசாரி சிந்தனைகள் பக்கம் எப்போது வந்தீர்கள்?
பள்ளிக்கூட நாட்களில் எனக்கு காளிமுத்து என்ற ஆசிரியர் பாடமெடுப்பார். அவர் ஒரு இடதுசாரி சிந்தனை யாளர். அவர் வகுப்பில் பாடத்தை நடத்தும் போது பொது உடைமைக் கருத்துக்களை கலந்து மாணவர்களுக்குப் புரியுமாறு நடத்துவார். அவர்தான் முதன் முதலாக மார்க்சிம் கார்க்கி எழுதிய தாய் நாவலை எனக்கு கொடுத்தார். இதனால் இதுவரை இல்லாத ஒரு புதிய இலக்கிய உலகத்திற்குள் நுழைவதற் கான வாய்ப்புக் கிடைத்தது. திரும்பத் திரும்ப அந்த தாய் நாவலை வாசித்தேன். அதனால் அந்த நாவலில் உள்ள கதாபாத்திரங்கள் எனக்குள் ஆழமாகப் பதிந்து போனார்கள்.
அதன்பிறகு செவ்வானம் என்கிற புத்தகக் கடையை நடத்தி வந்த வள்ளுவதாசன் என்கிற தோழர் தான் எனக்கு ‘வால்கா முதல் கங்கை வரை’ நூலை வாசிக்கக் கொடுத்தார். மனிதனின் பரிணாமத்தை உணர்த்திய அந்நூலைத் தொடர்ந்து, குடும்பம் தனிச்சொத்து அரசு ஆகியவற்றின் தோற்றம் என்னும் நூலையும் எனக்கு வாசிக்கத் தந்தார். வால்கா முதல் கங்கை வரை என்ற நூல் நாவல் வடிவமாக இருந்தது. குடும்பம் தனிச்சொத்து அரசு என்ற நூல் அதே சாராம்சத்தில் தத்துவ நூலாக இருந்தது. இந்த நூல்களைத் தொடர்ந்து லெனின் எழுதிய அரசு என்கிற சிறுநூலையும் வாசிக்கக் கொடுத்தார்.
இந்த நூல்களைத் தவிர உங்களுக்குள் தாக்கத்தை ஏற்படுத்திய வேறு நூல்களைப்பற்றி...லீப்னெஹ்ட் எழுதிய சிலந்தியும் ஈயும் எனும் நூல் எனக்கு இன்னொரு பரிமாணத்தையும் ஆழமான புரிதலை யும் உருவாக்கியது.அந்நூல் ஒரு திருக்குறள் மாதிரி மிகவும் சுருக்கமான தொழிலாள வர்க்க உணர்வு ஊட்டக்கூடிய ஒரு நூல். இதிலிருந்து தான் தொடங்கியது என் பரந்துபட்ட நூல்வாசிப்பு. இப்படி வாசித்த பிறகு வார இதழ்கள், பாக்கெட் நாவல்கள் போன்றவற்றை வாசிப்பதை யெல்லாம் நான் விட்டுவிட்டேன்.
இயக்க நடவடிக்கைகளிலிருந்து சினிமாவுக்கான நகர்வு எப்போது தொடங்கியது?
எம்.எல். இயக்க நடவடிக்கையிலிருந்து விலகல் தன்மை வந்தவுடன் எந்த செயல்பாடு களும் இல்லாமல் இருந்த போது சென்னைக்கு வந்தேன். இங்கு வந்த போதுதான் பாரதிராஜா -வின் கிழக்கே போகும் ரயில் என்ற படத்தைப் பார்த்தேன். அந்தப் படத்தைப் பற்றிய விமர் சனம் ஒன்றை பாரதிராஜாவிற்கு எழுதி அனுப்பினேன். அந்த விமர்சனத் தைப் படித்துவிட்டு சந்திக்க வரச்சொல்லி இருந்தார் பாரதிராஜா.
அப்பொழுது வேலையற்ற இளைஞர்களைப் பற்றிய கதை ஒன்றை அவரிடம் சொன்னேன். அந்தக் கதை அவருக்குப் பிடித்துப்போனது. அந்தக் கதையை படமாக்க லாம். நீங்களே வசனம் எழுதுங்கள் என்றார். இதை நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை. உதவி இயக்குநராக வேண்டு மென்றுதான் எனக்குள் ஆசை இருந்தது. நிழல்கள் என்ற படத்திலிருந்து என்னுடைய சினிமா வாழ்க்கை தொடங்கி யது. அதைத் தொடர்ந்து சினிமாவிலேயே மூழ்கிப்போனேன்.
சினிமாவுக்குள் மூழ்கிப்போனது வாழ்க்கையில் பெரும் முன்னேற்றம்தான். ஆனால் கருத்தியல் ரீதியாகப் பெருத்த பின்னடைவுதான்.
இயக்குநராக அறிமுகமானது எப்போது?
கலைமணி என்ற நண்பர் இருந்தார். நான் இயக்கினால் நீங்கள் தயாரிப்பாளராக இருங் கள், நீங்கள் இயக்கினால் நான் தயாரிப்பாளராக இருக்கிறேன் என்று எங்களுக்குள்ளாகவே முடிவெடுத்துக்கொண்டோம். எவெரஸ்ட் பிலிம்ஸ் என்ற நிறுவனத்தை அவர் ஆரம்பித்தார். அந்த நிறுவனத்தி லிருந்துதான் கோபுரங்கள் சாய்வதில்லை படத்தை அவர் தயாரித்தார் நான் இயக்குனரானேன்.
சினிமாக்காரர்கள் இடதுசாரிகளின் மேடையை பயன்படுத்திக் கொண்ட அளவிற்கு இடதுசாரிகள் சினிமாவைப் பயன்படுத்திக் கொண்டார்களா?நான் சினிமாவைப் பயன்படுத்திக் கொண்டேன். நானொரு இடதுசாரிதானே? சினிமாவுக்குள் இப்பொழுது பெரும் பாய்ச்சல் இருக்கிறது. நான் சினிமாவுக்குள் வந்த காலத்தில் அப்படி இல்லை. சின்னச் சின்ன விசயங்களில் தான் நம்முடைய கருத்துக்களைப் பேச முடிந்தது. கதைக் கருவை நமக்கான கொள்கை அடிப்படையில் தீர்மானிக்க முடியவில்லை. தயாரிப்பாளர்களும் அதற்கு இணக்கம் காட்டவில்லை. இப்பொழுது நிறைய இடதுசாரிகள் சினிமாவுக்குள் இருக்கிறார்கள். எஸ்.பி.ஜனநாதன், மிஷ்கின் இது போன்று இன்னும் நிறைய பேர் இருக்கிறார்கள்.
பண்பாட்டுத்தளத்தில் இடதுசாரிகளுடைய செயல்பாடுகள் குறித்து...கலை இரவு என்கிற வடிவம் இடதுசாரிகளின் அற்புத மான ஒரு கண்டுபிடிப்புதான். மறுக்க முடியாத உண்மை. மக்கள் மத்தியில் இது பெரும் வீச்சை உண்டாக்கியது. கட்சி அரசியலைத் தாண்டி ஆண்களும், பெண்களும், மாணவர் களுமாக திரளாகப் பங்கெடுக்கும் ஒரு நிகழ்வாக கலை இரவு இருக்கிறது. இரு பொது உடைமை இயக்கங்களும் மிக அற்புதமான முறையில் அந்நிகழ்வை நடத்தி வருகிறார்கள். இதையே இன்னும் முன்னெடுத்துப் பொங்கல் விளையாட்டு விழா வெல்லாம் கூட நடத்தலாம்.
திரைத்துறையினரின் வாசிப்புப்பழக்கம் எப்படி இருக்கிறது?
இன்றைக்கு சினிமாவில் வாசிக்கக் கூடியவர்கள் அதிகரித்திருக்கிறார்கள். நாவல்கள், மார்க்சிய நூல்கள் என பல நூல்களை உதவி இயக்குநர்களுக்கு வாசிக்கக் கொடுப்பேன். ஒரு முறை தன் உதவி இயக்குநரிடம் இருந்த புத்தகத்தைப் பார்த்து இயக்குநர் கேட்டிருக்கி றார் என்ன இது என்று மணிவண்ணன் சார் கொடுத்தார் படிக்கச் சொல்லி அப்படின்னு உதவி இயக்குனர் கூறியிருக்கிறார். பிறகு ஒரு நாள் அந்த இயக்குநர் என்னிடம் ஏன் சார் எங்க பசங்களை எல்லாம் கெடுக்குறீங்க என்றார். புத்தகம் கொடுத்து படிக்கச் சொல்வது கெடுக்கிறதா? என்ன இது அசிங்கமாக இருக்கே என்றேன். ஆனால் இன்று ஒரு பெரிய வாசக பரப்பு உருவாகி இருக்கிறது. அரசியல் இலக்கியப் புரிதல்களோடு நிறைய பேர் இருக்கிறார்கள் இது எதிர் காலத்தின் மீது எனக்குப் பெரிய நம்பிக்கையை ஊட்டுகிறது.
நன்றி: புதிய புத்தகம் பேசுது
இயக்குநர் மணிவண்ணன் அவர்களை இடதுசாரி அமைப்புகள் சரியானபடி பயன்படுத்த தவறிவிட்டார்களோ என எண்ணவைக்கும் பேட்டி.
ReplyDelete