பேனாவால் எழுதலாம்.
பென்சில் கொண்டு எழுதுவாரும் உளர்.
நேரடியாக கணிணியில் தட்டுவார் இன்று அதிகம்.
ஒருவர் சொல்ல ஒருவர் எழுத அல்லது தட்டச்சு செய்ய என்கிற நடைமுறையும் உள்ளது.
இந்த ஒவ்வொரு முறையும் ஒரு குறிப்பிட்ட மனநிலையைக் கோருவதாக இருக்கிறது.பேனாவால் தாளில் எழுதியவர் கணிணிக்குச் சென்றபோது ஒரு சிறிய உளவியல் நெருக்கடிக்கு ஆளாகித்தான் பழக்கமானார். யோசித்துக்கொண்டே இருக்கும்போது ஒரு குறிப்பிட்ட நிமிடத்தில் கணிணியின் திரை காணாமல் போகும்.கையால் எழுதும் ‘க’ வும் ’ற’ வும் என்னுடைய ’க’ வாகவும் ’ற’ வாகவும் இருந்தது.கணிணியில் யாரோ வடிவமைத்து வைத்திருக்கும் ’க’ வை எடுத்து அதில் என் எண்ணங்களைச் சொல்ல நேர்கிறது. அந்த என்னுடைய என்கிற சொந்த உணர்வு மறைந்து போகிறது.கையால் எழுதி பத்திரிகைகளுக்கு அனுப்பிப் பின் அதை அச்சில் பார்க்கும் போது கிடைக்கும் மகிழ்ச்சி இதில் குறைந்து விட்டது.கணிணியில் எழுதும் படைப்பு மனதை மின்சாராமும் மின் வெட்டும் கூடத் தகவமைக்கிறது.
சொல்லச்சொல்ல எழுதுவதில் ஒருவர் காத்திருக்கிறாரே என்கிற நெருக்கடி இருந்துகொண்டே இருக்கும்.அதையும் வென்றவர்கள் உண்டு. இன்னும் நாம் எங்கே உட்கார்ந்து எழுதுகிறோம்- தனி அறையிலா,கூட்ட்த்து நடுவிலா பொது இடத்திலா என்பதெல்லாம்கூட எழுத்தின் போக்கைப் பாதிக்கத்தான் செய்யும்.
எப்படி எழுதினாலும் அதை எழுத்தென்போம்.இங்கு இந்த நடைமுறை உண்டாக்கும் உளவியல் பற்றி நாம் விரிவாகப்பேசப்போவதில்லை-அதுவும் அவசியமே என்றபோதும். எழுத்தின் தொழில்நுட்பம் அல்லது நல்ல வார்த்தையில் சொன்னால் எழுதும் கலை பற்றி சற்றுப் பேசிப்பார்க்கலாம்.
எழுதும் கலையில் மூன்று அம்சங்கள் மிக முக்கியமானவையாகின்றன.
1.உள்ளடக்கம்
2.உருவம்/அழகியல்
3.படைப்பு மனநிலை
அ.உள்ளடக்கம்
எதை எழுதுவது என்கிற பொதுவான புரிதல் விரிவாகத் தனியே பேசப்பட வேண்டியது.அவரவர் வர்க்க நிலை சார்ந்து பிறந்த நிலப்பரப்பு-காலம்-சாதி-பால் சார்ந்து எதை எழுதுவது என்பதை படைப்பாளி தீர்மானிக்கிறார்.நாம் இங்கு பேச எடுத்துக்கொள்வது அதுவல்ல. ஒரு குறிப்பிட்ட சிறுகதை அல்லது கவிதைக்கான ஒரு குறிப்பிட்ட உள்ளடக்கம்/கருப்பொருள் பற்றியே.ஒரு படைப்பின் உருவத்தை படைப்பாளி தேர்வு செய்யும் இந்த உள்ளடக்கமே தீர்மானிக்கிறது.
வெண்மணிக் கொடுமையை அதன் முழுமையான வரலாற்றுப் பின்னணியோடு கவிதையில் சொல்ல முயன்ற நவகவிக்கு ஒரு நெடுங்கவிதை என்கிற உருவமே கை கொடுத்தது.அதை உரைநடையில் சொல்ல முயன்ற இந்திரா பார்த்தசாரதிக்கும் சோலை சுந்தரபெருமாளுக்கும் பாட்டாளிக்கும் நாவல் என்கிற உருவம் பொருத்தமாக இருந்தது.தன் குருதிப்புனல் நாவலில் வெண்மணியை பிராய்டிய உளவியல் பார்வையில் இந்திரா பார்த்தசாரதியும் செந்நெல் நாவலில் விவசாயத்தொழிலாளர் நிலைபாட்டில் நின்று சோலை சுந்தரபெருமாளும் தன் கீழைத்தீ நாவலில் இடது தீவிரவாதப் பார்வையில் பாட்டாளி சொல்ல முற்பட்ட போது --ஒரே நிகழ்வு பற்றிய மூன்று வேறு வேறு உள்ளடக்கங்களாக அவை மாற்றம் பெறுகின்றன.இப்போது இந்திரா பார்த்தசாரதியின் உள்ளடக்கத்துக்கு ஏற்ற மொழியும் உத்தியும் வேறாகவும் சோலை சுந்தரபெருமாளின் வர்க்கநிலை சார்ந்த உள்ளடக்கத்துக்கான மொழியும் உத்தியும் வேறாகவும் அதிதீவிர நிலைபாட்டில் பேசிய பாட்டாளியின் உத்தியும் மொழியும் வேறாகவும் அமைவது தவிர்க்க முடியாததாகிறது.நவகவியும் புதுக்கவிதை என்கிற உருவத்தில் அல்லாமல் மரபுக்கவிதை என்கிற உருவத்திலேயே அதைச்சொல்ல நேர்கிறது.
அதே வெண்மணியை தலித் மக்களின் குரலாக ஓர் ஆவேசத்தை பொது மேடைகளில் எடுத்துச்செல்ல இன்குலாப் “..எதையெதையோ சலுகையின்னு அறிவிக்கிறீங்க... நாங்க எரியும்போது எவன் மசிரப் புடுங்கப்போனீங்க..” என்று ஓர் இசைப்பாடல் வடிவத்தைக் கையில் எடுத்தார்.எந்த உள்ளடக்கம் என்பதும் –அதாவது ஒரே வெண்மணிக் கொடுமையின் எந்தப் பகுதியை உள்ளடக்கமாகக் கொள்கிறோம் என்பதும்- அதை யாருக்குச் சேர்க்கப்போகிறோம் என்பதும் இங்கு உருவத்தைத் தீர்மானித்ததைக் காண்கிறோம்.இன்னும் வெண்மணியின் சொல்லப்படாத கதைகளும் கவிதைகளும் எத்தனையோ வடிவங்களில் வரவேண்டிய பாக்கியும் இருக்கிறது.
அருணனின் கடம்பவனமும் மதுரையை மையமாகக் கொண்ட நாவல்தான்.சு.வெங்கடேசனின் காவல்கோட்டமும் மதுரையை மையமாகக் கொண்ட நாவல்தான்.நா.பார்த்தசாரதியின் பொன்விலங்கும் மதுரையைத்தான் சுற்றியது.அருணன் ஒரு அரசியல் சித்தாந்தப் போராட்ட்த்தைக் கருப்பொருளாக-உள்ளடக்கமாக்க் கொண்டார்.ஒரு இனக்குழுவின் வாழ்முறையை சு.வெ. உள்ளடக்கமாகக் கொண்டார்.நா.பா.வோ தேசியப் பெருமிதம் பற்றிய ஒருவித ஈர்ப்பையும் பிளேட்டோனியப் புனிதக்காதலையும் உள்ளடக்கமாகக் கொண்டார்.களம் ஒன்றாக இருந்தாலும் உள்ளடக்கம் வேறு வேறாக அமைந்த்தால் இம்மூன்று நாவல்களின் விரிவும் பரப்பும் அளவும் வடிவமும் மொழியும் முற்றிலும் வேறு வேறாக அமைந்த்தை நாம் பார்க்க முடிகிறது.
தன் கதைகளின் உள்ளடக்கம்- அவற்றின் நோகம் குறித்துப் புதுமைப்பித்தனுக்கு இருந்த தெளிவுதான் அவரது விதவிதமான எழுத்து முயற்சிகளுக்கு- சோதனைகளுக்கு- அடிப்படையாக அமைந்தது எனலாம்.
“பொதுவாக என்னுடைய கதைகள் உலகத்துக்கு உபதேசம் பண்ண உய்விக்க ஏற்பாடு செய்யும் ஸ்தாபனம் அல்ல.பிற்கால நல்வாழ்வுக்குச் சௌகரியம் பண்ணி வைக்கும் இன்ஷ்யூரன்ஸ் ஏற்பாடும் அல்ல.”
என்பார் அவர்.உள்ளடக்கம் மட்டுமல்ல எழுத்தாளனின் நோக்கமும் ஒரு படைப்பு எப்படி எழுதப்படுகிறது என்பதற்கு அடிப்படையாக அமையும் என்பதற்கு புதுமைப்பித்தன் ஒரு உதாரணம் எனலாம்.
ஆ.உருவம் அல்லது வடிவம்/அழகியல்
”தமிழில் இம்மாதிரி உரைநடை நவீனம் பொதுமக்களுக்குஇதுவரை அளிக்கப்படவில்லை.ஆகையால் இந்நூல் வாசகர்களுக்கு ரசமாகவும் போதனை நிறைந்ததாகவும் இருக்கலாம் எனப் பெருமை கொள்கிறேன்.இம்மாதிரிப் புதிய முயற்சியில் ஏதாவது குற்றங்குறைகள் இருப்பின் பொருத்தருளுமாறு பொதுமக்களை வேண்டிக்கேட்டுக்கொள்கிறேன்”
மேற்கண்ட வரிகள் 1879ஆம் ஆண்டு வெளியான தமிழின் முதல் நாவலான பிரதாபமுதலியார் சரித்திரம் நூலுக்கு அதன் ஆசிரியர்(!) ச.வேதநாயகம் பிள்ளை.ரசமாகவும் போதனை நிறைந்ததாகவும் என்கிற இரண்டு வார்த்தைகளும் கூர்ந்து நோக்கத்தக்கவை.தெருக்கூத்தில் குற்றங்குறை இருந்தால் பொறுத்தருளக்கேட்கும் கூத்துக்கலைஞனைப்போல நாவல் என்கிற ஒரு புதிய உரைநடை இலக்கிய வடிவத்தை முதன் முதலாகக் கைக்கொள்ளும் எழுத்தாளன் பேசுகிறான்.
கவிஞனுக்கு அத்தகைய மனத்தடைகளோ தயக்கங்களோ இருப்பதில்லை.ஏனெனில் கவிதைக்கு மிக நீண்ட வரலாறும் ஏற்பும் இருக்கிறது.ஆதிப்புராதன சமூகங்களில் நிலவிய கூட்டு வாழ்க்கையிலேயே உழைப்புப் பாடல்கள் எனும் வடிவில் கவிதை பிறந்து விட்டது.இயற்கையை வேண்டியும் ஏவல்கொண்டு அடக்கியாளவும் அம்மக்கள் நடத்திய சடங்குகளில் உச்சாடஞ்செய்யப்பட்ட மந்திரங்களும் கவிதை வடிவில் அமைந்தன.ஆகவே கவிதைக்கு மந்திர சக்தி இருப்பதான நம்பிக்கை இன்றுவரை தொடர்கிறது.
இசைபாடவும் வசைபாடவும் ஏற்றவராக்க் கவிஞர்களே கொள்ளப்பட்டனர் என்பார் கைலாசபதி.மார்க்சிய அறிஞர் காட்வெல் “ கவிதை கூட்டு மொழியின் வெளிப்பாடாகவும் பொதுமக்களின் உணர்ச்சி வெளிப்பாட்டின் வடிவமாகவும் அமைந்தது “ என்று குறிப்பிடுகிறார்.புதுக்கவிதை வந்தபோது இந்த இலக்கணமெல்லாம் அடிவாங்கியது என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.தனி மனித உணர்ச்சியை மையமாகக் கொண்ட உரைநடை இலக்கியத்தின் கூறுகளை புதுக்கவிதை உள்வாங்கிப் பயணம் செய்தது.
நிற்க.
உருவம் என்பது கதை அல்லது கவிதை எப்படிச்சொல்லப்பட்டுள்ளது என்பதைப் பற்றியது.அஎன்ன சொல்கிறாய் என்பதை விட எப்படிச்சொல்கிறாய் என்பதுதான் முக்கியம் என வாதிடுவோர் எல்லாக்காலங்களிலும் இருப்பர்.
நம்மைப்பொறுத்தவரை இரண்டும் சம முக்கியத்துவம் உடையவை.எதை நீ- எப்போது- எப்படிச்சொல்கிறாய் என்கிற மூன்றும் நமக்கு முக்கியம்.
ஒரு படைப்பின் உருவம் அல்லது வடிவம் பற்றிப் பேசுங்கால் “அடியின் சிறப்பே பாட்டெனப்படுமே”என்று தொல்காப்பியம் கூறுவதுபோல படைப்பின் உள் கட்டமைப்பு பற்றிப் பிரித்தும் விரித்தும் பேசியாக வேண்டும்.கதைக்கும் கவிதைக்கும் இது வேறு வேறாக அமையும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்...
1,மொழிநடை
2.உத்தி
3.பாத்திரப்படைப்பு
ஆகிய மூன்று கூறுகள் உருவத்தின் அடிப்படை அம்சங்களாகின்றன.
1.மொழிநடை
”எளிய பதங்கள்,எளிய நடை,எளிதில் அறிந்துகொள்ளக்கூடிய சந்தம்,பொதுஜனங்கள் விரும்பும் மெட்டு,இவற்றினையுடைய காவியம் ஒன்று தற்காலத்தில் செய்து தருவோன் நமது தாய்மொழிக்குப் புதிய உயிர் தருவோனாகிறான்” என்கிற பாரதியின் முன்வைப்பில் உள்ள எளிமை ஒன்றை மட்டுமே பிடித்துக்கொண்டு நம் படைப்பு மொழி நின்றுவிடக்கூடாது.சுவை புதிது,பொருள் புதிது,சொல் புதிது என்றும் பாரதி சொன்னதையும் சேர்த்த்துக்கொள்ள வேண்டும்.நாம் எதைச் சொல்ல வருகிறோமோ யாருக்குச் சொல்லப்போகிறோமோ கதையில் எந்தக் கதாபாத்திரத்தின் வழியே அதைச் சொல்கிறோமோ அதற்கேற மொழி நடை அமைய வேண்டும்.இதுபற்றி ரகுநாதன் குறிப்பிடுவதைக் கவனிக்க வேண்டும் “ தமிழில் எழுதி வந்தவர்கள் காதலாயினும் கையறு நிலையாயினும் ஒரே மாதிரி நடையில் ஒரே மாதிரி வேகத்துடன் பாவத்துடன்தான் எழுதினார்கள்” இது சரியல்ல.சொல்ல வரும் உணர்ச்சிக்கும் மொழி உகந்ததாக இருக்க வேண்டும்.தனித்தமிழ், செந்தமிழ் நடை என்பதெல்லாம் படைப்பிலக்கியத்தில் கவைக்குதவாதவை எனக் காலம் நிராகரித்துவிட்ட்தை நாம் உணர வேண்டும்.
தலித் இலக்கியம் தமிழில் முன்னுக்கு வந்த காலத்தில் அதன் மொழி குறித்துத்தான் அதிகமான சர்ச்சைகள் எழுந்தன.தொல்காப்பியர் காலந்தொட்டே இவ்விவாதம் இருந்துள்ளது.
“சேரி மொழியாற் செவ்வதிற் கிளந்துதேர்தல் வேண்டாது குறித்தது தோன்றின்புலனென மொழிப் புலனுணர்ந்தோரே” என்பது செய்யுளியலில் தொல்காப்பியர் கூற்று.
இவ்வரிகளுக்கு பேராசிரியர் உரை இவ்விதம் அமைகிறது “ சேரி மொழி என்பது பாடி மாற்றங்கள்.அவற்றானே செவ்விதாகக் கூறி ஆராய்ந்து காணாமைப் பொருட்டொடரானே தொடுத்துச்செய்வது புலன் என்று சொல்வார் புலனுணர்ந்தோர் என்றவாறு அவை விளக்கத்தார் கூத்து முதலாகிய நாடகச்செய்யுளாகிய வேண்டுறைச் செய்யுள் போல்வன வென்பது கண்டுகொள்க” அதாவது நாடகத்தில் கூற்றுக்குரியோர்க்கு ஏற்றவண்ணம் பேச்சு அமைதல் வேண்டும் என்கிறார்கள்.அதாவது பாத்திரங்களின் மொழியாக வரும்போது மக்கள் மொழி இருக்கலாம்.ஆசிரியர் கூற்றாக வரும்போது பொதுமொழி இருக்கட்டும் என்பதே இதன் பொருள்.ஆனால் இன்று மு.ஹரிருஷ்ணன் போன்றோர் முற்றிலும் அவர்தம் வட்டாரப் பேச்சுமொழியிலேயே இடக்கரடக்கல் ஏதுமின்றிக் கட்டற்ற காட்டாற்று வெள்ளம்போல எழுத்த்துவங்கியுள்ளனர்.அத்தகைய மொழிக்கு வரவேற்பும் விமர்சனமும் சேர்ந்தே வருவதையும் பார்க்கிறோம்.அது படைப்பாளியின் சுதந்திரம்தான் என்றபோதும் வாசகனுக்கு நெருக்கமான மொழி என்பதும் முக்கியம் அல்லவா?
“கருத்தின் வேகத்தையே பிரதானமாகக் கொண்டு வார்த்தைகளை வெறும் தொடர்புச் சாதனமாக மட்டும் வைத்துத் தாவிச்செல்லும் நடை ஒன்றை அமைத்துக்கொண்டேன்.நானாக எனக்கு வகுத்துக்கொண்ட பாதை.தமிழ்ப்பண்புக்கு முற்றிலும் புதிது” –இது புதுமைப்பித்தன்.
தொடர்ந்து படிக்க: எழுத்தாளராக பரிணமிப்பதற்கான வழிகாட்டுதல் - 2 ச.தமிழ்ச்செல்வன்
எழுத்தின் மீளாக்கமா?
ReplyDeleteமகிழ்ச்சி
வாழ்த்துகள்
இறவாக் கதைகளை தமிழுக்கு கொடுத்திருக்கும் தோழர் ச.தமிழ்செல்வன் அவர்களின் இக்கட்டுரையை ஓசூரில் நடைபெற்ற படைபூக்க முகாமில் நேரில் பருகியவர்களில் நானும் ஒருவன்... இரண்டாம் நாள் இரவு தோழர் தமிழ்செல்வன்,சு.வெங்கடேசன்,பிரளயன்,கமலாலயன்,ஆதவன் தீட்சண்யா,சுகிரதராணி,லிவிங் ஸ்மைல் வித்யா,நறுமுகை தேவி இன்னும் சிலர் ஒன்றுகூடி இலக்கிய அரட்டையில் ஈடுபட்டது நினைவில் மீள்கிறது.
ReplyDelete